மதச்சிறுபான்மையினருக்கு மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் ‘பொருளாதாரத்தில் பின்தங்கியவர்’ என்ற அடிப்படையில் தனி வகுப்பை உருவாக்கி, தற்போது, மண்டல்குழு பரிந்துரை அமுலாக்கத்தின் விளைவால் பிற்படுத்தப்பட்டோர் பெற்றிருக்கிற 27 விழுக்காட்டு ஒதுக்கீட்டில் பங்குபோட, “குரங்கு, பூனைகுட்டி ஆப்பத்தைப் பங்கு போட்ட கதையாய்” எல்லாம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துவிட்ட தாகத் தெரிகிறது. இரு ஒரு அவலம்! அவமானம்!!

இடஒதுக்கீடு சிக்கலில் எப்போதும் பிற்படுத்தப்பட்ட வகுப்பையே குறிவைக்கிறது மத்திய அரசு. 50 விழுக்காட்டிற்குமேல் ஒதுக்கீடு செய்யக்கூடாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பின் செயல்பாட்டை நீக்கும் வகை யில் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தி விகிதாசாரப் பங்கீடு செய்யவேண்டும் என்ற கோரிக்கையை அனைத் திந்தியப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், மதச் சிறுபான்மையினர் பேரவை நடுவண் அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறது.

இது குறித்து கடந்த 14.1.2014, ‘Indian Express’ ஆங்கில நாளிதழின் திருச்சிப் பதிப்பில் வந்த செய்தி யைப் படித்துப் பார்த்து யாது செய்வதென வாளாது திகைத்து நிற்கிறோம்.

செய்தியின் சாரம்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு வங்கியைக் கருத்தில் கொண்டு “இசுலாம் வாக்கு வங்கியை மட்டும் குறிவைத்துக் காய் நகர்த்துகிறது” என்பது அறியாதவாறு தந்திரமாக ஜெயின் சமூகத் தையும் மதச்சிறுபான்மைப் பட்டியலில் சேர்க்கத் தீர்மானித்திருப்பதாக மய்ய அரசு காட்டிக்கொள்கிறது. மதச் சிறுபான்மையினரைப் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஒரு வகுப்பாக உருவாக்கி மய்ய அரசு கல்வியில் / அரசுப் பணிகளில் ஒதுக்கீடு வழங்க உத்தரவு பிறப்பிக்க உத்தேசித்திருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாக, இந்தக் கருத்தை அமலாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் மன்மோகன் சிங் முன்பாகவும், அமைச்சர் குழுமத்தின் மாநாட்டிலும் அமைச்சர் கே. இரகுமான்கான் மதச் சிறுபான்மைச் சமூகத்தினருக்கு, ‘பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பு’ என்ற அடிப்படையில் ஒதுக்கீடு வழங்க வேண்டும்; அவ்வாறு வழங்கினால் அரசியல் சட்ட விதிகள் 15, 16 இவற்றில் மதத்தின் பேரால் அந்த ஒதுக்கீடு வழங்கப்படவில்லை” என்பதாக ஆகும் என்றார்.

அரசியல் சட்ட விதிகள் 15, 16 இரண்டிலும் குறிப்பிட்டுள்ள விளக்கம் ஒரு வகுப்பைத்தான் குறிப் பிட்டுச் சொல்லப்பட்டுள்ளதே தவிர ஒரு மதக்குழுவை அல்ல என்று மறுவிளக்கம் கூறப்பட வேண்டும் என்ற தன் ஆவலை வெளியிட்டார்.

மொழி மற்றும் மதச் சிறுபான்மையினருக்காக நியமிக்கப்பட்ட மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா குழுவும் “மண்டல் குழு அறிக்கையின்படி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 27 விழுக்காட்டில் 15 விழுக்காட்டை, இசுலாம், கிறித்துவ முதலான சிறுபான்மை மதங்களைச் சார்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கட்கு ஒதுக்கிவிட்டு எஞ்சியுள்ள 12 விழுக்காட்டை பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு ஒதுக்கப் பரிந்துரை செய்துள்ளதைப் போலாகும்” என்றார்.

மேலும் ‘மிஸ்ஸ்ரா குழு’ ஜெயின் சமூகத்தையும் மதச்சிறுபான்மையினர் பிரிவில் சேர்க்கப் பரிந்துரை செய்துள்ளதையும் அரசு பரிசீலித்து வருகிறது. “தற் சமயம் இசுலாம், கிறித்துவ, சீக்கிய, புத்த, பார்சி முதலான ஐந்து மதங்கள் மட்டுமே 1992-இன் தேசிய கமிஷன் மதச் சிறுபான்மையினராகக் கருதுகிறது” என்றார்.

இன்னும் ஒரு வியக்கத்தக்க நிகழ்வு என்ன?

ஜைன மதத்தினருக்கும் மதச்சிறுபான்மையினர் குழுவில் சேர்த்து சமூக நீதி வழங்க கடந்த 20.1.2014ஆம் தேதித திங்கட்கிழமை நடந்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பதுவே ஆகும் (திருச்சிப் பதிப்பு : ‘தினமணி’ செய்தி 21.1.14).

50 இலட்சம் மக்கட்தொகை கொண்ட ஜெயின் சமூகம், மதச்சிறுபான்மையினர் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பெறும்.

மக்களைப் பிரித்தாளும் கெடுமதியுடன் மக்கள் தொகையில் 65 விழுக்காடாக உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள மய்ய அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளைத் தடுப்பதற்குச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டிய மிக நெருக்கடியான நிலையில் இருக்கிறோம்.

Pin It