தமிழகப் பள்ளிகளில் தற்போது ஐந்து வகையான கல்வி முறைகள் நடைமுறையில் உள்ளன.

1. மாநில அரசு பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகள்.

அரசுப் பள்ளிகள் அனைத்தும் இந்த பாடமுறையை பின்பற்றுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவரும் இந்த பள்ளிகளையே நம்பியிருக்கின்றனர். இவை மக்களின் வரிப் பணத்தில் இருந்து நடத்தப்படுபவை. இந்தப் பள்ளிகளை கட்டி, ஆசிரியர்களை நியமனம் செய்து சம்பளம் கொடுத்து, இலவசமாக பாடநூல்கள், மதிய உணவு, அவ்வப்போது சீருடை ஆகியவற்றையும் கொடுத்து நடத்தி வருவது தமிழக பள்ளிக் கல்வித்துறை.

இப்பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்து வரை கற்பிக்கும் பள்ளிகளை தொடக்கப் பள்ளிகள் என்று அழைக்கிறோம். ஒன்று முதல் எட்டுவரை கற்பிக்கும் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகள் என்று அழைக்கிறோம். ஆறு முதல் பத்து வரை கற்பிக்கும் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகள் என்றும் ஆறு முதல் பனிரெண்டு வரை கற்பிக்கும் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகள் என்றும் அழைக்கிறோம்.

தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்களுக்கு எந்த •பீசும் கிடையாது. உயர், மேல் நிலைப்பள்ளிகளில் 6, 7, 8 வகுப்புகளுக்கு வெறும் 32 ரூபாய்தான் ஆண்டுக் கட்டணம். 9, 10 வகுப்புகளுக்க வெறும் 47 ரூபாய்தான் ஆண்டுக்கான •பீஸ்

தமிழகத்தில் செயல்படும் உதவி பெறும் பள்ளிகளும் மேலே குறிப்பிட்ட அனைத்தையும் செயல்படுத்தி வருகின்றன. ஆனால் ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு. அதாவது ''இந்தப் பள்ளிகளை தனியார் தங்களுடைய செலவில் கட்டி, சில விதிமுறைகளை பின்பற்றி தங்கள் இஷ்டம்போல் ஆசிரியர்களை நியமனம் செய்து, அரசிடமிருந்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு சமமான சம்பளத்தை வாங்கி, தங்கள் பொறுப்பில் பணப் பட்டுவாடா செய்து'' என்று வாசித்துக் கொள்ள வேண்டும். ஆசிரியர்களின் ஊதியம் மட்டும் மக்களின் வரிப் பணத்தில் இருந்து செலவிடப்படுகிறது. தமிழ்நாட்டின் ஏழை எளிய மக்களில் பெரும்பாலோர் இந்தப் பள்ளிகளையும் நம்பியுள்ளனர்.

இவ்வகையான பள்ளிகள் பெற்றோர்களிடமிருந்து பெரும் நன்கொடைகளை கட்டாயப்படுத்தி வாங்கிக் கொள்வதாக புகார் உண்டு.

2. ஓரியண்டல் பள்ளிகள்.

அரசுப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் அதே பாடப்புத்தகங்கள். சமஸ்கிருதம், உருது, அரபி போன்ற மொழிகள் தமிழுக்கு பதிலாக கற்பிக்கப் படுகின்றன. இவை எண்ணிக்கையில் குறைவானவை. தமிழகத்தில் ஏறத்தாழ 40 பள்ளிகள் இருக்கலாம்.

3. ஆங்கிலோ-இந்தியன் பள்ளிகள்.

பழைய கணக்குப்படி இவற்றின் எண்ணிக்கை 41. ஆங்கிலோ இந்திய பிரிவு மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டவை.

4. CBSE எனப்படும் மத்திய அரசுப்பள்ளிகள்.

இவற்றின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது. இப்பள்ளிகள் மாநிலம் விட்டு மாநிலம் செல்லக்கூடிய பணியாளர்களை கருத்தில் கொண்டு இயங்குகின்றன.

5. நர்சரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள்.

தமிழகமெங்கும் ஏராளமாக பரவிவிட்ட பள்ளிகள். ஏறத்தாழ இன்று 4000 பள்ளிகள் இருக்கலாம். மழலைக்கல்வி முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை கற்பிக்கப் படுகிறது. ஆங்கிலவழியில் மட்டுமே கல்வி. ஏறக்குறைய எல்லாப் பள்ளிகளுமே தனியாரால் கட்டி, அவர்களே ஆசிரியர்களை நியமனம் செய்து, அவர்களுடைய நிதியில் இருந்தே ஏதோ ஒரு சம்பளம் கொடுக்கும் பள்ளிகள். அரசு இப்பள்ளிகளுக்கு கல்விக்கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. என்றாலும் நன்கொடை வாங்குவதாக புகார் உள்ளது.

தற்போது உள்ள அரசு, மேலே கண்ட அனைத்து கல்விமுறைகளிலும் உள்ள நல்ல அம்சங்களை இணைத்து தமிழக மாணவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு கல்விமுறையை உருவாக்கும் முயற்சியில் உள்ளது. இதை சமச்சீர் கல்விமுறை என்று பெயரிட்டுள்ளனர். தமிழக கல்வி வரலாற்றில் இது ஒரு நல்ல திருப்பம். ஆனால் இதை நடைமுறைப்படுத்த இயலுமா என்பது தான் கேள்வி.

நடைமுறைப்படுத்த இயலாத சிக்கலான பிரச்சினைகளை ஒரு குழுவிடம் தள்ளிவிடுவதன் மூலம் பிரச்சினைகளை ஆறப்போடும் உத்தி எனவும் கருத இடமிருக்கிறது.

என்ன கற்பிப்பது? என்ற கேள்விக்கு விடை காண்பது தான் இக்குழுவின் முன் உள்ள முக்கியமான கேள்வி. இதில் கருத்து ஒருமித்தல் ஏற்படுவது மிக அரிது. ஏனெனில் மற்றவர்களைவிட நாங்கள் இவற்றையெல்லாம் கூடுதலாக கற்பிக்கிறோம் என்ற விளம்பரத்தின் அடிப்படையில்தான் இக்கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு என்று சில சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. ஒவ்வொரு தனியார் பள்ளியும் ஒன்று அல்லது சில முதலாளிகளின் ஆளுகைக்கு உட்பட்டது. இவ்வளவு காலமாக அனுபவித்துவரும் உரிமைகளில் கைவைக்க அவர்கள் அனுமதிப்பார்களா என்பது ஐயப்பாட்டிற்குரியது.

இன்று நடைமுறையில் உள்ள விதிகளின்படி ஒரு தனியார் பள்ளி ஆசிரியர்மீது அரசு நேரடியாக நடவடிக்கை எடுக்க இயலாது. தனியார் பள்ளி நிர்வாகியைக் கொண்டுதான் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க இயலும். அதாவது தனியார் பள்ளிகளின் மீது அரசுக்குள்ள கட்டுப்பாடு ஒரு வரையறைக்குட்பட்டது.

சமச்சீர் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசு உண்மையிலேயே ஆர்வம் காட்டுமானால் பின்வரும் இரண்டு விஷயங்களை நிறைவு செய்தே ஆக வேண்டும்.

1.தமிழ்நாட்டில் வேலை செய்யும் எந்த ஓர் ஆசிரியரையும் அரசே தன்னுடைய உத்திரவின் மூலம் வேறு ஒரு பள்ளிக்கு மாற்றக்கூடிய அதிகாரம் பெறவேண்டும். இது சாத்தியமல்ல என்பதும் ஏராளமான நீதிமன்ற தடைகளை சந்திக்க நேரும் என்பதும் என் கருத்து.

2, தமிழ்நாடெங்கும் எராளமாக பின்னிப் பிணைந்து கிடக்கும் அரசுப் பள்ளிகளில் வகுப்பிற்கு ஓர் ஆசிரியர் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். ஏராளமான நிதிச்சுமையை இது ஏற்படுத்தும்.

என்றாலும் நிர்வாகத் திறமை உள்ள நம்முடைய முதல்வர் முயற்சி செய்தால் ஒரு வேளை சமச்சீர் கொள்கை சாத்தியப்படலாம்.

- மு.குருமூர்த்தி -ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்

Pin It