சமீபத்தில் சென்னையில் இருந்து கோவை வருவதற்காக சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் ஒற்றைக் காலை இழுத்தும் தேய்த்தும், தாங்கு குச்சியை ஊன்றியும் கூட்டத்தில் இடிபட்டு கீழே விழாமல் சாகசம் செய்து வியர்த்து மூச்சு வாங்க...  பெட்டியில் ஏறி அமர்ந்தேன். மெல்ல பக்கத்தில் இருந்து சஃபாரி ஆசாமி பேச்சுக் கொடுத்தார். "தம்பி என்ன வேல பாக்கிறீங்க?" "சமூகப் பணி" என்று பதிலளித்தேன். "உங்களுக்கெல்லாம் கெவர்மண்டுல ஒடனே வேல கொடுத்துருவாங்களே? நீங்க படிக்கலயா?" எனது முதுகலைபப்ட்டத்தைப் பற்றிச் சொன்னேன். "ஒங்களுக்குத்தான முன்னுரிமை? முயற்சி பண்ணலயா? வேலை வாய்ப்பு அலுவலகத்துல பதியலயா? பரிட்‍சை கிரிச்ச எழுதலயா?" என்று அக்கறையோடு ஆயிரம் கேள்விகளை கேட்டுத் துளைத்தார். எல்லாம் மாற்றுத்திறனாளியான என் மீது இருந்த அக்கறைதான் காரணம். 

மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய மாநில அரசுகளின் வேலை வாய்ப்பில் மூன்று சதவிகித இடஒதுக்கீடு அளித்திட சட்டம் 1995 ஆம் ஆண்டு இயற்றப்பட்டுள்ளது. (PWD ACT 1995) ஆனால் இது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை வெகுமக்கள் அறிந்து கொள்ளவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக வேலை கிடைக்கும், வேலையில் முன்னுரிமை உள்ளது என்பது போன்ற சமூக மாயை கட்டமைக்கப்பட்டுள்ளது. இதுவும் ஒருவிதமான மூடநம்பிக்கையாகவே திகழ்கிறது. உண்மையில் பெயரளவிலான இடஒதுகீடு மட்டுமே உள்ளது. மத்திய அரசின் சில பிரிவுகளில் வேலை வாய்ப்பு வழங்கப்படுவது உண்டு. ஆனால் பணியிடங்கள் குறைவாகவே உள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கான பணிகளை இனம் கண்டு இவ்வகையான பணிகளைச் செய்யலாம் என்று அறிவித்துள்ளனர். இதில் பெரும்பான்மையான பணியிடங்கள் கணக்கர், எழுத்தர், உதவியாளர் போன்ற பணிக‍ளே. முடிவெடுக்கும் அதிகாரங்கள் உடைய பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு என்பது இல்லை அல்லது மறுக்கப்படுகிறது.

இவ்வகையான பணிகளைச் செய்யத்தான் இவர்கள் தகுதியுடையவர்கள் அல்லது இவர்களுக்கு இதுவே போதும் என்பதுதான் அரசின் மனநிலையாக இருக்கிறது. இந்திய ஆட்சிப் பணியில் வெற்றி பெற்ற பல மாற்றுத்திறனாளிகளுக்கு எந்தவிதமான வாய்ப்பையும் வழங்காமல் அவர்களை அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறது அரசு. பார்வைக் குறைபாடு உடைய ஒரு மாற்றுத்திறனாளி இந்திய ஆட்சிப் பணியில் வெற்றி பெற்று பல ஆண்டுகள் அவருக்குப் பதவியே வழங்கப்படவில்லை. எனது நண்பர் கைகால் இயக்கக் குறைபாடு உடையவர். இந்திய ஆட்சிப் பணியில் வெற்றி பெற்றும் 2005 ஆண்டு இடஒதுக்கீடு இல்லாத காரணத்தால் (2004ஆம் ஆண்டு இடஒதுக்கீடு உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் வழங்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது) அவரால் பணியைப் பெற இயலவில்லை. இதற்கான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 2010-2011 ஆம் ஆண்டுக்கான இந்திய அஞ்சல் துறையில் தமிழ்நாட்டில் 1000 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு இடம் கூட ஒதுக்கப்படவில்லை. இந்த அநீதியைக் கண்டித்து கோவையைச் சேர்ந்த ஆறு மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது.

தொடரும் தனியார் மயமாக்கல் மாற்றுத்திறனாளிகளின் அரசு வேலை வாய்ப்பைக் கானல் நீராக்குகிறது. தனியார் மயமாக்கலினால் பணிப் பாதுகாப்பு இல்லை, தொழிலாளர்களுக்கான உரிமைகளும் இல்லை என்றாகிறது. உடலில் எவ்விதமான குறையும் இல்லாதவர்கள் ஏதேனும் ஒரு வகையில் இவற்றைச் சமாளிக்கலாம். ஆனால் மாற்றுத்திறனாளிகளால் இவ்வகையான பிரச்சனைகளைச் சமாளிக்க இயலாது. தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு பெருமளவு வேலை வாய்ப்புகள் காத்திருந்தாலும் கால நிர்ணயம் இல்லாத வேலைச் சுமை, குறைவான அளவு ஊதியம், நிரந்தரமற்ற வேலை போன்ற பல்வேறு பிரச்சனைகளுடன் அவர்கள் சந்திக்கும் சுற்றுப்புறச் சூழல் தடைகள் மிக அதிகமாக உள்ளன. இவைகள் அவர்களுக்கு தனியார் நிறுவனத்திலிருந்து அரசு வேலையை நோக்கி உந்துகிறது.

தமிழகத்தில் அரசு ஆசிரியர் பணி என்பது குதிரைக் கொம்பான விடயம்தான். என்றாலும் அதற்காக முயற்சிக்கும் மாற்றுத்திறனாளிகள் அதிகம். ஆசிரியர் பயிற்சி முடித்த மாற்றுத்திறனாளிகள் அரசு வேலையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். மூன்று சதவிகித இட ஒதுக்கீடு என்பது அனைவரின் கனவையும் பூர்த்தி செய்வதாக இல்லை. அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகள் போன்றவற்றில் உள்ள பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு என்பது இன்னமும் கேள்விக் குறியாகவே இருக்கிறது. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ஏற்படும் காலியிடங்களை நிர்வாகம் தங்களுக்கு வேண்டிய நபர்களைக் கொண்டு, பணம் பெற்றுக் கொண்டு நிரப்பி வருகிறது. இதில் தலித்துகளுக்கான இட ஒதுக்கீட்டிலும் இதே நிலையே நீடிக்கிறது. சமீபத்தில் கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக் கழகத்தில் தலித்துகளுக்கான இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படவில்லை என்பதை புலனாய்வுத்துறைக்கு தெரிவித்து, புலனாய்வுத்துறையும், இலஞ்ச ஒழிப்புத் துறையும், பல்கலைக்கழகத்தில் பொறுப்பில் உள்ள பலரின் வீடுகளில் சோதனைகளை மேற்கொண்டது.

பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு எதிராக மாற்றுத்திறனாளி குமாரி என்.கவிதா என்பவர் தொடர்ந்த வழக்கில் (W.P.No.28217 of 2008 & M.P.No.1 of 2008) நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் 13.10.2009 அன்று வழங்கிய தீர்ப்பில் உடனடியாக இவருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மேலும் ஐந்து மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பினை பல்கலைக் கழகம் அடுத்து வரும் ஆண்டுகளில் வழங்கிட வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் அடுத்து வந்த காலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.  மீண்டும் பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரியில் கோப்புக் கணக்கர் (Record Clerk) பணியில் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று திரு. கணேசமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கில் (Writ Petition No.392 of 2010 and M.P.No.1 of 2010) மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது, உடனே மாற்றுத்திறனாளிக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் கல்லூரி நிர்வாகம் இன்றுவரை இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை. மாற்றுத்திறனாளிகள் மீண்டும் நீதிமன்றத்தின் படிகளில் ஏறி தங்களின் உரிமைகளுக்காகப் போராட வேண்டும். (தடைக் கற்கள் சிலருக்கு படிக்கல்லாகலாம், ஆனால் படிக்கற்களே எங்களுக்குத் தடைக்கற்களாக இருக்கின்றன). மேலும் அந்தத் தீர்ப்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீட்டை நிறைவு செய்திட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி அளிப்போம், வழிகாட்டுவோம், தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெற்றுத் தருவோம், வேலை வாய்ப்பு முகாம்களை நடத்துவோம் என்றெல்லாம் வாய்கிழியப் பேசும் பல்கலைக் கழகங்களே, கல்லூரிகளே, கல்வி நிறுவனங்களே!! உங்கள் நிறுவனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சதவிகித இடஒதுக்கீட்டை முறையாக நடைமுறைப்படுத்திவிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்ய, இடியாப்பம் செய்யக் கிளம்புங்கள்...

Pin It