ஹைக்கூ நூற்றாண்டு கொண்டாடி வரும் இந்நேரத்தில் ஆடலரசனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான “ஆடலரசன் ஹைகூக்கள்” வெளிவந்தது மிகுந்த மகிழ்ச்சி. கடந்த 30 வருடங் களாக கவிதைகள் எழுதிவரும் ஆடலரசனின், முதல் தொகுப்பான ‘சேரிக்குள் தேர்’ கவிதைத் தொகுப்பின் மூலம் பரவலாக அறியப்பட்ட இவரின் மிகப் பிரசித்தமான கவிதையான
ஊர்கூடி இழுத்தென்ன
இன்னும் வரவில்லை
சேரிக்குள் தேர்
இக்கவிதையின் மூலம் தன் கவி உலகத்தை மேலும் விரிவுபடுத்திக் கொண்டார். சைவ மார்க்கத்தை தொடர்ந்து பின்பற்றி வரும் இயல்பு கொண்ட இவரின் இரண்டாவது தொகுப்பின் இக்கவிதைகள் பெரும்பாலும் சைவ அறநெறியை கைப்பிடித்து வருபவை. வள்ளலாரின் சன்மார்க்க வழியை அவரின் அருட்பெரும் கருணையை மாசற்ற பேரன்பினைப் பேசும் கவிதைகள் இதில் அதிகம். அவைகள் ஹைக்கூ வடிவத்தினைக் கொண்டிருந்தாலும் வாசிப்பின் உவகையால் பெருங்கவிதைகளாக மாறிவிடும் சாத்தியங்கள் கொண்டவை.
கம்பிவடத்தில் அணில்
பசி பசி
கயிற்றில் நடக்கும் சிறுமி.
நண்பகல்
ஊன்வணிகன்
நடுங்கும் ஆடு.
சன்னல் திரை விலகியும்
தெரியவில்லை
பனித்திரை.
குழல் விளக்கு
ஆட்டம் போடும் வண்ணத்தி
தலையை அசைக்கும் பல்லி.
பனியுடன் உதிரும் மலர்கள்
உறக்கம் களையும்
நாய்க்குட்டி.
தூரத்தில் உழவு
காற்றில் கமழ்கிறது
சேறு.
சூழல் அவதானிப்பு, இயற்கை மீதான நுண்ணியப் பார்வை, வாழ்க்கையின் போக்கிலேயே தன்னையே ஒப்புக்கொடுத்தல், ஏறக்குறைய ஒரு சூஃபியைப்போல தன்னை விசாரணை செய்து கொள்ளும் இவரின் வாழ்க்கை தொடர்ச்சியில் இவர் கண்டடையும் தரிசனங்களே இந்த ஹைகூக்கள். அக்கவிதைகள் நம்மை வந்தடையும் போது ஒரு வழிபாடாக உருமாறும் சாத்தியங்களே இக்கவிதைகளின் வெற்றிகளாகும்.
பிறந்த வீட்டின்
நினைவாய்
நதியினடியில் கூழாங்கல்.
இக்கரையில் தூண்டில்
அக்கரையில் மீன்கொத்தி
ஆற்றில் துள்ளும் மீன்கள்.
நள்ளிரவு மழை
துல்லியமாய்க் கேட்கும்
மட்டை விழும் சப்தம்.
பாறையிலிருந்து சிற்பத்தை
விடுவிக்கிறார் சிற்பி
வீட்டில் கூண்டுக்கிளி.
தற்காலத்தில் நிலவும் சூழல் கேடு அது உருவாக்கும் பதட்டங்கள் பல்வேறு நிலையிலான அரசியல் முரண்கள் அதன் மூலம் கூட்டு சமூக மனம் உடைதல் போன்றவற்றின் மத்தியிலிருந்து தோன்றும் கவிதைகளின் ஆழங்களை அவை தோற்றுவிக்கும் சமூக உளவியலை அதை எதிர்கொள்ளும் மனவுறுதியின் சாத்தியங்களை இத்தொகுப்பின் சில கவிதைகள் வெகு இயல்பாக நம்மிடம் கொண்டு சேர்க்கிறது. அதுபோன்ற கவிதைகள் சமூகப் பொறுப்பின் தன்மையை தன்னிலையாக இல்லாமல் படர்க்கையாக அதாவது மூன்றாவது சாட்சியாக சொல்வதின் மூலம் சமூகத்தின் அன்றாடங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறார். முன்பே சொன்னது போல் தன்னை ஒரு சூஃபி மனத்திலேயே இருந்திக் கொள்ளவே விழைகிறார்.
ஹைக்கூவின் பொதுத்தன்மை எளிய சொற்களால் அடத்தியான காட்சிகளையும், எளிய சொற்களால் எளிய காட்சிகளையும் உருவாக்குவதே. அதிர்வு மீட்டல்கள், எதிர்பாலின கிளர்ச்சியூட்டுதல், சொற்களை தலைகீழாக அடுக்கி வைத்து பிறகு களைத்து விடுவது போன்ற வகைக் கவிதைகள் தோன்றி வரும் தற்காலத்தில் தன் இயல்பின் போக்கில் அழகிய சொற்களை உருவாக்கி, காட்சிகளை நம்முன் நிறுத்திவிட்டு அமைதியாகச் சென்று விடுகிறார்.
பொது சமூக மனத்தின் அச்சத்தினை அதிகரிக்கும் விதமான படைப்புகளை உருவாக்குவதும் கட்டுடைப்பின் பேரிலும் அதிகாரப் பரவலாக்கம் என்ற பேரிலும் கலையை இலக்கியத்தை மக்களிடமிருந்து அவர்களின் மொழிகளிலிருந்தும் அந்நியப்படுத்தும் முயற்சி என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்து கொண்டே வருகிறது. ஆனால் இத்தடைகளையெல்லாம் தாண்டி மொழியும், கலையும் அதன் இயல்போடு வளரவே செய்கிறது. அதுபோன்று ஆடலரசன் கவிதைகளும் தடையற்ற மொழிகளால் உருவானது. மேலும் இவர் காட்டும் கவியுலகம் ஆத்ம தரிசனத்தை நமக்குத் திறந்து வைக்கவும் செய்கிறது.