2006ஆம் ஆண்டு ஒன்றிய அரசின்கீழ் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு முதன்முதலாக வழங்கப்பட்டது. 1970கள் முதல் பட்டியல் இனத்தவர்க்கும் பழங்குடியின ருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த இட ஒதுக்கீடு மாணவர் சேர்க்கையில் மட்டுமல்லாது, ஆசிரியர் பணியிடங்களிலும் வழங்கப்படுகிறது.

ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட வகுப்பு மாணவர்கள் பலவகையான ஒடுக்குமுறைகளுக்கு உடன் பயிலும் மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் உள்ளாக்கப்படுகின்றனர் என்கிற செய்திகள் ஊடகங்களில் அவ்வப்போது வெளிவந்து கொண்டேயிருக்கின்றன. இதற்குக் காரணம் ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்ட காலம் முதலே பார்ப்பனர்களின் பிற மேல்சாதியினரின் கோட்டையாக இருந்துவருவதே ஆகும். அண்மையில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் அனைத்திந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர் சங்கத்தின் தேசியத் தலைவர் கவுத் கிரண்குமார், ஆசிரியர் பணியிடங்களில் இடஒதுக்கீடு பற்றிப் பெற்ற விவரங்கள் இதை உறுதி செய்கின்றன.

21 இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் (IITs) பணிபுரியும் மொத்த ஆசிரியர்களில் 80 விழுக்காட்டினர் மேல்சாதியினர்; பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 11.2 விழுக் காட்டினர்; பட்டியல் வகுப்பினர் 6 விழுக்காட்டினர்; பழங் குடியினர் 1.6 விழுக்காட்டினர்; மற்றவர்கள் உயர்சாதி ஏழைகள் (EWS), மாற்றுத்திறனாளிகள் ஆவர்.

இதேபோன்று 13 இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங் களில் (ஐஐஆள) பணிபுரியும் ஆசிரியர்களில் 82.8 விழுக் காட்டினர் ஆதிக்க மேல்சாதியினர்; பிற்படுத்தப்பட்டவர்கள் 9.6 விழுக்காடு, பட்டியல் இனத்தவர் 5 விழுக்காடு, பழங் குடியினர் 1 விழுக்காடு மற்றவர்கள் உயர்சாதி ஏழைகள் (EWS), மாற்றுத் திறனாளிகள்.

இந்தூரில் உள்ள ஐ.ஐ.எம்.இல் 109 ஆசிரியர்களில் 106 பேர் (97.2 விழுக்காடு) மேல்சாதியினர். பட்டியல் இனத்தவரோ, பழங்குடியினரோ ஒருவர்கூட இந்தூரில் ஆசிரியராக இல்லை. உதய்பூர் ஐ.ஐ.எம்.இல் 90 விழுக்காடு, லக்னோ ஐ.ஐ.எம்.இல் 95 விழுக்காடு ஆசிரியர்கள் மேல் சாதியினராகவே உள்ளனர்.

இந்திய அரசமைப்புச் சட்டப்படி ஒன்றிய அரசின் கீழ் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு, பட்டியல் இனத்தவர்க்கு 15 விழுக்காடு, பழங்குடியினருக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். ஆனால் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி பெறப்பட்ட தகவல்களின்படி 80 முதல் 90 விழுக்காடு அளவுக்கு உயர்சாதியினரே பணியிடங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இடஒதுக்கீடு அளிப்பது என்று கூச்சலிடும் படிந்த மோதாவிகள், இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குள் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன, பழங்குடி வகுப்பினருக்கு உரிய இடங்கள் வழங்கப்படும் என்பதற்கு விடை சொல்வார்களா?

ஒன்றிய அரசின் பணியிடங்களில், இடஒதுக்கீடு வாரியாக ஏ, பி,சி, டி பிரிவுகளில் உள்ளவர்களின் விவரத்தை 2023­-2024ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் ஒன்றிய அரசு அளிக்கவில்லை. இந்த விவரங்கள் இருந்தால்தானே உரிமை மறுக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைக்க முடியும்? புள்ளிவிவரங்களை மறைப்பதில் உலகிலேயே நரேந்திர மோடி ஆட்சி முதலிடம் வகிக்கிறது.

- க.முகிலன்