corona vaccineநம் நாட்டில் கொரோனா தடுப்பூசி போடுவது 16.1.2021 அன்று தொடங்கப்பட்டது. அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத் தலைவர் முதன்முதலாக இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார்.

அவரைத் தொடர்ந்து நிதி ஆயோக் உறுப்பினர்களும், இம்மருந்தைத் தயாரித்த நிறுவனத்தின் தலைவரும் இத் தடுப்பு மருந்தைச் செலுத்திக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து நமது தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அவர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டதோடு, இத் தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்றும், இதன் பாதுகாப்பு குறித்து எதிரிகள் (காவிகளின் மொழியில் கூறவேண்டுமென்றால் - இசுலாமியர்கள், கிறித்தவர்கள், கம்யூனிஸ்டுகள், தி.மு.க.வினர்) பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

பொய் சொல்லுவதிலும், உண்மைச் செய்திகளைத் திரித்துச் சொல்லுவதிலும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர்கள் காவிகள். நோய்த் தடுப்புக்காக ஒரு புதிய மருந்தை ஊருவாக்கும்பொழுது பின்பற்றவேண்டிய நடைமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டு உள்ளனவா என்ற வினாவைத்தான் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் எழுப்பி இருக்கிறார்கள்.

அவ்வாறு செய்யாத வரையில் அம்மருந்தின் நம்பகத்தன்மையை அறிவியலாளர்கள் எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும் என்றுதான் வினவியிருக்கிறார்கள். உடனே நமது தலைமை அமைச்சர் மோடி, இம்மருந்தைப் பற்றி எதிரிகள் வதந்திகளைக் கிளப்பிவிடுவதாகக் குற்றம் சாட்டிவிட்டார்.

மோடி இப்படிச் சொல்கிறார் என்றால், காவிக் குஞ்சுகள் அதற்குப் பல படிகள் மேலே போய்விடுகிறார்கள். “இம்மருந்தின் நம்பகத் தன்மையைக் குறித்து வினவுபவர்கள் தேசத்துரோகிகள்” என்றும், “கம்யூனிஸ்ட் சீனாவின் கைக்கூலிகள்” என்றும், “இந்திய அறிவியலாளர்களை ஒதுக்கிவிட்டு, சீனாவின் வளர்ச்கிக்காகக் குரல் கொடுப்பவர்கள்” என்றும் அவர்கள் கூக்குரலிடுகின்றனர்.

சீனா கம்யூனிஸ்ட் பாதையிலிருந்து விலகி, முதலாளித்துவப் பாதையில் சென்றுகொண்டிருப்பதைக்கூட புரிந்து கொள்ளாத இவர்கள், இந்தியா இன்று கொடூரமான கொடுங்கோலரிடம் மாட்டிக்கொண்டு இருப்பதை என்றுதான் புரிந்துகொள்ளப் போகிறார்களோ?

சரி! மறுபடியும் தடுப்பு மருந்து பற்றிய செய்திக்கு வருவோம்.

அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் கழகத் தலைவரும், இன்னும் இதில் தொடர்பு உள்ள பலரும், இத் தடுப்பூசியை போட்டுக்கொண்டிருக்கிறார்களே! இது இம் மருந்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவில்லையா? என்று கேட்கிறார்கள்.

மருந்தின் நம்பகத்தன்மையைக் குறித்து யாரும் கேட்கவில்லை; அம் மருந்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் முன் செய்து முடிக்கப்பட வேண்டிய சோதனைகளை ஏன் மேற்கொள்ளவில்லை என்றுதான் கேட்கிறார்கள். இதற்கு விடை அளிக்காமல் வேறு ஏதோதோ பற்றித்தான் மோடியும், காவிகளும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களின் போக்கு தேவர்களும், அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடைந்ததாகச் சொல்லப்பட்ட கதையைத்தான் நினைவூட்டுகிறது. பாற்கடலைக் கடைந்து அமிழ்தம் கிடைத்தவுடன் அதை இரு பிரிவினரும் பங்கு போட்டுக் கொள்வதைப் பற்றிச் சச்சரவு ஏற்பட்டதாம்.

அப்பொழுது திருமாள் மோகினி வடிவத்தில் வந்து இரு பிரிவினருக்கும் அமிழ்தம் அளிப்பதாக உறுதி கூறி, அப் பாத்திரத்தை வாங்கிக்கொண்டாராம். அப்படிப் பிரித்து அளிக்கும் பொழுது தேவர்களுக்கு அமிழ்தத்தையும், அசுரர்களுக்கு வெறும் நீரையும் அளித்தாராம். அசுரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டது அமிழ்தமா? இல்லையா? எனத் தெரிந்து கொள்வதற்குள் விநியோக வேலை முடிந்துவிட்டதாம்.

இதை மனத்திற்கொண்டு தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்ட நிகழ்வை ஒப்பிட்டுப் பார்க்கலாம். மிக முக்கிய நபர்களுக்குச் செலுத்தப்பட்டது தடுப்பூசி மருந்துதானா அல்லது வேறு ஒன்றா என்பதை யார் உறுதிப்படுத்துவது?

சரி, அது மருந்துதான் என்றால் அது முறையான சோதனைக்கு உட்பட்டுத்தான் இருக்கும் என்று ஊகித்துக் கொள்ளலாம். அப்படியென்றால் அதை ஏன் வெளிப்படையாக அறிவிக்க மறுக்கிறார்கள்?

காவிகளை - பார்ப்பனர்களைப் பொறுத்த மட்டில், அவாள் சொல்லும் எதையும் எதிர் வினா தொடுக்காமல் ஏற்றுக்கொள்ளும் மக்கள் கூட்டத்தை உருவாக்கிட வேண்டும் என்று விரும்புபவர்கள்.

அப்படி உருவாக்கினால்தான், வெளிப்படையாக வருணாசிரம அதர்மச் சமுதாயத்தை முழுமையாக அமைத்துவிட முடியும் என்று நினைக்கிறார்கள். அதற்காக, எதிர்வினை தொடுப்பவர்களை அனைத்து விதங்களிலும் ஒடுக்க முயல்கிறார்கள்.

நாளை இப்படியும் நடைபெறலாம்; காவிகளுக்கும் அவாளுக்கு இணங்கி நடப்பவர்களுக்கும் உண்மையான தடுப்பு மருந்தையும், எதிர் வினா தொடுப்பவர்களுக்கு நோய் உருவாக்கும் மருந்தையும் செலுத்தும் திட்டமும் செயல்படுத்தப்படலாம்.

அதற்காகவே வெளிப்படைத் தன்மை இல்லாத ஒரு சூழ்நிலையை இவர்கள் உருவாக்கிக் கொண்டு இருக்கலாம்.

மக்கள் இதற்கு எதிரான தீர்வைப் பற்றிச் சிந்திப்பது காலத்தின் கட்டாயம்.

- இராமியா

Pin It