’தொட்டிலை ஆட்டிவிட்டுப் பிள்ளையைக் கிள்ளி விடுவார்'
முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டவர்களின் தூக்குத் தண்டனையை, வாழ்நாள் தண்டனையாக உச்சநீதிமன்றம் மாற்றி ஆணையிட்டபோது, இவர்களின் விடுதலை குறித்துத் தமிழக அரசு முடிவு செய்யலாம் என்று நீதியரசர்கள் கூறியிருந்தனர்.
தமிழக அரசு முடிவெடுத்தால் இவர்களை விடுதலை செய்ய சட்டத்தில் இடம் இருக்கிறது என்று சட்ட வல்லுனர்கள் சட்ட நுணுக்கங்களைச் சொன்னார்கள்.
மக்களின் மனநிலை, எதிர்கட்சிகளின் அழுத்தம் ஆகியன தமிழக அரசுக்கு நெருக்கடி தந்தன.
உடனே அமைச்சரவையைக் கூட்டிய ஜெயலலிதா, இவர்களை விடுதலை செய்வதாக அறிவித்தார். அத்தோடு டில்லிக்கும் ஒரு கடிதம் எழுதினார். இவர்களின் விடுதலை குறித்துக் கருத்து கேட்டு.
இதுதான் சாக்கென்று மத்திய அரசு உச்சநீதிமன்றம் மூலம் விடுதலைக்குத் தடை வாங்கியது, சி.பி.ஐ. வழக்கு என்று காரணம் காட்டி.
பேரறிவாளன் உட்பட அனைவரும் இன்றும் சிறையில்தான்.
நளினியின் தந்தை கடந்த மாதம் 23-ம் தேதி காலமானார். அவரின் 16-ம் நாள் காரியத்தில் கலந்து கொள்ள தமிழக அரசின் சிறைத்துறையிடம் 8, 9, 10 ஆகிய மூன்று நாட்கள் பரோலில் செல்ல அனுமதி கேட்டிருந்தார்.
ஆனால் சிறைத்துறை எந்த முடிவும் எடுக்காமல் இருந்தது. அதனால் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி 8-ம் தேதி மாலை 4 மணி முதல் 9ம் தேதி மாலை 4 மணி வரை ஒருநாள் மட்டும் அனுமதி பெற்றுத் தந்தையின் சடங்கு நிகழ்வில் கலந்து கொண்டார். மீண்டும் சிறைக்குள் அடைபட்டார்.
நளினியின் தூக்குத்தண்டனை, கலைஞரால் வாழ்நாள் சிறையாக மாற்றப்பட்டது. ஒரு குழந்தையின் தாய். 25 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் அந்தப் பெண்ணின் மனவலி எத்தகையது என்பது மக்களுக்குத் தெரிகிறது. ஆட்சியாளர்களுக்கு ஏன் தெரியவில்லை?
சாந்தன், முருகன், பேரறிவாளன் எல்லோரையும் விடுதலை செய்யப் போகிறோம் என்று அமைச்சரவையைக் கூட்டிய முதல்வர் ஜெயலலிதா பொறுப்பில்தானே சிறைத்துறை இருக்கிறது.
ஜெயலலிதா நினைத்திருந்தால் நளினிக்கு மூன்றுநாள் பரோலில் செல்ல அனுமதித் திருக்கலாமே. ஏன் செய்யாமல் சிறைத்துறை, நளினி சொல்வது போல மவுனம் காத்தது. அதனால் தானே நீதிமன்றம் மூலம் ஒரு நாள் பரோல் பெற்றார் நளினி.
குறைந்த அளவு நளினி என்ற ஒரு பெண்ணிடம் மனிதாபிமானம் காட்டக்கூட இந்த அரசு தயாராக இல்லை என்பது இதன் மூலம் தெரிகிறது.
ஏழுபேரை விடுதலை செய்வேன் என்பார். டில்லிக்கும் கடிதம் எழுதுவார். விடுதலை கேள்விக்குறி ஆகிவிடும்.
விடுதலை செய்வேன் என்பவர் நளினியின் பரோல் வேண்டுகோளை மவுனத்திற்குள் வைப்பார்.
வள்ளுவர் சொல்வார் ‘சொல்வேறு செயல் வேறு பட்டார்” என்று. மக்கள் இதை இரட்டை வேடம் என்பார்கள்.
இப்பொழுது இக்கட்டுரையின் முதல்வரியைப் படியுங்கள்!!