கடந்த 53 ஆண்டுகளாக எழுத்துலகில் ஜீவித்திருக்கும் எழுத்தாளர் சை.பீர் முகம்மதுவுக்கு வயது 70. மலேசியப் படைப்புலகை உலகறியச் செய்ததில் இவரின் உழைப்பு உன்னதமானது. மலேசியாவிலிருந்து அடிக்கடி தமிழகம் வந்து இலக்கியவாதிகளைச் சந்திக்கிற பீர் அண்மையில் அப்படியொரு நிகழ்விற்காக இங்கு வந்திருந்தார். மிகக்குறுகிய கால அவகாசத்தில் அவருடன் நடத்திய உரையாடலிலிருந்து...

peer_mohamed_360உங்கள் வாசிப்புப் பழக்கம் எப்போது துவங்கியது..? அதற்கு இசைவாக உங்கள் குடும்பச் சூழல் இருந்ததா?

நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே கல்கண்டு பத்திரிகையை டேபிளுக்கு அடியில் வைத்துப் படிக்க ஆரம்பித்தேன். அந்தக் காலத்தில் கல்கண்டைத் தாண்டி யாரும் வர வாய்ப்பேயில்லை. சின்னச் சின்னத் துணுக்குகளாய் இருப்பது மட்டுமல்ல, உலகத்தின் பல தகவல்களை ஒன்றுதிரட்டி அது தந்தது. தமிழில் அதுபோல வேறு பத்திரிகை இல்லை. உலகத்தில் தேடல் நிறைந்தவனுக்கு அது பெரிய வரப்பிரசாதமாக இருந்தது. அதிலிருந்து இலக்கிய அறிவைப் பெற்றேன்னு சொல்ல முடியாது. ஆனால், உலக அறிவை சின்ன வயதிலேயே பெற்றேன். தமிழகத்தின் சிறுபத்திரிகைகளின்மீது என் கவனத்தைப் பின்னாளில் செலுத்தினேன். என் அப்பா பெரிய வெற்றிலை மொத்த வியாபாரி. மலேசியா முழுதும் சப்ளை பண்ணிக்கொண்டிருந்தார். ஜப்பானியர்களின் பிடியிலிருந்து மலேசியா வெள்ளையரின் ஆட்சிக்குட்பட்டபோது அவரின் வியாபாரம் பிரச்சனைக்குள்ளானது. சம்பாதித்த பணத்தில் புறம்போக்கு நிலங்களை வாங்கி, அதில் வெற்றிலை பயிரிடத் தொடங்கினார் அப்பா. படிப்பறிவு இல்லாததால் அதன் பின்விளைவுகளை அவர் பார்க்கவில்லை. ஒருநாள் எங்கள் வெற்றிலைப் பயிர்கள் வெள்ளத்தால் மூழ்கிப்போனது. பக்கத்தில் அரசாங்கம் ஈயச் சுரங்கம் வெட்டத்தொடங்கியதால் இந்த நிலைமை. ஒரே இரவில் மன்னனாக இருந்தவர் நாடோடியான கதைதான் எங்கள் அப்பாவுக்கு ஏற்பட்டது. ஏழ்மைக்குத் தள்ளப்பட்டோம். எல்லோரும் எங்காவது வேலை செய்துதான் பிழைக்கவேண்டும் என்ற நிலைமை.

என்னுடைய ஏழு வயதில் என் அம்மா இறந்துவிட்டார். நான் பள்ளிக்கூடம் போகாமல் வேலைக்குப் போக நேர்ந்தது. பத்து வயதில்தான் என்னைப் பள்ளிக்கூடத்தில் மறுபடியும் கொண்டுபோய் விட்டார்கள். என் கையை ஊன்றியே நான் கரணம் பாய்ந்து என்னை உருவாக்கிக்கொண்டேன். பதினொரு வருடங்கள் மலேசிய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றியும் இருக்கிறேன். பிறகு சொந்தமாகத் தொழில் தொடங்கினேன். இத்தனை நடந்தபோதும் எழுதிக்கொண்டிருப்பதும், வாசிப்பதும் என் ரத்தத்தில் ஊறிப்போன ஒன்றாகவே இருந்துவந்திருக்கிறது. பரந்த வாசிப்பு, தொடர்ந்த வாசிப்பு. ஒரு நாளைக்குக் குறைந்தது இரண்டு அல்லது மூன்று மணி நேரம் வாசிப்பதற்குச் செலவழிப்பேன். ஒன்றரை மணிநேரமாவது எழுதுவதற்கு ஒதுக்கிக்கொள்வேன்.

ராணுவப் பணியை விட்டுவந்தபின் என்ன தொழில் செய்தீர்கள்?

அச்சகங்களுக்குத் தேவையான உபகரணங்கள், ஈய அச்சு எழுத்துக்களை தமிழ்நாடு, ஜெர்மனி, ஹாங்காங் போன்ற இடங்களிலிருந்து வரவழைத்து விற்றுவந்தேன். மலேசியாவில் இல்லாத பொருட்களை வெளியிலிருந்து வரவழைத்து மொத்த வியாபாரம் செய்தேன். லாபகரமாக இருந்தும் கூட்டு வியாபாரம் செய்ததால் முரண்பாடு வந்து தொழில் முடங்கியது. இது நடந்தது 1978ல். அப்போது நான் தனியாகத் தொழில்செய்யும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டேன். எனக்கு மகாத்மா காந்தியை நிறையப் பிடிக்கும். 1978 ஆம் வருடம் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதி புதிய தொழில் துவங்கினேன். இரண்டு லட்சம் ரூபாய் கடனோடு என்னை பழைய கூட்டாளிகள் விட்டுச் சென்றிருந்தார்கள். அதையும் கட்டினேன். சாலை போடும் குத்தகைத் தொழில் ஆரம்பித்தேன். இன்று வரையில் அந்தத் தொழிலில்தான் இருக்கிறேன். எனக்கு நான்கு மகன்கள், ஒரு மகள். இன்னும் ஒரு மகனுக்குத்தான் திருமணம் ஆகவேண்டும். இரண்டு உணவகங்கள் இருக்கின்றன. தொழில்களை மகன்கள் பார்த்துக்கொள்கிறார்கள். நான் உதவுவேன். மற்றபடி எழுதுவதற்கும் படிப்பதற்கும் இப்போது அதிக நேரம் கிடைப்பதாக உணர்கிறேன்.

இலக்கிய வகைமைகளில் எதில் அதிக ஆர்வம் உங்களுக்கு?

சிறுகதைகளில்தான் ஆரம்பத்திலிருந்தே ஈர்ப்பு எனக்கு. நான் பல புது முயற்சிகளை சிறுகதைத் துறையில் செய்துள்ளேன். எனது எந்தக் கதையும் ஒரே மாதிரி இருக்காது. மற்றவர்களைப் போல எழுதக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். எனக்கென்று ஒரு தனித்தன்மையை எப்போதும் பராமரித்து வருகிறேன். தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வரும் பழக்கத்தால் இங்கு நிறைய எழுத்தாளர்களை சந்தித்துப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் என்னுடைய வாசிப்புத்தளம் விரிவடைந்துகொண்டே போனது. ஆரம்பத்தில் புதுமைப்பித்தன் எனக்குள் ஒரு விழிப்பை இலக்கியம் சார்ந்து ஏற்படுத்தினார். நான் மற்றவர்களைத் தேடித்தேடிப் படிக்க ஆரம்பித்தேன். ஆங்கில நூல்கள் சில படிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் முடிவெடுத்தேன், நாம் பத்தோடு பதினொன்று என்ற ரக எழுத்தாளனாக இருக்கக்கூடாது என்று. இன்றுவரையில் இதற்கான முயற்சிகளைக் கைவிடாமல் இருக்கிறேன். ஆனால் இதில் வெற்றி பெற்றேனா என்பதை நான் சொல்லமுடியாது.

உங்களது படைப்புகளுக்கான அங்கீகாரங்கள் குறித்துச் சொல்லுங்கள்...

மலேசியாவில் பாரதிதாசன் விருது முதன்முதலாகத் தந்தார்கள். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் எனக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதாக தங்கப் பதக்கம் கொடுத்தார்கள். என்னுடைய சிறுகதைத் தொகுப்பொன்றுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசும் கிடைத்துள்ளது. மலேசியாவுக்கு வெளியே தமிழகத்திலிருந்து அண்மையில் கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை விருது தினமணி ஆசிரியரின் கைகளால் வழங்கப்பட்டு, வாங்கினேன். இவை அல்லாமல் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் என்னுடைய நூல்களை வெளியிட்டிருக்கிறார்கள். பல நல்ல காரியங்களுக்கு நான் பயன்பட்டிருக்கிறேன். இதுவரையில் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நாவல், ஒரு கட்டுரைத் தொகுப்பு, பயண நூல் இரண்டு, இப்போது ஒரு கவிதை நூல் வந்திருக்கிறது. இப்படி மொத்தம் ஒன்பது நூல்கள் வெளிவந்துள்ளன. கவிதை நூலுக்கும் ஒரு லட்ச ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. உங்கள் சாகித்ய அகாடமியை விடப் பெரிய தொகை இது. நீங்கள் கேட்டதற்காகத்தான் இதைச் சொல்கிறேனே தவிர, எப்போதுமே பரிசுகளைப் பெரிதாக நினைக்காத மனநிலைதான் எனக்கு உரியது.

இலக்கியத்திற்கான உங்களது மறக்கமுடியாத சாதனையாக எதைக் கருதுவீர்கள்?

 தமிழ்ப் பத்திரிகைச் சூழலில் ஒரு காலகட்டம் வரையில் மலேசிய எழுத்துக்களுக்குப் பெரிய கவனம் இல்லாமல் இருந்தது. மலேசியப் படைப்புகளுக்குத் தமிழ்நாட்டில் மதிப்பே இல்லை. எழுதினாலும் போடமாட்டார்கள். மலேசியத் தபால்தலையைப் பார்த்தாலே தேறாது என்று கிழித்துப்போட்டுவிடும் நிலை. மலேசிய எழுத்தாளர்களுக்குத் தகுதியில்லை, திறமை இல்லை என்று நினைத்தார்கள். அப்போது நான் இங்கு வந்து நிறைய சண்டைபோட வேண்டியிருந்தது. என்னைப் பார்த்த உடனேயே இதோ வருகிறார் சண்டைக்காரர் என்று சொல்வார்கள். மலேசிய இலக்கியத்துக்காக நான் தமிழ்நாட்டில் சண்டை போட்டேன். அப்போது ஒரு நியாயமான குரல் கேட்டது. நீங்கள் என்ன எழுதுகிறீர்கள்? உங்களில் யார் எழுதியிருக்கிறார்கள்? எங்களுக்கு ஒன்றுமே தெரியவில்லையே என்று சொன்னார்கள். அதுவும் எனக்கு நியாயமாகப் பட்டது. இதனால், ஐம்பது ஆண்டுகளில் வெளிவந்த மிகச் சிறந்த எழுத்தாளர்களின் மிகச் சிறந்த நூறு மலேசியக் கதைகளை நான் தேடித் தொகுத்தேன். இதற்காக நான் என்னுடைய எழுத்து, வாசிப்பு எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு ஐந்து ஆண்டுகள் இந்தப் பணியில் இறங்கினேன்.

peer_mohamed_361நூறு படைப்பாளிகள் என்றால் பலர் இறந்துவிட்டிருந்தனர், சிலர் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டனர். சிலர் எங்கே போனார்கள் என்றே தெரியாத நிலை. இத்தனையையும் தாண்டி கடுமையாக உழைத்துத்தான் இந்தக் காரியத்தில் வெற்றிபெற்றேன். "வேரும் வாழ்வும் - ஐம்பதாண்டுக் கதைகள்" என்ற தலைப்பில் மூன்று தொகுதிகளாக ஆயிரத்திச் சொச்சம் பக்கங்களில் இந்தத் தொகுப்பை 2000 ஆம் ஆண்டில் ஜெயகாந்தனை அழைத்துச் சென்று வெளியிட்டோம். இதன் பிறகு உலகில் எங்கெல்லாம் தமிழ் பேசுகிறார்களோ அங்கெல்லாம் இந்த நூல் சென்று எங்கள் மண்ணின் கதைகளைப் பேசியது. அப்போதுதான் மலேசியவிலும் எழுதுகிறார்கள், சிறுகதைகள் வருகின்றன என்ற உண்மை முழு வெளிச்சத்துக்கு வந்தது. இந்த வேலையை என் தோள்களில் சுமந்துகொண்டு செய்தேன். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் இதன் இரண்டாவது தொகுதியைப் பாடநூலாக வைத்தார்கள். அதிலிருந்து சில கதைகளை மலேசியாவில் மேல்நிலை மாணவர்களுக்குப் பாடமாக வைத்தார்கள். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் மலேசிய இலக்கியம் என்று ஒரு பாடம் துவங்கலாம் என்ற நம்பிக்கையை இந்தத் தொகுப்புகள் தந்தன. காரைக்காலில் ஒரு மாணவர் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார். இந்தத் தொகுப்பில் இடப்பெற்றுள்ள என்னுடைய சிறுகதைகளை பழநியில் உள்ள பழநியாண்டவர் கலைக் கல்லூரி மாணவர் ஒருவர் எம் ஃபில் ஆய்விற்காக எடுத்திருக்கிறார். ஆக, பல்கலைக்கழகங்களின் கதவுகளைக்கூட எங்களது மலேசியச் சிறுகதைகள் திறக்கச் செய்துள்ளன. அதற்கு என்னால் கொண்டுவரப்பட்ட வேரும் வாழ்வும் தொகுப்பு பெரும்பங்காற்றியிருக்கிறது என்ற மனநிறைவுதான் எனக்குப் பெரிதாக இருக்கிறது.

உங்களது படைப்புகளில் எந்தமாதிரியான உள்ளடக்கங்களை வைக்கிறீர்கள்?

எனது உள்ளடக்கங்களை சமூகத்திலிருந்துதான் எடுத்துக்கொள்கிறேன். நான் சமூகத்தின் அடித்தட்டிலிருந்து வந்தவன். வறுமையை வலியோடு அனுபவித்தவன். வேதனை என்றால் என்னவென்று எனக்குத் தெரியும். அடித்தட்டு மக்களின் வாழ்க்கைதான் என்னுடைய கதைகளுக்குக் களமாக அமைந்தது. யார் என்ன செய்தாலும், நினைத்தாலும் என்னுடைய மிகமுக்கியமான நோக்கம் மனிதநேயம் தான். மனிதனை மனிதன் நேசிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எழுத்தின் அடிநாதம். மனித நேயம், மனித விடுதலை இந்த இரண்டும் ரொம்ப முக்கியம். எனக்கு வயது ஆகஆக என்னுடைய எழுத்துக்கு ஒரு தெளிவு வந்திருக்கிறது. அது எனக்கே தெரிகிறது. என்னை நோக்கி வீசப்படுகிற மிகமுக்கியமான கணை என்னவென்றால், நீ ஒரு முஸ்லிம். நீ இதுவரையில் ஒரு முஸ்லிம் கதைகூட எழுதவில்லை. இது முஸ்லிம் சமூகம் என்னைநோக்கி வைக்கும் பெரிய குற்றச்சாட்டு.

இதற்கு நீங்கள் என்ன பதில் தந்தீர்கள்?

நான் கதை மட்டும்தான் எழுதுகிறேன். அது முஸ்லிம் கதையா, இந்துக் கதையா, கிறிஸ்தவக் கதையா அல்லது பௌத்தக் கதையா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் கதை மட்டும்தான் எழுதுகிறேன். ராமசாமியைப் பற்றி நான் எழுதினால் அதை இந்துக் கதை என்று நீங்கள் எடுத்துக்கொள்கிறீர்கள். நான் அப்படி நினைக்கவில்லை. நான் கதை மட்டும்தான் எழுதுகிறேன்.

அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அதன் பிரத்தியேகப் பிரச்சனைகளை நுட்பமாகக் கையாள உங்களால் முடியும் என்ற எதிர்பார்ப்பு நியாயம்தானே?

ஆமாம். எதுவுமே என்னைப் பாதிக்கவேண்டும். ஒரு கரு உதிச்ச உடனே எழுதிவிட முடியாதுதானே? நான் எப்போதும் அப்படி எழுதியதில்லை. கரு என்பது ஒரு விதை. அது விதைக்கப்பட்டுள்ளது. அது முளைத்து, சிறிய கன்றாக வளர்ந்து, பெரிதாகி, பூத்துக் காய் விடுமளவு வரும்போதுதான் அது எழுதுகிற பக்குவத்துக்கு வந்திருக்கிறது என்று பொருள். உங்கள் கேள்விக்குப் பின்னால் இந்த எண்ணம் வந்ததா அல்லது அதற்கு முன்னமே என் மனதில் இது இருந்ததா என்று தெரியவில்லை.

முஸ்லிம் சமூகத்தைப்பற்றிச் சொல்லவேண்டியவை ஏராளம் இருக்கின்றன. முஸ்லிம் சமூகத்துக்குள்ளும் அதற்கு வெளியிலும் நிறையச் சொல்லவேண்டும் என்று தோன்றுகிறது. மலேசிய முஸ்லிம் சமூகத்தில் வரதட்சணை என்பது இல்லை. ஆனால் அது இந்தியாவிலும், இலங்கையிலும் கடுமையாக இருக்கிறது. இது எப்படிச் சரியாகும்? முஸ்லிம் பெண்களின் இதுபோன்ற பிரச்சனைகள் என் மனதை மிகவும் பாதித்துள்ளது. இதனைச் சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன்.

அழகிய முன்மாதிரி என்று நபிகள் நாயகத்தைச் சொல்வார்கள். எல்லாவற்றிலும்தானே அவர் அழகிய முன்மாதிரி? அப்படியென்றால் இந்த வரதட்சணை வாங்குவதில் மட்டும் ஏன் அவர் உங்களுக்கு முன்மாதிரி இல்லை? அவர் ஐநூறு திர்காம் மகர் பணம் கொடுத்துத்தானே திருமணம் செய்தார்? வரதட்சணை வாங்கும் நீங்கள் ஏன் முக்காடு போடமட்டும் கட்டாயப்படுத்துகிறீர்கள்? உங்களுக்கு ஒரு சட்டம் பெண்களுக்கு ஒரு சட்டமா என்று கேட்கத் தோன்றுகிறது. இந்தக் கருத்துக்கள் என்னுடைய அடுத்த சிறுகதைகளில் வரும்.

அதேபோல, உலகம் முழுவதும் முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதி என்று பரப்பப்பட்டுள்ள பிரச்சனை. பாலஸ்தீனத்தில் வாழ நாடில்லை. இராக்கில் பயங்கரமான ஆயுதங்கள் இருப்பதாகச் சொல்லி உள்ளே போய்க் கடைசியில் சதாம் உசேனைக் கொன்றதில் அது முடிந்தது. அன்று தொடங்கி இன்று லிபியா வரையில் எண்ணெய் வள நாடுகளின்மீது கண்ணாக இருக்கிறார்களே... இந்த எண்ணெய் வளம் முற்றிலுமாக வற்றிப்போய்விட்டால் ஒருவேளை உலகம் அமைதியாகிவிடுமோ என்னவோ தெரியவில்லை. இப்படி எல்லாவற்றையும் இலக்கியமாகப் பதிவுசெய்ய ஆசைதான்.

மலேசியாவிலும் தமிழர்கள் போராடுகிறார்களே...

ஆமாம். இந்தப் போராட்டம் கொஞ்சம் பலனளித்துள்ளது. தமிழர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்பதை ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் இப்போது உணர்கிறார்கள். அதற்கு இந்த ஒற்றுமையான போராட்டம்தான் வழிவகுத்தது. ஆனால், இப்போது தமிழர்களின் ஒற்றுமை அதற்குள்ளாகச் சிதைந்து நான்கு பிரிவுகளாக உடைந்துவிட்டது. இதுவும் மனதில் வலியைத் தந்துள்ளது.

சந்திப்பு: சோழ.நாகராஜன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

படங்கள்: சூர்யாஸ்

Pin It