உலகம் முழுவதும் மார்ச்- 8 ஆம் நாள் சர்வதேச உழைக்கும் பெண்களின் உரிமை தினமாகக் கொண்டாடப்படுகிறது. காலப்போக்கில் இந்த தினம் சடங்குத் தனமானதாகவும், சம்பிரதாயமானதாகவும் நடத்தப்படுகிறது. ஆயிரக்கணக்கான பெண்கள், தங்களின் அடிப்படை உரிமைகளைப் பெற குருதி சிந்தி போராடிப் பெற்ற நாளே மார்ச் -8!. இந்த உண்மை மறைக்கப்பட்டு, கோலப்போட்டி, சமையல் போட்டி, அழகிப் போட்டி, நடனப்போட்டி, பாட்டுப்போட்டி என பெண்களின் சிந்தனை திட்டமிட்டு திசைதிருப்பப்பட்டு, பெண்ணடிமைச் சிந்தனைகள் வலுப்படுத்தப்படுகின்றன. அவர்களின் போராட்டக்குணமே மழுங்கடிக்கப்படுகிறது.
மகளிர் தினம் இன்று சில சலுகைகளுக்காக குரல் கொடுக்கும் நாளாகக் குறுகிப்போய்விட்டது. இப்போது, முதலாளித்துவ பெண்கள் அமைப்புகளும், ஏகாதிபத்திய சார்பு தன்னார்வுத் தொண்டு நிறுவனங்களும் இதை நடத்தி வருகின்றன.
ஆண்டாண்டுக் காலமாக நிலவி வரும் பெண்ணடிமைத்தனத்தைத் தீயிட்டுக் கொளுத்தவும், இதற்கு அடிப்படையான சமூக – பொருளாதார – அரசியல் – பண்பாடு – கலாச்சார காரணங்களை அடித்து நொறுக்கவும், போர்க்குரல் எழுப்ப வேண்டிய நாளே மகளிர்தினம்!
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெண்கள், தொழிற்சாலைகளில் 16 மணி நேரம் வேலை வாங்கப்பட்டனர். தாமதமாக வேலைக்கு வந்தாலும், கழிவறைகளில் அதிக நேரம் இருந்தாலும் கடுமையான அபராதம் விதிக்கப்பட்டனர். குழந்தைகள் கூட , ஜவுளித் துறையில், தயார் செய்த துணிகளில் உள்ள நூல்களை வெட்டும் வேலையைப் பல மணி நேரம் செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டனர். “நாங்கள் விலை குறைந்த துணிகளையே அணிந்தோம். மிக மோசமான குடிசைகளில் வாழ்ந்தோம் மலிவான, தரக்குறைவான உணவையே உண்டோம். எதிர்பார்ப்பதற்கு ஒன்றுமே இல்லை, மறுநாளாவது நன்றாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதற்குக் கூட எதுவுமே இல்லை.” – என நியூயார்க் நகரத்தில் ஜவுளித்துறையில் வேலைசெய்த பெண் தொழிலாளர்கள் தங்களின் வேதனைக் குரலை வெளிப்படுத்தினர்.
அமெரிக்காவில், நியூயார்க் நகரில் ஜவுளி ஆiலைகளில் பெண்கள் மூன்று டாலர் ஊதியத்திற்கு, வாரம் 81 மணி நேரம் வேலை செய்தனர். அதில், தங்கும் விடுதிக்கும், உணவிற்கும் ஒன்றேகால் டாலர் செலுத்த வேண்டும். பெண் தொழிலாளர்கள் வேலை ஆரம்பிப்பதற்கு முன்பே உணவை உட்கொண்டால் மந்தமாக வேலை செய்வார்கள் என்பதற்காக, முதலாளிகள் தொழிற்சாலையைத் திறக்கும் நேரத்தை பெண்களுக்காக அதிகாலை 5 மணிக்கு மாற்றினார்கள். பெண்களின் சிறு தவறுகளுக்கும் கூட கடுமையான தண்டனை கொடுத்தார்கள். தங்கள் உரிமைகளைக் கோரும் பெண்களைத் திறமையற்றவர்கள் என்றும், கட்டுப்பாடற்றவர்கள் என்றும் கூறி வேலையிலிருந்து விரட்டினர்.
போதிய உணவோ, சுகாதார வசதியோ பெண் தொழிலாளர்களுக்குக் கிடையாது. நோய் எதிர்ப்புச் சக்தியின்றி இரத்த சோகையால் பாதிக்கப்பட்டு மரணத்தின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டனர். ஆண்களுக்கு மட்டுமே தொழிற்சங்கம் மற்றும் வாக்குரிமை வழங்கப்பட்டிருந்தது. “ஆண் தொழிலாளர்களுக்கு இணையான ஊதியம் பெண் தொழிலாளர்களக்கும் வழங்கப்பட வேண்டும்; பணி நிலமைகள் மேம்பாடு செய்யப்படவேண்டும்; சனநாயக உரிமைகள் வழங்கப்படவேண்டும்”-முதலிய கோரிக்கைகளை முன் வைத்து அமெரிக்காவிலுள்ள மான்ஹெட்டன் நகரில் 1910ஆம் ஆண்டு மார்ச் - 8 ஆம் நாள் ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள் ஆர்த்தெழுந்து, போர்க்குணம் மிக்க ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டம் உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் வர்க்கப் பெண்களை எழுச்சிக்கொள்ளச் செய்தது. இதுவே, சர்வதேச மகளிர் தினம் உருவாக வழி ஏற்படுத்தியது.
“சர்வதேச பொது உடைமை இயக்கத் தலைவர்- ஆணாதிக்கத்தைத் தகர்க்க அயராது போராடியவர் - பெண் விடுதலைக்காக விஞ்ஞானத் தத்துவங்களை உருவாக்கியவர் - உலக ஏகாதிபத்திய யுத்தங்களுக்கெதிராகப் போராடியவர்- சர்வதேச கம்யூனிஸ்ட் பெண்கள் இயக்கத்தை உருவாக்கியவர் - சுரண்டப்படும் மக்களின் விடுதலைக்காகப் போராடியவர்-பெண் விடுதலைக்காகத் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தவர்- என்னும் பல பெருமைகளுக்குரியவர் ‘கிளாரா ஜெட்கின்’.” கோபன்கெகன் நகரில் நடைபெற்ற சர்வதேச சோசலிசப் பெண்கள் அமைப்பின் சார்பில் 1910 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மாநாட்டில் மார்ச் - 8, உலக மகளிர் தினமாக கொண்டாடுவதற்கான ஒரு தீர்மானத்தை ‘கிளாரா ஜெட்கின்’ முன் மொழிந்தார். அத்தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டு மார்ச் -8 சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், 10 மணி நேரம் வேலை, உழைப்பிற்கேற்ற ஊதியம், வாக்குரிமை முதலிய கோரிக்கைகளை முன்வைத்து 1908 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் மிகப் பெரும் அணிவகுப்பை நடத்தினர். அக்கால கட்டத்தில் ஆயத்த ஆடை தயாரிப்புத் தொழிற்சாலைகளில் பணிபுரிந்த பெண் தொழிலாளர்களின் போராட்டம் அமெரிக்க வரலாற்றில் புகழ் வாய்ந்ததாகும். ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிற்சாலைகளில் தீ விபத்துக்கள் அடிக்கடி நடைபெறும். வெளிச்சம் மிகவும் குறைவாக இருக்கும். காற்றோட்ட வசதி சிறிதும் இருக்காது, சுற்றுச்சூழலும் மாசுபட்டு இருக்கும். இயந்திரங்கள் வெளிப்படுத்தும் அடங்காத இரைச்சல் செவிப்பறைகளைக் கிழிக்கும். பெண் தொழிலாளர்கள் பேசுவதும், சிரிப்பதும், பாடுவதும், பார்ப்பதும் கூட தடைசெய்யப்பட்டன’ தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டன. தைக்கும் துணிகளின் மீது எண்ணெய்க் கறைகள் பட்டாலோ தையல் சரியாக இல்லையென்றாலோ அபராதம் செலுத்தவேண்டிய அவலம். மிகை நேர உழைப்பிற்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. உழைப்புச் சுரண்டல் உச்ச கட்டமாக நடைபெற்று வந்தது.
தொழிற்சங்கங்களும், தொழிற்சங்கச் சட்டங்களும் கூட, பெண் தொழிலாளர்களுக்கு எதிராகவே அமைந்திருந்தன. நீதிமன்ற நீதிபதிகள் முதலாளிகளுக்குச் சாதகமாக செயல்பட்டு வந்தனர். “இறைவனுக்கும், இயற்கைக்கும் எதிராக நீங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், ஆணின் வெற்றி வியர்வையிலிருந்து தனது ரொட்டியைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டுமென்ற நீதியின் கோட்பாட்டிற்கு எதிராகவும், இறைவனுக்கு எதிராகவும் ஏன் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டீர்கள்?” என்ற எச்சரிக்கை ஒரு வழக்கின் தீர்ப்பாக ஆணாதிக்க குணம் படைத்த நீதிபதியிடமிருந்து வெளிவந்தது.
அமெரிக்காவிலுள்ள ட்ரயாங்கில் என்ற நகரத்தில் உள்ள தொழிற்சாலையில் 1911 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் நாள் மிகவும் கொடூரமான தீ விபத்து ஏற்பட்டது. அத்தொழிற்சாலையில், தொழிலாளர்கள் இடைவிடாது தொடர்ந்து வேலை செய்யவேண்டும் என்பதற்காக ஆபத்து நேரங்களில் வெளியேறுவதற்கான கதவுகளை வெளிப்புறத்தில் பூட்டிவிட்டதால், கட்டிடத்தின் மேற்பகுதியில் இருந்த பெண்களைச் சுற்றி வளைத்த தீப்பிழம்பு 146 பெண் தொழிலாளர்களின் உயிரைப் பலிகொண்டது. அவர்களில் 13 வயதிற்கும் 20 வயதிற்கும் உட்பட்ட இளம் பெண்கள் அதிகம் ஆவர். மேலும், அந்த பெண் தொழிலாளர்கள் அமெரிக்காவிற்கு, இத்தாலி, இந்தியா, இஸ்ரேல் போன்ற நாடுகளிலிருந்து குடிபெயர்ந்தவர்கள். இப்படி, கொடூரமான முறையில் பெண்கள் தீயில் பலியானது உலகையே உலுக்கியது. அமெரிக்காவில் நடைமுறையில் இருந்த தொழிற்சங்கச் சட்டங்களின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த துயரமான பேரழிவு நடைபெறுவதற்குக் காரணமான தொழிற்சாலை முதலாளிகளையும், அரசின் சட்டங்களையும், சர்வதேச பெண்கள் அமைப்பு கேள்விக்குள்ளாக்கியது.
அன்று ரத்தம் சிந்திப் போராடி, சாதித்த, ‘8 மணி நேர வேலை’ என்னும் நடைமுறையை, இன்று சுரண்டும் கும்பல் மீண்டும் தனது கொள்ளை லாபவெறிக்கு பலியாக்கி வருகிறது. முதலாளித்துவ சமூகம், பெண்களின் உழைப்பை மலிவாகவும், எளிதாகவும் சுரண்டி வருகிறது.
இன்று உலகம் முழுவதும், உலகமயம், தாராளமயம், தனியார்மயம் முதலிய கொள்கைகள் அமல்படுத்தப்படுவதால், சந்தையில் பெண்கள் ஒரு வியாபாரப் பண்டமாக்கப்பட்டு, சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டுத் தளங்களில் அவர்களின் வாழ்க்கை கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. பெண்களின் வேலை நேரம் நீட்டிக்கப்படுகிறது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், பெண்களின் உழைப்பைச் சுரண்டும் மண்டலங்களாகவே திகழ்கின்றன. இம்மண்டலங்களில் உள்நாட்டு சட்டப் பாதுகாப்புகள் ஏதும் நடைமுறைப்படுத்தப்படாது. சங்கம் அமைக்கும் உரிமை மறுக்கப்படும். பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, நியாயமான ஊதியம் என்பன கிடையா!. உழைப்புச் சுரண்டல் மட்டுமே அதிகரித்து வருகிறது.
உணவுப் பயிர் சாகுபடி என்பது புறக்கணிக்கப்பட்டு, பணப்பயிர் சாகுபடி என்பது விவசாயத்தில் புகுத்தப்படுவதால், பெண்களுக்கான வேலை வாய்ப்பு விவசாயத்துறையில் குறைந்து வருகிறது. இதனால் விவசாயக் கூலிப் பெண்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தில் தள்ளப்படுகின்றனர். விவசாயிகள் பூச்சிமருந்து மற்றும் உரம், விதைகள் ஆகியவற்றை வாங்கியதற்கான கடனைத் திருப்பி கொடுக்க முடியாமல், வாங்கிய பூச்சி மருந்தைக் குடித்தே தற்கொலை செய்து கொள்ளும் துயரங்கள் நாளும் தொடர்கதையாகின்றன. இதனால் பெண்கள் குடும்பச் சுமையைத் தாங்கி, வறுமையில் வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
முந்திரி, கயிறு, கதர், பீடி, கைத்தறி, மீன்பிடிப்பு, தோல் பதனிடும் தொழில், தோல்பொருள் உற்பத்தி, பட்டு உற்பத்தி, கம்பளி உற்பத்தி போன்ற பாரம்பரியத் தொழில்களில் பெண்களுக்கான வேலை வாய்ப்பும் உலகமயக் கொள்கைகளால் பறிபோகின்றது.
பஞ்சாலைகள், விசைத்தறிகள், கைத்தறிகள் போன்ற தொழில்களிலும், இந்தியாவில் உள்ள குடிசைத் தொழில்கள் முதலியவற்றில் பன்னாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டதால், பெண்களுக்கான வேலை வாய்ப்பே இல்லாத நிலை உருவாகிறது.
உலகமயமாக்கல் பெண்களின் வேலைவாய்ப்பைப் பறிப்பதுடன், தற்காலிக, ஒப்பந்த முறையிலான வேலைகளை வழங்கி அவர்களின் உழைப்பைச் சுரண்டுகிறது. மேலும் பெண்கள் கவர்ச்சிகரமான பாலியல் பொருட்களாக விளம்பரம் செய்யப்பட்டு உலகம் முழுவதும் விற்கப்படுகின்றனர். பெண்களின் மீதான வன்முறைத் தாக்குதல்களும் நாளும் வளர்ந்து வருகின்றன. பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. பெண்களின் கண்ணியம், சுயமரியாதை, விடுதலை, சுயமதிப்பு, சமூக அங்கீகாரம் ஆகியவைகள் மறுக்கப்படுகின்றன. பெண்கள், நவீன கால அடிமைகளாக நடத்தப்படுகின்றனர்.
பெண்களின் வாழ்க்கைக்கு அடிப்படையான உணவிற்கு உத்திரவாதம், கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, பாதுகாப்பு, நில உரிமை, சொத்துரிமை, அரசியலுரிமை, பெண்களுக்குச் சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் 33 சதவீதம் இட ஒதுக்கீடு, வரதட்சனை ஒழிப்பு, பெண் சிசுக்கொலைத் தடுப்பு, குடும்ப வன்முறை தடுப்பு, பணி இடங்களில் பாலியல் சுரண்டல் ஒழிப்பு முதலிய அடிப்படையான உரிமைகளைப் பெறுவதற்கு பெண்கள் போராட வேண்டியது வரலாற்றுத் தேவை. உலக மகளிர் தினத்தில் பெண்கள் மேற்கண்ட கோரிக்கைகளுக்காக அணிதிரன்டு போராட உறுதியேற்க வேண்டும்!
- பி.தயாளன்