இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி மத்தியக் குழுவின் அறிக்கை, ஏப்ரல் 23, 2015

இந்த மேதினத்தில், உலக ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளிகளுடைய தாக்குதல்களை எதிர்த்து வீரத்தோடு போராடி வரும் எல்லா நாடுகளிலுமுள்ள தொழிலாளர்களை இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி வணங்குகிறது.

நமது நாட்டில் பெரு முதலாளி வர்க்கம், தொழிலாளர்கள், உழவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களுடைய உரிமைகளை காலில் போட்டு நசுக்கி வருகிறது. தாங்கள் உலகின் உச்சத்தை அடைய வேண்டும் என்றும் அதே நேரத்தில், உழைக்கும் பெரும்பான்மையானவர்கள் ஆடுமாடுகளைப் போல வாழ வேண்டுமெனவும் அவர்கள் நினைக்கிறார்கள். உலகை ஆண்டுவரும் ஏகாதிபத்தியர்களுடைய மன்றத்தில் இந்தியா சேர்ந்து கொள்ள வேண்டுமென்பதில் அவர்கள் மிகவும் ஆர்வத்துடன் இருக்கின்றனர். இந்த ஏகாதிபத்திய நோக்கத்தை அடைவதற்காக, நமது சமுதாயத்தின் எதிர்காலத்தை சூதாட்ட பந்தையத்தில் வைத்து வருகிறார்கள்.

சுரண்டலை மேலும் தீவிரப்படுத்துவதற்காக, தொழிற் சட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக  திருத்தப்பட்டு வருகிறது. காப்பீடு, ஓய்வூதிய நிதிகளில் அன்னிய நேரடி முதலீட்டின் வரம்பு 49 சதவிகிதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இது, காப்பீட்டுத் துறை மேலும் தனியார்மயப்படுத்தப்படும் என்பதையும், இந்திய மற்றும் அயல்நாட்டு முதலாளித்துவ ஏகபோகங்கள் கூட்டாக மக்களுடைய கடின உழைப்பால் சேமித்த பணத்தைக் கொள்ளையடிப்பது தீவிரமடையும் என்பதையும் குறிக்கிறது. இந்திய இரயில்வே முழுவதுமாக தனியார்மயப்படுத்துவதற்கான கதவுகள் திறந்துவிடப்பட்டிருக்கின்றன. நில கையகப்படுத்தும் சட்டம், ஒரு அவசரச் சட்டத்தின் மூலம் திருத்தப்பட்டுள்ளது. இது உழவர்கள், பழங்குடியினர் மற்றும் கிராம சமூகங்களிலிருந்து அரசாங்கம் வலுக்கட்டாயமாக நிலத்தைப் பிடுங்குவதை மிகவும் எளிதாக்கவும், அதை முதலாளித்துவ ஏகபோகங்களுக்கு பெரும் தொழில் மற்றும் சரக்குக் கூடங்களுக்காகவும், பெரும் திட்டங்களுக்காகவும் கொடுக்கவும் வழிவகை செய்யும்.

"இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்" என்ற விளம்பரப் பலகையின் கீழ், அமெரிக்கா, செர்மனி, பிரான்சு, ஜப்பான், சீனா மற்றும் பிற ஏகாதிபத்தியர்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டிருக்கின்றன. இவை நமது நாட்டின் வளங்களையும், உழைப்பையும் கூட்டாகச் சுரண்டுவதையும், கொள்ளையடிப்பதையும் தீவிரப்படுத்துவதற்கான ஒப்பந்தங்களாகும். அமெரிக்கா, பிரான்சு, இஸ்ரேல் மற்றும் பிற ஏகாதிபத்திய ஆயுத வியாபாரிகளோடு மிகவும் நவீன இராணுவ கருவிகளை கூட்டாக உற்பத்தி செய்யும் திட்டம் இருக்கிறது. இது, இந்தியாவை ஏகாதிபத்திய போர்களில் சிக்க வைப்பதற்கான ஒரு திட்டமாகும்.

நம்முடைய உரிமைகளுக்காகவும், சமூக உற்பத்தியில் நம்முடைய நியாயமான பங்கைக் கேட்பதற்காகவும் போராடும், நம்மை "வளர்ச்சிக்கு எதிரிகளாகவும்", "தேச விரோதிகளாகவும்" முத்திரை குத்துகின்றனர். இதன் மூலம், நம்முடைய போராட்டங்கள் காட்டுமிராண்டித்தனமான பாசிசத்தைக் கொண்டு ஒடுக்குவதை நியாயப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.

நமது நாட்டிலுள்ள சிறைச்சாலைகள், நியாயத்திற்காகப் போராடும் ஆயிரக் கணக்கான போராளிகளால் நிரம்பி வழிகிறது. அவர்களுக்கு "பயங்கரவாதிகள்", "மாவோயிஸ்டுகள்", "தீவிரவாதிகள்", "அடிப்படைவாதிகள்", "பிரிவினைவாதிகள்", அல்லது அப்படிப்பட்ட வேறு ஏதாவதொரு பெயரிட்டு சிறையில் அடைக்கப்பட்டு, சித்தரவதைகள் செய்து, முடிவின்றி அடைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர். மானேசரில் உள்ள 150 மாருதி சுசுகி தொழிலாளர்கள் காட்டுமிராண்டித்தனமாக சித்தரவதைகள் செய்யப்பட்டு, மூன்றாண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கசப்பான அனுபவம் நம்முடைய நினைவில் நெருப்பாக இருக்கிறது. தொழிலாளர்களாக தங்களுடைய உரிமைகளைக் கேட்ட காரணத்திற்காக, மார்ச் 25 அன்று தில்லியின் தொழிலாளர்களும் மாணவர்களும் காட்டுமிராண்டித் தனமான காவல்துறையின் கொடுமைகளுக்கு ஆளானதும் அப்படிப்பட்டதாகும்.

வாக்குகள் மூலம் மக்களை முட்டாளாக்கி, தோட்டாக்கள் மூலம் ஆட்சி நடத்துவது என்ற தந்திரத்தை நரித்தனமான இந்திய முதலாளி வர்க்கம் பயன்படுத்தி வருகிறது. முதலாளித்துவத் தாக்குதல்களின் முன்னணியில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரசு கட்சி இருந்த பத்தாண்டுகளின் போது தொழிலாளர்கள் நாம் பல போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். 2013-இல் ஆரம்பித்து, சமுதாயத்தின் எல்லா பிரச்சனைகளுக்கும் மன்மோகன் சிங்கினுடைய மேலாண்மைக் குழுவே காரணமென முதலாளி வர்க்கம் வசதியாக குற்றஞ்சாட்டிவிட்டு, அதற்குத் தீர்வாக நரேந்திர மோடியின் தலைமையில் உள்ள பாஜக-வை முன்னேற்றி வந்துள்ளனர். 2004-14 காலத்தில் நமது நாடும் உழைப்பும் கொள்ளையடித்து சூறையாடப்படுவதை மேற்பார்வை செய்த காங்கிரசு கட்சி தற்போது, அண்மையில் மோடி அரசாங்கம் கொண்டு வந்துள்ள நில கையகப்படுத்தும் அவசரச் சட்டத்திற்கு எதிராக உழவர்களுடைய நலன்களைப் பாதுகாப்பவர் போல, நடிக்கிறது.

ஆட்சி அதிகாரத்திலிருந்து வெளியே இருக்கும் போது, காங்கிரசு, பாஜக போன்ற கட்சிகள் தொழிலாளர்கள் மற்றும் உழவர்களுக்காகப் போராடுவது போல நடிக்கிறார்கள். ஆட்சி பீடத்தில் அமரும்போது, அவர்கள் பெரு முதலாளி வர்க்கத்தின் திட்டத்தை மட்டுமே நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். மதச் சார்பற்ற தன்மையைப் பாதுகாப்பது என்ற பெயரில் வெளிவந்துள்ள ஜனதா பரிவார் என்றழைக்கப்படும் கட்சிகளால் இதே போன்றதொரு நாடகம் அரங்கேற்றப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட எதிரெதிரான முன்னணிகளையும் கட்சிகளையும் ஒன்றுக்கு மாற்றாக மற்றொன்றை முன்னேற்றுவது, மக்களைத் தொடர்ந்து ஏமாற்றவும், தங்களுடைய ஆட்சியை காத்து நீடிக்கவும் முதலாளி வர்க்கம் மேற்கொள்ளும் சதித் திட்டத்தின் ஒரு அங்கமாகும்.

பெரும்பாலான மக்களுக்கு அடிப்படை மனித மதிப்பைக் கூட மறுப்பதன் மூலம் மிகச் சிறுபான்மையான மூலதன உடமையாளர்களுக்கு வளத்தை உருவாக்கும் தன்மை கொண்டது தான் முதலாளித்துவ அமைப்பு என்ற உண்மையை முதலாளி வர்க்கம் மறைக்க விரும்புகிறது. பேராசை கொண்ட இந்திய மற்றும் உலக பன்னாட்டு நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் எல்லாத் துறைகளுடைய கதவுகளையும் திறந்து விடுவதென்பது, தொழிலாளர்களுடைய சுரண்டலையும், உழவர்கள் கொள்ளையடிக்கப்படுவதையும் தீவிரப்படுத்துவதாகும். பெரும் அளவிலான உற்பத்தி, வங்கி, மற்றும் வாணிகம் ஆகியவையெல்லாம் தனிப்பட்ட இலாபத்தை அதிகரிக்கும் நோக்கம் கொண்டிருக்கும் வரையிலும் பணக்காரர்களுக்கும், ஏழை மக்களுக்கும் இடையிலான இடைவெளி விரிவடைந்து கொண்டே தான் இருக்கும். இயற்கைச் சூழல் அழிக்கப்படுவதும் மோசத்திலிருந்து படுமோசமாக ஆகத்தான் செய்யும். எனவே, பேராசை கொண்ட முதலாளி வர்க்கம் நாட்டை ஆள்வதை நாம் இனியும் அனுமதிக்கக் கூடாது என்ற ஒரே முடிவுக்குத்தான் நாம் வர முடியும்.

பொருளாதாரமானது ஒரு சோசலிச அடிப்படையில் திருத்தியமைக்கப்பட்டாலன்றி, "அனைவருக்கும் வளமை" என்பது ஒரு போலியான முழக்கமாகவும், கேலிக் கூத்தாகவும் இருக்கும். பெரிய அளவிலான சமூக உற்பத்தியும், பரிமாற்றமும், வினியோகமும் முதலாளித்துவ தனியார் சொத்தாகவும், தனிப்பட்ட தொழிலாக இருப்பதிலிருந்து அது பொதுச் சொத்தாகவும், மக்களுக்குச் சொந்தமான பொது விவகாரமாகவும் மாற்றப்பட வேண்டும். இது, சமூகமயமான உற்பத்திக்கும், உற்பத்திக் கருவிகள் தனியாருடைய உடமையாக இருப்பதற்கும் இடையிலுள்ள முரண்பாட்டைத் தீர்க்கும். இது உழைக்கும் மக்களுடைய கைகளில் வாங்கும் சக்தியில்லாத காரணத்தால், மீண்டும் மீண்டும் எழும் நெருக்கடிகளுக்கும், உற்பத்தித் தடைகளுக்கும் முடிவு கட்டும்.

பெரும்பான்மையான மக்களைச் சுரண்டுவதன் மூலம் மிகச் சிலர் செல்வக் கொழிப்பில் மிதப்பதற்கு சோசலிச பாதை முடிவு கட்டும். உற்பத்தி சக்திகளை பெருக்க வேண்டியத் தேவையோடு உற்பத்தி உறவுகளை ஒருங்கிணைக்கும். ஒவ்வொரு குடும்பமும் தனிப்பட்டவர்களும் வளமடைய மிக அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டியத் தேவை இருக்கிறது. வேலை செய்யத் தகுதியும் விருப்பமும் உள்ள ஒவ்வொருவருக்கும் மிகுதியாகவே வேலைகள் இருக்கும். சோசலிசமாகத் திருத்தியமைக்கும் கடமையை, உழவர்களுடன் கூட்டாகத் தொழிலாளி வர்க்கம் மேற் கொள்ள வேண்டும்.

முதலாளி வர்க்கத்தைக் காட்டிலும், தொழிலாளி வர்க்கம் நாம் தந்திரமாகச் செயல்பட வேண்டும். நம்முடைய முக்கிய எதிரியான ஏகபோக குடும்பங்கள் தலைமையில் இயங்கும் முதலாளி வர்க்கத்திலிருந்து நமது கவனத்தைத் திசை திருப்ப அனுமதிக்கக் கூடாது. இந்த வர்க்கம் தான், முதலாளித்துவ அமைப்பையும், ஏகாதிபத்தியக் கொள்ளையையும், காலனியத்தின் மிச்சங்களையும், பழைய ஒடுக்குமுறைகளையும் காட்டுமிராண்டித்தனமான வன்முறையையும் பயங்கரத்தையும் கொண்டு பாதுகாக்கும் அரசு இயந்திரத்தை இயக்குகிறது.

முதலாளி வர்க்க ஆட்சியை மாற்றி, தொழிலாளர் - உழவர்களுடைய ஆட்சியைக் கொண்டு வருவதே நமது போராட்டத்தின் நோக்கமாகும். வர்க்கத்திற்கும் வர்க்கத்திற்கும் எதிரான இந்தப் போராட்டம், குடியரசின் "மதச்சார்பற்ற அடித்தளங்களைப் பாதுகாப்பது" அல்லது "தேச ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பது" என்ற பெயரில் ஆட்சியாளர்களின் பின்னால் அணிவகுப்பதற்கான அழைப்புகள் மூலம் திசை திருப்ப அனுமதிக்கக் கூடாது.

தேசிய இனம், மொழி, சாதி, இனம் மற்றும் பகுதி போன்ற அடிப்படைகளில் நமது சமுதாயத்தில் பிளவுகள் தீவிரமடைந்திருப்பதற்கு சுரண்டலான, பயங்கரமான முதலாளி வர்க்க ஆட்சி தான் காரணமாகும். அமெரிக்காவும், பிற ஏகாதிபத்தியர்களும் தங்களுடைய பிரித்தாளும் சூழ்ச்சி என்ற கொடிய விளையாட்டுகளை ஆடுவதற்கு நாட்டின் கதவுகளைத் திறந்துவிட்டுள்ள முதலாளி வர்க்கமே குற்றவாளியாகும்.

நமது போராட்டத்தின் அரசியல் நோக்கமானது, பேராசை கொண்ட முதலாளி வர்க்கத்தின் நியாயமற்ற, காட்டுமிராண்டித்தனமான அபாயகரமான ஆட்சிக்கு முடிவு கட்டி விட்டு அதற்கு பதிலாக தொழிலாளர் - உழவர் ஆட்சியை நிறுவுவதாகும். சமூகத்தின் செல்வத்தை தங்களுடைய உழைப்பினால் உற்பத்தி செய்பவர்கள், இந்தச் சமுதாயத்தின் மன்னர்களாகவும் ஆக வேண்டும். அதன் மூலம் சமூக உற்பத்தியை, சமூகச் சொத்தின் அடிப்படையிலும், திட்டமிடப்பட்ட பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையிலும் மாற்றியமைக்க முடியும். அப்போது சமுதாயத்தின் எல்லா உறுப்பினர்களுக்கும் வளமையையும், பாதுகாப்பையும் உத்திரவாதம் செய்யமுடியும். ஒரு சுரண்டும் வர்க்கம் இருப்பதற்கும், அது செழிப்பதற்கும் இருக்கும் அந்த அடிப்படையையே அகற்ற முடியும்.

தொழிலாளர்கள் - உழவர்கள் நாம் எப்படி சமுதாயத்தின் மன்னர்களாக ஆக முடியும்? இன்று நிலவும் அமைப்பின் மூலமும், பிரதிநிதித்துவ சனநாயக அரசியல் வழி முறை மூலமாகவும் இதைச் செய்ய முடியுமா? இல்லை, இந்தத் தேர்தல் வழிமுறை மூலம் அரசியல் அதிகாரத்தின் முதலாளித்துவ தன்மையை மாற்ற முடியாது. இது மீண்டும் மீண்டும் கடந்த 65 ஆண்டுகால வாழ்க்கை அனுபவத்தின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. நம்முடைய தேவையானது, தலைமையில் இருக்கும் கட்சியை மட்டுமே மாற்றுவதல்ல. அமைப்பை மாற்றுவது நம்முடைய தேவையாகும். அரசின் தன்மையிலும், அரசியல் வழிமுறையிலும் ஒரு மாற்றம் நமக்குத் தேவைப்படுகிறது.

இறையாண்மையை பாராளுமன்றத்திலோ அல்லது குடியரசுத் தலைவரிடமோ அல்லது அமைச்சர் குழுவிடமோ அல்லாமல் மக்களிடம் கொண்டு சேர்க்கக் கூடிய ஒரு அரசியல் சட்டத்தின் அடிப்படையில் அமைந்த முழுவதும் வேறுபட்ட ஒரு அமைப்பிற்காக நாம் போராடுகிறோம். இரண்டு அடிப்படை கோட்பாடுகளை உயர்த்திப் பிடிக்கும் ஒரு அரசு நமக்குத் தேவை - 1. இறையாண்மை. சமுதாயத்தின் திசையைத் தீர்மானிக்கும் அதிகாரம் மக்களுக்கு உரியது. 2. சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வளமையையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய கடமையும், அந்த உரிமைகள் எப்போதும் மீறப்படாமல் இருப்பதை உறுதி செய்கின்ற பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது. ஒவ்வொரு வயது வந்த உறுப்பினருக்கும் தேர்ந்தெடுக்கவும், தேர்ந்தெடுக்கப்படவும், தேர்தல்களுக்கு முன்னர் வேட்பாளர்களை முடிவு செய்வதில் கருத்தை முன்வைக்கும் உரிமையும், ஒருவருடைய தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை எந்த நேரத்திலும் திருப்பியழைக்கும் உரிமையும், சட்டத்தை இயற்றவும், முக்கிய கொள்கைத் திட்டங்களை வாக்கெடுப்பின் மூலம் அங்கீகரிக்கும் உரிமையும் இருக்க வேண்டும். இவற்றைப் பாதுகாக்கும் ஒரு அரசியல் சட்டத்தை நாம் கொண்டுவர வேண்டும்.

முதலாளித்துவ தாக்குதல்களுக்கு எதிராக தினந்தோரும் போராட்டங்களை நடத்துவதோடு, புரட்சிகர மாற்றத்திற்குத் தயாரிக்க வேண்டிய உடனடி கடமை எல்லாத் தொழிலாளர்களையும் எதிர்கொண்டுள்ளது. நம்முடைய வர்க்கப் போராட்ட அங்கங்களை கட்டி நாம் வலுப்படுத்த வேண்டும். தொழிலாளர்கள் மற்றும் உழவர்களுடைய இன்றுள்ள பொது மக்கள் அமைப்புக்களையும் நாம் வலுப்படுத்த வேண்டும்.

நாம் வேலை செய்யும் இடங்களில் முதலாளித்துவ தாக்குதல்களுக்கு எதிராக ஐக்கிய எதிர்ப்பைக் கட்டி வலுப்படுத்துவதில் எல்லா விழிப்புணர்வுள்ள தொழிலாளர்களும் தீவிரமாகப் பங்கேற்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி அறைகூவல் விடுக்கிறது. செயல்பாட்டில் ஒற்றுமையை நாம் கட்டி பலப்படுத்துவோம். தனியார்மய தாராளமயத் திட்டத்திற்கு புரட்சிகர மாற்றையொட்டி ஐக்கியப்படுவதன் மூலம் அரசியல் வலிமையை நாம் பெறுவோம். இறையாண்மையை மக்கள் கைகளில் கொண்டு சேர்க்கவும், அனைவருடையத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் பொருளாதாரத்தைத் திருத்தியமைக்கவும் விவாதித்து திட்டத்தை உருவாக்குவோம்.

ஒரு புரட்சியில், உழவர்களுக்கும் எல்லா பிற சுரண்டப்பட்டவர்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இந்தியத் தொழிலாளிகள் தலைமை தாங்கிச் செல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை. அந்தப் புரட்சி, முதலாளி வர்க்கத்தின் இரத்த வெறிபிடித்த ஆட்சிக்கு முடிவு கட்டிவிட்டு, தொழிலாளர்கள் - உழவர்களை விடுதலை செய்யும் ஆட்சியை அமைக்கும்!

தொழிலாளர்கள், உழவர்கள், பெண்கள், இளைஞர்கள் நாமே இந்தியா, நாமே அதன் மன்னர்கள்!

நமது நாட்டில் தொழிலாளர்கள் உழவர்களுடைய ஆட்சியை நிறுவுவோம்!

செங்கோட்டையில் செங்கொடியை நாட்டுவோம்!

Pin It