‘கத சொல்றவுங்களப் பாத்து ஆரும் லேசுல எட போட்ராதீங்க சாமி... அது அப்புடி ஒண்ணும் லேசுபட்ட விசியமுல்ல, அதச் சொல்றதுக்கு ஒரு சுளுவு வேணும். ஒரு நெளுவு வேணும். கல்பனை வேணும். கல்பனைய ஓட்டமா சொல்றதுக்கு தெறமை வேணும். எல்லாத்துக்கும் மேலயா சுத்தஞ் சுயமான மனசு வேணும். எல்லாருகிட்டயும் அது வாய்க்காது. அது ஒரு உன்னதமான கலை.‘ - சி.எம்.முத்து

90களில் சுபமங்களா மாதஇதழ் வாசிக்கத் தொடங்கிய காலகட்டத்தில்தான் சி.எம்.முத்துவின் சிறுகதைகள் எனக்கு அறிமுகமாயின. அதன் பின்னரே அவரது ‘மாஸ்டர் பீஸ்‘ என சொல்லப்படும் ‘கறிச்சோறு‘ நாவலை வாசித்தேன். ஒரே சாதிக்குள்ளேயே நிலவும் மேல் கீழ் அடுக்குகளையும் சிடுக்குகளையும் அதன் வன்மத்தையும் கீழ்மைகளையும் உருப்படுத்தியிருந்த அந்நாவலை வாசித்த அதே பிரமிப்பில் பாபநாசத்திலிருந்து சாலியமங்கலம் செல்லும் சாலையிலுள்ள இடையிருப்பு எனும் கிராமத்திலிருந்த அவரைச் சில நண்பர்களோடு சந்திக்கச் சென்றோம்.

எழுத்தாளர் சி.எம்.முத்து என விசாரித்தபோது அந்த ஊரில் யாருக்கும் தெரியவில்லை. போஸ்ட் மாஸ்டர் முத்து என்று சொன்னபிறகு அடையாளம் காட்டினார்கள்.

அவர் வீட்டில் தபாலாபீஸ் என்பதற்கான சுவடுகள் தாறுமாறான அடையாளங்களோடு இருந்தன. சில பிள்ளைகள் அஞ்சலக முத்திரைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தன. சில காகிதங்கள், போஸ்ட் கார்ட், இன்லேண்ட் லட்டர்கள் முறையற்று சிதறிக்கிடந்தன. ‘எழுத்தாளனின் வீடு ஒழுங்கற்று இருக்கும்’ என்ற ஜெயகாந்தனின் வரிகள் நினைவுக்கு வந்தாலும் எழுத்தாளரின் அலுவலகம்கூட இப்படியா இருக்கும் என்றிருந்தது. அடுத்த அதிர்ச்சி எழுத்தாளர் சி.எம்.முத்துவின் தோற்றம். இந்த மனிதரா கதை எழுதுகிறார், இவரா சி.எம்.முத்து? இவர்தான் எழுதியிருப்பாரா? மேற்சட்டையில்லாத அவரது தோற்றம், அவரது உடலமைப்பு. எழுத்தாளர் என்ற பிம்பங்களைக் கலைத்துப்போட்ட அவரது உடல்மொழி, உபசரனைகள் ஆச்சரியமாக இருந்தது.

ஒன்றிரண்டு படைப்பாக்கத் தொகுதிகள் எழுதி வெளியிட்டவர்களுக்கே மாளாத சலிப்பு மேலோங்கி இலக்கியத் துறவு மேற்கொண்டுவிட்டதாக சிலர் அறிவித்துவிடுகிற இந்நாட்களில் சளைக்காமல் இம்முதிய வயதிலும் அன்றைக்கு எழுதியதைவிட வீரியமாகவும் ஆழமாகவும் எழுதுகிறார். தன்னை யாரும் இலக்கிய பீடமேற்றவில்லை என்றோ, போற்றிப் பாராட்டவில்லை என்றோ, விருதுகள் விழாக்கள் நடத்தவில்லை என்றோ குறைபட்டுப் புலம்பாமல் சலம்பாமல், என்னை எழுதுவது, எனக்குத் தெரிந்ததை எழுதுவது, என் கடமை எழுதுவது என எழுதியபடியே யிருக்கிறார்.

இவரது உலகமே வயலும் வயல் சார்ந்த நிலமுமான மருதத்திணைதான். இவரது ஒட்டும் உறவும் வாழ்வும் எழுத்தும் எல்லாமே இந்த மருதநிலம்தான். இவரைத் தஞ்சை வட்டார எழுத்தாளர் என்று சுருக்கிச் சொல்வதைவிட மருதநில எழுத்தாளர் என்று மனம் நிரம்ப அழைக்க இடமுண்டு. ஏனெனில் இவரது பெரும்பான்மைப் படைப்புகளில் வயலும் வயல் சார்ந்த உயிரினங்களின் வாழ்வைத் தவிர மற்ற அம்சங்கள் அரிதாகவே தென்படுகின்றன.

இன்றளவும் தஞ்சை எழுத்தாளர்கள் என்று விளிக்கப்படுகிறவர்களின் எழுத்தும் வாழ்வும் வேறு வகைப்பட்டவை. அவ்வெழுத்துகள் ரசிக்கவும் மதிக்கவுமானவை. கொண்டாடப்படவேண்டியவை என்பதெல்லாம் உண்மைதான். நியாயமாக அவர்களை தஞ்சையில் வாழ்ந்த எழுத்தாளர்கள் என்று சொல்வதே சரியானதாக இருக்கும் எனத் தோன்றுகிறது. தஞ்சை வட்டார மக்களை எழுதிய எழுத்தாளர்கள் எனச் சொல்வதற்கு இடமில்லை. ஆகக் கரிசல் எழுத்தாளர் என கி.ரா.வையும், நெய்தல் எழுத்தாளர் என ஜோ டி குருஸையும் விளிப்பதுபோல சி.எம்.முத்துவை மருதம் எழுத்தாளர் என்றே சுட்டலாம், தவறில்லை.

சி.எம்.முத்து தேர்ந்தெடுத்துத் தொகுத்த அவரது 53 சிறுகதைகளின் தொகுப்பு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடாக விரைவில் வெளிவரவுள்ளது. அத்தொகுப்பில் இடம்பெற்ற கதை வாசிப்பைக் கொண்டே சி.எம்.முத்து சிறுகதைகள் குறித்த எனது பார்வையினை இங்கே பதிவு செய்கிறேன்.

சி.எம்.முத்துவின் கதைகளை சமூக ஆவண எழுத்து என வகைப்படுத்தலாம். அதாவது புதுமைப்பித்தனின் ‘பொன்னகரம்‘, ‘மகாமசானம்‘, சுந்தரராமசாமியின் ‘பிரசாதம்‘ போன்ற கதைகள் எல்லாக் காலத்திலும் பொருத்திப் பார்க்க பொருத்தமானவை. ஆனால் அசோகமித்திரனின் ‘புலிக்கலைஞன்‘, சா.கந்தசாமியின் ‘தக்கையின் மீது நான்கு கண்கள்‘ போன்ற கதைகள் ஆவணக்கதைகளின் வகைமைப்பட்டவை. இக்கதைகள் ஒரு உதாரணத்திற்காகத்தான் குறிப்பிடப்படுகின்றன. நிறைய கதைகளை இப்படியாக வகை பிரிக்கலாம்.

அதாவது இன்றைக்கு நிகழ்த்திப் பார்த்து எழுத வாய்ப்பில்லாத வகையைச் சார்ந்த கதைகள். இன்றைக்கு அக்கதைகளுக்கான களங்களுமில்லை. மனிதர்களும் இல்லை. ஆகவே கிராமங்கள் வேகவேகமாக நகர்மயமாகிவரும் இந்நாளில் காவிரிச் சமவெளிப் பகுதி கிராமங்களின் அசலான வாழ்வை அப்பட்டமாகப் பேசும் இவரது கதைகளை தமிழ்ச் சமூக ஆவணங்கள் என அவதானிப்பது சரி எனத் தோன்றுகிறது.

பள்ளிப்படிப்பு அதிகமில்லாத சி.எம்.முத்துவின் கலை மேதைமையைத் தேர்ந்த ஞானம் சித்திக்கப் பெற்றதொரு கூத்துக்கலைஞனின் அனுபவச் செறிவோடு ஒப்பிடலாம்.

நாடகக்கூத்து தொடர்பான இவரது சிறுகதைகள் மிகமிக முக்கியமானவை, தமிழில் இதுவரை எவராலும் சொல்லப்படாதவை என்பதைவிட இனியும் சொல்லவியலாதவை. மரபான நமது நாட்டார் கூத்து வடிவம் மறைந்தொழிந்துவிட்ட நிலையில் 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் கூத்துகள் எப்படி நடந்தன என்பதற்கான அரிதான ஆவணங்களாக ‘நாடகம் பார்த்தவன்‘, ‘நாடக வாத்தியார் தங்கசாமி‘ ஆகிய இவரது கதைகள் அமைந்துள்ளன.

1980ம் வருடம் தீபம் இதழில் வெளிவந்த கதை ‘நாடகம் பார்த்தவன்.‘

‘முட்டம் பெரியசாமின்னா சாதாரண ஆள் இல்லங்கறேன். அவரைத் தட்டிக்கறதுக்கு இந்த ஜில்லாவுல ஆள் கெடையாது. என்னமா பாடுவாருங்கறீங்க, சும்மா வெங்கலம் மாறி கொரல் கிணீர் கிணீர்ங்கும். அரிச்சந்திரா வேசம் கட்டிக்கிட்டு ஆடறுதுக்கு வேற எந்தக் கொம்பனாலயும் முடியாது. ஆளு சும்மா ஆறடி ஒசரமிருப்பாரு. அரிச்சந்திரா வேசத்துக்குன்னே பொறந்த மனுசன் அவர் ஒருத்தர்தான். வாயத் தொறந்தாருன்னா ரேடியோ பொட்டியோ மைக்கோ வாண்டாங்கறன். சும்மா அஞ்சி மயிலு சுத்தளவுக்கு சத்தம் பத்தமா கேக்கும். பொட்டிக்காரன் தாளக்காரனுக்கெல்லாம் சவுரு கயிண்டு போயிரும்.‘

‘சந்திரமதிக்கு காக்காமுளி கோயிந்தசாமின்னு பேருபோன ஒருத்தன் வருவான். அவன் என்னடான்னா அரிதாரத்தைப் பூசி

சீலையைக் கட்டிகிட்டு வந்தான்னா அசல் பொம்பளையெல்லாம் மூக்கு மேல வெரலை வச்சிருவாளுக. அம்புட்டு சோராயிருப்பான் காக்காமுளி. குயிலு கணக்காப் பாடி மயிலு கணக்கா ஆடுவான்.‘

இப்படியாக அந்நாட்களில் நாடக உலகில் கோலோச்சிய பிரபலங்களை ஒவ்வொருவராக இக்கதையில் விரிவாக அறிமுகம் செய்கிறார்.

காடுவெட்டி கந்தசாமி - காமிக்கு, திருவாரூ மோகனா - மோகனாங்கி, டோலக்கு பொன்னுசாமி - மத்தளம், தஞ்சாவூர் சுப்பயா தனவேலு - ஜிஞ்சா, மன்னார்குடி பக்கிரிசாமிபுள்ள - மோர்சிங், வடுவூர் ராமையா வாண்டையார் - பின்பாட்டு, நீடாமங்கலம் சிங்காரம் - சீன்படுதா இப்படி ஒவ்வொருவரது பிரஸ்தாபங்களையும் அடுக்கிக்கொண்டே போவதோடு நாடகம் போடுமிடம், மக்கள் பாய் படுக்கையுடன் நாடகம் பார்க்க வருவது, தற்காலிகக் கடைகள் என்று ஒரு நாடகக்கூத்தின் சூழலையும் கண்முன் அரங்கேற்றுகிறார்.

நாடகத்தின் பிலாக்கணங்களைப் பற்றி கேள்விப்பட்ட நாளிலிருந்து பிரமித்து நாடகமே எங்கும் போடுவதில்லையே என விசனப்பட்டு ரொம்ப வருசமாகக் காத்திருந்து ஆசைஆசையாக நாடகம் பார்க்கச் செல்கிறான் கதை நாயகன்.  நண்பனின் வற்புறுத்தலால் வழியில் சாராயத்தைக் குடித்துவிட்டு போதை தாளாமல் உறங்கிவிட்டு காலையில் சூரியவெளிச்சம் முகத்தில் படும்போது எழுந்து நாடகம் பார்க்கவியலாத வருத்தத்தோடு அவன் வீடு திரும்புவதுதான் கதை. கதைநாயகன்தான் நாடகத்தைக் காண இயலவில்லையே தவிர கதை வாசகனுக்கு முழுமையானதொரு நாடகத்தை நிகழ்த்திக்காட்டுகிறார் சி.எம்.முத்து.

1994ல் சுபமங்களாவில் வெளிவந்த கதை ‘நாடக வாத்தியார் தங்கசாமி.‘ முப்பது வருடங்களாக நாடக உலகில் கோலோச்சியவர் தங்கசாமி என அவரை அறிமுகம் செய்கிறார்.

‘திண்ணையில குந்தி ஆச தீர பாடிகிட்டிருப்பாரு, பேசிப் பாக்குறதும் உண்டுதான். அவரு பாட்டையும் வசனத்தையும் கேட்டு ஊரு ஜனங்க வேலவெட்டிகளை வுட்டுபுட்டு செத்தநேரம் கேட்டு பாராட்டிப்புட்டு போய்ச் சேருவாங்க. பொண்டாட்டிக்காரி பெரிசா கத்தி நாறடிப்பா. கஞ்சிக்கி கதியத்த நாயிக்கி பாட்டும் கூத்தும்தான் மிச்சம்ன்னு. அத்தோடயா வுடுவா? கூலிக்காரனுக்கு வாக்கப்பட்டு போயிருந்தாக்கா வவுத்துக் கஞ்சிநாச்சும் தட்டுப்படாமக் கெடக்கும். இந்த மனுசனக் கட்டிக்கிட்டு அதுக்கும் வக்கத்துப் போச்சிம்பா.‘

‘கவலப்படாம கெடடி, குச்சிவூட்ட இடிச்சி மச்சிவூடா கட்டத்தான் போறன், சீக்கிரத்துல நீயும் நானும் சேந்தர்னயா கார்ல போற டயத்தப் பாரு அப்டின்னு ஆள அசமடக்கிப்புடுவாரு.‘

ஆனால் தமிழ்க் கலைஞர்களுக்கே பாத்தியப்பட்ட தரித்திர நிலையிலிருந்து தங்கசாமியால் மீளமுடிய வில்லை என்பதையும் சி.எம்.முத்து எழுதுகிறார்.

‘ரேட்டு பேசி அளச்சிகிட்டு போற மக்க மனுச பேசுன ரேட்ட ஒளுங்கா குடுத்து கணக்கு தீத்ததுண்டா? ஐநூறு பேசி அளச்சிகிட்டுப் போனா முந்நூறு குடுக்குறதே பெரிய காரியம்தான். வாக்குல ஒன்னு செய்கையில ஒன்னு. கலைக்கு என்னடா காசு மசுரு அப்டின்னு தங்கசாமிதான் தன்னை சமாதானப் படுத்திக்குவாரு.‘

அந்திம காலத்தில் ஒருநாள் தங்கசாமியின் மனைவி நாய்க்கு வைக்கிற மாதிரி அவருக்கு சாப்பாடு வைத்ததால் சாப்பிடப் பிடிக்காமல் உட்கார்ந்திருந்த வருக்கு கலெக்டர் ஆபீசிலிருந்து ஆட்கள் வந்து அவருக்கு அரசு உதவிப்பணம் வரவுள்ளதாகத் தகவல் சொல்கிறார்கள். அப்போது புருசனுக்கு மாசாமாசம் பணம் வரப்போகிற சந்தோசத்தில் மனைவி,

‘ஏங்க சோத்தத் திங்கலியா ஈ மொச்சிகிட்டு கெடக்கே... கொளம்பு ஊத்தட்டா, ஊருகா வய்க்கட்டுமா?ன்னு பாசமா கேக்குறா‘

‘எனக்குப் பசிக்கலடி, சோத்த எடுத்துட்டுப் போயிரு‘ன்னு சொல்லிட்டு தனக்குப் பிரியமான நாடகப் பாட்டை ராகம் போட்டுப் பாடுகிறார். குரல் உடையாமல் பொங்கிவரும் பாட்டைக் கேட்டு ஊர் சனங்கள் வீடுமுன் கூடுவதாக அந்தக் கதை முடிகிறது.

இக்கதையிலும் அக்காலத்தில் பெயர் பெற்றிருந்த நாடக ஜாம்பவான்களின் ஒரு பெரிய பட்டியல். நாடக நடிகர்கள், இசைக்கலைஞர்கள், பாடகர்களோடு மேக்கப் போடுபவரிலிருந்து படுதா அமைப்பவர் வரை இருபது முப்பது பிரபலமான ஆளுமைசாலிகளை அங்குலம் அங்குலமாக விவரிக்கிறார்.

தமிழ்ச்சமூகத்தில் கூத்துக்கலை அழிந் தொழிந்திருந்தாலும் சி.எம்.முத்து என்ற கலைஞனுக்குள் அக்கலை ஆழமாகக் குடிகொண்டிருப்பதற்கான சாட்சியங்கள் இக்கதைகள். சி.எம்.முத்துவைத் தொடர்ந்து எழுத்தாளர் கண்மணி குணசேகரன் அவ்வப்போது கூத்துக்கலைஞர்களைப் பற்றி எழுதி வருவது சற்றே ஆறுதலான அம்சமாகப்படுகிறது.

1986ம் ஆண்டு தாய் வார இதழில் வெளிவந்த கதை ‘அந்திமம்‘. தமிழ்ச்சமூகத்தின் ஆகச்சிறந்த ஆவணமாக விரியும் இக்கதையில் வரும் ஊத்தா போட்டு மீன் பிடித்தல் என்பதை குறிப்பிடவேண்டும்.

ஊத்தா என்பது மேற்பக்க வாய் குறுகலாகவும் அடிப்பக்கம் அகலமாகவும் உள்ளவாறு மூங்கில் சிம்புகளால் இடைவெளி இல்லாமல் இணைத்துப் பின்னப்பட்ட கூடை. சிற்றாறுகளில் தண்ணீர் அதிக மில்லாமல் அளவாகச் செல்லும் காலங்களில் கரைப்பகுதியிலிருந்தவாறே சில நிமிடங்களில் தேவையான மீன்களைப் பிடித்துவிடும் எளிய வகையான மீன்பிடி முறை. நாற்பது ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஊத்தா பற்றித் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. தற்காலத்தில் மிகமிக அரிதாகிவிட்ட இம்மீன்பிடிமுறையை அறிந்துகொள்ள சி.எம்.முத்து வின் கதைகளைத் தேடிப் படிப்பதைத் தவிர தமிழ்ச்சமூகத்திற்கு வேறு மார்க்கமில்லை.

ஏழு முனிக்கும் இளைய முனி, காட்டேரி மதவு, பாம்புப்புத்து, ஆயிரங் கண்ணுடையாள் ஆகிய நான்கு கதைகளும் கிராமிய நம்பிக்கைகள், வழிபாடுகள் தொடர்புடையவை. ஆனால் இவற்றில் பேய், பிசாசு, அம்மன் வழிபாடுகளை மாற்றுக்கோணத்தில் அறிவியல் பார்வையோடும் இயல்பான கண்ணோட்டத்தோடும் வித்தியாசமாக அணுகுவதால் இவை தனித்த சிறப்பு பெறுகின்றன.

ஆதிக்க சாதி ஆண்கள் சேரிப்பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டுவதாலும் ஏமாற்றுவதாலும் அப்பெண்கள் இயலாமையில் வெம்புவதையும் தற்கொலையில் மடிவதையும் சில கதைகளில் காணமுடிகிறது. (ஞாயம் வேண்டும், போராட்டங்கள், மானங்காப்பான் மகன் ஆகிய கதைகள்).

பசியின் தாளமாட்டாத கொடுமையை, பச்சிளங் குழந்தை பாலுக்கழுதுகழுது கதறும் துடிப்பை, கண்கொண்டு காணச் சகிக்கவியலாத வறுமையை, மருத்துவம் செய்ய வழியற்று உயிர்கள் காவு போவதை, வாங்கிய கடனுக்காக அவமானப்பட்டுக் குறுகி நிற்பதை சில கதைகளில் சி.எம்.முத்து  காட்சிப் படுத்துகிற இடங்களில் அவ்வரிகளைக் கடப்பதற்கு இறுக்கமான மனம் வேண்டும். (கோடை, இனிக்கும் வாழ்வு, மழை, அம்மன் தேர், மண்டையன், கடைசி பஸ், செம்மறி ஆடே... செய்வது சரியா, குறை, முகவரி இல்லாத முகம் ஆகிய கதைகள்).

சாக்கடைக்கும்பியும் பழங்குப்பையுமாக பலவாறு குமட்டலெடுக்கும் சூழலில் கூடுதலாக மீந்துபோன கட்டக்கால் கறியை உப்புக்கண்டம் போட்டு வைத்திருப்பதால் குடலைப் பிடுங்கும் நாற்றமடிக்கும் வீட்டுச்சூழலோடு தொடங்குகிறது அம்முலு கதை. (தஞ்சை வட்டாரத்தில் மாட்டுக்கறியை பெரியாட்டுக் கறி என்றும் பன்றிக்கறியை கட்டக்கால் என்றும் சொல்லும் பழக்கம் இன்றும் உள்ளது.) இக்கதையில் நகரசுத்தித் தொழிலாளியின் முடைநாற்றமடிக்கும் வீட்டில் கணவன் மனைவி பிள்ளைகள் தூங்கி எழுந்து  காலைப்பசிக்கு டீயைக் குடித்துவிட்டு வேலைக்குப் புறப்படுவதில் தொடங்கும் கதை மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்குத் திரும்புகையில் உண்ண உணவுக்கு வழியின்றி பச்சைத் தண்ணீரைக் குடித்துவிட்டுத் திரும்பவும் வெட்டவெயிலில் குப்பை அள்ளும் வேலைக்குத் திரும்பவேண்டிய அவசர அவசியத்தை வாசிக்கிறபோது கண்ணீர் வழிகிறது. காலையிலும் பட்டினி. மதிய நேர வயிற்றுப்பசிக்கு டீத்தண்ணிக்குக் கூட வழியில்லாமல் அல்லாட்டத்தோடு தோட்டிக்குச்சியோடு தெருக்குப்பைகளைச் சுத்தம் செய்யும் அவர்களின் அவல வாழ்வை விலாவாரியாக விவரிக்கும் இக்கதை ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கதைத்தளத்தில் தனக்கான இடத்தை எட்டிவிடுகிறது.

ஏறத்தாழ ஐம்பதாண்டுகளுக்கு முன்பான காவிரி சமவெளிப்பகுதி உடல் உழைப்பாளிகளின் வாழ்வை முழுவதுமாக அறிந்துகொள்ள விரும்புபவர்கள் சி.எம்.முத்துவின் எழுத்துகளை வாசித்தாலே போதும்.

இவருக்கு முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் காவிரிக்கரையில் வசித்த மேட்டிமைச் சமூக மக்களின் வாழ்வியலை அம்மண்ணின் தன்மையோடு இணைத்துப் பதிவு செய்துள்ளனர். ஆனால் சி.எம்.முத்து தன்னுடைய சமூகம் சார்ந்த கதைமாந்தர்களை தன்னுடைய கதைகளில் முழுமையாகவும் நேர்மையோடும் உண்மையோடும் பாசாங்குகளும் பாவனைகளும் இல்லாமல் பதிவு செய்துள்ளார்.

அவரது கதைகளில்  அவர் தரிசித்த அம்மண்ணையும் மக்களையும் அச்சு அசலாக உலவ விட்டிருக்கிறார். இக்கதைகளின் முக்கியமானதும் நேர்த்தியானதுமான அம்சம் அதன் உண்மைத்தன்மை. இது குறித்து ‘ஒரு செடியில் இரு வேறு மலர்கள்‘ என்ற 1990ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த்தாய் இலக்கியப் பேரவை ஆண்டு மலரில் வெளியான கதையில் எழுதுகிறார்.

‘வெறும் ஜோடிப்பிற்காக எழுத்தை ஆள்வதும் அல்லது எழுத்தினுடைய ரசனைக்காக ஜோடிப்பை வலிந்து உண்டாக்குவதும் அதன் சுய பார்வை யினின்றும் விலகி நசிவிலக்கியங்களைப் படைத்து விடக்கூடும்.Õ

அதே கதையில் இன்னோரிடத்தில், ‘ரசிப்புக் காகத்தான் எழுத்து உற்பத்தி செய்யப்படுகிறதென்றால் அதைவிட கிச்சுகிச்சு மூட்டுகிற காரியங்களை செய்துகொண்டிருக்கலாம் என்று தோன்றுகிறது‘ என்று எழுதுகிறார். 

எழுத்தைப் பற்றி தீட்சண்யமும் தெளிவும் வெளிப்படும் சி.எம்.முத்துவின் வரிகள் இலக்கியம் குறித்த அவரது தன்னுணர்வை வெளிப்படுத்துகின்றன. ஜோடிப்பையோ நகாசு வேலைகளையோ ஏற்றுக் கொள்ளாத அவரது கலைமனம் உண்மையின் திசையிலிருந்து உண்மையை மட்டுமே பேசுவதால் அவரது படைப்புகள் உயர்ந்த ஸ்தானத்திற்குத் தன்னை உயர்த்திக்கொள்கின்றன.

சி.எம்.முத்துவின் நாவல்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்தமான அவரது எழுத்துகளை நுணுகிப் பார்க்கையில் அடிப்படையில் அவரொரு நாவலாசிரியரே என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. அவரது நாவல்களின் களமும் கட்டமைப்பும் நுட்பமான மொழிநடையும் கூர்மையும் அரிதான தன்மை கொண்டவை. அவரது சிறுகதைகளிலும் அத்தன்மைகளைக் காணமுடிகிறது என்றாலும் நாவல்களைப்போல சுதந்திரமான எழுத்துப் பாங்கிலிருந்து சற்றே விலகி தான் எழுதிச் செல்லும் சிறுகதைக்கு ஒரு முடிபு தந்திடவேண்டும் என்ற யத்தனிப்பின் காரணமாக சில கதைகள் முழுமை யடையாததைப் போன்ற தோற்றம் கொண்டுவிடுவதைக் காணமுடிகிறது. (உதாரணமாக ‘இனிக்கும் வாழ்வு‘ எனும் கதை அதன் வீரியப் போக்கிலேயே எழுதப்பட்டிருந்தால் எம்.வி.வியின் ‘பைத்தியக்காரப் பிள்ளை‘க்கு அணுக்கமான கதையாகப் பேசப் பட்டிருக்கும் சாத்தியம் ஏற்பட்டிருக்கும். விவாதத்துக்குரிய இவ்வம்சத்தை விரிவாகப் பேசவேண்டும்) ஆனால் இதையும் மீறி தமிழின் அரிய கதைத்தளங்களில் ஆகச்சிறந்த உச்சமான சில கதைகளை சி.எம்.முத்து எழுதியிருக்கிறார். இதுவரைத் தமிழ்ச்சிறுகதை உலகம் கண்டிராத தளங்களையும் மனிதர்களையும் காட்சிகளையும் அவரது கதைகள் அறிமுகம் செய்விக்கின்றன.

எல்லாக் கதைஞர்களும் எழுதுவதுபோல அவரும் அதிகப்படியாக மனிதர்களைத்தான் எழுதியிருக்கிறார். ஆனால் எந்தக் கண்ணாடி அணிந்து பார்த்தாலும் தமிழ் எழுத்துலகம் இதுவரை முன்வைத்திராத மனிதர்கள். தமிழக வேளாண்மை பூமியையும் அம்மனிதர்களின் அகப்புறப் பக்கங்களையும் அப்பட்டமாகக் கண்முன் விரித்துச் செல்கிறார்.

இவ்வாறெல்லாம் சிறப்பித்துப் பேசப்படுகிற அவ்வெழுத்து அவருக்கு எந்தளவுக்குப் பயனுடையதாக, அவரது வாழ்வுக்குத் துணை நிற்பதாக, அவரது குடும்பத்தைக் கரை சேர்ப்பதாக, அவரது எண்ணங்களுக்கும் விருப்பங்களுக்கும் அனுசரனை யானதாக இருக்கிறது என்பதை நோக்குகிறபோது எங்கள் காவிரிக்கரை எழுத்தாளரான எம்.வி.வெங்கட்ராம் எழுதியது நினைவுக்கு வருகிறது.

நீங்கள் எழுத்துத்துறைக்கு வர நேர்ந்தது என்ற கேள்வி குறித்து எம்.வி.வெங்கட்ராம், 

‘ஹிந்துவாகிய நான் ஊழை நம்புகிறவன். பல பிறவிகளில் செய்த தீவினைகளின் பயனாகத்தான் நான் தமிழ் எழுத்தாளனாகப் பிறக்க நேர்ந்தது. இலக்கியப் படைப்பாளிகளைத் தமிழகம் எவ்வளவு நேர்த்தியாகப் போற்றுகிறது. பாரதியார் காலணாதாசனாக வாழ்ந்த கதை உலகப்

புகழ் பெற்றுவிட்டது. வணங்காமுடியான புதுமைப்பித்தனை மண்ணில் புரட்டி, என்னைக் காப்பாற்றுங்கள் என்று அவரைக் கதற வைத்த பெருமையும் பிச்சமூர்த்தி, கு.ப.ரா. போன்றவர்களை அஞ்சுக்கும் பத்துக்கும் பஞ்சாய்ப் பறக்க வைத்த மகிமையும் இந்த மண்ணுக்கு உண்டு. வளமாகக் கலைஞன் வாழ்ந்தால் அவனுடைய படைப்பாற்றல் வற்றிப்போகும் என்கிற உண்மையைத் தமிழகம் நன்றாகத் தெரிந்து வைத்துள்ளது. பொருளாதார அந்தஸ்து வேண்டாம், இலக்கியப் படைப்பாளிக்குச் சமூக அந்தஸ்துகூட இங்கே கிடைக்கவில்லையே...‘

என்று நொந்துபோய் எழுதியிருக்கிறார். சற்றொப்ப இந்த வரிகளை எழுத்தாளர் சி.எம்.முத்துவுக்கும் பொருத்திப் பார்க்கலாம். அப்படியான வாழ்வும் இருப்பும்தான் இவருக்கும். எம்.வி.வெங்கட்ராம் போன்ற மாபெரும் கலைமேதையே தன் அந்திமத்தில் இப்படி அரற்ற நேர்ந்தது துரதிர்ஷ்டமானதுதான் என்றாலும் சி.எம்.முத்து எழுத்திலும், நேர்ப்பேச்சிலும், வேறு எந்தவிடத்திலும் இப்படியாக  ஆற்றாமையிலும் கழிவிரக்கத்திலும் எதனையும் கூற நேர்ந்ததில்லை என்பதே அவரது இலக்கியப் பிடிமானம். அவர்  எழுத்தின்வழி தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருக்கிற இடம் அபாரமானது. அசுரத்தனமானது. பிடிவாதமானது. அதில் லட்சிய வேட்கைகளோ, முனைப்புக்குறிக்கோள்களோ நெம்புகோள்களோ ஏதுமில்லை.

பாபநாசம், திருக்கருக்காவூர், சாலியமங்கலம், தஞ்சாவூர் என மிகச்சிறிய அவரது உலகம் போலவேதான் அவரது ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் மிகமிகச் சிறிய அளவிலானவையாகவே இருக்குமென அனுமானிக்கத் தோன்றுகிறது.

‘ஜாதகம்‘ என்ற கதையில் கும்பகோணத்து ஜனங்களைப் பற்றி ஓரிடத்தில் சி.எம்.முத்து எழுதியிருப்பார்.

‘‘கடவுள் இவர்கள் முன்னே தோன்றி நீர் ஒரு நிமிஷத்தில் சாகப் போகிறீர், கடைசியாய் உமது ஆசையைச் சொன்னால் நிறைவேற்றி வைப்பேன் என்பதாகச் சொன்னால் ‘வேறொன்றும் வேண்டாம் ஸ்வாமி, இதோ எங்கள் முன்னே இருக்கிற வெத்திலைப் பெட்டியும், கும்பகோணம் கொளுந்து வெத்திலையும் ஏஆர்ஆர் ஸ்பெஷல் சீவலும், அதே டிரேட் மார்க் வாசனை சுண்ணாம்பும், மைதீன் புகையிலையும் இன்னபிற லவங்கமும், வாசனைப் பாக்கும் வற்றாது கொடுத்துவிட்டால் போதும் எஜமானே ஐயன்மீரை தெண்டனிட்டு அனந்தகோடி நமஸ்காரம் பண்ணி இந்த நிமிஷமே உயிரை விட்டுவிடுகிறோம். மேல் லோகத்தில் எந்நாளும் போட்டுக்கொள்ள இதுமட்டும் வேண்டுமய்யா. மற்றபடிக்கு ஐயனை அருந்த பானங்களோ அன்ன ஆகாரங்களோ வேறெதுவுமோ கேட்கமாட்டோம் ஸத்தியமாய்‘ என்றுதான் வேண்டிக்கொள்வார்கள்.’’

அநேகமாக எழுத்தாளர் சி.எம்.முத்துவின் அதிகபட்ச ஆசையும் எதிர்பார்ப்பும் இதுபோன்ற ஒன்றாகவோ அல்லது இதுவேயாகவோ இருக்குமென நம்புவதற்கு வாய்ப்புகள் நிரம்பவே உண்டு.

இத்தனை காலமாக எவரையும் எதனையும் எதிர்பார்த்துக் காத்திருக்காமல் அங்கீகாரமாவது அந்தஸ்தாவது புகழாவது ஒன்றாவது என்று தன்போக்கில் எழுதிச் சென்றுகொண்டிருக்கும் சி.எம்.முத்து இன்றைய எழுத்தாளுமைகளில் முக்கியமானவராகக் கவனிக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

(14-9-2018 அன்று சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் சி.எம்.முத்துவின் சிறுகதைகள் குறித்து நிகழ்த்திய உரையின் எழுத்து வடிவம்.)

Pin It