பித்தம் தலைக்கேரிய சில பைத்தியக்காரர்கள் இட்டுக்கட்டி கட்டிவிட்ட கட்டுக்கதை வட  மாவட்டங்களில் தொடங்கி தென் மாவட்டங்கள் வழியாக மேற்கு மாவட்டங்களிலுள்ள ஒருசில தலித் இளைஞர்களைக் குழப்பிக் கொண்டுள்ளது.           

முன்னுக்குப்பின் முரணான செய்திகளை உண்மைபோல் போல் ஜோடித்து மக்களைக் குழப்புவதில் கைதேர்ந்தவரான பெங்களுர் குணா என்பவர்,  பாட்டாளி மக்கள் கட்சிக்காக எழுதிய ஒரு கட்டுரையை ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்ற தலைப்பில் புத்தகமாக அச்சிட்டு வெளியிட்டார்.

அதிலுள்ள உண்மைக்குப்புறம்பான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு பாட்டாளி மக்கள் கட்சிக்கு நேர் எதிரானவர் என்று  தன்னைக் காட்டிக்கொண்ட விடுதலைச் சிறுத்தைகள்கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் இரவிக்குமார் அவர்கள், பெரியார் பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைவர் எனத் தொடங்கி வைத்த  கோயபல்ஸ் பிரச்சாரம் வட தென் மாவட்டங்களில் எடுபடாத நிலையில் தற்போது மேற்கு மாவட்டங்களைக் குறி வைத்து நகர்ந்துள்ளது.

1957 ல் ஜாதி வெறியர்களால் தோழர் இம்மானுவேல்சேகரன் வெட்டிப்படுகொலை செய்யப் பட்டபோது ஓட்டு வங்கி அரசியலை மனதில் வைத்து, தி.மு.க, கம்யூனிஸ்ட் உட்பட அனைத்துத் தலைவர்களும் வாய்மூடி மெளனமாக இருந்தபோது,  தோழர் இம்மானுவேல்சேகரன் படுகொலையை வன்மையாகக் கண்டித்து விடுதலையில் எழுதியதோடு மட்டுமல்லாமல், தோழர் இம்மானுவேல்சேகரன் அவர்களின் மனைவி, மகளிடம் பேட்டி எடுத்து விடுதலையில் செய்தி வெளியிட்டுத் தனது ஆதரவினைத் தெரிவித்தார்.

தோழர் இம்மானுவேல்சேகரன் படுகொலையைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை தேவை என விடுதலையில் எழுதியதைத் தொடர்ந்து அன்றைய முதல்வர் பச்சை தமிழர் காமராஜர் எடுத்த நடடிவடிக்கையின் காரணமாக, கலவரத்தில் ஈடுபட்ட சில பிற்படுத்தப்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

தோழர் இம்மானுவேல்சேகரன் படுகொலைக்குக் காரணமான முத்துராமலிங்கம்  முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டதற்குக் காரணமாகப் பெரியார் இருந்தார் என்ற காரணத்திற்காக, தலைவர் பெரியார் இறந்தபோது, தென்மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினார்கள் என்ற செய்தி பெரியார் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமான தலைவர் அல்ல என்பதைக் கூறுகிறது.

தமிழகத்தில் சுப்பராயன் தலைமையிலான அமைச்சரவையில் தாழ்த்தப்பட்டவர் களுக்கு ஒரே ஒரு பிரதிநிதி மட்டும் ஒதுக்கியதை மிகவும் கடுமையாக எதிர்த்துக் கண்டித்து அறிக்கைவிட்டுப் போராடியவர் தோழர் பெரியார்.

1930 ல் நீதிக்கட்சி காலத்திலேயே இந்துசமய அறநிலையத்துறையில், தாழ்த்தப் பட்டவரையும் உறுப்பினராகச் சேர்க்க வைத்தவர் தோழர் பெரியார்.

தமிழகத்தில் பெரியார் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது அக்கட்சியின் சார்பாக சேரியில் வெட்டப்பட்ட குடிநீர் கிணற்றை திறந்து வைத்துப்பேசிய போது பெரியார், “இந்தக் கிணற்றில் தண்ணீர் எடுத்து குடித்து உயிர்வாழ்வதைவிட பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுக்கும் போராட்டத்தில் உயிர்விடுவது மேலானது” என்று தாழ்த்தப்பட்ட வர்களைப் பார்த்து உரிமைக்குரல் எழுப்பினார்.

கலைஞர் அவர்கள் குடிசைமாற்றுவாரியத்தின் மூலம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அடுக்குமாடித் திட்டம் அறிவித்தபோது, அந்தத் திட்டத்தினால் அம்மக்களை சேரி போன்று ஒதுக்கி வைக்காமல் அனைவரும் வாழும் ஊருக்குள் வீடுகளை அமைத்துத்தர வேண்டும் என்று அறிக்கைவிட்டு அதன் பயனாய் மதுரை, சென்னை போன்ற பெருநகரங்களில் நகரின் மையப்பகுதியில் வாழ வைத்தவர் பெரியார்.

ஈரோடு நகரசபைத் தலைவராக இருந்த தோழர் பெரியார், இந்தியாவிலேயே முதன்முறையாக மேல்நிலைத் தண்ணீர் தொட்டி அமைத்து குடிநீர் வழங்கும் முறையை அமல்படுத்தியபோது, பலத்த எதிர்ப்பிற்கிடையில் சேரி மக்களும் பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்கும் உரிமையை வழங்கியவர்.

இதுபோன்ற ஆயிரக்கணக்கான சான்றுகளை அடிக்கிக்கோண்டே போகலாம் சரி பெரியாரைக் கொச்சைப்படுத்துகின்ற தலித் அறிவு ஜுவிகள் அம்பேத்காாையாவது படமாகப் பார்க்காமல் பாடமாக முழுமையாக உள்வாங்கியிருக்கின்றார்களா? என்று பார்ப்போம்.

சில தலித் அமைப்புத் தலைவர்களின் இந்துமத ஆதரவுப் போக்கு

தோழர் பெரியாரைப்போலவே அனைத்துத்தரப்பு மக்களும் எல்லா உரிமைகளும் பெற்று அனைவரும் சமமாக வாழவேண்டும் என்று அரும்பாடுபட்ட தலைவர்  தோழர் அம்பேத்கர் . பார்ப்பனர்களைத் தவிர வேறுயாரும் சமஸ்கிருதம் படிக்கக் கூடாது என்ற மனுதர்ம விதியை மீறி முறைப்படி சமஸ்கிருதம் கற்றவர். அதனால் வேத புராணங்களை அலசி ஆராய்ந்ததில் அவை அனைத்தும்  இந்து மதத்தின் பேரால் ஜாதி சனாதனத்தைக் காப்பாற்றச் செய்யப்பட்ட சூழ்ச்சிகளே என்பதை உணர்ந்த அம்பேத்கர், “நான் இந்துவாகப்  பிறந்தது என் குற்றமல்ல; ஆனால் இந்து வாகச் சாகமாட்டேன்” என்று சூளுரைத்து பத்து இலட்சம் மக்களைத் திரட்டி இந்து மதத்திலிருந்து வெளியேறி புத்த மதத்தைத் தழுவினார்.

அப்போது  பிரம்மா, சிவன், விஷ்ணு, விநாயகன் போன்ற இந்துக் கடவுள்களை வணங்க மாட்டேன். இந்து மதம் கற்பித்துள்ள சாஸ்த்திர சடங்குகளைக் கடைபிடிக்கமாட்டேன் என்பது போன்ற உறுதிமொழிகளை அவர் முன்மொழிய பத்து இலட்சம் மக்கள் வழிமொழிந்து இந்து மததிலிருந்து வெளியேறினார்கள்.

அதுமட்டுமல்லாது சாதியை ஒழிக்க வழி என்ற நூலில் சாஸ்திரங்கள் புனிதம், சடங்குகள் புனிதம், கடவுள் தன்மை புனிதம் என்ற நம்பிக்கை இருக்கும்வரை சாதியை ஒழிக்க முடியாது. அந்த நம்பிக்கைகளிலிருந்து மக்களை வெளிக் கொணராமல் சாதியை ஒழிக்கவே முடியாது என்று சாதி ஒழிப்புக்குச் சரியான தீர்வுச் சொல்லி இவற்றுக்கெல்லாம் ஒட்டுமொத்த காரணகர்த்தாவான  இந்து மதத்தை ஒழிக்காமல் சாதியை ஒழிக்க முடியாது, என்பதைத் தன் வாழ்நாள் கடைமையாகக் கொண்டிருந்தவர் தோழர் அம்பேத்கர்.

  • தோழர் அம்பேத்கரைப் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொள்ளும் தலித் அறிவு ஜுவிகள் தலித் மக்களை இழிவுபடுத்தும் இந்து மதத்திலிருந்து அவர்களை விடுவிக்க என்ன செய்தார்கள்?

  • சேரிகளில் தனியாக, மாரியம்மன், காளியம்மன், சாம்பசிவன், மதுரைவீரன், காத்து, கருப்புகளுக்கு விழாக் கொண்டாட வேண்டாம் என்று அறிவுறுத்தும் தலித் அமைப்புத் தலைவர் யார்?

  • மாரியம்மன், காளியம்மன், முத்தாலம்மன், திருவிழாக்களில் அறியாமையில் அந்தத் தொண்டர்கள் தோழர் அம்பேத்கர் படம் போட்டு வைக்கின்ற ப்ளக்ஸ் போர்டுகள் தவறென்று அந்தத் தொண்டர்களுக்கு அறிவுரை கூறிய தலைவர்கள் யார்?

  • குலதெய்வக்கோவிலில் மொட்டை அடித்தல், கிராமக் கோவில் விழாக்களில், தனியாகப் பொங்கல் வைத்தல், நாட்டார் தெய்வக் கோவில் விழாக்களில் அடிமை வேலைகளைச் செய்தல், நுழையவே அனுமதிக்காத தெய்வங்களைத் தூக்கி எறிய அறிவுறுத்ததல் போன்றவற்றைச் செய்யும் தலித் அமைப்புத் தலைவர்கள் யார்?

  • காதணிவிழாக்கள், பூப்புனித நீராட்டு விழாக்களான இந்துமதச் சடங்குகளைத் தலைமை தாங்கி நடத்தி வைக்காத தலித் அமைப்புத் தலைவர்கள் யார்?

  • இறந்த பிறகும் தனிச்சுடுகாட்டில் புதைக்கப்படும் அவலத்தை எதிர்த்துக் குரல்கொடுக்காமல், அந்தத் தனிச்சுடுகாட்டிலும், இறப்புச் சடங்குகளைத் தவறாமல் பின்பற்றுபவர்களைத் தடுத்த, அறிவுரை கூறிய தலைவர்கள் யார்?

  • மாட்டிறைச்சித் தடைக்கு எதிராக, மாடறுக்கும் போராட்டம் என்று அறிவித்தாலும், அதையும் மதுரைவீரன் கோவிலில் படையலிடும் போராட்டமாக நடத்துகிறார்கள். மதுரைவீரனோ, குதிரைவீரனோ, அய்யனாரோ, கருப்புச்சாமியோ....இந்த சில்லறைத் தெய்வங்களின் கோவில்களில் படையல் போடுவதை நிறுத்தும் வரை தலித்து களுக்கு விடிவு ஏது? இதை அறிவுறுத்தும் தலைவர்கள் யார்?

  • திருமண நேரங்களில் ஜாதகம், ஜோசியம், நல்லநாள், நல்லநேரம், ஜாதி அடிப்படை யிலான தாலிவகை, பட்டுச்சோலை, பட்டு வேட்டி, தலித்களுக்குள்ளேயே அவரவர் களுக்குரிய உட்பிரிவு என்று பார்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தும் தலித் அமைப்புத் தலைவர் யார்?

  • இந்த மூடத்தனமான சடங்குகளிலிருந்து இவையெல்லாம் புனிதம் என்ற நம்பிக்கையிலிருந்து இம்மக்களை மீட்டெடுத்த தலைவர்கள் எத்தனைபேர்? சாதிகளை அப்பட்டமாகக் காப்பாற்றும் இந்து மதப் பண்டிகைகள் கொண்டாடாத தலித் அறிவு ஜீவிகள் எத்தனைபேர்?

அம்பேத்கர் பிறந்த நாட்களில் முளைப்பரி எடுப்பது, பால்குடம் எடுப்பது, இம்மானுவேல் சேகரன் குருபூஜையில்முளைப்பாரி எடுப்பது, மொட்டை அடிப்பது, பால்குடம் எடுப்பது போன்ற அசிங்ககங்களும் அரங்கேறிக்கொண்டுதான் உள்ளன. இந்தச் செயல்களை எந்த தலித் தலைவர்களும் கண்டித்ததாக ஒரு பெட்டிச் செய்தியைக்கூடக் காண முடிவதில்லை. குறைந்தபட்சம் இந்த அறிவுஜுவிகள்  அம்பேத்கரின் சாதியை ஒழிக்க வழி  என்ற  நூலை  வாசித்திருப்பார்களா என்பதும் அய்யமே.

நாள்தோறும் தீண்டாமைக் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் சாதாரண மக்களின் வேதனை என்னவென்றே உணராமல் குளு குளு அறைகளில் அமர்ந்து கொண்டு, பதவி சுகத்திற்காக இந்துத்துவ அமைப்புகளோடு கைகோர்த்துக்கொண்டு, “நாங்கள் தலித்துகள் அல்ல; எங்களை பட்டியலினப் பட்டியலினத்திலிருந்து  வெளியேற்றிவிடுங்கள், நாங்கள் தேவேந்திரரர்கள்” என்று கூறுவதைக் கேட்கும் போது 16 - வயதினிலே படத்தின் காட்சி ஒன்று நினைவுக்கு வருகிறது.

சப்பாணியாக அறிமுகமான நடிகருக்கு கோபாலகிருஷ்ணன் என்று பெயர் சொல்லி அழைக்கச்  சொல்லி கதாநாயகி சொல்லிக்கொடுக்க -  அடுத்த காட்சியில் உன்னை எல்லோரும் கோபாலக் கிருஷ்ணன் என்றுதானே அழைக்கிறார்கள் எனக் கதாநாயகி கேட்க  எவங்கூப்பிடுறான் எல்லாப் பசங்களும் சப்பாணின்னுதான் கூப்பிடுறான் என்று கதாநாயகன் சொல்ல - இனிமேல் உன்னை சப்பாணின்னு எவனாச்சும் கூப்பிட்டா... சப்புன்னு அறஞ்சிடு... என்று சொல்ல, அப்படி ஒருவன் அழைக்க சப்புன்னு அறைந்த கதைதான் நினைவுக்கு வருகிறது.

உடுமலையில் சங்கர் படுகொலை செய்யப்ட்டது அவர் பள்ளர் என்று கள்ளர் நினைத்த ஜாதி வெறிதான். அங்கு சங்கர் கள்ளர்களுக்குத் தேவேந்திரராகத் தெரியவில்லை. திருச்செங்கோட்டில் கோகுல்ராஜ் தலை கொய்யப்பட்டதும் கோகுல்ராஜ் அங்கிருந்த கவுண்டருக்கு பறையர் என்றுதான் தெரிந்தது. தருமபுரியில் கொன்று தண்டாவளாத்தில் வீசப்பட்ட இளவரசனை அந்கிருந்த வன்னியர் பறையர் என்று பாவித்ததால் படுகொலை செய்யப்பட்டார்.

நீங்கள் என்னதான் தேவேந்திரர், அருந்ததியர் என்று மாற்றிக் கொண்டாலும் நடைமுறையில் ஏதுமறியா அப்பாவி மக்கள் பள்ளர், பறையர், சக்கிலியராகத்தான் நடத்தப்படுகிறார்கள். அந்த வார்த்தைகளைக் கேட்கும்போதுதான் நாம் தாழ்ந்து கிடக்கிறோம் என்ற உணர்ச்சி வருகிறது அதற்கெதிராகப் போராடவேண்டும் என்ற எழுச்சி வருகிறது.

சப்பாணி என்றதும் சப்புன்னு அறைந்த அந்தக் கதாநாயகனின் மனநிலை வருகிறது. சில தலைவர்கள், சுகபோக அரசியல் இலாபத்திற்காக, இந்துத்துவப் பாசிச சக்திகளோடு கைகோர்த்துக் கொண்டு, அப்பாவி  தலித் மக்களின் வாழ்க்கையைச் சிதைத்து வருகிறார்கள். வடநாட்டைப்போல் தாழ்ந்து கிடக்கும் மக்களை இந்துக்கள் என்ற மாய வார்த்தைகளில் மயக்கி தாழ்ந்து கிடப்பதைச் சுகமாக நினைத்துக் கொண்டு நாள்தோறும் சித்ரவதைகளுக்கு ஆளாகிச் செத்துச் செத்துப் பிழைக்கும் இராமராஜ்திற்கு இம்மக்களை இட்டுச் சென்று விடாதீர்கள்.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் உழைத்த தலைவர்

பிற்படுத்தப்பட்ட மக்களிடையே மாநிலத்திற்கு மாநிலம் மாறுபட்டகோணங்களைக் கண்ட அம்பேத்கர் பிற்படுத்தப்பட்ட தன்மையை அறிந்தகொள்ள ஒரு ஆணையம் தேவை என்பதை உணர்ந்தார். எனவே தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்க வேண்டும் என பிரதமர் நேருவிடம் கோரிக்கை வைத்தார்.

அந்த ஆணையம் அமைக்கப்படக்கூடாது என்று பார்ப்பனர்கள் முடிவு செய்து உள்துறை அமைச்சர் படேல் மூலமாக,  பிரதமர் நேருவுக்கு நெருக்கடி கொடுத்தார்கள். அதேபோல் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கவேண்டும்  என்ற கோரிக்கையில் இந்து திருமணச் சட்டத்தில் திருத்தம் தேவை என்றும் அம்பேத்கர், நேருவிடம் கோரிக்கை வைத்தார்.

இந்த இரண்டு முக்கிய கோரிக்கைகளுடன் இன்னும் சில கோரிக்கைகள் வைத்து நேருவிடம் போராடி முடியாமல் போகவே மக்களுக்குப் பயன்படாத மந்திரி பதவி தேவை இல்லை என முடிவு செய்து, இராஜினாமா செய்வதாக அறிவித்தும் பார்ப்பன உயர்சாதியினர் நெருக்கடியால் அம்பேத்கரின் கோரிக்கை நிறைவேறாமல் போகவே பாதுகாப்பு அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்.

நேருவிற்குப் பின் இந்திராகாந்தி  பிரதமர் ஆகியும் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் அமைக்கப்படவில்லை. அதன்பிறகு பிரதமரான மொராஜிதேசாய்தான் ஓய்வுபெற்ற நீதிபதி பி.பி.மண்டல் தலைமையில் ஆணையம் அமைத்து அந்த ஆணையம் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அறிக்கையைத் தாக்கல் செய்த போது, மொராஜிதேசாய் அமைச்சரவை இல்லை. தொடர்ந்து வந்த பிரதமர்கள் இந்திராகாந்தி, இராஜீவ்  ஆகியோர்  அந்த அறிக்கையைக் கிடப்பில் போட்டனர். சமூக நீதிக்காவலர் வி.பி.சிங் மண்டல் பரிந்துரையை அமுல்படுத்தி, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பில் 27 சத இடஒதுக்கீட்டை அமுல்படுத்தி ஆட்சியை இழந்தார்.

இன்று நாடு முழுவதும் இருக்கின்ற பிற்படுத்தப்பட்ட மக்கள் அனுபவிக்கின்ற 27 சதம் இடஒதுக்கீட்டிற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்து மந்திரி பதவியைத் தூக்கி எறிந்த தோழர் அம்பேத்கர் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும் உழைத்த தலைவராவர்.

அம்பேத்கர் படம் தேவையா? பாடம் தேவையா?

தீண்டாமை வன்கொடுமைகளுக்கு எதிராக மட்டுமே போராடிக் கொண்டிருந்தால், இந்து மதம் உயிர் வாழும் வரை போராடிக்கொண்டு மட்டுமே இருக்க முடியும். தீண்டாமை வன்கொடுமைகளை எதிர்த்துச் சமரசமின்றிப் போராட வேண்டும். அதே அளவுக்கு தீண்டாமைக் கொடுமைகளுக்குக் காரணமான இந்து மத அழிப்புக்கும் பாடுபட வேண்டும். இந்த இரண்டையும் ஒரு சேரச் செய்யாதவர்கள் தலித் அமைப்புகளாக இருந்தாலும், பெரியார் இயக்கங்களாக இருந்தாலும், என்.ஜி.ஓக்களாக இருந்தாலும், கம்யூனிச இயக்கங்களாக இருந்தாலும் அவற்றால் இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் எந்தப் பயனும் இல்லை.

பெரியார் இயக்கங்களில், அவர்களது துண்டறிக்கைகளில் அம்பேத்கர் படம் போடுவதில்லை என்று குற்றம் சாட்டுவதும், அம்பேத்கரிய அமைப்புகளின் துண்டறிக்கைகளில் பெரியார் படம் போடுவதில்லை என்று குற்றம் சாட்டுவதும் நடந்து வருகின்றன. பெரியாருக்குத் ‘தந்தை’ என்று அச்சிடுபவர்கள், அம்பேத்கருக்கு ‘பாபா சாகேப்’ என்று அச்சிடுவதில்லை என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன.

ஆனால், எந்தத் தரப்பிலுமே பெரியாரின் கொள்கைகளைச் சொல்லவில்லை. அம்பேத்கரின் கொள்கைகளைச் சொல்லவில்லை என்று ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுக்களை எழுப்புவதே இல்லை. சிக்கல் அதுதான். படங்களுக்காகவும், அடையாளங்களுக்காகவும், பட்டங்களுக்காகவும் நாம் முட்டி மோதிக்கொண்டு இருக்கிறோம். இந்த இருவர் மட்டுமே ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தலைவர்களா? வேறு எவரும் இல்லையா?

புத்தருக்கும் முன்பே நமக்கான தலைவர் தோன்றியிருக்கிறார்கள். பாடுபட்டிருக் கிறார்கள். நூற்றுக்கணக்கான அமைப்புகளும், தலைவர்களும் நமக்காக, ஆரியப் பார்ப்பன எதிர்ப்பை - சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு உழைத்திருக் கிறார்கள். அந்த நூற்றுக்கணக்கான தலைவர்களில் எந்தத் தலைவரின் படத்தை வேண்டுமானாலும் அச்சிடலாம். அனைத்துத் தலைவர்களின் படங்களையும்கூட அச்சிடலாம். எந்தத் தலைவரின் படத்தையும் அச்சிடாமல்கூட இயங்கலாம். இதில் எதுவும் தவறில்லை.

ஆனால், அந்த ஆரிய அழிப்பு, இந்து மத அழிப்புத் தலைவர்களின் எண்ணங்களை நிறைவேற்றப் பாடுபடுகிறோமா? இல்லையா? என்பதை மட்டுமே விவாதங்களாக்க வேண்டும். அப்படிப்பட்ட விவாதங்களை எவரும் முன்னெடுப்பதில்லை. அதன் விளைவாகத் தான் தோழர் அம்பேத்கரை இந்து மதம் விழுங்கப்பார்க்கிறது. இது தொடர்ந்தால், இந்துத்துவப் பெரியாரும் தோன்றுவார்.

பெரியாருக்கு, ‘தந்தை’ பட்டம் போட வேண்டாம். அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டாம். சிலையை வணங்க வேண்டாம். அம்பேத்கருக்கு ‘பாபா சாகேப்’பட்டம் போட வேண்டாம். அவரது சிலைகளுக்கு மாலை அணிவிக்க வேண்டாம். வணங்க வேண்டாம். அவர்கள் தங்களது தோழர்களிடம் எதிர்பார்த்த, ‘தோழமை’மட்டுமே தேவை. பெரியாரோ, அம்பேத்கரோ, புத்தரோ யாரை வேண்டுமானாலும் உங்கள் தலைவர்களாக அறிவித்துக் கொள்ளுங்கள். ஆனால், அவர்களைக் கடவுளாக மாற்றி விடாதீர்கள். அவர்களது கொள்கைகளை நடை முறைப்படுத்துங்கள். அவர்கள் அறிவித்த இலக்குகளை நோக்கி முன்னேறுங்கள். தந்தை பெரியார் வாழ்க!.... பெரியாரியல்?....பாபா சாகேப் அம்பேத்கர் வாழ்க!  அம்பேத்கரியல்?.... 

Pin It