இந்திய அரசானது ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களை முன்னிறுத்தி, அதன் மூலம் மக்கள் பிரதிநிதிகளை(?) தேர்ந்தெடுத்து ஆளும் வர்க்கங்களுக்கு சேவை செய்து வருகிறது. வெளித்தோற்றத்தில் பார்க்கும்பொழுது இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசமைப்பு போல் தோன்றினாலும், இங்கு மக்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. வேட்பாளர்களுக்கு வாக்களிக்க மட்டுமே உரிமை உண்டு, அதற்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் மக்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்களுக்காக எந்த வேலையையும் செய்யவில்லை என்றாலோ, மக்கள் நலனுக்கு விரோதமான செயலில் இறங்கினாலோ,  அவரை ஒன்றும் செய்ய இயலாது. தேர்ந்தெடுக்கப்பட மட்டுமே உரிமை, அவர்களை திருப்பி அழைக்க எந்த வித உரிமையும் இல்லை.

cpiml rally

முதலாளித்துவ நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள், மேம்போக்காக  தொழிலாளர்கள், விவசாயிகள், இதர உழைக்கும் மக்களின் சில சீர்த்திருத்த நலன்கள் குறித்து பேசினாலும் கூட அவை ஆளும் வர்க்கங்களின் நலனுக்கு உட்பட்டே அதை செய்கின்றன. இந்த கட்சிகள் தற்போது நிலவி வரும் சமூக அமைப்பே (சுரண்டல் தன்மையுடைய) அத்தனை சிக்கல்களைத் தீர்த்து வைக்கும் என்றும், தனிச் சொத்துடைமையை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளித்துவ சமூகமே மக்களின் நலன் காக்கும் சமூகம் என்று பறைச்சாற்றி ஆளும் வர்க்கங்களை தாங்கி பிடிக்கின்றன.

வறுமை, வேலை இல்லாத நிலை, விலையேற்றம், ஊழல், இலஞ்சம், அரசின் அடக்குமுறை உள்ளிட்ட காரணங்களால் மக்களிடையே ஒரு எழுச்சிகரமான சூழல் உருவாகும் போது, சாதி, மத, இன, மொழி, வட்டார சிக்கல்களை முன்னுக்கு நிறுத்தி அடித்தட்டு மக்களிடையே பிளவுகளை உருவாக்குகிறது. மேலும் ஆட்சியில் இருக்கும் கட்சியின் அனுகுமுறை தான் சமூக சிக்கல்களுக்கு காரணம் என்று கூறி புதிய கட்சிகளை (முதலாளித்துவ நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும்) முன்னுக்கு கொண்டு வந்து அவர்களை ஆட்சி பீடத்தில் ஏற்றி தன்னுடைய வர்க்க நலன்களை முதலாளித்துவ வர்க்கம் காப்பாற்றி கொள்கிறது. இதன் மூலம் முதலாளித்துவமானது தன் மீது இருக்கும் எதிர்ப்பை தற்காலிகமாக மட்டுப்படுத்தி, திசைதிருப்புகிறது. தன்னுடைய வீழ்ச்சியை, அழிவை தற்காலிகமாக தள்ளி வைக்கிறது.

இத்தகைய சூழலில், புரட்சிகர கட்சிகள் சில மக்களை அணிதிரட்டும் பாதையில் பாராளுமன்றத்தை பயன்படுத்துவதில் குழப்பமடைந்துள்ளன. தற்போது நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் பங்கு கொள்வதற்காக களம் இறங்கியுள்ளன. பாராளுமன்றப் பாதையில் பங்கெடுத்துக் கொள்வது குறித்து புரட்சிகர கட்சிகளிடையே மாறுபட்ட கருத்துக்கள் இருந்து வருகின்றன.

சிபிஐ, சிபிஎம் கட்சிகள் முழுக்க முழுக்க பாராளுமன்றப் பாதையிலேயே மூழ்கி விட்டன. பாரளுமன்றத் தேர்தலில் பங்கெடுத்து குரல் கொடுப்பது மட்டுமே பிரதான மற்றும் ஒரே பணியாக கொண்டுள்ளது. மக்களை சமூக மாற்றத்திற்கான சோசலிசப் புரட்சியை நோக்கி அணி திரட்டும் பாதையில் பயணிப்பதற்கான எந்தத் திட்டமும் இந்தக் கட்சிகளிடம் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. கட்சியின் உயர்மட்டத் தலைவர்களே, அதாவது பொலிட்பீரோ உறுப்பினர்களே தேர்தல் களத்தில் நிற்கின்றனர். பாராளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாட்டை  கட்சி கட்டுப்படுத்த முடிவதில்லை.

கட்சியின் அனைத்து நடவடிக்கைகளும் பாராளுமன்ற, சட்டமன்ற நலன்களே தீர்மானிக்கின்றன. கட்சியும் பாராளுமன்றப் பாதையும் ஒன்றை ஒன்று பிரிக்க முடியாதபடி பிண்ணிப் பிணைந்துள்ளது. கட்சியின் அடிமட்டத்தில் இருக்கும் ஊழியர்களின் தன்னலங்கருதாத உழைப்பை மேல்மட்டத்தில் இருக்கும் கட்சிப் பொறுப்பாளர்களும், பாராளுமன்ற சட்டமன்றப் பிரதிநிதிகளும் தங்கள் நலனுக்காக பயன்படுத்திக் கொள்கின்றனர். கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வரும் நிர்வாகிகள் பெரும்பாலும் முதலாளித்துவ சிந்தனையாளர்களாகவே உள்ளனர். சில சீர்த்திருத்த நடவடிக்கைகள் மூலம் மக்கள் திரளை திரட்ட நினைப்பதும், பாராளுமன்றப் பாதை மூலமாகவே சோசலிசத்தை (உண்மையில் அவர்களுக்கு அப்படி ஒரு திட்டம் இருக்கிறதா என்பதும் கேள்விக்குறியே!) நோக்கி பயணிப்பதுமாக இந்த கட்சிகளின் வழிமுறை உள்ளது.

சிபிஐ, சிபிஎம்மின் பாதை விலகலையடுத்து உருவான எம் எல் இயக்கமானது பல பிரிவுகளாக பிளவுண்டு, இன்று ஆங்காங்கே பிரதேசம் சார்ந்த - பகுதி சார்ந்த கட்சியாக உள்ளது. ஒருபுறம் மார்க்சிய அரசியலை மக்களிடையே கொண்டு சென்று அவர்களை அணிதிரட்டுவதில் பின்னடைவை சந்தித்து வரும் வேளையில், அவற்றில் சில கட்சிகள் வறட்டுத்தனமாக சட்டமன்ற, நாடாளுமன்றப் பாதையை பயன்படுத்த முயற்சித்து வருகின்றன. இதற்கு ரசியாவில் போல்ஷ்விக்குகளின் டூமா பங்கேற்பை முன்மாதிரியாக கொள்கின்றன. இவர்கள் மக்கள் திரள் வேலைகளை முன்னெடுத்த தளப்பகுதிகளில் தேர்தலுக்கு போட்டியிட முயற்சிக்கின்றன. ஆனால், இவர்களால், இந்த சட்டமன்ற, பாராளுமன்றத் தேர்தல்களில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த முடிவதில்லை.

சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றங்களில் புரட்சிகர கட்சிகள் பங்கேற்று, அங்கும் சட்டமன்ற- நாடாளுமன்ற அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்த வேண்டும். சட்டமன்ற - நாடாளுமன்றங்களில் நடைபெறும் மக்கள் விரோத செயல்களை அனைத்து தளப் பிரதேசங்களுக்கும் (புரட்சிகர கட்சிகள் பலவீனமாக உள்ள மற்றும் தளப்பகுதிகள் நிறுவாத இடங்கள்) கொண்டுச் சென்று அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் ஆளும் வர்க்கங்களை அம்பலப்படுத்த வேண்டும். உழைக்கும் மக்கள் இந்த முதலாளித்துவ் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் வரையில், முதலாளித்துவ பாராளுமன்ற முறையில் பங்கெடுத்து அதனை அம்பலப்படுத்த வேண்டும் என்பது புரட்சிகர கட்சிகளின் கடமையாகும். நடைமுறையில் இருக்கும் பாராளுமன்ற - சட்டமன்ற முறையானது பெரும்பான்மையாக இருக்கும் உழைக்கும் மக்களுக்கு எந்தவித தீர்வையும் தர இயலாது என்பதை மக்களிடம் பரப்புரை செய்து, இதற்கு மாற்று சோசலிச சமூகமே என்பதை விளக்கி அவர்களை தம் பின்னால் அணிதிரட்ட வேண்டும்.

அனால், இத்தகைய பாதைகளில் புரட்சிகர கட்சிகள் என்று சொல்லிக் கொள்ளும் கட்சிகள் பயனிக்கின்றனவா? இன்று சில மார்க்சிய லெனினிய கட்சிகள் தேர்தலில் பங்கு கொள்வதற்கு முயற்சி செய்து வருகின்றன. சில இதற்கு முன்னால் போட்டியிட்டும் உள்ளன. இத்தகைய மார்க்சிய லெனினியக் கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் மக்கள் செல்வாக்கு படைத்தவைகளா? என்றால், நிச்சயம் கேள்விக்குறியே!. மக்கள் செல்வாக்கு இல்லாத நிலையில் சட்டமன்றத் தேர்தலில் பங்கேற்பது என்பது கட்சிக்கும், மக்களுக்கும் எந்தவித பயனையும் தராது.

புரட்சிகர கட்சியானது தாங்கள் செல்வாக்குள்ள பகுதிகளில் முதலாளித்துவ தேர்தல்களில் பங்கேற்று, தங்களுடைய பிரதிநிதிகளை சட்டமன்ற - பாராளுமன்றத்திற்கு அனுப்பி, உள்ளேயும் - வெளியேயும் முதலாளித்துவ அரசை அம்பலப்படுத்த வேண்டும். ஆனால், மக்கள் செல்வாக்கை, இன்னும் பெறாத நிலையில், வெறுமனே கோட்பாட்டை நடைமுறைப்படுத்துவது என்பது வறட்டுத்தனமானதாகும். குறைந்த பட்சம் இத்தகைய கட்சிகள், அந்த தொகுதியில் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கக் கூடிய அளவிலாவது இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், ரசிய முன்மாதிரியை வைத்துக் கொண்டு, அதற்கான சரியான சூழல் இல்லாத நிலையில் சட்டமன்ற - நாடாளுமன்றத் தேர்தலில் பங்கேற்பது என்பது எந்தவித பயனையும் அளிக்காது, மாறாக, புரட்சிகர கட்சி ஊழியர்களின் உழைப்பு வீணாவது மட்டுமே மிச்சம்.

சில கட்சிகள், மக்களிடம், தாங்கள் பெற்றுள்ள செல்வாக்கை தெரிந்து கொள்வதற்காக, இதனை பயன்படுத்துவதாக நினைக்கலாம். அதற்கு கூட, குறைந்தபட்சம், வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கக் கூடிய அளவிலாவது செல்வாக்கை செலுத்தும் அளவிற்கு புரட்சிகர கட்சிகளிடம் மக்கள் செல்வாக்கு இருக்க வேண்டும். இத்தகைய கட்சிகளிலும் கூட, தலைமை பொறுப்புகளில் இருப்பவர்கள், இத்தகைய தேர்தல்களில் ஈடுபடுவதானது, கட்சியின் வேலைத் திட்டத்தை வெறும் பாராளுமன்ற பாதையாக மட்டுமே (சிபிஐ - சிபிஎம் போன்று) குறுக்கிக் கொள்வதற்கு வழி வகுக்கும்.

எனவே, புரட்சிகர கட்சிகள், இந்த தேர்தல் பாதையை பயன்படுத்திக் கொள்வதில், தெளிவான, மார்க்சிய சிந்தனையோடு செயல்பட வேண்டும். கோட்பாடுகளை, வறட்டுத்தனமாக நடைமுறைப்படுத்துவதை கைவிட்டு சரியான செயல்திட்டத்தோடு பயணிப்பதன் மூலமே, பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் மற்ற உழைக்கும் மக்களை அணிதிரட்டி புரட்சிகர சமூக மாற்றத்தை அடைய முடியும்.

- குறிஞ்சி