ஜாதி ஒழிய வேண்டும் என்று அனைத்துத் தளங்களிலும் தந்தை பெரியார் வேலை செய்தார். நாத்திகரான பெரியார் கோவில் நுழைவுப் போராட்டங்களை நடத்தினார். சாதியைப் பாதுகாக்கும் புராணங்களை கொளுத்தினார்.

சாதியைப் பாதுகாக்கும் சட்டங்களை கொளுத்தினார். சாதியைப் பாதுகாக்கும் சடங்குகளை கண்டித்தார். சாதிக்கு எதிராக கிளர்ந்து எழுந்து போராடுவதற்கு மக்களுக்கு உணர்வு ஊட்டினார். இந்தப் போராட்டங்களில் கர்ப்பக்கிரக நுழைவுக் கிளர்ச்சியும் ஒன்று.

non brahmin gurukkalகலைஞர் ஆட்சிக்கு வந்த பின்பு கர்ப்பக்கிரக நுழைவு கிளர்ச்சியை தந்தை பெரியார் அறிவிக்கிறார். ஐயா இது உங்க ஆட்சி. நீங்க போராடலாமா என்று பெரியாரிடம் சொன்ன கலைஞர் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் சட்டம் கொண்டு வந்தார்.

தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை சட்டம் 1959 தமிழ்நாட்டில் இந்து அற நிலையத்துறையின் கட்டுபாட்டில் உள்ள அனைத்து கோயில்களையும் நிர்வகிக்க ஏற்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் 55 வது பிரிவு அர்ச்சகர்கள் நியமனம் பற்றி பேசுகிறது. இச்சட்டத்தின் படி வாரிசுரிமை படி அர்ச்சகர்கள் நியமிக்கப்படவேண்டும். 

1970 ல் கலைஞர் தலைமையிலான திமுக அரசு மேற்கண்ட சட்டத்தின் 55(2) பிரிவை திருத்தியது. செய்த திருத்தம் என்னவெனில் "வாரிசுரிமையின் படி அர்ச்சகர்கள் நியமிக்கப்படக்கூடாது".

இதை எதிர்த்து சேஷம்மாள் என்பவர் உச்சநீதிமன்றம் போனார். ”தமிழக அரசின் சட்டதிருத்தம் செல்லும். அதே வகையில் ஆகம விதிகளுக்கு உட்பட்டு அர்ச்சகர் நியமனம் இருக்கவேண்டும்" என உச்சநீதிமன்றம் 1972 இல் தீர்ப்பெழுதியது. ஆபரேசன் சக்சஸ், நோயாளி அவுட் என பெரியார் தீர்ப்பை விமர்சித்தார்.

பெரியார் 1973 இல் இறந்து விடுகிறார். கலைஞர் ஆட்சி முடிந்து எம்ஜிஆர் ஆட்சி வருகிறது. ஆகம கோயில்களை கண்டறிய நீதிபதி மகாராசன் குழு உருவாக்கப்பட்டது. ஆனாலும் தமிழ் நாட்டு கோயில்களில் 2006 வரை பார்ப்பனரல்லாதவர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்படவில்லை.

2002ம் ஆண்டு கேரளாவில் ஈழவர் சமூகத்தைச் சேர்ந்தவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார். பார்ப்பனர் அல்லாதவரை அர்ச்சகராக திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு நியமித்ததை எதிர்த்து ஆதித்யன் என்ற மலையாள நம்பூதிரி பார்ப்பனர் தொடர்ந்த வழக்கை அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என கேரள உயர்நீதின்றம் தள்ளுபடி செய்துவிட்டது. 

இவ்வழக்கில் அரசியல் சாசனத்தின் 17வது பிரிவின்படி, பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவது மனித உரிமைக்கு எதிரானது. தீண்டாமைக் குற்றம் எனக் கூறியதுடன் பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக முடியும் என்பதை ஏற்க முடியாது எனக் கூறியது. 

அதன் பின்னர் 2006ம் ஆண்டு தமிழக அரசு, தேவையான தகுதியையும் பயிற்சியையும் பெற்றுள்ள இந்து மதத்தை சேர்ந்த எவரும் இந்துக் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப் படலாம் என்ற அரசாணையை (எண் 118) வெளியிடுகிறது. அதன் பின்னர் அன்றைய கலைஞர் அரசு The Tamil Nadu Act No. 15 of 2006 என்ற சட்டத்திற்கு 29.08.2006 அன்று ஆளுஞரிடம் ஒப்புதல் பெறுகிறது.

அதே ஆண்டில் கலைஞர் அரசால் நியமிக்கப்பட்ட ஏ.கே ராஜன் குழுவின் பரிந்துரையின் பேரில் அர்ச்சகர் பயிற்சிப்பள்ளிகள் திறக்கப்பட்டன. 240 மாணவர்கள் பயிற்சியில் இணைந்தனர். 207 பேர் பயிற்சியை முழுமையாக முடித்தனர்.

இதற்கிடையில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம் நீதிமன்றத்தை அணுகி, அனைத்து அர்ச்சகர் பணி நியமனத்திற்கு இடைக்கால தடை உத்தரவைப் பெற்றது.

பயிற்சி பெற்ற மாணவர்கள் 2008 ஆம் ஆண்டில் தீட்சை முடித்துவிட்ட நிலையில், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஆனால், வழக்கின் முடிவின் அடிப்படையில்தான் பணி நியமனங்கள் இருக்குமெனத் தெரிவிக்கப்பட்டது.

அந்த வழக்கின் இறுதி தீர்ப்பு 2015 டிசம்பர் மாதத்தில் வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் தமிழக (கலைஞர்) அரசின் 2006 ஆம் ஆண்டு அரசாணைக்கோ அனைத்து ஜாதியினர் அர்ச்சகராவதற்கோ உச்சநீதிமன்றம் தடை விதிக்கவில்லை. அப்படி அனைத்து சாதி அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் யாரேனும் இருந்தால் தனித்தனியாக நீதிமன்றத்தில் முறையிட்டுக் கொள்ளுங்கள் என்றது உச்சநீதிமன்றம்.

2011-2021 வரையிலான அதிமுக ஆட்சியில், மதுரையில் அழகர் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சிறிய ஐயப்பன் கோவிலில் மாரிமுத்து என்ற பயிற்சிபெற்ற மாணவரும் (2018) மதுரை நாகமலைப் புதுக்கோட்டையில் உள்ள பிள்ளையார் கோவில் ஒன்றில் தியாகராஜன் என்ற பயிற்சி பெற்ற மாணவரும் (2020) அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். இவை சிறு கோயில்கள். பெரிய கோயில்கள் அல்ல.

மேலும், 2020ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் அர்ச்சகர்கள் உட்பட அனைத்துப் பணியாளர்களின் நியமன விதிகள் கொண்டுவரப்பட்டன. அந்த புதிய விதிகளின்படி, அர்ச்சகராக சேர்வோர் 18 வயதிலிருந்து 35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டுமென்றும் அரசு அமைத்த அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி உட்பட ஏதேனும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் பின்னர் 2021ஆம் ஆண்டு தி.மு.க. அரசு பதவியேற்ற 100 வது நாளில், ஆகஸ்ட் 14 ஆம் தேதி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி முடித்த 28 பேருக்கு பணிகள் வழங்கப்பட்டன. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் உள்ளிட்ட பெருங்கோயில்களிலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களில் 4 பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். பணி நியமனம் வழங்கிய கையோடு பெரியார் திடலுக்கும் சென்றார் முதல்வர் ஸ்டாலின்.

இந்த நியமனங்களை எதிர்த்தும், 2020 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட புதிய விதிகளை எதிர்த்தும் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்கின் தீர்ப்பு இப்போது வந்துள்ளது.

தமிழ்நாடு அரசின் புதிய விதிகள் செல்லும் என தீர்ப்பளித்த சென்னை நீதிமன்றம், ஆகம விதிகளின்படி இயங்கும் கோவில்களைக் கண்டறிய ஐந்து பேர் கொண்ட குழுவை நியமிக்கவும் உத்தரவிட்டிருக்கிறது. 

இந்த தீர்ப்பை ஆசிரியர் வீரமணி வரவேற்றார். திமுக நாளிதழ் முரசொலி வரவேற்று கட்டுரை எழுதியுள்ளது. ஈரோட்டில் ஆகஸ்டு 26 ஆம் தேதி பேசிய முதல்வர் ஸ்டாலின் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை சென்னை உயர்நீதிமன்றம் சட்டப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது என வரவேற்று மகிழ்ந்துள்ளார்.

இருப்பினும், கோவில்களை ஆகம அடிப்படையில் பிரிப்பதென்பது மறுபடியும் ஜாதி சார்ந்த நியமனங்களுக்கு வழிவகுக்கலாம் என என்று அச்சம் தெரிவிக்கிறார் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவரான ரங்கநாதன்.

அனைத்து சாதி அர்ச்சகர் உரிமைக்காக நீதிமன்றத்திலும் மக்கள் மன்றங்களிலும் தொடர்ந்து பணிசெய்த மக்கள் கலை இலக்கியத்தை சேர்ந்த முன்னாள் உறுப்பினர்கள் தோழர் மருதையன், வழக்கறிஞர் தோழர் வாஞ்சிநாதன் உள்ளிட்டோர் இது தோல்வி என அஞ்சுகின்றனர்.

சமீபத்திய தீர்ப்பு தோல்வியா?

புதிய தீர்ப்பில் உள்ள கீழ்க்காணும் இரண்டு விஷயங்கள் அச்சத்திற்கு ஆதாரமாக அமைந்துள்ளன.

  1. ஆகமங்களின் படி கட்டப்பட்ட கோயில்களை கண்டறிய ஐந்து பேர் குழுவை அமைக்க வேண்டும்.
  2. அவ்வாறு கண்டறியப்படும் ஆகமக் கோயில்களில் ஆகம விதிகளுக்கு உட்பட்டு அர்ச்சகர் நியமனம் செய்யப்பட வேண்டும். அவ்வாறு அமைக்கப்படும் ஆணையம் புதிய குழப்பங்களை உருவாக்கலாம் என அச்சமடையவும் வாய்ப்புண்டு.

மேற்கண்ட அம்சங்கள் இந்த தீர்ப்பில் இருந்தாலும் அவை புதிதாக சொல்லப்பட்டதல்ல. சேஷம்மாள் வழக்கிலும் (1972), 2015 ஆம் ஆண்டு சொல்லப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலும் சொல்லப்பட்ட எந்த உத்தரவையும் தற்போதைய தீர்ப்பு மீறவில்லை. மேலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை உயர் நீதிமன்றத்தால் மீறவும் முடியாது.

இந்த தீர்ப்பில் சில அம்சங்கள் பாதகமாக இருந்தாலும், பல சாதகமான அம்சங்கள் உள்ளன.

அனைத்து சாதி அர்ச்சகர் நியமனம் என்ற குறிக்கோளை நோக்கி, கலைஞர் அரசால் கொண்டுவரப்பட்ட இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை சட்டத்தின் பிரிவு 55, 56, 116 ஆகியவற்றில் செய்யப்பட்ட திருத்தச் சட்டம் (1970), 2006 ஆம் ஆண்டு அரசாணை (எண் 118), தமிழ் நாடு சட்டம் 15 2006 [Tamil Nadu Act No. 15 of 2006] ஆகிய சட்டங்களையும், எடப்பாடி அரசு கொண்டு வந்த தமிழ்நாடு இந்து மத நிறுவன ஊழியர்கள் (சேவை நிபந்தனைகள்) விதிகள் 2020 [THE TAMIL NADU HINDU RELIGIOUS INSTITUTIONS EMPLOYEES (CONDITIONS OF SERVICE) RULES, 2020] சட்டத்தையும் உச்சநீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் செல்லாது என தீர்ப்பளிக்கவில்லை.

ஆதித்யன் Vs திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு வழக்கின் (2002) தீர்ப்பு அனைத்து சாதி அர்ச்சகர் என்ற கருவறைத் தீண்டாமை ஒழிப்பு புரட்சியை கேரளத்தில் சாத்தியப்படுத்தினாலும், மதுரை சிவாச்சாரியார்கள் தொடர்ந்த வழக்கின் உச்ச நீதிமன்ற இடைக்காலத் தடை காரணமாக தமிழகத்தில் அனைத்து சாதி அர்ச்சகர் சாத்தியப் படவில்லை.

மதுரை ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம் 2006 ஆம் ஆண்டு தொடுத்த வழக்கில் 2015 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து, இடைக்காலத் தடையை நீக்கிய பின்னர் கிட்டத்தட்ட அனைத்து சாதி அர்ச்சகர் ஆவதற்கான அனைத்து சாத்தியக் கூறுகள் உருவான பின்னும் அன்றைய அதிமுக அரசு பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும் 2020 ஆம் ஆண்டு கோயில் பணியாளர்கள் பணி நிபந்தனை விதிகளை உருவாக்கியது. அந்த விதிகளைப் பின்பற்றியே 2021 ஆகஸ்டு 14 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் கலைஞர் அரசு அமைத்த அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சி பெற்ற 28 மாணவர்கள் பணி நியமனம் பெற்றனர்.

சமீபத்திய சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு 28 நபர்களின் பணி நியமனங்களையோ, எடப்பாடி அரசு உருவாக்கிய கோயில் பணியாளர்கள் பணி நிபந்தனை விதிகளையோ செல்லாது என அறிவிக்கவில்லை. கலைஞர் அரசு ஆரம்பித்த அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளையும் செல்லாது என எந்த தீர்ப்பும் அறிவிக்கவில்லை.

மேலும், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேல் செயல்படாமல் இருந்த ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை மீண்டும் துவங்கியிருக்கிறது தமிழ்நாடு அரசு. புதிதாக மூன்று பயிற்சிப் பள்ளிகளும் தற்போது திறக்கப் பட்டுள்ளன. ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் உள்ளிட்ட ஒன்பது பயிற்சிப் பள்ளிகளும் உண்டு உறைவிட பள்ளியாக செயல்படுவதோடு, பயிற்சி பெறும் ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் மூன்றாயிரம் ரூபாய் அளிக்கப்படும் என்றும் திமுக அரசால் அறிவிக்கப்பட்டு, ஒன்பது பயிற்சிப் பள்ளிகளிலும் 197 மாணவர்கள் புதிதாக சேர்க்கப் பட்டுள்ளனர்.

இதன் பொருள் என்னவெனில், அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பள்ளிக்கும் அனைத்து சாதி அர்ச்சகர் பணி நியமனங்களுக்கும் சட்டப்பூர்வமான அங்கீகாரம் கிடைத்துள்ளது.

எனவே தான், ”அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சமூக நீதி எண்ணத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் சட்டப்பூர்வமான அங்கீகாரம் கொடுத்துவிட்டது. ஆலயங்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப் படுபவர்கள் அதற்கான உரிய பயற்சி பெற்றிருந்தால் போதும். அது தான் நம்முடைய கருத்து. இதில் சாதி ஓரு அளவுகோலாக இருக்கக் கூடாது. இத்தகைய சமூக நீதியை காக்கக்கூடிய அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று சிலர் நீதிமன்றம் போனார்கள். வழக்கு தாக்கல் செய்தார்கள். அதற்கு தடை போட சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. தந்தை பெரியாரும் தலைவர் கலைஞரும் இன்றைக்கு இருந்திருந்தால், எப்படி மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். ஆக, இது நமது கொள்கைக்கு கிடைத்த வெற்றி” என முதல்வர் ஸ்டாலின் உயர் நீதிமன்றத் தீர்ப்பை தனது அரசின் கொள்கைக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறார்.

இனி தமிழக அரசு செய்யவேண்டியது என்ன?

  1. அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை தொடர்ந்து நடத்த வேண்டும்.
  2. அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சி பெறும் மாணவர்களை காலியாகும் அர்ச்சகர் பணி இடங்களில் நியமிக்க வேண்டும்.

செய்யுமா தமிழக அரசு?

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகிட வழிகாணாமல், இவர்களை எல்லாம் நான் விட்டுச்செல்கிறேனே என்பது பெரியாரின் கவலையாகும். பெரியாரின் நெஞ்சில் தைத்த அந்த முள்ளை அகற்றாமல் புதைத்துவிட்டோம் என்றார் கலைஞர்” என்று எழுதியுள்ள முரசொலி, முள் முனையை முறித்துவிட்டது தீர்ப்பு. முழுமையாகவே அகற்றியாக வேண்டும் என தன் உறுதியை வெளிப்படுத்தி இருக்கிறது.

முரசொலி வெளிப்படுத்தியுள்ள உறுதியை திமுக அரசு வரும் நாட்களில் செயலில் காட்டுமானால், அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியும், பணி நியமனமும் தொடர வேண்டும்.

அவ்வாறு தொடராமல், 24 அர்ச்சகர் பணி நியமனங்களோடு நின்று விடுமானால், பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் நிரந்தரமாக தங்கிவிடும்.

- சு.விஜயபாஸ்கர்

Pin It