சுதேசி
தலைவர் அவர்களே! சகோதரர்களே!! நான் எதிர்பாராமல் திடீரென்று கூப்பிடப்பட்டு விட்டேன். இங்கு பேச வேண்டிய அவசியமிருக்குமென நான் கருதவேயில்லை. தங்கள் அழைப்பிற்கிணங்கியும் எனது நண்பரும் சகோதர வாஞ்சையும் உள்ள திரு. நடேச முதலியார் அவர்கள் தலைமை வகித்து நடத்தும் விழாவுக்கு நான் அவசியம் வர வேண்டுமென்றும் ஆசைப்பட்டு வந்தேன். ஆனால் திடுக்கிடும்படியாக அழைக்கப்பட்டு விட்டேன். மற்ற இடங்களில் பேசுவதற்கு எனக்கு எவ்வளவு உற்சாகமும் ஆசையும் இருக்குமோ அவ்வளவு உற்சாகமும் ஆசையும் இங்கே பேச எனக்கு உண்டாகவில்லை. மற்றும் என் மனதிற்கு வருத்தமாகவே இருக்கின்றது.
ஏனெனில் இந்த சங்கமானது எந்தத் திட்டத்தில் நடைபெற இருக்கின்றதோ அத்திட்டங்களுக்கு நேர்மாறான அபிப்பிராயம் உடையவனாகிய நான் இன்று இந்த கொண்டாட்டமான தினத்தில் அதற்கு நேர் விரோதமாக பேசுவதென்றால் அது யாருக்கும் கஷ்டமாகவே இருக்குமல்லவா? ஆனாலும் தலைவர் அவர்கள் இவ்விஷயத்தில், எனது அபிப்பிராயத்தையும் யோசனையையும் சொல்ல வேண்டுமெனக் கேட்டதாலும் என்னைக் கேட்காமலே, பேச வேண்டுமாய் கூப்பிட்டு விட்டதாலும் நான் இவ்விஷயத்தில் எனது அபிப்பிராயத்தை சொல்லி விடுகிறேன். அதைத் தாங்கள் தங்கள் சொந்த அறிவைக் கொண்டு யோசித்துப் பாருங்கள், சகோதரர்களே!
நமது மக்களுக்கு மூடநம்பிக்கையில் அதிகப் பழக்கம் ஏற்பட்டு விட்டதால் பகுத்தறிவை உபயோகிப்பது என்பது மிகுந்த கஷ்டமான காரியமாக இருக்கின்றது. ஆனாலும் சில முக்கிய விஷயங்கள் மூட நம்பிக்கையால் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக சிறிது கஷ்டத்துடனும் நஷ்டத்துடனுமே பகுத்தறிவைக் கிளறி விட வேண்டியதாகின்றது. சகோதரர்களே! நாட்டுக்குக் கெடுதியான ஒருவேகம் மூடநம்பிக்கையின் பயனாய் ரயில் வண்டி மாதிரி போய்க் கொண்டிருக்கின்றது. ரயில் வண்டி கூடாது என்று சொல்லும் ஒருவன் அதை இல்லாமல் செய்துவிட ஓடும் ரயிலுக்கு முன்னால் போய் நின்று தடுப்பதால் என்ன பயன் விளையுமோ, அந்தப் பயன்தான் எனது அபிப்பிராயத்திற்கு விளையும் என்பது எனக்குத் தெரியும். ஆதலாலேயே நேர் வேகத்தில் போய் முட்டிக் கொள்ளாமல் அதன் அஸ்திவாரத்தில் வேலை செய்ய வேண்டுமென்று கருதி அநேக விஷயங்களில் நான் நிதானமாய்ப் போய்க் கொண்டிருக்கிறேன். ஆனாலும் இந்த மாதிரி தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் பட்டுக் கொள்ளுகிறேன். ஆகிலும் நடப்பது நடக்கட்டும் என்றேதான் இப்போது பேசப் போகிறேன்.
சகோதரர்களே! உங்கள் சங்கக் கொள்கையில் அதாவது சுதேச ஜவுளி வர்த்தக சங்கம் என்பதில் நீங்கள் கருதி இருக்கும் சுதேசக் கைத் தொழில் கைநெசவு, கைநூற்பு என்கின்றவைகளையே முக்கியத் திட்டங்களாய் வைத்திருப்பது என்பதில் நான் விரோதமான அபிப்பிராயம் உடையவனாய் இருக்கிறேன்.
முதலாவது சுதேசக் கைத்தொழில் என்பதையே எடுத்துவிட வேண்டுமென்றும் அந்த உணர்ச்சி கூடாதென்றும் சொல்லுகின்றேன். சுதேசத் தொழில் என்று இருந்தாலும் பாதகமில்லை. ஒவ்வொரு தொழிலும் கையால் செய்ததாகவே இருக்க வேண்டும் என்று நாம் எதிர்ப்பார்க்கக் கூடாது. நமது நாட்டுப் பொருளாதாரத்திற்கும் தொழில் பெருக்கத்திற்கும் கைத் தொழிலையே அதாவது கையினால் செய்யும் தொழிலையே விர்த்தி செய்வதும் புத்துயிர் அளிப்பதும் ஆதரிப்பதும் என்பதான காரியங்கள் தொழிலுக்கும், பொருளுக்கும் தொழிலாளிக்கும் கேடு செய்வதாகும். முக்கியமாக கதர் என்று சொல்லும் விஷயம் இன்னமும் மோசமானதாகும். அதனால் தொழில் முறை விர்த்தியுமில்லை. பொருளாதார விர்த்திக்கும் இடமில்லை. தொழிலாளிகளுக்கும் பயன் இல்லை. அதுபோலவே தான் கைத்தறி, கை நெசவு என்பவைகள் எல்லாம் தொழில்முறைக்கு கேடு விளைவிப்பதும் தொழிலாளிகளின் முற்போக்குக்கும், விடுதலைக்கும் எதிரியுமானதாகும். அது நாகரிக முற்போக்கடைய வேண்டிய நாட்டிற்கு சிறிதும் பொருந்தாததுமாகும். அன்றியும் இந்த உணர்ச்சி சமதர்மத்திற்கும் பொது உடைமை தத்துவத்திற்கும் மாறானதுமாகும். இவை மாத்திரமல்லாமல் இயற்கைக்கும் அதோடு மனிதத் தத்துவத்திற்கும் முரண்பட்டதும் காரியத்தில் சித்தி பெறாமல் போவதோடு தானாக ஏற்படும் முன்னேற்றத்தையும் தடுப்பதுமாகும்.
சகோதரர்களே! இன்றைக்கு கதர் ஏற்பட்டு 10, 12 வருஷங்களாகியும் சுமார் 40, 50 லட்ச ரூபாய் இத்தொழில்முறை பிரசாரத்திற்கு மாத்திரம் இந்நாட்டு மக்கள் பணம் செலவு செய்யப்பட்டு அநேகரை இதில் ஈடுபடுத்தியும் என்ன பலன் ஏற்பட்டது? என்பதை கவனியுங்கள். இதற்காகவே கூட்டப்பட்ட இந்தக் கூட்டத்தில் 100 க்கு 5 பேராவது கதர் கட்டினவர்கள் காணப்படுகிறீர்களா? அப்படித்தான் சற்றுக் குறைவாகவேக் காணப்படுவதாக வைத்துக் கொண்டாலும் இவர்கள் தங்களது பெண்டு பிள்ளைகளுக்கு 1000ல் ஒருவர் வீதமாவது வாங்கிக் கொடுத்து அதைப் பயன்படுத்துகிறவர்கள் இக்கூட்டத்திலாவது உண்டா? என்று யோசித்துப் பாருங்கள்.
இதை நான் இந்த கதர் அபிமானிகள் மீது குற்றமாகச் சொல்ல வரவில்லை. ஆகாத முடியாத - இயற்கைக்கும் மனிதத் தன்மைக்கும் விரோதமான காரியத்தில் ஏதோ வேகத்தில் ஏதோ ஒரு காரியத்தை உத்தேசித்து தலையிட்டுவிட்டு விழிக்க நேரிட்டு விட்டது என்றுதான் சொல்லுகின்றேன். கதர் ஏழைகளுக்குச் சோறு போடுகின்றது என்பது பொருளற்ற வார்த்தையேயாகும். அது சில இடங்களில் வேண்டுமென்றே ஏமாற்ற உபயோகப்பட்டு வருகின்றது. பாமர ஜனங்கள் இதை நம்பி ஏமாந்து விடுகின்றார்கள். கதரின் தத்துவத்தால் இந்த நாட்டில் யாரும் பலனடைவதில்லை. பலனடையவும் முடியாது. ஆனால் கதரைப் பற்றி திரித்தும் குழப்பியும் பிரசாரம் செய்வதால் சிலர் அதுவும் மற்றவர்களுடைய அளவுக்கு மீறிய நஷ்டத்தால் பயனடைகின்றார்கள். எப்படியென்றால் நேற்று நான் திருவாரூரில் இருந்து வரும்போது என் கூட இச்சங்கத்தின் தலைவர் மில், கதர் வியாபாரி ஜனாப் முகமது சுல்தான் சாயபு அவர்கள் கூட்டாளி திரு. வ.ப.மா. முதலியார் பிரயாணம் செய்தார். அவரிடம் நான் சில விபரம் தெரிந்தேன். அதாவது பதினெட்டு நெம்பர் மில் நூலினால் நெய்யப்பட்ட துணி 50 இஞ்சு அகலம் கெஜம் ஒன்றுக்கு 3 அணா 6 பைக்கு விற்பதாகச் சொன்னார். ஆனால் அதே அகல நீளம் கதர் 18 நெம்பர் நூலாய் இருந்தால் கஜம் 12 அணாவுக்கு மேல் அடங்குவதாகவும் 10 நெம்பர், 8 நெம்பராய் இருந்தால் கஜம் 9 அணாவுக்கு கொடுக்கலாம் என்றும் சொன்னார்.
ஆகவே மக்கள் 0-3-6-க்கு பதிலாக 9 அணா 12 அணா போடுவதால் மாத்திரம்தான் ‘ஏழைகள் பிழைக்கலாம்’ என்று சொல்லப்படுகின்றதே தவிர அத்தொழிலினால் யாரும் பிழைப்பதில்லை. ஆகவே இது பார்ப்பனர்கள் பிழைக்க என்று மற்றவர்களுக்குக் கடவுள் பேரால் போடும் ஒரு முட்டாள் வரிபோல் வேறு சிலர் பிழைக்க என்று கதர் வரி என்பதாகக் கதர் கட்டுபவரிடம் வசூலிக்கப்படும் ஒருவித வரித் திட்டமேயொழிய கதர் ஒரு தொழில் திட்டமல்லவென்றும் அதனால் யாரும் யோக்கியமாய் பிழைக்க முடியாது என்றும் நான் உறுதியாய்ச் சொல்லுவேன்.
கதர் பக்தர்களுக்கு இது புரியாவிட்டாலும் கதர் கர்த்தாக்களுக்கு இந்த அபிப்பிராயம் புரிந்ததுதான். ஜனங்கள் கண்விழித்துப் பிறகு அவர்களும் தங்கள் அபிப்பிராயங்களை இப்போது மாற்றிக் கொண்டார்கள். உயர்திரு. காந்தி அவர்களே இப்போது இன்று நடைபெறும் கதர் திட்டம் பயன்படாது என்று கருதி ஒரு யந்திரம் கண்டுபிடிக்க ஆசைப்பட்டு குறைந்த நேரத்தில் கொஞ்ச கஷ்டத்தில் அதிகமான அளவு நூல் நூற்கும்படியான ஒரு புதிய இயந்திரத்தைக் கண்டுபிடிப்பவர்களுக்கு லட்ச ரூபாய் பரிசு கொடுப்பதாக விளம்பரம் செய்திருக்கிறார். அதன் கருத்து என்ன? கைத்தொழிலிலிருந்து - கைராட்டினத்திலிருந்து யந்திரத் தொழிலுக்கு - யந்திர ராட்டினத்திற்கு பாய்ந்திருக்கிறார் என்பதல்லவா? என்று கேட்கின்றேன்.
அப்படிப்பட்ட யந்திரம் கண்டுபிடித்தால் கைராட்டினம் என்ன கதியாவது? இப்போது கைராட்டினத்தில் நூல் நூற்ற 'ஏழைகளுக்கு நாளைக்கு வழி என்ன?' இந்த கதர் என்ன கதியாவது? என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். தவிரவும் கதர் கர்த்தாக்களே கதர் விஷயத்தில் பலவித அபிப்பிராயம் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.
அதாவது, கதரே தான் இந்தியாவின் விடுதலை என்று ஒருவரும், யந்திரங்கள் வரும்வரை கதர் என்று ஒருவரும், வேலையில்லாத நேரத்தில் வேலை கொடுக்க என்று ஒருவரும், வேறு தொழிலுக்கு மார்க்கம் கண்டுபிடிக்கும் வரைதான் கதர் என்று ஒருவரும் சும்மா இருக்கும் ஒய்வு நேரங்களில் ஆண் பெண் சகலரும் கதர் நூல் நூற்பதின் மூலம் ஜவுளியே சும்மா கிடைத்து விடும் என்று ஒருவரும், கதர் சுற்றுவதில் ஒரு ஓங்காரம் - பிரணவ சப்தம் ஏற்பட்டு எதிரிகளை அழித்து விடும் என்று ஒருவரும், இந்தப்படி கடவுளுக்கு லக்ஷணம் சொல்லுவதற்கு மேலாகக் கதருக்கு லட்சணம் சொல்லுகின்றார்கள். ஆனாலும் கடைசியாக ஒரு வரியாக வசூலிக்கப்பட்டு சிறிது பாகமே ஏழைகளுக்குப் போய்ச் சேரும்படியான செப்பிடு வித்தையாகவே முடிந்து விட்டது. நிற்க,
மற்ற தொழில் விஷயங்களிலும் கைத்தொழில் என்கின்ற மனப்பான்மையை விட்டொழிக்க வேண்டும். கைத்தொழில் சாமான்களையே ஆதரிப்பது என்கின்ற மனப்பான்மையையும் விட்டொழிக்க வேண்டும். இது பயன்படாத காரியமாக ஆகிவிடும். இன்றைய தினம் நம் நாட்டில் அநேக “கைத்தொழில் விற்பனர்களுக்கு” வேலையில்லாமல் போய் விட்டது. வேலை கொடுக்கவும் நம்மால் முடியாமல் போய்விட்டது.
உதாரணமாக ஒரே தையல் ஊசியையும் குண்டூசியையும் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த நாட்டில் அதை கையினால் செய்யத் தெரிந்தவர்கள் ஏராளமாய் இருக்கின்றார்கள். மேலும் செய்யும்படி ஆயிரக்கணக்கான மக்களைப் பிடித்து வேலை சொல்லிக் கொடுத்துத் தயார் செய்ய முடியும். ஆனால் நம்மில் ஒருவராவது அதை வாங்குவோமா? ஒரு சமயம் காந்தி போன்ற ஒருவர் “மகாத்மாவாகி” பல லக்ஷக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து பிரசாரம் செய்து அதனால் பிழைக்க வேண்டிய பலரை ஏற்படுத்தி மோக்ஷம் கிடைக்கும் என்பதுபோல் “கை ஊசி வாங்கினால் சுயராஜ்யம் கிடைக்கும்” என்று பிரசாரம் செய்தால் இப்போது கதர் வாங்குவதுபோல் சிலராவது வாங்குவர்களா? என்பதும் சந்தேகந்தான் என்றாலும் அநேகமாய் அந்த ஊசிகளை வாங்க மாட்டார்கள் என்றுதான் சொல்லுவேன். ஏன்? வேலை நயமில்லாததாலா என்றால் அதுவல்ல. மற்றென்னவென்றால் அதை வாங்க நமது மக்களுக்கு விலை சரிப்படாது. ஏனெனில் ஒரு ஊசி செய்ய நமது கைத்தொழில் முறையில் செலவாகும் நேரத்தில் பல ஆயிரம் ஊசிகள் இயந்திரத் தொழில் முறையில் நம்பிக்கையுள்ளவரால் செய்யப்பட்டு விடுகின்றது. ஆகவே ஒரு காசுக்கு 12 ஊசி விற்கும்போது ஒரு ஊசிக்கு 12 தம்பிடி கொடுப்பதென்றால் யாரும் சம்மதிக்க முடியவே முடியாது என்பது தான்.
அதுபோலவேதான் மற்ற விஷயங்களும். ஆகவே கைத்தொழில் பைத்தியத்தை விட்டு விட வேண்டும். இயந்திரத் தொழில் முறையை ஆதரிக்க வேண்டும்.
அன்றியும் கைத்தொழில் கைத்தொழில் என்பது பொதுவுடைமை தர்மத்திற்கு விரோதமானது என்பதை ஞாபகத்தில் வையுங்கள். முதலாளி தொழிலாளி என்கின்ற பாகுபாடு இருக்க வேண்டும் என்கின்ற மனப்பான்மை உடையவர்கள் தான் கைத்தொழில் கைத்தொழில் குடிசைத் தொழில் என்று கட்டியழுவார்களே தவிர சமதர்மமும் பொதுவுடைமை தத்துவமும் கோருபவர்கள் கைத்தொழிலை அதாவது இயந்திர உதவியில்லாமல் செய்யப்படும் தனிப்பட்டவர்கள் தொழிலை, விரும்ப மாட்டார்கள்.
கைத் தொழில் என்பதே வர்ணாச்சிரம தர்மத்தின் அடிப்படையாகும். திரு. காந்தியவர்கள் சொல்லுகின்ற வர்ணாச்சிரம தத்துவமேதான் கதர் முதலிய கைத்தொழில் முறைகள். எப்படியெனில் அவர் மக்கள் பரம்பரைத் தொழில்களையே (பரம்பரை முறையில்) செய்ய வேண்டும் என்கிற கருத்துடையவர். ஆகவே தொழிலாளி மகன் தொழிலாளியாகவும் முதலாளி மகன் முதலாளியாகவும் இருப்பதற்காகச் செய்யப்படும் மறைமுகமான பிரசாரமே தான் இந்த கதர், கைத்தொழில், குடிசைத்தொழில் என்பவைகளாகும். சமதர்மமும் பொதுவுடைமை தத்துவமும் ஏற்பட வேண்டுமானால் வர்ணாச்சிரமும் பரம்பரைத் தொழில் முறையும், கைத்தொழில் முறையும் முதலில் ஒழிய வேண்டும்.
அன்றியும் கைத்தொழில் செய்வதன் மூலமேதான் அதாவது மக்களுக்கு சரீரத்தில் பாடுபடும்படியான வேலை கொடுத்து அவர்களை வாட்டி வளவை நிமிர்த்துவதுதான் மக்களுக்கு ஜீவனத்திற்கு வழி ஏற்படுத்தலாம் என்று சொல்லுகின்றவர்கள் கூற்றையும் நான் ஒப்புக் கொள்ள முடியாது. அந்த முறையையும் நான் ஏற்க முடியாது.
ஏனெனில் அவர்கள் மக்கள் பிறந்ததும் வளர்ந்ததும் இருப்பதும் தொழில் செய்து சரீர பிரயாசைப்பட்டு உழைத்து சாப்பிடத்தான் இருக்கின்றார்கள் என்று கருதும் எண்ணத்தினாலேயே மக்களைக் கீழ்மைப்படுத்தி விட்டார்கள். ஆனால் இந்தப்படி சொல்லிக்கொண்டு இருக்கின்ற மக்களில் சிலர் மாத்திரம் உட்கார்ந்து கொண்டு பாடுபடாமல் ஜீவிக்க என்று பிறந்து வளர்ந்து வாழ்பவர்களாகக் கருதிக்கொண்டிருக்கிறார்கள். இதை மோசடி யான எண்ணமென்றே சொல்லுவேன்.
கஷ்டப்பட்டு சாப்பிடுவதற்கென்றே மனிதன் பிறந்தான் என்று சொல்லுவதானால் மனித சமூகம் இல்லாமல் போவதே மேலான காரியமாகும். “உலகம் வேண்டுமானால் மனித சமூகம் பெருகவேண்டும்” என்று சொல்லுகிறவர்கள் எல்லாம் பெரிதும் மற்ற மக்கள் உழைப்பில் சாப்பிடு கின்றவர்களே யாவார்கள். ஆகவே மக்கள் கஷ்டப்பட்டு தான் ஆக வேண்டும் என்று சொல்லி கஷ்டப்பட மார்க்கம் தேடுவதைவிட மக்கள் இல்லாமலே போவதற்கு செய்யப்படும் காரியம் மிகவும் நல்ல காரியமாகும்.
உதாரணமாக இரண்டு மாட்டை காலையில் 3 மணிக்கு செக்கில் பூட்டி மாலை 7 மணி வரைக்கும் ஓட்டி அடித்து அதன் வாலை முறித்து முதுகுத் தோல்பட்டை வாங்கி கழுத்து பூசனிக்காய் போல் வீங்க வைப்பதன் மூலம்தான் அந்த மாடுகள் வாழமுடியும் என்றால் அப்படிப்பட்ட மாடுகளை எல்லாம் கசாப்புக்கடைக்காரனிடம் ஒப்புவித்து விட்டு இனி மேல் மாடுகளை யாரும் உற்பத்தி செய்யக் கூடாது என்று சட்டம் போடுவதே மேலான காரியம் என்றுதான் சொல்லுவேன். இந்த மாதிரி நிலை யில் ஒரு மாடுகூட பிழைத்திருக்க வேண்டியதில்லை என்பதே எனது அபிப்பிராயம்.
தவிர பொதுவுடைமை தத்துவத்திற்கு, வெள்ளைக்கார ஆக்ஷியேதான் விரோதமாய் இருக்கின்றது என்பதை நான் ஒப்புக் கொள்ளமுடியாது. நமது நாட்டில் உள்ள வர்ணாச்சிரம தர்மந்தான் அதுவும் திரு. காந்தி சொல்லும் வர்ணாச்சிரம தர்மம்தான் பொது உடைமைக்கு விரோதமானதாகும். இந்த வர்ணாச்சிரம தர்மம்தான் இந்த நாட்டுக்கு வெள்ளைக்கார ஆக்ஷி முதலிய வெளிநாட்டு முதலாளிகள் ஆக்ஷியை கொண்டு வந்துவிட்டதாகும். இன்னும் அவ்வாக்ஷியை நடத்திக் கொடுப்பதே -அதைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டிருப்பதே நமது நாட்டு வர்ணாச்சிரம தர்மமுறையேதான் ஆகும்.
முதலாளி தொழிலாளி என்ற முறையும் வர்ணாசிரம தர்ம முறையில் பட்டது என்பதை மறந்து விடாதீர்கள். அந்த முறையில் தான் இப்போது நமது நாட்டில் மஞ்சள் புரோகிதர்களும். மஞ்சளும் கருப்பும் கலந்த அரசர்களும், ஜமீன்களும், மிராசுகளும், வியாபாரிகளும் இருக்கின்றார்கள் என்பதோடு இவர்களுடைய பத்திரத்திற்கென்றே வெள்ளை முதலாளிகள் வருவிக்கப்பட்டு காப்பாற்றப் படுகின்றார்கள். ஆகவே நமது நாட்டு மேல் கண்ட புரோகிதர்களும், அரசர்களும், ஜமீன்களும் முதலாளிகளும் பரம்பரை முறை, முறை-பாத்தியமே பிறப்பு உரிமை என்பவைகள் எல்லாம் அடியோடு ஒழியும் போது அதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு -அதன் பலத்தால் இருக்கும் வெள்ளை முதலாளி ஆக்ஷி கசகசவென்று நசுக்கிவிடும். அதில் சிறிதும் சந்தேகேமேயில்லை. தவிர யந்திரங்கள் வந்தால் மக்களுக்கு வேலை கிடைக்காது என்று சொல்லப்படுகின்றது.
இதுவும் முதலாளி, தொழிலாளி தத்துவ வர்ணாச்சிரம தர்மத்தை அடிப்படையாகக் கொண்டதேயாகும். எதற்காக ஒருவனுக்கு சதா தொழில் இருக்க வேண்டும்? புலி, கரடி, சிங்கம், நாய், குரங்கு பக்ஷி ஆகியவைகளுக்கு சதா தொழில் இருந்தும் கொண்டிருக்கின்றனவா? அவை தொழில் செய்துதான் ஜீவிக்கின்றனவா? புரோகிதன், அரசன், ஜமீன், மிராசு, வியாபாரி, உத்தியோகஸ்தன் முதலியவர்கள் சதா சரீரத்தால் வேலை செய்து கொண்டுதான் இருக்கிறார்களா?
மேலும் இவர்கள் எல்லாம் வேலை செய்யாததால் உடல் கெட்டுப் போகின்றதே என்று சரீராப்பியாசம் செய்து கொண்டிருப்பதை நாம் பார்க்கவில்லையா? ஒரு கூட்டம் சரீரத்திற்கு வேலை இல்லையே என்று சரீராப்பியாசம் செய்யவும் மற்றொரு கூட்டம் ஜீவனத்திற்கு மார்க்கமில்லையே என்று வேலை செய்து கஷ்டப்படவுமா யிருப்பதற்குக் காரணம் வர்ணாசிரம சமூக வாழ்க்கை முறையா? அல்லது யந்திரத்தினால் ஏற்பட்ட கெடுதியா? என்பதை யோசித்துப் பாருங்கள்.
நாட்டில் இருக்கின்ற வேலையையும் மக்கள் எண்ணிக்கையையும் அவர்களுக்கு வேண்டிய ஆகார முதலிய சாமான்களையும் கணக்குப் போட்டு அந்த சாமான்களை யந்திரங்களால் செய்வதன் மூலம் குறையும். நேரத்தைக் கழித்து மிகுதியுள்ள நேரத்தை எல்லா மக்களுக்கும் பங்கு போட்டு பிரித்துக் கொடுத்து அவர்கள் வாழ்நாள் ஜீவனத்திற்கு வேண்டிய முழுக் கூலியையும் கொடுக்க ஆரம்பித்து விட்டால் வேலை சரியாய்ப் போய்விடுமா? இல்லையா? அதாவது ஒரு வாரத்திற்கு ஒரு மனிதனுக்கு இத்தனை மணி நேரம் மாத்திரம் வேலை செய்தால் போதும் என்கின்ற முறையில் பங்கீட்டுக் கொடுத்துவிட வேண்டும். இப்படிச் செய்தால் ஒரு வாரத்தில் ஒரு நாள் கூட ஒரு மனிதனுக்கு வேலை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது. மீத நாட்களில் கஷ்டப்படாமல் சாப்பிடக்கூடும் எதுபோலவென்றால் தொழிலாளிகளுக்கு நாம் இப்போது தினம் ஒன்றுக்கு 8 மணி 6 மணி என்று திட்டம் போட்டு சட்டம் செய்கின்றோமல்லவா? இதையே வாரத்திற்கு இத்தனை மணி என்று திட்டம் போட்டு விட்டால் தீர்ந்ததல்லவா? அதுபோலவும் உபாத்தியாயர்களுக்கு ஒரு வாரத்திற்கு இத்தனை பீரியட் என்று கணக்குப் போடுவது போலவும் வாரத்தில் ஒரு மனிதன் இத்தனை மணி நேரம்தான் வேலை செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டோமேயானால் தொழிலாளிகள் கஷ்டம் தானாகவே நீங்கி விடும். அப்படிக்கில்லாமல் ஜட்கா வண்டி குதிரை போலவும் செக்குமாடு போலவும் வேலை வாங்கிக் கொண்டு அதன் பலன்களை யெல்லாம் வேலையை சிறிதும் செய்யாத கூட்டமாகிய புரோகிதர், முதலாளி, மிராசுதார் ஆகியவர்களே அனுபவித்தால் வேலை எப்படி கிடைக்கும்? சரியான கூலி எப்படி கிடைக்கும்? என்பதை யோசித்துப் பாருங்கள்.
ஆகவே சகோதரர்களே, நமது நாட்டுத் தொழில்விர்த்திக்கு கதர் இடையூறு என்றும், ஏழைகளுக்கு வயிற்றுப் பிழைப்புக்கு கதர் பயன்படவில்லை என்றும் கதரின் பேரால் விதித்திருக்கும் அதாவது கெஜம் 3 அணா பெறும்படியான துணியை 9 அணா போட்டு வாங்குவதினால் வாங்குகின்றவன் அக்கிரமமாகவும் நிர்பந்தமாகவும் நஷ்டப்படும் கெஜத்திற்கு ஆறணாவிலிருந்து சிறிது பாகமே தர்மத்திற்கு என்று ஏழைகளுக்குப் பயன்படுகின்றதென்றும் தர்மம் வேறு, கைத்தொழில் வேறு, பொருளாதார வியாபாரம் வேறு என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டுமென்றும் பொது உடைமை தத்துவதற்கு நமது நாட்டுக் கைத்தொழில் முறையும் புரோகிதன், முதலாளி, ஜமீன்தார், மேல்ஜாதி, கீழ்ஜாதி முறைகளே தான் முக்கிய விரோதிகளே தவிர வெள்ளைக்காரன் ஆட்சியே முக்கியமான தல்லவென்றும் ஆதலால், நீங்கள் இவைகளைக் கவனித்து யோசித்து உங்கள் அபிப்பிராயப்படி நடந்து கொள்வதில் உங்களுக்குப் பூரண உரிமை யுண்டு என்றும் இதுவரை எனக்குப் பட்டதைச் சொன்னேன் என்பதோடு இந்த ஊரில் இப்படி ஒரு சங்கம் ஏற்பட்டு இதனால் வர்த்தகர்கள் ஒற்றுமைப் படவும் மற்றும் ஷராப்பு வியாபாரிகளும் இதில் கலந்து கொண்டு இருப்பதுமான காரியம் மிகவும் போற்றத்தக்கதேயாகும். தலைவர் அவர்களும் இவ்வளவு தூரம் இதில் பங்கெடுத்து உங்களுக்கு அரிய உபதேசம் செய்தது போற்றத் தக்கதேயாகும்.
(குறிப்பு : 10-06-1931 அன்று ஈரோடு சுதேசி ஜவுளி வர்த்தக சங்க ஆண்டு விழாவில் ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 14.06.1931)