pothireddy 350மார்க்சிய அறிவுச் சுடராகத் திகழ்ந்த அறிஞர், பேராசிரியர் செ.போத்திரெட்டி அவர்கள் கடந்த (10.05.2021) அன்று மதுரையில் அவரது இல்லத்தில் காலமானார். இவர் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள “சந்திரகிரி” என்னும் சிற்றூரில் வசதியான வேளாண் குடும்பத்தில் பிறந்தவர்.

மதுரைத் தியாகராசர் கல்லூரியில் இளங்கலைத் தமிழிலக்கியம் பயின்றபோது மாணவர் பெருமன்றத்தில் இணைந்து செயல்பட்டார். தோழர் கே.டிகே.தங்கமணியுடன் நெருக்கமாக இருந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழிலக்கியம் பயின்றபோது, அங்கு உருவான மாணவர் போராட்டத்தில் தலைமையேற்று செயல்பட்டார். அக்காலத்தில் மக்கள் பதிப்பக உரிமையாளர் தோழர் மே.து.ராசுகுமார் அவருடன் இருந்தார்.

பின்னர் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். புகுமுக வகுப்புப் பிரிவு நிறுத்தப்பட்டபோது மறு பணியமர்த்தலில் 1980ஆம் ஆண்டு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பேராசிரியராகச் சேர்ந்தார். அப்போது நான் இளங்கலை தமிழ் இலக்கியம் இரண்டாமாண்டு படித்துகொண்டிருந்தேன்.

வெற்றிலை போட்டுச் சிவந்த நாக்கு, பொடிச் சிதறல் அரும்பியிருக்கும் மூக்கு, தடிமனான கண்ணாடி பிரேம், கைநிறைய புத்தகங்கள் இப்படித்தான் அவர் வகுப்புக்குள் வருவார். ஈழத்துப் பேராசிரியர்கள் க.கைலாசபதி, கா.சிவத்தம்பி ஆகியோர்களின் நூல்கள் வழி மாணவர்களிடம் மார்க்சியச் சிந்தனைகளைக் கொண்டு சேர்த்தார். என்னைப் போன்று பேராசிரியர் சண்முகபாரதி, எழுத்தாளர்.சு.வேணுகோபால், பேராசிரியர் உ.அலிபாவா, உள்ளிட்ட மாணவர்கள் பலரை உருவாக்கினார்.

பாரதி மீது மாறாப் பற்றுக் கொண்டவர். பல அரிய தகவல்களைத் துப்பறிந்து திரட்டுவதிலும் பழைய நூல்களைச் சேகரிப்பதிலும் தணியாத ஆர்வம் கொண்டிருந்தார். தமிழ் இலக்கியம், மார்சியம் தொடர்பான நூல்களை தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தார்.

குறிப்பாக தமிழ் குறித்து புதிய கண்ணோட்டத்தோடு மேனாட்டார் எழுதிய ஆங்கில நூல்களை சேகரிப்பதிலும், வாசிப்பதிலும் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் நூல்களை வாசிக்கும் ஒரு இயந்திரமாகவே திகழ்ந்தார். வாங்கிய நூல்களைப் படிக்காமல் பாதுகாப்பாக வைக்கமாட்டார். நூல்களை யாருக்கும் எளிதில் இரவல் தரமாட்டார்.

இவ்விசயத்தில் ‘பாத்திரம் அறிந்து பிச்சையிடு’ என்ற பழமொழியைக் கறாராகக் கடைபிடிப்பவர். “அறிவு தரும் நூல்களே என் சொத்து இச்சொத்து என்னிடமே இருக்க உதவுங்கள்” என்கிற ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை அவர் சேமித்த எல்லா நூற்களின் முதல் பக்கத்தில் இருக்கும்.

ஈழத்து இலக்கியத்தை “அயலக இலக்கியம்” என்ற பெயரில் தமிழ்நாட்டுத் தமிழ் இலக்கியப் பாடத்திட்டத்தில் சேர்த்த பெருமைக்குரியவர் பேராசிரியர் செ.போத்திரெட்டி. அந்தனி ஜீவா, டொமினிக் ஜீவா, செ.கணேசலிங்கன், மறவன்புலவு சச்சிதானந்தம், பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி ஆகிய ஈழத்து இலக்கிய ஆளுமைகளுடன் நெருக்கமாக இருந்தார்.

பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் சங்க இலக்கியம் குறித்த ஆங்கில நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார். தமது எம்.ஃபில் பட்டத்திற்குத் தனுஷ்கோடி புயல் பாடல்களைச் சேகரித்து ஆய்வுசெய்து நூலாக்கினார். சமூகத் துயரப் பாடல்கள் என்று புதுவகைப்படுத்தி தனது ஆய்வைச் செய்தார்.

“இந்தியா” பத்திரிகையின் அதிபர் ஜி.சுப்பிரமணிய ஐயர் குறித்து முனைவர்ப் பட்ட ஆய்வு செய்வதற்காக ஏராளமான குறிப்புகளைத் திரட்டினார். ஆனால் முடிக்க இயலவில்லை. பாரதியார் இந்தியா பத்திரிகையில் எழுதிய கட்டுரைகள் குறித்த சிறு ஆய்வு நூலொன்றை வெளியிட்டார்.

மேலும் பழமையின் சிறுமதியும் புதுமையின் பெருமதியும், (பாரதி - உ.வே.சா.) பாரதியும் நாராயணகுருவும், பாரதியின் பெல்ஜியத்திற்கு வாழ்த்து முதலான பாரதி குறித்த ஏராளமான ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். ஈழத்தறிஞர் ச.பவானந்தம் பிள்ளை தொகுத்த, “பவானந்தர் தமிழ் அகராதி” அவரது முயற்சியால் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் வெளியீடாக வந்துள்ளது.

அவரது காவியேறிய பற்கள் தெரியும் வெடிச் சிரிப்பை இனிக் காண முடியாது. ஆனந்தத்தில் தோள்மீது தட்டும் அவரது செல்லத் தட்டை இனிப் பெற முடியாது. கொரோனா பெருந்தொற்று இன்னும் எத்தனை அறிவுச் சுடர்களை அணைக்கக் காத்திருக்கிறதோ?

- பா.ஆனந்தகுமார்

Pin It