அறிவின் இலக்கணம் அண்ணல் அம்பேத்கர்!
அஞ்சாமைப் புலிப்போத்து அவரன்றி வேறுயார்?
திறமைகள் பலவற்றின் மொத்தத் தொகுப்பு
தீண்டாமை மீதில் தீயாய்க் கொதிப்பு
இந்துச் சனாதனத்தின் தோலை உரித்தார்
ஏராளச் சாத்திரக் கேட்டை எரித்தார்
தொந்தி பெருத்த பூணூலைப் பழித்தார்
தொகையாய் வேதியப் புளுகுகள் ஒழித்தார்
காந்தியின் பிற்போக்குத் தனங்கள் சாடினார்
கள்ளப் பார்ப்பனர் இவர்க்கஞ்சி ஓடினார்
ஏந்தல் எமக்கு மட்டுமா? அன்னார்
எல்லோர்க்கு மான ஈடிலாத் தலைவர்
பார்ப்பனியம் இங்கு முதற்குறை என்றால்
பாழ் முதலாளியம் அடுத்தகே(டு) என்றார்
வேர்ப்புழு சாதியம் வேண்டா முதலாளியம்
வீழட்டும் அடியோடு என்றே முழங்கினார்.
ஆழ்ந்த ஞானம் அனைத்திலும் வெளிப்படை
அடித்தட்டு மக்கள்மேல் நீங்காப் பாசம்
சூழ்ந்த பகையைத் துணிந்தே எதிர்த்தார்
தோல்விகள் தம்மில் வெற்றிப்பூப் பறித்தார்
திண்ணம்! நமது திங்கள்வான் கதிரோன்
சேர்ந்த பொருள்தான் அண்ணல் அம்பேத்கர்
அண்ணல் அம்பேத்கர் அரும்புகழ் வாழ்க!
அடித்தட்டு மக்கள் அல்லல்கள் வீழ்க!
- தமிழேந்தி