நக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (21)

தோழர். கிரண் சந்திரா அவர்கள் இந்திய கட்டற்ற மென்பொருள் இயக்கத்தின் (FSMI-Free software movement of India) பொதுச் செயலாளராக செயல்படுகிறார். 2010 மார்ச் 21ஆம் நாள் பெங்களூரில் நடைபெற்ற கட்டற்ற மென்பொருளுக்கான தேசிய மாநாட்டின் போது இந்தியக் கட்டற்ற மென்பொருள் இயக்கம் ஏற்படுத்தப்பட்டது. இணைய உலகின் பிரிவினைகளுக்கு எதிராகவும், இணையப் பயனாளர்களின் தகவல் பாதுகாப்பிற்காகவும், ஜனநாயக உரிமைகளுக்காகவும் இந்தியக் கட்டற்ற மென்பொருள் இயக்கம் தொடர்ந்து போராடி வருகிறது. தமிழ்நாட்டில் இதன் பகுதி அமைப்பாக தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை (FSFN-Free software foundation Tamilnadu) செயல்பட்டு வருகிறது.

kiran chandraதலைப்பு: இணைய ஏகபோகங்கள்

தகவல் தொழில்நுட்பம் மக்களின் தகவல் பரிமாற்றத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மேம்பட்ட ஜனநாயக செயல்முறைக்கான தளமாக கருதப்படுகிறது. சமூக அணிதிரட்டலுக்கான இடமாகவும் கருதப்படுகிறது ஆனால் இன்று அதன் நிலை என்ன? முதலாளித்துவத்தில் இணைய உலகத்தின் ஜனநாயகம் சவாலிடப்படுகிறது, சோதனைக்குட்படுத்தப்படுகிறது. இணையம் அனைவருக்கான தகவல் தொடர்புக்கும், கல்விக்கும் சமவாய்ப்புகளுடன் சமதளத்தை உருவாக்குவது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ள போதும். இணைய தகவல் பரிமாற்றம் என்பது லாபத்தை அதிகரிப்பதற்கான வழிமுறையாகவே கையாளப்படுகிறது.

அமெரிக்காவில் ராணுவத்திற்காக கட்டமைக்கப்பட்ட தகவல் வலையமைப்பிலிருந்தே இணையத் தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மூலம் லாபத்தை அதிகரிப்பதற்கான புதிய உலகை உருவாக்கும் விருப்பமும் ஏற்பட்டது.

காப்புரிமை, வர்த்தக முத்திரை அல்லது பதிப்புரிமை போன்ற நேரடியாக சரக்குப் பண்டங்களாக உணர இயலாத சொத்துக்கள் அருவமான சொத்துக்கள் (intangible assets) என அழைக்கப்படுகின்றன. தகவல் பரிமாற்றம் என்பதும் அருவமான சொத்தாக உள்ளது. 1990களுக்கு முன் அருவமான சொத்துக்களின் மதிப்பு மிகவும் குறைவு. 1995ல் உலக வர்த்தக மையத்தின் உதவியுடன் அருவமான சொத்துக்களின் மதிப்பு அதிகரித்துள்ளது. உலகின் மிகப்பெரிய பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு பல பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. பங்குச் சந்தை சார் அருவ சொத்துக்களின் மதிப்பு மிகவும் அதிகரித்துள்ளது.

2017ல் ஆப்பிள், ஆல்ஃபபட், மைக்ரோ சாஃப்ட், அமேசான், ஃபேஸ்புக், ஆகிய ஐந்து நிறுவனங்கள் (FAAMG) மிகப்பெரும் இணையதள ஏகபோகங்களாகியுள்ளன. இந்த ஐந்து பெரு நிறுவனங்களின் தற்போதைய சந்தை மதிப்பு 8 லட்சம் கோடி டாலராக அதிகரித்து, உலகளவிலான ஜிடிபி மதிப்பில் அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்து மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்நிறுவனங்கள் எவற்றை சரக்காக்கியுள்ளனர்? தகவல்களையும், தகவல் தொடர்பையுமே சரக்காக்கியுள்ளனர்.

1990ல் 12 மில்லியன் கைபேசிகளே பயன்படுத்தப்பட்டன. 2009ல் திறன்மிக்க கைபேசிகள் பயன்பாட்டிற்கு வந்தன. 2016ல் 22. 9 பில்லியன் சாதனங்கள் பயன்படுத்தப்பட்டன. 2020ல் 50. 1 பில்லியன் சாதனங்கள் பயன்படுத்தப்பட்டன. 2009ல் நவீன நாகரிகத்தின் விளைவாகத் தகவல் தொழில் நுட்பமும் நுகர்வு வரிசையில் இணைந்தது. 2009ல் தகவல்களின் அளவு இரண்டு மடங்கானது. திறன் மிகு தொலைபேசிகள் கண்காணிப்பு சாதனங்களாக பயன்படுத்தப்பட்டன.

5ஜி என்பது ஒரு விபத்து அல்ல. 1ஜியை விட 5ஜி 100அளவு விரைவாக செயல்படும். மோர் விதியின் படி கணினியின் செயல்பாட்டுத் திறன்பாடு ஒவ்வொரு 16 மாதங்களுக்கு ஒரு முறை இரட்டிப்பாகிறது.

 உலகையே 8 சாதனங்கள் கண்காணித்துக் கொண்டிருக்கின்றன. இணைய ஐபி முகவரிகள், யு. ஆர். எல்கள் அமெரிக்க வணிகத்துறையின் கண்காணிப்பிலும், கட்டுப்பாட்டிலும் உள்ளன. உலகின் அனைத்து தகவல் போக்குவரத்தும் அமெரிக்காவின் வழியில் தான் போவதும் வருவதுமாக அமைந்துள்ளது.

கருத்துகள் கணித வடிவில் குறியீடுகளாக்கப்பட்டுள்ளன. காப்பீட்டு முன்பணம், கடன் தர மதிப்பீடு, சிறை தண்டனை என அனைத்துமே மதிப்பீடுகளாக, அளவீடுகளாக மாற்றப்படுகின்றன. கருத்துகளுக்கும், கணித மாதிரிகளுக்கும் காப்புரிமை பெற முடியும்.

மென்பொருளும், வடிவாக்கமும், அறிவுசார் சொத்துக்களாக காப்புரிமைகளைக் கொண்டுள்ளன. எந்த ஒரு புதிய கருத்தாக்கமும், அதன் பயன்பாடும் காப்புரிமையை பெறுகின்றன. இணையம் என்பது சுதந்திரமான திறந்த வெளியாக இல்லாமல் அடைப்புகள் போல் செயல்படுகிறது. தனியார் தகவல்களை அடைப்புக்குள் மூடுவதற்கான வெளியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இணையத்தின் களங்கள்(domain) உரிமையாக்கப்படவில்லை, பயன்படுத்த மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடக தளங்கள் ஒரு சில ஏகபோகங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவற்றின் முற்போக்குத் தன்மை கடந்தகாலத்துக்குரியவையாகி விட்டது. இணைய ஏகபோகங்கள் முற்றிலும் லாப அடிப்படையிலே செயல்படுகின்றன. அமெரிக்க இணைய ஏகபோகங்கள் நுகர்வோரின் பழக்கவழக்கங்கள், தேர்வுகள் குறித்த தகவல்களை சேமிக்கின்றன. சாதி, உட்சாதி, மதம், இனம், இனம், மொழி அடையாளங்களின் அடிப்படையில் இணையப் பயனாளர்கள் குறித்த தகவல்களை சேகரித்து அவற்றை சரக்காக விளம்பரதாரர்களுக்கு விற்கின்றன. வணிக நலன்களுக்கு ஏற்ப தனிநபர்களின் நடத்தையை மாற்றுவதற்காக, தரவுகள், கண்காணிக்கப்படுகிறது ஆய்வு செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

உலகளவில் 200 கோடிக்கு மேற்பட்டோர் ஆண்டிராய்டு செயலிகளைக் கொண்ட கைபேசிகளை பயன்படுத்துகிறார்கள். 270 கோடி பேர் ஃபேஸ்புக் பயன்படுத்துகிறார்கள். 150 கோடி பேர் வாட்ஸப் பயன்படுத்துகிறார்கள். உலகளவில் ஐம்பது பில்லியன் கைபேசி சாதனங்களில் சேமித்துவைக்கப்பட்ட தகவல்கள் சமூக ஊடகங்கள் மூலம் பெறப்படும் தரவுகள் அனைத்தும் இணைய ஏகபோகங்களால் சேமித்து வைக்கப்பட்டு வர்த்தக நோக்கங்களுக்காக தவறான முறையில் பயன்படுத்தப்படுகின்றன. உலகெங்கிலும் உள்ள மக்கள் இந்தத் தரவுகளை உருவாக்குகிறார்கள். சமூக ஊடகங்களில் அவர்கள் பகிரும் பதிவுகள், உரைகள், படங்கள், காணொளிகள் ஆகியவை அனைத்துமே சேமிக்கப்பட்டு ஏகபோகங்களின் தேவைக்கேற்ப வடிகட்டி பிரித்து எடுக்கப்படுகிறது. கருநிலையிலிருந்தே இன்றைய தலைமுறையினர் குறித்த அனைத்துத் தகவல்களும் சேமிக்கப்படுகிறது.

தகவல்கள் அனைத்தும் நுகர்வோரின் பழக்கவழக்கங்களை மாற்றும்விதமாக ஆவணப் படுத்தப்படுகின்றன. தகவல் சேமிப்பதற்கான செலவு மிகவும் மலிவாகிவிட்டது. அனைத்து விதமான தரவுகளும் சேமிக்கப்படுகின்றன, தேவைக்கேற்ப தரவுகளை பிரித்து/வடிகட்டி எடுக்கும் நிரல்நெறிகள் பயன்படுத்தப்படுகின்றன. இணையத்தில் உள்ள தரவுகளின் மொத்த அளவு 35 செடா பைட்கள். ஒரு செடா பைட் என்பது 1 டிரில்லியன் கிகாபைட். ஸ்னோடன் வெளியிட்ட தரவுகளின் அளவு 1 யொட்டா பைட்டு.

கைபேசி/இணைய பயனாளர்களின் பெயர், வயது, உயரம், கல்வித்தகுதி, தொழில் ஆகியவை குறித்த தகவல்கள் மட்டும் சேமிக்கப்படுவதில்லை. அவர்கள் எங்கெங்கு செல்கிறீர்கள், அங்கே எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள், அவர்களது வாடிக்கையாளர்கள், அவர்களது பழக்க வழக்கங்கள், நடத்தை, நுகர்வு விருப்பு, வேறுப்புகள், இவை அனைத்துமே இணைய ஏகபோகங்களால் சேகரிக்கப்பட்டு சரக்காக்கப்பட்டு விளம்பரதாரர்களுக்கு விற்கப்படுகிறது.

மக்களின் விருப்பு, வெறுப்பு, தேவைகள் சந்தையை நிர்ணயிப்பதில்லை. சந்தையே மக்களின் விருப்பு, வெறுப்பு, தேவைகளை நிர்ணயிக்கமாறு விளம்பரங்களும், வணிக உத்திகளும் ஏற்படுத்தப்படுகின்றன. நுகர்வோரின் பொது அபிப்பிராயங்களும், பழக்கவழக்கங்களும் ஏகபோகங்களால் மாற்றப்படுகின்றன. அவர்கள் எதைத் தேர்ந்தெடுக்கவேண்டும், என்ன சாப்பிடவேண்டும், என்னென்ன பொருட்களை எங்கெங்கே வாங்கவேண்டும், என்ன படம் பார்க்க வேண்டும், எந்தக் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும். எந்தக் கட்சிக்கு ஓட்டு போடவேண்டும் என்பதை இணைய ஏகபோகங்களே நிர்ணயிக்கின்றன.

இணையப் பயனாளர்கள்/நுகர்வோரின் குடும்பப் பெயரின் அடிப்படையில் தகவல்களை பிரித்தெடுக்கும் நிரல் நெறிமுறை பயன்படுத்தப்படுகிறது. வாட்ஸப்பால் பயனாளர்களின் வர்க்கம், சாதியை கண்டறிய முடியும். மக்கள்/நுகர்வோருடைய பழக்க வழக்கங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அவர்களின் பணப்பையின் கணமும் அறிந்து கொள்ளப்படுகிறது. ஃபேஸ்புக் நிறுவனம் வட இந்தியாவின் பூமிகார் சாதியின் 56 உள்சாதிகள் பற்றிய தகவல்களை சேர்த்துள்ளது. ஃபேஸ்புக் தனிநபர் குறித்த தகவல்களையும், அந்தரங்க நிகழ்வுகளையும் விற்பனை செய்ததை ஸ்னொடென் அம்பலப்படுத்தி உள்ளார்.

 இணையத்தில் சமூக வலைதளங்களில் விளம்பரங்களை வடிவமைத்து பரப்பும் போது அதை யார் பார்க்கவேண்டும், யார் பார்க்கக் கூடாது என்று வடிகட்டும் விதமாக நிரல் நெறிமுறை இயற்றப்படுகிறது. உதாரணமாக தகவல்களை தலித்துகளுக்கும், விவசாயிகளுக்கும் தெரியாதவாறு வடிகட்டி அனுப்பமுடியும்.

இணையதளங்களில் தகவல்களை, பொருளை விற்பனை செய்வதற்கான விளம்பரங்களை ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே அனுப்புமாறு தேர்வு செய்ய முடியும் அல்லது பொருளாதார வசதியின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு மட்டுமே அந்தத் தகவலை பரவுமாறு செய்ய முடியும். ஒரு பொருள் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது குறித்து ஒரு வகுப்பினருக்கு எந்தத் தகவலும் செல்லாத வகையில் தடுக்க முடியும். இத்தகைய வரம்பிடப்படும் விளம்பரங்கள் ஜனநாயகத்தைக் கேள்விக்கு உள்ளாக்குகின்றன. ஒருவர் ஒரு புதிய சரக்குப் பொருளை வாங்குகிறாரா, இல்லையா என்பது வேறு விசயம் ஆனால் அத்தகைய பொருள் விற்பனைக்கு உள்ளது என்பதை அறிந்து கொள்ளும் உரிமை அனைவருக்கும் உள்ளது. அத்தகைய உரிமையை இணைய ஏகபோக நிறுவனங்கள் மக்களுக்கு அளிக்கவில்லை. இந்த ஏகபோக நிறுவனங்கள் அமைப்புகள் சமூகவலைதளங்களில் மக்களை ஒருங்கிணைக்கவோ, அமைப்பாகத் திரட்டவோ அனுமதிப்பதில்லை. அவை மக்களிடையே சமூகப் பொருளாதார அடிப்படையிலும், சாதி, மத, இன அடிப்படையிலும் பல வேலிகளையும், சுவர்களையும் ஏற்படுத்தி பிரிவினை செய்யும் விதத்திலே செயல்படுத்தப்படுகின்றன.

கண்காணிப்பு முதலாளித்துவத்தின் மாதிரிகளாகத்தான் கூகுளும், ஃபேஸ்புக்கும் செயல்படுகின்றன. அரசின் ராணுவ தொழில்மையங்களும், இணைய ஏகபோகங்களும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. பேரழிவை ஏற்படுத்தும் கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. கண்காணிக்கும் முதலாளித்துவத்தில், தொழில்நுட்பம் என்பது நடுநிலைத் தன்மையுடையதாக, அனைவருக்கும் சமானமானதாக இல்லை. தொழில் நுட்பமும் அரசியலாகவும், ஆட்சி செய்யும் வகுப்பின் சாதனமாகவும் உள்ளது.

இணைய ராணுவ தொழில் கூட்டமைப்புகளில் குற்றம் இழைப்பதற்கான கருவிகள் மீது அரசு முகமையாளர்கள் முழு கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளனர். உதாரணமாக கார்கள், வாகனங்களை கணினியுடனும், இணையத்துடன் தொடர்பு ஏற்படுத்தி ஸிடியரிங்கை கட்டுப்படுத்த முடியும், விபத்தையும் ஏற்படுத்தவும் முடியும்.

தற்போது சேவைத்துறையிலும் தானியங்கி தொழில் நுட்பம் செயல்படுத்தப்படுகிறது. வங்கிக் கடன் அளித்தல், தரம் நிர்ணயித்தல் ஆகிய சேவைகள் கூட தானியங்கி முறையில் செயல்படுத்தப்படுகிறது. அமேசன் தற்போது வால்மார்ட்டை விட 2. 5 மடங்கு அதிக சந்தை மதிப்புடையதாக உயர்ந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு அழிவேற்படுத்தும் போக்குடன் செயல்படுத்தப்படுகிறது. வறியவர்களையும், எளியவர்களையும் வஞ்சித்து தண்டிக்கும் போக்கு காணப்படுகிறது. செயற்கை நுண்ணறிவால் மட்டுமே நாம் நினைக்கும் சமூகத்தைக் கட்டமைக்க முடியாது. தொழில் நுட்பங்கள் மோசடி செய்யவே பயன்படுத்தப்படுகின்றன.

சமூக ஊடக தளங்கள், அரசியல் கட்சிகளிடமோ அதன் விளம்பரதாரர்களிடமோ பணத்தைப் பெற்று பொதுமக்களின் கருத்தை ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக மாற்றுவதற்கான பிரச்சார ஊடகமாக செயல்படுத்தப்படுகின்றன. 2016ல் லண்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் பேஸ்புக் நிறுவனத்திடமிருந்து பெற்ற 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான அரசியல் விளம்பரங்களுக்கு பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களின் நிரல்நெறிகளை மாற்ற பாஜக அதிக பணம் அளித்துள்ளது. சீனாவில் கூகுள், ஃபேஸ்புக் போன்ற இணைய ஏகபோகங்கள் ச பயன்படுத்தப்படவில்லை. சீனாவிலிருந்து வரும் தகவல்கள் தணிக்கை செய்யப்படுகின்றன. இந்தியாவில் இயங்கும் இணையதளத்திற்கான உள்கட்டமைப்பு நம்மிடம் இல்லை.

இயந்திர கற்றல் வழிமுறைகளில் உள்ள செயற்கை நுண்ணறிவின் நுட்பங்களை, சமூகத்தின் நலன்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படவேண்டுமே தவிர, வர்த்தகநலன்களுக்காக மக்களின் கருத்துக்களையும், பழக்கவழக்கங்களையும் மோசடியான முறையில் மாற்றுவதற்கு அல்ல. நிரல்நிறை. எவ்வழிகளில் வேலை செய்கிறது என்ற அறிவியலை பொதுமைப்படுத்த வேண்டும். எந்திர கற்றலையும், செயற்கை நுண்ணறிவையும் பொதுமைப்படுத்த வேண்டும்.

சமூகத்தில் வர்க்கங்கள் இருக்கும் போது உலகளாவிய நெறி, அறம் என்ற ஒன்று இருப்பதில்லை. உலகளாவிய சமூக அறிவியல் என்ற ஒன்றும் இருப்பதில்லை.

பொருளாதார ஆற்றல் மிக்க இணைய ஏகபோகங்கள் லாபங்களுக்காக ஜனநாயக நெறிகளை குழிதோண்டிப் புதைக்கின்றன. இவற்றின் பிடியிலிருந்து மக்களை விடுவிப்பதன் மூலமே ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும்.

Pin It