ayothithasar 300சுரண்டப்படும் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கு தன் வாழ்நாளையே ஒப்படைத்துக் கொண்ட மாமேதை மார்க்சு பிறந்த திங்களில்தான், மேதை அயோத்தி தாசரும் பிறந்திருக்கிறார்; இறந்திருக்கிறார். காலம் கொடுத்த கொடையான இவருக்கு இந்த ஆண்டு (2014) நினைவு நூற்றாண்டு. இந்த நேரத்திலாவது இவரைப் பற்றிச் சிந்திப்பதும், பேசுவதும் சாலப்பொருத்தமாக இருக்கும்.

பெரியார், அயோத்திதாசரைத் தனக்கு முன்னோடி என்று சொல்லியிருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் தலைவர்கள் போகிற போக்கில் சொல்லுகிற வார்த்தைகளைப்போல் இதைப் பார்க்க முடியாது. நீதிக் கட்சித் தலைவர்களான சி.நடேசமுதலியார், தியாகராயச் செட்டியார், டி.எம். நாயர் போன்ற தலைவர்களின் வரிசையில்தான் அயோத்திதாசரையும் வைத்திருக்கிறார். அதற்குக் காரணம் நிறைய காணக்கிடைக் கின்றன.

பகுத்தறிவு, சீர்திருத்தம், சமத்துவம், மொழியுணர்வு, இன உணர்வு போன்ற கொள்கைகள் கொண்ட அயோத்திதாசர், நவீன இந்தியாவில் மாபெரும் அறிஞருள் ஒருவர் என்றால் அது மிகையன்று. அவர் தென் னிந்திய சமூகப் புரட்சிக்கு வித்திட்டவர்; தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கி வைத்தவர்; இந்தியாவில் பேரரசை நிறுவிய அசோக மன்னனுக்குப் பிறகு, தமிழகத்தில் பவுத்த மறுமலர்ச்சியைத் தோற்றுவித்தவர்.

இலக்கிய, சமூக, சமய வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் புதிய சமூகம் படைக்கும் பணியில் தம்மை முழுவதுமாக அர்ப்பணித்துச் செயல்பட்டவர்; தலித் மக்களின் விடுதலையைத் தொடங்கி வைத்தவர்.  

“திராவிடர் கழகம்” என்ற அமைப்பை முதன் முதலில் தோற்றுவித்தவர். இவையெல்லாம் பெரியார் அரசியலில் தீவிரம் காட்டுவதற்கு முன்னதாகவே அயோத்திதாசர் இயங்கியகளங்கள்.

அதனால்தான் அவரை முன்னோடி என்று பெருமை கொண்டாடி இருக்கிறார் பெரியார். தமிழ், ஆங்கிலம், பாலி மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். பவுத்தம், இசுலாம், கிருத்துவ மதங்களின் தத்துவங்களைப் பிழையின்றிப் பயின்றவர். தொடக்கக் காலங்களில் இந்து மதப் பற்றாளராக இருந்தவர். அத்வைத  வேதாந்தத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் இருக்கும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை மூலவரான காரல்மார்க்சு, 1853-இல் ‘நியூயார்க் டிரிப்யூன்’ என்ற பத்திரிக்கையில் இந்தியாவைப் பற்றி எழுதும்போது, “மேல்சாதிக்காரருக்குத் தொண்டு செய்து காப்பாற்றுவதினால்தான், தாங்கள் மோட்சத்துக்குப் போகமுடியும் என்று இந்த இழிசாதி மக்கள் நம்பினார்கள்; எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்ப்பானையும் பசுவையும் காப்பாற்றினார்கள்” என்றும்; “சிறுசிறு சமூகங்களாக இருந்த (இந்தியர்கள்) சாதிவேறுபாடுகள் என்கிற தொற்றுநோய்க்கு ஆளானவர்களாகவும், அடிமைகளாகவும் வாழ்ந்தார்கள்; மனிதனை, சூழலை வென்றெடுக்க வேண்டியவனாக ஆக்குவதற்கு மாறாக, அவனை சூழலுக்கு அடிமை ஆக்கினார்கள்.

என்றும்  மாற்றவே முடியாத தன்மையுள்ள ஒரு சமூக அமைப் பை அவர்களே உருவாக்கிக் கொண்டார்கள். இதனால் இயற்கையை ஆளுமை கொள்ளும் மனிதனாக உருவாக்குவதற்கு மாறாக, விலங்காண்டித்தனமாக இயற்கையை வழிபடக்கூடியவர்களாக-ஆளாக்கப்பட்ட இழி நிலையை வெளிக்காட்டும் தன்மையில்- அனுமான் என்கிற குரங்கையும், தபலா எனப்படும் பசுவையும் மண்டியிட்டு வணங்குகிறவர்களாக ஆக்கப்பட்டுவிட்ட னர்” என்றும் எழுதியதை, இந்திய மார்க்சியவாதிகள் நம் மக்களிடம் சொல்லாமல் மறைத்து வைத்துக் கொண்டு போலி புரட்சி பேசிக் கொண்டிருக்கின்றனர்.

1907 லேயே “தமிழன்” என்ற பத்திரிகை, அதில் தமிழ்நாடு, கோலார், மைசூர், ஐதராபாத் போன்ற உள்நாடுகளிலும் ரங்கோன், மலேசியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் வாழ்ந்த தமிழர்களுக்கு இன உணர்வையும், சமூகச் சிந்தனை களையும் எழுதி, எழுதித் தமிழன் என்ற அடையாளத் தைத் தந்தவரும்; பெங்களூரில் நடைபெற்ற தமது 68வது பிறந்த நாள் விழாவில், “என் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும், சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன் னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் பண்டித மணி அயோத்திதாசரும், தங்க வயல் ஜி.  அப்பாதுரையார் அவர்களும் ஆவார்கள்” என்று தந்தை பெரியாரால் தலைமேல் வைத்துப் போற்றிய காத்தவராயன் என்ற இயற்பெய ரைக் கொண்ட பண்டிதர் க. அயோத்திதாசர் ஆவார்.

தமிழ்நாட்டில் திராவிட அரசியல் பேசுவோரும், பகுத்தறிவு இயக்கம் நடத்துபவரும் இன்று வரையில் அவரை அறிந்து கொண்டதாகத் தெரியவில்லை.

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தான் பார்த்த, அனு பவித்த, சிந்தித்த கூறுகளை எழுத்துகளில் கொண்டு வந்தார். தனது நுண்ணிய பார்வையால் இந்து மதத்தை விமர்சித்து ஏராளமான நூல்கள், கட்டுரைகள் எழுதி யிருக்கிறார்.

பன்முகத் திறன் கொண்ட அயோத்திதாசர் அரசியல், பொருளாதார ரீதியில் நசுக்கப்படும் தலித் மக்களின் விடுதலையில், சாதி ஒழிப்பில் அதிகமான அக்கறை செலுத்தினார். 1891இல் சாதி ஒழிப்பைக் குறிக் கோளாகக் கொண்டு “சாதியற்ற திராவிட மஹாஜன சபை” என்ற அமைப்பை உருவாக்கினார்.

கல்வியால் மட்டுமே தலித் மக்கள் முன்னேற முடியும் என்று கருதி 1892இல் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் 5 பள்ளிகளிள் கொண்டு வந்தார். 1894லேயே சென்னை மற்றும் வட ஆர்க்காடு மாவட் டங்களில் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தார். அவரது அமைப்பின் சார்பாகத் தலித்து களுக்கு இலவசக் கல்வி, கோயில் நுழைவு, தரிசு நிலம் ஒதுக்குதல் போன்ற 10 முற்போக்குக் கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை இந்திய தேசியக் காங்கிரசுக் கட்சிக்கு அனுப்பினார். அது மறுக்கப்பட்டு அலட்சியப் படுத்தப்பட்டது.

இந்து மதத்தின் மீதும், பார்ப்பனியத்தின் மீதும் வெறுப்புற்றுப்போன அவர், இறைக்கொள்கை, சடங்கு வாதம், பார்ப்பனிய ஆதிக்கம், மத, பண்பாட்டுத் தளங் கள் ஆகியவைகளைக் கேள்விக்குள்ளாக்கி சுய சிந்தனை அடிப்படையில் புதிய தேடல்களுக்குத் தயாரானார். பகுத்தறிவை நோக்கிப் பயணப்பட்டார்.

1881இல் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் தலித்துகளை ‘ஆதித்தமிழன்’ எனப் பதிவு செய்ய வேண்டுமென வற்புறுத்தினார். நீண்ட காலத்திற்கு முன் நிலவிய பார்ப்பன எதிர்ப்பு மரபின் வாரிசுகள் தான் தலித்துகள். எனவே, ஆதித்தமிழரான இம்மண் ணின் மைந்தர்கள் ‘இந்துக்கள் அல்ல’ என்று முழங்கி னார். இதை யாராவது இல்லை என்று நிரூபிக்க முடியுமா? என எதிரிகளுக்கு அறைகூவல் விடுத்தார்.

மதமாற்றம், அத்வைதம், தமிழ் சைவம், தியாசப்பிகல் தொடர்பு, காங்கிரசுக் கட்சி ஆகிய அனைத்தையும் ஒதுக்கித்தள்ளி - தமிழ், தமிழன் அடையாளத்தைத் தலித் மக்களை மையமாகக் கொண்டு ஒரு தமிழ்த் தேசியத்தைக் கட்டமைக்க முயற்சிக்கிறார். தமிழ்த் தேசியம் அதற்கு இடம் கொடுக்குமா? கொடுக்கவில்லை. அப்பொழுது சிந்திக்கிறார். தேடுகிறார். தலித்துகளுக்கு விடுதலை எங்கே இருக்கிறது என்று;

இந்து மதத்தில் தலித்துகளை ஒடுக்குவதற்காகவே உருவாக்கப்பட்ட பண்பாட்டு, மதத்தடைகளைத் தூக்கி யெறிவதுதான் விடுதலைக்கான ஒரே வழியென சாதி, மத, வர்ண எதிர்ப்புக்கொண்ட பவுத்தம்தான் இதற்குத் தீர்வு என முடிவு செய்கிறார். மேலும் ஆரியர் வருகைக்கு முன் “இந்தியா” என்ற சொல் இந்திரம் என்பதன் திரிபு. இந்திரன் என்பது புத்தன்தான்.

அவரது கொள்கை யாளர் வாழும் தேசம்தான் இந்திரதேசம் ஆனது; பின் இந்தியாவானது. பவுத்தம் உருவாக்கிய தேசத்தில் மனிதநேயம், பகுத்தறிவு, சமத்துவம், இணக்கம் எல் லாம் சிறப்பாக இருந்திருக்கிறது. பிறகு அன்னியரின் ஊடுருவல், படையெடுப்பு போன்ற காரணங்களினால் காலப்போக்கில் சமத்துவ பவுத்தம் அழிந்தது என்று விளக்குகிறார்.

பிறப்பை அடிப்படையாக வைத்துக் கற்பிக்கப்படும் ஏற்றத்தாழ்வுகளை அழித்து சமத்துவத் தை நிலைநிறுத்தும் அரசியல் கருத்தியலை உரு வாக்கும் ஒரு தேசியத்தை கட்டமைக்க முயன்றி ருக்கிறார்.

தமிழ்த் தேசியத் தந்தையாகிய அய்யா அயோத்திதாசர் ஒரு சிறந்த சித்த மருத்துவரும்கூட. ஒருமுறை சென்னை இராயப்பேட்டையில் பவுத்த சங்கக் கூட்டத்தில் அயோத்திதாசர் பேசிக்கொண்டிருந்த போது, அவரை எதிர்க்கும் நோக்கத்தில் அப்போது இளைஞ ராக இருந்த தமிழ்ப் பெரியார் திரு.வி.க. கற்கள் கொண்டு எறிந்திருக்கிறார்.

பின்னாளில் அவரது காலில் ஏற்பட்ட கட்டி ஒன்றினைத் தனது சித்த வைத்திய முறையில் குணமாக்கியிருக்கிறார் பண்டிதர். பின்னர் அயோத்திதாசர் மறைவுற்ற போது நெஞ்சை உருக்குவது போல் மிக அற்புதமான இறங்கற்பாவினை எழுதி யிருக்கிறார் திரு.வி.க. அயோத்திதாசர் வள்ளுவரை பவுத்தர் என்றும், வள்ளுவர் சொன்ன ஆதிபகவன் ஆதி பகலவன் என்றும், அது புத்தர்தான் என்றும் விளக்கி னார்.

மேலும், பல குறள்களுக்கு பவுத்த வழியில் மறுவாசிப்பு செய்து பொருள் கூறினார். இந்து மதத்தின் பல கூறுகள் புத்த மதத்திலிருந்து வந்தவை என ஆதாரபூர்வமாக நிரூபித்து மக்களிடம் தீவிரமாகப் பிரச் சாரம் செய்து வந்தார்.

மேலும் புத்தர் இறந்த நாளை புத்தர் பலி விழாவாக - போதிப்பண்டிகை என்று பூர்வ பவுத்தர்கள் கொண்டாடி வந்தார்கள். பார்ப்பனர்கள் இப்பண்டிகையைப் போகிப்பண்டிகை எனத் திரித்து விட்டார்கள் என்றார். அதேபோல் திருக்குறளைத் திரிக்குறள் என்றும், தமிழின் பல பண்டைய நூல் களைப் பவுத்த நூல்கள்தான் என்றும் வாதிட்டு வந்தார் அயோத்திதாசர்.

உலகப் பொதுமறையாம் திருக்குறள் இன்று உலகில் எல்லா மொழிக்காரர்களின் கரங்களிலும் தவழ்ந்து கொண்டிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் அயோத்திதாசரின் பாட்டனார்தான். சாதி, மதம் கடந்து, தமிழ் கூறும் நல்லுலகம் அயோத்திதாசரின் குடும்பத் தார்ககு நன்றிக் கடன்பட்டிருக்கிறது.

எப்படியென்றால்,  பிரான்சிஸ் வைட் எல்லிஸ் என்னும் வெள்ளைக்காரத் துரை 1796இல் சென்னைக்கு வருகிறார். இவர் திருக்குறள் பற்றி ஆங்கிலத்தில் உரையும் விமர்சனக் கட்டுரையும் எழுதியிருக்கிறார். தமிழ் இலக்கியச் சுவடிகளைச் சேகரிப்பதில் மிகவும் விருப் பம் கொண்டு தன் வாழ்நாளை அதிகம் செலவழித் திருக்கிறார், இந்த எல்லீஸ் துரை. இவரின் நண்பர் ரிங்டன் துரையிடம் பட்லராக வேலை பார்த்தவர் கந்தப்பன் என்பவர். இவர் வேறு யாருமல்ல; அயோத்தி தாசரின் பாட்டனார். இந்தக் கந்தப்பன் தன்னிடமிருந்த திருக்குறள், நாலடி நானூறு போன்ற சில ஓலைச்சுவடிகளை எல்லீஸ் துரையிடம் ஒப்படைத்திருக்கிறார்.

அப்போது சில பார்ப்பனர்கள் துரையிடம் சென்று, “கந்தப்பன் தீண்டப்படாத வகுப்பில் பிறந்தவன்; அவன் சொல்வதையும், கொடுப்பதையும் பற்றி அதிகம் பொருட் படுத்த வேண்டாம்” என்று அறிவுரை கூறியிருக்கின்ற னர். பார்ப்பனர்களின் பொய்யை அலட்சியம் செய்த எல்லீஸ், திருக்குறளையும், நாலடி நானூறையும் நூலாக அச்சிட்டு வெளியிட்டார்.

அத்தகவலைப் பற்றி அயோத்திதாசர் தன்னுடைய தமிழன் இதழில் தெளி வாக எழுதியிருக்கிறார். தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் திருக்குறளுக்கு உரை எழுதி பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பவர்கள், திருக்குறள்தான் வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர் இத் தகவலைத் தெரிந்து வைத்திருப்பார்கள்? அப்படியே தெரிந்தாலும் எத்தனை பேர் வெளியில் சொல்லியிருப் பார்கள்? தமிழ்ப் பற்றைவிட, தமிழன உணர்வை விட, சாதி வன்மம் அவர்களின் நெஞ்சில் தேங்கிப் போய் இருப்பதே இதற்குக் காரணமாகும்.

நல்லவை, பயனுள்ளவை, சுகாதாரமானவை, பொருளாதாரப் பயன்தரக்கூடியவை ஆகியவற்றி லிருந்து மிகவும் திட்டமிட்டு தலித்துகள் சாதி அடிப் படையில் விலக்கி வைக்கப்பட்டதை எடுத்துக்காட்டி னார் அயோத்திதாசர். உதாரணமாகப் பிரிட்டிஷ் இராணு வத்திலும், மருத்துவத் துறையிலும், கிரு°துவ மிஷினரிப் பள்ளிக்கூடங்களிலும், கிருஸ்துவ மதத்திலும் ஆரம்பக் காலங்களில் உயர்சாதியினர் சாதி, மதம், ஆச்சாரம் பார்த்துச் சேர மறுத்து வந்தனர். ஆனால் தலித்துகள் மேற்சொன்ன ஆச்சாரங்கள் பார்க்க அவசியம் இல்லாத தினாலும் மேலும் ஆச்சாரக்கேடானவைகள் அவர்களுக்கு உரியவைகள் என்று பிறர் கருதியதாலும் தலித்துகள் அந்தத் துறைகளில் சேர்ந்து நவீன வாழ்க்கையில் முன்னேற்றமடைந்து வந்தனர்.

ஆனால்  தலித்து களின் புதிய முன்னேற்றத்தைக் கண்ட மேல்சாதி இந்துக்கள் ஆச்சாரக்கேடெல்லாம் பார்க்காமல் அந்த நவீனத் துறைகளிலும், கிருத்துவ மதத்திலும் சேர்ந்து தலித்துகளைப் பழைய சாதி ஆசாரம் காட்டி, வெளியே துரத்திய சம்பவங்களை 1908இல் வேதனையோடு குறிப்பிட்டார்.

“இத்தனைக்கும் சாதி, மத, சாரம் பார்த்த அந்தப் பெரிய சாதியோர் என்போர் காலங்காலமாக மத வித்தைகளை விருத்தி செய்கின்றார்களேயன்றி பூமியை உழும் நவீன கலப்பையையோ, விரைவாக நீர் பாய்ச்சும் ஏற்றத்தையோ, போட்டோ கிராப், டெலிகிராப், போனோ கிராப், மோனோ கிராப், ஸ்டீம் ரயில்வே, டிராட்மவே போன்ற நவீன அறிவியல் சாதனங்க ளையோ கண்டுபிடிக்கவில்லை. ஆனால், அவர்கள் பராமரித்துவரும் பழைய சாதி மத ஆதிக்க நிலையால் மட்டுமே இப்புதிய வசதி வாய்ப்புகளை அபகரிக்க முடி கிறது” என மிகவும் வேதனையோடு  குறிப்பிடுகிறார்.

பெரியாருக்கு அயோத்திதாசர் முன்னோடி என் பதற்குப் பல சான்றுகளை பார்க்கலாம். “இந்தி மொழி, இந்துச்சாதி மதத்தோடு தொடர்பு உடையது. ஆகை யால் அதற்கு இந்தியாவின் பொதுமொழியாகும் தகுதி கிடையாது, ஆங்கிலமே அதற்கு தகுதியுடையது” என்று, பெரியாருக்கு முன்பே 1911இல் அயோத்திதாசர் எழுதினார்.

1895 முதல் 1907 வரை தலித்துகளுக்கு இந்திய வரலாற்றில் முதன்முறையாக அரசு வேலைவாய்ப்பு களில் இடஒதுக்கீட்டினை வற்புறுத்தினார். பல ஆங் கிலத் துரைமார்களை, கவர்னர்களைச் சந்தித்து மனுக் களை அளித்துப் பல இடங்களில் பேசியும், அதிகாரி களையும், கவர்னர்களையும் சந்தித்து தலித்துகளுக் கான இடஒதுக்கீட்டை வலியுறுத்தியும் சாத்தியமாக்கி னார். இந்திய அளவில் இடஒதுக்கீட்டின் முன்னோடி யான அயோத்திதாசர், 1845 மே திங்கள் 20ஆம் நாள் பிறந்தவர், 1914 மே திங்கள் 5ஆம் நாள் இறந்தார். மார்க்சு பிறந்த திங்களில் பிறக்கும் அயோத்திதாசர், மார்க்சு பிறந்த அதே திங்கள் அதே நாளில் விடை பெற்றுப் போகிறார்.

பகுத்தறிவு, இடஒதுக்கீடு, சமூக மாற்றம், பவுத்தம், சாதி ஒழிப்பு, பார்ப்பனிய இந்துமத எதிர்ப்பு போன்ற கொள்கைகளில் தமிழக அளவில் பெரியாருக்கும், இந்திய அளவில் அம்பேத்கருக்கும் முன்னோடியாக விளங்கியவர் அயோத்திதாசர். காலங்காலமாக ஒடுக் கப்பட்ட தலித்துகளை அரசியல் பேச வைத்தவர்; மொழிக்காகவும், இனத்திற்காகவும், இலக்கியத்திற் காகவும் தொண்டாற்றிய இம்மேதையைப் புரிந்து கொள்ள நாம் சாதியைக் கடந்து சிந்திக்க வேண்டும். அதற்கு நாம் சாதிய மனப்பான்மையைத் துறந்தாக வேண்டும். பகுத்தறிவாளர்களாகிய நாம் செய்வோமா?

Pin It