மதில் மேல் பூனையாக
கவனமாய் நடக்கிறேன்..
திக்கெட்டும் பயமே..
இருப்பினும் சுகமே...
எங்கோ செய்யும் உணவின்
வாசனை எம்முள்ளம் தொட்டு
அலைபாய்ந்திடவே
அகமகிழ்வாய்
கம்பீரமாய் அலைகிறேன்...
ஒற்றைக்கோப்பையில்
பாலை வைத்து
எனை பிடிக்கவோ அடிக்கவோ
கொல்லவோ காத்திருக்கும்
மனங்களோடு
சுண்டக்காய்ச்சிய பாலோ
எனை சுண்டி இழுக்கிறது...
மனம் மேல் மனிதனாக
மலர்ந்து நடக்கிறேன்..
திக்கெட்டும் திகிலே...
இருப்பினும் இனிப்பே...
எங்கோ எனை கடக்கும்
அவளின் வாசனையில்
எம்மனம் சென்றிடவே
அவளின் அனுமதியில்
ஒற்றைக்கால் கொக்காய்
அவளை கம்பீரமாய்
மணக்கிறேன்...
ஊரார்கள் சுற்றங்கள்
உறவின் முறைகள்
சாதியம் பேசிப்பேசி
எம்மிருவரைப்பிரிக்க
ஆயிரம் வலைகளோடு
எம் இரத்த உறவுகளால்
இணக்கமாய் இழுத்திடத்திட்டம்...
அங்கே வேண்டுமானால்
மதில் மேல் பூனை
மாட்டிக்கொள்ளும்..
இங்கே மனம் மேல் மனிதர்களாய்
நல்லகம் கொண்ட நாங்கள்
அகப்பட மட்டுமே மாட்டோம்!

- ம.சக்திவேலாயுதம்

Pin It