உத்திரப்பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதலாவது கட்டமாக பிப்ரவரி 8-ந்தேதி ஐம்பத்தைந்து தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. அவற்றில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் வேட்புமனுக்களின் அடிப்படையில் அவர்களுடைய பின்னணி பற்றி ஆய்வு செய்துள்ளது ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்னும் ஓர் அமைப்பு.

அந்த அமைப்பு 289 வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள உறுதிமொழிப் பத்திரங்களை ஆய்வுசெய்தது. அவர்களில் 109 பேர் தாங்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்கான வழக்குகளை எதிர்கொண்டுள்ளதாகத் தமது உறுதிமொழிப்பத்திரங்களில் தெரிவித்து உள்ளனர். அவர்களில் 46 பேர் கொலை, கொலை முயற்சி, ஆட்கடத்தல், கொள்ளை, பணம் பறித்தல் போன்ற கடுமையான குற்ற வழக்குகளை எதிர் கொண்டுள்ளனர். இவர்களில் 12 பேர் பாஜக வைச் சார்ந்தவர்கள். 11 பேர் பகுஜன சமாஜ் கட்சியைச் சார்ந்தவர்கள். 11 பேர் சமாஜ்வாடி கட்சியைச் சார்ந்தவர்கள்.5 பேர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்கள். இன்னொரு முக்கியமான செய்தி இவர்களில் 144 பேர், அதாவது 51 விழுக்காட்டினர் கோடீஸ்வரர்கள். மேலும் 11பேர் தாங்கள் முதலாளிய நிறுவனங்களிடமிருந்து தேர்தல்நிதி பெற்று உள்ளதாகவும், தாங்கள் வெற்றி பெற்றால் அந்நிறுவனங்களின் நலன்களுக்குப் பாடுபடப்போவதாகவும் வெளிப்படையாக அறிவித்தும் உள்ளனர்.(The Hindu; நாள் 29.1.2012)

இதுதான் இந்திய ஜனநாயகத் தேர்தல் முறையின் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றம். இந்தச் செய்தி இங்குள்ள தேர்தல்முறையின் சாராம்சத்தைத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. இது உத்திரப்பிரதேசத்திற்கு மட்டுமே உரிய சித்திரமல்ல, இந்தியா முழுவதற்குமான பொதுச் சித்திரம்.

ஆண்டைகளையும்,கிரிமினல்களையும் உருவாக்கும் தேர்தல்முறை

இங்குள்ள தேர்தல்முறை மூலம் கோடீஸ்வரர்களும், கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும், ஆட்கடத்தல் பேர்வழிகளும், பணம் பறிப்பவர்களும்தான் மக்கள் பிரதிநிதிகளாக வரமுடியும். இவர்கள்தான் இந்நாட்டை வழிநடத்திச் செல்பவர்கள்.இவர்களை நம்பித்தான் இந்த நாடே இருக்க வேண்டும்.

இவர்கள் நமது நாட்டில் பெரும்பான்மையாக உள்ள உழவர்கள், தொழிலாளர்கள்,படித்துவிட்டு வேலை கிடைக்காமல் துயருறும் இளைஞர்கள், நடுத்தரமக்கள்,ஒடுக்கப்பட்டவர்கள்,பெண்கள் ஆகியோரின் பிரச்சினைகளைத் தீர்த்து அவர்களுக்கு நல்வாழ்வு அளிப்பார்கள்; நமது மக்களின் வறுமையையும்,பசியையும் போக்குவார்கள், அவர்களது கண்ணீரைத் துடைப்பார்கள்; நல்ல கல்வியையும்,சிறந்த மருத்துவ வசதியையும் அளிப்பார்கள் என நம்மை நம்பச் சொல்கிறார்கள்.இவற்றை நம்புகிறவர்கள் கேழ்வரகில் நெய் வடியும் என்பதை நம்புகிற முட்டாள்களாகத்தான் இருக்க முடியும்.

உலகிலேயே மிகப்பெரும் ஜனநாயக நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது எனப் பெருமை பாராட்டிக்கொண்டிருப்பவர்கள் இந்திய ஆட்சி அமைப்பும் தேர்தல் முறையும் பரந்துபட்ட மக்களுக்கு உண்மையில் ஜனநாயகத்தையும் ஆட்சியில் பங்கையும் வழங்கி உள்ளதா எனச் சற்றே சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இந்நாட்டில் உள்ள தேர்தல்முறை முதலாளிகளும், பணம் படைத்தவர்களும், குற்றவாளிகளும் (Criminals), காடையர்களும் மேன்மேலும் அதிகாரத்தைப் பயன்படுத்திக் குறுக்குவழிகளில் நாட்டின் பெரும் செல்வங்களைக் கொள்ளையடிப்பதற்குத்தான் வழி வகுத்து உள்ளதே தவிர மக்களுக்கு ஜனநாயகத்தையோ ஆட்சியில் பங்கையோ வழங்கவில்லை.

இங்குள்ள தேர்தல்முறையே கிரிமினல்களை உருவாக்கும் முறையாக உள்ளது. கிரிமினல்களே இத்தேர்தல்முறையால் பயனடைந்து வருகிறார்கள். கிரிமினல்களும் இத்தேர்தல்முறையும் பிரிக்கமுடியாதவையாக, ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாக உள்ளன.

இங்குள்ள ஆட்சி அமைப்பு அனைவருக்கும் வாக்குரிமையை வழங்கியுள்ளதே தவிர பிரதிநிதித்துவத்தை வழங்கவில்லை.இந்நாட்டில் பெரும்பான்மையாக உள்ளவர்கள் உழவர்களும், தொழிலாளர்களும். இவர்களில் எத்தனை பேர் இன்று மக்களின் பிரதிநிதிகளாக சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் உள்ளனர்? இல்லை என்றே கூறலாம். இடதுசாரிக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் உழவர்களையும்,தொழிலாளர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என ஒரு வாதத்திற்கு எடுத்துக்கொண்டாலும் கூட உழவர்கள் மற்றும் தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்பொழுது அவர்களுடைய பிரதிநிதிகளின் எண்ணிக்கை மிக மிகக் குறைவே. இந்நிலையில் இங்குள்ள ஆட்சி பெரும்பான்மையான மக்களின் ஜனநாயக ஆட்சி என்று எப்படிக் கூறமுடியும்?

இங்கு ஜனநாயக உரிமையும் சொத்துடைமையும் நேர் விகிதத்தில் உள்ளன. பெரும் பணம் படைத்தவர்களுக்கும், முதலாளிகளுக்குமே இங்கு ஜனநாயகமும், அனைத்து அதிகாரமும் உள்ளது. சொத்து இல்லாத பஞ்சை பராரிகளுக்கு இங்கு ஜனநாயக உரிமை இல்லை. அவர்கள் மீது சர்வாதிகாரமே நிலவுகிறது. முடியாட்சிக் காலத்தில் மன்னன் நிரந்தரமாக ஆட்சி அதிகாரம் செலுத்தி வந்தான். அவனுக்குப் பிறகு அவனுடைய வாரிசுகள் ஆட்சிக்கு வந்தனர். மன்னனுடைய தயவிலேயே மக்கள் வாழவேண்டியிருந்தது. இன்று ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் வாக்களித்துத் தங்களை ஆளக்கூடிய மன்னர்களைத் தேர்ந்தேடுத்துக் கொள்கிறார்கள். மக்களின் பிரதிநிதிகளாகச் செல்பவர்கள், மக்களுக்குச் சேவை செய்யும் தொண்டர்களாகச் செல்பவர்கள் மக்கள் மீது சர்வாதிகாரம் செலுத்தும் மன்னர்களாக மாறிவிடுகிறார்கள். அதிகாரச் சுவை கண்ட மன்னர்கள் நிரந்தர மன்னர்களாக இருக்க ஆசைப்படுகிறார்கள். தங்களுடைய வாரிசுகளையும் மன்னர்களாக ஆக்க விரும்புகிறார்கள்.ஊழியர்கள் ஆண்டைகளாகி விட்டார்கள். ஆண்டைகள் அடிமைகளாகி விட்டார்கள். தங்களுடைய சேவகர்களே தங்களை விழுங்கும் பூதங்களாக மாறிவிட்டதைக் கண்டு மக்கள் அஞ்சுகிறார்கள். அவற்றைக் கட்டுப்படுத்தும் வழியறியாது திகைக்கிறார்கள்.

கிரிமினல்களையும், ஆண்டைகளையும் உருவாக்கும், மக்களுக்கு உண்மையான ஜனநாயகத்தையும் ஆட்சியில் பங்கையும் மறுக்கும் இந்தத் தேர்தல்முறையைச் சில சீர்திருத்தங்கள் மூலம் சரி செய்து விடலாம் எனச் சிலர் கூறிவருகின்றனர். அடிப்படையிலேயே தவறாக உள்ள இந்தத் தேர்தல்முறையைச் சில சீர்திருத்தங்கள் மூலம் சரி செய்து விடமுடியாது. பரந்துபட்ட மக்களுக்கு உண்மையில் ஜனநாயகம் கிடைக்கவேண்டுமானால் இந்தத் தேர்தல்முறை அடிப்படையிலேயே மாற்றி அமைக்கப்பட வேண்டும். அதற்கு வழிவகுக்கும் வகையில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

மக்களுக்கு உண்மையான ஜனநாயகத்தை வழங்கும் தேர்தல்முறை

1) இந்நாட்டில் உள்ள உழவர்கள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், நடுத்தரமக்கள், முதலாளிகள் என அனைத்து வர்க்கங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் அத்தேர்தல்முறை இருக்கவேண்டும்.

2) மொத்த மக்கள் தொகையில் ஒவ்வொரு வர்க்கத்தினரும் எந்த எண்ணிக்கையில் இருக்கின்றனரோ அதற்கேற்றபடி விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்தல்முறை இருக்கவேண்டும்.

3) பிரதிநிதிகளைத் தேர்ந்தேடுக்கும்முறை கீழிருந்து மேல்நோக்கிச் செல்வதாக இருக்கவேண்டும். அதாவது, தொடக்கநிலையில் கிராம அளவிலான மக்கள் சபைக்கு பிரதிநிதிகள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப் படவேண்டும். அந்தப் பிரதிநிதிகளிடமிருந்து வட்டார அளவிலான மக்கள் சபைக்கும், வட்டார அளவிலான மக்கள் சபையிலிருந்து மாவட்ட அளவிலான மக்கள் சபைக்கும், மாவட்ட அளவிலான மக்கள் சபையிலிருந்து மாநில அளவிலான மக்கள்சபைக்கும், மாநில அளவிலான மக்கள் சபையிலிருந்து உச்ச அளவிலான மக்கள் சபைக்கும் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

4) தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நேர்மையற்றவர்களாக இருக்கும் நிலையில் திருப்பி அழைக்கப்படும் உரிமை அங்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அது இப்பொழுது உள்ள தேர்தல்முறையில் அறவே சாத்தியம் இல்லை. புதிய முறையில் அந்த உரிமையைப் பயன்படுத்துவது சாத்தியமான ஒன்று.

5) மக்களின் பிரதிநிதிகள் முழுநேர அரசியல்வாதிகளாக இருக்கக்கூடாது. மக்கள்சபை கூடும்பொழுது மட்டுமே அவர்கள் அதில் கலந்துகொள்பவர்களாக இருக்க வேண்டும். மற்ற காலங்களில் மற்ற மக்களைப் போல சாதாரணமாகத் தங்கள் தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும். அதன் மூலம் அரசியலையே முழுநேரமாகக் கொண்டுள்ள ஒரு வர்க்கம் உருவாவதைத் தடுக்க முடியும்.

6) தேர்ந்தேடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் சபை வெறும் ஆலோசனை கூறும் சபையாக மட்டும் இல்லாமல் நிர்வாக அதிகாரத்தைக் கொண்ட சபையாகவும் இருக்க வேண்டும். நிர்வாக அமைப்பு முழுவதும் மக்கள் பிரதிநிதிகளின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

இத்தகைய ஓர் அமைப்பு முறை மூலமே நவீன ஆண்டைகளும், கிரிமினல்களும், ஊழல் பெருச்சாளிகளும் உருவாவதைத் தடுக்கமுடியும். மக்களுக்கு உண்மையான ஜனநாயகத்தையும், ஆட்சியில் பங்கையும் உறுதிப்படுத்த முடியும்.

Pin It