“கோயிலினுள் நுழைவதற்கு இன்னும் கொஞ்ச காலம் பொறுத்துக் கொள்ளுங்கள்; சாதி இந்துக்கள் மனம்மாறும் வரை காத்திருங்கள் என்று தீண்டப்படாத மக்களுக்குச் சமாதானம் சொல்லுவோரின் கருத்தைச் சற்றும் ஏற்க இயலாது. 1929 திசம்பர் 31க்குள் இந்தியா வுக்கு டொமினியன் அந்தஸ்து வழங்க வேண்டும் என்று இந்தியத் தேசிய காங்கிரசு பிரிட்டிஷ் நாடாளுமன்றத் துக்கு ஒரு காலக்கெடு கொடுத்துள்ளது. அவ்வாறிருக்கும் போது கோயிலில் நுழைவதற்கான -மிகச் சாதாரண மான மானுட உரிமையைப் பெறுவதற்குக் கூட தீண்டப் படாத வகுப்பு மக்கள் இன்னும் காத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது?” என்று புரட்சியாளர் அம்பேத்கர் எழுப்பிய வினா இந்தியா சுதந்தரம் பெற்று 75 ஆண்டுகளுக்குப் பின்னும் நீடிக்கும் பெருங்கொடுமை நிலவுகிறது.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகில் உள்ள தீவட்டிப்பட்டியில் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் 1.5.2024 அன்று கோயிலுக்குள் செல்ல முயன்ற தலித்துகளைச் சாதி இந்துக்கள் தடுத்து நிறுத்திய தால் தகராறு ஏற்பட்டது. தீவட்டிப் பட்டியில் பிற்படுத்தப் பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த 500 குடும்பங்கள் உள்ளன. தீவட்டிப்பட்டியை அடுத்துள்ள நச்சினாம்பட்டியில் 200 தலித் குடும்பங்கள் உள்ளன. இவ்விரு ஊர்களுக்கும் நடுவில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் 1972இல் அறநிலையத் துறையின்கீழ் கொண்டு வரப்பட்டது.
மே 2 அன்று மாரியம்மன் கோயிலின் தேரோட்டம் நிகழவிருந்த நிலையில், காலங்காலமாக தலித்துகள் கோயிலுக்கு வெளியிலிருந்துதான் வழிபடுவது வழக்கம் என்று கூறி சாதி இந்துக்கள் தலித்துகளைக் கோயிலுக்குள் நுழையவிடாமல் தடுத்தனர். இதையறிந்துவந்த அற நிலையத் துறையினர் மாரியம்மன் கோயிலைப் பூட்டி சீல் வைத்தனர்.
அடுத்த நாள், காடையாம் பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை, அற நிலையத்துறை, காவல்துறை ஆகியவற்றின் அதிகாரிகள் சாதிஇந்துக்கள், தலித்துகள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். “தாங்கள் கோயிலுக்குள் சென்று வழிபடு வதற்கு அனுமதி இல்லாத போது இக்கோயி லுக்கு வெளியே உள்ள கடைகளை மூட வேண்டும்” என்று தலித்துகள் கடைகளின் பெயர்ப்பலகைகளை இழுத்துப்போட்டு நொறுக்கினர். இதையறிந்த சாதி இந்துக்கள் திரண்டு வந்தனர். காவல்துறையினரும் வந்தனர். சாதி இந்துக்கள் தலித்துகள் மீது கற்களை வீசித்தாக்கினர். இக்கல வரச் சூழலில் கடைகளுக்குத்தீ வைக் கப்பட்டது. தலித்துகள் இதைச் செய்ததாகச் சொல்லப் படுகிறது. காவல்துறையினர் தலித்துகளை பெண்கள், முதியோர் என்றும் பாராமல் கடுமையான முறையில் தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர். தீயணைப்பு ஊர்தி விரைந்து வந்து தீயை அணைத்ததால் 5 கடைகள் மட்டுமே எரிந்தன. இந்த மோதலில் இரு தரப்பிலும் 19 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
கடந்த ஆண்டு மேல்பாதி கிராமத்தில் கோயிலில் தலித்து இளைஞர்கள் நுழைய முயன்ற போது தாக்கப் பட்டனர். சாதி இந்துக்களுக்கும் தலித்துகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கோயில் கதவு பூட்டப் பட்டது. இதேபோன்று தமிழகத்தில் பல ஊர்களில் கோயில்கள் பூட்டப்பட்டுள்ளன.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 19இன்படி இந்தியக் குடிமகன் எவருக்கும் தான் விரும்பும் மதத்தை நம்பவும், பின்பற்றவும், வழிபடவும், பரப்பவும் உரிமை உண்டு. ஆனால் கிராமங்களில் பல்வேறு பெயர்களில் உள்ள அம்மன் கோயில்கள், அய்யனார், கருப்புசாமி, முனியசாமி, சுடலைமாடன் போன்ற நாட்டார் தெய்வ வழிபாடு நடக்கும் கோயில்கள் ஆகியவற்றில் பெரியார் மண் என்று பெருமை பேசும் தமிழ்நாட்டில் தலித்துகள் வழிபட முடியாத அவலநிலை நீடிப்பது ஏன்?
சமஉரிமைச் சிந்தனையும் சமத்துவ உணர்ச்சியும் மக்களிடம் ஏற்படவிடாமல் தடுக்கின்ற சாதியக் கட்டமைப்பே இதற்குக் காரணமாகும். அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமையைக் கடைப்பிடிப்பது குற்றச் செயல் என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் தீண்டாமை காரணமாக கோயில் நுழைவு உரிமையை மறுப்பது மட்டுமின்றி தலித்துகள் மீது எண்ணற்ற இழிவுகளும், பாலியல் வன்கொடுமைகளும் நாள்தோறும் நிகழ்த்தப் பெறுகின்றன.
கடந்த 75 ஆண்டுகளில் கல்வி, வேலை வாய்ப்பு, வருவாய், வாழ்க்கைத்தரம் முதலானவை உயர்ந் துள்ளன. ஆனால் எந்தவொரு சாதிப் பிரிவினரிடமும் சாதி உணர்ச்சி ஒழியவில்லை. ஒவ்வொரு சாதியும் தன்னளவில் ஒரு மூடிய சமூகமாகவே இருக்கிறது என்றார் அம்பேத்கர். அதனால்தான் இன்றளவும் இந்துக்களில் தன்சாதிக்குள்ளாகவே திருமணம் நடக்கும் நிலை இருக்கிறது. இதை மீறுவோர் ஆணவக் கொலை செய்யப்படுகின்றனர். அந்த அளவிற்குச் சாதி உணர்ச்சி சமூகத்தில் புரையோடிச் சீழ்பிடித்துள்ளது. நம்முடைய கல்வி முறை சாதி உணர்ச்சியை ஒழித்து, சமத்துவச் சிந்தனையை ஊட்டுவதாக இல்லை.
தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அரசும் நிர்வாகமும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டிருக்க வேண்டும் என்று சில நாளேடுகள் அறிவுரை கூறியுள்ளன. சாதி ஆணவப்படுகொலைகள் நிகழும் போது இதைவிட இன்னும் உரத்துப் பேசுகின்றன. ஆனால் தீண்டாமைக் கொடுமைக்கும் சாதிய மோதல் களுக்கும் மூல ஆதாரமாக இருக்கும் இந்து மதத்தை ஊடகங்களோ, மற்றவர்களோ கேள்விக்குட்படுத்துவதில்லையே ஏன்? இந்துமதம் நால்வருணக் கோட் பாட்டை-சாதியப் பாகுபாட்டை-சாதியின் பெயரிலான உயர்வுதாழ்வை எப்படி ஒழிக்க முடியும்?
இதை அம்பேத்கர் பின்வருமாறு கூறுகிறார்: “இந்து மதத்தில் சமத்துவமின்மை ஒரு மதக் கோட்பாடாக இருக்கிறது. இது உணர்வுபூர்வமாக நடைமுறையில் பின்பற்றப்படுகிறது. புனிதமான கோட்பாடு என்று பரப்புரை செய்யப்படுகிறது. இந்த சமத்துவமின்மை இந்து மதத்தின் அதி காரப்பூர்வமான கோட்பாடாக இருப்பதால் இதை வெளிப்படையாகப் பரப்புவதில் யாரும் வெட்கப் படுவதில்லை. இந்து மதத்தில் சமத்துவமின்மை மதக்கோட்பாட்டின் மூலம் புனிதமானதாகவும் வாழ்வியல் நெறியாகவும் இருக்கிறது. எனவே சமத்துவமின்மை இந்து மதத்தின் ஆன்மாவாகவே உள்ளது (Inequality is the Soul off Hinduism)” அம்பேத்கர் தொகுப்பு நூல் 3 (ஆங்கிலம்).
சுதந்தர இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் இந்துமதத்தின் சமத்துவமின்மை பாதுகாக்கப்பட்டுள்ளது. எனவேதான் பெரியார் 1957இல் சாதி ஒழிப்புக்கு அரசமைப்புச் சட்டத்தில் பாதுகாப்பு அளிக்கும் விதிகளை எரிக்கும் மாபெரும் போராட்டத்தை நடத்தினார்.
இந்து மதத்தில் சமத்துவமின்மைக் கோட்பாடு நீடிக்கும் வரையில் தீவட்டிப்பட்டியில் நிகழ்ந்தது போன்ற சாதியப் பாகுபாடுகளும், மோதல்களும் தொடரும் என்பதே கசப்பான உண்மையாகும்.
- க.முகிலன்