பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெண்களின் நிலை மிகவும் கவலை கொள்ளத்தக்கதாகவே இருந்து வந்துள்ளது. அந்நாளில் பெண்கள் அடிமைகளாயிருந்து ஆண்களுக்குப் பணிவிடை செய்து வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் பள்ளிப்படிப்பு ஐந்தாம் வகுப்போடு முடிந்துவிடும். அதன்பின் ஏட்டைத் தொடுவதும் தீமையென்று வீட்டில் பூட்டி வைக்கப் பட்டனர். சிறு வயதிலேயே பெண்களுக்குத் திருமணம் முடிக்கப்பட்டது. எண்ணத்தில், பேச்சில் செயலில் சிறிதும் தன்னுரிமை இல்லாத அவலத்துடன் வாழ்ந்து வந்துள்ளனர்.

அம்மட்டோ! பிற்காலச் சோழர் ஆட்சியில்தான் பல கோயில்கள் எழுப்பப்பட்டன. அந்தக் கோயில்களில் பணி செய்வதற்கென்று ஒரு குறிப்பிட்ட சமூகப் பெண்களைச் சிறுவயதிலேயே கடவுளுக்குக் காணிக்கை யென்று பொட்டுகட்டி நேர்ந்துவிட்டு விடுவார்கள். அவர்கள் இசையும் நாட்டியமும் நன்கு பயின்றிருந்தனர். ஆனால் அவர்கள் திருமணம் செய்து கொள்ள உரிமையற்று இருந்தனர். அவர்கள் ஊர்ப் பெரிய மனிதர்களின் அல்லது செல்வந்தர்களின் ஆசை நாயகிகளாக வலுக்கட்டாயமாக ஆக்கப்பட்டனர்.

சோழப் பேரரசில் ஆலயங்கள் அனைத்துமே சனாதன பிராமணர்களின் வேத ஆகம ஆதிக்கத்துக்கு உட்படுத்தப் பட்டன. பிராமணர்களுக்கு தேவதானங்களாகவும் பிரமதேயங்களாகவும் ஏராளமான நிலங்கள் வழங்கப் பட்டன. அதனால் அவர்கள் செல்வச் சீமான்களாக- குட்டி ஜமீந்தார்களாக மனம் போன போக்கில் வாழ்ந்து வந்துள்ளனர்.moovalur ramamirthamஅத்தகைய கொடிய நாள்களில், பெண்ணடிமைத் தீருமட்டும் பேசுந்திருநாட்டு மண்ணடிமை தீருதல் முயற்கொம்பே என்றுணர்ந்த தமிழ்நாட்டுப் பெண்மணி ஒருவர் பெண்களின் உரிமைகளுக்கும் விடுதலைக்கும் குரல் கொடுத்தார்.

பிறப்பு

பெண் விடுதலைக்குக் குரல் கொடுத்த அந்தப் பெண் இசைவேளாளர் குடும்பத்தில் திருவாரூர் மாவட்டம் கீரனூர் என்ற ஊரின் அருகில் இருந்த பாலூர் என்ற சிற்றூரில் 1883ஆம் ஆண்டு பிறந்தார். அந்தக் குழந்தையின் பெயர் இராமாமிர்தம். தந்தை கிருஷ்ணசாமி, தாய் சின்னம்மாள். பிறந்த ஊர் பாலூர் என்ற போதிலும் அவர் தன் இளமைக் காலத்தில் வாழ்ந்த ஊர் மூவலூர் ஆதலால் பிற்காலத்தில் மூவலூர் மூதாட்டி என அழைக்கப்பட்டார்.

இளமைக் காலம்

கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை – என்பதற்கிணங்க இராமாமிர்தம் அம்மையார் இளமைக் காலத்தில் வறுமையில் வாடினார். இசை வேளாளர் குடியில் பிறந்து வறுமையில் வாடிய போதிலும், இராமாமிர்தம் பெற்றோர், தங்களின் மகளை தேவதாசி வாழ்க்கையை மேற்கொள்ள அனுமதிப்பதில்லை என்று உறுதியுடன் இருந்தனர். அதனால் தம் மகளுக்கு இசையையும் நாட்டியத்தையும் கற்றுக் கொடுப்பதில்லை என்று உறுதி கொண்டனர். உறவினரும், மற்றவர்களும் எவ்வளவோ சொல்லியும் தம் முடிவிலிருந்து மாறாமல் இருந்தனர். அதனால் ஊராரின் பகைக்கு ஆளானார்கள்.

அவர்களை அவர்களின் சமூகமும் கூட விலக்கி வைத்துவிட்டது. பொருளாதார ரீதியில் கிருஷ்ணசாமி தனிமைப்படுத்தப்பட்டார். வருமானத்திற்கு வழியில்லை; குடும்பத்தைக் காப்பாற்ற வழிவகை தெரியாமல் திகைத்தார். வாழ்க்கையில் வெறுப்புற்று மனைவியையும் மகளையும் தவிக்கவிட்டு விட்டு, விலகி வேலை தேடி சென்னை நோக்கிப் போய்விட்டார்.

ஐந்து வயது குழந்தையுடன் தாய் சின்னம்மாள் ஆதரவற்ற நிலையில் தவித்தாள், தன் மகன் காணவில்லை என்றதும் கிருஷ்ணசாமியின் தாய் நோயுற்றாள்; அதே ஏக்கத்தில் மாண்டு விட்டார். கணவனும் இல்லை; மாமியாரும் இறந்துவிட்டார். குழந்தையோடு தனிமரமாய் நின்றார் சின்னம்மாள். வறுமை அவர்களை வாழ விடவில்லை. குழந்தையை யாரிடமாவது கொடுத்து விடலாம்; குழந்தையாவது நலமாக வளரட்டும் என்று தாய் சின்னம்மாள் தீர்மானித்து விட்டார். இந்த எண்ணத்தோடு குழந்தையுடன் மூவலூர் சென்றார். அங்கே ஒரு தேவதாசியிடம் பத்து ரூபாயும் ஒரு பழைய புடவையையும் பெற்றுக் கொண்டு அகவை ஐந்தே ஆன குழந்தை இராமாமிர்தத்தை அவரிடம் கொடுத்து விட்டார்.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரின் இளமைப் பருவம் மூவலூரில் தொடங்கியது.

ஐந்தே வயதான குழந்தை இராமாமிர்தத்தைப் பெற்றுக் கொண்ட தேவதாசி ஆச்சிக்கண்ணு, தன் குலத்தொழிலுக்குத் தேவையான கல்வியைத் தர விரும்பி, அதற்காக ஏற்பாடு செய்தார். கர்நாடக இசை யையும் நாட்டியமும் கற்பிக்க பேரளம் சுயம்பு பிள்ளையை ஏற்பாடு செய்தார். அவரிடம் பயின்றதால், இராமாமிர்தம் அகவை பத்தில் இசையிலும் நாட்டியத்திலும் நன்கு தேர்ச்சி பெற்று விளங்கினார். அவர் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும் தேர்ச்சி பெற்று விளங்கினார்.

பதினேழாவது வயதில் இராமாமிர்தத்துக்குக் கோயிலில் பொட்டுக் கட்ட ஆச்சிக்கண்ணு விண்ணப்பம் செய்தார். அந்தக் கோயிலில் இருந்த தேவதாசிகள், இராமாமிர்தம் வெளியூரிலிருந்து வந்த ஆண்வழி வாரிசு என்று கூறி பொட்டுக் கட்ட எதிர்ப்புத் தெரி வித்தனர். இதனால் இராமாமிர்தம் தேவதாசியா வதிலிருந்து தப்பிப் பிழைத்தார்.

அதன்பின் வளர்ப்புத் தாய் ஆச்சிக்கண்ணு, எண்பது வயதான முதியவருக்கு இராமாமிர்தத்தை மணமுடிக்க முயற்சிகள் மேற்கொண்டார். இந்த விருப்பமில்லா கட்டாயத் திருமணத்திலிருந்து தப்பிக்கத் துணிவோடு வீட்டிலிருந்து வெளியேறி, இசையும் நாட்டியமும் கற்பித்த ஆசிரியர் பேரளம் சுயம்புப் பிள்ளையைச் சந்தித்துத் தன் நிலையை எடுத்துக் கூறியும், அவரைத் தான் மணந்து கொள்ள விரும்பு வதையும் எடுத்துக்கூறினார். அதன் பின் இருவரும் வழுவூர் ஆலயம் சென்று நெய் விளக்கேற்றி, இருவரும் ஒருவரைவிட்டு ஒருவர் பிரிவதில்லை என்று உறுதி எடுத்துக்கொண்டு இணைந்தனர். இத்திருமணத்திற்கு சாட்சியாக இருந்தவர் மூவலூர் மார்க்கசகாய சுவாமி கோயிலின் காப்பாளராக இருந்த வேணுபடையாட்சி ஒருவர் மட்டுமே.

இந்தத் திருமணத்தில் சாதி சமயச் சடங்குகளை யும் மூடப் பழக்கங்களையும் மேற்கொள்ளாமல் இருவரும் மனமொத்த வாழ்க்கைத் துணைவர் களாக இணைந்தனர், இத்திருமணம் சுயமரியாதைத் திருமணங்களுக்கு முன்னோடியாக அமைந்தது.

திருமணத்திற்குப் பின்னும் துன்பம் தொடர் கதையாகத் தொடர்ந்தது.

இந்தத் திருமணத்தை ஏற்க விரும்பாத தாசி வகுப்பார் அவர்களின் வாழ்வைச் சிதைக்க வழிசெய்தனர். இராமாமிர்தம் ஒரு இளம் பெண்ணைக் கொலை செய்துவிட்டார் என்று பழி சுமத்தி வழக்குத் தொடர்ந்தனர். காதல் கணவர் துணையுடன் வழக்கினை எதிர்கொண் டார். கொலை செய்யப்பட்டதாகக் கருதப்பட்ட பெண்ணைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்தினார்; சதிச் செயல் புரிந்தவர்களை இனங்கண்டு தண்டனையும் பெற்றுத் தந்தார் இராமாமிர்தம்.

இராமாமிர்தத்தின் வளர்ப்புத் தாய் ஆச்சிக்கண்ணு காலரா கண்டு இறந்துவிட்டார். அவர் தன்னுடைய சொத்துக்களை இராமாமிர்தம் பெயரில் எழுதி வைத் திருந்தார். அதனால் பொருளாதாரத்தில் சிறிது முன்னேற்றம் கண்டதும் தன் தாயையும் தந்தையையும் அழைத்துக் கொண்டார். அப்போது இராமாமிர்தத்துக்கு வயது இருபத்தைந்து (1908).

1917ஆம் ஆண்டுமுதல் கணவரின் துணையோடு மயிலாடுதுறையில் தேவதாசி முறைக்கு எதிரான தனது போராட்டத்தைத் தொடங்கினார். தேவதாசி முறைக்கு எதிராகத் தெருவோரப் பரப்புரைகளில் ஈடுபட்டார். தேவதாசி வாழ்க்கை இழிவானது. அந்த இழிவான வாழ்விலிருந்து தேவதாசிப் பெண்கள் தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்று பரப்புரையாற்றினார், தேவதாசிகள் வாழ்வியல் நெறிகள், மதம், சாஸ்திரம், சம்பிரதாயம், புராண இதிகாசங்கள் அடிப்படையில் அமைந்துள்ளன. ஆதலால் அவற்றின் மீது கொண்ட மூடநம்பிக்கைகள் ஒழிக்கப்பட்டு, தேவதாசிப் பெண்கள் விடுதலை பெறுதல் வேண்டும் என்றும் முழக்கமிட்டு வந்தார். அல்லும் பகலும் இராமாமிர்தம் அம்மையார் வழுக்கி விழுந்த பெண்களின் நிலை குறித்தே சிந்தித்துச் செயலாற்றி வந்தார். அந்தப் பெண்களை உறுப்பினர்களாகக் கொண்ட நாகபாசத்தார் சங்கம் என்ற அமைப்பினை உரு வாக்கினார். அச்சங்கத்தின் முக்கிய நோக்கம், தேவதாசிப் பெண்களை விடுவித்து அவர்களை திருமண வாழ்வில் ஈடுபடுத்துவதாகும். இச்சங் கத்தின் சார்பில் இரண்டு மாநாடுகளை நடத்தினார். இச்சங்கத்தின் பெயர் பின்னர் இசை வேளாளர் சங்கம் என மாற்றப்பட்டது. இதனால் அவர் சந்தித்த எதிர்ப்புகள் ஏராளம்.

காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி போன்ற சனாத னவாதிகள், பெருஞ்செல்வந்தர்கள், கோயில் அர்ச்சகர்கள் என்று பல தரப்பினரும் இராமாமிர்தத்தின் போராட்டத்தை ஒடுக்கவே முயன்றனர். யாரின் நல்வாழ்வுக்காகப் பாடுபட்டாரோ, அந்தத் தேவதாசி இனத்தவரேகூட அவருக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

தெருவோர மேடைப் பேச்சோடு நாடகக் கலையின் மூலமும் தன் கருத்துகளை வலியுறுத்தி வந்துள்ளார். அதனைப் பொறுக்காத பழைய பஞ்சாங்கங்கள் கடும் எதிர்ப்பைக் காட்டினர்; வன்முறையாளர் மேடை மீது ஏறி அவர் கூந்தலை அறுத்தனர். பின்னொரு முறை பாலில் நஞ்சு கலந்து கொலை செய்திடவும் முயன்றனர்.

ஆனாலும் அவர் மலை குலைந்தாலும் மனம் குலையா உறுதியுடன் தன் கொள்கைப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.

காங்கிரஸில்

அரசியல் பின்னணி இல்லாமல் சமூக மாற்றங் களைக் கொண்டுவருவது கடினம் என்று அம்மையார் புரிந்து கொண்டார். கணவர் சுயம்புப் பிள்ளை காங்கிரசுப் பற்றுடையவர் என்பதால் காங்கிரசு இயக்கங்களில் பங்கு கொண்டார். அம்மையாருக்கு விடுதலை வேட்கை நிரம்ப இருந்த போதிலும் பெண் விடுதலையையே முதன்மை நோக்கமாகக் கொண்டிருந்தார்; முதன்மைப் பணியாகவும் கொண்டு செயல்பட்டார். தமது முப்பத்து எட்டாவது அகவையின் போது காங்கிரசில் சேர்ந்தார் (1921). அப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்த பெரியார், திரு.வி.க., வரதராஜூலு போன்றவர்கள் தேவதாசி முறை ஒழிப்புக்காகக் குரல் கொடுத்து வந்தனர். அவர்களால் ஈர்க்கப்பட்டதும் காங்கிரசில் இராமாமிர்தம் இணைந்ததற்கு ஒரு காரணம்.

பேரளத்தில் காங்கிரசு மாவட்ட மாநாடு திரு.வி.க. தலைமையில் நடைபெற்றது. அந்நாளில் காங்கிரசின் ஒரே பெண் பேச்சாளரான இராமாமிர்தம் கலந்து கொண்டு தேவதாசிகளை மீட்டு அவர்களுக்கு நல் வாழ்வினை வழங்க வேண்டுமென்று சிறப்பாகச் சொற்பொழிவாற்றினார். அவர் பேச்சைக் கேட்ட தாசிகள் சிலர், தாசித் தொழிலை விட்டுவிட முன்வந்தனர், அம்மையார் மெத்த மகிழ்ந்தார்.

காந்தியார், வீட்டு வேலைகளுக்கு ஆதித்திராவிடர்களைப் பணியில் அமர்த்த வேண்டும், என்று அறிவித்தார். இராமாமிர்தம் அம்மையார் தன் வீட்டுப் பணிகளுக்கு இரத்தினம் என்ற ஆதித்திராவிடப் பெண்ணை அமர்த்திக் கொண்டார்.

காங்கிரசில் பிராமணர்கள் ஆதிக்கம் மிகுந்திருந்தது. அவர்கள் தேவதாசி முறை ஒழிப்பிற்கு எதிராக இருந்தனர்.

பெரியாரின் வகுப்புரிமைத் தீர்மானம் அவர்களுக்கு எட்டிக்காயாக இருந்தது. 1919 முதல் 1925 வரை தொடர்ந்து காங்கிரஸ் மாநாடுகளிலும் கமிட்டிக் கூட்டங் களிலும் வகுப்புரிமைக்காகப் போராடி வந்தார் பெரியார். தமிழ்நாடு காங்கிரசின் செயலாளராகவும் தலைவரா கவும் திகழ்ந்த பெரியாரின் வகுப்புரிமை கோரிக்கை 1919 (திருச்சி), 1920 (திருநெல்வேலி), 1921 (தஞ்சை), 1922 (திருப்பூர்), 1923 (மதுரை, திருச்சி, சேலம்) ஆண்டுகளில் ஏற்கப்படவில்லை. பின்னர் 22-11-1925 இல் காஞ்சியில் நடைபெற்ற தமிழ்நாடு மாகாண காங்கிரசு மாநாட்டில் வகுப்புரிமைத் தீர்மானத்தைக் கொணர்ந்தார்; அத்தீர்மானம் வகுப்புவாதத் தீர்மானம் என்று சொல்லி நிராகரிக்கப்பட்டது. மாநாட்டுப் பந்தலிலேயே, காங்கிரசால் பிராமணர் அல்லாதார் நன்மை பெற முடியாது, காங்கிரசை ஒழிப்பதே தம் வேலை என்று கூறி காங்கிரஸிலிருந்து பெரியார் வெளியேறினார். அவருடன் இராமாமிர்தம் அம்மையாரும் விலகினார்.

அன்றிலிருந்து சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் எல்லாவற்றிலும் முறையே பணியாற்றி வந்திருக்கிறார். மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரும் டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி அவர்களும் நல்ல நண்பர்கள்.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரும், பெரியாரும், சுயமரியாதை இயக்கத்தாரும் தேவதாசி முறையை ஒழிக்கத் தீவிரமாக மக்களிடம் பரப்புரையாற்றி வந்த காலத்தில் டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி அவர்களும் சட்டமன்றத்தில், தேவதாசி முறை ஒழிப்புச் சட்ட மசோதாவை 1929ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் நாள் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே நிறைவேற்றினார். இந்த மசோதாவை எதிர்த்து அன்றைய காங்கிரசு தலைவர் சத்தியமூர்த்தி ஐயர் பேசியது :

“தாசிக்குலம் தோன்றியது நம்முடைய காலத்தில் அல்ல; நாமும் அந்தக் குலத்தைத் தோற்றுவிக்க வில்லை. வியாசர், பராசரர் காலத்திலிருந்து அந்தக் குலம் இருந்து கொண்டிருக்கிறது. இப்படிக் கூறுவதால் என்னைத் தாசிக்கள்ளன் என்றும் அழைக்கலாம். அதைப்பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. தாசிகள் இல்லையென்றால் சமூகத்தின் ஒழுக்கம் கெட்டுவிடும்.

எனவே இச்சமூகம் கெட்டுச் சீரழியாமல் இருக்க, தாசிகள் தேவை என்பதை திரும்பத் திரும்பச் சொல்ல விரும்புகின்றேன். தாசிகள் கோயில் பணிக்கென்று ஆண்டவனால் படைக்கப் பட்டவர்கள்.

அது சாஸ்திர சம்பந்தமானது. தாசிகளை ஒழித்துவிட்டால், பரதநாட்டியக் கலையும், சங்கீத மும் அழிந்துவிடும். ஆண்டவன் கட்டளையை மீறுவது அடாத செயலாகும். அநியாயமாகும். இன்று தேவதாசித் தொழிலை நிறுத்தினால், இராமசாமி நாயக்கர் அர்ச்சகர் தொழிலை நிறுத்தச் சட்டம் செய்ய வந்துவிடுவாரே” என்று பேசினார்.

சத்தியமூர்த்தி, அந்நாளில் நாடறிந்த புகழ்பெற்ற, பேச்சாற்றல் மிக்க காங்கிரசு இயக்கத் தலைவர். அவர் இவ்விதம் கேவலமாகப் பேசுவார் என்று எவரும் நினைத்திருக்கவில்லை.

இவர் பேச்சுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மிகத் தெளிவாகப் பதிலுரைத்தார். “கனம் எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் தேவதாசி ஒழிப்புத் தீர்மானத்தைத் தீவிரமாக எதிர்த்துப் பேசியுள்ளார். உங்களுக்கு அக்கா, தங்கைகள் இல்லையா? பெண்கள் இல்லையா? மனைவி இல்லையா? உங்கள் குடும்பத்திலிருந்து எந்தப் பெண் களையாவது இதுபோன்ற தொழிலுக்கு அனுப்புவீர் களா? இதுநாள்வரை, பிற்பட்ட சமூகப் பெண்கள் தேவதாசிகளாக இருந்து கடவுளுக்குப் பணியாற்றியது போதும். இனி கோயில் பணிக்காக ஆண்டவனுக்குச் சேவை செய்திட மேல்சாதிப் பெண்கள் பொட்டுக் கட்டிக்கொள்ள முற்பட்டால், மகிழ்ச்சி” என்றார். அப்போது சட்டசபை அதிர்ந்து ஸ்தம்பித்து நின்றுவிட்டது.

இவ்வாறு 1929இல் தொடங்கிய தேவதாசி முறை ஒழிப்புக்கான முயற்சி 1947ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் சட்டமாக்க தீர்மானித்து இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இராமாமிர்தம் அம்மையார் 1937 முதல் 1940 வரை நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போரில் கலந்து கொண்டார்; அதற்காக 1938 நவம்பரில் ஆறு வாரங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்,

காங்கிரசு மேடைகளில் அந்த நாளில் ஒரே ஒரு பெண் மேடைப் பேச்சாளராக இருந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் தேவதாசி முறை, குழந்தை மணம், உடன்கட்டை ஏறுதல் ஆகிய சமூகக் கொடுமைகளை எதிர்த்துப் பேசி வந்துள்ளார்; போராடி வந்துள்ளார்.

சுயமரியாதை இயக்கத்தில் பெரியாருடன் இணைந்து சமூகக் கொடுமைகளையும், சாதிய வேற்றுமைகளையும் கொடுமைகளையும், எதிர்த்துக் களமாடியுள்ளார்; மேலும் மூடநம்பிக்கைகள், மூடப்பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை எதிர்த்துப் பேசியும் எழுதியும் வந்துள்ளார்;

1936இல் தாசிகள் மோச வலை அல்லது மதிபெற்ற மைனர் என்ற புதினத்தை எழுதி வெளியிட்டார். இந்தப் புதினம் தேவதாசிகளின் அவல வாழ்வையும், தன் பட்டறிவுகளையும் அடிப்படையாகக் கொண்டு விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்ட நூலாகும். இந்த நூல் ஒரு வரலாற்று ஆவணமாகும்.

அவர் அண்ணா, சிவாஜி கணேசன், டி.வி. நாராயணசாமி ஆகியோரின் நாடகங்களில் அன்னை வேடத்தில் தொடர்ந்து நடித்தார்.

அவர் குடியரசு இதழில் பல பகுத்தறிவு கட்டுரைகள் எழுதியுள்ளார். அண்ணாவின் திராவிட நாடு இதழில் தமயந்தி என்றொரு சிறுகதையும் எழுதியுள்ளார். இஸ்லாமும் இந்தியர்களின் நிலைமையும் என்ற நூலையும் எழுதியுள்ளார்.

அரசியலிலும், கலைத்துறையிலும், சமுதாய சீர்கேடுகளை ஒழிப்பதிலும் அம்மையார் தளராது இறுதி வரை பணியாற்றியுள்ளார். கண்பார்வை மங்கி விட்ட நிலையில், மயிலாடுதுறையில் தன் மகனுடன் சிறுவர்களுக்குப் பாடம் போதித்தப்படித் தன் இறுதிக் காலத்தைக் கழித்தார்.

அந்த உறக்கமறியா பெண் விடுதலைப் போராளி தன் எண்பதாவது அகவையில் 26-6-1962 அன்று மறைவுற்றார்.

நினைவுத் திட்டம்

1989ஆம் ஆண்டு கலைஞர் திரு. மு. கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசு 8ஆம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களின் திருமண நிதித் தொகை ரூபாய் 5,000/-த்தை 1500 பெண்களுக்கு வழங்க முடிவு செய்தது. அதற்கு மூவாட்டி இராமாமிர்தம் அம்மையாரின் நினைவாக மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டது.

வாழ்க மூவலூர் மூதாட்டி புகழ்!

-  மரு. க.சோமாஸ்கந்தன்