AR Rahmanபுற்றுநோய் கடுமையாக பாதித்துவிட்டது என்று மருத்துவர்கள் கைவிரித்து விட்டார்கள். சிறிது சிறிதாய் இறந்து கொண்டிருந்த அந்த தந்தை ஒருநாள் இறந்தே போய்விடுகிறார். ஏதுமறியாத தாய், சகோதரியுடன் அந்த சிறுவன் செய்வதறியாது நிற்கிறான்.

சிறிது நாட்கள் கழித்து தான் பயின்ற பத்மா சேதாஷத்திரி பள்ளிக்கு வழக்கம் போல் சென்றான். ஆனால் அவனை அரையாண்டுக்கான பள்ளிக் கட்டணம் செலுத்தவில்லை என்று மாற்றுச் சான்றிதழை தந்து வெளியேற்றியது.

எவ்வளவோ அந்த தாய் கெஞ்சிப் பார்த்தாள். ஆனால் சிறிதும் மசியவில்லை. காரணம் அவ்வளவு கண்டிப்பு... அந்தக் கண்டிப்பு நிறைந்த கல்விக்காகவே பலர் பல லட்சங்களை பால் மணம் மாறாத குழந்தைகளுக்கு கட்டி படிக்க வைத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆகவே அவ்வளவு கண்டிப்பான பள்ளி அந்த மாணவரை வெளியே அனுப்பி விட்டது. தனியார் பள்ளி பணம் கட்டவில்லையெனில் விலக்கப் படுவதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்... அவர் உலகத்தையே தன்பக்கம் கட்டிப் போடும் மேதையாக வரப் போகிறார் என்பது அப்போது அந்த பள்ளிக்கு தெரிந்திருக்கவா போகிறது.

விரட்டியே விட்டார்கள். அப்போது அந்த மாணவர் சேகர் & கஸ்தூரி என்ற இந்து தம்பதியின் மகனாகவே இருந்திருக்கிறார். இந்துதான் என்றாலும், எதற்கெடுத்தாலும் இந்துக்களே ஒன்று சேருங்கள் என்று அழைக்கும் யாரும் இதற்காகக் குரல் எழுப்ப மாட்டார்கள். இதையும் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்.

ஆனால் "பணத்தை கட்ட முடியவில்லை என்றால் போய் பிச்சை எடுத்து கட்டுங்கள்" என்று பள்ளி நிர்வாகம் சொல்லியிருப்பதைத்தான் இங்கே கொடூரத்தின் உச்சமாக பார்க்க வேண்டியுள்ளது.

அதனால்தான் முதலாளித்துவம் குடும்ப உறவுகளை வெறும் பணம் சார்ந்த ஒன்றாக மாற்றி விடும் என்று மாமேதை மார்க்ஸ் இதனை அனுபவ ரீதியாக உணர்ந்தே சொல்லியிருக்கிறார்.

பின்பு வேறொரு பள்ளியில் சேர்ந்து படித்து தன் பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார். அதோடு மட்டுமல்ல, தன் தந்தை விட்டுச் சென்ற இசையை தன் தோள் மீது சுமந்து, தன் தனிப்பட்ட இசை திறமையால் உலகின் மிகப் பெரிய விருதுகளை பெற்ற அப்துல் ரக்கா ரஹ்மானாக அதாவது ஏ.ஆர்.ரஹ்மானாக உயர்ந்து நிற்கிறார்.

இதே போன்று பள்ளியில் சேர்க்காமல் விரட்டியடிக்கப்பட்ட ஒரு மாணவர்தான் கலைஞர் என்பதையும் இங்கே நினைவுப் படுத்துவது அவசியமாகிறது.

என்னை பள்ளியில் சேர்க்கா விட்டால் குளத்தில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று போராட்டம் நடத்தி பள்ளியில் சேர்ந்தவர். ஆனால் பொருளாதார ரீதியாக பார்ப்பன பள்ளியால் புறக்கணிப் பட்டு வீதியில் வீசப்பட்டவர் ஏ.ஆர்.ரஹ்மான்.

அதனால்தான் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றபோது, சமத்துவம் குறித்தும் சமூக நீதி குறித்தும் பேசி தனது வாழ்த்தை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.

அடிமட்டத்திலிருந்து உயர்ந்தவர்கள் சமூகநீதியை பேசத்தான் செய்வார்கள். அந்த வாய்ப்புகள் அனைவருக்கும் வர வேண்டும் என்று குரல் எழுப்பத்தான் செய்வார்கள்.

இன்னொரு குறிப்பிடப்பட வேண்டிய முக்கியமான விசயம், தன் பள்ளியில் தங்களால் துரத்தப்பட்ட அதே திலீப் குமார், பின்னாளில் ஆஸ்கர் வாங்கிய கிஸி ரஹ்மானாக புகழ் பெற்றவராக மாறிய போது, ஏ.ஆர்.ரஹ்மான் தங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர் என வெட்கமில்லாமல் விளம்பரப் படுத்தியது பத்மா சேஷாத்ரி பள்ளி.

அந்த பள்ளியின் நிர்வாக இயக்குநராக இருந்த மதுவந்தி, இதனை ஒரு தொலைக் காட்சியில் பெருமை பொங்கச் சொன்னார். ஆனால் தான் பள்ளியில் சேர்ந்து படிப்பதற்கு பணம் கட்ட முடியாமல் வெளியேற்றப்பட்டவன் என்று கவலையுடன் சொன்னார் ஏ.ஆர்.ரஹ்மான்.

அதிகாரமும், புகழும் இருக்கும் இடத்தை எந்த வித சங்கோஜமுமில்லாமல் ஏற்பதே பார்ப்பனர்களின் இது நாள் வரையான செயல்பாடு.

- சஞ்சய் சங்கையா

Pin It