இந்திய ஜனநாயக அரசியலின் குறுக்கு வெட்டுத்தோற்றத்தை சித்தரிக்கும் படங்களில் 2017 ஆம் ஆண்டில் வந்த நியூட்டன் (இந்தி) மிகமிக முக்கியமான ஒரு திரைப்படம்.! இந்தியாவால் பிற்படுத்தப்பட்ட மாநிலங்களான ஒரிஸ்ஸா,பீகார்,ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் ஒன்றான சட்டீஸ்கரின் தண்டாயகாரா வனப்பகுதியில் வாக்குரிமையுடைய 76 பழங்குடியினருக்காக தேர்தலை நடத்தச் செல்லும் ஒரு நேர்மையான தேர்தல் அதிகாரிக்கும், அந்தப்பகுதியில் நிலவும் சூழலுக்குமான முடிச்சுகள்தான் நியூட்டன். முதல்காட்சியிலேயே இயக்குனர் சட்டீஸ்கரின் சூழலையும், இந்திய பொதுபுத்தியில் படிந்துள்ள மாவோயிஸ்டுகளைப் பற்றிய வெளிப்புற தோற்றத்தையும் அறிமுகப்படுத்தி விடுகிறார்.
தொடர்ந்து அமைப்பு,தேர்தல்,ஜனநாயகம், மாவோயிஸசம், தனிமனித நேர்மை ஆகிய ஐந்தடுக்குகளின் மீதும் நகைச்சுவைப் பாணியில் கதை நகரத் தொடங்குகிறது. அமைப்பு, தேர்தல், ஜனநாயகம்,தனிமனித நேர்மைப்பற்றி பார்வையாளர்களுக்கு முன்னமே அறிமுகமிருக்கும். மாவோயிஸ்டுகள்? நியூட்டனை அணுகுவதற்கு முன் பார்வையாளர்கள் மாவோயிஸ்டுகளைப் பற்றிய பொதுபுத்தி அறிமுகங்களை கடாசி எறிய வேண்டியிருப்பது படம் கோரும் அடிப்படைத் தேவையாகும். அது இல்லையென்றாலும், படம் திறம்பட அதை பார்வையாளர்களுக்குள் நிகழ்த்துகிறதென்றே சொல்லலாம். இருந்தும் திரைக்கு வெளியே மாவோயிஸ்டுகளைப் பற்றி சுதீப் சக்ரவர்த்தி எழுதிய RED SUN (travels in naxalite country) புத்தகத்தில் 'மாவோயிஸ்டுகள் தேசபக்தி கொண்டவர்கள். அவர்களே இதனை ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்கள் தனி தேசம் கோரவில்லை. அது ஏற்கெனவே அவர்களிடம் உள்ளது. அவர்கள் நினைத்தபடி அது இல்லை என்பதுதான் விஷயம்.' என்று குறிப்பிடுகிறார். படமும் அந்தக் கூற்றை நுண்ணிய வசனங்கள் மூலமாகவும், காட்சி அடுக்குகள் வாயிலாகவும் திறம்பட விளக்குகிறது.
ஒரு காட்சியில் எரிந்து சிதிலமடைந்துக் கிடக்கின்ற பழங்குடியினரின் குடிசைகளைப் பார்த்து நியூட்டன் "இவற்றை யார் எரித்தது?" எனக் கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் தலைமை காவலதிகாரி ஆத்மா சிங் "நீங்கள் இங்கே தேர்தல் நடத்த வந்திருக்கிறீர்கள்..ஆராய்ச்சி நடத்த வரவில்லை, உங்கள் வேலையைப் பாருங்கள்" என்பார். பிறிதொரு காட்சியில் இந்திய அரசை விமர்சித்து பள்ளிச்சுவர்களில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களைப் பார்த்து "இவற்றை யார் எழுதியது?" எனக் கேட்பார் நியூட்டன். அதற்கு உள்ளூர் பூத் ஏஜெண்டான நாயகி "அவர்களிடமிருந்து எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டால், அவர்கள் வேறு என்னதான் செய்வார்கள்?" எனக் மறு கேள்வியெழுப்புவார். இப்படி மாவோயிஸ்ட்டுகளின் நிலையின் மீதும் நகர்கிற படம் இன்னொரு புறம் மாவோயிஸ்ட் கிராமங்களில் அத்துமீறும் இந்திய காவல் படைகள் மீதும் விமர்சனங்களை எழுப்புகிறது.
நியூட்டன் தேர்தல்மிஷினோடு அந்த ஊருக்குள் நுழைகிற சமயத்தில் அவருடன் நடக்கும் ஒரு காவலதிகாரி "இந்த ஓடைக்கு அந்தப்புறமாகத்தான் பாகிஸ்தான் எல்லை இருக்கிறது" என்கிறார். நியூட்டன் என்ன சொல்கிறீர்கள் எனக் கேட்கவும், அந்த அதிகாரி "எங்களைப் பொறுத்த வரையில் அவர்கள் மாவோயிஸ்டுகளெல்லாம் இல்லை; இந்திய அரசை எதிர்க்கிற எல்லா எதிரிகளும் பாகிஸ்தானிகளே" என கட்டியம் கூறுவார். மற்றொரு காட்சியில் காவலர் கேம்பிற்குள்ளேயே தேர்தலை வைத்துக் கொள்ளலாம், என் சக அதிகாரிகளையே வாக்களிக்கச் செய்கிறேன். இதுவரை அப்படித்தான் தேர்தல்கள் நடந்தது என தேர்தல்அதிகாரியான நியூட்டனிடம் காவலர் தலைவரான ஆத்மா சிங் கூறுவார். நேர்மையாகவும், பிடிவாதமாகவும் தேர்தலை நடத்தியே தீருவேன் எனச் சொல்லும் நியூட்டனிடம் "எழுதித் தரேன் இங்க ஒருத்தனும் ஓட்டு போட வரமாட்டன்" என்று பிறிதொரு காட்சியிலும் ஆத்மாசிங் சொல்வார். தேர்தல் நடத்தப்போகும் பழங்குடி கிராமத்தினரிடமே கோழியை அடித்து பாதுகாப்பு அதிகாரிகளுக்குச் சமைத்துத் தரச்சொல்வது, "தேர்தல் மிஷினில் விதவிதமான பொம்மைகள் இருக்கும், அதுக்கு பக்கத்தில இருக்கும் பட்டன நீங்கள்ளாம் வந்து அமுக்கினா போதும்"மென பழங்குடி மக்களிடம் பொறுப்பற்ற முறையில் தேர்தலைப் பற்றி விளக்குவது, காலை 11.30 மணிக்குள் தேர்தல் முடிந்துவிடும் என பழங்குடிகளிடம் பொய்யுரைப்பது என இந்திய அமைப்பில் காவல் துறையினரின் வானளாவிய அதிகாரத்தை துல்லியமாக அடிக்கோடிட்டு நியூட்டன் திரைப்படம் காட்டுகிறது.
இந்த இடத்தில் "தங்கள் காதலியை ஒரு கண் என்றும், தேசத்தை இன்னொரு கண்" என்றும் உணர்ச்சி பொங்க வசனம் பேசுவதாகவும், அன்பு மக்களைக் காக்க ஆயுதமேந்துவதாகவும் ரொமான்டிசைஸ் செய்யப்படும் மணிரத்னம்,ஹரி மற்றும் இன்னபிற தமிழ் இயக்குனர்களின் படங்களில் வரும் ராணுவ/காவல் அதிகாரிகளின் சித்தரிப்புகளுக்கும், நியூட்டனில் காட்டப்படுகிற யதார்த்தத்தின் மிகஅருகில் நெருங்கிய காவல்துறை சித்தரிப்புக்கும் பல எல்லைகளில் வேறுபாடுகள் உள்ளதை நாம் புரிந்து கொள்ளலாம்.
தேர்தல் என்றால் என்ன? தங்கள் தொகுதியில் யார் போட்டியிடுகிறார்கள்? வேட்பாளர்களென்பவர்கள் யார்? போட்டியிட்டு, வெற்றியடைந்து என்ன செய்யப் போகிறார்கள்? இதுவரையிலும் அப்படி ஜெயித்தவர்களால் எங்களுக்கு என்ன பயன்? எனக் கேட்கிற பழங்குடி மனிதர்களும், எங்கள் பகுதியில் நான்தான் வயதில் பெரிய மனிதர், தேர்தலில் வாக்களித்தால் நான் டெல்லி செல்ல முடியுமா? என அப்பாவியாகக் கேட்கும் இந்தியகிராமத்தின் முதியவர் என தேர்தலமைப்பைப் பற்றி எள்ளவும் தெரிந்து கொள்ளாமல் வாழும் இந்திய மக்களையும், இவர்களிடத்தில் கடமைக்காக தேர்தல் நடத்தச் செல்லும் இந்திய அரசமைப்பையும், மாவோயிஸ்ட்டுகளுக்கும் இந்திய காவலதிகாரிகளுக்கும் இடையில் அல்லோலப்படும் பழங்குடிகளின் ஜனநாயக எல்லைகளையும் படம் அப்பட்டமாக காட்டுகிறது.
பொத்தாம் பொதுவாக சிஸ்டம் சரியில்லை, மாற்றப் போகிறேன் எனக் கிளம்பி வரும் ரிட்டையர்டு அரசியல்வாதிகளின் காலத்தில் அதிகபட்ச நேர்மையோடு நடந்துகொள்ளும் ஒரு அரசு அதிகாரியால், அவனின் அதிகாரத்தால் மட்டும் ஒரு நாளில் மாற்றக்கூடியதா இந்திய சிஸ்டம்? அதை அவ்வளவு எளிதில் மாற்றிவிட முடியுமா? பல நுண் அடுக்களில் இந்த இந்திய சிஸ்டமானது எப்படி இடியாப்பச் சிக்கல்களுடன் சிதைந்து இருக்கிறது. என்பதை நாயகனான நியூட்டனின் தேர்தல் மரத்தடி வினைகளின் மூலமாக படம் துல்லியமாக,தெளிவாக வரையறை செய்து காட்டிவிடுகிறது.
இப்படி அமைப்பு,தேர்தல்,ஜனநாயகம்,நக்சலிசம், என எல்லா அடுக்குகளையும், படத்தின் மையமான தனிமனித நேர்மையின் வழியே அழகுற கோர்த்ததோடு, வெறும் தனிமனித நேர்மையால் மட்டுமே ஒழுகிக்கொண்டிருக்கும் இந்திய சிஸ்டத்தின் கூரையை சரிசெய்துவிட முடியுமா? என இயக்குனர் எழுப்புகிற கேள்வி நியூட்டன் என்கிற திரைப்படத்தின் கேள்வி மட்டுமல்ல, வாக்களிக்கும் அடிப்படை உரிமையோடு வாக்காளர் அட்டைகளை கையிலேந்தியபடி இந்திய அரசியல்வாதிகளால் சீரழிக்கப்பட்ட ஜனநாயகத்தின் மீது இன்னமும் நம்பிக்கைக் கொண்டு ஒவ்வொரு முறையும் வாக்களிக்க காத்திருக்கும் கோடிக்கணக்கான அப்பாவி மக்களின் கேள்வி.
தேர்தல் ஜனநாயகம் பற்றி மட்டுமல்லாது கூடுதல் போனஸாக இந்திய மொழித் திணிப்பு அரசியலையும் தனக்குக் கிடைத்த மிகச்சிறிய இடத்தில் நியூட்டன் வெளிக்காட்டியிருக்கிறது. உள்ளுத் பூத் ஏஜெண்டான நாயகி அந்தப்பழங்குடியினர் கிராமத்தில் ஆசிரியர் வேலை செய்து வருவதாக கூறியதும், எப்படி போகிறது வேலை என நியூட்டன் கேட்பார். அதற்கு "பாடங்கள், பாடத்திட்டங்கள் அனைத்தும் இந்தியில் இருப்பதால் எங்கள் மக்களுக்கு புரிந்து கொள்ள மிகக் கடினமாக இருக்கிறது. நான் ஒவ்வொரு பாடத்தையும் எங்கள் மொழியில் மொழிபெயர்த்து பயில்விக்க வேண்டியிருக்கிறது" என வெறுமை படிந்த விழியோடு நாயகி சொல்வதாய் ஒரு காட்சியும் நியூட்டனில் உண்டு. எந்தவொரு வளர்ச்சியையும் வழங்கிடாமல் பழங்குடியினர் வாழும் காடுகளை ஆகிரமிப்பு செய்ததோடு எண்ணற்ற பழங்குடியினர் வாழ்வை நசுக்கி, இந்தியைத் திணித்து, பழங்குடிகளின் மொழியையும் துண்டாடிய இந்தியாவை, "வேற்றுமையில் ஒற்றுமை" என்கிற அதன் பாவனையை, "தேர்தல் ஒவ்வொரு இந்திய குடிமகன்களின் ஜனநாயக கடமை" என்கிற ஜிகினா சுற்றப்பட்ட அதன் வண்ணக் காகிதத்தை நியூட்டன் கிழித்தெறிந்திருக்கிறது.
- கர்ணாசக்தி