தோழர் ஊ. பு. அ. சௌந்திர பாண்டியன் எம். எல். சி. அவர்களது அருமைத் தந்தையார் பட்டிவீரன்பட்டி, பழமையான பிரபல குடும்பஸ்தரும் பெரும் புகழ் பெற்றவரும் சமூகத்திற்கே நாயகமாய் இருந்து சமூக சமதர்மத் துக்கு வெகுகாலமாகவே போராடிக் கொண்டிருந்த வருமான தோழர் ஊ. பு. அய்ய நாடார் அவர்கள் காயலாவாய் இருந்து 18 தேதி இரவு 10 மணிக்கு காலம் சென்றார் என்ற சேதியைக் கேட்டு வருந்துகின்றோம்.

தோழர் அய்ய நாடார் அவர்கள் தென்னாட்டில் சமூக சீர்திருத்த முயற்சிகள் ஏற்படுவதற்கு முன்பும் சுயமரியாதை இயக்கம் தோன்றுவதற்கும் முன்பு இருந்தே சகல சமூகமும் ஒன்றுபட வேண்டும் என்றும், உயர்வு தாழ்வு கூடாதென்றும் போராடி வந்ததுடன் மூடப் பழக்கவழக்கங்களையும், திதி திவசம் போன்ற பார்ப்பன சூழ்ச்சிகளையும் அறவே வெறுத்து பிரசாரம் செய்து வந்தவர்களுமாவர். அது மாத்திரமல்லாமல் சுயமரியாதை இயக்கத்திற்கும் அது தோன்றிய காலமுதல் குடும்பத்துடன் சுற்றத்தாருடன் ஒத்துழைத்து அதற்கு அளவு கடந்த ஆதரவு அளித்து வந்தவருமாவார். இப்படிப்பட்ட பெரியார் தனது 60 வயதில் அருமை மனைவியாரையும் கண்கள் போன்ற மக்களாகிய தோழர் சௌந்திரபாண்டியன், ரங்கசாமி மற்றும் சகோதரிகளான பெண் மக்களையும் விட்டு மறைந்தது மிக்க பரிதாபகரமான விஷயமாகும்.

அவரது மக்கள் யாவரும் இயற்கையை உணர்ந்த மதிவள்ளல்கள். ஆனதால் அன்னியரின் தேறுதலும் ஆறுதலும் தேவை இருக்காது என்றே கருதுகிறோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 27.11.1932)