2016, சனவரி, 23-24, சனி - ஞாயிற்றுக் கிழமைகளில், சென்னை, மேற்கு மாம்பலம், சந்திரசேகர் திருமண மண்டபத்தில் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் நடைபெற்ற நான்கு பெரும் மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் “சிந்தனையாளன்”
பொங்கல் மலர் - 2016 வெளியீட்டு விழா
தீர்மானம் 1 :
“சிந்தனையாளன்” திங்களிதழ் 39ஆம் ஆண்டில் வெற்றியாக வெளிவந்துகொண்டிருப்பதற்கு உயிரோட்ட மாக விளங்குவோர் பொதுவாக உள்ள பெரியார் சுயமரியாதைக் கொள்கையாளர்கள், மா.பெ.பொ.க. தோழர்கள், தமிழ்மொழிப் பற்றாளர்கள், தமிழர் நலன் நாடும் தமிழ்ப் பெருமக்கள், மாணவ மணிகள், மார்க்சிய உணர்வினர், அம்பேத்கரிய உணர்வினர், விகிதாசார வகுப்புவாரி உரிமையினர், இலக்கிய ஆர்வலர்கள் போன்றோரே ஆவர். அவர்களுக்கு இவ்விழாக்குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
இவர்கள் அனைவரும் தொடர்ந்து முயன்று தமிழ்நாட்டு மாவட்டந்தோறும் “சிந்தனையாளன்” இதழினை ஓராயிரம் படிகள் அளவுக்குப் பரப்பிட, ஆசிரியர் குழு எடுக்கும் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டுமாய் இவ் விழாக் குழு வேண்டிக் கொள்ளுகிறது.
தீர்மானம் 2:
“சிந்தனையாளன் பொங்கல் மலர்” வெளியிடும் சீரிய பணியை மா.பெ.பொ.க.வும், ‘‘சிந்தனையாளன்” ஆசிரியர் குழுவும் ஒரு தமிழ் காக்கும் - தனித்தமிழ் பரப்பும் அடிப்படைப் பணி கருதி 1997 முதல் சிறப்புறச் செய்து வருகிறது.
“இயற்கைப் பேரிடர்” - எல்லோர்க்கும் பேரிடர் 2015 நவம்பர், திசம்பர் மாத வடகிழக்குப் பருவ மழை, உண்மையில் ஆண்டு சராசரிக்கு மேல் பெய்தது. அம் மாமழை, வானம் வரையாது வழங்கிய பெரிய கொடையாகும். இக்கொடை நீரைப் பாதுகாத்திட ஏற்ற ஏற்பாடுகளைச் செய்து வைத்திட இன்றைய - நேற்றைய அரசுகள் தவறிவிட்டன.
இந்திய வானியலாளரின் மழை பற்றிய அறிவிப்பைத் துச்சமாக மதித்த ஆளுங்கட்சியும் ஆட்சியும் அமைச்சர்களும் அரசு அதிகார வகுப்பினரும் தமிழக மக்களை ஏதிலராகக் கருதி, மழைப் பெருவெள்ள மேலாண்மையைக் கண்ணுங் கருத்துமாகச் செய்திடத் தவறிவிட்டதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, நாகை, திருவாரூர், இராம நாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத் தமிழ்ப் பெருமக்கள் கோடிக்கணக்கானோரும் பேரிழப்புகளுக்கு ஆளாக்கப்பட்டனர்.
ஆயிரக் கணக்கான மக்கள் உயிரிழப்பு, கால்நடைகள் சாவு, குடிசைகள், கூரை வீடுகள், ஓட்டு வீடுகள், மாடிவீடுகள் என எந்தப் பாகுபாடுமின்றி கோடிக்கணக்கான குடியிருப்புகள் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டு, உணவுப் பொருள்கள், மற்ற சேமிப்புகள், உடைமைகள், ஆவணங்கள், நகை கள், பணங்கள் என எல்லாம் அடித்துச் செல்லப்பட்டன.
15 முதல் 20 இலட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர் தொண்டைக் கருதுப் பருவத்தில் பாழாகிவிட்டது. 15 இலட்சம் சிறு, குறு தொழில்கள் அடியோடு அழிக்கப்பட்டுவிட்டன. 1500க்கு மேற்பட்ட மனித உயிர்கள் வெள்ளத்துக்கும் இடிபாடுகளுக்கும், மகிழுந்துகளிலும், சரக்குந்துகளிலும் பலியாக்கப்பட்டன.
இவ்வளவு பெரிய இயற்கைப் பேரிடரிடையே “நான் மனிதன் - நாம் மனிதர்கள்” என்கின்ற மனிதம் - மனிதநேயம் தன்னையறியாமல் பீறிட்டு, மதம், சாதி, அந்தஸ்து எல்லாவற்றையும் உதறி எறிந்துவிட்டு, 1-12-2015 முதல் வீடு வீடாக, தெருத் தெருவாக ஓடி ஓடி மனித உயிர்களைக் காப்பாற்றினர். அவர்களை வரலாறு வாழ்த்தும்; தமிழக அரசையும், இந்திய அரசையும் வரலாறு வாழ்த்தாது.
“ மனிதம் காப்போம் ! மனிதம் வளர்ப்போம் !” என உரத்துக் கூவி, வெள்ளத்தால் உயிரிழந்த அனை வர்க்கும் நம் இறுதி அஞ்சலியையும் அவர்தம் குடும்பத் தார்க்கு ஆறுதலையும் கூறி அமைதி பெறுவோம்.
இழப்புக்கு ஆளானோர்க்கு அஞ்சலி செலுத்தும் வகையில்தான், 9-1-2016 அன்று வெளியிடத் திட்டமிட்டிருந்த இப் பொங்கல் சிறப்பு மலரை 23-1-2016 இன்று வெளியிடுகிறோம் என்பதை அன்புடன் பதிவு செய்கிறோம்.
இம் மலர் வெளிவரப் பல்லாற்றானும் உதவிய வணிகப் பெருமக்கள், தொழிலதிபர்கள், அறிஞர்கள், அனைத்துத் தமிழ்ப் பெருமக்கள், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியினர், தோழமை அமைப்பினர் ஆகியோர்க்கு மனங்கனிந்த நன்றியை உரித்தாக்கு கிறோம்.
“தமிழ்வழிக் கல்வி ஆதரவு - இந்தி ஆதிக்க எதிர்ப்பு” மாநாடு
தீர்மானம் 1 :
தாதம்பட்டி எம். இராஜு மறைவுக்கு இரங்கல் ஈ.வெ.கிருஷ்ணசாமி - ரெங்கநாயகி அம்மாள் இணையரின் இளைய மருமகனும், தந்தை பெரியார் அவர்களின் இயக்கப் பணிகளுக்கு 1925 முதல் இறுதிக் காலம் வரை தொண்டாற்றியவரும், இந்தியக் கப்பல் படையில் பணியாற்றி வெள்ளையர் எதிர்ப்புக் காரணமாக விடுவிக்கப்பட்டவரும், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் தொடக்க காலம் முதல் 1991 வரையில் தோழர் வே.ஆனைமுத்து, சங்கமித்ரா, எச்.எஸ்.யாதவ், இராம் அவதேஷ் சிங், பியாரிலால் லோதி, தில்லி தமிழரசு ஆகியோருடன் இணைந்து பணியாற்றியவரும், பெரியார் ஈ.வெ.ரா - நாகம்மை கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவன நிகழ்ச்சிகளில் பங்கேற்றவருமான சேலம், தாதம்பட்டி, ம.இராஜு அவர்கள் 18-1-2016 இரவு சென்னையில் தன் மகன் குமார் இல்லத்தில் தம் 94ஆம் அகவையில் மறைவுற்றார் என்பதை இம்மாநாடு மிகுந்த வருத்தத்துடன் அறிவிக்கிறது.
அன்னாரின் இறுதி நிகழ்ச்சியில் வே.ஆனைமுத்து, க.முகிலன், தமிழேந்தி, வாலாசா வல்லவன், ப.வடிவேலு மற்றும் தோழர்கள் பங்கேற்றனர். அன்னாரை இழந்து வருந்தும் அவர்தம் துணைவியார் செல்லா என்கிற நாகலெட்சுமி, மகன் குமார், பெரியார் குடும்ப உறவினர்கள், மற்றும் பெரியார் தொண்டர்கள் அனைவருக்கும் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பிலும், அனைத்திந்தியப் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் மதச் சிறுபான்மையினர் பேரவையின் சார்பிலும் மனங்கசிந்த இரங்கலை இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.
பேராசிரியர் முத்து.குணசேகரன், தமிழ்க் கலைக் காவலர் கே.ஏ.குணசேகரன் மறைவுக்கு இரங்கல் ஈ.வெ.ரா.வுடன் இணைந்து 1932 திசம்பரில் சுயமரியாதை சமதர்மத் திட்டத்தை உருவாக்கித் தந்தவர் சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர்.
“ம.சிங்காரவேலரின் வாழ்வும் பணியும்” பற்றி முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டவர் பேராசிரியர் முத்து.குணசேகரன். 1982 முழுவதிலும் மா.பெ.பொ.க. வின் திருவல்லிக்கேணி பெரியார் அச்சகத்துக்கு அவர் வந்திருந்து வே.ஆனைமுத்து மற்றும் நாகை முருகேசன் ஆகியோருடன் கலந்து பேசி, விரிவான முனைவர் பட்ட ஆய்வுக்குரிய செய்திகளைச் செப்பம் செய்தவர். தலை சிறந்த பகுத்தறிவாளர். ம.சிங்காரவேலரை நிலை நாட்டுவதற்காகவே தம் வாழ்வை ஈடுபடுத்திக் கொண்டவர். அன்னார் 19-1-2016 அன்று தம் 78ஆம் அகவையில் மறைவுற்றமை கருதி இம் மாநாடு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
பேராசிரியர் கே.ஏ.குணசேகரன் தமிழ்நாட்டின் மக்கள் கலைகளான நாட்டுப்புறக் கலைகளை உயிர்ப்பிக்கவும், அவற்றின்வழி தமிழரின் வாழ்வை நெறிப்படுத்தவுமான சீரியப் பணிகளுக்காகத் தம் வாழ்வை ஒப்படை செய்தவர். தமிழ்வளர்ச்சித் துறை யின் இயக்குநராகவும், புதுச்சேரி நடுவண் பல்கலைக் கழகத்தில் நிகழ்கலைத் துறைத் தலைவராகவும் பணிபுரிந்தவர். பறை முழக்கத்தைச் செம்மைப்படுத்தி அதற்கான பயிற்சிக்குழுக்களை உருவாக்கியவர்.
1992இல் சென்னை, அண்ணா சாலை, தேவநேயப் பாவாணர் அரங்கில் நடைபெற்ற மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநாட்டில், தம் குழுவின ரோடு பங்கேற்று எழுச்சிமிகு கலைநிகழ்ச்சியை நடத்தி அம் மாநாட்டுக்குப் பெருமை சேர்த்தவர்.
இத்தகைய செயற்கரிய செயல்களைச் செய்த பேராசிரியர் கே.ஏ.குணசேகரன் 17-1-2016 அன்று புதுச்சேரியில் தம் இல்லத்தில் மறைவுற்றமை கருதி, இம் மாநாடு இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 2 :
நடுவண் அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை யின் கீழ் இயங்கும் அய்தராபாத் நடுவண் பல்கலைக் கழகத்தில் - தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஆய்வு மாணவர் ரோகித் வெமுலா 17-1-2016 அன்று மாணவர் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
ரோகித் வெமுலா, பாரதிய சனதாக் கட்சியின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்புக்கு எதிரான தன்மையிலான கருத்துகளையும் செயல்பாடுகளையும் கொண்டிருந்தார். அதனால், அவர்கள் நடுவண் அமைச்சர் மூலம் கொடுத்த அழுத்தத்தின் பேரில் ரோகித் வெமுலாவும் மற்ற நான்கு தலித் ஆய்வு மாணவர்களும் கல்லூரி மாணவர் விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
ஏழு மாதங்கள் அவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப் படாமல் நிறுத்தப்பட்டது. மேலும் பல வகையான புறக்கணிப்பு களுக்கும் துன்பங்களுக்கும் இந்தத் தலித் மாணவர்கள் ஆளாக்கப்பட்டனர். பல்கலைக்கழக வளாகத்தின் திறந்த வெளியில் தங்கி இம் மாணவர்கள் தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று பேராடினார்கள்.
“ஒரு மனிதனின் மதிப்பு அவனது பிறப்பு அடையாளங்களால் நிர்ணயிக்கப்படுகிறது” என்று மனம் நொந்து நீண்ட மடல் எழுதிவிட்டுத் தன்னுயிரை மாய்த்துக்கொண்டார் ரோகித் வெமுலா. தீண்டாமைக் கொடுமையே இவரின் இறப்புக்குக் காரணமாகும். ரோகித் வெமுலாவின் கொடிய சாவுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோருவதுடன் ரோகித் வெமுலாவின் மறைவுக்கு இம் மாநாடு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 3 :
காட்ஸ் என்பது உலக வணிக அமைப்பின் கூறுகளில் ஒன்றாகும். இது சேவைப் பிரிவுகள் தொடர்பான வணிக ஒப்பந்தம் எனப்படுகிறது. இதில் கல்வியையும் சேர்த்திட, வாஜ்பேயி ஆட்சிக் காலத் திலேயே விருப்பம் தெரிவிக்கப்பட்டது.
மன்மோகன் சிங் தலைமை அமைச்சராக இருந்தபோது இந்த விருப்பம் புதுப்பிக்கப்பட்டது. இது ஒரு ஒப்பந்தமாகிவிட்டால், இந்தியாவில் உயர்கல்வி என்பது வளர்ந்த நாடுகளின் தனியார் பல்கலைக்கழகங்களின் ஆதிக்கத்தின் கீழ் சென்றுவிடும். இப்போதே இந்தியாவில் உயர்கல்வி தனியாரின் கொள்ளைக் காடாகிவிட்டது.
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் இயங்கினால் அவற்றின்மீது எந்தவொரு கண்காணிப்பையும், கட்டுப்பாட்டையும் மாநில அரசுகளோ, நடுவண் அரசோ மேற்கொள்ள முடியாது. இது இந்திய நாட்டின் இறையாண்மைக்கே எதிரானதாகும். எனவே இந்திய அரசு சேவை வணிகத்தில் கல்வியை அனுமதிப்பதற்குத் தெரிவித்துள்ள விருப்பத்தை உடனே திரும்பப் பெற வேண்டும் என இம் மாநாடு கோருகிறது.
தீர்மானம் 4 :
இந்தியாவில் 2000 ஆண்டுகளாகக் ‘கல்வி - சரசுவதி கடவுள் தரும் வரம்’ என்கிற மூட நம்பிக்கை வேத, ஸ்மிருதி அடிப்படையில் மக்களிடம் புகுத்தப்பட்டு, அவ்வப்போதைய அரசுகள் கல்வி தரும் பொறுப்பி லிருந்து ஒதுங்கிக்கொண்டன.
100க்கு 94 விழுக்காடு மக்களான உழைக்கும் சூத்திர சாதி - ஆதி சூத்திர சாதி மக்களுக்கு, “அரசன் கல்வி தரக் கூடாது” என, மனுஸ்மிருதி கட்டளையிட்டது. அதனால் 1911இல் இந்தியர்களின் எழுத்தறிவு 6 விழுக்காடு மட்டுமே இருந்தது.
வெள்ளையரும் 1601 முதல் 234 ஆண்டுகள் அதே நெறியைப் பின்பற்றினர். 1835இல் அவர்கள் அரசுப் பொதுப்பள்ளிகளை நிறுவினர். 1 முதல் 5 வகுப்பு வரை அவரவர் தாய்மொழியில் கல்வி கற்பிக்கச் செய்தனர். ஆனால், 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளிலும் எல்லாப் பாடங்களையும் ஆங்கிலம் வழியே கற்பித்தனர். அதனால் எல்லா இந்திய மொழிகளின் பயன்பாடும் வளர்ச்சியும் குன்றின.
இந்தக் கல்வி முறையால் ஆங்கிலம் கற்றவர்கள் ஆளும் வகுப்பு, மற்றெல்லோரும் ஆளப்படும் வகுப்பு என்கிற ஆண்டான் - அடிமை மனப்பான்மை ஊறி விட்டது.
ஆங்கில வழியில் படிக்காத எவரும் எந்த உயர் படிப்புக்கும் போகவும், எந்தக் கீழ் - மேல் - உயர்தர அரசு வேலைக்குப் போகவும் தகுதி அற்ற வகுப்பினர் ஆயினர்.
இந்த இழிநிலை 1939 வரை சென்னை மாகாணம் முழுவதும் நீடித்தது. 1939 முதல் அரசு உயர் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு வரை தமிழ் பயிற்றுமொழி ஆயிற்று.
1939க்குப் பிறகு 1946 வரை வெள்ளையர் ஆட்சி இங்கு நீடித்தது. 1946 முதல் 1967 வரையில் காங்கிரசு ஆட்சி நீடித்தது. அக்கட்டத்தில் கல்லூரிப் பட்டப்படிப்பு வரை கலைப் பாடங்கள் தமிழ்வழியில் கற்பிக்கப்பட்டன. தொழிற்பட்டப் படிப்புகள் ஆங்கில வழியில் கற்பிக்கப் பட்டன.
1967இல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. தமிழின் தகுதிப்பாட்டையும் கலைச் சொற்கள் வளத்தையும் நன்கு அறிந்த அவர்கள், 1968 முதல் 1976 சனவரிக்குள், மனங்கொண்டு திட்டமிட்டு 1ஆம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்புகள் வரை எல்லாக் கல்வியையும் தமிழில் கற்பித்திட உறுதியான சட்ட ஏற்பாடுகள், பல்கலைக்கழகச் சட்ட மாற்றங்கள், பாடத்திட்டக் குழுவினர்க்கான நெறிகள் எல்லாவற்றின் மூலம் தமிழ்வழிக் கல்வி தர ஏற் பாடுகளைச் செய்திருக்க முடியும். ஆனால் தி.மு.க. ஆட்சி அதைச் செய்யவில்லை.
அடுத்து வந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சி பெரியாரின் எழுத்து முறையை ஏற்றுக்கொள்ளவும், எல்லோரும் அதைப் பின்பற்றிடவும் வழி கண்டது. ஆனால், அக்கட்சி ஆட்சியின் இன்றைய முதல்வர் 1ஆம் வகுப்பு முதலேயே ஆங்கிலத்தைப் பயிற்றுமொழியாக அரசு ஆணை மூலம் அறிவித்துவிட்டார். அவர் தமிழ் மொழிக்கு, தமிழ்ப் பண்பாட்டுக்கு, தமிழ் மொழி வளர்ச்சிக்கு எதிரான அரசுத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.
ஆக, இரண்டு திராவிடக் கட்சிகளும் தமிழகத்தின் ஒவ்வொரு சிக்கலையும் ஏட்டிக்குப் போட்டியாக நோக்குவதை மிகவும் தீதானது என்றே வரலாறு பதிவு செய்யும்.
இவர்களுக்கு அச்சம் ஊட்டுகிற தன்மையில் தமிழக மாணவர் உலகம் தமிழ்மொழிக் காப்பை முன்வைத்து, தமிழ்வழிக் கல்வி தெருமுனைப் பரப்புரை, மேல்நிலைப் பள்ளிதோறும் - கல்லூரிதோறும் வாயிற்கூட்டம் என நடத்தி மாணவரிடையே விழிப்புணர்வை உண்டாக்கு வது தலையாயப் பணி என இம் மாநாடு கருதுகிறது.
அடுத்து, சென்னையில் தமிழகத் தலைமைச் செயலகத்தின் முன்னர், இலக்கக் கணக்கில் மாணவ - மாணவியர் திரண்டு ஒரு நாள் ஆர்ப்பாட்டம் என்று தொடங்கிச் சங்கிலித் தொடர்போன்ற போராட்டங்களை 2016 முழுவதும் நடத்திட மாணவருலக உறுப்பினர்கள் 1.26 கோடிப் பேரும் ஆயத்தமாகிட இம் மாநாடு அன்புடன் வேண்டிக்கொள்கிறது.
இவ் விழிப்புணர்வுப் பரப்புரை மற்றும் ஆர்ப்பாட் டங்கள், பேராட்டங்கள் ஆகியவற்றுக்கு மனமுவந்து தமிழ்வழிக் கல்வியில் அக்கறை உள்ள, எல்லாக் கட்சியினரும் தோழமை அமைப்பினரும் பேரளவில் ஒத்துழைப்பு நல்க வேண்டிட இம் மாநாடு அன்புடன் கேட்டுக்கொள்கிறது.
மேலே கண்ட தீர்மான நிறைவேற்றத்துக்கு உரிய தங்கள் பங்களிப்பாக மா.பெ.பொ.க.வினர் உரிய அறிக்கைகளை அச்சிட்டு வழங்கிடவும் ஆங்காங்கே மாணவர் - இளைஞர் அமைப்புகளுடன் இணைந்து செயல்படவும் இம் மாநாடு தீர்மானிக்கிறது.
தீர்மானம் 5:
இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தமிழக அளவில் மட்டும் 1938-39, 1948, 1952-54, 26-1-1965 ஆகிய நான்கு கட்டங்களில் நடைபெற்றன.
1938-39இல் எந்த அரசமைப்புச் சட்ட ஏற்புமின்றி, காங்கிரசின் இந்தி பரப்பும் கொள்கையை மாகாண முதலமைச்சர் இராசகோபாலாச்சாரி அமல்படுத்தினார். சென்னை மாகாணத்தில் 6ஆம் வகுப்புக்கு மேல் இந்தியைக் கட்டாயப் பாடமாகக் கற்பிக்கவும், பள்ளியிறுதித் தேர்வுக்கு உரிய தேர்ச்சிக்கு மதிப்பெண் பெறும் பாட மாகவும் திணித்தார். அது சர்வாதிகாரமாகச் செய்யப்பட்டது.
அதை எதிர்த்து அனைத்துத் தரப்புத் தமிழரும் தமிழ் மூதறிஞர்களும், மாணவர்களும் பெரியார் தலைமையில் 20 மாதங்கள் போராடினர். 1300 பேர் சிறைப்பட்டனர். இந் நிலையில், இரண்டாம் உலகப் போரில், பிரிட்டிஷ் அரசு, இந்தியர்களைக் கலந்து ஆலோசிக்காமலேயே தன்னிச்சையாக இந்தியப் படையைப் பயன்படுத்தியதை எதிர்த்து இந்தியா முழுவதிலும் காங்கிரசார் பதவி விலகினர். இராசாசியும் இந்தியை நீக்காமலேயே பதவி விலகினார்.
1940இல் மாகாண ஆளுநர் கட்டாய இந்தி கற்பிக்கும் ஆணையை விலக்கினார்.
1947இல், ஓமந்தூரார் மாகாண முதலமைச்ச ரானார். அவர் இராசாசியைப் போலவே தேர்வுக்குரிய பாடமாக இந்தியை அறிமுகப்படுத்தினார். அதனை எதிர்த்து 1948இல் குடந்தையில் சி.என்.அண்ணாதுரை தலைமையில் கட்டாய இந்தி எதிர்ப்புப்போர் நடத்தப்பட்டது. மாணவர்களும் இளைஞர்களும் கொடிய அடக்கு முறைக்கு ஆளாக்கப்பட்டதால், பெரியார் அப்போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக அறிவித்தார். இவை அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன் நடைபெற்ற போராட்டங்கள்.
இந்திய அரசமைப்புச் சட்டம் 26-1-1950இல் அமலுக்கு வந்தது. அப்போது முதலே இந்திய அரசினர் இந்தியா முழுவதிலுமுள்ள மய்ய அரசு அலுவலகங்கள் எல்லாவற்றிலும் பணியாற்றுகிற இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த அலுவலர்களுக்கு வேலை நாள்களில் அலுவல் நேரத்தில் அரசுச் செலவில் இந்தி மொழியைக் கற்றுக்கொடுக்க ஆசிரியர்களை அமர்த்தினர்.
இந்தியைத் திணிக்கும் நோக்கத்துடன் இந்தி கற்கும் அலுவலர்களுக்கு ஊக்கத் தொகையும் அளித்தனர். இதனைக் கண்டிக்கும் வகையில் தந்தை பெரியார் 1952, 1953, 1954 ஆண்டுகளில் ஆகஸ்டு 1 அன்று தமிழ்நாட்டின் எல்லா ஊர்களிலும் இரயில் நிலையங்களில் உள்ள பெயர்ப் பலகையில் உள்ள இந்தி எழுத் தைத் தார்ப்பூசி அழிக்கும் கிளர்ச்சியை நடத்தினார். இப்போராட்டத்தில் தி.மு.க.வினரும் ஆங்காங்கே பங்கேற்றனர். இது இந்தித் திணிப்பை எதிர்த்த ஒரு அடையாளப் போராட்டமே ஆகும்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 17ஆம் பகுதி ( 17) யில் உள்ளபடி - “தேவநாகரி வடிவிலான இந்தி, இந்தியாவின் அலுவல் மொழியாக இலங்கும்” என்றும்; 26-1-1950இலிருந்து சரியாக 15 ஆண்டுகள் கழித்து, 26-1-1965 முதல் இந்தி மொழி இந்தியாவின் ஒரே ஆட்சி மொழியாகும் எனத் தெளிவாகக் கண்டிருந்தது.
தமிழ்நாட்டு தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.வெ.கி.சம்பத் முன்மொழிந்தபடி, 1950-1965 எனும் அந்தப் 15 ஆண்டுக் காலத்திலும் இந்தியுடன் ஆங்கிலம் இணை அலுவல் மொழியாக நீடிக்கும் அதற்குப் பிறகும் இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை அந்தந்த மாநிலங்களில் ஆங்கிலம் இணை அலுவல் மொழியாக நீடிக்கும் என்கிற ஓர் ஏற்பாடு “அலுவல் மொழிகள் சட்ட ஆக்ட்” என்பதன் பேரால் வெளியிடப்பட்டது.
இருப்பினும், இந்திய அரசமைப்பின்படி 1965 சனவரி 26இல் இந்தி இயல்பாகவே அதிகாரப்பூர்வமாக இந்தியாவின் அலுவல் மொழி ஆவதை எதிர்த்து, சென்னை நேப்பியர் பூங்காவில் மாணவர் எழுச்சிப்படை திரண்டு, இந்தியை “இந்தியாவின் ஒரே ஆட்சி மொழியாக ஆக்கும் சட்டத்தை நீக்குக !” எனக் கோரி, முதலமைச்சர் எம்.பக்தவத்சலத்தைக் கண்டு விண்ணப்பம் தருவதற்காகப் புறப்பட்டனர்.
ஆயினும் மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காத பக்தவத்சலம் மாணவர்களைச் சந்தித்துப் பேச மறுத்ததுடன், காவல் துறையை ஏவி மாணவர் களைக் கடுமையாகத் தாக்கினார். அக் கொடிய செய்தி பிற்பகலுக்குள் தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் பரவியது. மாணவருலகம் தெருவுக்கு வந்து போராடியது. உலக வரலாற்றில் மொழிப் போராட்டத்துக்காகத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட முதல் போராட்டம் இதுவே ஆகும். இப் போராட்டத்தை எதிர்த்து தந்தை பெரியார் அறிக்கை வெளியிட்டது பொருத்தமற்றது.
இந்நிலையில், ஒரே தீர்வாக, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 17ஆம் பகுதி (ஞயசவ 17) யில் உள்ள - “தேவநாகரி வடிவிலான இந்தி, இந்தியாவில் அலுவல் மொழியாக இலங்கும்” என்னும் சொற்கோவை எந்தெந்த விதிகளில் இடம்பெற்றுள்ளதோ அந்தச் சொற்கோவைகளை “இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எட்டாம் அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள எல்லா மொழிகளும் இந்தியாவின் அலுவல் மொழிகளாகும்” என்றும், “இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் அந்தந்த மாநிலங்களில் பேசப்படும் மொழியே இந்தியாவின் அலுவல் மொழியாகச் செயல்படும்” என்றும் இடம்பெறும் தன்மையில் எல்லா விதிகளும் திருத்தப்பட வேண்டும்.
இதற்கு மாறான எந்த ஏற்பாடும் நாளாவட்டத்தில் இப்போது இணை அலுவல் மொழியாக உள்ள ஆங்கிலம் ஒழிக்கப்பட்டு இந்தி மொழி மட்டுமே இந்தியாவின் ஒரே அலுவல் மொழி - ஒரே ஆட்சி மொழி ஆவதைத் தடுக்க இயலாது. இது எளிதான முயற்சி அன்று.
இது பற்றி இந்தி பேசாத மாநிலங்கள், இந்தி பேசப்படும் மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை சிலரையாவது நேரில் கண்டு தமிழர்கள் விவாதிப்பதும், இந்தி, ஆங்கிலம் மற்றும் இந்தியாவிலுள்ள அனைத்து மொழி ஊடகங்களிலும் இது பற்றிக் கருத்துகள் வெளியிடுவதும் முதன்மையான கடமையாகும்.
உண்மையில் இந்தி ஆட்சி மொழி ஆவதை எதிர்த்து ஒழிக்க உறுதிபூண்டு செயல்படுவோர் தமிழகத்தை மட்டும் சுற்றிச் சுற்றிச் செயல்படுவதால் எப்போதும் நல்ல தீர்வை எட்டமுடியாது; இந்தி ஆதிக்கத்திலிருந்து தமிழகமும் இந்தி பேசாத பிற மாநிலங்களும் எப்போதும் விடுபட முடியாது என்று இம் மாநாடு கருதுகிறது.
இதில் ஒத்த கருத்துள்ள அனைவரும் 2016ஆம் ஆண்டில் பல நாள்கள் பலதடவை மனம்விட்டுக் கலந்து பேசி ஒரு நல்ல செயல் திட்டத்தை வகுக்கவேண்டும் என இம்மாநாடு அனைவரையும் வேண்டிக் கொள்கிறது.
“தமிழக நீராண்மை - வேளாண்மைப் பாதுகாப்பு” மாநாடு
தீர்மானம் 1 :
காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வையை, பொருநை, தாமிரபரணி என ஆற்றுவளம் பல பெற்ற அருந்தமிழ்நாடு இன்று பாலைவனமாகும் சூழல் உருவாகி வருகிறது. நதிநீர்ப் பங்கீட்டுச் சிக்கல், ஆற்று மணற் கொள்ளை, ஏரி - கண்மாய் - குளங்களைத் தூர்த்து வீட்டு மனைகளாக்கி விற்றல் போன்ற செயற்கைக் கேடுகள் தமிழ்நாட்டைச் சீரழித்து வருகின்றன. குளங்களும் ஏரிகளும் குப்பை மேடு களாகவும் கட்டடங்களாகவும் ஆக்கப்பட்டுவிட்டன.
வல்லடியாய் நடந்துகொள்ளும் அண்டை மாநிலங்களை வழிக்குக் கொண்டுவராமல் இந்திய நடுவண் அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. தவறான தாராளமயக் கொள்கை, உலக வங்கியின் விதைக் கொள்கை, மரபணு மாற்ற விதைகள் இறக்குமதி, தனியாரைக் கொழுக்க வைக்கும் உரம் - பூச்சிக்கொல்லி மருந்துகள் விலை ஏற்றம் போன்றவையெல்லாம் சேர்ந்துகொண்டு உழவர்களையும், உழுதொழிலை நம்பி வாழும் கூலித் தொழிலாளிகளையும் நகர்ப் புறங்களை நோக்கி விரட்டுகின்றன. காவிரிப் படுகையில் நடத்தப்படும் மீத்தேன் எரிவளி ஆய்வுகள் எரியும் கொள்ளியில் எண்ணெய் வார்க்கின்றன.
தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்கிற கோட்பாட்டின் பெயரால் இந்திய அரசும் தமிழக அரசும் வேளாண் தொழிலையும் உழவர்களையும், வேளாண் மையைச் சார்ந்து வாழும் தொழிலாளர்களையும் வஞ்சித்து வரும் இப் போக்கை இம் மாநாடு வன்மை யாகக் கண்டிக்கிறது.
தீர்மானம் 2 :
1962க்குப் பிறகு தமிழகத்தை ஆண்டவர்கள் ஏரிகள், குளங்கள், கண்மாய்களைத் தூர்வாரிச் செப்பனிடும் பணியை அறவே மேற்கொள்ளவில்லை. இவற்றை நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டிய சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழக அமைச்சர்கள், பொதுப் பணித்துறை அதிகாரிகள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், ஊராட்சிகளின் தலைவர்கள், ஊராள் வோர்கள், கணக்கர்கள் - எல்லோரும் ஏட்டில் போட்ட எல்லாத் திட்டங்களுக்கான பணத்திலும் பாதிக்குமேல் கைக்கூலியாகப்பெறும் கொள்ளைக்காரர்களாக மாறிப் போனார்கள்.
இதன் விளைவாக, வடகிழக்குப் பருவ மழை காலத்தில் எப்போதாவது கிடைக்கும் பெருமழைத் தண்ணீரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீணே கடலில் கலக்கிறது. மேலும், விளைபயிர்களை மூழ்கடித்து பெரும் சேதத்தை ஏற்படுத்துவதோடு, உழவர்களுக்குப் பேரிழப்பை உண்டாக்கிவிடுகிறது.
2015 நவம்பர் இறுதியிலும், திசம்பர் முதல் வாரத்திலும் பெய்த பெருமழையால் பல இலட்சம் ஏக்கர் பரப்பில் பயிர்கள் முற்றிலும் பாழானதும், எண்ணற்ற ஏழை மற்றும் நடுத்தர மக்களின் உயிர்களும் உடைமைகளும் அழிக்கப்பட்டதுமே இதற்குக் கண்கூடான சாட்சியாக நிற்கின்றன.
இதுபோன்ற பேரழிவுகளும் பேரிடர்களும் மீண்டும் நிகழாமல் தடுத்திட, தமிழக அரசு உடனடியாக உருவா 5000 கோடி நிதி ஏற்பாடு செய்து, தமிழகத்திலுள்ள 41,127 ஏரிகள் மற்றும் குளங்கள், கண்மாய்கள், நீர்வரத்துக் கால்வாய்கள் என எல்லாவற்றிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவற்றின் உண்மையான கொள்ளளவுக்குட் தூர்வாரிச் செப்பனிட வேண்டும் என இம் மாநாடு கோருகிறது. இவற்றுக்கு மனித உழைப்பாளிகளை மட்டும் பயன்படுத்தாமல், தூர்வாரும் இயந்திரங்களை பலவற்றை வாங்கி, போர்க்கால அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவேற்ற வேண்டுமெனத் தமிழக அரசினரை இம் மாநாடு வலியுறுத்தி வேண்டிக் கொள்கிறது.
தீர்மானம் 3 :
வேளாண் விளைபொருள் தவிர்த்த பிற பொருள்கள் அனைத்திற்கும் அதனதன் உற்பத்தியாளர்களே அவற்றுக்கான விலையை நிர்ணயம் செய்கிறார்கள்.
ஆனால், இந்தத் தார்மீக உரிமை வேளாண் மக்களுக்கு மறுக்கப்பட்டு இருப்பதால் குறைந்த அளவு இலாபம் ஈட்டக்கூடிய தன்மையில்கூட வேளாண் தொழிலைத் தொடர முடியாத அவலநிலை நிலவுகிறது. நடுவணரசு அமைத்த எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையிலான உழவர் நலக் குழு பத்தாண்டுகளுக்கு முன்பே அளித்த பரிந்துரையில், ஒரு பயிரின் சாகுபடிச் செலவில் 50 விழுக்காடு அளவுக்குக் குறையாமல் விவசாயிக்கு இலாபம் கிடைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இது வரையில் இது நிறைவேற்றப்படவில்லை. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் நல்ல வருவாய் விவசாயிகளுக்குக் கிடைப்பதற்காக அரசு மானியம் என்கிற பெயரில் நேரடியாகப் பணம் தரப்படுகிறது. அதே தன்மையில் எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை நடை முறைப்படுத்த மய்ய அரசும் மாநில அரசும் இணைந்துத் திட்டமிட்டுச் செயல்படுத்த வேண்டுமாய் இம் மாநாடு கேட்டுக்கொள்கிறது.
மேலும், வேளாண் விளைபொருள்களுக்கான விலை நிர்ணயம் செய்கிற குழுவில் அந்தந்த மாநிலங் களைச் சேர்ந்த விவசாயிகளின் பிரதிநிதிகள் மூன்றில் இரண்டு பங்கு அளவுக்கு இடம்பெறச் செய்வதே வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்வதற்கான உறுதியான ஏற்பாடாகும். இதற்கு ஏற்ற நடைமுறையை உடனடியாக உருவாக்க வேண்டுமென்று மய்ய, மாநில அரசுகளை இம் மாநாடு கோருகிறது.