இந்திய அரசியலமைப்பின் ஆணிவேராகக் கருதப்பட்ட மதச்சார்பின்மை இன்று ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது. குடியுரிமைத் திருத்த சட்டம் குறித்து ஏராளமான விவாதங்கள் ஊடகங்களிலும், வலைதளங்களிலும் பகிரப்பட்டு வருகின்றன.
முஸ்லீம்களைத் தவிர, ஈழத் தமிழரைத் தவிர மற்ற அனைவரும் அரவணைக்கப்படுவார்கள். ஆதரவு நல்கப்படுவார்கள் எனும் இந்த மனித உரிமைக்கு எதிரான சட்டத்தை எதிர்த்து மக்கள் அணி திரண்டு போராடி வருகின்றனர். அதற்கு எதிர்வினையாக எல்லா பத்திரிகைகளிலும் மத்திய அரசு குடியுரிமைத் திருத்தச் சட்டம் யாரையும் பாதிக்காது என்ற விளக்கத்தை விளம்பரமாக நாடு முழுவதும் வெளியிட்டிருக்கிறது.
அது மட்டுமின்றி தொலைகாட்சி ஊடங்கங்கள் இச்சட்டத்திற்கு எதிரான ஒளிபரப்புகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதுவரை ஆணவமாகவும், மக்களின் எதிர்ப்பை அலட்சியமாகவும் கையாண்டு வந்த மத்திய அரசை மக்களின் எழுச்சியும், ஒவ்வொரு மாநில வீதிகளிலும் உண்டாக்கும் எதிர்ப்புப் பேரலைகளும் நடுங்கச் செய்திருக்கின்றன என்பதை உணர்த்துகிறது.
இந்திய நாட்டின் குடியுரிமை என்பதை மதத்தின் அடிப்படையிலே வரையறுப்பது ஆட்சியாளர்களுக்கும், வலதுசாரிகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடும். ஆனால் மக்கள் மிகுந்த கோபத்துடன் ஆங்காங்கே எதிர் வினையாற்றத் தொடங்கிவிட்டனர். இந்த எதிர்வினை ஏதோ இஸ்லாமியர்களாலோ அல்லது எதிர்க் கட்சியினர்களாலோ உருவாக்கப்பட்டவை அல்ல.
மாறாக மக்கள் புரிதலின் அடிப்படையில், உணர்வுகளின் அடிப்படையில் உருவான எழுச்சி ஆகும். மாட்டிறைச்சி உண்பதற்காக மனிதர்களைக் கொல்லுவதும், கிருத்துவ மத ஆலயங்களை குறிவைத்து தாக்குவதும் நடந்து வந்து கொண்டிருந்த வேளையிலே, இப்படி இலட்சக்கணக்கானோர் தீப்பந்தங்களுடன் வீதிகளில் மதச் சார்பின்மைக்காகக் குரல் எழுப்பி நிற்பது என்பதே இந்திய ஜனநாயகத்தின் வெற்றி மட்டுமல்ல, எதிர்கால இந்தியாவிற்கான நம்பிக்கை ஒளி என கருதலாம்.
ஆனால் எதிர்ப்புகள் வந்தாலும், அந்த எதிர்ப்புகளின் நியாயத்தை சற்றும் மதிக்காமல், மிதித்துவிட்டு மதவெறியை அரசியல் இலாபத்திற்காக நாட்டிலே உருவாக்கும் நிலை மத்திய அரசிடம் காணப்படுகிறது. இது மிகவும் ஆபத்தானது. எப்போதெல்லாம் வளமான சிந்தனைகளும், ஜனநாயக மாண்புகளும் முடக்கப்படுகின்றதோ, அப்போதெல்லாம் பழமைவாதம் தனக்கென ஒரு தளத்தை உருவாக்கிக் கொள்ளும்.
அதுவே பாசிசத்தின் அடிப்படை என்று அந்தோனியா கிராம்சி சொன்னதை நாம் நினைவு கூறுவது இன்று மிகவும் அவசியம்.
- பாசிசம் இனவெறியின் மீது கட்டமைக்கப்படும் அரசியல் அதிகாரமாகும்.
- பாசிச அதிகாரத்திற்கு நீதியோ, சமூக நீதியோ, நியாயம் என்பதோ எதுவும் தெரியாது.
- பாசிசம் இனத்தின் அடிப்படையில் பெரும்பான்மையை ஒன்று சேர்க்கும்.
அதனுடைய முக்கியமான செயல்பாடு என்பது சிறுபான்மையினரைக் குறி வைத்து தாக்குவதாகத்தான் இருக்கும். அப்படித்தான் வரலாறு நமக்கு சாட்சியம் கூறுகிறது
இறுதிக் கட்டம் இன ஒழிப்பே!
பாசிசத்தின் இறுதிக் கட்டம் என்பது இன அழித்தொழிப்பு ஆகும். பாசிசம் அதற்கான கருத்தியலையும் பலப்படுத்தி வைக்கும். இதற்கான முதல் கட்டமாகத்தான் பா.ஜ.க. அரசு இந்துத்துவா என்ற பேரினவாதத்தைப் பகுத்தறிவு மிகவும் குறைவாக காணப்படும் இந்த நாட்டிலே தொடர்ந்து விதைத்து வருகிறதோ என்று கருதத் தோன்றுகிறது.
அவர்களின் இந்துத்துவா எனும் விதையில் முளைத்த விஷச் செடிகள் இன்று கருத்தியல் ரீதியாக இந்துத்துவாவைப் பரப்புரை செய்வதை நாம் காணமுடிகிறது. இந்த விஷம் வேகமாக எளிதாகப் பரவக்கூடியப் பண்பாட்டுச் சூழல் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருவதையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது. வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் மற்றும் பத்திரிக்கைகள் எல்லாம் மத நம்பிக்கைகளை எப்போதுமே கேள்வி கேட்க அல்லது விமர்சனம் செய்ய முயற்சியே செய்ததில்லை.
மாறாக ஒன்றுக்கு நூறாக ஆயிரம் கடவுளரையும், இலட்சம் மத குருமார்களையும் அவை தூக்கிப்பிடிக்கின்றன. இந்தப் பல்லக்கில்தான் ‘இந்துத்துவா' நாட்டிலே பவனி வருகிறது. பெரும்பாலும் அதிக அளவிலான பொய்த் தகவல்களை உருவாக்கி, அதன் அடிப்படையிலே பாமர மக்களின் மனதில் வெறுப்பு உணர்வை உண்டாக்குவதே இந்த அரசின் செயல்பாடாக இருக்கிறது.
ஜெர்மனியில், 1933 இல் இப்படித்தான் நாஜிக்கள் குடிமக்கள் கணக்கெடுப்பில் இரண்டாம் தர குடிமக்களாக ஆக்கப்பட்டார்கள். 60 இலட்சம் நாஜிகள் குடியுரிமை இழந்தார்கள். பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என்று பெரும் பிரிவினை கோட்பாடு உருவாக்கப்பட்டது.
அதன் அடுத்த கட்டமாக இலட்சக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டார். இலட்சக்கணக்கான பேர் வதை முகாம்களில் அடைக்கப்பட்டார்கள். நினைத்துக்கூட பார்க்கவில்லை! இந்தியாவிலும் அப்படிப்பட்ட முகாம்கள் கட்டப்படும் என்று.
பெங்களூருவிலும், அசாமில் இன்னும் சில மாநிலங்களிலும் குடியுரிமை மறுக்கப்பட்டவர்கள் அடைக்கப்படுவதற்கான முகாம்கள் தயாராகி வருகின்றன. இவ்வளவு வேகமாக அவை கட்டப்பட்டு முடிக்கப்படும் யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். அப்படி எந்தச் செயல்பாடுகளும் இல்லை என்று பிரதமர் அப்பட்டமாக பொய்பேசி வருகிறார்.
அனால் அரசு பல மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்து கொட்டடிகளைக் கட்டிவருகின்றது. இங்கேயே பல ஆண்டுகளாக வாழ்ந்து மண்ணின் மைந்தர்களாகிப் போனவர்களை அடைக்க ஒரு பெரும் சிறைச்சாலையா? போராட்டங்கள் போர் போல வெடிக்கின்றன. மனித உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றன. பாசிச சித்தாந்தம் கொண்ட அரசு இதைப் பற்றி கவலைப்படுவதில்லை.
இன அழித்தொழிப்பு
இனப்படுகொலைகள் கண்காணிப்பகம் என்ற அமைப்பின் தலைவர் கிரகரி ஸ்டன்டோன் என்பவர் இனப்படுகொலைகள் ஒரு நாட்டில் நடைபெறுவதற்கான 10 படிநிலைகளை விளக்கியிருக்கிறார்.
மக்களை வகைபடுத்துதல், முத்திரை குத்துதல், பிரித்தல், அவமானப்படுத்துதல், இரண்டு பிரிவாக பிரித்தல், மதத்தின் மற்றும் இனத்தின் பெயரால் ஒடுக்குதல், ஒதுக்கிவைத்தல் இறுதியில் உயிரை எடுத்தல் என ஒவ்வொரு கட்டமாக விளக்குகிறார். அதில் முதல் கட்டம் மதத்தின் பெயராலும், இனத்தின்பெயராலும் மனிதர்களைப் பிரித்து பட்டியலிடுவது என்பது ஆகும்.
அது தற்பொழுது நிகழ்ந்திருக்கிறது. தமிழர்கள் இனத்தின் அடிப்படையிலும் இஸ்லாமியர்கள் மதத்தின் அடிப்படையிலும் வகைப்படுத்தப்பட்டு பொது மக்கள் என்ற சொல்லாடலிலிருந்து பிரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இரண்டாம் தர குடிமக்களாக பிரிக்கப்பட்ட அவர்களுக்கு வெவ்வேறு பெயர்களில் அடையாளங்கள் வழங்கப்படும்.
இரண்டாம் நிலைகுடிகள் அணியும் உடைகளினாலும், இன்ன பிற வாழ்வியல் செயல்பாடுகளினாலும் அடையாளம் காணப்பட்டு, பிடிக்கப்படுவார்கள் என்று ஸ்டண்டோன் கூறுகிறார். அப்படித்தானே இங்கேயும்? உடைகளைக் கொண்டும், உண்ணும் உணவைக் கொண்டும் இவர்கள் அவர்களை அடையாளப்படுத்துகிறார்கள்.
வன்முறையாளர்களை, அவர்கள் உடைகளைக் கொண்டே அடையாளம் காணலாம் என்று மோடி கூறியிருப்பது இங்கே பொருந்துவதைக் காணலாம்.
பிரிவினை உணர்வை பலப்படுத்த இம்மாதிரி அடையாளங்கள் வலதுசாரிகளுக்குத் தேவைப்படுகிறது. நானும் கூட சமூக ஊடகங்களில் தொடர்ந்து ஒரு விஷயத்தை கவனித்து வருகிறேன். இந்தியாவில் குடியுரிமை மறுக்கப்பட்டால் என்ன ஆகும் என்று வலதுசாரிகள் தரப்பிலிருந்து பதியப்படும் பதிவுகள் தான் அவை.
நீங்கள் குடியுரிமை மறுக்கப்பட்டால், நாடு கடத்தப் படமாட்டீர்கள். மாறாக உங்களுடைய உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படும். நீங்கள் வீடு வாங்க முடியாது, ஓட்டு போட முடியாது, வங்கி கணக்கு வைக்க முடியாது, ரேஷன் கார்டு வைக்க முடியாது, பாஸ்போர்ட் எடுக்க முடியாது, இறுதியாக கொட்டடிகளில் அடைக்கப்பட்டு வதைபடுவீர்கள் என்று பல முடிவுகளை அவர்கள் பட்டியலிட்டு பரப்பி குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பவர்களைப் பயமுறுத்துகிறார்கள். இம்மாதிரி அச்சுறுத்தல்கள் முக்கியமான ஒரு செயல்பாடாக பாசிசத்தை நிறுவுவதில் காணப்படுகிறது.
இனப்படுகொலைகளுக்கான மூன்றாவது முக்கிய கட்டமாக இதை ஸ்டண்டோன் குறிப்பிடுகிறார். உங்களுக்கான மேலே குறிப்பிட்ட எல்லா உரிமைகளையும் மறுப்பது கண்டிப்பாக இங்கு நிகழத்தான் போகிறது. நாஜி ஜெர்மனியிலும் இப்படித்தான் யூதர்களுக்கான உரிமைகள், வேலைவாய்ப்புக்கள், இருப்பிடங்கள் என்று எல்லாமே மறுக்கப்பட்டன. இப்படித்தான் மியன்மாரில் ரோகிங்கியா முஸ்லிம்கள் நாடுகளற்றவர்களாக ஆக்கப்பட்டனர்.
பாசிசத்தின் அடுத்தக் கட்டம் மனிதன் என்ற நிலையிலிருந்து சட்டத்திற்குப் புறம்பான குடியேறி என்ற அடையாளம் குடியுரிமை இழப்பவர்களுக்கு வழங்கவதாகும். இதில் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய அம்சம் உள்ளது. கொஞ்சம் பேர் உண்மையிலேயே சட்டத்திற்கு புறம்பாக குடியேறியிருப்பார்கள். ஆனால் அவர்களுடன் பாசிச அரசு தாங்கள் வெறுப்பிற்கு உள்ளானாவர்களையும் பெரிய எண்ணிக்கையில் வெளியேற்றும். சொந்த நாட்டிலேயே பலர் அகதிகளாகும் அபாயம் உள்ளது.
அசாமில் இராணுவத்தில் பணியாற்றியவர்கள் முதல், சட்டசபை உறுப்பினர்கள் வரை பலர் இப்போது குடியுரிமை இழந்துள்ளனர் என்பது இதற்கு சான்று. குடியுரிமை என்பது மூச்சுக்காற்றுப் போன்றது.
அதை மறுக்கும் போது அந்த மூச்சு நின்று பிணமாக ஆவது போன்ற ஒரு நிலைதான் இந்த நிலை. இந்த நிலைக்கு முஸ்லீம்களைத் தள்ளுவதற்குதான், குடியுரிமை திருத்த சட்டத்தை இன்று மத்திய அரசு உருவாக்கியுள்ளது என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம்.
குடியுரிமை மறுக்கப்பட்ட மக்களை மிகவும் மோசமானவர்களாகவும், தரம் குறைந்தவர்களாகவும் தங்களுடைய வெறுப்பு பிரகடனங்கள் மூலம் ஆக்கி வைப்பது என்பது இனப் படுகொலைக்கான மற்றுமொரு முக்கிய நிலையாகும். அடுத்த கட்ட செயல்பாடு என்பது, இனத்தின் பெயரால் வெறியை ஊட்டி மக்களைத் திரட்டி வைப்பதாகும். இந்த இனவெறி ஊட்டுதல் என்பது பெரும்பாலும் பரப்புரைகளாலும், வெகுஜன ஊடகங்கள் மூலமும், சமூக ஊடகங்கள் மூலமும் செய்யப்படுகிறது.
இப்படி மக்களை உருவேற்ற ஆயிரக்கணக்கானோர் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். அதுமட்டுமின்றி மாற்று கருத்துக்கள் தெரிவிப்பது முற்றிலுமாகத் தடுக்கப்படும்.
சிறுபான்மையினர் குறிப்பாக இஸ்லாமியர் நாட்டு சுதந்திரப் போராட்டத்திற்கு அளித்தப் பங்களிப்புகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. வரலாறு திரிக்கப்படுகிறது. இஸ்லாமியரை மாற்றானாக சித்தரித்தால்தான் இனவெறியை உண்டாக்க முடியும்.
பகுத்தறிவை உருவாக்கும் கல்வியை பின்தள்ளிவிட்டு, தேசப்பற்று என்ற வெற்று கருத்தியலை உருவாக்கி அதை திரிக்கப்பட்ட வரலாறுகள் மூலம் இளம் தலைமுறையின் மண்டையில் ஏற்றும் பணி இங்கு செவ்வனே நடைபெறுகிறது. சமூக ஊடகங்களில் இஸ்லாமியருக்கு எதிரான பொய்தரவுகளும், கட்டுக்கதைகளும் இளம் தலைமுறையினரை வெறுப்பு அரசியலின்பால் தள்ளும் பணியைச் செய்து வருகின்றன. தேசிய இனக்குழுக்கள் பற்றிய எந்த ஒரு புரிதலையும் உருவாக்கும் பாடங்கள் கல்வித் திட்டத்தில் இல்லை.
பன்மியம் என்பது தேசத் துரோகமாகக் காணும் பயிற்சி தொடர்ந்து அளிக்கப்படுகின்றது. அதற்கான நபர்கள் கல்வியின் அனைத்து அதிகார மையங்களிலும் ஏற்கனவே நியமிக்கப்பட்டுவிட்டார்கள்.
இவ்வற்றின் ஒட்டுமொத்த சாரமே இன்று குடியுரிமை கெடுக்கும் சட்டம் ஆகும். இதன்மூலம் சட்டப்பூர்வமான ஒரு இனத்தையே இல்லாமல் செய்யும் ஆயுதம் உருவாக்கப்பட்டுள்ளது. இது இஸ்லாமியருக்கு மட்டும் எதிரானது அல்ல. மானுடத்திற்கு எதிரானது. மனிதநேயத்திற்கு எதிரானது என்பதே உண்மை.
மாற்றானாக்கப்படும் மண்ணின் மைந்தர்கள்
நாட்டில் நிர்வாக சீர்கேடுகளால் உண்டாகும் பொருளாதார சிக்கல்கள், பாதுகாப்புச் சிக்கல்கள், வேலையின்மை, விலைவாசி உயர்வு போன்ற பல அடிப்படைப் பிரச்சினைகளுக்கு இந்த இரண்டாம் நிலை குடிமக்கள்தான் காரணம் என்றும், இவர்கள் நாட்டிற்கு துரோகிகள், இனத்துக்கு துரோகிகள் என்றும் அடையாளப்படுத்தப்படும் மோசமான சதிவேலை நடைபெறும் என்கிறார் ஸ்டண்டோன். இதையெல்லாம் விளக்கியவர் இந்தியாவை மனதில் கொண்டு விளக்கவில்லை. ஆனால் அவை அனைத்தும் இன்றைய நிலைக்கு மிகவும் பொருந்துகின்றன.
மத அடையாள அடிப்படையில் இனவெறியை ஊட்டி, பிரச்சினைகளுக்கான உண்மைக் காரணங்களை மறைத்து, ‘மாற்றான்"தான் இங்கு பிரச்சினையே என்ற மனோபாவத்தை அடுத்த தலைமுறையினருக்கும் ஊட்டி வளர்க்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது இந்தியாவிற்கான மொத்த சவால் எனலாம்.
இனப் படுகொலைகளின் இறுதிக்கட்டமாக உரிமை மறுப்புகள் மட்டுமின்றி மக்களே எதிரிகளை கொல்லுவது என்பதும், அரசாங்கம் தாங்கள் வகுக்கப் போகும் சட்டத்தின் அடிப்படையில் என்று கூறி பலரின் உயிர்களை அழிக்கப் போவது என்பதும் நடைபெறும். இதை நினைத்துப் பார்க்கவே மனம் வெந்து நடுங்குகிறது.
இதனடிப்படையில்தான் நாம் குடியுரிமையையும், குடிமக்கள் பதிவேட்டையும் புரிந்து கொள்வது சரியாக இருக்கும்.
ஜனநாயகம் என்ற சொல்லும், மதச்சார்பின்மை என்ற கருத்தியலும் இரண்டு மாபெரும் பூதங்களாக பா.ஜ.க விற்குத் தெரியும். காரணம், அவர்களுடைய ‘இந்துத்துவா' எனும் பாசிசக் கொள்கைக்கு இவ்விரண்டும் சரியான எதிரிகள்.
இந்த இரண்டையும் ஒழிப்பதற்குத்தான் அவர்கள் பல வழிகளில் பாடுபடுகிறார்கள். ஜனநாயகமும், மதச்சார்பின்மையும், சமூகநீதிக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்தமான நீதியான சமூகத்திற்கான இரண்டு தூண்கள் ஆகும். இவை பாசிசத்திற்கு எதிரானவை.
எனவேதான் இவற்றை ஒழிக்கும் வழிகளில் பிரதான வழிகளாக குடிமக்கள் தொகை கணக்கெடுப்பு என்பதும், குடியுரிமை சட்டம் என்பதும் மத்திய அரசால் பயன்படுத்தப்படுகிறது.
இப்படித்தான் ஆதார் அட்டை நாடு முழுவதும் வலுக்கட்டாயமாக எல்லோர் மீதும் திணிக்கப்பட்டது. கைரேகைகள் உட்பட எல்லா தகவல்களும் இணைக்கப்பட்டன. ஒருவருடைய தொலைபேசி எண்ணும், ஆதார் எண்ணும் குடிமக்களின் அடையாளமானது. எப்பொழுதும் தொடர் கண்காணிப்பில் எல்லோரும் இருப்பதற்கான வேலையை இந்த அரசு செய்து முடித்தது என்பதே உண்மை.
அரசுக்கு இந்தப் பாசிச பிசாசுக்கு எல்லோயும் அடிமைப்படுத்தியது போதவில்லை. பிரிவினையின் மூலம் தங்களுக்கான ஆதரவு சக்தியைப் பெருக்கி வைத்துக் கொண்டால்தான் இன்னும் பல ஆண்டுகளுக்கு ஆட்சி செய்யமுடியும் என்பதே அவர்கள் கணிப்பு. இனவெறி என்பது மிக எளிதாக பரவக் கூடிய விஷம்.
நாம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறோம். இன்னும் ரேஷன் கார்டுகூட வாங்க இயலாத நிலையில் இருக்கும் இலட்சக்கணக்கான பழங்குடிகளும், ஏழை மக்களும் இப்பொழுது அரசாங்கத்திற்கு முன் தங்களுடைய குடியுரிமையை தாங்களாகவே நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
ஒவ்வொரு குடிமகனும் நான் இந்தியன்தான் என்று அதிகாரிகள் முன்னால் நிரூபிக்க வேண்டும். நீங்கள் காட்டும் அடையாளங்களை அதிகாரவர்க்கம் ஏற்குமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. அவர்கள் வைப்பதுதான் அங்கு சட்டம். ஒரு வேளை இதற்கும்கூட இலஞ்சம் பெறப்படலாம்.
குடியுரிமை அட்டை இருந்தால்தான் இனி மூச்சுவிட முடியும் என்று யாரேனும் சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று ஓடிச் சென்று அதை எப்படியாவது பெற வேண்டும் என்ற மன நிலைதான் பொதுபுத்தியில் ஊறியிருக்கிறது. இந்த மனநிலையிலிருந்து மக்கள் மாற வேண்டிய கட்டாயம் உள்ளது.
அப்படி அவர்கள் மனம் மாற்றம் கொண்டு தங்களுடைய மாண்பை தாங்களே தற்காத்துக்கொள்ள முனைந்திருப்பதையும் காணமுடிகிறது. இது நமது மாண்பை சோதிக்கும் காலம். இந்திய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பின் மூலம் எத்தனை கோடிப்பேர் சட்டத்திற்குப் புறம்பான குடியேறிகளாக ஆக்கப்படவிருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது.
ஒருவேளை நீங்கள் அடிமைச் சாசனம் எழுதிக் கொடுக்கத் தயாராக இருந்தால், நீங்கள் குடிமகனாக ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றாலும்கூட, நீங்கள் ‘மாற்றானாகவே’ அடையாளம் காணப்பட்டு இன ஒடுக்கல் மட்டுமல்ல, இன
ஒழிப்பிற்கு உரிய பட்டியலில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்படி ஒரு மிகக் கொடிய சம்பவம் நிகழக்கூடாது என்றால் அது பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே உருவாக்கப்பட வேண்டும்.
எப்படியும் நீதிமன்றங்கள் நீதியை வழங்கி விடும் என்ற ஒற்றை நம்பிக்கைதான் இன்னும் பலரை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. பாசிசத்தின் பிடியில் ஊடகங்களும், போலீசும், இராணுவமும் மெல்ல மெல்ல ஆட்பட்டுவரும் வேளையில் நீதிமன்றங்களும் மாறத் தொடங்கியுள்ளன. அதிகார வலையில் சிக்கத் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் மக்களின் மாபெரும் எழுச்சி மட்டுமே பாசிசவெறி கொண்ட கருத்தியலை உடைத்து நொறுக்க முடியும் என்பதில் ஐயமில்லை. ஹர்ஷ் மந்தர் எனும் மனித உரிமைப் போராளி நாடு முழுவதும் காந்தியடிகள் முன்வைத்த சட்ட மறுப்பு இயக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருக்கிறார்.
தன்னுடைய தனிப்பட்ட எதிர்ப்பைத் தெரிவிக்க, தான் இஸ்லாம் மதத்திற்கு தன்னை மாறிக் கொள்ளப் போவதாகவும் கூறியிருக்கிறார். இன்னும் பல அறிவிஜீவிகள் தங்கள் எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர். பல கட்சிகளும், இயக்கங்களும் பொங்கி எழுந்துள்ளன. மக்கள் எழுச்சிக்கான முன்னுரைகள் ஆங்காங்கே எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது நம் நம்பிக்கைக்கு உரமாக அமைகின்றது.
தமிழகத்தைப் பொறுத்த வரை இந்திய மதச் சார்பின்மைக்கு மட்டுமல்ல, ஈழத்தமிழ் அகதிகளின் அவல நிலை போக்க அவர்களுக்கும் குடியுரிமை வழங்க அரசை நிர்பந்திக்கும் தொடர் போராட்டங்களை மேற்கொள்வது கட்டாயமாகிறது.
- பேரா.இரா.முரளி