மேலை இலக்கியத் திறனாய்வுக் கொள்கைகளின் தாக்கத்தினால் தமிழிலக்கியத் திறனாய்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், பல்வேறு பரிமாணங்களுடன் இன்று விரிவடைந்துள்ளன.
அறிவியல் வளர்ச்சி காரணமாகத் தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள மேம்பாடுகள், தகவல் உருவாக்கம், தகவல் வெளியீட்டின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தியுள்ளன.
புறநிலைக் காரணங்களினால், செவ்வியல் இலக்கியப் பிரதியானது, புதிய பொருள் தரும் வகையில் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. பொதுக் கருத்தியலை உருவாக்கும் வகையில் செய்தி நிறுவனங்கள், அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் போன்ற தகவல் தொடர்பு அமைப்புகள், ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.
கல்லூரிகளில் தமிழ் படிக்கிறவர்களின் எண்ணிக்கை கடந்த சில பத்தாண்டுகளில் பன் மடங்கு பெருகியுள்ளதால், தமிழாய்வில் வீச்சான எழுச்சி தோன்றியுள்ளது. இன்று அகலமாகவும், ஆழமாகவும், செயற்படும் தமிழாய்வின் பரப்பு, அண்மைக்காலத்தில் இளம் ஆய்வாளரின் பார்வைப் புலனுக்கு அப்பால் பரந்துள்ளது.
ஆய்வு மேற்கொள்ள முதன்மைச் சான்றுகள், துணைமைச் சான்றுகள், தரவுகள், ஆய்வு மூலங்கள், புள்ளி விவரங்கள் சேகரித்தல் போன்றவை விரிவடைந்துள்ளன. இத்தகு சூழலில் போதிய நூலக வசதியின்மை, நூலகம் பற்றிய அறியாமை காரணமாக ஆய்வாளர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள் அல்லல்படும் நிலையேற்பட்டுள்ளது.
அறிவியல், தொழில்நுட்பத்துறைகளுடன் ஒப்பிடுகையில் கலைத்துறைகளில் தகவல் வெளியீடு மிகக் குறைவெனினும், தகவல் சேகரிப்பும் பதிவும் இன்னும் முறைப்படுத்தாமலே உள்ளன.
குறிப்பாகத் தமிழ் தொடர்பான ஆவணங்களை இன்னும் முறையாகச் சேகரித்தல், பதிவு செய்தல் நடைபெறவில்லை. இன்று தமிழ் நூல்களும் பத்திரிகைகளும் ஸ்ரீலங்கா, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மொரிஷியல், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து வெளியிடப்படுகின்றன.
உலகம் முழுக்க மின்னணு ஊடகம்மூலம் இணையத்தில் வெளியாகும் பல்வேறுபட்ட தமிழ் ஆவணங்கள், பதிவு செய்யப்படாத நிலைதான் உள்ளது.
இந்நிலையில் தமிழாய்வை முழுமையானதாகவும், தரமுள்ளதாகவும் ஆக்கிட அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
தமிழாய்வைப் பொறுத்தவரை கருத்தியலடிப் படையில் ஆய்வுகள் குறித்தும், பருண்மையான நிலையில் ஆய்வு மூலங்களின் சேகரிப்பும், பதிவு குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது. ஓலைச்சுவடிகள், செப்புப் பட்டயங்கள் கல்வெட்டுக்களுக்குப் பின்னர் அச்சடிக்கப்பெற்ற தமிழ் நூல்களின் பயன்பாடு,
கி.பி. 16-ஆம் நூற்றாண்டில்தான் தொடங்குகிறது. எனினும் கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் பிற்பகுதிவரை தமிழ்ப் புத்தகங்கள், பத்திரிகைகள் வெளியீட்டில் தேக்க நிலை நிலவியது.
முதல் உலகப்போருக்குப் பின்னர், கல்வியறிவு பெற்ற தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, கேளிக்கை பயன்பாடு காரணமாகத் தமிழ் ஆவணங்கள் வெளியீடு அதிகரித்த போதிலும், அவற்றைச் சேமித்தலும் பாதுகாத்தலும் சிறிய அளவில்தான் நடைபெற்றுள்ளன.
தமிழ்மொழி இலக்கிய இலக்கண ஆய்வினைக் கல்விப்புல ஆய்வுகள், சிறுபத்திரிகை சார்ந்த ஆய்வுகள், பயன்பாட்டு ஆய்வுகள் என மூன்றாகப் பிரிக்கலாம்.
பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிறுவனங்கள், கல்லூரிகள் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பி.எச்.டி., எம்.ஃபில்., டி. லிட்., போன்ற பட்டங்கள் பெறு வதற்காகச் செய்யப்படும் ஆய்வுகள், பெரும்பாலும் ‘ஆய்வு நெறிமுறை’ என்ற சட்டகத்திற்குள்ளாக அடங்கியுள்ளன.
ஆய்வாளரின் சுயசிந்தனை, முயற்சிகள் வடிகட்டப்பட்டு, தீவிரத் தன்மையற்று முனைவர் பட்டம் பெறுவதற்காகப் பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்படுகின்ற ஆய்வேடுகளின் தரம் குறித்துப் பேராசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பெரும்பாலான ஆய்வேடுகள், புத்தகமாக வெளியிடுவதற்கான தகுதிகள் அற்று உள்ளன. ஆய்வேடுகளின் மொழிநடையும் தட்டையாக உள்ளது.
அன்றாட வாழ்க்கையில் வருமானத் திற்காகப் பிற தொழில் செய்கின்ற விமர்சகர்கள், சுய ஆர்வம், இலக்கிய விருப்பம் காரணமாகத் தீவிரமான பிரக்ஞையுடன் சிறுபத்திரிகைகளில் பிரசுரிக்கின்ற கட்டுரைகள் ஆழமானவையெனினும், கல்வித்துறை சார்ந்தவர்களின் கவனிப்பு அற்றனவாகவே உள்ளன.
அரசியல், மொழி, சமயம் சார்ந்து ஏதோவொரு பயன்பாடு கருதி எழுதப்படுகின்ற ரசனை அடிப்படையிலான விமர்சனங்கள், வாசகரிடையே பொதுக் கருத்தியலை வலிந்து உருவாக்குகின்றன.
அதே நேரத்தில் படைப்பிலக்கிய நூற்கள் வெளியீடானது பன்மடங்கு கூடியுள்ளதைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. பொதுவாகத் தகவல் மூலங்களின் வகைகள் பின்வருமாறு:
1. ஆவண மூலங்கள் 2.ஆவணமற்ற மூலங்கள்
முதன்மைச் சான்றுகள்
1. இதழ்கள், மின் இதழ்கள் (மூலப் படைப்புக்கள்)
2. ஆய்வறிக்கைகள்
3. கருத்துப்பதிவுகள்
4. அரசாங்க வெளியீடுகள்
5. மூல நூல்கள்
துணைமைச் சான்றுகள்
1. இதழ்கள், மின் இதழ்கள் (திறனாய்வு தொடர்புடையன)
2. ஆய்வுச் சுருக்கங்கள்
3. பார்வைநூல்கள்
அ) கலைக்களஞ்சியம்
ஆ) அகராதிகள்
இ) கையேடுகள்
ஈ) அட்டவணைகள்
4. நூல்கள்
5. அறிக்கைகள்
6. பாடநூல்கள்
மூன்றாம் நிலைச் சான்றுகள்
1. ஆண்டுப் புத்தகங்கள்
2. துணைநூற் பட்டியல்கள்
3. மூலநூலுக்கான வழிகாட்டிகள்
இத்தகைய தகவல் மூலங்கள் வழியாக வெளியிடப் படும் தமிழ் ஆவணங்களின் நிலை, கட்டுப்பாடற்ற நிலையில் உள்ளது. இந்நிலையில் தமிழாய்வில் புதிதாக நுழையும் ஆய்வாளர், காத்திரமான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நிலையேற்பட்டுள்ளது.
தமிழாய்வு மூலங்களின் பரவல் நிலை
பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளின் காலனியாதிக்க நாடாக இந்தியா இருந்தமையால், கி.பி. 1947க்கு முற்பட்ட முக்கியமான தமிழ் ஆவணங்கள் லண்டன், பாரிசிலுள்ள ஆவணக் காப்பகங்களில் உள்ளன.
இத்தாலியிலுள்ள வாடிகன், ஜெர்மன், இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளில் உள்ள பழமையான நகரங்களிலும் தமிழ் ஆவணங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
பல்வேறு காரணங்களுக்காக உலகமெங்கும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள், தற்சமயம் வாழ்கின்ற நாடுகளின் நூலகங்களில் தமிழ் ஆவணங்கள் காணப்படுகின்றன. இந்தியாவின் பிற மாநிலங்களிலும் தமிழ் ஆவணங்கள் பரவிக் கிடக்கின்றன.
இந்தியாவில் தில்லிப் பல்கலைக் கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், திருவேங்கடம் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம் பல்கலைக்கழகம், பனாரஸ் பல்கலைக்கழகம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் செயல்படுகின்ற தமிழ்த்துறையில் நடைபெறும் ஆய்வுகள், மேலைநாடுகளில் உள்ள பல்கலைக்கழகத் தமிழ்த்துறைகளில் தமிழ் தொடர்பாக நடத்தப்படும் ஆய்வுகள் எனத் தமிழாய்வு மூலங்கள் உலகமெங்கும் பரவியுள்ளன.
தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் தமிழர் தொடர் பாக உலகின் பல பகுதிகளிலிருந்து, பத்திரிகைகள், நாளிதழ்கள், இதழ்கள் வெளிவருகின்றன. குறிப்பாகப் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் கணினியின் துணையுடன், நூற்றுக்கணக்கான பத்திரிகைகளை ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் இருந்து வெளியிட்டு வருகின்றனர்.
உலகமெங்கும் பரவிக்கிடக்கும் தமிழ் ஆவணங் களைப் பற்றிய அறிமுக அறிதல்கூட இல்லாதநிலையில் முழுமையான தரவுகளைத் தேடும் இன்றைய ஆய்வாளர் களுக்குச் சிக்கல்கள் ஏற்படுகின்றன
ஆய்வேடுகள்
பல்கலைக்கழகங்கள், ஆய்வுநிறுவனம் கல்லூரி களில் இதுவரை நடைபெற்ற தமிழாய்வுகள் தொடர் பான ஆய்வேடுகளின் நூற்பட்டியல் முழுமையான அளவில் தொகுக்கப்படவில்லை. ஆய்வேடுகளின் ஆய்வுச் சுருக்கங்கள் பணியானது, இன்னும் தொடக்க நிலையிலேயே உள்ளது.
இந்நிலையில், ஒரு குறிப்பிட்ட துறையில் ஆய்வு செய்யத் திட்டமிடும் ஆய்வாளருக்கு, அத்துறையில் இதுவரை நடைபெற்றுள்ள முன் ஆய்வுகள் குறித்து அறிய வாய்ப்பில்லாத நிலையே உள்ளது.
எனவே அவர் திட்டமிடும் ஆய்வு குறித்துப் பருண்மையாக கருதுகோளினை வகுப்பதில் சிக்கல் உண்டாகிறது. இதனால் தமிழ்நாட்டில் வெவ்வேறு இடங்களிலுள்ள தமிழாய்வு மையங்களில் ஒரே நேரத்தில் ஒரே தலைப்பின் கீழ் முனைவர் பட்டத் திற்காக, நான்கைந்து ஆய்வாளர்கள் ஆய்வு மேற்செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக சு.தமிழ்ச் செல்வியின் நாவல்கள் பற்றி தமிழகப் பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் இன்று ஒரேவகையான முனைவர் பட்ட ஆய்வுகள் அதிக எண்ணிக்கையில் நடைபெறுகின்றன. செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் செயல்பாடுகளுக்குப் பின்னர், முன்னர் நடைபெற்ற சங்க இலக்கிய ஆய்வுகளை முனைவர் பட்டத்திற்காக நகலெடுப்பது, கணிசமாக அதிகரித் திருக்கிறது.
இத்தகைய ஆய்வுகளினால் ஆய்வாளருக்கு முனைவர் பட்டம் கிடைக்கிறது என்பதனைத் தவிர வேறு சிறப்பில்லை. இந்நிலைமையை மாற்றிட முனைவர் பட்ட ஆய்வேடுகளின் நூற்பட்டியலும், ஆய்வுச்சுருக்கங்களின் பட்டியலும் தயாரிக்கப்படுவதுடன், ஒவ்வொரு ஆண்டும் அண்மைக்கால ஆய்வுகள் குறித்த தனித்த நூற்பட்டியலும் தயாரிக்கப் பட்டு வெளியிடப்பட வேண்டும்.
ஆய்வுக் கட்டுரைகள்
மூல நூல்கள் தொடர்பான ஆய்வறிஞர்களின் ஆய்வுக்கட்டுரைகள் பெருமளவில் இதழ்கள் அல்லது கருத்தரங்கக் கட்டுரைத் தொகுப்புகளில் வெளியா கின்றன. பின்னர் அவை தனி நூலாக வெளியிடப் படுகின்றன.
இவ்வாறு வெளிவந்துள்ள ஆயிரக்கணக்கான கட்டுரைத் தொகுப்பு நூல்களின் தன்மை, அளவு காரணமாக ஆய்வாளருக்குச் சிக்கல் தோன்றுகிறது.
ஓர் ஆசிரியரின் கட்டுரைத் தொகுப்பினுள் இலக்கணம், புதுக்கவிதை, சிற்றிலக்கியம், நாவல் எனப் பல்துறை தொடர்பான கட்டுரைகள் அடங்கியுள்ளன.
மேலும் சில ஆய்வாளர்கள் இணைந்து வெவ்வேறு இலக்கிய வகைகளில் எழுதிய கட்டுரைகள், ஒரே கட்டுரைத் தொகுப்பு நூலாக வெளியிடப்படுகின்றன.
ஆய்வுக் கோவை, வையை, இளவேனில், பரல்கள், தேடல் போன்ற கருத்தரங்கக் கட்டுரைத் தொகுப்புகளுடன், உயர்கல்வி நிறுவனங்கள், ஆய்வாளர் மன்றங்கள் நடத்துகின்ற கருத்தரங்குகளில் அளிக்கப்படும் கட்டுரை களும் தொகுப்புகளாக வெளியாகின்றன.
பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாடத்திட்டத்தில் இடம் பெறுவதற்காக மேலோட்டமாக எழுதப்பெற்ற கட்டுரைத் தொகுப்புகள் நூற்றுக்கணக்கில் தமிழில் வெளியாகியுள்ளன.
இத்தகைய கட்டுரைத் தொகுப்புக் களைத் தேடிக் கண்டறிந்து, படித்து தனது ஆய்வினுக்குத் தொடர்பான செய்திகளைத் தேடிக்கண்டுபிடிப்பது என்பது தனிப்பட்ட ஆய்வாளருக்கு இயலாத செயலாக உள்ளது.
இதுவரை வெளியாகியுள்ள கட்டுரைத் தொகுப்புக்களின் மதிப்பு, நம்பகத்தன்மை, காலங்கடந்த தன்மை போன்றவற்றை வரையறுப்பது தனிப்பட்ட ஆய்வாளரால் செய்ய முடியாத நிலையில், அவரது ஆய்வென்பது முழுமையடைவது இயலாது.
இத்தகைய கட்டுரைகளின் தரம், மதிப்பு, உண்மைத்தன்மை போன்றவை கால அடிப்படையில் மதிப்பிடப்பெற்று ஆய்வுச் சுருக்கத்துடன் நூற்பட்டியலிடப்பட வேண்டியது அவசியமாகும்.
சில கருத்தரங்குகளில், வாசிக்கப்பெறும் கட்டுரைகள் நகலச்சு ஆவணமாகத் தொகுக்கப்படு கின்றன. அவை நூற்பட்டியலிடப்படுவதன் மூலம் ஆய்வாளர் பயன் அடைய வாய்ப்புள்ளது.
ஆய்விதழ்கள்
ஆய்வறிஞர்கள், கண்டறிந்த உண்மைகள் ஆய்வு முடிவுகள் உடனுக்குடன் journal எனப்படும் ஆய்விதழ் களில்தான் வெளியிடப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட இலக்கிய வகையில் அண்மைக்காலத்தில் தோன்றியுள்ள மாற்றங்களை அறிய வேண்டுமெனில், ஆய்விதழ்களைத் தான் ஆய்வாளர்கள் நாட வேண்டியுள்ளது. இன்று மின்-இதழ்களிலும் தமிழாய்வு தொடர்பான கட்டுரைகள் வெளியாகின்றன.
பழமையான செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்பொழில் போன்ற இதழ்களில் ஆயிரக் கணக்கான கட்டுரைகள் இதுவரை வெளியிடப் பட்டுள்ளன. இத்தகைய இதழ்களைத் தொகுத்துத் தேவைப்படும் கட்டுரையைக் கண்டறிவது சிரமம்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தமிழியல், சமூக விஞ்ஞானம், காவ்யா தமிழ் போன்ற ஆய்விதழ்களை வாசித்து, தனது ஆய்வு தொடர்பான செய்தியைச் சேகரிப்பது, குறிப்பிட்டகால எல்லைக்குள் ஆய்வு செய்யும் ஆய்வாளருக்கு இயலாது.
ஆய்விதழ்களில் வெளியாகியுள்ள கட்டுரைகளை மதிப்பு, தரத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து, நுண்மையான பிரிவுகளாகப் பகுத்து அகர வரிசை மற்றும் பொருள் அட்டவணை செய்தல் அவசியமானதாகும்.
விரிந்து வரும் ஆய்வுப் பரப்பு
தொடக்ககாலத் தமிழாய்வில் பண்டைய இலக்கண, இலக்கியங்களைப் பற்றி ஆராய்வதுதான் ஆய்வெனக் கருதப்பட்டது. நாளடைவில் தற்கால இலக்கியங்களும் ஆய்வுப் பொருளாயின.
பின்னர் தமிழாய்வில் மாற்றமேற்பட்டு ‘மொழியியல்’ அடிப்படையில் இலக்கண இலக்கியத்தை ஆய்வு செய்வது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
எண்பதுகளில் தமிழாய்வு, பல்வேறு பிற துறைகளை உள்ளடக்கியதாக விரி வடையத் தொடங்கியது. நாட்டுப்புறவியல், மக்கள் தகவல்தொடர்பியல், கல்வெட்டியல், நுண்கலைகள், ஊடகவியல், திரைப்படம், நிகழ்கலைகள், இசையியல், மொழிபெயர்ப்பியல், சுவடியியல், கோயிற்கலைகள், தொல்பொருள் ஆய்வு, இதழியல், மெய்யியல், அளவையியல், சமூகவியல், நாடகவியல், பெண்ணியம், மானுடவியல், வரலாறு, ஒப்பிலக்கியம் போன்ற பல்வேறு துறைகளைத் தமிழுடன் தொடர்புபடுத்தி ஆய்வு செய்யும் போக்கு தோன்றியுள்ளமையால், பல்துறை ஒருங்கிணைந்த ஆய்வுகள் இன்று பெருகி வருகின்றன.
எனவே ஆய்வாளருக்கு ஆய்விற்கான மூலங்களைக் கண்டறிந்திட தமிழைத்தவிர, பிற துறைகளிலும் தேட வேண்டிய நிலைமை புதிதாகத் தோன்றியுள்ளது. தமிழ் தொடர்பான பிற துறை ஆவணங்களின் சேகரிப்பும் பதிவாக்கலும் இன்றைய தமிழாய்வுக்குத் தேவையானதாகி விட்டன.
கொள்கைகளும் உத்திகளும்
தொடக்ககாலத் தமிழாய்வுகள், இலக்கணக் கோட்பாடு அடிப்படையில் சங்க இலக்கியத்தையும், காப்பியக் கோட்பாடு அடிப்படையில் காப்பியங் களையும் புராணங்களையும் ஆய்வு செய்யும் வரை யறைக்குட்பட்ட ஆய்வாகவே விளங்கின.
இன்று இத்தகைய கோட்பாடுகளுடன் மேலைநாட்டினரின் அரசியல் கோட்பாடுகள், இலக்கியக் கொள்கைகள், உத்திகள் போன்றவற்றின் அடிப்படையில் ஆய்வு செய்யும் போக்கு ஏற்பட்டுள்ளது.
இலக்கியத்தைத் திறனாய்வு செய்ய அமைப்பியல், பின் அமைப்பியல், பின் நவீனத்துவம், நடப்பியல், உளவியல், மிகை நடப்பியல், செவ்வியல், மாந்திரிக யதார்த்தம் போன்ற கோட்பாடுகள் இன்று பயன்படுகின்றன.
கருத்தியல் நோக்கில் ஆராய்ந்திட பொது வுடைமை, அந்நியமாதல், சோசலிசம், காந்தியம், பெரியாரியம் போன்ற கொள்கைகள் பயன்படுத்தப் படுகின்றன. இலக்கிய உத்திகள் அடிப்படையில், படிமம், குறியீடு, இருண்மை, உவமை போன்றன படைப்புகளை ஆய்வு செய்ய உதவுகின்றன.
இந்நிலையில் ஆய்வாளர், தமிழாய்வு தவிர கோட்பாடுகள், கொள்கைகள், இலக்கிய உத்திகள் தொடர்பான நூல்களையும் அறிந்திருப்பது அடிப்படையாகியுள்ளது
ஆய்வாளர் எதிர்கொள்ளும் சிக்கல்கள்
தகவல் பெருக்கத்தின் காரணமாக தமிழ் ஆய்வாளர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பின்வருமாறு:
1. உலகமெங்கும் பரவியுள்ள ஆய்வு மூலங்கள்.
2. தகவல் பெருக்கத்தின் காரணமாகப் பன் மடங்கு பெருகியுள்ள ஆவணங்கள்.
3. ஆயிரக்கணக்கான கட்டுரைத் தொகுப்பு நூல்கள்.
4. நூற்றுக்கணக்கான கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்புகள்.
5. பல்துறை ஒருங்கிணைந்த ஆய்வுகள்.
6. ஆயிரக்கணக்கில் இதழ்களில் வெளியாகியுள்ள கட்டுரைகள்.
7. மின்-இதழ்கள்
8. புதிய கோட்பாடுகள்
9. புதிய கொள்கைகள்.
10. புதிய உத்திகள்
11. தமிழுடன் தொடர்புடைய பிறதுறை ஆவணங்கள்
ஆவணங்கள் சேகரிப்பும் பதிவும்
தமிழில் ஒரு குறிப்பிட்ட துறையில் ஆய்வினை மேற்கொள்ளும் ஆய்வாளர் எதிர்கொள்ளும் சிக்கல்களை தீர்ப்பதற்கான ஒரே வழி ஆய்வு மூலங்களான ஆவணங் களைச் சேகரிப்பதும் பதிவு செய்வதும்தான். இத்தகைய பணி, கணினியின் மூலம் செய்யப்பட வேண்டும். அதாவது ‘தகவல் சேகரிப்பு - பதிவு - தருதல்’ என்று மூன்று நிலைகளில் செய்திடல் வேண்டும்.
தமிழ் இலக்கியம், தமிழ் மொழி, தமிழாய்வு தமிழுடன் தொடர்புடைய பிறதுறை ஆவணங்கள் உலகம் முழுவதிலிருந்து தொகுக்கப்பட்டு, அவை நுண்ணிய பகுதிகளாகப் பகுக்கப்பட்டு கணினிமய மாக்கப்பட வேண்டும்.
குறிப்பாக ஆயிரக்கணக்கில் வெளியாகியுள்ள இதழ்க் கட்டுரைகள், கட்டுரைத் தொகுப்பு நூல்கள், பகுப்படிப்படையில் பதிவு செய்தல் அவசியமானதாகும். ஆய்வேடுகளின் சுருக்கங்கள் நூல்களின் சுருக்கங்கள், கட்டுரைகளின் சுருக்கங்கள், ஆசிரியர், பதிப்பாசிரியர், தொகுப்பாசிரியர், பதிப்பித்த ஆண்டு, பதிப்புக்கள் எண்ணிக்கை, பதிப்பகம், பதிப்பித்த இடம், இலக்கிய வகை போன்ற தகவல்களைப் பதிவு செய்வதன்மூலம் ஆய்வாளரின் தேவைக்கேற்ப தகவல்களைப் பெற்றிடலாம்.
ஆய்வாளர் தனது ஆய்வு தொடர்பான அனைத்துத் தகவல்களையும் பெறுவதன் மூலம், தான் செய்ய வேண்டிய ஆய்வுப் பணியையும், ஆய்வின் அகலத் தையும், ஆழத்தினையும் அறிந்து கொள்ள முடியும். ஆய்வாளரின் நேரமானது பெரிய அளவில் சேமிக்கப்படுவதுடன், முன்னர் செய்யப்பட்ட ஆய்வினை மீண்டும் செய்திடும் நிலைமையும் மாறும்.
சுருங்கச் சொன்னால் ஒவ்வொரு ஆய்வாளனும் ‘அ’விலிருந்து தொடங்கும் சிரமம் இல்லாமையினால், ஆய்வுத் தரமானது உயர்வடையும். எடுத்துக்காட்டாக, சிலப்பதி காரத்தில் ஆய்வினை மேற்கொண்டிருக்கும் ஆய்வாளர், சிலப்பதிகாரம் தொடர்பான பல்வேறு இதழ்கள், கட்டுரைத் தொகுப்புக்களைப் புரட்டிட வேண்டி யுள்ளது. இந்நிலையில் அவருடைய ஆய்விற்குத் தொடர்பற்ற நூற்றுக்கணக்கான கட்டுரைகள்,நூல்களை கட்டாயம் வாசிக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. ஆய்வாளரின் நேரம், பொருளினை விரயமாக்கும் நிலைமையை மாற்றிட வேண்டுமெனில், தமிழாய்வு தொடர்பான முக்கியமான ஆவணங்களைக் கணினி மயமாக்குதல் அவசியமாகும்.
கணினி வழங்கும் உடனடிப்பணி
ஆய்வு என்பது நாளும் வளரும் தன்மையுடை யதால், ஆய்வுத் தரவுகள் அண்மைக்காலத்தினதாக இருத்தல் அவசியம். அப்பொழுதுதான் ஆய்வு முழுமை யானதாக அமையும். உலகமெங்கும் ஒவ்வொரு மாதத்திலும் இதழ்களில் வெளியாகும் கட்டுரைகளை ‘தமிழ்ச் சுருக்கமாக’ பிரசுரிக்க வேண்டும். அத்துடன் கருத்தரங்கக் கட்டுரைகள், நூல்கள், ஆய்வேடுகள் போன்ற ஆவணங்களும் கணினிமயமாக்கப்பட வேண்டும்.
இதனால் தமிழில் ஒரு குறிப்பிட்ட வகையில் நடைபெற்றுள்ள அண்மைக்கால ஆய்வுகள், குறிப்பிட்ட துறையில் ஆய்வு செய்யும் ஆய்வாளருக்கு உடனடியாகக் கிடைத்துவிடும்.
ஆய்வு தொடர்பான நூல்களையும் தொகுத்துப் பகுத்திடும்போது தமிழாய்வு குறித்த தகவல்கள் முழுமையடையும்.
எடுத்துக்காட்டாகப் பாரதியார் கவிதைகளில் ஆய்வு செய்யும் ஆய்வாளர், தனது தலைப்பு குறித்து குறிப்பிட்ட இணையதளத்தில் தேடினால், ஒவ்வொரு மாதமும் பாரதியார் குறித்து வெளியாகும் அனைத்துத் தகவல்களும், ஆய்வுச் சுருக்கத்துடன் அவருக்குக் கிடைத்துவிடும் நிலையை உருவாக்க வேண்டியுள்ளது.
இதனால் ஆய்வாளர், தனது ஆய்வுக்குத் தொடர்பான தகவல்களை எளிதில் அறிவதுடன், குறிப்பிட்ட தகவல் பற்றி விரிவாக வேண்டுமெனில், மூல ஆவணத்தைப்படித்து அறிந்து கொள்ளலாம். இத்தகைய முறையினால், மூல ஆவணம் தேடி அலைவதில் ஆய்வுக் காலத்தினை வீணடிக்காமல், ஆய்வினை ஆழமான முறையில் மேற்கொள்ள முடியும்; தமிழாய்வின் தரமும் உயரும்.
ஆய்வு நூலகங்கள்
மனித குல நாகரிகத்தையும் பண்பாட்டையும் வரலாற்று அடிப்படையில் பாதுகாத்து அடுத்த தலை முறைக்கு வழங்கிடும் பணியைச் செய்திடும் நூலகங்கள், அடிப்படையில் சமூக சேவை நிறுவனங்கள் ஆகும்.
கல்வி மேம்பாடு, அறிவியல் தொழில்நுட்பம், தகவல் தொடர்பு, பொழுதுபோக்கு போன்றவற்றில் சமூக மாற்றத்தின் உந்துசக்தியாக நூலகங்கள் செயல்படுகின்றன.
மனித நினைவுகள் போல சமூக வரலாறு என்பது, நூலகத்தினால்தான் சாத்தியப்பட்டுள்ளது. வரலாற்றைப் பதிவாக்கிடும் செப்புப் பட்டயங்கள், ஓலைச்சுவடிகள், கையெழுத்துப் பிரதிகள், புகைப் படங்கள், பத்திரிகைகள், புத்தகங்கள் போன்றவற்றைப் பராமரிப்பதுடன், பாதுகாத்திடுவதன் வழியாக நூலகங்கள், மானுட வளர்ச்சியில் அரிய தொண்டாற்றுகின்றன.
தமிழைப் பொறுத்தவரையில் கல்வெட்டு களுக்கு அடுத்து ஓலைச்சுவடிகள் கருத்துப் பதிவினில் முக்கியமான இடம் வகிக்கின்றன. தொடக்கத்தில் சமண, பௌத்த மடங்களைச் சார்ந்த துறவியர் பாதுகாத்த ஓலைச்சுவடிகள் அடங்கிய இடம் ‘ஞானப் பண்டாரம் எனப்பட்டது. பின்னர் சைவ, வைணவ மடங்களும் நூலகங்களை நிறுவி சுவடிகளைப் பாதுகாத்தனர்.
தமிழகத்தில் வாழ்ந்த கவிராயர் பரம்பரையினர் வீடுகளிலும் சுவடிகள் இருந்தன. தஞ்சாவூரைத் தலைநகரமாகக்கொண்டு ஆண்ட தெலுங்கு நாயக்க மன்னர்களான சேவப்ப நாயக்கர்(1538-1561), அச்சுத நாயக்கர்(1561-1614) அரண்மனையில் நூலகம் வைத்திருந்தனர்.
நாயக்கரிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிய மராட்டிய மன்னர்கள், ஆங்கிலேயரின் தொடர்பினால் நூல்கள் உள்ளிட்ட ஆவணங்களைச் சேகரிப்பதில் ஆர்வம் காட்டினர்.
சரபோசி மன்னர்(1798-1833) முயற்சியினால் ஓலைச்சுவடிகள், வெளிநாட்டு நூல்கள், கையெழுத்துப் பிரதிகள் சேகரிக்கப்பட்டு, 1820 ஆம் ஆண்டில் தஞ்சாவூரில் சரசுவதி மஹால் என்ற பெயரில் நூலகம் உருவாக்கப்பட்டது. இதுவே தமிழகத்திலுள்ள தொன்மையான நூலகமாகும்.
இந்தியாவில் ஆங்கிலேயக் காலனியாதிக்க ஆட்சி வலுவடைந்தபோது, நிறுவப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகமும், கன்னிமாரா நூலகமும் நூலகம் பற்றிய புதிய கருத்தினை உருவாக்கின. அன்றைய கால கட்டத்திலும் கல்வி கற்றல் என்பது, சமூகத்தில் சிறுபான்மையினராக இருந்த உயர் சாதியினருக்கு மட்டும் என்று வைதீக சநாதனம் வகுத்திருந்த நெறிக்கு மாறாக யார் வேண்டுமானாலும் கல்வி கற்கலாம், நூலகத்தில் வாசிக்கலாம் என்பதற்கு ஆங்கிலேயக் கல்வி முறை வழிவகுத்தது.
இந்நிலையில் சங்கங்கள், கழகங்கள், அறக்கட்டளைகள் மூலம் நூலகங்கள் நிறுவப்பட்டன. இன்னும் சில நூலகங்கள் தனியாரின் முயற்சியினாலும் உருவாக்கப்பட்டன. இத்தகைய நூலகங்களில் பல இன்றுவரை மக்களுக்குச் சேவை செய்து வருகின்றன.
பழமையில் ஊறிப் போயிருந்த மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் நூலகங்களின் பணி, மகத்தானது. அரிய ஆவணங்களின் சுரங்கமாக விளங்குகிற நூலகங்கள், இன்று தமிழாய்வினுக்குப் பெரிதும் உதவுகின்றன.
கி.பி.18ஆம் நூற்றாண்டில் அச்சு ஊடக வளர்ச்சி காரணமாகப் பழமையான ஓலைச்சுவடிகளில் இருந்த தமிழ் இலக்கியம், இலக்கணம் உள்ளிட்ட பல்துறை நூல்கள், புத்தகங்களாக வெளியாகியுள்ளன.
ஒப்பீட்டளவில் கடந்த 125 ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையில் தமிழ் நூல்கள் பிரசுரமாகியுள்ளன. ஓலைச்சுவடிகளில் இருந்து சங்க இலக்கியம், காப்பியங்கள் போன்ற பழமையான படைப்புகள் முதன்முதலாக நூல் வடிவம் பெற்றபோது, வெளியான முதல் பதிப்புகள் இன்று அருகிவிட்டன.
சீவக சிந்தாமணி காப்பியத்தை ஆராய முயலுகின்ற இன்றைய ஆய்வாளருக்கு உ.வே.சா. 1892-இல் பதிப்பித்த பிரதி எந்த நூலகத்தில் இருக்கிறது என்பது தெரியாது. முதல் பிரதியில் இடம் பெற்றிருந்த தகவல்கள் அடுத்த பதிப்பினில் சேர்க்கப்படாமல் இருக்க வாய்ப்புண்டு.
எடுத்துக்காட்டாகப் புறநானூறு போன்ற எந்தவொரு செவ்வியல் இலக்கியமும் பதிப்பிக்கப் பட்டதில், ஒவ்வொரு புதிய பதிப்பிலும் ஏற்படுத்தப் பட்டுள்ள மாற்றங்கள் ஆய்வாளரின் கவனத்திற்குரியன.
ஆனால் இன்று துரதிர்ஷ்டவசமாக புலியூர்க்கேசிகன் பதிப்பு, வர்த்தமானன் பதிப்பு போன்றவற்றை வைத்து ஆய்வாளர்கள் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்வது நடைபெறுகிறது. எந்த நூலகத்தில் முதல் பதிப்பு இருக்கிறது என்ற தகவல் அறியாமையே, மூலநூல்கள் தேடுவதற்குத் தடையாக உள்ளது.
முனைவர் பட்ட ஆய்வினைத் தொடங்குவதற்கு முன்னர், ஆய்வுத்தலைப்பைத் தேர்ந்தெடுப்பது, ஆய்வாளருக்குச் சவாலாக உள்ளது. எடுத்துக்காட்டாகத் தமிழிலக்கியப் பரப்பினில் சிலப்பதிகாரத்தில் ஆய்வினை மேற்கொள்ளலாம் என முடிவு செய்யும் ஆய்வாளர், பருண்மையான ஆய்வுப் பிரச்சினை எதுவென முடிவு செய்ய முடியாமல் திண்டாடுகிறார்.
இந்நிலையில் ஏற்கனவே சிலப்பதிகாரம் குறித்து வந்துள்ள முக்கியமான விமர்சன நூல்கள், ஆய்வேடுகள், ஆய்வுக்கட்டுரைகள் போன்றவற்றை வாசித்திட ஆய்வு நூலகங்கள் அடிப்படையாக விளங்குகின்றன.
ஆய்வு தொடர்பான கருதுகோள்களை உருவாக்கிட, குறிப்பிட்ட படைப்பினில் இதுவரை நடைபெற்ற முன் ஆய்வுகள் பற்றி அறிந்திட உதவுகின்ற நூலகங்கள், இறுதிவரை ஆய்வாளருக்கு வழிகாட்டியாக விளங்குகின்றன..
தமிழ் ஆவணங்கள் பாதுகாக்கப்படும் நூலகங்கள் இந்தியாவிற்கு வெளியே வாடிகன், பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், போர்த்துகீஸ், நெதர்லாந்து போன்ற நாடுகளில் உள்ளன.
குறிப்பாக இந்தியாவிற்கு கிறிஸ்தவ மத போதனைக்காக ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்த பாதிரியார்கள் எழுதியுள்ள குறிப்புகள், கடிதங்கள், பதிப்பித்த நூல்கள், இதழ்களில் வெளியான தமிழகம் குறித்த கட்டுரைகள் போன்றவை, தமிழர் வாழ்க்கை யுடன் நெருங்கிய தொடர்புடையன.
தமிழகத்தில் இலக்கியம், இலக்கணம், வரலாறு, பண்பாடு, மானிட வியல், நாட்டுப்புறவியல் போன்ற துறைகளில், கடந்த நானூறு ஆண்டுகளில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்ச்சி களை அறிந்திட, ஐரோப்பிய நாடுகளில் ஆவணக் காப்பகங்களில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் ஆவணங்கள் பெரிதும் பயன்படுகின்றன.
இந்தியாவில் புதுதில்லி, கல்கத்தா, மும்பை, காசி, அகமதாபாத், திருவனந்தபுரம், பெங்களூரு, திருப்பதி போன்ற இடங்களில் உள்ள நூலகங்களில் தமிழ் ஆவணங்கள் நூலகத்தில் பாதுகாக்கப்படுகின்றன.
தமிழகத்தில் ஆங்கிலேய அரசாங்கம் 1860 இல் தொடங்கிய கன்னிமாரா நூலகம், தேசிய நூலகமாக மாற்றப்பட்டு, மக்களின் சேவையில் இன்றுவரை தனித்து விளங்குகிறது.
தமிழில் வெளியான நூல்கள், பத்திரிகைகள் தமிழக மெங்கும் உள்ள நூலகங்களில் பரவிக் கிடக்கின்றன. தமிழ் ஆய்வாளர்கள் அறிந்திருக்கவும் தேடிச் செல்லவும் வேண்டிய முக்கியமான நூலகங்களின் அட்டவணை:
சென்னை நகரில் செயல்படும் நூலகங்கள்
மெட்ராஸ் லிட்டரரி சொசைட்டி நூலகம்(1812)
DPI வளாகம்
கல்லூரிச் சாலை
நுங்கம்பாக்கம், சென்னை-6
அடையாறு நூலகம் & ஆய்வு நிறுவனம்(1886)
தி தியாபிசிகல் சொசைட்டி பன்னாட்டுத் தலைமையகம்
அடையாறு, சென்னை-600020
அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் & ஆய்வு மையம்(1869)
சென்னைப் பல்கலைக்கழக வளாகம்
சென்னை-5
தமிழ்நாடு ஆவணக் காப்பகம்- நூலகம்
காந்தி இர்வின் சாலை
எழும்பூர், சென்னை
கன்னிமாரா நூலகம்(1896)
60, பாந்தியன் சாலை
எழும்பூர், சென்னை- 600 008
டாக்டர் உ.வே.சா.நூலகம்
2, அருண்டேல் கடற்கரைச் சாலை
பெசண்ட் நகர், சென்னை-90
மறைமலையடிகள் நூலகம்
கன்னிமாரா நூலகம் 3வது மாடி
60, பாந்தியன் சாலை
எழும்பூர், சென்னை- 600 008.
தமிழ்நாடு அரசு-தொல்பொருள் ஆய்வுத் துறை நூலகம்.
அரசுதொல்பொருள் ஆய்வுத் துறை நூலகம்
தமிழ் வளர்ச்சி வளாகம்
ஆல்சு சாலை, எழும்பூர், சென்னை- 600 008.
தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகம்
அண்ணா சாலை, சென்னை
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
மூன்றாவது குறுக்குத் தெரு
மையத் தொழில்நுட்ப வளாகம்
தரமணி, சென்னை-600 113.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூலகம்
மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம்
இரண்டாம் முதன்மைச் சாலை
தரமணி-சென்னை- 600 113
பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மையம்
பூந்தமல்லி நெடுஞ்சாலை
எழும்பூர், சென்னை- 600 008
கார்ல்மார்க்ஸ் நூலகம்
சி.ஐ.டி.நகர், சென்னை- 600 035.
பேராசிரியர் ஆய்வு நூல் நிலையம்
அண்ணா அறிவாலயம், அண்ணா சாலை
தேனாம் பேட்டை, சென்னை-600 018
பவானந்தர் கழகம் நூலகம்(1930)
டவுட்டன் பேருந்து நிறுத்தம்
வேப்பேரி, சென்னை-7
க.திருநாவுக்கரசு நூலகம்.
1-அன்னை நாகம்மை தெரு
மந்தைவெளி பேருந்து நிலையம் அருகில்.
சென்னை-600 028
சிங்காரவேலர் நினைவு நூலகம்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை- 600 098
பாவேந்தர் செம்மொழித் தமிழாய்வு நூலகம்
செம்மொழித் தமிழாய்வு நிறுவனம்
தரமணி, சென்னை-113
அண்ணா நூற்றாண்டு நூலகம்
கோட்டூர்புரம், சென்னை-25
சென்னைப் பல்கலைக்கழக நூலகம்
சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை-5
தலைமைச் செயலக நூலகம், தலைமைச் செயலகம்
புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை
சட்டப் பேரவை நூலகம்
சட்டப் பேரவை
தலைமைச் செயலகம்
புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை
தமிழகத்தில் முக்கியமான நூலகங்கள்
விக்டோரியா எட்வர்ட் நூலகம்
விக்டோரியா எட்வர்ட் மன்றம்
மேல வெளி வீதி, மதுரை-1
மதுரைத் தமிழ்ச் சங்க நூலகம்
மதுரைத் தமிழ்ச் சங்கம்
தமிழ்ச் சங்கம் சாலை
சிம்மக்கல், மதுரை-1
திரு.வி.க. நூலகம்(1946)
மேலப்பாதி, தஞ்சாவூர் மாவட்டம்
சிவகுருநாதன் செந்தமிழ் நூலகம்(1950)
நாணயக்காரத் தெரு, கும்பகோணம்
பல்லடம் மாணிக்கம் தமிழ் நூல் காப்பகம்
சேலம் நெடுஞ்சாலை
தமிழ் நகர், விருத்தாசலம்-606001
கோபால் ராவ் நூலகம்(1912)
காந்தி பார்க் எதிரில், கும்பகோணம்
பென்னிங்டன் பொது நூலகம்(1875)
ஸ்ரீவில்லிபுத்தூர்
கோட்டூர் அரங்கசாமி முதலியார் நூலகம்
ராஜ கோபாலசுவாமி கோவில் தெரு
மன்னார்குடி
திருவள்ளுவர் நூலகம்
சீதாபார்ப்ப நல்லூர்
திருநெல்வேலி
ஒன் டிரஸ்ட் நூலகம்
கீ.சி.சி. சாலை
நாகர்கோவில்
சரசுவதி மஹால் நூலகம்(1820)
அரண்மனை வளாகம், தஞ்சாவூர்
பாவாணர் நூலகம்
திருவள்ளுவர் தவச்சாலை
அல்லூர், திருச்சி மாவட்டம்-620101
ஞானாலயா நூலகம்
6,பழனியப்பா நகர்
திருக்கோகர்ணம், புதுக்கோட்டை-622002
திருவாவடுதுறை ஆதீன நூலகம்
திருவாவடுதுறை
திருப்பனந்தாள் ஆதீன நூலகம்
திருப்பனந்தாள்
குன்றக்குடி ஆதீன நூலகம்
குன்றக்குடி
சிவகங்கை மாவட்டம்
மதுரை ஆதீன நூலகம்
மதுரை
கரந்தைத் தமிழ்ச் சங்க நூலகம்
கரந்தைத் தமிழ்ச் சங்கம்
கரந்தை, தஞ்சாவூர்-5
தொல்காப்பியனார் நூலகம்(1909)
சன்மார்க்க சபை
கணேசர் கலை அறிவியல் கல்லூரி
மேலைச்சிவபுரி-622403
தருமையாதீன நூலகம்
மயிலாடுதுறை-609001
ஜோசப் கல்லூரி நூலகம்
புனித ஜோசப் கல்லூரி
சத்திரம், திருச்சி
ரோமன் ரோலந்து நூலகம்
ஒயிட் டவுண், புதுச்சேரி
French Institute Library
French Institute of Pondicherry
11, Louis Street
Puducherry-605001
Ph:0413-231611
பிற மாநிலங்களில் தமிழ் நூல்கள் இருக்கும் நூலகங்கள்
பொது நூலகம்
பாளையம், திருவனந்தபுரம்
தமிழ்ச்சங்க நூலகம்
தமிழ்ச் சங்கம்
கிள்ளிப் பாலம், திருவனந்தபுரம்
National Library
Belvedor road
Alpole
Kolkatta-700027
Ph: 033-22487831
National Library
Swami Vivekananda Road
Bandara West
Mumbai-400050
Ph:022-26425093
National Archives of India Library
Janpath Road
Near Sasthri Bhavan
New Delhi-110001
Ph: 011-23384797
Delhi Tamil Sangam
Tamil Sangam Marg
Ramakrishnapuram
New Delhi-110022
P˜ 011-26174217
The Bombay Tamil Sangam
215, Mumbai Tamil Sangam Marg
Sion East
Mumbai-400022
Ph:022-24094021
Bharathi Tamil Sangam
93-A, Rash Bihari Avenue
Kolkatta-700026 Ph: 033-24665685
Rampur Raza Library
Hamid Mazil Qila
Rampur
U.P.State-244901
தமிழ் மொழியினால் அடையாளப்படுத்தப்படும் அனைத்துவிதமான தரவுகளையும் திரட்டுவதற்கு நூலகங்களின் பயன்பாடு இன்றியமையாதது.
ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வு தொடர்பான புத்தகம் அல்லது பத்திரிகையைத் தேடுவதற்காக மட்டும் நூலகங்களுக்குச் செல்வதைவிட, எந்த ஊருக்குப் போனாலும் அங்கிருக்கும் முக்கியமான நூலகத்திற்குப் போவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். நூலக உறவு என்பது காலந்தோறும் தொடர்ந்திடும்போது, இளம் ஆய்வாளர் எதிர்காலத்தில் விமர்சனத்துறையில் சாதனையாளராக மாறுவார்.
நூலகங்களின் தனிச்சிறப்புகள்
தமிழ்நாடு ஆவணக் காப்பகம்- நூலகம், தமிழ்நாடு தொல்பொருள்துறை ஆய்வு நூலகம் ஆகிய இரண்டும் தமிழக வரலாறு, பண்பாடு, சமூகம், இலக்கியம் குறித்த முக்கியமான ஆவணங்களைப் பாதுகாத்து வருகின்றன.
ஆங்கிலேய காலனியாதிக்கம் தொடங்கி தமிழகத்தை ஆண்ட அரசுகள், செயல்பட்ட நடைமுறையைச் சேமித்து வைக்கப்பட்டுள்ள அரசாங்க கோப்புகளின் மூலம் அறிந்துகொள்ள ஆவணக் காப்பக நூலகம் உதவுகின்றது.
காலனிய ஆட்சிக் காலத்தில் ஆங்கிலேய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அடங்கிய கோப்புகள், இன்று ஆய்வாளர்களுக்குப் பயன்படுகின்றன. எடுத்துக் காட்டாக மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்ட பொம்மன் போன்ற காலனியாதிக்க எதிர்ப்புப் போராளி களுக்கும் ஆங்கிலேய அதிகாரிகளுக்கும் நடைபெற்ற இறுதிக்கட்ட விசாரணைகள் கோப்புகளாகப் பதிவாகி யுள்ளன. 19 ஆம் நூற்றாண்டில் வெளியான அரிய நூல்கள், ஆவணக் காப்பக நூலகத்தில் கிடைக்க வாய்ப்புண்டு. தமிழ் ஆய்வாளர்கள் இத்தகைய வரலாற்றுப் பழமையான நூலகத்தை ஒருமுறையாவது சுற்றிப் பார்க்க வேண்டியது அவசியம்
சரஸ்வதி மஹால் நூலகத்தின் சிறப்புகள் அளவற்றவை. பதினொரு இந்திய மொழிகளிலும் ஐரோப்பிய மொழிகளிலும் வெளியான நூல்கள் உள்ளன. வரலாற்றுப் புகழ்வாய்ந்த கையெழுத்திலான அஞ்சல் மடல்களும், அவற்றுடன் படங்களும் இருக்கின்றன.
நானூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்த நந்திநாகரி என்னும் எழுத்தில் உள்ள சுவடிகள் உள்ளன. முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட சீவக சிந்தாமணி, திருக்குறள், திருவாசகம், கம்பராமாயணம், திவாகரம், கலிங்கத்துப்பரணி போன்ற நூல்கள்
நூலகச் சேமிப்பில் பாதுகாக்கப்படுகின்றன. இந்தியா, ஐரோப்பா நாடுகளில் உள்ள அழகிய நகரங்களின் படங்கள், மனித உடற்கூறு, தாவரங்கள் அடங்கிய வண்ணப்படங்களும், எழிலான ஓவியங்களும் உள்ளன.
மகாராட்டிர அரசர்கள் அலுவலகங்களில் பயன்படுத்திய ‘மோடி’ எழுத்துக்களாலான கையெழுத்துப் பிரதிகளும் உள்ளன. பிரெஞ்சு ஆசிரியர் ஒருவரால் எழுதப்பட்ட சாமுத்திரிகா என்ற அரியநூல், சிறப்பாகக் கருதப் படுகிறது.
கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சரஸ்வதி மஹால் நூலகம், மதுரைத் தமிழ்ச் சங்க நூலகம், உ.வே.சா. நூலகம், ஆதீனங்களின் நூலகங்கள் போன்றவற்றில் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பாக உள்ளன.
அவற்றில் இலக்கியம், இலக்கணம் மட்டுமின்றி, சித்த மருத்துவம், ஜோதிடம், சமையல் கலை, கால்நடை மருத்துவம், தத்துவம், மதம், நாட்டுப்புற வழக்காறுகள் போன்றனவும் உள்ளன. தமிழரின் பண்பாடு, சமூகவியல் விஷயங்களை மீட்டுருவாக்கம் செய்ய முயலும் ஆய்வாளர் இத்தகைய ஓலைச்சுவடிகளை வாசிக்க வேண்டும்.
தமிழகத்தின் பழமையான கன்னிமாரா நூலகம், தமிழில் வெளியாகியிருக்கும் பல்வேறு நூல்களைச் சேமித்து வைத்திருக்கும் அரிய கருவூலமாகும், தமிழாய்வு மேற் கொண்டிருக்கும் ஆய்வாளர்கள் அவசியம் கன்னிமாரா நூலகத்தைப் பயன்படுத்த வேண்டும். தமிழ்நாட்டு அரசினர் தமிழ் வளர்ச்சி மன்ற வெளியீடான தமிழ் நூல் விவர அட்டவணை, இந்தியாவிலுள்ள மையக் குறிப்பு நூலகம் வெளியிட்டுள்ள இந்திய தேசிய நூற்றொகை, சென்னை கன்னிமாரா பொது நூலகம் வெளியிட்ட தமிழ்நாட்டு நூற்றொகை: தமிழ், கல்கத்தாவிலுள்ள மையக் குறிப்பு நூலகம் வெளியிட்டுள்ள இந்திய தேசிய நூல் விவரப் பட்டியல்: தமிழ் போன்ற அரிய நூற்றொகைகள் கன்னிமாரா நூலகத்தில் இடம் பெற்றுள்ளன. 1960 ஆம் ஆண்டிற்கு முன்னர் தமிழில் வெளியான நூல்களைக் கண்டறிய நூற்றொகைகள் உதவுகின்றன.
ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தில், போன நூற்றாண்டில் தமிழர் வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த நாடகம் ,திரைப்படம், நிகழ்த்துக் கலைகள் போன்றவை குறித்த புத்தகம், பத்திரிகை தவிர விளம்பர நோட்டீஸ் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களைக் காணலாம். அந்தக் காலத்தில் வெளியான துண்டறிக்கைகள், விளம்பரங்களும் நூலகத்தில் இடம் பெற்றுள்ளன.
பல்லடம் மாணிக்கம் ஆய்வு நூலகத்தில் பண்டைத் தமிழிலக்கிய நூல்கள் பல்வேறு பதிப்புகளுடன் ஆய்வாளர்களுக்காகக் காத்திருக்கின்றன. சிறுபத்திரிகை மரபில் வெளியான முக்கியமான பத்திரிகைகளின் தொகுப்புகள் உள்ளன. ஆயிரக்கணக்கான கர்நாடக இந்துஸ்தானி, மேற்கத்திய இசைப்பேழைகள், குறுந் தகடுகள் பாதுகாக்கப்படுவது, இந்நூலகத்தின் தனிச் சிறப்பாகும்
பெரியார் பகுத்தறிவு நூலகம், பேராசிரியர் ஆய்வு நூல் நிலையம் இரண்டிலும் திராவிட இயக்கத்தினரின் கருத்துகளுக்கு முன்னுரிமை தந்து நூல்கள், பத்திரிகைகள் சேமிக்கப்பட்டுள்ளன. பெரியாரின் எழுத்துகளை மூல வடிவினில் அறிந்திட பெரியார் பகுத்தறிவு நூலகம் பெரிதும் உதவியாக உள்ளது,
சட்டப்பேரவை நூலகம், தலைமைச் செயலக நூலகம் ஆகிய இரண்டிலும் தமிழக அரசாங்கம் பல்வேறு காலகட்டங்களில் வெளியிட்ட அறிக்கைகள், அரசாணைகள், பிரசுரங்கள் இடம் பெறுள்ளன. சட்டப் பேரவை நூலகத்தில் பல்லாண்டுகளாக நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைக் கூட்ட நடவடிக்கைகள், கேட்கப்பட்ட கேள்விகள், பதில்கள், இயற்றப்பட்ட மசோதாக்கள் போன்றன ஆவணங்களாக இடம் பெற்றுள்ளன.
சிங்காரவேலனார் நினைவு நூலகத்திலும், காரல் மார்க்ஸ் நூலகத்திலும் மார்க்சிய சித்தாந்த நூல்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ரசியன், பிரெஞ்ச் உள்ளிட்ட மேலை மொழிகளில் வெளியான இலக்கிய வாதிகளின் சிறந்த படைப்புகள் உள்ளன.
பல்லடம் மாணிக்கம் நூல் காப்பகம், பாவாணர் நூலகம், ஞானாலயா போன்ற நூலகங்களில் பண்டை இலக்கிய இலக்கண நூல்களின் முதல் பதிப்புகள் உள்ளன.
தனிநாயகம் அடிகளார் அறுபதுகளில் வெளியிட்ட Tamil Culture இதழின் பழைய இதழ்களின் தொகுப்பு உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளின் தொகுப்புகள் ஞானாலயாவில் உள்ளன. பண்டைய இலக்கிய, இலக்கண நூல்களின் முதல் பதிப்புகள் முக்கியத்துவம் தந்து சேமித்து வைக்கப்பட்டுள்ளன.
திருவனந்தபுரம் அரசு பொது நூலகத்தில் வை.மு.கோதைநாயகி அம்மாள் எழுதியுள்ள நாவல் களும், கோட்டூர் அரங்கசாமி முதலியார் நூலகத்தில் வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஜே.ஆர்.ரங்கராஜூ, ஆரணி குப்புச்சாமி முதலியார் போன்ற நாவலாசிரியர் களின் நாவல்களும் உள்ளன. தமிழ் நாவல் வரலாற்றில் இருண்ட காலம் என அழைக்கப்படும் காலத்தில் வெளியான வெகுஜனரீதியில் பிரபலமான நாவல்களை ஆராய்ந்திட முயலும் ஆய்வாளருக்குப் பயன்படும் நாவல்கள் அங்கே உள்ளன
மேலைச்சிவபுரி, தொல்காப்பியனார் நூலகத்தில் தனவணிகன்(1920), நச்சினார்க்கினியன், சைவம், கலாநிலையம் வெ.சாமிநாத சர்மா ஆசிரியராக ரங்கூனில் நடத்திய ஜோதி(1943), இந்திரா, செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ், கலைமகள் போன்ற பழமையான பத்திரிகைகளின் தொகுப்புகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
மின்னணு நூலகங்கள்
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள பிரமாண்டமான மாற்றங்கள் காரணமாக உலகமெங்கும் வாழ்ந்திடும் தமிழர்களிடையே தமிழ்ப் புத்தகங்கள், பத்திரிகைகளை இணையத்தின் வழியாக வாசித்திடும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தமிழ்ப் புத்தகங்களை உடனடி யாக வாசித்திடுவதற்கு இலவசமாகவே சேவை அளிக்கும் இணைய தளங்கள் நிரம்ப உள்ளன. ஆய்வாளர்கள். செவ்வியல் இலக்கியப் படைப்புகளைப் பதிப்பாசிரியர் ரீதியாக அணுகிடுவதற்கான வாய்ப்புகள் இணைய தளத்தில் இருப்பதனால், நூல்களைத் தேடியலைகின்ற நேரம் மிச்சமாகிறது.
கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் வெளியாகி, மீண்டும் மறுபதிப்புகள் வெளிவராத நூல்கள்கூட மின்னணு வடிவில் கிடைப்பது, ஆய்வினை முழுமையாகச் செய்திட உதவுகிறது. குறிப்பிட்ட துறை சார்ந்து இதுவரை வெளியாகி வெளிநாட்டு நூலகங் களில் கிடைக்கின்ற புத்தகங்கள் பற்றிய தகவல்களைத் திரட்டிட இணைய தளங்கள் உதவுகின்றன.
தமிழாய்வில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்கள் பின்வரும் இணைய வெளிகளில் உலாவினால், தேடுகின்ற புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்யலாம்.
1) Tamil Heritage Foundation- www.tamilheritage.org <http://www.tamilheritage.org>
2) Tamil virtual University Library- www.virtualvu.org/ library http://www.virtualvu.org/library
3) Project Madurai - www.projectmadurai.org.
4) Chennai Library- www.chennailibrary.com <http://www.chennailibrary.com>.
5) Tamil Universal Digital Library- www.ulib.prg <http://www.ulib.prg>.
6) Tamil E-Books Downloads- tamilebooksdownloads. blogspot.com
7) E Books உங்களுக்காக - senthivayal.com
8) Tamil Books on line- books.tamil cube.com
9) Catalogue of the Tamil books in the Library of British Congress archive.org/details/ catalogue of Tamil
10) Tamil novels on line - books.tamilcube.com.
இங்கு தரப்பட்டுள்ள இணையதளங்களில் தேடினால் தமிழ் தொடர்பான அரிய புத்தகங்கள் கிடைக்க வாய்ப்புண்டு. தமிழில் இதுவரை வெளியாகி யுள்ள லட்சக்கணக்கான புத்தகங்கள் இன்னும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படாத நிலையில், தமிழாய்வானது, பெரிதும் நூலகங்களையே சார்ந் துள்ளது.
இன்று ஆய்வாளர்கள், தமிழாய்வில் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த நிலையில் தரவுகளைத் திரட்டுவது சிறிய அளவில் நடைபெறுகின்றது. அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் எதுவாகினும், ஆய்வு தொடர்பான ஆவணங்கள் பற்றிய புரிதல் ஏற்பட வேண்டுமெனில், ஆய்வாளர் நூலகப் பயன்பாட்டில் முனைந்து செயல்பட வேண்டும்.
அப்பொழுதுதான் ஒரு குறிப்பிட்ட துறையில் இதுவரை நடைபெற்ற ஆய்வு களை அறிவதுடன், ஆய்வுலகில் நிலவும் இடைவெளி களையும் அறிந்திட முடியும். தமிழாய்வு தரமானதாக அமைந்திட, நூலகங்கள் அடிப்படையானவை என்ற புரிதல், ஆய்வுப்போக்கினைச் சரியான திசை வழியில் நடத்தும்.