கடந்த பத்தாண்டுகளில் உயர்நீதித்துறை பொதுவாக அரசுக்கு எதிரான தன்மையில் தீர்ப்பு வழங்குவதில்லை. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு 2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பாபர் மசூதி பற்றிய தீர்ப்பாகும், பாபர் மசூதியை இடித்தது தண்டனைக்குரிய குற்றம்; பாபர் மசூதி கட்டப்படுவதற்குமுன் அங்கு இராமர் கோயில் இருந்ததற்கான உறுதியான ஆதாரம் இல்லை; ஆனால் இந்துக்களில் பெரும்பாலோர் பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்று நம்புவதால் அந்த இடம் இந்துக்களுக்கு வழங்கப்படுகிறது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. குறிப்பாக இந்து மதம் தொடர்பான வழக்குகளில் பழமையைப் பாதுகாக்கும் தன்மையிலேயே தீர்ப்புகள் வழங்கப்படும் போக்கு நிலவுகிறது.கடந்த மே மாத இறுதியில் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்திலும் மதப் பழமை வாதத்தைக் காக்கும் வகையிலான ஒரு தீர்ப்பு அளிக்கப்பட்டது. முசுலீம் இளைஞர் சபி கான், இந்து பெண் சரிகா சென் இருவரும் சிறப்புத் திருமணச் சட்டத்தின்கீழ் பதிவுத் திருமணம் செய்து கொள்வதற்குக் காவல் துறையின் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் ஒரு விண்ணப்பம் அளித்தனர். அதில், “நாங்கள் மதம் மாறாமல் திருமணம் செய்து இணைந்து வாழவிரும்புகிறோம். ஆனால் எங்கள் குடும்பத்தினரின் எதிர்ப்பால் எங்களால் திருமணத்தைப் பதிவு செய்ய முடியவில்லை. எனவே, திருமணத்தை முறையாகப் பதிவு செய்வதற்கு எங்களுக்குக் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று கேட்டிருந்தனர். இதற்கு உயர்நீதிமன்றத்தில் பெண் வீட்டார் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இருதரப்பையும் விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி அலுவாலியா, “இசுலாமிய சட்டப்படி முசுலீம் மதத்தைச் சேர்ந்த ஆண், சிலை அல்லது நெருப்பை வழிபடும் பெண்ணைத் திருமணம் செய்வது செல்லாது. சிறப்புத் திருமணச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டாலும் அத்திருமணம் செல்லாததாகவே கருதப்படும். இந்தச் சூழலில், திருமணப் பதிவுக்குக் காவல்துறை பாதுகாப்பு வழங்க எந்த முகாந்திரமும் இல்லை” என்று கூறி அவர்களின் விண்ணப்பத்தைத் தள்ளுபடிச் செய்தார்.
1954இல் இயற்றப்பட்ட சிறப்புத் திருமணச் சட்டம் வேறுபட்ட மதத்தினர் இருவர், தங்களுடைய மதம் சார்ந்த திருமணச் சடங்கு முறைகள் வேண்டாம் என்று மறுத்து, பதிவுத் திருமணம் செய்துகொள்வதற்கு வழிவகை செய்வதாகும். உயர்நீதிமன்ற நீதிபதி அலுவாலியா இச்சட்டத்தைப் படிக்கவில்லையா? அல்லது படித்திருந்தும் வேறுபட்ட மதத்தினர் - குறிப்பாக சங்பரிவாரங்கள் எதிர்க்கும் ‘லவ்-ஜிகாத்’ அடிப்படையில் ஒரு முசுலீம் இளைஞர் இந்துப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதைத் தடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தீர்ப்பளித்தாரா? என்பது தெரியவில்லை. சிறப்புத் திருமணச் சட்டத்தின் செயல்பாட்டில் மதம் சார்ந்த தனிநபர் சட்டம் தலையிடுவதற்கு அதிகாரமே இல்லை. நீதிபதியின் பழமைவாத மனநிலையையே இது காட்டு கிறது. இத்தீர்ப்பை மாற்றாவிட்டால், இது ஒரு தீங்கான எடுத்துக்காட்டாகிவிடும்.
இதேபோன்று அண்மையில் வேறொரு வழக்கில், ஒரு ஆணும் ஒரு பெண்ணும் (இருவரும் இந்துக்கள்) திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து, பிறகு பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்; பல ஆண்டுகள் கழித்து அப்பெண் மணவிலக்குக் கோரி நீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தீ வளர்த்து, அதைச்சுற்றி இருவரும் ஏழு தப்படி நடக்காததால் இது இந்த முறைப்படியான திருமணம் அல்ல; திருமணத்தைப் பதிவு செய்திருந்தாலும் இத் திருமணம் செல்லாது; எனவே மணவிலக்கு விண்ணப் பத்தை ஏற்க முடியாது என்று தீர்ப்பளித்தார். இந்துத் திருமணச் சட்டத்தில் தீயைச் சுற்றி ஏழு தப்படி நடக்க வேண்டும் என்பது கட்டாயம் என்பதாக இல்லை.
நீதித்துறை பிற்போக்குத்தனமாகச் செயல்படுவது சனநாயகத்திற்கும் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு கேடானதாகும்.
- க.முகிலன்