சிற்றிலக்கியப் புலவரொருவர் ஒருமுறை செவ்வூர் என்னும் ஊருக்குச் சென்றார். நெடுந்தொலைவு நடந்தே வந்ததால் அவருக்கு பசிக்கத் தொடங்கி விட்டது. பெருமூச்சுடன் ஒரு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தார். அந்த வீட்டில் ஏராளமானவர்கள் நடமாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் திண்ணையின் பக்கம் திரும்பி அவரைப் பார்த்தபடி சென்றார்களே தவிர, ஒருவர் கூட அவருக்குப் பக்கத்தில் வந்து விசாரிக்கவில்லை. ஒரு வாய்வார்த்தையாகக்கூட சாப்பிடுகிறீர்களா என்று ஒருவரும் கேட்கவில்லை. அச்சூழலைக் கண்டு மிகவும் மனம் புண்பட்ட புலவர், வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தபடியே எரிச்சலில் ஒரு வெண்பாவைப் பாடினார்.

எவ்வூர்க்குப் போனாலும் எவ்வுலகம் சென்றாலும்

செவ்வூர்க்குச் செல்லமனம் செல்லாதே - அவ்வூரார்

பார்த்திருக்க உண்பார், பசித்தோர் முகம் பாரார்,

கோத்திரத்துக் கேற்ற குணம்

அதுவரைக்கும் தத்தம் போக்கில் நடமாடிக் கொண்டிருந்த வீட்டு மனிதர்கள் பாட்டுச் சத்தத்தைக் கேட்டு ஓடோடி வந்தனர். பிழை நிகழ்ந்து விட்டதை அப்போதுதான் உணர்ந்தனர். பாடல் வரிகள் ஒரு சாபமாக மாறிவிடக் கூடாது என அஞ்சினர். அவருடைய காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர். உடனே அவர் உணவு உண்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். மீண்டும் புலவரின் காலில் விழுந்து பாடலை மாற்றிப் பாடும்படி கேட்டுக் கொண்டனர். வயிறார உண்டு முடித்த புலவர் மனம் குளிர்ந்து, அதே பாடலை வேறு வகையில் அமைத்து அவர்களிடம் பாடிக் காட்டினார்.

எவ்வூர்க்குப் போனாலும் எவ்வுலகம் சென்றாலும்

செவ்வூர்க்குச் செல்ல மனம் செல்லுமே - அவ்வூரார்

பார்த்திருக்க உண்ணார், பசித்தோர் முகம் பார்ப்பார்,

கோத்திரத்துக் கேற்ற குணம்

அதற்குப் பிறகுதான் அந்த வீட்டு மனிதர்கள் அமைதியடைந்தனர். இப்படி ஒரு செவிவழிக்கதையும் இரு பாடல்களும் எப்படியோ நிலைத்து விட்டன. அந்தப் புலவர் வாழ்ந்த காலம் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும். அவர் பெயர் பாடுவார் முத்தப்பர். சிற்றிலக்கிய மரபைச் சேர்ந்தவர்.

இந்த அளவுக்குத்தான் நம் பொதுவெளியில் விவரங்கள் தெரிந்திருக்கிறதே தவிர, மற்ற செய்திகள் எதுவும் தெரியாது. வளவ.துரையன் தனக்கே உரிய ஆர்வத்தின் காரணமாக முத்தப்பரைப் பற்றிய தகவல்களைத் தேடித் திரட்டி ஒரு கட்டுரையாக எழுதியிருக்கிறார். அவருடைய கட்டுரைத் தொகுதியின் முதல் கட்டுரையே முத்தப்பரைப் பற்றிய கட்டுரைதான்.

முத்தப்பர் பெரிய முருக பக்தர். குன்றக்குடி முருகன் பதிகம், பழநியாண்டவர் பதிகம் என இரு நூல்களை எழுதியவர். ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழியை இணைத்துப் பாடிய செயங்கொண்டார் சதகம் என்னும் நூல் முக்கியமான படைப்பாக இலக்கிய ஆர்வலர்களால் மதிப்பிடப்படுகிறது. இவையெல்லாம் புதிய தகவல்கள். தன் முயற்சியால் வளவ. துரையன் அவற்றையெல்லாம் திரட்டித் தொகுத்து முத்தப்பரைப் பற்றிய கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார்.

முத்தப்பரைப்போல முப்பத்துநான்கு ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகளோடு தடம்பதித்த தமிழர்கள் என்ற தலைப்பில் நூலாக்கியிருக்கிறார் வளவ.துரையன். சுருக்கமும் செறிவும் கொண்ட ஒவ்வொரு கட்டுரையும் குறிப்பிட்ட ஆளுமையை நம் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்துகிறது. தமிழில் பயண இலக்கியத்தைத் தொடங்கிவைத்த படகாலு நரசிம்மலு நாயுடு, நாடகத்தந்தை என போற்றப்படும் சங்கரதாஸ் சுவாமிகள், சுதந்திரப்போராட்ட வீரராகவும் வழக்கறிஞராகவும் விளங்கிய சோமசுந்தர பாரதியார், மொழிபெயர்ப்பாளரான த.நா.குமாரசாமி, பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய வ.ரா., நாவலாசிரியரும் விமர்சகரும் மொழிபெயர்ப்பாளருமான க.நா.சுப்பிரமணியம், சுதந்திரப் போராட்ட வீரராகவும் நாவலாசிரியராகவும் விளங்கிய வை.மு.கோதைநாயகி அம்மாள், கலைக்களஞ்சியத்தை உருவாக்கிய பெ.தூரன், குன்றக்குடி அடிகளார், குழந்தைக் கவிஞர் வள்ளியப்பா, இசைக்குயிலாக நம்மிடையே வாழ்ந்து மறைந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி என பல அரிய ஆளுமைகள் இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள். ஒவ்வொரு கட்டுரையும் ஓர் ஆளுமையைப் பற்றி வெளியுலகம் இதுவரை அறிந்த தகவல்களுக்கு அப்பால் புதிய தகவல்களோடு எழுதப்பட்டிருக்கிறது. இதுவே இத்தொகுதியின் முதன்மைச் சிறப்பு.

தியாகராசர் என்னும் பெயரைப் படித்ததுமே நம் நினைவுக்கு வருவது மதுரை தியாகராசர் கல்லூரி. அது அவரால் உருவாக்கப்பட்டது. அதற்கு அப்பால், அவரைப் பற்றிய முழுச் சித்திரத்தையும் அறிந்துகொள்வதற்கு நம் சூழலில் இடமில்லை. வளவ. துரையன் நாம் அறிந்திராத அத்தகவல்களைத் திரட்டி ஒரு கட்டுரையாக எழுதியிருக்கிறார்.

தியாகராசர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்றபோதும் தொடக்கப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் சமயத்திலேயே தந்தையை இழந்த காரணத்தால், அவருடைய உறவினர்களின் ஆதரவைத் தேடி இலங்கைக்குச் சென்றார். அங்கிருக்கும் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து பள்ளியிறுதி வரைக்கும் படித்து முடித்தார். பிறகு ‘மார்னிங் லீடர்’ என்னும் ஆங்கிலப் பத்திரிகையில் 1914இல் பணிபுரிந்தார். அந்தக் காலகட்டத்தில் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிவதற்காக தமிழகத்திலிருந்து அழைத்துச் செல்லப்படும் தமிழர்கள் தடுப்புக்காவல் முகாமில் முதலில் நிறுத்தி வைக்கப்படுவதும் நோய்த்தடுப்பு ஊசி போடுவதும் ஒரு வழக்கமாகக் கடைபிடிக்கப்பட்டு வந்தது. நோயற்றவர்கள் என உறுதி செய்து கொள்வதற்காக அந்த முகாமிலேயே குறிப்பிட்ட நாட்கள் வரைக்கும் சிற்றறைகளில் தங்க வைக்கப்பட்டனர். பிறகு, அவ்வாறு உறுதி செய்யப்பட்டவர்கள் என்பதற்கான அடையாளமென சூட்டுக்கோலால் ஒரு வடுவை ஏற்படுத்தினர். அதற்குப் பிறகே வேலைகளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்தக் காலத்தில் அதுதான் வழக்கமாக இருந்தது.

தமிழர்களுக்கு மட்டுமே இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆங்கிலேயர்களுக்கு அவ்விதமான எந்த நெருக்கடிகளும் இல்லை. இந்த வேறுபாட்டைச் சுட்டிக்காட்டி தியாகராசர் தம்முடைய பத்திரிகையில் ஏராளமான கட்டுரைகளை எழுதினார். பிறகு அவற்றையெல்லாம் தொகுத்து ஒரு நூலாகவும் கொண்டு வந்தார். அரசு கடைபிடிக்கும் வேறுபாடுகள் சுட்டிக் காட்டப்பட்டதும், அவற்றை நீக்கவேண்டிய நெருக்கடி அரசுக்கு ஏற்பட்டது. முற்றிலும் நீக்கவில்லை என்றபோதும் கருத்தில் எடுத்துக்கொண்டோம் என்று காட்டிக் கொள்வதற்காவது சில நடவடிக்கைகளை அரசு எடுத்தது. அதுவே மக்களின் துயரத்தை பெருமளவு குறைத்தது. தியாகராசரின் முன்முயற்சி போற்றுதற்குரியது.

1916இல் தியாகராசர் தமிழ்நாட்டுக்குத் திரும்பிவந்தார். தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் துணி ஆலைகளைத் தொடங்கி நடத்தினார். 1921இல் மதுரைக்கு வருகை புரிந்த காந்தியடிகள் தியாகராசரின் விருந்தினராகத் தங்கியிருந்தார். அவருடைய வீட்டில் தங்கியிருந்த சமயத்தில்தான் அவர் அரையாடையுடன் வாழும் முடிவை எடுத்தார். விடுதலைக்குப் பிறகு கல்வியைப் பரவலாக்கும் பொருட்டு பல கல்லூரிகளையும் பள்ளிகளையும் உருவாக்கினார். திருக்குறள் நெறியைப் பரப்பும் வகையில் குறள்நெறி என்னும் மாத இதழைத் தொடங்கி நடத்தித் வந்தார்.

தியாகராசரைப்போலவே அவருடைய மனைவியான இராதா அம்மையாரின் வாழ்க்கையும் வாசகர்கள் அறிந்துகொள்ளவேண்டிய ஒன்றாகும். திருமணத்துக்குப் பிறகே அந்த அம்மையார் எழுத்து கூட்டிப் படிக்கத் தொடங்கினார். ஔவை துரைசாமிப் பிள்ளையிடம் தமிழ்க் கல்வி பெற்றார். தன் தீவிரமான ஆர்வத்தின் காரணமாக அவர் வெகுவேகமாக எல்லாவற்றையும் கற்றார். நற்றிணைக்கு உரை எழுதும் அளவுக்கு அவர் தேர்ச்சி கொண்டவராக இருந்தார். திருவாசகத்தை முன்வைத்து ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார். அரிச்சுவடியில் தொடங்கி முனைவர் பட்டம் வரைக்கும் சென்று வெற்றி பெற்றதற்கு அவருடைய ஆர்வமும் உழைப்பும்தான் காரணங்கள். முயற்சி செய்தால் முடியாதது என உலகில் எதுவுமில்லை என்பதற்கு இராதா அம்மையாரின் வாழ்க்கையே நல்ல எடுத்துக்காட்டு. வளவ. துரையன் கட்டுரை தியாகராசரைப் பற்றி ஒரு முழுமையான சித்திரத்தை அளிக்கிறது.

வளவ. துரையன் குறிப்பிட்டிருக்கும் மற்றொரு முக்கியமான புலவர் கார்மேகக் கோனார். அவர் பேரூருக்கு அருகில் உள்ள அகத்தார் இருப்பு என்னும் சிற்றூரில் பிறந்தவர். அவருடைய தந்தையார் ஆயர்பாடிக் கோனார். அந்த ஊரிலேயே இருந்த தொடக்கப் பள்ளியில் மகனைப் படிக்க வைத்தார் அவர். மகனை உயர்படிப்பு படிக்கவைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஆயர்பாடிக் கோனார், மகனை அழைத்துக் கொண்டு மதுரை தமிழ்ச் சங்கத்துக்குச் சென்றார். மதுரை தமிழ்ச் சங்கத்தை நடத்தி வந்த செந்தமிழ்க் கல்லூரியின் முதல்வரைச் சந்தித்து தன் மகனைச் சேர்க்க வந்திருக்கும் செய்தியைச் சொன்னார். முதல்வர் சிறுவனின் ஆர்வத்தைச் சோதிக்கும் விதமாக ஏதேனும் ஒரு தமிழ்ப் பாடலைச் சொல்லும்படி கேட்டுக் கொண்டார். உடனே ஔவையார் எழுதிய பாலும் தெளிதேனும் பாடலைப் பாடினார் மாணவர். அவர் பதம் பிரித்துப் பாடிய விதத்தையும் தமிழின் உச்சரிப்பையும் கேட்டு மகிழ்ந்த முதல்வர் அவருக்கு உடனே பள்ளியில் இடம் கொடுத்துவிட்டார். இலக்கண இலக்கியங்களில் இயல்பாகவே ஆர்வம் கொண்டிருந்த கார்மேகக்கோனார், எல்லா வகுப்புகளிலும் முதல் நிலையில் தேறி, இறுதித் தேர்வில் பாண்டித்துரைத் தேவரிடம் தங்கப் பதக்கம் பெற்றார்.

ஒருமுறை அவர் அமர்ந்திருந்த வகுப்பில் பாடம் நடந்து கொண்டிருந்தபோது வகுப்பைப் பார்வையிடுவதற்காக உ.வே.சா. வந்தார். வகுப்பில் அழகர் கலம்பகம் என்னும் பாடல் பகுதியை ஆசிரியர் கற்பித்துக் கொண்டிருந்தார். உ.வே.சா, மாணவராக இருந்த கார்மேகக் கோனாரிடம் கலம்பகத்திலிருந்து ஒரு பாடலைக் கூறுமாறு கேட்டார். உடனே சற்றும் தயங்காமல் கோனார் கலம்பகத்தில் தனக்குப் பிடித்தமான ஒரு பாடலைப் பாடினார். அவருடைய பாடும் நேர்த்தியால் கவரப்பட்ட உ.வே.சா, அப்பாடலில் இடம்பெற்ற ஒரு வரியைக் குறிப்பிட்டு அதன் நயத்தைக் கூறுமாறு சொன்னார். கார்மேகக் கோனாரும் தனக்குத் தெரிந்த நயத்தைத் தெளிவுபட எடுத்துரைத்தார். மனம் மகிழ்ந்த உ.வே.சா, அம்மாணவரைப் பாராட்டி விட்டுச் சென்றார்.

சில ஆண்டுகள் கழிந்தன. மதுரையில் இருந்த அமெரிக்கன் கல்லூரியில் தமிழாசிரியர் பணியிடத்தை நிரப்புவதற்காகக் கல்லூரி முதல்வர் விளம்பரம் அளித்திருந்தார். எண்ணற்ற தமிழ்ப்புலவர்கள் அப்பதவிக்கு விண்ணப்பித்திருந்தனர். கார்மேகக் கோனாரும் அவர்களில் ஒருவர். கல்லூரி முதல்வர் எல்லா விண்ணப்பங்களையும் கொண்டுசென்று உ.வே.சா.விடம் அளித்துவிட்டு தகுதியானவரைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். விண்ணப்பங்களைப் புரட்டிப் பார்த்த உ.வே.சா, அத்தொகுதியில் கார்மேகக்கோனாரின் பெயரைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார். அப்பதவியில் இணைந்த கார்மேகக்கொனார் முப்பத்தேழு ஆண்டுக்காலம் அக்கல்லூரியிலேயே பணியாற்றி ஓய்வு பெற்றார்.

இயல்பான தமிழார்வம் ஒருவரை வாழ்க்கையில் எந்த அளவுக்கு உயர்த்தும் என்பதற்கும் தமிழிலக்கியப் பாடல்கள் ஒருவரை மதிப்பிட எப்படியெல்லாம் உதவும் என்பதற்கும் கார்மேகக்கோனாரின் வாழ்க்கை நல்லதொரு எடுத்துக்காட்டாகும்.

வளவ.துரையன் குறிப்பிட்டிருக்கும் இன்னொரு ஆளுமை வல்லிக்கண்ணன். இளமையில் படிக்கக் கிடைத்த மணிக்கொடி இதழ்கள் வழியாக இலக்கியத்தின்பால் ஈர்க்கப்பட்டவர் அவர். பள்ளிப் படிப்பை முடித்திருந்த அவருக்கு 1937இல் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வேளாண்மைத்துறை அலுவலகத்தில் எழுத்தர் வேலை கிடைத்தது. ஓய்வுப் பொழுதை வாசிப்பதிலும் எழுதுவதிலும் செலவழித்தார். அவர் எழுதிய சந்திரகாந்தக்கல் என்னும் சிறுகதை அப்போது பிரசண்டவிகடன் பத்திரிகையில் வெளிவந்தது. அதை அறிந்த அவருடைய மேல் அதிகாரி அவரை அழைத்து அரசுப்பணியில் இருப்பவர்கள் உயரதிகாரிக்குத் தெரிவிக்காமல் எந்தப் பத்திரிகையிலும் எழுதக்கூடாது என்றும் ஒவ்வொரு முறையும் எழுத்துமூலம் மேலிடத்தின் அனுமதி பெற்ற பிறகே எழுத வேண்டும் என்றும் தெரிவித்தார். அதிகாரியின் கண்டிப்பான குரல் வல்லிக்கண்ணனுக்குச் சோர்வை அளித்தது.

நான்காண்டுகள் வரைக்கும் எப்படியோ அந்த வேலையில் தாக்குப்பிடித்து வந்த வல்லிக்கண்ணன், ஒரு கட்டத்தில் அந்த வேலையை உதறிவிட்டு வெளியேறினார். நான்காண்டு காலம் நெல்லை, காரைக்குடி, புதுக்கோட்டை, துறையூர் என பல ஊர்களில் அலைந்து, பல இதழ்களில் வேலை செய்த பிறகு கடைசியில் சென்னைக்குச் சென்றார். இறுதி வரைக்கும் எழுத்தாளராகவே வாழ்ந்தார்.

வளவ.துரையனின் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் மற்றொரு தமிழறிஞர் பெரியசாமித்தூரன். தமிழில் குழந்தைகள் கலைக்களஞ்சியத்தை முதன்முதலாக உருவாக்கியவர். அவர் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இந்திய சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளை ஆர்வத்துடன் கவனிப்பவராக இருந்தார். 1931இல் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட செய்தியை அறிந்ததும் இறுதியாண்டுப் படிப்பைக்கூட முடிக்காமல் கல்லூரியை விட்டு வெளியேறினார். சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றார். சிறையிலிருந்து விடுதலையானதும் அவினாசிலிங்கம் செட்டியார் தொடங்கி நடத்திவந்த பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அங்கு வந்து தங்கியிருந்த காந்தியடிகளை வரவேற்கும் வாய்ப்பையும் பெற்றார். தமிழிசையின்பால் நாட்டம் கொண்டிருந்த தூரன் பாடுவதற்கு இசைவாக ஏராளமான பாடல்களைப் புனைந்தார். அவை அனைத்தும் எட்டுத் தொகுதிகளாக வெளிவந்துள்ளன. சிறுவர்களுக்கான பல நூல்களையும் சில அறிவியல் நூல்களையும் எழுதினார். பாரதியார் பற்றி அவர் எழுதிய ஆய்வுநூல்கள் மிகமுக்கியமானவை. சுதேசமித்திரன் இதழில் வெளிவந்த பாரதியாரின் படைப்புகளை முதன்முதலாகத் தொகுத்து வெளியிட்டார்.

ஆங்கிலத்தில் வெளிவந்த ரீடர்ஸ் டைஜஸ்ட் ஏனும் இதழைப்போல தமிழில் வெளிவந்த ஒரு மாத இதழ் மஞ்சரி. அதன் ஆசிரியர் பொறுப்பில் இருந்து அப்பத்திரிகையை வாசகர்களிடையில் பரவலாக்கியவர் தி.ஜ.ர. அவரைப் பற்றிய கட்டுரையும் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளது. கர்ணமாக வேலை பார்த்து வந்த தன் தந்தையாரோடு ஊரூராகச் செல்ல வேண்டிய நெருக்கடியின் காரணமாக, நீண்ட காலம் அவரால் கல்வி கற்கமுடியாமல் போய்விட்டது. இளைஞரானதும் அவரும் கர்ணமாக வேலை பார்த்தார். சமரசபோதினி, ஊழியன், சுதந்திரச்சங்கு, ஜயபாரதி, ஹனுமான், சக்தி போன்ற இதழ்களில் துணையாசிரியராகப் பணிபுரிந்தார். அதற்குப் பிறகு மஞ்சரி இதழில் ஆசிரியராக இருந்தார். சிறுகதையாசிரியராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கினார். அவருடைய மொழிபெயர்ப்பில் வெளிவந்த லூயி ஃபிஷரின் மகாத்மா காந்தியடிகளைப் பற்றிய நூல் இன்றளவும் பல தலைமுறைகளாகத் தொடர்ந்து வாசிக்கப்பட்டு வருகிறது. தி.ஜ.ர. மிகச்சிறந்த கட்டுரையாசிரியர்.

கடந்த நூற்றாண்டின் ஐம்பதுகளிலேயே திருக்கோயில்களில் தமிழிலும் அர்ச்சனை நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஒரு சமூக உரையாடலைத் தொடங்கியவர் குன்றக்குடி அடிகளார். சைவ மடாதிபதியாக இருந்தபோதும் சமய வேற்றுமை பாராமல் அனைவரோடும் அன்போடு பழகும் பண்பை உடையவர் அவர். திருமடத்தில் அனைத்து வகுப்பினரையும் அனுமதித்ததோடு பணிகளிலும் அமர்த்தினார். அருள்நெறிக்கூட்ட அன்பர்கள் அனைவரும் தத்தம் பெயருக்குப் பின்னால் சாதிப்பெயரை இணைக்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார். கல்விக் கூடங்களை அமைத்தல் என்பது அரசின் கடமை மட்டுமில்லை என்று கருதிய அடிகளார் தெய்வீகப்பேரவை வழியாகவும் பல அறக்கட்டளைகள் வழியாகவும் பல கல்வி நிலையங்களை உருவாக்கினார். வளவ.துரையனின் விரிவான கட்டுரை அடிகளாரின் ஆளுமைப் பண்பை உணர்ந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

பெரும்பாலான பாடகர்கள் தெலுங்கில் பாடுவதற்கு விரும்பியிருந்த காலகட்டத்தில் இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பல மேடைகளில் தொடர்ந்து தமிழ்ப்பாடல்களைப் பாடி அரங்கத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். ஒருமுறை தேவகோட்டை என்னும் மாநாட்டில் தமிழிசை மாநாடு நடைபெற்றது. மற்ற பாடகர்கள் அனைவரும் ஒன்று அல்லது இரண்டு பாடல்களை மட்டும் தமிழில் பாடிய சூழலில், எம்.எஸ். அவர்கள் நிகழ்ச்சி முழுதும் தமிழ்ப் பாடல்களை மட்டுமே பாடி தமிழிசை இயக்கத்துக்கு தன் ஆதரவைத் தெரிவித்தார். சேவாகிராமத்தில் காந்தியடிகளின் ஆசிரமத்தில் அவர் முன்னிலையிலேயே பிரார்த்தனைக் கூட்டத்தில் எம்.எஸ். பாடியிருக்கிறார். நவகாளியிலிருந்து திரும்பி வந்து தில்லியில் தங்கியிருந்த சமயத்திலும் காந்தியடிகள் முன்னிலையில் பாடியிருக்கிறார்.

தம் இசை நிகழ்ச்சிகள் வழியாகக் கிடைத்த செல்வத்தையெல்லாம் எம்.எஸ். பிறருக்காகவே செலவிட்டார். சென்னை கிண்டியில் கட்டப்பட்ட காந்தி மண்டப நிதிக்காக சில சிறப்பு இசை நிகழ்ச்சிகள் செய்து, அப்போது திரட்டிய தொகையை அப்படியே நன்கொடையாகக் கொடுத்தார். 1849இல் தில்லியில் தமிழ்ப்பள்ளி ஒன்றை ஏற்படுத்தவும் 1953இல் ராமகிருஷ்ணா மிஷன் நிதிக்காகவும் 1956இல் சங்கீத வித்வத் சபைக் கட்டட நிதிக்காகவும் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். தில்லியில் கமலா நேரு மருத்துவமனையைக் கட்டுவதற்கான நிதித்தேவைக்காகவும் எட்டயபுரத்தில் பாரதி நினைவுச் சின்னம் எழுப்புவதற்கான நிதிக்காகவும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இசைத்தட்டுகளின் வழியாகக் கிடைக்கும் உரிமைத் தொகையை முழுவதுமாக ஆலயங்களுக்கே செல்லும் வகையில் தகுந்த ஏற்பாடுகளைச் செய்தார்.

பொதுப்பார்வைக்கு வராத பல தகவல்களைத் திரட்டித் தொகுத்திருக்கும் வளவ.துரையனின் முயற்சி பாராட்டுக்குரியது. ஒரு வாசகர் தனித்தனியாக இருபது முப்பது புத்தகங்களைப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டியவற்றை இந்த ஒரு புத்தகத்தின் வழியாகவே தெரிந்து கொள்ள முடியும்.

(தடம் பதித்த தமிழர்கள். வளவ.துரையன். அனன்யா பதிப்பகம், 8/37, பி.ஏ.ஒய்.நகர்., குழந்தை இயேசு கோவில் அருகில், புதுக்கோட்டை சாலை, தஞ்சாவூர் -613005).

- பாவண்ணன்