திரிபுவாத திம்மன்கள் - யார்? (2)
"பெரியாரைப் பரப்புவதைவிட, திரிபுவாத திம்மன்களிடமிருந்தும், சுயநல துரோகிக் கூட்டத்திலிருந்தும் அவரைப் பாதுகாப்பதே முக்கியம்" - என்று கடந்த 2008, செப்.30 ஆம் தேதி 'விடுதலை' ஞாயிறு மலரில் ஒரு கேள்விக்கு கி.வீரமணி பதிலளித்திருக்கிறார். திரிபுவாதிகளுக்கு அவர் அழகான சொற்றொடரை பட்டமாக வழங்கியுள்ளார்! அதற்கு நன்றி தெரிவித்து, "திரிபுவாதி திம்மன்கள்" பற்றிய இந்தத் தொடரைத் தொடருகிறோம்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கு வழி செய்யும் சட்டத்தை தமிழக சட்டமன்றத்தில் பெரியார் உயிருடன் இருக்கும்போதே கொண்டு வந்து நிறைவேற்றியது. இந்த சட்டத்தை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் பார்ப்பனர்கள் வழக்கு தொடரவே உச்சநீதிமன்றம் சட்டத்தை முடக்கும் தீர்ப்பை 14.3.1972 இல் வழங்கியது.
சூத்திர இழிவை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியதால் பொங்கி எழுந்த பெரியார் 1972 முதல் 1973 ஆம் ஆண்டு டிசம்பர் 19 வரை தனது பேருரைகளிலும், தலையங்கங்களிலும், கட்டுரைகளிலும் உச்சநீதிமன்றத்தைக் கடுமையாக சாடினார். 28.5.1972 இல் சென்னையில் தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டைக் கூட்டினார். உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து அரசியல் சட்டத்தைத் திருத்தி அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கப்பட வேண்டும் என்ற கருத்தையே பெரியார் வலியுறுத்தி வந்தார்.
"இந்திய அரசியல் சட்டம் என்பது சமுதாயத் தன்மையைப் பொறுத்தவரை மனுதர்மம் என்னும் பார்ப்பன உயர் வாழ்வுக்குப் பாதுகாப்பு கொடுக்கும் சட்டமாகவே பார்ப்பனராலேயே உண்டாக்கப்பட்ட சட்டமாகையால் அதை மாற்றியமைக்க வேண்டியது மிக மிக அவசியமானது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது" என்று அம்மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் இழிவு ஒழிப்பு மாநாட்டு உரை, பெரியார் பேச்சு, தீர்மானங்கள், விடுதலை தலையங்கங்களையும் சேர்த்து 'பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் சார்பில் "கோயில் பகிஷ்காரம் ஏன்?" என்ற தலைப்பில் நூலாக 1972 இல் வெளியிடப்பட்டது. அதன் இரண்டாம் பதிப்பு 1982 இல் வெளி வந்தது.
11 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு 1993 இல் "அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?" என்று சுயமரியாதை பிரச்சார நிறுவனம் வெளியிட்ட நூலில் - உச்சநீதிமன்றத் தீர்ப்புக் குறித்து பெரியார் கூறிய கருத்துகளும், பெரியார் காலத்தில் திராவிடர் கழகத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் முழுமையாக இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டன. இதற்குப் பெயர் என்ன?
அது மட்டுமல்ல, மேற்குறிப்பிட்ட அதே வெளியீட்டில் 5.4.1972 அன்று பெரியார் சென்னை கடற்கரைப் பேருரையின் ஒரு பகுதி வெளியிடப்பட்டிருந்தது. அதில் அரசியல் சட்டத்தாலும், உச்சநீதிமன்றத்தாலும் நாம் நாதியற்றவர்களாக்கப்பட்டு விட்டோம் என்று பெரியார் பேசிய கீழ்க்கண்ட பகுதியை நீக்கிவிட்டு வெளியிட்டுள்ளார்கள். "இன்றுள்ள அரசியல் சட்டத்திடையே, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினாலே நாம் நாதியற்றவர்களாக ஆக்கப்பட்டு இருக்கிறோம். இதற்கு நாம் பரிகாரம் காண வேண்டும். அதற்காகவே மே 7 ஆம் தேதி சென்னையில் திராவிடர் கழக மாநில மாநாட்டினைக் கூட்டி, அதில் முடிவு செய்து, மக்கள் மத்தியில் நடைமுறைக்குக் கொண்டு வருவோம்."
அரசியல் சட்டத்தையும், உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் கண்டித்து, பெரியார் தெரிவித்த கருத்துகள் 1972 ஆம் ஆண்டில் "கோயில் பகிஷ்காரம் ஏன்?" என்ற தலைப்பில் நூலாக வெளி வந்தபோது இடம் பெற்ற பகுதிகள் வீரமணி காலத்தில் "அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?" என்று தலைப்பிடப்பட்டு வரும்போது அதில் மட்டும் பெரியார் கருத்துகள் இருட்டடிக்கப்பட்டது ஏன்? அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பு தடை ஏதும் விதிக்கவில்லை என்று, கி.வீரமணி தனது கருத்தை மாற்றிக் கொண்டதே இதற்குக் காரணம். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி கி.வீரமணி அவ்வப்போது வெவ்வேறு கருத்து வெளியிட்டு வந்திருக்கிறார்:
தந்தை பெரியார் வாழும் காலம் வரை அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று பெரியார் கருத்தை வலியுறுத்தி வந்தார். அய்யாவுக்குப் பிறகு அன்னை மணியம்மையார் தலைமைக்கு வந்தபோதும் அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற கருத்தே திராவிடர் கழக சார்பில் முன்வைக்கப்பட்டது. பிறகு எம்.ஜி.ஆர். முதல்வராக வந்த பிறகு இது பற்றி ஆராய நீதிபதி மகராசன் தலைமையில் 24.9.1979 இல் ஒரு குழு அமைக்கப்பட்டு, அக்குழுவின் பரிந்துரை 27.8.1982 இல் வெளியிடப்பட்டது.
ஆகமப்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகத் தடை ஏதும் இல்லை என்று குழு கூறியது. ஆனாலும், இக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற அரசியல் சட்டத்தில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்றும் நீதிபதி மகராசன் கூறியிருந்தார்.
அரசியலமைப்போடு மோதுதலைத் தவிர்த்து, பாதுகாப்பு வளையத்துக்குள் பதுங்கிக் கொள்ளும் குணாம்சத்தைக் கொண்ட வீரமணி, அரசியல் சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்பது மகராசனின் தனிப்பட்ட கருத்து என்று வியாக்யானம் செய்து, சட்டத்திருத்தம் செய்யாமலே மகராசன் குழுவின் பரிந்துரையை அமுலாக்க முடியும் என்று பேச ஆரம்பித்து விட்டார்.
இவருக்கு வாதத்தை எடுத்துக் கொடுத்தவர் மறைந்த நீதிபதி கே. வேணுகோபால், வீரமணி தனது நிலையை மாற்றிக் கொண்டுவிட்டதால், 'சட்டத்தைத் திருத்த வேண்டும்' என்று பெரியார் தெரிவித்த கருத்துகள் கி.வீரமணி வெளியிட்ட நூலில் இருட்டடிப்புக்குள்ளாக்கப்பட்டன. வீரமணி தனது கருத்துக்கு ஏற்ப பெரியார் கருத்தை இருட்டடித்தார்.
இதிலே இன்னுமொரு புரட்டையும் வீரமணி செய்தார். 1982 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் கி.வீரமணி, உச்சநீதிமன்றத்தின் சட்டத்துக்கு புதிய வியாக்யானம் தரத் தொடங்கினார். அதுதான் உச்சநீதிமன்றத் தீர்ப்பு அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகராக தடை விதிக்கவில்லை என்ற வியாக்யானம். தமிழக அரசு மகராசன் குழுவை நியமித்ததோ - 1979 ஆம் ஆண்டில். இதற்கும் 'அறிவுசார் சொத்துரிமை' கோர முடிவு செய்துவிட்ட கி.வீரமணி, ஒரு போடு போட்டார். தாம், இப்படி ஒரு கருத்தை கூறிய பிறகு தான், எம்.ஜி.ஆர். அரசு ஏற்றுக் கொண்டு மகராசன் குழுவையே நியமித்தது என்று கூறிவிட்டார்.
அதாவது, 1982 இல் இவர் தெரிவித்த கருத்தையேற்று, 1979 இல் எம்.ஜி.ஆர். அரசு மகராசன் குழுவை நியமித்ததாம்! "அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் - ஏன்?" என்ற நூலிலேயே இந்த 'அறிவுசார் அபத்தங்களும்' இடம் பெற்றுள்ளன!
அதன் பிறகு 'கேரள தேவஸ்வம் போர்டு' நிர்வாக உத்தரவின் மூலம் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கியிருக்கும் ஆணையை எடுத்துக்காட்டி, கி.வீரமணி, அரசே நேரடியாக ஆகமப் பள்ளிகளைத் தொடங்கும் யோசனையை முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் முன் வைத்தார். மகராசன் குழு பரிந்துரை செய்ததோ, ஆகமப்பாடசாலைகளை அமைக்க வேண்டும் என்பதாகும். ஆனால் ஜெயலலிதா அறிவித்ததோ வேத-ஆகமப் பாடசாலைகளை அமைக்கும் திட்டம். ஆகமப் பாடசாலையில் வேதம் எதற்கு என்ற கேள்வியை எழுப்ப வேண்டிய வீரமணி, அதற்கும் திரிபுவாதம் செய்தார்.
"வேத ஆகமம் படிக்க வேண்டும் என்று கூறப்படுகிறதே என்றால், அது புதிதாக இப்போது ஏற்படும் நிலை அல்ல. தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டத்திற்கு முன்பிருந்த நிலைதான்" (ஆதாரம்: 'அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் - ஏன்?' நூல்) என்று வீரமணி சமாதானம் கூறினார். பழுத்த ஆத்திகவாதியான நீதிபதி மகராசன், வீரமணியைவிட முற்போக்காளராகவே இருக்கிறார். ஆகமப் பயிற்சிப் பள்ளியில் வேதம் கற்பிக்கத் தேவையே இல்லை என்றார் மகராசன்.
"பூசையை சமஸ்கிருதத்தில் தான் செய்ய வேண்டும்; தமிழில் செய்யக் கூடாது என்று ஆகமத்தில் எங்கும் சொல்லவில்லை" (மகராசன் குழு பரிந்துரை; தமிழ் அர்ச்சனை பற்றிய குறிப்பு; பத்திகள் 12, 13) என்று மகாராசன் அடித்துக் கூறினார். ஆனால், சமஸ்கிருத வேதத்தைக் கற்பிப்பதற்கு ஆதரவாக வாதாடினார் கி.வீரமணி! ஏன்? பார்ப்பன ஜெயலலிதாவின் 'வேத ஆகமப் பாடசாலை' அறிவிப்பை நியாயப்படுத்த வேண்டும் என்ற துடிப்பு; ஜெயலலிதாவின் ஆதரவைப் பெறத் துடிக்கும் அவரது 'யுக்தி' கொள்கையை தோற்றோடச் செய்து விட்டது.
மீண்டும் சட்டத்திருத்தம் செய்யப்படாமலே இப்போது கலைஞர் ஆட்சியில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு வந்தது! மரபுகளை மாற்றக் கூடாது என்றது உச்சநீதிமன்றம். தமிழக அரசு எதிர் வழக்காடவில்லை. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் பயிற்சிப் பள்ளிகளை தி.மு.க. ஆட்சி திறந்தது. கி.வீரமணி - தஞ்சை வல்லத்தில் கலைஞருக்கு பாராட்டு விழாவை நடத்தி முடித்தார். பெரியார் லட்சியம் நிறைவடைந்துவிட்டது என்று அறிவித்தார். இனி - கலைஞர் ஆட்சி செய்வதற்கு ஏதுவுமில்லை. எல்லாமுமே முடிந்துவிட்டது என்றார். இப்போது என்ன நிலை?
கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி 'இந்து' நாளேட்டில் அதிர்ச்சியான செய்தி வெளி வந்துள்ளது. அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் ஓராண்டு பயிற்சியை முடித்த அனைத்து சாதியைச் சார்ந்த மாணவர்கள் 207 பேரும் ஓராண்டு பயிற்சியை முடித்துவிட்டு, எந்தக் கோயிலிலும் பணி நியமனமின்றி தவிக்கின்றனர்; வேறு வேலைக்குப் போக வாய்ப்புகளைத் தேடுகிறார்கள்; காரணம் - உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு முடியும் வரை - இவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க முடியாது என்று அரசு கூறிவிட்டது. கலைஞர் சாதுர்யமாக காயை நகர்த்தியதாக புகழாரம் சூட்டிய கி.வீரமணி, இப்போது வாய்திறக்கவில்லை. கலைஞரைப் பாராட்டுவதற்கான 'யுக்திகளுக்காக' கொள்கைகளைப் பலிகடாவாக்கும் வீரமணியின் மற்றொரு துரோகம் இது.
சூத்திர இழிவு ஒழிப்பை முன்னிறுத்தி சட்டத்தையே திருத்து; இல்லையேல் எங்கள் நாட்டை பிரித்துக் கொடு என்று பெரியார் முழங்கிய முழக்கம் - வீரமணியால் திரிபுபடுத்தப்பட்டதற்கு இவை சான்றுகளாகும்.
(புரட்டுகள் உடைப்பு தொடரும்)