இந்தியாவின் வெனிசுலாவாக விளங்கிய தமிழ்நாடு இன்று பொட்டல்காடாகும் நிலையில் உள்ளது. தமிழ்நாட்டு மக்களும் நமக்கென்ன என்று எண்ணி சும்மா இருந்துவிட்டனர். இதற்கு முழு முயற்சியாக ஒரு சிலரே மனம்நொந்து காப்பாற்றுங்கள் என்று கூறுகின்றனர். நம்மைவிட்டு அண்மையில் பிரிந்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் கடைசி மூச்சுவரை போராடியுள்ளார். எனக்கு தெரிந்தவரை நம்முடைய இயற்கைவளங்கள் அழிந்துள்ளன.

எடுத்துக்காட்டாக எங்கள் பகுதியில் 1966 முதல் 1978 வரை தரிசு நிலங்கள் இருந்தன. சிறு காடுகள் இருந்தன. ஆடு, மாடுகள், கோழி, பன்றி, நாய், கழுதை, குதிரைகள் இருந்தன. தரிசு நிலங்களில் நிலத்தடி நீர் மேலாக பொங்கிவரும். புல், பூண்டுகள், செடிகள், புதர்கள் மண்டிக்கிடந்தன. இவற்றில் பாம்பு, பல்லி, தேள், எலி, முயல், புறா, காடை, கவுதாரி, பலதரப்பட்ட பறவைகள் எங்கும் திரிந்தன. இதுபோன்ற உயிரினங்கள் நம்மை அண்டி வாழ்ந்த பொழுது மண்வளம் இயற்கையாகவே வளம்பெற்று வந்தன.

இயற்கையாகவே காடுகளில் நல்ல பல மூலிகை மருந்துகளும் கிடைத்தன. ஆனால் 1978க்குப் பிறகு நம்மிடம் இரசாயன உரங்கள் அதிக பயன்பாட்டில் வந்துவிட்டன. அதனால் மண்வளம் தானே குறைந்துவிட்டது. முன்பு கண்ட நிலத்தடி மேல் நீர் ஊற்று இன்று இல்லை. இதற்கும் காரணம் ஆழ்துளை கிணறுகளே ஆகும்.

வளமாக இருந்த காலங்களில் மக்கள் புலால் உணவுக்கு தாங்களே கோழி, ஆடு, பன்றிகளை வளர்த்து சுவையான புலால் சாப்பிட்டனர். இன்று கிடைக்கும் புலால்கள் அனைத்தும் இரசாயன உணவு கொடுத்து வளர்ப்பதால் சுவை இல்லை; நோய் தன்மை அதிகம் உள்ளது. நமக்கு இயற்கையில் கிடைத்த உயிர்சத்துக்கள் இப்பொழுது உள்ள உணவில் இல்லை.

இந்த நிலைக்கு காரணம் நம்மை ஆட்சி செய்த அனைவர்க்கும் பங்குண்டு. சுயநலத்தோடு, தன் குடும்பம், தன் கட்சி, நீயா? நானா? என்ற எண்ணத்துடன் ஆட்சி செய்தது மிகவும் கொடுமை. இலவசம் கொடுத்தே நம்முடைய சக்தியை முடக்கியது இந்த கேடானவர்களே. இவர்கள் நமக்கு இலவயமாக நல்ல கல்வி கொடுக்கவில்லை. மருத்துவம் கொடுக்கவில்லை. நல்ல குடிநீர் கொடுக்கவில்லை. மாறாகக் குடிநீர் வியாபாரம், உணவு வியாபாரம், மது வியாபாரம் (1.1.2014 ஒரு நாளில் ரூ.255 கோடி விற்பனை செய்து சாதனை கண்டவர்கள் நம் ஆட்சியாளர்கள்.

பொங்கல் நாளில் ரூ.100/- ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் கொடுத்தனர். வாங்கிய அடுத்த அரை மணிக்குள் மதுக் கடையில் அந்த தொகை சென்றுவிட்டது. பலதரப்பட்ட இயற்கை வளங்களையும், உயிரினங்களையும், தாவரங் களையும் இப்பொழுது இழந்துவிட்டோம். இனி எப்பொழுது இவற்றை காப்பாற்ற உணர்வு கொள்வோம்.

Pin It