புத்த மதமும், சமண மதமும் அவை தோன்றிய காலம் முதல் தமிழ் நாட்டிலும் வளரத்தொடங்கின. கி.பி.3 ஆம் நூற்றாண்டுக்கும் முந்தைய சங்க காலத்திலேயே புத்தமும், சமணம், ஆசீவகமும், சார்வாகமும் தமிழர்களிடையே மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. ஏராளமான புத்த, சமண மடங்களும், விகாரங்களும் இங்கு மக்களை பெளத்த வழியில் வழிநடத்தியுள்ளன.
இந்து - பார்ப்பன ஆதிக்கவாதிகளின் கடும் எதிர்ப்பால் அழிவைச் சந்தித்த புத்தம், பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அயோத்திதாசர், இலட்சுமிநரசு, கோலார் தங்கவயல் அப்பாத் துரையார் போன்றோரின் முயற்சியால் மீண்டும் தழைக்கத் தொடங்கியது. அகில இந்திய அளவில் 1956 ல் தோழர் அம்பேத்கர் பவுத்தம் ஏற்றார். அதற்கு முன் 1935 லேயே இந்து மதத்தைவிட்டு வெளியேறப் போவதாக ஒரு அறிவிப்பைக் கொடுக்கிறார்.
இந்து மதத்தை விட்டு வெளியேறுவது என்ற அந்த அறிவிப்பு, பார்ப்பனர்களுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அந்த அறிவிப்பைத் தோழர் பெரியார் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றார். தோழர் அம்பேத்கருக்குப் பின் வருமாறு தந்தி அடித்துள்ளார்.
“தாங்கள் புத்திசாலித்தனமான முடிவுக்கு வந்தது பற்றி வாழ்த்துக் கூறுகின்றேன். தங்களது முடிவை எக்காரணத்தாலும் மாற்ற வேண்டாம். அவசரப்பட வேண்டாம். முதலில் குறைந்தது 10 லட்சம் பேரையாவது மதம் மாற்ற வேண்டும். பிறகே தாங்கள் மதம் மாறுவது பிரயோஜன மாகவிருக்கும். மலையாளம் உட்பட தென்னிந்தியா தங்களது முடிவுக்கு பலத்த ஆதரவு அளிக்கும்.” (குடி அரசு - வேண்டுகோள் - 20.10.1935)
என்று தந்தி கொடுத்தார். மதமாற்றம் என்பது தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல; இந்து மதத்தால் அடக்கப்பட்டுள்ள பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்டவர்களின் விடுதலைக்கும் அதுவே வழி என்கிறார்.
“தோழர் அம்பத்கார் அவர்களின் கர்ஜ்ஜனையும், வீரமும், ஞானமும் நிறைந்த தீர்மானமும் பொது ஜனங்களால் எவ்வளவுதான் வெறுக்கப்பட்ட போதிலும் அவர் எவ்வளவு தான் தூற்றப்பட்ட போதிலும் அதுதான் தாழ்த்தப்பட்ட மக்கள் மாத்திரமல்லாமல் இந்தியாவில் உள்ள இந்துக்களில் பார்ப்பன ரல்லாத மக்களாகிய 100க்கு 97 விகிதாச்சாரமுள்ள 24 கோடி இந்து மக்களின் விடுதலைக்கு சர்வசமய சஞ்சீவி ஆகப் போகிறது.” (குடி அரசு 20.10.1935)
20 ஆண்டுகளுக்குப் பிறகு 1956 ல் அக்டோபர் 14, 15 தேதிகளில் அம்பேத்கர் இலட்சக்கணக்கான மக்களுடன் நவயான பெளத்தத்தை அறிவிக்கிறார் - ஏற்கிறார். அதையும் பெரியார் வரவேற்கிறார். ஆதரவாக நிற்கிறார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக அம்பேத்கரின் இந்து மதஎதிர்ப்பு, பெளத்தம் ஏற்பு நடவடிக்கைகளுக்கு அழுத்தமான ஆதரவை வழங்கி வந்தார்.
மக்கள் மறுமலர்ச்சித் தடம் MMT
அப்படிப்பட்ட தீவிர புத்த மத ஆதரவா ளரான பெரியாரை, பெளத்தம் ஏற்கும் மக்களுக்கு எதிரியாகக் கட்டமைக்கும் வேலையை இன்று புதிதாக பெளத்தம் ஏற்கும் சிலர் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 08.10.2017 ல் சென்னை, கூடுவாஞ்சேரியில் ‘மக்கள் மறுமலர்ச்சித் தடம்’ என்ற அமைப்பு பெளத்தம் ஏற்பு நிகழ்வை நடத்தியது. அதில், ஜவஹர்லால் நேருவுக்குக்கூட நன்றி தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. ஆனால் ‘பெரியார்’ என்ற சொல் அந்தத் தீர்மானங்களில் எந்த இடத்திலும் வராமல் கவனமாகத் தவிர்க்கப் பட்டுள்ளது.
பெரியார் பெயரையோ, படத்தையோ தவிர்த்தது குற்றமல்ல; அது அவரவர் விருப்பம். ஆனால் அப்படித் தவிர்த்தது தான் மிகச் சிறந்தது. தவிர்த்தது தான் பெரியாருக்குப் பெருமை சேர்த்துள்ளது என்று கூறவேண்டிய அளவுக்கு அவர்களது சில கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேறியுள்ளன. மாநாட்டின் பல செயல் திட்டங்களும், அறைகூவல்களும், கோரிக்கைகளும் நமக்கு உடன்பாடானவை தான். அவற்றை வரவேற்கலாம். கோரிக்கை எண்5 மற்றும் 7 ஆகியவை பற்றி மட்டும் நாம் முரண்பட வேண்டியுள்ளது.
5. “இந்தியக் குடிமக்கள் யாவரும் தமது மனச் சான்றின்படி எந்த ஒரு மதத்தினையும் சுதந்திரமாகவும், பயமின்றியும், பாதுகாப்புடனும் தேர்வு செய்துக் கொள்ளவும் கடைபிடிக்கவும் இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 25 உறுதி செய்துள்ள அடிப்படை உரிமையான மதச் சுதந்திர உரிமையை மைய அரசு உறுதி செய்ய வேண்டும். இந்த அடிப்படை உரிமைக்கு எழுந்துள்ள அச்சுறுத்தல்களை அடியோடு ஒழிக்க மத்திய மாநில அரசுகள் முன் வர வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.”
7. “இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 26 ல் வழங்கப்பட்டுள்ள Freedom to manage religious affairs எனும் அடிப்படை உரிமையை மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.”
ஜாதி - மதங்களைக் காக்கும் பிரிவு 26
இந்த இரண்டு சட்டப்பிரிவுகள் தான் ஜாதியையும், மதத்தையும் - இந்து மதப் பண் பாடுகளையும், ஜாதி ஆதிக்கப் பண்பாடுகளையும், இந்து மதப் பழக்க வழக்கங்கள் அனைத்தையும் பாதுகாக்கின்றன. இன்று பிராமணாள் கஃபே, தேவர் டீ ஸ்டால், கவுண்டர் மெஸ் என்று ஜாதிப் பெயரில் இயங்கும் கடைகளுக்கும் - வன்னியர் மேட்ரிமோனியல், முதலியார், முத்துராஜா, நாயக்கர், செட்டியார் மேட்ரிமோனியல்களுக்கும் - அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக முடியாத நிலைக்கும், அகமண முறைக்கும், பெண்ணடிமைத் தனத்திற்கும், அனைத்து வகையான ஜாதிய வன் கொடுமைகளுக்கும் அடிப்படையாக இருக்கின்றன. அவற்றைப் ‘பழக்க வழக்கங்கள்’ என்ற பெயரில் அரசியல் சட்டப் பாதுகாப்பையும் வழங்குகின்றன.
இந்திய வரலாற்றில் பார்ப்பனர்கள், ‘பழக்க வழக்கங்கள்’ என்ற பெயரில் இந்து, ஜாதி ஆதிக்க, பார்ப்பன ஆதிக்கப் பண்பாட்டைத் திணிக்கத் திட்டம் போடத் தொடங்கிய காலத்திலேயே தோழர் பெரியார் அதைச் சரியாகக் கண்டு, கடுமையாக எதிர்த்தார். 03.07.1929 ஆம் நாள் சென்னை நேப்பியர் பார்க்கில் (தில்லை வனத்தில்) நடைபெற்ற சென்னை ஆதி திராவிட மகா ஜனங்களின் சுயமரியாதை மாநாட்டின் சொற் பொழிவில் பெரியார்,
“நமது சுயமரியாதை இயக்க மேற்பட்டு 2, 3 வருடங்களேயானாலும் அது நமது நாட்டில் ஒருவித உணர்ச்சியை உண்டாக்கி இருக்கின்றது. அநேக விஷயங்களில் கடுமையான எதிர்ப்புகள் மறைந்து விட்டன. சாமியையும் சாத்திரத்தையும் தொட்டதற் கெல்லாம் முட்டுக்கட்டையாகக் கொண்டு வந்து போட்டுக்கொண்டிருந்தவர்கள் இப்போது அதை ஒருவிதத்தில் மறைத்துக் கொண்டு பழக்கம் வழக்கம் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். சாமி, மதம், சாத்திரம் என்கின்ற முட்டுக்கட்டைகளை இன்னமும் தைரியமாக உடைத்தெறியத் துணிந்து விட்டோமே யானால் பழக்க வழக்க முட்டுக் கட்டைகளை பஞ்சாய் பறக்கச் செய்துவிடலாம்.” -( குடி அரசு - 21.07.1929)
என்று அரசியல் சட்டம் எழுதப்படுவதற்கு முன்பே, இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பே பழக்க வழக்கம் என்ற சொல்லின் ஆபத்தைக் கண்டு எச்சரிக்கிறார்.
கராச்சி என்ற நகரில் 1931 ஆம் ஆண்டு மார்ச் 27 முதல் 30 வரை நடைபெற்ற அகில இந்திய காங்கிஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரஜா உரிமைத் தீர்மானம் பெரியாரின் எச்சரிக்கையை உறுதி செய்தது. அந்தத் தீர்மானம் பற்றி பெரியார்,
அரசியல் சட்டத்தில் ஜனங்களுடைய ஜீவாதாரமான உரிமை என்பது பற்றிய, விதிப்பிரிவுகளில் “இந்தியாவில் உள்ள சகல சமூகத்தாருக்கும், “அவர்களது கலைகள், சமூக நாகரீகங்கள், பாஷைகள், எழுத்துக்கள், தொழில்கள், பழக்கவழக்கங்கள், மதம், மத தர்மங்கள் ஆகியவை காப்பாற்றப்படும்” என்பதாக ஒரு உத்திரவாதம் அதாவது ஜாமீன் கொடுக்கப்படும் என்கின்ற நிபந்தனையும் சேர்க்கப்படும் என்பதாகத் தீர்மானித்திருக்கின்றார்கள். இது அசோசியேட் பிரஸ் சேதியாகும். மற்றும் 13-ந்தேதி வெளியான எல்லாத் தினசரிகளிலும் காணப் படுவதுமாகும்.
...இந்தியாவில் எத்தனை சமயத்தார், வகுப்பார் உண்டோ அத்தனை வகுப்பாருடைய உரிமைகளையும் பொருத்த கலை ஆதாரங்கள், அதாவது வேதசாஸ்திர புராணங்கள், அவர்களது பாஷைகள், பாஷை எழுத்துக்கள், வகுப்பு கல்விகள், வகுப்பு தொழில்கள், அந்தந்த வகுப்பு பழக்க வழக்கத்தில் இருந்துவரும் நடவடிக்கைகள், ஒவ்வொரு வகுப்பாருடைய மதங்கள், அதாவது சமயம், உட்சமயம், புறச்சமயம், அந்தந்த மததர்மங்கள், அதாவது கோவில், கோவில்சொத்து, மடம், மடங்களின் சொத்துக்கள், மததர்மமான மற்ற காரியங்கள் செய்வதற்கு விடப்பட்டிருக்கும் தர்ம சொத்துக்கள் ஆகியவைகள் எல்லாம் காக்கப்படும் என்பதாக காங்கிரஸ் உறுதிகூறி இருப்பதோடு உத்திரவாதமுமேற்றுக் கொண்டிருக்கின்றது.
...இவற்றை யெல்லாம் பார்த்த பிறகும், நன்றாய் உணர்ந்த பிறகும், இனியும் சுயமரியாதைக்காரர்கள் காங்கிரசைப் பற்றி சிறிதுகூட தாட்சண்யம் பார்க்கவேண்டியதில்லை என்பதாகவும், அது ஒரு பெரிய ஜன சமூகத் துரோக சபையாகவும், தாழ்த்தப்பட்ட ஏழை மக்களை ஏமாற்றிக் கழுத்தறுக்கும் வஞ்சக சபையாகவும் இருக்கின்ற உண்மையைப் பொது ஜனங்களுக்குப்படும்படி விளக்க வேண்டியதையே முக்கிய கடமையாகக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டது - (தோழர் பெரியார், குடி அரசு - 19.07.1931)
1931 ல் மட்டுமல்ல; தொடர்ச்சியாக இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட காலம் வரை இந்தப் பழக்க வழக்கம் என்ற ஆபத்தை எதிர்த்துப் போராடிவந்துள்ளார். சில சான்றுகள்.
1931 ம் வருஷத்திய காங்கரஸ் வேலைக் கமிட்டியானது பிரஜா உரிமை திட்டம் என்பவற்றில் ஒன்றாக “இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வகுப்பார்கள் சம்பந்தப்பட்ட வரையில் அவரவர்களுடைய கலை, பாஷை, எழுத்து, கல்வி, தொழில், மத ஆச்சாரம், மத தர்மம் ஆகியவைகள் காப்பாற்றிக் கொடுக்கப்படும்” என்கின்ற தீர்மானத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறது. (தோழர் பெரியார்,குடி அரசு - 06.09.1936)
“கராச்சி காங்கிரஸ் பிரஜா உரிமை திட்டம் என்பதில் ஜாதி, மதம், தொழில், ஜாதிமத உரிமை, பழய சாஸ்திரம், பழக்க வழக்கம், நடைமுறை ஆகியவைகளை காப்பாற்றிக் கொடுப்பதாக உத்தரவாதமளிக்கப் பட்டிருக்கிறது. இதன் அருத்தம் என்ன என்று பாருங்கள். சமூக சம்மந்தமாக உள்ள குறைபாடு களிலும், பல மக்களுக்கு இருந்துவரும் கொடுமை களிலும், சில மக்கள் அனுபவித்து வரும் தந்திரமான மேன்மையிலும் சிறிதும் கை வைப்பதில்லை என்பது தான் இன்றைய அரசியல் தத்துவமாகும்.
இந்திய ஏழை மக்களுக்கும் பாமர மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் போதிய அறிவும் சொரணையும் இல்லாததால் இன்று அரசியல் வேறாகவும் சமூக இயல் வேறாகவும் இந்நாட்டில் இருந்து வர முடிகின்றது.
...புரட்சி உணர்ச்சி உள்ள இந்த காலத்தில் இன்னமும் அரசியல் திட்டத்தில் ஜாதியைக் காப்பாற்ற உரிமையை பிரத்தியேகமாய் குறித்து வைத்துக்கொண்டு அரசியல் மூலம் மக்களுக்கு சுதந்திரமும் விடுதலையும் சம்பாதித்துக் கொடுக்கிறோம் என்கின்ற ஒரு கூட்டம் இந்த நாட்டில் இருக்குமானால் - இருக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்றால் இந்நாட்டு மக்கள் மனிதத் தன்மை இன்னதென்று உணராத நடைப் பிணங்கள் என்று ஏன் சொல்லக்கூடாது என்று கேட்கின்றேன்.” (தோழர் பெரியார், குடி அரசு - 06.06.1937)
1931 காரச்சி காங்கிரசில் நிறைவேற்றப்பட்ட பிரஜ உரிமைத் தீர்மானம், பெரியாரின் தொடர்ச்சியான எதிர்ப்புகளை மீறி, இந்திய அரசியல் சட்டத்தில் இணைக்கப்பட்டது. அந்தப் பிரிவு தான் 26. ஜாதி, மதங்களையும், மத நிறுவனங்களையும் பாதுகாக்கும் அந்த 26 வது பிரிவைத்தான், உறுதிப்படுத்தவேண்டும் என்று மக்கள் மறுமலர்ச்சித் தடம் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
உலக அளவில் அதுவரை நடந்திராத போராட்டம்
மேற்கண்ட 25 மற்றும் 26 பிரிவுகள் மட்டுமல்ல; 13, 19, 25, 26, 368, 372(1) ஆகியவையும் ஆகிய சட்டப் பிரிவுகளும் பார்ப்பன, ஜாதிய ஆதிக்கத்திற்குப் பாதுகாப்புக் கொடுக்கின்றன. அதனால் தான் தோழர் பெரியார் 1957 லேயே இந்திய அரசியல் சட்டத்தின் மேற்கண்ட பிரிவுகளை எரிக்கும் போராட்டத்தை நடத்தினார்.
பெரியார் விடுத்த போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து இந்திய அரசாங்கம் அரசியல் சட்டத்தைக் கொளுத்தினால் மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என அறிவித்தார். ஜாதி ஒழிப்பிற்காக இது போன்ற அடக்குமுறைகள் எதற்கும் அஞ்சாமல் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோழர்கள் சட்டப் பிரிவுகளைக் கொளுத்தினர். கொளுத்தியவர்களைச் சிறையில் அடைக்க இடம் இல்லாததால் பெரும் பாலானவர்கள் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.
சமுதாயத்தின் அனைத்து ஜாதிகளைச் சேர்ந்த தோழர்களும் ஏறத்தாழ 4000 பேர் மூன்றாண்டு கடுங்காவல் தண்டனைக்குத் தயாராகச் சட்டங்களைக் கொளுத்தினார்கள். இப்போராட்ட வரலாறு, “சாதியை ஒழிக்க அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம்” என்ற நூலாக வெளிவந்துள்ளது. அதில் தோழர் திருச்சி செல்வேந்திரன் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையில் சில பத்திகளைப் பார்ப்போம்.
“நிறைமாதக் கர்ப்பிணிகள், எழுபது வயதைத் தாண்டிய முதியவர்கள், பதினெட்டு வயது கூட நிரம்பாத சிறுவர்கள் கைக்குழந்தையோடு தாய்மார்கள், இரண்டு கண்களும் தெரியாத திருவரங்கம் மகாமுனி போன்ற தொண்டர்கள், ஒரு கால் முடமாகிக் கட்டை ஊன்றித் தத்திச் செல்லும் திருவரங்கத்துக் கொத்தனார் ஒருவர், அன்றாட ஜீவனத்திற்கே அல்லாடுகிற ஏழைத் தொண்டர்கள் இவர்களோடு பட்டுப் பீதாம்பரமும், ஜரிகை, உத்தரியமும், வைரமோதிரங்களும், மைனர் சங்கிலிகளுமாய் ஜொலிக்கும் தஞ்சை, திருச்சி, தென் ஆற்காடு மாவட்டத்துப் பல நூறு ஏக்கர்களுக்குச் சொந்தக்காரர்களான பெருநில உடமையாளர்கள், குட்டி ஜமீன்தார்களின் குபேரக் குடும்பத்துப் பிள்ளைகள் எல்லாம் பெரியாரின் ஆணை ஏற்றுக் கைகோர்த்து, ஒரே குடும்பமாய் கருஞ்சட்டை இராணுவம் நடந்தது. மூன்றாண்டுகால கடுங்காவல் தண்டனை என்ற அச்சுறுத்தும் சட்டம்இழவு வீட்டு வாசல்படியில் கிடக்கும் எச்சில் இலை போல் கிடந்தது.
இந்தத் தண்டனைக் காலத்தில் சிறையிலிருந்த திருவாரூர் முத்துக்கிருஷ்ணனின் மனைவி காலரா வினால் இறந்தார். இறந்த மனைவியை அடக்கம் செய்ய முத்துக்கிருஷ்ணன் பரோலில் வரவில்லை. தந்தை சிறையில், தாய் மறைந்து விட்டார். பிள்ளைகள் அனாதைகள் ஆகிவிட்டனர். கழகத் தோழர்கள் குடும்பத்தினர் அனைவரும் முத்துகிருஷ்ணன் சிறையி லிருந்து வரும் வரை பிள்ளைகளைத் தத்தெடுத்துக் கவனித்துக் கொண்டனர். பிறகு சிறை மீண்ட முத்துக் கிருஷ்ணன் பிள்ளைகளோடு திருவாரூர் தேரோடும் வீதியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட போது மக்கள் வடித்த கண்ணீரால் கமலாயம் முத்துக்குளமே உப்பு நீராகியது.
...பல ஆயிரக்கணக்கான தொண்டர்களுக்கு மூன்றாண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் யாரும் எதிர் வழக்காடவில்லை! ‘கொளுத்தப்பட்டது அரசியல் சட்ட நூலல்ல. அதன் பிரிவுகள் சில எழுதப்பட்ட ஒரு தாள் தான். இது தேசிய அவமாதிப்பாகாது' என்று வாதாடி இருந்தால் அனைவருமே தண்டனையின்றித் தப்பி இருப்பார்கள்.
.இந்த மூன்று மாதம் தொடங்கி மூன்றாண்டுகள் வரை இருந்த தண்டனைக் காலத்தில் திராவிடர்கழகத் தோழர் களில் பலர் காட்டிய மனஉறுதியும் அஞ்சாமையும் தியாகமும் மகத்தானது. சிறையிலேயே கடுமையாய் நோய்வாய்ப்பட்டு, இனிப்பிழைக்க வாய்ப்பில்லை என்று தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பே பழியி லிருந்து தப்பிக்கத் தமிழக அரசால் விடுதலை செய்யப் பட்டவர்கள் பதிமூன்று பேர் விடுதலையான ஒரே வாரத்திற்குள் இறந்தனர். அவர்களும் கொல்லப் பட்டவர்கள் பட்டியலில் தான் வருவார்கள். சாதி ஒழிப்புப் போருக்குத் திராவிடர் கழகம் கொடுத்த களப்பலி மொத்தம் பதினெட்டு பேர்.
...திருச்சி வாளாடியைச் சேர்ந்தவன் சிறுவன் பெரியசாமி. அவனுடைய தாய்க்கு ஒரே மகன். பதினெட்டு வயது கூட நிறையாத (16 வயது) பெரியசாமி தீவிரமான கருஞ்சட்டைத் தொண்டன். பெரியாரின் கூட்டங்கள் எங்கு நடந்தாலும், தவறாமல் கலந்து கொள்ளும் போர் வீரன். பெரியாரின் ஆணையை ஏற்று அவனும் சட்ட நகலை எரித்தான்.
ஒருநாள் தட்டப்பாறை சிறையில் பார்வையிட வந்தார் தமிழக கவர்னர் விஷ்ணுராம் மோதி பெரிய சாமியையும் கவர்னர் விசாரித்தார். “உன்னை மன்னித்து விடுதலைச் செய்கிறேன். இனிமேல் இது போன்ற காரியம் செய்ய மாட்டாயல்லவா' என்றார். சட்ட எரிப்பிற்கான காரணத்தைக் கவர்னரிடம் தெளிவாய் விளக்கிய பெரிய சாமி, “வெளியே அனுப்பினால், மீண்டும் கொளுத்துவேன்” என்றான்.
கடுமையான கோடைக்காலம் பழக்கமில்லாத புழு புழுத்த சோளக் கஞ்சிஇரண்டும் ஒப்புக் கொள்ளாமல் பெரியசாமிக்கு வயிற்றுக் கடுப்பில் தொடங்கி சரியான மருத்துவ வசதி இல்லாமல் ரத்தம் ரத்தமாய் பேதியாகிப் பெரியசாமி நினைவு தடுமாறலானான். சிறை அதிகாரிகள், “விடுதலை செய்கிறோம். வெளியே போகிறாயா?” என்று கேட்க, மெளனமாய்க் கையை அசைத்து மறுத்து விட்டான். சில மணி நேரம் தான், இறந்து போனான்.”
ஜாதி ஒழிப்பிற்காக - ஜாதியைப் பாதுகாக்கும் 25, 26 ஆகிய சட்டப்பிரிவுகளையும், மேலும் சில பிரிவுகளையும் 30 ஆயிரம் தோழர்கள் எரித்தனர். 4000 தோழர்கள் 2 ஆண்டுக்கும் மேலாகக் கடுங்காவல் தண்டனை அடைந்தனர். 18 தோழர்கள் களப்பலி ஆயினர். அந்த மாபெரும் ஜாதி ஒழிப்புப் போராட்டம் நடந்தது 1957 நவம்பர் 26 ல். இந்த ஆண்டோடு 60 ஆண்டுகள் முடிந்துள்ளன.
இந்து மதத்தையும், ஜாதியையும் காக்கும் கோரிக்கைகள்
இந்த மாபெரும் ஜாதி ஒழிப்புப் போராட்ட வரலாற்றுக்கு எதிராக - உயிரையும், வாழ்வையும் துச்சமாக எண்ணிய ஜாதி ஒழிப்புப் போராளிகளின் இலட்சியங்களுக்கு எதிராக - ஜாதியைப் பாதுகாக்கும் 25, 26 பிரிவுகளை உறுதிப்படுத்த வேண்டும் என்று பெளத்தம் ஏற்கும் தோழர்கள் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது மிகப் பெரும் வேதனையை அளிக்கிறது.
ஒருவேளை ‘மதமாற்றத் தடைச்சட்டம்’ என்பவை போன்ற தடைகளுக்கு எதிராக இக்கோரிக்கை எழுந்திருக்கும் என்று யாராவது கூறினாலும், தமிழ்நாட்டில் இதுவரை புத்தம் ஏற்றவர்கள் யார் மீதும் அப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது.
தாழ்த்தப்பட்டவர்கள் புத்த மதத்தை ஏற்றாலும், அவர்களது இடஒதுக்கீட்டு உரிமைகள் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்ற சட்டப் பாதுகாப்பும் உள்ளது. இந்த உரிமை இஸ்லாமுக்கோ, கிறிஸ்தவத்திற்கோ மதம் மாறும் தலித்துகளுக்குக் கிடையாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படி இருந்தும் இவை போன்ற தீர்மானங்கள் எதற்காக நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை மக்கள் மறுமலர்ச்சித் தடம் விளக்க வேண்டும்.
பார்ப்பானைப் பாதுகாக்கும் பதிவுகள்
இந்த பெளத்தம் ஏற்பு நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்திமுடித்த குழுவில் முக்கியமானவர், முதன்மையானவர் தோழர் ஆனந்த் சித்தார்த்தா என்பவர் ஆவார். அவர் அண்மையில் அவரது முகநூல் பதிவொன்றில் தெரிவித்துள்ள கருத்தைப் பாருங்கள்.
“தோழர் மதிமாறனின் இயக்குனர் ரஞ்சித் தொடர்பான பதிவு ஒன்று பல்வேறு தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. பலபேர் இது அம்பேத்கரிஸ்ட் VS பெரியாரிஸ்ட் சண்டை என சமாதனப் புறாவிடு வதையும், மதிமாறன் பெரியார் பின்னே ஓடிந்து கொள்வதையும் காணமுடிகிறது.
உண்மையிலே இது என்ன பிரச்சனை? அம்பேத்கரிஸ்ட்VS பெரியாரிஸ்ட் பிரச்சனையா? இல்ல இது மதிமாறனுக்கும் ரஞ்சித்துக்குமான பிரச்சனையா? அதுவும் இல்லை.
திராவிட சித்தாந்தத்திற்கும் தலித்துகளுக்கும் உள்ள பிரச்சனை, சமூக நீதிக்கும் தலித்துகளுக்கும் உள்ள பிரச்சனை - பெரியாரின் கொள்கைக்கும், தலித்து களுக்கும் உள்ள பிரச்சனை - அரசியல் அதிகாரத் திற்கும் தலித் பிரதிநிதித்துவத்திற்கும் உள்ள பிரச்சனை - பெரியார் மண்ணுக்கும் சாதிய வன்கொடுமைகளுக்குமான பிரச்சனை - முக்கியமாக இது பெரியாருக்கும் அயோத்திதாசப் பண்டிதருக்குமான பிரச்சனை - இவ்ளோ பிரச்சனையை வைத்துகொண்டு இது அம்பேத்கரிஸ்ட் பெரியாரிஸ்ட் சண்டை எனச் சுருக்கி, சமாதனப்புறா விடுவது நியாமா?
என்னைப் பொறுத்தரை இச்சண்டை வேண்டும். இது ஆரோக்கியமான விவாதமாக மாற வேண்டும். இவ்வளவு ஆண்டுகாலம் பார்ப்பான் பேய் புடுச்சிக்கும், பார்ப்பான் பூதம் அறைஞ்சிடும் என்று எப்படி பயத்தை உண்டாக்கி Non Brahmin movement உருவாகி அதிகாரத்தைக் கைப்பற்றியதோ - அதே யுக்தியைப் பயன்படுத்தி தலித்துகளின் உரிமை கோரலை இங்கு நசுக்கப்படுகிறது. அதையும் மீறி தலித் அறிவுஜீவிகள் கேள்விகேட்டால் இந்துத்துவக் கைக்கூலி எனப் பட்டம் கொடுத்து ஒடுக்கிவிடுவது தான் இந்தச் சமூக நீதிக்குப் பட்டா வாங்கிய மதிமாறன் போன்றோர்களின் தலையாய கடமை.
இது பெரியார் மண், இது சமூநீதி மண் என பெரியாரையும் சேர்த்து கட்டமைக்கப்பட்ட அந்தப் புனிதப் பிம்பத்தை இவ்வளவு ஆண்டுகாலம் நடந்த தலித் வன்கொடுமைகளைக் கண்டு பாதிக்கப்பட்டவனாக ரஞ்சித் அதை உடைக்கிறார்.. அதில் பதறிப்போனவர்கள்தான் தோழர் ஓவியா, மதிமாறன் போன்றோர்கள். விவாதம் தொடரட்டும் தீர்வு எட்டும்வரை.”
தோழர்கள் மதிமாறன் - இரஞ்சித் பதிவுகள் தொடர்பாக இந்த எதிர்வினைப் பதிவைத் தோழர் ஆனந்த் சித்தார்த்தா எழுதியுள்ளார்.
பார்ப்பன ஆதிக்கம் என்பது வெறும் பேய், பூதம் போன்ற கற்பனைகள்தான். அந்தக் கற்பனைகளைப் பயன்படுத்தி, திராவிடர் இயக்கம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அதிகாரங்களை வழங்கியுள்ளது என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார். இவை ஸ்டாலின் இராஜாங்கம் போன்ற பல அறிஞர்கள் பார்ப்பனக் காலச் சுவடுகளில் பல ஆண்டுகளாக கூறியவை தான். பல நேரங்களில் அதற்குரிய பதில்களும் வந்துள்ளன. நாமும் பதில் எழுதுவோம்.
இப்படி வெளிப்படையாக பார்ப்பன ஆதிக்கத்திற்குத் துணைபோகின்றவர்களும் - இந்து மத ஆதிக்கம், பார்ப்பன - பார்ப்பனிய - ஜாதி ஆதிக்கங்களைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளுக்கு ஆதரவாகக் கோரிக்கை விடுப் பவர்களும் - பெளத்தத்தைப் பரப்பும் இடத்தில் இருக்கிறார்கள்.
இந்தியத் துணைக்கண்டத்தில், ஏன் உலக அளவில்கூட மிகப்பெரும் மனிதஇனப்படுகொலை என்று வரலாற்றிலேயே பதிவான இனப்படுகொலை எது? உறுதியாக, இந்து மதப் பார்ப்பனர்கள் இந்த நாட்டில் வாழ்ந்த நமது முன்னோர்களான பெளத்தர்கள் மீது நடத்திய இனப்படுகொலைதான் உலகிலேயே மிகக் கொடூரமானது.
பெளத்தத்திற்கு மட்டுமல்ல; உலகில் சமத்துவத்தை விரும்பும் அனைத்து உயிர்களுக்கும் எதிரானவர்கள் பார்ப்பனர்கள். அந்தப் பார்ப்பனர் களை ஆதிக்கவாதிகள் அல்ல என்பதும், நட்பு சக்தியாகப் பார்க்க வேண்டிய பெரியாரையும், திராவிடர் இயக்கத்தோழர்களையும் எதிரிகளாகக் கட்டமைப்பதும் எதற்குப் பயன்படும்? தோழர் அம்பேத்கருக்கு எதிரான - பார்ப்பன மயமான, சிங்கள- ரோஹிங்கியா மயமான ‘மகாயான பெளத்தம்’ தமிழ்நாட்டில் ஆழமாக நுழையவே பயன்படும்.
ஒரு அம்பேத்கரிஸ்ட்டோ அல்லது பெரியாரிஸ்ட்டோ ஜாதியைப் பாதுகாக்கும் சட்டப் பிரிவுகளை உறுதிப்படுத்தும் கோரிக்கைகளை முன்மொழியமாட்டார்கள். பெரியாரையும், திராவிடர் இயக்கத்தையும் எதிரியாகக் கட்டமைக்க மாட்டார்கள்.
இந்த மக்கள் மறுமலர்ச்சித் தடம் அமைப்பில் பல பெரியாரியவாதிகளும், அம்பேத்கரியவாதிகளும் முக்கியப் பொறுப்பாளர்களாகப் பணியாற்றுகின்றனர். அவர்களுக்குத்தான் இந்தக் கட்டுரை. எங்களது புரிதல் தவறு என்று நீங்கள் விளக்கினால், மகிழ்வுடன் எங்களைத் திருத்திக்கொள்ளத் தயாராக உள்ளோம்.