"நாங்களும் மனுஷங்கடா" என்று கடும் ஆவேசத்துடன் கவிதை எழுதினார் இன்குலாப். யார் என்ன கவிதை எழுதினால் எங்களுக்கு என்ன வந்தது என்ற நினைப்பில் இந்திய பார்ப்பன அரசு தன்னுடைய நிலையில் எந்த வித மாற்றமும் இன்றி பார்ப்பன நலன்களைத் தவிர வேறு எதைப் பற்றியும் கவலைப்படாமல் சொகுசாகத் தன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்தியாவில் நிகழும் நிகழ்வுகள் மட்டுமின்றி, இந்திய அரசின் தொடர்பான அயல் நாட்டு நிகழ்வுகளிலும் இது தெளிவாகத் தெரிகிறது.

          நேபாள நாட்டில் உள்ள பசுபதிநாதர் கோயிலில் 5.9.2009 அன்று நேபாள மக்கள் தங்கள் நாட்டிற்கு இந்தியப் பூசாரிகள் வேண்டாம் என்றும் தங்கள் நாட்டுப் பூசாரிகளே பூசை செய்யட்டும் என்றும் கூறி அங்கு பூசை செய்யச் சென்று இருந்த இரு பார்ப்பனப் பூசாரிகளை வழி மறித்து முழக்கம் இட்டு உள்ளனர். அவ்வளவு தான்; ஏதோ பிரளயமே ஏற்பட்டு விட்டது போல இந்திய அரசு துள்ளி எழுந்து விட்டது. நேபாளத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அயல் நாட்டுத் துறை அமைச்சகமும் பார்ப்பனப் பூசாரிகளின் பாதுகாப்பு குறித்து கேள்விகளுக்கு மேல் கேள்விகள் கேட்டு நேபாள அரசைத் துளைத்து எடுத்து விட்டனர். இந்திய நேபாள உறவே முறிந்து போய் விடும் என்ற அளவிற்கு நேபாள அரசை மிரட்டவும் செய்தனர்.

          ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள ஷார்ஜாவில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 16 பஞ்சாபிகளும், ஒரு  ஹரியானா மாநிலத்தவரும் கள்ளச் சாராய வியபாரிகளால் கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டனர். கள்ளச் சாராய வியாபாரிகள் ஒரு பாகிஸ்தானியரைக் கொன்று அப்பழியை இவர்கள் மேல் சுமத்தியுள்ளனர். இந்த 17 இந்தியர்களுக்கும் அரபு மொழி சரியாகத் தெரியாத காரணத்தால் தங்கள் தரப்பு நியாயத்ததை எடுத்து உரைக்க முடியவில்லை. இவ்வழக்கைப் பற்றி அவர்களுடைய உறவினர்கள் மூலம் அறிந்து கொண்ட நவ் கிரண் சிங் என்ற மனித உரிமைக்காகப் போராடும் வழக்கறிஞர் ஷார்ஜா சென்று விசாரித்து அவ்விவரங்களை 30.5.2010 அன்று சண்டிகர் நகரில் வெளியிட்டு இருக்கிறார். ஐக்கிய அரபு எமிரேட் அரசு, அந்த 17 இந்தியர்களும் கைதான உடன் இந்திய தூதரகத்திற்குத் தகவல் கொடுத்துள்ளது. ஆனால் இந்திய தூதரகத்தினர் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

          உலகோர் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட தூதரகப் பணிகளின்படி தன்னாட்டு மக்கள் ஏதாவது பிரச்சினையில் சிக்கிக் கொண்டால், அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வது தூதரகங்களின் அடிப்படைக் கடமை. முக்கியமாக மொழி தெரியாமல் திண்டாடும் பொழுது, மொழி பெயர்த்து உதவி செய்வது தூதரகத்தின் தவிர்க்க முடியாத கடமை என்று கூறிய நவ் கிரண் சிங், இந்திய தூதரகம் 17 இந்தியர்கள் கைது செய்யப்பட்ட தகவலைப் பதிவு செய்ததைத் தவிர வேறு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

          பகவத் கீதைக்கு 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' இயக்கத்தின் நிறுவனர் எழுதிய உரை, மாற்றுக் கருத்தினர் மீது வன்முறையைத் தூண்டுவதாக உள்ளது என்றும் ஆகவே அந்த உரைக்குத் (நன்றாகக் கவனிக்கவும் - பகவத் கீதையின் மீது அல்ல; பகவத் கீதையின் மொழி பெயர்ப்பு மீதும் அல்ல; பகவத் கீதைக்கு யாரோ ஒரு தனி நபர் எழுதிய உரைக்குத் தான்) தடை விதிக்க வேண்டும் என்றும் இரஷ்ய நாட்டின் சைபீரியாவில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் அங்குள்ள கிருத்தவ அமைப்பு ஒன்று வழக்கு தொடர்ந்தது. அவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் 28.12.2011 அன்று மனுதாரரின் கோரிக்கையை ஏன் ஏற்கக் கூடாது என்று விளக்கம் அளிக்கும் படி 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' இயக்கத்திற்கு ஒரு தாக்கீது (notice) அனுப்பியது.  அவ்வளவு தான்; இந்திய நாடாளுமன்றமே அல்லோலகல்லோலப் பட்டுப் போய் விட்டது. இந்திய அரசும் இந்திய தூதரகமும் இரஷ்ய அரசுடனும் தூதரகத்துடனும் போர்க் கால அடிப்படையில்பேச்சு வார்த்தை நடத்தி, அந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வைத்து விட்டன.

          (இப்பிரச்சினையில் நாத்திகர்கள் என்று தங்களைப் பிரகடனம் செய்து கொண்டோர்கள் எந்திரத்தனமாக, பகவத் கீதை தடை செய்யப்பட வேண்டிய நூலே என்று கருத்து வெளியிட்டனரே தவிர, சைபீரிய நீதிமன்றம் பகவத் கீதைக்குத் தடை விதிக்க எத்தனிக்கவும் இல்லை என்றும், ஒரு தனி நபரின் உரைக்குத் தடை விதிப்பதைப் பற்றிய வழக்கு விசாரணையில் தாக்கீது தான் அனுப்பி இருந்ததையும் சுட்டிக் காட்டி உயர் சாதிக் கும்பலினர் தேவையற்ற பீதியைக் கிளப்புவதை மக்களிடையே அம்பலப்படுத்தத் தவறி விட்டனர்.)

          டைடானிக் கப்பல் விபத்து போன்று 'கோஸ்டா கன்கோர்டியா' என்ற சொகுசுக் கப்பல் ஒன்று 13.1.2012 அன்று இத்தாலி நாட்டிற்கு அருகில் விபத்துக்கு உள்ளானது. அக்கப்பலில் 70 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1200 பணியாளர்கள் இருந்தனர். அவர்களில் 202 பேர்கள் இந்தியர்கள். உயிர் தப்பிய அனைவரும் மீட்புப் படகுகள் மூலம் இத்தாலி நாட்டிற்கு வந்தள்ளனர். அவர்களை அழைத்துச் சென்று, நாடு திரும்புவதற்கு வேண்டிய உதவிகள் செய்வதற்காக இந்தியாவைத் தவிர மற்ற 69 நாட்டு தூதரகங்களில் இருந்தும் அதிகாரிகளும் ஊழியர்களும் வந்திருந்தனர். இந்தியர்கள் மட்டும் அனாதைகளாக விடப்பட்டு, செல்லும் வழி அறியாது திகைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்க, உலக அரங்கில் இந்தியாவின் மானம் சந்தி சிரித்தது. இரண்டு நாட்கள் சிரிப்பாய்ச் சிரித்த பின் வேண்டா வெறுப்பாக இந்திய தூதரகத்தினர் செயல்பட்டுள்ளனர்.

          நேபாள நாட்டு மக்கள் தங்கள் நாட்டிற்கு அந்நிய நாட்டுப் பூசாரிகள் வேண்டாம் என்று சொல்வதிலும், அமைதியான முறையில் வழிமறிப்பு செய்ததிலும் எவ்விதத் தவறும் இல்லை. அப்படி இரு பார்ப்பனப் பூசாரிகள் தங்கள் வேலையை இழப்பதால் இந்தியாவின் பொருளாதாரம் சரிந்து விடப் போவதில்லை. ஆனால் பிரளயம் ஏற்பட்டு விட்டது போன்று துடிதுடிப்புடன் இந்திய அரசு செயல்பட்டது. அதே போல பகவத் கீதை விஷயத்திலும் சைபீரிய நீதிமன்றம் பகவத் கீதையை விவாதப் பொருளாக்கவில்லை. அதன் மொழி பெயர்ப்பையும் விவதப் பொருளாக்கவில்லை. பகவத் கீதைக்கு எத்தனையோ பேர்கள் உரை எழுதி இருக்கிறார்கள். அவற்றை எல்லாம் கூட விவாதப் பொருளாக்கவில்லை. ஒரே ஒரு தனி நபரின் உரையை மட்டும் அது வன்முறையைத் தூண்டுவதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் தாக்கீது மட்டுமே அனுப்பியது. இதில் ஏன் இந்திய அரசு தலையிட வேண்டும்? பார்ப்பனர்களுக்கு எதிரானதாக ஒரு சிறு அசைவையும் - அது எவ்வளவு தான் நியாயமானதாக இருந்தாலும் - அனுமதிக்கக் கூடாது என்பதில் இந்திய அரசு முனைப்பாய் இருப்பது இதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

          அதே சமயத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒரு தவறும் செய்யாத நிலையிலும் கொடூரமான துன்பங்களைச் சந்தித்தாலும் அதைப் பற்றி இந்திய அரசு மனதிலும் நினைப்பதில்லை. ஒடுக்கப்பட்ட மக்களே நீங்களும் இந்தியர்கள் தானே? இந்திய அரசு உயர் சாதிக் கும்பலினரைத் தவிர மற்றவர்களை இந்நாட்டுக் குடிமக்களாகவே நடத்துவது இல்லையே? இதை மாற்ற வேண்டும் என்று தோன்றவே இல்லையா? இதற்கான வழி தான் என்ன?

          அரசு எந்திரத்திலும் சமூக பொருளாதார நடவடிக்கைகளிலும் கேந்திரமான இடங்களில் பார்ப்பனர்கள் மட்டுமே ஆக்கிரமித்துக் கொண்டு இருப்பது தான் இதற்குக் காரணம். அப்படிப்பட்ட இடங்களில் வேலை செய்வதற்கான தகுதி அதிகமாகவே படைத்த ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் இருக்கவே செய்கின்றனர். ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு தராமல் திறமைக் குறைவாக இருந்தாலும் பார்ப்பனர்கள் தான் வேண்டும் என்று அவாளே நியமிக்கப்படுகின்றனர்.  அவாள் அவாளுக்காகத் தான் செயல்படுகிறார்களே ஒழிய நம்மைப் பற்றிக் கவலைப்படுவது இல்லை. அது மட்டுமல்ல; ஒடுக்கப்பட்ட மக்கள் போதுமான அளவிற்கு, கேந்திரமான நிலைக்கு வந்தால் அவாளுடைய அயோக்கியத்தனமான சுகங்கள் பறி போய் விடும் என்ற அச்சத்திலும் நமக்கு வாய்ப்பு தரக் கூடாது என்பதில் மிக மிக ..... மிக உறுதியாக இருக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுடைய நலன்களை முன்னெடுக்க வேண்டும் என்றால் நம்முடைய பங்கை நாம் பெற்றே தீர வேண்டும். அதற்கு ஒரே வழி கல்வி, வேலை வாய்ப்பு, மற்றும் அனைத்து சமூக, பொருளாதார நடவடிக்கைகளிலும் விகிதாசாரப் பங்கீடு முறையை அமல்படுத்துவது தான்.

- இராமியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It