நன்றாய் வளர்ந்தால்

எட்டு சொச்சம்

என் உயரம்

முடியையும் சேர்த்துப் பார்த்தால்

முக்கால் பனை இருப்பேன்.

 

தலைவிரி கோலம்தான் எப்போதும்

ஆனாலும் நான் அரக்கிஇல்லை.

 

இடுப்பை வெட்டி நட்டாலும்

இல்லை

ஒருவிரல் வெட்டி நட்டாலும்

இன்னொன்றாய் உயிர்ப்பேன்

ஆனாலும் நான் அரக்கன் இல்லை.

 

தோகை உண்டு எனக்கு

ஆனாலும் நான் மயில் இல்லை.

 

நுனிப்புல் மேய்வதில்

நுட்பம் கொண்டவன்

அடிவரை மேய

ஆசைகொண்டது

என்னிடம் மட்டுமே.

 

காற்றுக்கும் எனக்கும். ஒரு

காதல் உண்டு

காற்று என்னைக்

கட்டித் தழுவினால்

உல்லாச நடனம்

உடனே பிறக்கும்.

 

உடலைப் பார்த்து இச்சைக்கொள்ளும்

விடலைப்பருவத்தில் என்னை

வேண்டாம் என்பார் உண்டோ?

இளமையின் இன்னொரு வடிவம்

நான்.

 

அதனால்தான்

மன்மதன்கூட என்னை

வில்லாய் வளைக்கிறான்,

எல்லாம் துறந்த பட்டினத்தார்கூட

என்னைத் துறக்க இயலவில்லையே!

 

குறித்துக் கொள்ளுங்கள்

கரும்பு வெட்டிய வயலில்

கனல் இட்டுக் கொளுத்திய பின்

திரும்பிய திசையெல்லாம்

தெரிவது சாம்பல்தான்.

 

இருந்தாலும்

நீர் பாய்ச்சி

நெடுவயல் நிறைய

மீண்டும் துளிர்ப்பேன்

தன்னம்பிக்கையின்

இன்னொரு வடிவம் நான் 

- ஆ. திருநாவுக்கரசன்