கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

எந்த ஒரு முறைகேட்டைப் பற்றிப் பேசினாலும் சங்கிகளிடம் இருந்து முறையான விடை கிடைக்காது;

அபத்தமான விடையே கிடைக்கும். அதிலும் வாக்குப் பதிவு எந்திரத்தைப் பற்றிப் பேசிவிட்டால் போதும்; சங்கிகள் அபத்தமான எதிர் வினாக்களைத் தொடுப்பார்களே பாருங்கள் ஒரு மனிதனால் இப்படியும் அபத்தமாகச் சிந்திக்க முடியுமா என்று திணற அடித்து விடுவார்கள்.

இந்த அல்லது அந்த இடங்களில் சங்கிகள் தோற்று இருக்கிறார்களே? எந்திரத்தில் முறைகேடு செய்ய முடிந்தால் அங்கு எல்லாம் வெற்றி பெற்று இருப்போமே? என்றும், எந்திரத்தில் முறைகேடு என்றால் அதன் மூலம் வெற்றி பெற்ற எதிர்க்கட்சியினர் பதவி விலகி விட வேண்டும் என்றும் உளறிக் கொட்டுவார்கள்.

எந்திரத்தைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் விருப்பப்படி தேர்தல் முடிவை மாற்றி அமைக்க முடியும் என்பது தான் குற்றச்சாட்டு. அதனால் தான் அறிவியல் தொழில் நுட்பத்தில் உச்ச நிலையில் உள்ள நாடுகளே கூட இதை நம்பகத் தன்மை அற்றது என்று கூறி நிராகரித்து உள்ளன என்பதே அதற்கான நிரூபணம். வெற்றி அல்லது தோல்வி மட்டுமே ஒரு கொடுங்கேலரின் உடனடி இலக்கு அல்ல. இந்த இந்த இடங்களில் இந்த இந்த மாதிரியான முடிவுகள் வருவது தங்கள் எதிர் காலத்திற்கு நல்லது என நினைக்கலாம். ஆனால் மக்கள் அவ்வாறு தீர்ப்பு அளிக்க மாட்டார்கள். ஆகவே அதிகாரத்தில் இருப்பவர்கள் எந்திரத்தில் முறைகேடு செய்து தாங்கள் விரும்பும் முடிவை மக்களின் விருப்பத்திற்கு எதிராகக் கொண்டு வர முடியும். அவ்வாறு நடக்கவும் செய்து இருக்கிறது.

வட மாநிலங்களில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சங்கிகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட போது அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் சங்கிகள் தாங்கள் கொண்டு வந்த முத்தலாக் தடைச் சட்டத்தை இஸ்லாமியப் பெண்கள் வரவேற்றுத் தங்களுக்கு வாக்கு அளித்து இருப்பதாகக் கொஞ்சமும் கூசாமல் கருத்து கூறினார்கள். இது போல் சங்கிகள் ஆயிரம் வாக்குகள் கூடப் பெற முடியாத பல தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். எந்திரத்தில் முறைகேடு செய்யாமல் இது போன்ற முடிவுகளைப் பெறவே முடியாது.

காங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்தி விட்டால் தங்களை அசைக்கவே முடியாது என்று நினைக்கும் சங்கிகள் அதற்கும் எந்திரத்தில் முறைகேடு செய்து உள்ளனர். அண்மையில் நடந்த வட மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தேய்ந்து விட்டது என்ற கருத்தை அவ்வாறு உருவாக்கி உள்ளனர். பொருளாதாரச் சிக்கலில் நாட்டைத் தள்ளி விட்டு மக்களை அலைக் கழிக்கும் சங்கிகள் மேல் மக்கள் கோபமாகவே உள்ளனர். எதிர்க்கட்சிகள் எவ்வளவு தான் ஒற்றுமையாக இல்லாமல் இருந்தாலும் வாக்குகள் அவர்களுக்குள் தான் பிரியுமே ஒழிய சங்கிகளுக்குக் கிடைக்காது. ஆனால் சங்கிகள் எந்திரத்தில் முறைகேடு செய்து, தங்களுக்கு வாக்கு குறைந்து இருக்கிறது என்ற கருத்தையும் உருவாக்கி ஆனால் அதிகாரத்தை மட்டும் கைப்பற்றிக் கொண்டனர்; எதிர்க் கட்சிகள் ஒற்றுமையாக இல்லாததால் தான் தோற்றன என்ற ஒரு மாய உருவை உருவாக்கி மனதிற்குள் மகிழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.

கடந்த ஆண்டு தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதினால் இங்கு எந்திரத்தில் முறைகேடு நடைபெறவில்லை என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் இங்கு சங்கிகளின் உத்தி ஆழமான சூழ்ச்சியை உள்ளீடாகக் கொண்டு உள்ளது. இங்கு சங்கிகள் வெற்றி பெற முடியாது என்பது மட்டும் அல்ல; மூன்று இலக்க (அதாவது நூறுக்கு மேல்) வாக்குகளைப் பெற்றார்கள் என்றாலே யாரும் நம்ப மாட்டார்கள். ஆகவே எந்திரத்தைப் பயன்படுத்தி வாக்குகளை அள்ள முயன்றால் அவர்களின் சூழ்ச்சி அப்படடமாக வெளிப்பட்டுவிடும்; ஆகவே எந்திரத்தை வேறு விதமாகவும் அவர்களால் பயன்படுத்த முடியும் என்று நிரூபித்து இருக்கிறார்கள். எவ்வளவு முயற்சிகள் செய்தாலும் தமிழ் நாட்டில் கால் பாவவே முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கும் சங்கிகள் “தமிழ்நாட்டு மக்கள் நல்ல வேட்பாளர்களைத் தேர்ந்து எடுக்கும் திறன் அற்றவர்கள்; அவர்கள் மோசமானவர்களையே தேர்ந்து எடுப்பார்கள்” என்ற கருத்தை உருவாக்க வேண்டும் என்று துடியாய்த் துடித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவ்வாறு பல இடங்களில் பேசியும் இருக்கிறார்கள். ஆனால் யாரும் அவர்களைக் கண்டு கொள்ளவில்லை. இந்தத் தேர்தல் மூலம் அதைச் சாதிக்க நினைத்து மக்களின் எண்ணத்திற்கு எதிராக எந்திரத்தில் முறைகேடு செய்து மிக மிக ... மிக மோசமான ஒருவரை வெற்றி பெற வைத்தும், மக்களின் நல்லெண்ணம் பெற்ற ஒருவரைத் தோற்கடித்தும் இருக்கிறார்கள்.

பொள்ளாச்சி ஜெயராமன் மீது உள்ள (அவருடைய மகனின் பாலியல்) குற்றச்சாட்டு காரணமாக அவர் அத்தொகுதியில் வெற்றி பெற்று இருக்கவே முடியாது.

ஆனால் அவரை எந்திர முறைகேடு செய்து வெற்றி பெற வைத்தார்கள். மதுரை தெற்குத் தொகுதியில் எஸ்.எஸ்.சரவணன் அவருடைய தொகுதியில் செய்த பணிக்காக அவரை மாற்றுக் கட்சியினரும் விரும்பினர். ஆங்காங்கே கூடி இருந்த கூட்டத்தில் “சரவணன் நல்ல பிள்ளை. அவன் நிச்சயமா ஜெயிக்கணும்” என்று வெகு சாதாரணமாகவே பேசிக்கொண்டு இருந்தனர். அவர் தோற்பதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால் அவர் தோற்று இருக்கிறார் என்றால் சங்கிகளின் சூழ்ச்சியான திட்டமும், அதை நடைமுறைப்படுத்த எந்திரத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதும் தான் காரணமாக இருக்க முடியும். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இருவருமே சங்கிகளின் அடிமை களான அ.தி.மு.க. கட்சியைச் சேர்ந்தவர்கள். ஆனால் சங்கிகள் தமிழ்நாட்டு மக்களின் மாண்பைக் குலைப் பதற்காக இதைச் செய்து இருக்கிறார்கள். இது பேல் வேறு சில தொகுதிகளிலும் செய்து இருக்கலாம். இவ்வனவு கொடூரமான சூழ்ச்சியை உள்ளீடாகக் கொண்ட சங்கிகள் ஒன்றுமே தெரியாத அப்பாவிகளைப் போல் “முறைகேடு செய்ய முடிந்தால் அப்படிச் செய்து இருப்போமே? இப்படிச் செய்து இருப்போமே?” என்று நடித்துக் காட்டுகிறார்கள். ஆனால் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பெருந்தன்மை வெளிச்சத்தில் சங்கிகளின் சூழ்ச்சிகள் கரைந்து மறைந்து போய் விட்டன. அவர் மட்டும் அவருக்கு முன் பதவியில் இருந்த அரசியல்வாதிகளைப் போல் குறுகிய எண்ணத்துடன் நடந்து கொண்டு இருந்தால், இந்நேரத்தில் சங்கிகள் “தமிழ்நாட்டு மக்கள் நல்ல வேட்பாளர்களைத் தேர்ந்து எடுக்கும் திறன் அற்றவர்கள் என்ற பிரச்சாரத்தை முடுக்கி விட்டு இருப்பார்கள்.

எந்திரத்தில் இணைய இணைப்பு இல்லை எனவும், ஆகவே முறைகேடு செய்ய முடியாது எனவும் வாதிடுகிறார்கள். “ஒருவனுடைய அனுமதி பெறாம லேயே அவனுடைய உபகரணங்களில் நுழைந்து அவனுக்குத் தெரியாமலேயே அவனுடைய தரவுகளைத் திருடும் வல்லமை படைத்த பெகாசஸ் (Pegasus) போன்ற மென்பொருள் இல்லை என்று உறுதி கூற முடியுமா” என்று கேட்டாலும், “உலக நாடுகள் அனைத்தும் நம்பகத் தன்மை அற்றது என்று நிராகரித்து விட்ட எந்திரத்தை ஏன் பயன்படுத்தத் துடிக்கிறீர்கள்?” என்பதற்கும் விடை சொல்வதே இல்லை.

சரி! வாக்குப் பதிவு எந்திர முறையைக் காப்பாற்றச் சங்கிகள் தீவிரம் காட்டுவது ஒரு புறம் இருக்கட்டும். நண்பர்கள் அதை எப்படி நோக்குகின்றனர்? எந்திரப் பயன்பாட்டைத் தடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தைக் கூறினால், ஏதே அது மட்டும் தான் பிரச்சினை என்று சொல்வதாக நண்பர்கள் நினைப்பது வேதனைக்கு உரியது. தேர்தல் வழியிலேயே மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று நாம், இந்திய சமூக அமைப்பு, ஆதிக்கவாதிகளின் ஆதிக்கப் பிடிப்பு ஆகியவற்றை எதிர்த்துப் போராடி முன்னேறினால் அவர்களால் எந்திரத்தின் மூலம் அதை எளிதாக முறியடித்து நம்மைக் களைக்க வைக்க முடியும். ஆகவே நம் போராட்டத்தைப் பற்றி அவர்கள் அதிகமாகக் கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. போர்க்களத்தில் அடிபடும் வீரர்களுக்குத் தங்களைக் காப்பதற்கு ஒரு மருத்துவக் குழு இருக்கிறது என்ற நம்பிக்கை இருந்தால் அவர்கள் துணிவாகப் போரிடுவார்கள். அப்படி இல்லை என்றால் போரில் அவர்களின் மனக் குவிப்பு சிதைந்து, போரிடும் வலிமையைக் குறைக்கும். அது போலவே தேர்தலில் எந்திரப் பயன்பாடு இல்லை என்றால் ஆதிக்கவாதிகளின் மனதில் தோல்வி பற்றிய அச்சம் ஏற்பட்டு அவர்களது போராட்ட வலிமை குறையும். ஆகவே நாம் அதைப் பற்றி அக்கறை கொள்ள வேண்டி இருக்கிறது.

எந்திரம் அவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்றால் எதிர்க் கட்சிகள் ஏன் இதை வன்மையாக எதிர்க்கவில்லை என்று நண்பர்கள் கேட்கிறார்கள். எதிர்க்கட்சிகள் கேட்கவில்லை என்பதற்காகவே அதில் அபாயம் இல்லை என்று எப்படி நினைக்க முடியும்?

இந்தியாவில் பார்ப்பன ஆதிக்கத்திற்கு உட்படாத மற்றும் பார்ப்பனர்களால் மிரட்டிப் பணிய வைக்க முடியாத அரசியல் கட்சிகள் உண்டா? பார்ப்பனர்களைப் பொறுத்த மட்டில் ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கை தான் இறுதி இலக்கு. அனைவரும் அதை வெளிப்படை யாகக் கைக்கொண்டால், அதற்கு எதிராக மக்கள் கொந்தளித்து எழுந்து விட்டால் தாங்கள் முற்றிலும் அழிந்து விட நேரும் என்று எண்ணியே அனைத்து அரசியல் கட்சிகளிலும் விரவி இருக்கிறார்கள்.

அந்தந்த அரசியல் கட்சிகளில் உள்ள அவாள் எந்திரத்திற்கு எதிரான பொதுக் கருத்து உருவாகாத வரை அதைப் பற்றிப் பேசாமல் இருக்கவே விரும்புவார்கள். அதன் படியே கட்சிகளையும் ஆட்டிப் படைப்பார்கள்.

அது ஒரு புறம் இருக்கட்டும். வாக்காளர் சரி பார்க்கும் தாள் தணிக்கைச் சான்றுகள் (VVAPT - Voters Verifiable Paper Audit Trial) முழுவதும் எண்ணப்பட்ட பிறகு தான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றத்தின் ஆணை உள்ள போதும் அதைப் பற்றி இம்மி அளவும் கவலைப் படாமல் தேர்தல் ஆணையம் முடிவுகளை அறிவிக்கிறதே? அது எப்படி முடிகிறது? அதைப் பற்றி எந்த ஒரு அரசியல் கட்சியும் கவலைப்படவில்லையே?

ஏன்? எப்படி? எது எதற்கோ தானாக முன்வந்து நீதி மன்ற அவமதிப்பாக எடுத்துக்கொள்ளும் நீதி மன்றங்கள், உச்ச நீதி மன்ற ஆணையைத் துச்சமாக மதித்து, தாள் தணிக்கைச் சான்றிதழ்களை எண்ணாமலேயே முடிவுகளை அறிவித்தமைக்கு எதிராக ஏன் எடுத்துக் கொள்ளவில்லை? இந்நிகழ்வுகள் எல்லாம் நிலைமைகள்

மிக... மிக... மிக ஆபத்தாகவே உள்ளன என்று தெரிவிக்கவில்லையா? தேர்தல் மூலம் தீர்வு காண நினைப்பவர்கள் வாக்குப் பதிவு எந்திரம் இருக்கையில் தங்கள் பணி அனைத்தும் வீணாகி விடும் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? நாம் இந்திய சமூகத்தின் அடிமை வேர்களை அறுத்து எறியப் போராடும் போது நம் வலிமையைக் கூட்டிக் கொள்வது மட்டுமே போதாது. எதிரிகளின் வலிமையைக் குறைப்பதும் முக்கியம். எதிரிகளின் வலிமையைக் குறைக்க வேண்டும் என்று கூறுவது நம் வலிமையைக் கூட்டக் கூடாது என்பதாகப் பொருள் ஆகாது.

- இராமியா