நீ பதின்மத்தில் சிரிக்கிற
படமொன்று காண நேர்ந்தது...
உனது சாயல்களை
அதில் தேடிக்களித்த பின்
உன் பிரதிமையை
என் பால்யத்தின் அறைகளில்
ஒரு தாய் குளவியின் லாவகத்தோடு
கொண்டு சேர்க்கிறேன்...
என்னோடு இறகு முளைக்கும்போது
எப்படியிருப்பாய் நீ என்று
காண வேண்டும்...
   .........

உனக்கு எல்லாரும்
இருந்திருக்கிறார்கள் சீராட்ட..
என் பால்யம் ஒரு முள்பாதை
நீ விவரித்த அன்றொரு நாள்
நான் தூங்கவில்லை...
உன்னிடம் எப்படி சொல்ல?!
நீ பட்டினியுடன் தூங்கிய ஒரு இரவில்
கனவில் பூ கொணர்ந்தது நான்தான்...
     ..........
உன் குடும்ப படம்..
அந்த கனகாம்பரம் வைத்த
பெண் பிள்ளையை மடி மீது
வைத்திருக்கிறாயே!
அவள் ஒன்றும் குழந்தையில்லை இப்பொழுது..
இறக்கிவிடு
     .............

வாழ்ந்த வீட்டை கடந்து செல்வது போலத்தான்
தலை குனிந்து செல்கிறேன்
நீ எதிர் வரும் வேளை...
    .............
பிஞ்சும் பூவும் வைத்து
பட்டுப்போன மரம்
இன்னும் பார்க்கும்போதெல்லாம்
பழுக்கிறது உன் முகம்...
    ............
தின்னாமல் மண்ணில் விழுந்த பண்டத்தை
எறும்புகள் இழுத்துசெல்வது பொறுக்காமல்
அவசரமாய் கல்லெடுத்து நசுக்கும்
சிறுவனை நான் என்பேன்...
    ..........
தரை வீழ்ந்த பறவைக்கூடு
இன்று இட தயாராய் இருந்த முட்டையை
செரித்திருக்குமா குருவி...
    ............
எப்போதும் எல்லாரையும்
திருப்திபடுத்தும் விலைமகள் மனநிலை
உனக்கு நன்றன்று கண்மணி...
வெறுக்க கற்றுத் தருகிறேன் வா!

- ப்ரிம்யா க்ராஸ்வின்

Pin It