மதுரைக்குச் செல்லும் அந்தப் பயணிகள் தொடர் வண்டி (யீயளளநபேநச கூசயin) இராமேசுவரத்தை விட்டுப் புறப்படும் பொழுது கூட்டம் அதிகமாக இல்லை... இராமநாதபுரம் வரையிலும் கூட்டம் குறைவாகவே இருந்தது. இராமநாதபுரத்தில் நிறைய பேர் ஏறி னார்கள். பயணச்சீட்டுப் பரிசோதகர் வெங்கடராமன் ஒவ்வொரு நிலையத்திலும் இறங்கி வெவ்வேறு பெட்டி களில் ஏறி, பயணிகளிடம் பயணச்சீட்டு இருக்கிறதா என்று பரிசோதித்துக் கொண்டு இருந்தார். ஒரே ஒருவர் அவரிடம் பிடிபட்டார். அவர் தான் பயணச் சீட்டு வாங்கியதாகவும், ஆனால் தொலைந்து போயிருக் கிறது என்றும் கூறியதை வெங்கடராமன் ஏற்றுக்கொள்ள வில்லை. அபராதம் கட்டச் சொல்லி வற்புறுத்தினார்.

பிடிபட்டவரோ தன்னிடம் அபராதம் கட்டும் அளவிற்குப் பணம் இல்லை என்று கம்மிய குரலில் கூறியதை ஒப்புக் கொள்ளாமல் அவரை அடுத்த நிலையமான சத்திரக்குடியில் இறங்கி இரயில்வே காவல்துறையிடம் ஒப்படைக்கப் போவதாகக் கூறி அப்பெட்டியின் கதவருகே உட்கார வைத்துவிட்டார்.

அந்த நேரத்தில் அந்த ஓடும் வண்டியில், பக்கத்துப் பெட்டியில் இருந்து, இந்தப் பெட்டிக்கு ஒரு கையில் வடைத் தட்டைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் வண்டியின் கம்பியைப் பிடித்துக் கொண்டு கூடார (Circus) வித்தைக்காரரை விட அதிகமான சாமர்த்தியத்தைக் காட்டிக் கொண்டு சுமார் இருபத்து ஐந்து வயதுடைய இளைஞன் வந்து கொண்டிருந்தான்.

அப்படி அவன் வந்துகொண்டு இருந்த போது வண்டியின் கதவைத் திறக்க அதைத் தள்ளியபோது அது வெங்கடராமனை இடித்துவிட்டது. எதிர்பாராத இந்நிகழ்வினால் ஏற்பட்ட வலியைப் பொறுக்காமல் வெங்கடராமன் திடீரெனத் திரும்பிய போது அந்த இளைஞன் சுமந்திருந்த வடைத்தட்டு அவனுடைய கையிலிருந்து நழுவி கீழே விழுந்து விட்டது. நிதானம் தவறாத அந்த இளைஞன் அப் பெட்டியினுள் நுழைந்துவிட்டான்.

உள்ளே நுழைந்த உடன் வெங்கடராமனைப் பார்த்து தன்னுடைய வடைத் தட்டைத் தட்டிவிட்டதற்காக, இழப்பீடாக ரூபாய் அறுநூறு தரவேண்டும் என்று மிரட்டிக் கேட்டான். அந்த இளைஞனின் முகத்தைப் பார்த்த வெங்கடராமனும் ஒன்றும் பேசாமல் ரூபாய் அறுநூறை எடுத்துக் கொடுத்துவிட்டு, சத்திரக்குடி வந்தவுடன் அந்தப் பயணச்சீட்டு இல்லாப் பயணியை அழைத்துக் கொண்டு இறங்கிப் போய்விட்டார்.

வண்டி சத்திரக்குடியை விட்டுப் புறப்பட்டது. வண்டியில் இருந்தவர்கள் அந்த இளைஞன் பயணச் சீட்டுப் பரிசோதகரை மிரட்டிப் பணம் கேட்ட விதத்தைப் பார்த்துச் சற்று மிரண்டு போயிருந்தார்கள். சிறிது நேரம் யாரும் பேசவில்லை, சற்றுநேரம் கழித்து ஒருவர் “இந்தப் பக்கம் ரவுடிங்க இருப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா ஒரு டி.டி.இ.

ஒரு சின்னப் பையன் கிட்டே மெரண்டு போற அளவுக்கு இவ்வளவு மோசமா நெலமெ இருக்கும்னு நெனக்கவே இல்லே” என்று கூற, இன்னொருவர் “நீங்க இந்தப் பக்கத்துக்குப் புதுசா?” என்று கேட்டார். முதலாமவர் “ஆமா நான் சென்னைக்காரன். இராமேஸ்வரம் வந்துட்டுப் போறேன். அப்படியே மதுரை, பழனின்னு எல்லாக் கோயிலுக்கும் போயிட்டு ஊருக்குத் திரும் புறேன்” என்று பதிலளித்தார்.

இரண்டாமவர் “நான் இராமநாதபுரத்துக்காரன். நீங்க நெனக்கிற மாதிரி இல்லாமெ ரவுடிங்க எல்லா ஊர்லெயும் தான் இருக்காங்க. அந்த டி.டி.இ. அந்தப் பையன் கிட்டே பயந்து போறார்னா ஏதாச்சும் காரணம் இருக்கும். ஒண்ணுமே தெரியாம வாய் புளிச்சதோ; மாங்கா புளிச்சதோன்னு பேசவேணாம். நான் அந்தப் பையனைக் கூப்பிட்டு விசாரிக்கவா” என்று கேட்ட உடன், முதலாமவர் “வேண்டாம்; வேண்டாம்” என்று அவசரமாக மறுத்தார். ஆனால் இரண்டாமவர் விடவில்லை. அந்த இளைஞனை அழைத்து விசாரித்தார்.

அந்தப் பையன் “அயோக்கிய ராஸ்கல்” என்று முணுமுணுத்தான். “என்னப்பா விஷயம்?” என்று விசாரிக்க அவ்விளைஞன் பயணச்சீட்டுப் பரிசோத கரைப் பற்றிய விவரங்களைக் கூற ஆரம்பித்தான்.

வெங்கடராமன் இளைஞனாக இருந்தபோது தொடர்வண்டி (இரயில்வே)த் துறையில் மானாமதுரை சந்திப்பில் எழுத்தராக வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். அவருக்குக் கருநாடக இசையிலும் ஆர்வம் இருந்தது. கருநாடக இசைக் கலையில் பயன்படும் “கடம்” என்னும் பானை தயாரிக்கும் தொழிலில் மானாமதுரை பெயர்பெற்று இருந்தது. அப்படித் தயாரிக்கப்படும் பானைகளை நன்றாகச் சோதித்து சிறப்பானவற்றைத் தேர்ந்தெடுத்து வேண்டியவர்களுக்கு அனுப்புவதைப் பக்கத் தொழிலாகச் செய்துகொண்டிருந்தார்.

அந்த விதத்தில் பானை தயாரிக்கும் வடி வேலு வீட்டிற்கு அடிக்கடிச் செல்வது வழக்கம். அப்படிச் செல்லும்போது வடிவேலுவின் மகள் மங்கம்மாவைப் பார்த்து அவள் மேல் ஆசை கொண் டார். அவளைத் தன் வயப்படுத்தப் பலவகையிலும் முயன்றார். ஆனால் அவள் மசியவே இல்லை. அவள் மீது கொண்ட ஆசையை விடமுடியாத வெங்கட ராமன், அவளைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்துப் பார்த்தார்.

ஆனால் மங்கம்மாவோ திருமணத்திற்கு முன் அவரைப் பக்கத்தில் அண்டவிட மறுத்தாள். திருமணத்திற்கு ஏற்பாடு செய்யச் சொன்ன போது தான் பார்ப்பனர் என்பதால் தன் சுற்றத்தினர் சாதிக் கலப்புத் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்றும், ஆகவே ஒரு கோயிலில் கமுக்க மாகத் திருமணம் செய்துகொள்ளலாம் என்றும் கூறினார். அதை நம்பி ஒரு சிறிய கோயிலில் திருமணம் நடைபெற்றது. வெங்கடராமனும், மங்கம்மாவும் இணைந்து வாழ்ந்ததில் சுந்தரம் என்று ஒரு மகன் பிறந்தான்.

சிறிது காலத்திற்குப் பிறகு அவருக்கு கீழ் மதுரை தொடர்வண்டி நிலையத்திற்கு மாற்றல் வந்தது. அவரும் அங்குப் பணியில் சேர்ந்தார். அடிக்கடி மானாமதுரைக்குச் சென்று மங்கம்மாவையும் சுந்தரத் தையும் பார்த்துவரலானார். சில மாதங்கள் கழித்து அவர் மங்கம்மாவையும் சுந்தரத்தையும் பார்க்க வருவது குறையலாயிற்று. அவர் இன்னொரு திருமணம் செய்து கொண்டு விட்டதாக அரசல் புரசலாகச் செய்தி வந்தது. அதிர்ச்சி அடைந்த மங்கம்மாவும் அவளது தந்தை வடிவேலுவும் வெங்கடராமனின் இருப்பிடத்தை விசாரித்துச் சென்று பார்த்ததில் அது உண்மை என்று தெரிய வந்தது.

கோபம் கரைபுரள வடிவேலுவும், மங்கம்மாமவும் குழந்தை சுந்தரத்தை அழைத்துக்கொண்டு வெங்கட ராமனின் வீட்டிற்குப் போய் நியாயம் கேட்டனர். வெங்கடராமன் தனக்கும் மங்கம்மாவுக்கும் உறவு இருப்பது உண்மை என்றும், ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் சாதிக்க, அவர்களால் திருமணம் நடந்தது என்று கூறத்தான் முடிந்ததே ஒழிய, அதை மெய்ப்பிக்க முடியவில்லை. திருமணம் நடந்த கோயில் அர்ச்சகர் வெங்கடராமனால் தகுந்த படி கவனிக்கப்பட்டு இருந்தார். ஆகவே அவர் தனக்கு எதுவும் நினைவில்லை என்று கூறிவிட்டார். ஏழ்மையும் கல்வி அறிவின்மையும் நிறைந்த வடிவேலுவினாலும், மங்கம்மாவினாலும் தந்திரசாலியான வெங்கடராமனை ஒன்றும் செய்யமுடியவில்லை.

அப்படித் திகைத்து நின்ற அவர்களைத் தனியாகப் பார்த்து, வெங்கடராமன் தன் குடும்பத்துச் சூழ்நிலையால் அப்படி நடந்து கொள்ள நேரிட்டது என்றும், மங்கம்மாவிற்கும் சுந்தரத்திற்கும் எந்தவிதக் குறையும் வராமல் பார்த்துக் கொள்வதாகவும் வாக்களித்தார். மங்கம்மா அதை நம்பவில்லை.

ஆண்டுகள் கழிந்தன. சுந்தரம் +2 வகுப்பு தேறி விட்டான். மிக நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தான். அவனுடைய மதிப்பெண் பட்டியலைப் பார்த்தவர்கள் அவனுக்கு மதுரை மருத்துவக் கல்லூரியில் நிச்சயமாக இடம் கிடைக்கும் என்று கூறினார்கள். ஆனால் மருத்துவக் கல்லூரியில் சேர்த்துப் படிக்க வைக்கும் அளவுக்கு மங்கம்மாவிடம் வசதி இல்லை. இந்நிலையில் வெங்கடராமன் உதவி செய்வாரா என்ற நினைப்பில் சுந்தரமும் மங்கம்மாவும் அவரைப்போய்ப் பார்த்தனர். இப்போது அவர் பயணச்சீட்டுப் பரிசோதகராக மதுரை - இராமேஸ்வரம் தடத்தில் பணியாற்றிக் கொண் டிருந்தார்.

சுந்தரமும் மங்கம்மாவும் கூறிய விவரங்களைக் கேட்ட வெங்கடராமன் மருத்துவப் படிப்பு பெரிய படிப்பு என்றும், அதற்கெல்லாம் ஆசைப்பட வேண்டாம் என்றும் அறிவுரை கூறினார். சுந்தரமோ தனக்கு கல்விக் கடன் வாங்கித் தருமாறும் அதை வைத்துக் கொண்டு தான் சமாளித்து விடுவதாகவும் கூறினான். வெங்கடராமன் ஒரு வாரம் கழித்துத் தன்னைப் பார்க்குமாறு கூறினார்.

ஒரு வாரம் கழித்து அவர் கூறிய இடத்தில் சென்ற போது, அங்கு நிழற்படக் கருவியுடன் சிலர் இருந் தனர். அவர்களிடம் வெங்கடராமன், பிராம்மணனாகப் பிறந்த சுந்தரம் நல்ல மதிப்பெண் பெற்றும் மேற் கொண்டு படிக்க வழியில்லாமல் திண்டாடுவதாகவும், ஆகவே இடஒதுக்கீட்டு முறையை ஒழித்துவிட்டு, பிராம்மணர்கள் தங்கள் திறமையைக் காட்டத் தடையில்லாமல் செய்ய வேண்டும் என்றும் ஒரு குறும்படத்தை எடுப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தார். என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்ள முடியாத சுந்தரம், அவர்கள் இயக்கியபடி எல்லாம் நடித்து, பேசி, அக்குறும்படத்தை முடித்துக் கொடுத்தான். அவர்கள் மூட்டைகட்டிக் கொண்டு போகும்போது இக்குறும்படத்தைத் தமிழ்நாட்டில் போடவேண்டாம் என்றும், நாட்டின் மற்ற பகுதிகளில் போடுமாறும், மற்ற பகுதிகளில் இதுபோன்று பிற பகுதிகளில் பிடிக்கப் படும் குறும்படங்களை இங்கு போட்டுக் காட்டலாம் என்றும் அவர்களிடம் வெங்கடராமன் கூறினார்.

எது எப்படி ஆனாலும் ஆகட்டும் தான் படிப் பதற்கு உதவி கிடைத்தால் போதும் என்ற எண்ணத் துடன் சுந்தரம் வெங்கடராமனையே பார்த்துக் கொண்டு இருந்தான். வெங்கடராமன், பழையபடியே மேற்படிப்புப் படிக்க வேண்டாம் என்றும் ஏதாவது தொழில் செய்வதற்கு வேண்டுமென்றால் கடனுதவிக்கு வழிசெய்வதாகவும் கூறினார். இது சுந்தரத்திற்கு ஆத்திரமூட்டியது. யாரும் எதிர்பாராதபடி திடீரென்று அவர் கன்னத்தில் பளீரென்று அறைந்துவிட்டான். இதை எதிர்பாராத மங்கம்மா தன் மகனைக் கட்டுப் படுத்தி வெளியில் அழைத்துக்கொண்டு சென்று விட் டாள். என்ன இருந்தாலும் சுந்தரம் வெங்கடராமனை அடித்தது தவறு என்று மங்கம்மா கூறினாள். சுந்தரமோ பதில் சொல்வதற்கு வார்த்தை வராமல் தாயை முறைத்துப் பார்த்தான்.

தன்னுடைய மகனாகவே இருந்தாலும், மனு சாத்திரப்படி சூத்திரனாக வரையறை செய்யப்பட்ட சுந்தரம், மிகச் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றிருந் தாலும் மேலே படிக்கக்கூடாது என்றும், அறிவுத்திறன் குறைந்திருந்தாலும், மனுசாத்திரப்படி பார்ப்பனராக வரையறை செய்யப்பட்ட இன்னொரு மகன் மேற் படிப்பு படிக்கவேண்டும் என்றும் நினைக்கும் பார்ப்பன நினைப்பை மங்கம்மாவிடம் சுந்தரம் எடுத்துக்காட்டி, அவரைத் தான் கன்னத்தில் அறைந்ததில் என்ன தவறு என்று கேட்டான். மங்கம்மாவால் பதில் சொல்ல முடியவில்லை.

இவற்றையெல்லாம் அந்தப் பெட்டியில் இருந்த பயணிகள் கேட்டுக்கொண்டு இருந்தனர். சென்னைக் காரர் “அது சரி; இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார்.

“நான் தான் அந்த சுந்தரம்” என்று வடை விற்பவன் பதில் கூறினான்.

Pin It