குறிப்பு: கொள்கை உடன்பாட்டின் காரணமாகத்தான் 26 தமிழர்கள் உயிர்காப்பு இயக்கத்தின் நடவடிக்கைகளில் பங்கெடுத்தோம். அதே கொள்கை உறுதியோடுதான் சாந்தன் - முருகன் - பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை எதிர்த்து குரல் கொடுத்தோம், அதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு நாளன்று ஒன்று கூடினோம். இன்றும் அந்த கொள்கையில் கிஞ்சித்தும் தளர்வில்லாமல் சாந்தன் - முருகன் - பேரறிவாளன் - நளினி - இராபர்ட் பயஸ் - இரவிச்சந்திரன் - ஜெயக்குமார் ஆகிய ஏழு தமிழர்களின் விடுதலைக்காகவும் களமாட வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறோம்.

விசயம் என்னவென்றால், அரசியல் சதியால் பழி வாங்கப்பட்டு சிறையில் இருப்பவர்கள் இந்த 7 பேர் மட்டுமல்ல. தமிழ்ச் சமூகத்தின் அரசியல் கோரிக்கை இந்த 7 தமிழர் விடுதலை மட்டுமில்லை, 49 இசுலாமியத் தமிழர்களின் விடுதலைக்கான கோரிக்கையுமாகும்.

எனவே, அரசியல் கைதிகளின் விடுதலை குறித்துப் பேசினால் அது 49 இசுலாமியத் தமிழர்களின் விடுதலையோடு இணைத்தே பேசப்பட வேண்டும். இசுலாமியத் தமிழர்களின் விடுதலைக்கும் குரல் கொடுக்கும் வகையிலான இயக்கங்களே கட்டப்பட வேண்டும்.

இதை திரைத்துறையினரும் கணக்கில் கொள்ள வேண்டும்.

சிறையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் 2 இசுலாமியத் தமிழர்கள்

சிறையிலிருக்கும் 49 இசுலாமியத் தமிழர்களில் இரண்டு பேர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அபு (எ) அபுதாகிர் குணப்படுத்த முடியாத முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். திண்டுக்கல் மீரான் மொய்தீனுக்கு இரண்டு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இருவரும் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைவிட அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சிறைக்குள் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

உரிய காலத்தில் முறையான மருத்துவம் அளிக்கப்பட்டிருந்தால் அவர்கள் நன்றாக இருந்திருப்பார்கள். இப்போதுகூட மருத்துவம் அளித்தால் அதிகமான வேதனையும், சித்திரவதையும் இல்லாமல் வாழ வாய்ப்பிருக்கிறது.

மருத்துவ வசதி கொடுக்காமல் அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக கொல்வது ஒரு தண்டனையா? சட்டத்தில் அப்படி வழி இருக்கிறதா? இசுலாமியர்கள் என்பதால் அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?

என்ன மாதிரியான கைதிகளாக இருந்தாலும் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பது விதி. இல்லாத நோய்கள் இருப்பதாக கூறிக் கொண்டு சிறைக்கு செல்லாமல் மருத்துவமனையில் சகல வசதிகளோடு ஓய்வெடுக்கும் அதிகார வர்க்கத்தினரை நாம் அறிவோம்.

கடுமையான நோயால் அவதிப்படுகிறவர்களை, உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களை விடுதலை செய்யலாமென தமிழ்நாடு சிறைவிதி 632 பிரிவு சொல்கிறது. சட்டப்படியான அந்த வாய்ப்பை வழங்குங்கள், நாங்கள் எங்கள் உறவைக் காப்பாற்றுகிறோம் அல்லது அவர்களின் இறுதிக் காலத்தை கொஞ்சம் நிம்மதியாக கழிக்க வைக்கிறோம் என அவர்களது சொந்தங்கள் கோரிக்கையோடு காத்துக் கிடக்கிறார்கள். இது யார் செவிகளிலும் விழவில்லை. எல்லோருக்கும் பொதுவான சட்டம் இவர்களுக்கு மட்டும் மறுக்கப்படுகிறது. ஏன்? ஏனெனில் இவர்கள் இசுலாமியர்கள்.

சிறை, நீதி என அரசு நிர்வாகம் முழுவதும் இந்துத்துவ போக்கொடு இவர்களைப் பழி வாங்கிக் கொண்டிருக்கும்போது முற்போக்கு இயக்கங்கள் அதை கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பது என்ன அரசியல்?

இந்த அத்துமீறல்களை கேள்வி கேட்க யாரும் இல்லாததாலேயே சபூர் ரகுமான் என்பவர் நோய்வாய்பட்டு சிறையிலேயே இறந்துவிட்டார்.

பொதுமன்னிப்பு பட்டியலில் வந்த 2பேரை இசுலாமியர் என்பதால் சிறையில் வைத்துள்ள கொடுமை

தமிழக அரசின் பொதுமன்னிப்பில் இதுவரை சுமார் 2400 பேர் விடுதலையாகி உள்ளனர். 2008 செப் 15 அண்ணாவின் பிறந்த நாளின்போது மட்டும் திமுக அரசு பொதுமன்னிப்பின் பேரில் 1405 கைதிகளை விடுதலை செய்தது.

ஆனால் அன்றைய பொதுமன்னிப்பு பட்டியலில் 1407 பேரின் பெயர்கள் இருந்தது. விடுதலை நாளான 2008 செப் 15 காலைவரை இந்த பட்டியலில் 1407 பேரும் இருந்தார்கள். 1407 பேரும்தான் அன்றைய அதிகாலை 4 மணிக்கு லாக்-அப்பிலிருந்து திறந்து விடப்பட்டனர். அனைவரும் குளித்து முடித்தவுடன் அரசு சார்பாக அனைவருக்கும் புத்தாடை வழங்கப்பட்டது. மச்சம் போன்ற அங்க அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டது. அவர்கள் எல்லோரும் விடுதலைக்கான அணிவகுப்பில் நிறுத்தப்பட்டனர்.

இந்த 1407 பேரின் பெற்றோரும், உற்றார் உறவினரும் தங்களது பிள்ளைகளை, உறவுகளை அழைத்துச் செல்ல சிறை வாசலில் காத்திருந்தனர்.

காலையில் கைதிகள் விடுவிக்கப்படும்போது 1407 பேரில் 1405 பேர் மட்டுமே விடுவிக்கப்பட்டனர். திடீரென இரண்டு பேர் மட்டும் தடுத்து வைக்கப்பட்டனர். ஜாகிர் உசைன், அபுதாகிர் என்ற அந்த இரண்டு பேரை விடுவிக்காமல் மீண்டும் சிறையில் அடைத்ததற்கு காரணம் அவர்கள் இசுலாமியர்கள்.

அதிகாலையில் அவசர அவசரமாக வந்த ஒரு FAX செய்தியின் பொருட்டு அவர்கள் மீண்டும் சிறைப்படுத்தப்பட்டார்கள்.

2008 செப் 15 1405 பேரில் வெறும் 7 ஆண்டுகள் சிறையில் கழித்திருந்தவர்களெல்லாம் விடுதலை செய்யப்பட்டார்கள். அந்த காலத்திலேயே ஜாகிர் உசைனும், அபுதாகிரும் பத்தாண்டுகளை கழித்திருந்தார்கள். ஆகையால் பொதுமன்னிப்பு பட்டியலில் இவர்கள் இருவருடைய பெயர்களும் வந்தபோது இவர்களது பெற்றோர்கள் மிகுந்த நம்பிக்கையோடு இருந்தார்கள்.

சிறைபட்டிருந்த தங்கள் பிள்ளைகளின் விடுதலைக்காக சிறைவாசலின் முன்பு முந்தைய நாள் இரவு 10 மணிக்கே வந்து காத்திருந்தார்கள். மிகச் சரியாக அதிகாலை 5.50 மணிக்கு சிறைக்கதவு திறக்கப்பட்டது. ஒவ்வொரு கைதிகளாக வெளிவந்தனர்; காத்திருந்த அவர்களின் உறவினர்கள் எல்லாம் ஆனந்தக் கண்ணீர் விட்டு அவர்களை கட்டி அணைத்து அழைத்துச் சென்றனர். நேரம் போய்க் கொண்டேயிருந்தது. ஜாகிர் உசைன், அபுதாகிர் மட்டும் வரவில்லை. அழுது துடித்த அவர்களின் பெற்றோர் சிறை நிர்வாகிகளிடம் விபரம் கேட்கப் போனபோது அடித்து விரட்டப்பட்டார்கள்.

ஜாகிரின் தந்தை வேதனையோடு வீடு திரும்பி படுக்கையில் படுத்தவர்தான். மகனைக் காண முடியாத வேதனையில் நோய் வாய்ப்பட்டு, கடைசியில் மாரடைப்பில் மரணம் அடைந்தார். மகனின் விடுதலைக்காக காத்திருந்து காத்திருந்து மனவேதனையடைந்த ஜாகிரின் தாய் ஏற்கனவே இறந்துவிட்டார்.

இன்றுவரை ஜாகிர் ஹுசைனும், அபுதாஹிரும் சிறையில்தான் இருக்கிறார்கள். இசுலாமியர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு இதைவிட சான்றுகள் என்ன வேண்டும்? இவர்களின் விடுதலையையும் பேசாத அமைப்புகள் யாருக்கு வேண்டும்?

சட்டப்படியான உரிமைகள் எதுவும் இசுலாமியர்களுக்கு கிடையாது

சட்டத்தின்முன் அனைவரும் சமம் என சொல்லப்படுகிறது. ஆனால் இசுலாமியர்களுக்கு ஓரவஞ்சனையான நடைமுறைகள்தான் பின்பற்றப்படுகிறது. இசுலாமிய சிறைவாசிகளை அவர்கள் உறவினர்கள் உட்பட யாரும் பார்ப்பதென்றால் கடுமையான கெடுபிடிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இசுலாமிய சிறைவாசிகளின் குடும்பப் பெண்களிடம் சிறை நிர்வாகம் நடந்து கொள்ளும் முறைகள் வெட்கக்கேடானது.

அதுபோக சட்ட விதிமுறைகள் அனைத்தும் இசுலாமிய சிறைவாசிகள் விசயத்தில் மீறப்படுகின்றன.

1.பரோலில் இருக்கும் சட்டமீறல்!

tamilnadu prison manual Vol 3 Rule 6 படிதான் சிறைவாசிகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை 15 நாட்கள் பரோலில் வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்கள். இந்த 15 நாள் பரோல் இசுலாமியர்களுக்கு வழங்கப்படுவதில்லை. வெறும் 8 மணிநேரம் மட்டுமே பரோலில் அனுப்புகின்றனர்.

அதேபோல பரோலில் அனுப்பப்படுகிற அனைவருக்கும் வழிகாவல் கிடையாது. ஆனால் இசுலாமிய சிறைவாசிகளுக்கு மட்டும் பலத்த போலீஸ் காவலில் அனுப்புவதோடு போலீஸ் படை அவர்களது வீட்டைச் சுற்றி முற்றுகையிட்டு அந்தப் பகுதியையை கலவரப்படுத்துகிறது.

2.பரோலையே மறுக்கும் சட்டமீறல்

தமிழ்நாடு சிறைவிதி 335-இன்படி 14 ஆண்டுகள் தண்டனை பூர்த்தியானவர்களை அறிவுரைக் கழகத்தின் [Advisory Board] ஆலோசனையின்பேரில் நீண்டகால விடுப்பில் [Long Parole] விடுவிக்கலாம். அப்படி விடுவிக்கும்போது கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படும். இப்படி லாங் பரோல் முறையில் விடுவிக்கப்படும் சிறைவாசிகள் நிபந்தனையை மீறி ஏதாவது குற்றச் செயலில் ஈடுபட்டாலோ அல்லது அவர்கள்மீது அப்படியான புகார் எழுந்தாலோ அவர்களின் லாங் பரோல் ரத்து செய்யப்பட்டு மீண்டும் அவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்பதுதான் விதி.

வழக்கின் மேல்முறையீடு நிலுவையில் இருந்தபோது கூட ஆயுள் சிறைவாசிகள் சிறைவிதிகளின்படி பரோலில் அனுப்பப்பட்டார்கள். இப்போது சில ஆண்டுகளாக எவ்வித உத்தரவும் இன்றி இதனை நிறுத்தி வைத்துள்ளனர்.

அரசியல் சதிக்கு உள்ளான இசுலாமிய சிறைவாசிகளுக்கு மட்டும் இன்னும் இந்த விதி கடைப்பிடிக்கப்படவில்லை. இசுலாமிய சிறைவாசிகள் அனைவருமே 15 வருடத்திற்கு மேல் சிறையில் வாடுகிறார்கள்.

3.முதியவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்கிற விதியும் மீறல்

தமிழ்நாடு சிறைவிதி 341 [1,2,7]-யின்படி ஆயுள் தண்டனை பெற்ற 65 வயதுக்கு மேலான முதியவர்களை விடுதலை செய்ய வேண்டும். இதுவும் இசுலாமியர்களுக்குக் கிடையாது.

பாஷா பாய்க்கு 72 வயது ஆகிறது.

4.குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டவரை விடுவிக்கும் விதி 632 பிரிவு இசுலாமியர்க்கு இல்லை.

தமிழ்நாடு சிறைவிதி 632 பிரிவின்படி குணப்படுத்த முடியாத நோய்க்குள்ளானவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

அபு (எ) அபுதாகிருக்கு குணப்படுத்த முடியாத முடக்குவாத நோய் உள்ளது. திண்டுக்கல் மீரான் மொய்தீனுக்கு இரண்டு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இருவரும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

5.ஆயுள் தண்டனை கைதிகளுக்கான அட்வைசரி போர்டு கிடையாது

சாதாரணமாக ஒரு ஆயுள் தண்டனை கைதி 13 ஆண்டுகள் கழித்தவுடன் அவரது நன்னடத்தையைப் பரிசீலிக்க மாவட்ட நீதிபதி, மாவட்ட கலெக்டர், ஜெயில் கண்காணிப்பாளர் மற்றும் நன்னடத்தை அதிகாரி ஆகியோரை கொண்ட "advisory board" அமைக்கப்பட வேண்டும். அந்த அட்வைசரி போர்டு அந்த ஆயுள் தண்டனை கைதியின் நன்னடத்தை மனுவை பரிசீலனை செய்து 14-ஆம் வருடத்தில் அவரை விடுதலை செய்வார்கள்.

ஆனால் இசுலாமிய சிறைவாசிகள் அனைவருமே 15 வருடத்திற்குமேல் சிறையில் வாடிக் கொண்டிருக்கும்போது கூட அவர்களுக்காக அட்வைசரி போர்டு கூட்டப்படவே இல்லை.

இசுலாமியர்கள் சட்டத்தின்படி தண்டிக்கப்படுகிறார்களா? மதத்தின் பேரால் தண்டிக்கப்படுகிறார்களா? இதை தட்டிக் கேட்க வேண்டிய கடமை நமது இயக்கங்களுக்கு இல்லையா?

கூட்டம் கூட்டமாய் கைது செய்யப்பட்ட கொடுமை! ஒன்றுமறியாத அப்பாவிகள் இன்றும் சிறையில்!!

தமிழகத்திலுள்ள இசுலாமிய சிறைவாசிகளில் கோவை பாஷா பாய், கோவை முஹம்மது அன்சாரி பாய் ஆகியோரைத்தான் பெரும்பாலோருக்குத் தெரியும். மற்றுமுள்ளவர்கள் யார்? அவர்கள் எதற்காக சிறை சென்றார்கள்? அவர்களின் வழக்கு விவரம் என்ன? அவர்களின் விடுதலைக்கு எது தடையாக உள்ளது? என்ற விவாதம் இன்றுவரை நமது இயக்கங்களிடம் கிடையாது.

1998-இல் சுமார் 350-க்கும் மேற்பட்ட இசுலாமிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். வழக்கை நடத்துவதற்கு அவர்கள் பட்டபாடு மிகக் கொடூரமானது. சொந்தமாக வாழ்க்கை நடத்த முடியாதவர்களாகவே பெரும்பாலானோர் இருந்தனர். அரசு, வழக்குரைஞர்களை ஏற்பாடு செய்தது. ஜூனியர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென்ற பல சீனியர் வழக்குரைஞர்களின் நல்லெண்ணத்தால் பல இசுலாமியரின் வாழ்க்கை நரகத்தில் வீழ்ந்தது.

அத்வானியை 14.2.1998 அன்று குண்டுவைத்து கொல்ல முயன்றதாக ஒரு வழக்கு. கையில் கிடைத்த இசுலாமிய இளைஞர்கள் மீதெல்லாம் பைப் குண்டு கேஸ், கலவர கேஸ், கடை உடைப்பு கேஸ் என வழக்குகள் போட்டு போலீசார் உள்ளே அனுப்பிக் கொண்டு இருந்தனர். சந்தேகப்படும்படியான நபர்கள் என சில பேரை வகைப்படுத்தி அவர்கள்மீது குண்டுவெடிப்பு கேஸ் போடப்பட்டது.

1998 மார்ச் மாதம் ஒரே பகுதியைச் சேர்ந்த L.M.அக்கீம், சிக்கந்தர், முகமது ரபீக், இப்ராகிம் ஆகிய நால்வர் மீதும் பைப் வெடிகுண்டு (ஒவ்வொருவரிடமும் இரண்டிரண்டு பைப் வெடிகுண்டு) கைப்பற்றப்பட்டதாக வழக்கு போடப்பட்டது.

மேலே சொல்லப்பட்ட அத்வானி மேடையருகே குண்டுவெடித்த வழக்கில் எதிரிகள் [accused] கண்டறியப்பட்டுள்ளதாகவும்; அபுதாகிர் மற்றும் ''NS.அக்கீம்" (இவர் மேலேயுள்ள L.M.அக்கீம் அல்ல) ஆகிய இருவர்மீது சந்தேகம் உள்ளதாகவும்; குண்டுவைத்த நபர்களை சம்பவ இடத்தில் வைது இரண்டு சாட்சிகள் பார்த்துள்ளதாகவும்; ஆகவே குற்றவாளிகளை சாட்சிகள் அடையாளம் காட்டுவதற்கு வசதியாக சிறையில் ஒரு அடையாள அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி கோவை CJM கோர்ட்டில் SIT போலீசார் 1998 ஏப்ரல் மாதம் ஒரு மனுவை தாக்கல் செய்தனர்.

அதன்படி விஜயகுமார், காண்டீபன் என்ற இரு சாட்சிகளைக் கொண்டு சிறையில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. சாட்சிகள் "NS.அக்கீம்தான்" மேற்படி வெடிகுண்டை வைத்ததாக அடையாளம் காட்டினர். அபுதாஹிரை அடையாளம் காட்டவில்லை.

ஆனால் 5 மாதம் கழித்து போலீசார் ''குற்றப் பத்திரிக்கை'' தாக்கல் செய்யும்போது எல்லாம் தலைகீழாக மாறியது. சிறையில் நடத்திய அடையாள அணிவகுப்பு மறைக்கப்பட்டது. சிறையில் அடையாளம் காட்டிய விஜயகுமார், கண்டீபன் ஆகியோருக்கு மாறாக வேறு இரண்டு சாட்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டனர். 'சிறையில் அடையாள அணிவகுப்பில் அடையாளம் காட்டப்பட்ட "NS.அக்கீமுக்கு" பதில் பைப் வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ''LM.அக்கிம்" குற்றவாளியாக்கப்பட்டார். சிறையில் அடையாளம் காட்டப்படாத அபுதாஹிரும் குற்றவாளியாக்கப்பட்டார்.

இந்த குழப்பம் வெளியில் தெரிந்துவிட்டது. காவல்துறை கவலைப்படவேயில்லை. சிறையில் அடையாள அணிவகுப்பில் அடையாளம் காட்டப்பட்ட "NS.அக்கீமை" கோயமுத்தூரில் வேறு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கு ஒன்றில் அவரை சேர்த்து விட்டுவிட்டார்கள். நீதித்துறையும் கண்டுகொள்ளவேயில்லை.

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் போலீசார் குற்றவாளிகளை பிடித்த முறையும், வழக்குகள் ஜோடித்த முறையும் எப்படி இருக்கிறதெனப் பாருங்கள்! அப்படியும் சிறையிலிருக்கும் 49 பேரில் 1.எஸ்.ஏ.பாஷா பாய், 2.முகமது அன்சாரி, 3.தாஜூதீன், 4.நவாப்கான், 5.அப்துல் ஒஜீர், 6.எல்.எம்.ஹக்கீம், 7.அபூதாகீர், 8.முகமது ரபீக், 9.அப்துல் ரசாக், 10.முகமது ஆஜம், 11.முகமது அசன் (எ) மோனப்பா, 12.சேட்டு (எ) சாந்து முகமது, 13.செய்யது முகமது புகாரி, 14.முகமது அலி, 15.மூஸா மொகைதீன், 16.ரியாஸ் அகமது, 17.என்.எஸ்.ஹக்கீம், 18.சர்புதீன் ஆகிய 18பேர்தான் குண்டுவெடிப்பு வழக்கின் பேரில் குற்றவாளிகள். 

இவர்கள் தவிர கீழ்க்கண்ட 25 சிறைவாசிகள் 1991 முதல் 2001 வரை நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஐபிசி 302 பிரிவின் கீழ் மட்டும் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் .

1.அமானுல்லா, 2.ஹக்கீம், 3.ஆரூண் பாஷா, 4.குண்டு (தடிமனான) ஜாகீர்@ ஜாகீர் உசேன், 5.பிரஸ் அபு (எ) அபூதாகீர், 6.ரிஸ்வான் பாஷா, 7.நெட்டை இப்ராஹீம், 8.கூளை இப்ராஹீம், 9.யாசுதீன், 10.அஸ்லாம், 11.ஆசிக், 12.அபுதாகீர் த/பெ இப்ராஹீம், 13.ஜப்ரு (எ) ஜபீர் அகமது, 14.ஊமை பாபு, 15.மீரான் மொகைதீன், 16.முகமது கான், 17.சேக் ஜிந்தா மதார், 18.ரகமதுல்லா கான், 19.சித்திக் (எ) சுல்தான், 2௦.அப்துல்காதர் (எ) உமர் பாரூக், 21.ஷாஜகான், 22.சிராஜ், 23.H.அபுதாகிர் த/பெ உசேன், 24.செய்யது அலி த/பெ காஜா மொய்தீன், 25.சுல்தான் கனி த/பெ காஜா மொய்தீன்.

மேலும் 6 பேர் மதுரை ராஜகோபாலன் தடா வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டவர்கள்

1.ஜாகிர் உசேன், 2.சாகுல் அமீது, 3.முகமது சுபைர், 4.ராஜா உசேன், 5.சீனி நைனார் முகமது, 6.அப்துல் அஜீஸ்.

ஆக மொத்தம் 31 பேர் குண்டுவெடிப்பு அல்லாத வேறு பல வழக்குகளில் சிறை சென்றவர்கள்.

இவர்களில் சிலர் சிறையில் சிக்கிய கதையைப் பாருங்கள்!

தடா புஹாரி (எ) மேலப்பாளையம் செய்யது முஹம்மது புஹாரி பள்ளிக்கூடம் போய்க் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டான்.

இந்தியாவிலேயே சங் பரிவார்களுக்கு எதிரான முதல் பதிலடி 1993 ஆகஸ்ட் 8-இல் சென்னையில் நடந்தது. சென்னையிலிருந்த இந்து முன்னணி தலைமை அலுவலகம் வெடிகுண்டால் தாக்கப்பட்டது. ஷஹித் இமாம் அலி என்ற 20 வயது இளைஞன்மீது இந்த குண்டுவெடிப்பு வழக்கு சுமத்தப்பட்டது. சம்பவத்திற்கு முன் அவர் மேலப்பாளையம் வந்து சென்றதாகவும், அவருக்கும் மேலப்பாளையத்தில் உள்ள சில இளைஞர்களுக்கும் நட்பு இருப்பதாவும் கூறப்பட்டது. ஷஹித் இமாம் அலியின் நண்பர்களாக மேலப்பாளையத்தை சேர்ந்த சில இளைஞர்களைக் காட்டி அதற்கு ஆதாரமாக பொய்சாட்சி சொல்லும்படி புஹாரி மற்றும் அவரது நண்பரான முஹம்மது அலி ஆகியோரிடம் வற்புறுத்தப்பட்டது. பொய்சாட்சி சொல்ல மறுத்ததால் புஹாரி 15 வயது சிறுவனாக தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டான்.

இடையில் ஜாமீனில் வந்தவன் கண்டிஷன் பெயிலுக்காக சென்னையில் பாஷா பாயுடன் தங்கினான். அந்த ஒரே காரணத்திற்காக கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டான். 15 வயதில் சிறை சென்ற சிறுவன் தாய், தந்தை இருவரையும் இழந்து அனாதையாக சுமார் 19 ஆண்டுகளுக்குமேல் சிறையில் கழித்துக் கொண்டிருக்கிறான்.

இப்ராகிம் (எ) செஸ்ட் இப்ராகிமின் கதை பரிதாபமானது. கோவை வாசியான இவரது பகுதியில் 1997 ஆகஸ்டில் ஒரு கொலை நடந்தது. இது தொடர்பாக இதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர்கள் தொடர்ந்து போலீசாரால் கைது செய்யப்பட்டு அடித்து நொறுக்கப்பட்டனர். எங்கே, போலீசார் தன்னையும் பிடித்து அடிப்பார்கள் என அஞ்சிய இப்ராகிமுக்கு கோர்ட்டில் சரணடைய சிலர் வழிகாட்டினர். அதன்படியே இவரும், இவரது நண்பர்களான யாசுதீன் மற்றொரு இப்ராஹிமும் ஆகியோர் கோர்ட்டில் போய் சரணடைந்தனர்.

ஏற்கனவே இவரது நண்பர்கள் 7 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் தங்கள் பிடியிலிருந்து தப்பி கோர்ட்டில் சரணடைந்ததால் ஆத்திரமடைந்த போலீசார் இவர்கள் மீது மட்டும் வழக்கை வலுவாக போட்டனர். விசாரணையின் முடிவில் போலீசார் பிடித்த அந்த ஏழு பேரும் விடுதலையானார்கள். கோர்ட்டில் சரணடைந்த இந்த மூவருக்கும் 2001-இல் "ஆயுள் தண்டனை" கிடைத்தது. இப்ராகிம் சிறைக்கு செல்லும்போது தாடி, மீசைகூட முளைக்கவில்லை. 1997-இல் சிறைக்கு சென்றவன் இன்றுவரை திரும்பவில்லை. 15 ஆண்டுகள் கடந்துவிட்டது.

அமானுல்லாஹ், M.M.அக்கீம், சர்புதீன், சம்சுதீன் ஆகிய நால்வரும் கோயமுத்தூரைச் சேர்ந்த நண்பர்கள். இவர்கள் 1996-ஆம் ஆண்டு நாகூரில் நடந்த சந்தனக்கூடு திருவிழாவிற்கு சென்றனர்.

அதே சமயத்தில், நாகூரில் கிறிஸ்தவராக மதம் மாறிய ஒரு முஸ்லிம் ஆலிம் தன்பெயரை 'ஆலிம் ஜார்ஜ்' என மாற்றிக் கொண்டு இஸ்லாத்திற்கு எதிராக செயல்பட்டதாகவும், இஸ்லாமியப் பெண்களை தவறாக வழிநடத்துவதாகவும் குற்றம்சாட்டி சில இளைஞர்கள் இவர் வீட்டுக்குள் புகுந்து வெட்டினர். தடுக்க வந்த இவரின் மனைவி உயிரிழந்தார்.

போலீசார் நாகூர் சந்தனக்கூடு விழாவிற்கு வந்திருந்த அமானுல்லாஹ், M.M.அக்கீம், சர்புதீன், சம்சுதீன் ஆகிய நால்வரையும் சந்தேகத்தில் பிடித்தனர். இவர்கள் கோவையைச் சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக இந்த கொலை வழக்கில் சேர்க்கப்பட்டனர்.

அமானுல்லாஹ் கைது செய்யப்படும்போது 19 வயது. டைலர் வேலை செய்து வந்தான். இதற்குமுன் எந்த வழக்கிலும் சம்பந்தமில்லாதவன்.

M.M.அக்கீம் கைது செய்யப்படும்போது அவனுக்கும் 19 வயதுதான். சொந்தமாக ரெடிமேட் வியாபாரம் செய்து வந்தான். இவனுக்கும் இதற்குமுன் வேறு வழக்கில் சம்பந்தமில்லை.

சர்புதீனுக்கும் 19 வயதுதான். சொந்தமாக டிராவல்ஸ் நடத்தி வந்தான். இவர் தந்தை அப்துல் சலாம் முஸ்லிம் லீக் பிரமுகர். கோவை இசுலாமியர் மத்தியில் மதிக்கப்படும் நபர்.

சம்சுதீனுக்கு அப்போது 17 வயது. வசதியான வீட்டுப் பிள்ளை. தன்னை சிறார் குற்றவாளியாக அறிவிக்கக்கோரி இவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ததால் சுமார் 13 ஆண்டு சிறைவசத்திற்குப் பின்பு ஜாமீன் கிடைத்துள்ளது.

மற்ற மூவரும் இன்னும் சிறையில்தான் உள்ளனர். M.M.அக்கிமின் தந்தை தனது மகனின் விடுதலைக்காக ஏங்கி ஏங்கியே காலமாகி விட்டார்.

நிலைமை இப்படியிருக்க இயக்கங்கள் இவர்களைப் பற்றி கவலைப்படாமல் இருப்பது என்ன நியாயம்?

இசுலாமியரை படுகொலை செய்ததற்காக ஒரு இந்துவாவது தண்டிக்கப்பட்டதுண்டா?

தமிழகத்தில் இதுவரை நூறுக்கும் மேற்பட்ட இசுலாமியர்கள் சங்பரிவார் கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இது சம்பந்தமாக இந்து அடிப்படைவாதி ஒருவன்கூட இதுவரை தண்டிக்கப்பட்டதில்லை.

பழனி பாபா 1997 ஜனவரி 28 அன்று பொள்ளாச்சியில் படுகொலை செய்யப்பட்டார். அன்றோடு அது முடியவில்லை. மறுநாள் திருப்பூரில் இரண்டு இசுலாமிய இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள். அடுத்து கோவை குனியமுத்தூரில் திருமணமாகி 3 மாதம்கூட ஆகாத யூசுப் என்ற வாலிபர் உருட்டுக்கட்டைகளால் அடித்தே கொல்லப்பட்டார். அப்பகுதி முஸ்லிம்களின் வீடுகள் தாக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நடந்த கலவரத்தில் கிருஷ்ணசாமி என்பவர் கொல்லப்பட்டார். இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்தான் ஜாகீர் உசைன். சிறைக்கு சென்றவனுக்கு ஜாமீன்கூட கிடைக்கவில்லை. 1999-இல் ஆயுள்தண்டனை கொடுக்கப்பட்டது.

ஆனால் திருப்பூரில் இரண்டு இசுலாமிய இளைஞர்கள் கொல்லப்பட்ட வழக்கு என்னவானாது? கோவை குனியமுத்தூர் யூசுப் கொலை வழக்கு என்னவானது? குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு தண்டிக்கப்பட்டார்களா? இசுலாமியர்களின் அற்புதமான தலைவர் பழனி பாபா கொலை வழக்கு என்னவானது?

எல்லா வழக்கிலும் சிலர் கைது செய்யபட்டனர். 3 மாதத்தில் ஜாமீனில் வெளியே வந்தனர். வெளியிலிருந்து வழக்கை நடத்தி இறுதியில் விடுதலையுமானார்கள்.

இசுலாமியர்கள் மீதான இந்த பாரபட்சமான நீதியும், ஒடுக்குமுறையும் நமது இயக்கங்களுக்குத் தெரியாமலா போயிற்று?

இசுலாமிய சிறைவாசிகளின் பிரச்சினையை என்னவாக பார்ப்பது?

பாபர் மசூதி இடிப்பு, அதற்கு முன்னோட்டமாக நடந்த கரசேவை, அதன்மூலமாக நடந்த கலவரங்கள் அனைத்தும் ஏன் நடந்தன? வெறுமனே இந்துத்துவ சக்திகள் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கவா? இந்துத்துவ சக்திகள் அதிகாரத்தை அடைய முயற்சித்ததில் இங்கிருக்கிற இந்தியப் பெருமுதலாளிகளின் நலன்களும், உலக முதலாளிகளின் நலன்களும் அடங்கவில்லையா? குறிப்பாக உலகமயமாக்கல் அமலாக இருந்த 1990 காலகட்டத்தில் எல்லா முதலாளிகளும் சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்களா? ஒரு தொடர்ச்சி இல்லாமல்தான் இன்றைக்கு இந்துத்துவம் அரசியல் அதிகாரத்தை அடைந்ததா? மோடியை பிரதமராக்க அமெரிக்கா உட்பட உலக நாடுகள் களமிறங்கினவா?

1990-கள் என்பது உலகமயமாக்கலுக்கு இந்தியாவை பலியிட்ட காலகட்டம் என்று அனைவரும் அறிந்ததுதான். அந்த உலகமயமாக்கல் கொள்ளையில் உலக முதலாளிகளோடு இந்தியப் பெருமுதலாளிகளான வடஇந்திய மார்வாரிகள், பனியாக்கள் உள்ளிட்ட பார்ப்பனிய சக்திகளும் கூட்டு சேர்ந்து கொள்வதற்காகவே 1990-களில் இந்தியா முழுவதும் மதவெறி கட்டவிழ்த்து விடப்பட்டது என்பதை நாம் இன்னமும் உள்வாங்கிக் கொள்ளவில்லை. அதேபோல, அதற்குப் பலியானவர்கள் இசுலாமியர்கள் மட்டுமே என்பதையும் நாம் இன்னமும் உணரவில்லை.

ஆக உலகமயமாக்கல் காலகட்டத்தில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதுதான் இசுலாமியர்களைப் பலிகடாவாக்குகிற இந்து மதவெறி. 1992 டிசம்பர் 6-இல் பாபர் மசூதி இடிப்பிற்கு முன்பு 80-களின் இறுதியில் அவர்கள் நடத்திய ரதயாத்திரை, மசூதியை இடித்து ராமர்கோயில் கட்ட அவர்கள் இந்தியா முழுவதும் நடத்திய செங்கல் ஊர்வலம், கரசேவை (தமிழகத்தில் இருந்தும்கூட கரசேவைக்காரர்கள் கூட்டம் கூட்டமாக ரயில்களில் சென்றனர்) அனைத்தும் உலகமயமாக்கல் கொள்ளையில் உலக முதலாளிகளோடு இந்தியப் பெருமுதலாளிகளும், பார்ப்பனிய சக்திகளும் கூட்டு சேர்ந்து கொள்வதற்காக நடத்தப்பட்டதுதான்.

பாபர் மசூதியை இடித்து இராமர் கோயில் கட்டப் போவதாக முன்கூட்டியே சொல்லித்தான் இடித்தார்கள். நாடு முழுவதும் கலவரங்கள் அனுமதிக்கப்பட்டது. முஸ்லிம்களின் ரத்தத்தால் நாடே சிவந்தது. கூடவே உலகமயமாக்கல் என்பதும் இயல்பாக நடந்தது.

இதுதான் இந்தியா முழுமைக்கும் நடந்தது; தமிழ்நாட்டிலும் நடந்தது; கோவையிலும் தொடர்ந்தது.

இசுலாமிய இயக்கங்கள் அதை வெறும் பண்பாட்டுப் பிரச்சினையாக பார்க்கின்றன. ஆனால், முற்போக்கு பேசுகிற இயக்கங்கள் அப்படிப் பார்க்க முடியுமா? ஒரு பேச்சுக்கு அது பண்பாட்டு நடவடிக்கையாகவே இருந்துவிட்டுப் போகட்டும். அப்படியானாலும் சிறுபான்மையினரான அவர்களின் பண்பாட்டு அரசியல் உரிமைப் போராட்டங்களில் அவர்களோடு இணைந்து நிற்பதும், அதுகுறித்த சிக்கல்களில் தலையிடுவதும்தானே சரி?

இசுலாமியத் தமிழர்களின் விடுதலையை இசுலாமிய அமைப்புகள் பார்த்துக் கொள்ளும் என்பது இந்துத்துவ அரசியலேயாகும்

இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலையை இசுலாமிய இயக்கங்கள் மட்டுமே பேசுவதில் சிறிதளவு நியாயம் உள்ளது. அந்த சிறிய நியாயம் என்பது அவர்களையும் உள்ளடக்குக்கிற ஒரு பரந்துபட்ட சனநாயக அமைப்பு இல்லாததால் கொடுக்கப்படுவதேயாகும்.

அவர்களின் நியாயம் பேசுகிற அமைப்புகள் மதவாத அமைப்புகள்தாம் என்பது வெளிப்படை.

ஆனால், ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய அரசியல் பேசுகிற இயக்கங்கள் '7 தமிழர் விடுதலை' என்பதோடு சுருங்கிக் கொள்வது என்ன நியாயம்? தொழிலாளர், விவசாயிகள், மகளிர், மாணவர்கள், தலித்துகள், மதச் சிறுபான்மையினர் அனைவருக்குமான அரசியல் அதிகாரத்திற்காகப் போராடுகிறவர்கள் இசுலாமியர்களை கைவிட்டிருப்பது என்ன நியாயம்? இவர்களது தமிழ்த் தேசியத்தில் இசுலாமியர்கள் இல்லையா? சிறையில் வதைபடும் 49 இசுலாமியத் தமிழர்களும் இந்துத்துவ அடிப்படைவாதிகள் சொல்வதுபோல் வேறு நாட்டிற்காகப் போராடி சிறை சென்றவர்களா? இசுலாமியர்களைத் தவிர்த்துவிட்டு அரசியல் கோரிக்கைகளை முன்வைப்பது என்பது இந்துத்துவ தமிழ்த் தேசியம் பேசுவதாகாதா?

இசுலாமியர் சிக்கல் குறித்தும், இசுலாமிய சிறைவாசிகள் குறித்தும் இதுவரை நடந்த புறக்கணிப்புகள் மாற வேண்டும். 7 தமிழர் விடுதலை இயக்கம் என்பது 49 இசுலாமியத் தமிழர் விடுதலையோடு இணைக்கப்பட வேண்டும். சனநாயக மற்றும் முற்போக்கு இயக்கங்கள் அனைத்து மக்களுக்குமான இயக்கங்களாக பரிணமிக்க வேண்டும்.

திருப்பூர் குணா

Pin It