சென்னையில் உள்ள அந்த அரசு அலுவலகம் பரபரப்பாகவும், அதே சமயம் அமைதியாகவும் ஒரு சேர இருந்தது. காரணம். அன்று தலைமைச் செயல கத்தின் பணியாளர் மற்றும் நிர்வாகத் துறையில் இருந்து, அவ்வலுவலக நடவடிக்கைகளை நேராய்வு செய்ய அதிகாரிகள் வந்திருந்தார்கள்.

எந்தவிதமான கடுமையான குறிப்புகளுக்கும் ஆட்படாமல் தப்பிவிட வேண்டும் என்று அவ்வலுவலக அதிகாரிகளும் ஊழியர்களும் எந்த வினாக்களுக்கும் விடையளிக்கும் ஆயத்த நிலையில் நின்றிருந்தனர். அவ்வலுவலக ஊழியர்கள் சிலரிடம் சில மனக்குறைகளும் இருந்தன.

சில “முக்கியமான” பதவிகளில் குறிப்பிட்ட சிலரே தொடர்ந்து மாறி மாறி இருப்பதாகவும், சிலருக்கு அவ்விடங்களில் “வாய்ப்பு” அளிக்கப்படுவதில்லை என்பதுமே அம்மனக்குறை. இம்மனைக்குறையை மனுவாக எழுதி ஊழியர் சங்கம் தணிக்கை செய்ய வந்த அதிகாரிகளிடம் அளித்தது.

தணிக்கை அதிகாரிகள் அலுவலகச் செயல்பாடு களில் பல குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிப் பதிவு செய்திருந்தனர். ஊழியர் சங்கத்தின் புகார் மனுவில் கண்ட குறைபாடுகளைப் பற்றி எதுவும் பதிவு செய்யா விட்டாலும், மேலாண்மை இயக்குநரிடம் வாய்மொழி யாக, இதுபோன்ற புகார்கள் எழாதவாறு பார்த்துக் கொள்ளும்படி, கூறிவிட்டுச் சென்றார்கள்.

மேலாண்மை இயக்குநரும், ஒரு இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களை இடமாற்றம் செய்யும்படி நிர்வாக அதிகாரியிடம் கூறினார். நிர்வாக அதிகாரியும் அவ்வாறே ஒரு பட்டியலைத் தயாரித்து மேலாண்மை இயக்குநரிடம் கொடுத்தார். பின் இருவரும் அப்பட்டியலைப் பார்த்து யார் யாரை, எங்கே எங்கே மாற்றுவது என்று விவாதித்து மாற்றல் ஆணைகளைப் பிறப்பித்தார்கள்.

இவ்வாறு மாற்றல் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டபின் ஊழியர்களிடையே வேறுவிதமான மனக்குறை ஏற்பட்டது. பலர் இந்த மாற்றல் ஆணைகளில் மாற்றம் வேண்டும் என்று கேட்டனர். மேலாண்மை இயக்குநர் எதையும் மாற்ற முடியாது என்று கண்டிப்பாக மறுத்துவிட்டார்.

மாற்றல் ஆணையை ஏற்க விரும்பாத சிலர், அவ்வாணைகளைக் கையில் வாங்காமலேயே விடுமுறையில் சென்றுவிட்டனர். அப்படிச் சென்ற சிலரில் சிவகெங்கை அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டு இருந்த கலைவாணனும் மகாதேவனும் இருவர் ஆவர். இருவரும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து சிவகெங்கைக்கு மாற்றப்பட்ட வர்கள்.

இருவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தன. மற்றவர்களும் ஊழல் பேர்வழிகளே என் றாலும், இந்த இருவரும் பொது மக்களிடம் இங்கித மில்லாமல் நடந்து கொண்ட முறை மிகுந்த கெட்ட பெயரை அவர்களுக்கு ஏற்படுத்தி இருந்தது. ஆகவே ஊழல் புரிவதற்கு வாய்ப்புக் குறைவானதாகவும், பொதுமக்கள் தொடர்பு குறைவாகவும் உள்ள சிவகெங் கை அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார்கள்.

சிவகெங்கைக்குச் சென்ற பின் இருவருடைய வாழ்க்கையிலும் திருப்பம் ஏற்பட்டது. மகாதேவன் பார்ப்பனர். சிவகெங்கை அலுவலகத்தில் அவருக்கு இருப்புக் கொள்ளவில்லை. அங்கிருந்து மீண்டும் சென்னைக்கோ அல்லது மதுரை, கோயம்புத்தூர் போன்ற பெரிய ஊர்களுக்கோ மாற்றல் பெற்றுவிட வேண்டும் என்று முயன்று பார்த்தார். ஆனால் முடிய வில்லை. அதனால் அலுவலகத்தில் மனவெறுப் பாகவே பணிபுரிந்து கொண்டிருந்தார்.

அப்படி இருக்கும் பொழுது ஒருமுறை அவருடைய வீட்டிற்குப் பக்கத்தில் இருந்த கோயிலுக்குப் போயிருந்த போது, கோயில் அர்ச்சகர் மகாதேவனுக்கு இராமாயணத் திலும், மகாபாரதத்திலும் மற்ற புராணங்களிலும் நல்ல புலமை இருப்பதையும், மேலும் அவருக்குப் பேச்சுத் திறமை இருப்பதையும் கண்டு கொண்டார்.

அவரைச் சொற்பொழிவு ஆற்ற வைத்தால் கோயிலுக்கு வரும் கூட்டம் அதிகரிக்கும் என நினைத்தார். அர்ச்சகர் மகாதேவனிடம் தன் எண்ணத்தைக் கூறிய போது, தனக்குச் சொற்பொழிவு ஆற்றிப் பழக்கம் இல்லை என்று கூறினார். ஆனால் அர்ச்சகரின் வற்புறுத்தலில் ஒப்புக் கொண்டார்.

மகாதேவன் அக்கோயிலில் சொற்பொழிவு ஆற்ற ஆரம்பித்த பின், அர்ச்சகர் எதிர்பார்த்தது போலவே கோயிலுக்கு வரும் கூட்டம் அதிகரித்தது. அர்ச்சகருக் கும் வருமானம் அதிகரித்தது. மகாதேவனும் சொற் பொழிவில் நல்ல தேர்ச்சி பெற்றுவிட்டார். அவருடைய திறமையைக் கண்ட பலர், சுற்றுவட்டாரத்தில் உள்ள இடங்களில் சொற்பொழிவு ஆற்ற அழைக்க ஆரம் பித்தனர்; சிறிது காலத்தில் மகாதேவனின் புகழ் சிவகெங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் பரவி, அவரைப் பல இடங்களில் சொற்பொழிவு ஆற்ற அழைத்தனர். இதில் அவருக்கு நல்ல வருமானம் கிடைக்கலாயிற்று. இது போதாதென்று விளம்பரப் படங்களிலும் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிட்டி, அதிலும் நல்ல வருமானம் கிடைத்தது. அவர் மனநிறைவுடன் வாழ்ந்து கொண்டிருந்தார்.

சிவகெங்கை அலுவலகம், அத்துறையின் ஊழியர் கள் யாரும் விரும்பாத அலுவலகம். அங்கு போக வேண்டும் என்று யாரும் போட்டிக்கு வரமாட்டார்கள்; விரும்பவும் மாட்டார்கள்.

ஆகவே தன் பணி முழு வதையும் இங்கே முடித்துவிடலாம் என்று தான் மகா தேவன் நினைத்துக் கொண்டிருந்தார். அவர் நினைப் பிற்கு மாறாக கோயம்புத்தூருக்கு மாற்றல் ஆணை வந்தவுடன் அதைக் கையில் வாங்காமல் விடுமுறை யில் சென்றுவிட்டார். எப்படியாவது அந்த மாற்றல் ஆணையை இரத்துச் செய்ய வைத்துவிட வேண்டும் என்று முயன்று கொண்டு இருந்தார்.

மகாதேவனுடைய சங்கதி இப்படி என்றால், கலைவாணனுக்கு வேறுவிதத்தில் சிவகெங்கையுடன் ஒட்டுதல் ஏற்பட்டு இருந்தது. மகாதேவனைப் போலவே கலைவாணனும் சிறிது காலம் சிவகெங்கை அலு வலகத்தில் இருப்புக் கொள்ளாமல், வெறுப்பாகவே பணிபுரிந்து கொண்டிருந்தார். ஆனால் சிறிது காலத் திலேயே ஒரு தரகர் மூலம் மலிவான விலையில் விவசாய நிலங்களை வாங்கினார். அவரிடம் வேலை செய்த விவசாயிகளை மேலாண்மை செய்வதில் ஈடுபட்ட கலைவாணனுக்கு, விவசாயத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியலாயின.

மிகக் குறுகிய காலத்தி லேயே விவசாயத்தை அவர் காதலிக்க ஆரம்பித்து விட்டார். நீர்ப்பாசன வசதி குறைவாக உள்ள அப்பகுதி யில், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி விவசாயம் செய்வது பற்றியும், தண்ணீர் அதிகம் தேவைப்படாத தானியங்கள் மற்றும் பிற விவசாயப் பொருட்களை இலாபகரமாகப் பயிர் செய்வது பற்றியும் நல்ல புலமை அடைந்துவிட்டார்; மேலும் இவற்றில் ஆராய்ச்சி நோக்கோடும் செயல்பட ஆரம்பித்துவிட்டார்.

இதில் அவருக்கு நல்ல வருமானம் வரத்தான் செய்தது. ஆனால் விவசாயத்தில் ஆராய்ச்சி நோக்கம் வந்தபின் வருமானத்தைவிட அறிவு முன்னேற்றத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் மனநிலைக்கு வந்துவிட்டார். இந்த நிலையில்தான் அவருக்கு, செங்கல்பட்டு அலு வலகத்திற்குச் செல்லும்படி மாற்றல் ஆணை வந்தது. இவரும் மகாதேவனைப் போலவே மாற்றல் ஆணை யைக் கையில் வாங்காமல் விடுமுறையில் சென்று விட்டார்.

மகாதேவனுக்கும், கலைவாணனுக்கும் முறையே சொற்பொழிவு மூலமும், விவசாயம் மூலமும் நல்ல வருமானம் வந்துகொண்டு இருந்தது. ஆனால் வேலையை உதறிவிடலாம் என்ற அளவிற்கு வருமானம் வரவில்லை. அந்நிலையை அடைய இன்னும் பத்து ஆண்டுகள் ஆகலாம். ஆகவே அவசரப்பட்டு வேலையை விட்டுவிட முடியாது.

ஆனால் அதே நேரத்தில் சிவகெங்கையை விட்டுப் போகவும் முடியாது. ஆகவே இந்த மாற்றல் ஆணைகளை எப்படியாவது திரும்பப் பெற வைத்துவிட வேண்டும் என்று இரு வருமே கடுமையாக முயன்றனர். ஊழியர் சங்கத் தலைவரிடமும், செயலாளரிடமும் கூறி அழுத்தம் கொடுத்தனர். தங்களுக்குத் தெரிந்த அரசியல்வாதிகள் மூலமும் பெரிய அதிகாரிகள் மூலமும் அழுத்தம் கொடுத்தனர்.

இதன்தொடர்பாக ஊழியர் சங்கத்தின் தலைவரும், செயலாளரும் நிர்வாக அதிகாரியைப் பார்த்து வாய் மொழியாக வேண்டுகோள் விடுத்தனர். பார்ப்பன ராகிய அந்த நிர்வாக அதிகாரி அவர்களைக் கடிந்து கொண்டார். மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஓரிடத்தில் பணி செய்பவர்களை மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தவர்கள் ஆறாண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் இருப்பவர்கள் அங்கேயே தொடர வேண்டும் என்று கோருவதில் நியாயம் இல்லை என்று இடித்துக் கூறி அனுப்பிவிட்டார்.

பின் ஊழியர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினரான சங்கரன் என்ற பார்ப்பனரை அழைத்து இதன் பின்னணிக் காரணங் களைத் தெரிந்து கொண்டு கூறும்படி கேட்டுக் கொண் டார். சங்கரனும் இருவருடைய பிரச்சினைகளையும் தெரிந்துகொண்டு நிர்வாக அதிகாரியிடம் கூறிவிட்டார்.

நிர்வாக அதிகாரி யோசிக்க ஆரம்பித்தார். இருவரு டைய மாற்றல் ஆணையையும் இரத்து செய்துவிட லாம் என்றால், அதே பதவியில் உள்ள ஒருவரைச் சிவகெங்கை அலுவலகத்திற்கு அனுப்பியே ஆக வேண்டி உள்ளது. ஏனெனில் அவர் ஆறாண்டுகளுக்கு முன் கலைவாணனும் மகாதேவனும் நடந்துகொண்ட தைப் போல் இங்கிதமில்லாமல் நடந்து கொண்டிருக் கிறார். அதனால் கலைவாணன், மகாதேவன் ஆகிய இருவரின் விருப்பங்களில் ஒருவடைய விருப்பத்தைத் தான் நிறைவேற்றி வைக்க முடியும்.

உடனே பார்ப்ப னராகிய அந்த நிர்வாக அதிகாரி மகாதேவனின் மாற்றல் ஆணையைத் திரும்பப் பெறலாம் என்றும், கலை வாணன் எக்கேடு கெட்டாலும் கெட்டுப் போகட்டும் என்றும் மனதில் நினைத்தார். அதே எண்ணத்துடன் மேலாண்மை இயக்குநரைப் போய்ப் பார்த்தார். மேலாண்மை இயக்குநரும் பார்ப்பனராய் இருந்ததால் அவரிடம் நிர்வாக அதிகாரி “மனம் விட்டுப்” பேச முடிந்தது.

நிர்வாக அதிகாரி எல்லா விஷயங்களையும் விரி வாகக் கூறிவிட்டு, மகாதேவனின் மாற்றல் ஆணை யைத் திரும்பப் பெறலாம் என்று கேட்டுக் கொண்டார். மேலாண்மை இயக்குநர் சிரித்துக் கொண்டே “என்ன மிஸ்டர் நடராஜன்! உங்க ரெக்கமெண்டேஷன் அவ்வ ளவா சரியில்லையே!” என்று கூறிய உடன், நிர்வாக அதிகாரி திகைத்துப் போனார்.

“நம்மவா பவர்லே இருக்கிறச்சே நம்மவாளுக்கு ஹெல்ப் பண்ண லேன்னா எப்படி?இந்த எம்.டி. இப்படிப் பேசறாரே?” என்று மனதில் நினைத்துக் கொண்டவராய் வெளியில் ஒன்றும் பேசாமல் மேலாண்மை இயக்குநரையே பார்த்துக் கொண்டு இருந்தார்.

சிறிது நேர அமைதிக்குப் பின் “மகாதேவன் பாவம்! அவனை ட்ரான்°பர் பண்ணிட்டா அவன் பொழைப்பு கெட்டுடும். அவன் நம்மவாங்கறதாலே நாம ஹெல்ப் பண்ணணும்னு நெனச்சேன்” என்று மென்று முழுங்கிக் கொண்டே நிர்வாக அதிகாரி கூற, மேலாண்மை இயக்குநர் மீண்டும் சிரித்தார். நிர்வாக அதிகாரி மேற்கொண்டு பேசாமல் அவரையே பார்த்துக் கொண்டு இருந்தார். “மிஸ்டர் நடராஜன்! இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்கள்லே ஹெல்ப் பண்றது கவுண்டர் புரொடக்டிவா முடியும். நீங்க இவ்வளவு அப்பாவியா இருப்பீங்கன்னு நான் நெனக்கவே இல்லே.

இந்த கேஸ்லே கலைவாணனோட ட்ரான்ஸ்பர் ஆர்டரெ வாபஸ் வாங்கிட்டு, மகாதேவனை உடனடியா கோயம்புத்தூர்லே ஜாய்ன் பண்ணச் சொல்றதுதான் சரியான முடிவா இருக்க முடியும்” என்று மேலாண் மை இயக்குநர் கூறிய உடன், நிர்வாக அதிகாரி ஒன்றும் பேசாமல் அவரையே பார்த்துக் கொண்டு இருந்தார். சிறிது நேரம் கழித்து “சரி! சார் அப்படியே செஞ்சுடறேன்” என்று கூறி எழுந்த நிர்வாக அதிகாரி யை நிறுத்தி “மிஸ்டர். நடராஜன்! நான் சொல்றதைச் செய்றது சரிதான்.

ஆனா அதுக்கான காரணத்தையும் புரிஞ்சிக்கிட்டா தானே வருங்காலத்தில் நீங்க சரியா ஆக்ட் பண்ண முடியும். நான் இன்னைக்கு இங்கே இருக்கேன். நாளைக்கு வேறெ இடத்துக்குப் போயிடு வேன். இந்த எடத்திலே யாரு வேணும்னாலும் வர லாம். அப்ப நம்மவா இன்ட்ரெ°டெ நீங்க தானே பார்த்துக்க வேண்டி இருக்கும்?” என்று கூறிய உடன், அவர் அமர்ந்து கொண்டார்; மேலாண்மை இயக்கு நரின் உபதேசத்தைக் கேட்கத் தன்னை ஆயத்தப் படுத்திக் கொண்டார்.

“மிஸ்டர் நடராஜன்! நாம எப்பவுமே நம்மவாளோட லாங்டெர்ம் இன்ட்ரெஸ்ட்லே தான் குறியா இருக்கணும். ஷார்ட் டெர்ம் இன்ட்ரெஸ்டெ ஈஸியா முடிஞ்சா பார்க்கணும்; பிரச்சினை இருந்தா விட்டுக் குடுத்துடணும். அப்படி விட்டுக்குடுக்குறப்போ, மத்தவா எல்லாம் பிராமின்ஸ்லே நல்லவங்க இருக்காங்கன்னு நெனச்சுக்குவாங்க. கறுப்புக் கொடி ஆளுங்க நம்மவா பத்திப் பிரச்சாரம் பண்றதெல்லாம் மத்தவா காதிலே எறங்காது.

அதுதான் ரொம்ப முக்கியம்” என்று மேலாண்மை இயக்குநர் கூறிக் கொண்டு இருக்கும் போதே “இந்தக் கறுப்புக் கொடி ஆளுங்களுக்கு மீடியா ஸ்ட்ரெங்த்தே இல்லியே சார்? அப்படியே மீடியாவிலே வந்தாலும் ஒண்ணும் ஷார்ப்பா பேசுறதில்லை. அவங்க பிரச்சினையோட அடிப்படையைப் புரிஞ்சிக்கவே முடி யாது போலத்தான் பேசுறாங்க” என்று நிர்வாக  அதிகாரி இடைமறித்துப் பேசினார்.

“மி°டர் நடராஜன்! நீங்க அப்பாவின்னு மறுபடியும் புரூவ் பண்றீங்க. கறுப்புக்கொடி ஆளுங்கன்னு சொல்லிக் கிட்டு இருக்கிறவங்கள்லே நம்மவா கிட்டே சோரம் போனவங்க தான் மீடியாவிலே வரமுடியுது. அவங்க அப்படித்தான் பேசுவாங்க. நம்மவாகிட்டே சோரம் போகாதவங்க ரொம்ப ஷார்ப்பாப் பேசுறாங்க; எழுத றாங்க.

அவங்க சங்கதி எல்லாம் சின்னச் சின்னப் பத்திரிகைங்கள்லே வரத்தான் செய்யுது. நாம ஷார்ட் டெர்ம் இன்ட்ரெஸ்டெ விட்டுக் குடுக்கலேன்னா இப்போ வெளியே பரவ ஆரம்பச்சுடும்” என்று மேலாண்மை இயக்குநர் கூறவும் “அப்படி என்ன சார் ஷார்ப்பா எழுத றாங்க?” என்று நிர்வாக அதிகாரி கேட்டார்.

உடனே “விகிதாச்சாரப் பங்கீடுன்னா தெரியுமா?” என்று மேலாண்மை இயக்குநர் கேட்கவும், “தெரியாது” என்று நிர்வாக அதிகாரி பதிலளித்தார். அவருடைய முகத்தில் அது என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் தெரிந்தது. உடனே மேலாண்மை இயக்குநரும், கல்வியிலும், வேலையிலும், தனியார் துறை, அரசுத்துறை ஆகியவற்றிலும் பெட்ரோல் விற்பனை, எரிவாயு விற்பனை முகவர் உரிமை அளிப்பதிலும் மற்றும் அனைத்து சமூக, பொருளாதார நடவடிக்கைகளிலும் முற்பட்ட வகுப்பு, பிற்படுத்தப்பட்ட வகுப்பு, தாழ்த்தப்பட்ட வகுப்பு, பழங்குடியினர், மதசிறு பான்மையினர் ஆகியோருக்கு மக்கள் தொகையில் அவரவர் விகிதத்தில் பிரித்து அளிக்க வேண்டும் என்பதுதான் விகிதாச்சாரப் பங்கீடு என்றும் அந்தக் கோரிக்கை வலுப்பெற்று வெற்றி அடைந்தால், இப்பொழுது உயர்நிலைப் பணிகள் முழுவதையும் பார்ப்பனர்களே ஆக்கிரமித்து இருப்பது போல் முடியாது என்றும், அனைத்து நிலைகளிலும், அனைவரும் இருக்க வேண்டி நேரும் என்றும் அப்பொழுது திறமை உடைய ஒடுக் கப்பட்ட மக்கள் மேல்நிலைக்கு வருவதைத் தடுக்க முடியாது என்றும், திறமைக் குறைவான பார்ப்பனர் கள் கீழ்நிலை வேலைகளைச் செய்வதில் இருந்து தப்பமுடியாது என்றும் விளக்கினார்.

இவற்றை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த நிர்வாக அதிகாரி “அதனாலே என்ன சார்?” என்று கேட்டவுடன் மேலாண்மை இயக்குநர் சற்றுப் பொறுமை இழந்துவிட்டார். ”நீர் இந்த ஆபீஸ்லே ஏ.ஓ.வா. இருக்க மாட்டீர். எங்காவது கிளார்க்காவோ இல்லேன்னா லேபராவோ இருந்திருப்பீர்” என்று அவர் கூறியதும், நிர்வாக அதிகாரி பயந்துவிட்டார். அவரால் இருப்புக் கொள்ள முடியாமல் எழுந்து நின்றார். மேலாண்மை இயக்குநரும் “உமக்கு மகாதேவன் கஷ்டப்படுவா னேன்னு உமக்கு இன்னும் டவுட் இருக்கும். அப்படி எல்லாம் நெனக்க வேணாம். அவனாலே கோயம் புத்தூர்லேயும் உபன்யாசம் செய்ய முடியும். கவலைப் படாமல் போம்” என்று கூறி அனுப்பினார்.

மேலாண்மை இயக்குநர் கூறியபடி கலைவாண னின் மாற்றல் ஆணையைத் திரும்பப் பெறப்பட்டது. மகாதேவன் உடனடியாக மாற்றல் ஆணையின்படி, கோயம்புத்தூர் சென்று வேலையில் சேரும்படி பணிக்கப்பட்டார்.

அவ்வலுவலக ஊழியர்கள் “எம்.டி. பிராமினா இருந்தாலும் நல்லவர்” என்று கூறிக் கொண்டனர். ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களை முன்னெடுப்ப வர்கள் பிரபலமடைந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் அவர் இவ்விதமாகச் செயல்படுகிறார் என்று தெரிந்து கொள்ளவில்லை.

Pin It