வருகிற செப்டெம்பர் 15இல் அண்ணா நூற்றாண்டு நிறைவு பெறுவதையயாட்டித் தமிழகச் சிறைகளில் அடைபட்ட உள்ளங்களில் மீண்டும் நம்பிக்கைகள் பூத்துள்ளன.
தமிழக முதல்வர் தூக்குத் தண்டனையை எதிர்ப்பதாகப் பல முறை கூறியுள்ளார். அண்ணா நூற்றாண்டை முன்னிட்டு இந்திய அளவிலேயே சாத் தண்டனையை ஒழிக்க அவர் முயற்சி மேற்கொண்டிருக்க வேண்டும். இப்போதும் கூட காலம் கடந்து விடவில்லை.
சட்ட நூலிலிருந்து சாத் தண்டனையைத் துரத்த உடனே இயலாதென்றால், நடைமுறையளவில் உடனே செய்யக் கூடியது, செய்ய வேண்டியது - தமிழகச் சிறைகளில் சாக் கொட்டடிகளில் அடைபட்டுக் கிடப்பவர்களுக்குத் தண்டனைக் குறைப்பு வழங்குவதே. இந்திய அரசமைப்பின் உறுப்பு 161 வழங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி இதைச் செய்ய முடியும்.
குறிப்பாகச் சொன்னால், இராசீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப் பெற்ற எழுவர் கடந்த 18 ஆண்டுக்கு மேலாகச் சிறையில் அடைபட்டுக் கிடக்கின்றனர். இவர்களில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய நால்வரின் தலைக்கு மேல் தூக்குக் கயிறு நிழலாடிக் கொண்டிருக்கிறது. இவர்களுக்கு இப்போதாவது தண்டனைக் குறைப்பு தருவதோடு, இவ்வளவு நீண்ட காலம் சிறையில் அடைபட்டிருந்ததைக் கருத்தில் கொண்டு இவர்கçள விடுதலையும் செய்ய வேண்டும். இதே வழக்கில் வாழ்நாள் சிறைத் தண்டனை கழித்து வரும் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய நால்வரைப் பொறுத்த வரை, இவர்களுக்கு விடுதலை மறுக்க அரசு இது வரை கூறி வந்த முதன்மைக் காரணம் - இலங்கையில் உள்நாட்டுப் போர் தொடர்கிறது என்பதே.
பொருத்தமோ பொருத்தமில்லையோ இந்தக் காரணம் இப்போது பொருந்தாது. போர் முடிந்து விட்டதாக சிங்கள அரசு அறிவிக்க, இந்திய அரசும் அதை ஏற்றுக் கொண்டு விட்டது. இந்தப் புதிய சூழலில் பழைய காரணம் பொருந்தாமற் போய் விட்டது. நளினி வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் உணர்வை மதித்துத் தமிழக அரசு நளினியை மட்டுமல்லாமல், அதே வழக்கில் தண்டிக்கப் பெற்ற மற்றவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். குற்ற நடைமுறைச் சட்டத்தின் படியான அறிவுரைக் கழக வழிமுறைகளைக் காட்டி முடிவின்றிக் காலங்கடத்தாமல் நேராக அரசமைப்புச் சட்ட உறுப்பு 161ஐப் பயன்படுத்தி விடுதலைக்கு ஆணை பிறப்பிக்க வேண்டும்.
தமிழகச் சிறைகளில் அடைபட்டுள்ள அரசியல் கைதிகளில் மிக அதிகமானோர் இசுலாமியர்கள் என்பதும், அவர்களுக்கு விடுதலை மறுக்கப்படுவதற்கு அவர்கள் சார்ந்த சமயமே காரணமாய்ச் சொல்லப்படுவதும் தமிழக அரசுக்கும், அது பேசும் சமயச் சார்பின்மைக்கும் பெருமை சேர்க்கக்கூடிய செய்திகள் அல்ல. அண்ணா நூற்றாண்டுத் தொடக்கத்தில் ஏழாண்டு கழித்து முடித்தவர்களை விடுதலை செய்த போது, அந்தச் சலுகை வகுப்பு சார்ந்த வழக்குகளுக்குப் பொருந்தாது என்ற விலக்கு அறிவிக்கப்பட்டது. இசுலாமியக் கைதிகளுக்கு எதிரான இந்த சமயப் பாகுபாட்டை இம்முறை தமிழக அரசு கைவிடக் கோருகிறோம்.
தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத் தலைவர் தோழர் பொழிலன் மீதான வழக்கு ஈழத்தில் இந்தியப் படை செய்த கொடுமைகளுக்கும் இந்திய அரசின் பொய்ப் பரப்புரைக்குமான தமிழகத்தின் எதிர்வினை தொடர்பானது. போராட்டத்தின் ஒரு கட்டம் முடிவுறும் போது அது தொடர்பான வழக்குகளை விலக்கிக் கொள்வதும், அது தொடர்பாகச் சிறைபட்டோரை விடுதலை செய்வதுமே அரசியல் மரபு. தெலங்கானா ஆயுதப் போராட்டம் முடிவுற்ற பின் ஆந்திராவில் காங்கிரஸ் அரசும், மேற்கு வங்கத்தில் நக்சல் போராட்டங்களுக்குப் பின் 1977இல் தோழர் ஜோதிபாசு தலைமையிலான இடது முன்னணி அரசும் எடுத்த நடவடிக்கைகள் சிறந்த முற்காட்டுகள். இதே வழியில் பொழிலனையும், ஏனைய தமிழ்த் தேசியப் பேராளிகளையும் தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்யக் கோருகிறோம்.
ஆயுள் கைதிகள் எனப்படும் வாழ்நாள் சிறையாளிகளின் முன்விடுதலை தொடர்பான அறிவுரைக் கழக நடைமுறை அடியோடு தோல்வியடைந்து விட்டதன் விளைவாகவே... அண்ணா பிறந்த நாளுக்காவது விடுதலை கிடைக்காதா என்ற ஏக்கப் பெருமூச்சால் சிறைக் கம்பிகளும் சுவர்களும் சூடேறிக் கிடக்கின்றன. வாழ்நாள் சிறைத் தண்டனைக் காலத்திற்கு வரம்பே இல்லை என்றால் அது சாத் தண்டனையை விடவும் கொடியது. சாவும் வாழ்வும் ஒன்றாகிற தண்டனை முறை மனித அழிவுக்கு வழிகாட்டுமே தவிர மனித மேம்பாட்டுக்கு உதவாது.
சிறையாளிகளின் சீர்திருத்தத்தில் அரசுக்கு மெய்யாகவே நம்பிக்கை இருக்குமானால், பத்தாண்டுக்கு மேல் எவரையும் சிறையில் அடைத்து வைக்கக் கூடாது. வரும் செப்டெம்பர் 15க்குள் இதற்கு ஒரு தொடக்கமாக... ஏழாண்டு கழித்து முடித்த அனைவரையும் விலக்கு ஏதுமின்றி விடுதலை செய்யக் கோருகிறோம்.
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையயல்லாம் முடிந்து தண்டிக்கப்பட்டவர்கள் ஒரு புறமிருக்க, விசாரணைக் கைதிகளாகவே சிலர் பத்தாண்டுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது பெருங்கொடுமை. குறைந்த தண்டனைக்குரிய வழக்குகளில் 60 நாள், கூடுதல் தண்டனைக்குரிய வழக்குகளில் 90 நாள் கால வரம்புக்குள் குற்ற அறிக்கை தாக்கல் செய்யா விட்டால் கட்டாயம் பிணை விடுதலை தர வேண்டும் என்று 1978ஆம் ஆண்டின் புதிய குற்ற நடைமுறைச் சட்டம் விதிக்கிறது. இந்தச் சட்ட விதியின் நோக்கத்தை முறியடிக்கும் வகையில், குற்ற அறிக்கை தாக்கலான பிறகும் வழக்கு விசாரணை நடத்தாமல் ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கும் கொடுமையை என்னென்பது? குணங்குடி அனீபா விசாரணைச் சிறையாளியாகவே 11 ஆண்டுகாலம் சிறையில் வாடிக் கிடக்கிறார் அதுவும் காலவதியாகிப் போன தடாச் சட்டத்தில். இது போன்ற வழக்குகள் அனைத்தையும் விலக்கிக் கொள்வதோடு, ஓராண்டுக்குள் விசாரணை முடியா விட்டால் பிணை விடுதலை வழங்கும் விதத்தில் சட்டத் திருத்தமும் செய்யக் கோருகிறோம்.
இறுதியாக, தமிழீழ மக்கள் மீதான இனக் கொலைப் பேரை எதிர்த்துத் தமிழகமெங்கும் நடைபெற்ற போராட்டங்கள் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் விலக்கிக் கொண்டு, இன்னமும் சிறையில் இருந்து வருகிற அனைவரையும் விடுதலை செய்யக் கோருகிறோம். இந்திய-சிங்களக் கொடி எரிப்பு வழக்கில் தோழர்கள் பாரதியும் தமிழரசனும் இந்தியக் கொடியை வீட்டு வாயிலில் ஏற்றச் சொல்லும் விபரீத நிபந்தனையை ஏற்க மறுத்ததற்காகவே அய்ந்து மாதமாகச் சிறையில் கிடப்பதால் நீதித்துறைக்கும் அரசுக்கும்தான் சிறுமை!
இந்த அநீதிகளுக்கெல்லாம் இடைக்கால முறையிலாவது முற்றுப்புள்ளி வைக்க அண்ணா நூற்றாண்டு நிறைவு தரும் வாய்ப்பைத் தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ள வற்புறுத்துகிறோம்.