தமிழ் அறிஞர் வ.சுப.மாணிக்கனார். நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றபோது ஒரு கருத்தரங்கில் உரையாற்றும்போது. “இந்தியாவில் நான் மூன்று தலைமுறைகளைப் பார்த்துள்ளேன். முதல் தலைமுறை தியாகத்தலைமுறை; இரண்டாவது தலைமுறை தியாகம் செய்யவில்லை. ஆனால் தியாகத்தை மதித்த தலைமுறை, தியாகத்துக்குத் தலைவணங்கும் தலைமுறை; மூன்றாவது தலைமுறை வணிகத்தலைமுறை, அந்தத் தலைமுறைக்கு தியாகம் செய்யவும் தெரியாது, தியாகத்தைப் போற்றவும் தெரியாது. ஆனால் எதையும் வணிகமாக்கிப் பார்க்கும் தலைமுறை” என்று கூறினார். இந்தக் கருத்தியலை பலபேர் மீண்டும் மீண்டும் பொதுவெளியில் மிகவும் விளக்கமாக, நாம் எவ்வளவு சுயநலம் மிக்கவர்களாக மாறிவிட்டோம் என்று விவாதித்து வந்தனர்.
இன்று நாம் பார்க்கும் தலைமுறை சுயநலம் மிக்கவர்கள் மட்டுமல்ல, சமூகம் கெடுவதற்கான கெடு செயல்களில் ஈடுபடுவதுதான் நம்மால் ஜீரணிக்க முடியவில்லை. அது மட்டுமல்ல உழைப்பின்றி ஊதியம் பார்க்கும் தலைமுறையாக மாறிவிட்டது. இந்தக் கருத்தியலைத்தான் வெள்ளையர்கள் நம்மை ஆள வரவில்லை, நம்முடன் வணிகம் செய்ய வந்தார்கள். நம்மைப் பார்த்தவுடன் நம்மை மிக எளிதாக அடிமைப்படுத்தி விடலாம் என எண்ணி, அன்றைய நம் ஆட்சியாளர்களை அடிமைப்படுத்தி, நம்மைக் கொள்ளை அடித்து கோமான்களாக ஆனார்கள் வெள்ளையர்கள். நாம் கொள்ளை கொடுத்தது எவ்வளவு என்பதை லாலா லஜிபதிராய் எழுதிய புத்தகத்தையும் ஜே.சி.குமரப்பா எழுதிய ஆய்வு நூலையும் சமீபத்தில் சசிதரூர் எழுதிய நூலையும் வாசித்தால், எந்த வெள்ளைக்காரர் மீதும் மதிப்போ மரியாதையோ நமக்கு வராது. ஆனால் இன்று நம்மை நாம் ஆளுகின்றோம். வெள்ளையர்கள் ஆளவில்லை, அந்த வெள்ளையர்கள் அடித்த கொள்ளையைவிட அதிகமான அளவில் ஆட்சியாளர்கள்தானே கொள்ளையடித்து வருகின்றனர். இவர்கள் சென்றது மக்களுக்கு ஆளுகை மூலம் சேவை செய்ய. ஆனால் செய்வதோ பொதுமக்களின் வரிப்பணத்தைக் கோடிகோடியாகக் கொள்ளையடிப்பது.கொள்ளையடித்த பணத்தை வெளிநாட்டிலும், மற்றவர்கள் பெயரிலும் பணமாகவும், சொத்தாகவும், நிறுவனங்களாகவும் முதலீடு செய்துள்ளார்களே. வெள்ளையர்கள்கூட நம்மைக் கொள்ளையடித்தாலும் நம் சமூகத்தில் உள்ள சமூக அழுக்குகளைப்போக்க ஒருசில நல்ல பணிகளை ஒருசில ஆட்சியாளர்கள் செய்தார்களே. இன்று நம் ஆட்சியாளர்கள் மக்களில் பெரும்பான்மையை அவல நிலையில் வாழ வைத்துவிட்டு, அவர்களின் அவலங்களைப் போக்குவதாகக் கூறி வாக்குகளுக்காக மக்கள் பணத்தில் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி, அதிலும் பணம் பார்த்துவிட்டு, நீங்கள் அனுபவிக்கும் வசதிகள் நாங்கள் உங்களுக்கு ஓசியில் கொடுத்தது என்று மக்களைப் பார்த்து கேட்கும் அவலத்துக்கு வந்து விட்டார்களே என்பதைப் பார்க்கும்போது சுதந்திரப் போராட்ட கால தியாக வாழ்வு வாழ்ந்த தியாகிகளின் கனவு நீர்த்துப்போய்விட்டதே. இந்த அவலங்களைக் கண்டு புலம்பாதவர்கள் இருக்க முடியாது. விபரம் அறிந்தவர்களை மனச்சாட்சி அமைதியாக இருக்கவிடாது.
இந்த அவலங்களை நான் ஒரு கட்சி ஆரம்பித்து ஒழித்து விடுவேன் என்று கூறினால் அதை எவரும் ஏற்கும் மன நிலையில் இல்லை. அது முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. காரணம், இன்று அரசியல் என்பது சந்தைப்படுத்தப்பட்டு அரசியலில் நடக்கும் அனைத்தும் விற்று வாங்கும் பொருளாக மாற்றப்பட்டு விட்டது. முதலில் ஆட்சியிலிருந்த அரசியல்வாதிகள் ஊழலில் ஈடுபட்டு, அதன்பிறகு அதிகாரிகள், அதன்பிறகு அலுவலர்கள், அதன்பிறகு ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இணைப்பவர்கள், அடுத்து, பொதுமக்கள் என ஊழல் விரிவடைந்து எங்கும் நீக்கமற எளிதில் உழைப்பின்றி பணம் பார்த்துப் பழகிக்கொண்டனர். இந்தச் செயல்பாட்டில் எவரும் தப்பிக்க முடியவில்லை. ஒரு காலத்தில் அரசியலுக்குத் தேவை சேவை மனப்பான்மை, தியாக குணம். ஆனால் இன்று அரசியல் செயல்பாடுகள் அனைத்திற்கும் தேவை பணம். அது மட்டுமல்ல அரசியல் செயல்பாடுகள் என்பது ஆடம்பரம் மிக்கதாக மாறிவிட்டது.
அதைவிட முக்கியமாகத் தேர்தல் என்பது மிகவும் செலவு பிடிக்கக்கூடியதாக மாறிவிட்டது. கடைசியாக வாக்கும் சந்தைப்படுத்தப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகளில் குறிப்பாக ஆட்சியைப் பிடிக்க முனையும் கட்சிகளுக்குத் தேவை பெருநிதி. அதை மக்களிடமிருந்து திரட்டவே முடியாது. அந்த நிதி எங்கிருந்து வருகிறது என்றால் ஒன்று சந்தை, மற்றொன்று அரசு. அரசியல் மட்டும் நாசமாக்கப்படவில்லை, சமூகத்தையும் நம் அரசியல்வாதிகள் அறமிழக்கச் செய்து விட்டார்கள். இந்தச் சூழலை மாற்ற பலர் முனைகின்றார்கள். அதற்கு புதுக்கட்சி ஆரம்பிப்பது தீர்வு ஆகாது. அப்படி ஆரம்பித்துப் பல கட்சிகள் ஊழலில் உச்சத்திற்குச் சென்றன ஆட்சியைப் பிடித்த பிறகு.
இந்தச் சூழலை மாற்ற ஒரே வழி, ஒரு புது அரசியலைக் கட்டமைப்பது. அந்தப் புது அரசியல் என்பது கட்சி ஆரம்பிப்பது அல்ல. அது ஒரு மக்கள் இயக்கம். அந்த இயக்கம் தேர்தலில் போட்டியிடுவதற்கு மாறாக அரசாங்கத்தைக் கண்காணிக்கும் மாபெரும் மக்கள் இயக்கம். அந்த இயக்கம் மக்களுக்கு அரசாங்கத்தைப் பணி செய்ய வைக்கும் இயக்கம்.
மக்களை சமூக மாற்றத்திற்கும், பொருளாதார மேம்பாட்டிற்கும் மக்களை ஒன்றுபடுத்தி செயல்பட வைக்கும் இயக்கம். அரசாங்கத்தில் பணி செய்வோர், ஆட்சியில் இருக்கும் கட்சி, மக்கள் பணத்தில் ஒரு பைசா கூட எடுக்க முடியாது என்ற சூழலுக்கு மக்களைத் திரட்டி புரிதலுடன் எங்கெல்லாம் மக்கள் பங்கேற்க வாய்ப்பு வருகிறதோ அங்கெல்லாம் பங்கேற்று செயல்பட வைத்து, இனிமேல் அரசாங்கத்தில் ஊழல் செய்து பணம் சம்பாதிக்க முடியாது என்ற நிலைக்குக் கொண்டுவந்துவிட்டால், இன்று பணம் பார்த்து அரசியல் நடத்தும் அரசியல்வாதிகள், தாங்களாகவே இடத்தைக் காலி செய்துவிடுவார்கள்.
அது மட்டுமல்ல. மக்களைத் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட தயார் செய்துவிட்டால். லாபம் பார்க்க அரசியலுக்கு வந்தவர்கள் தாங்களாகவே வேறு இடத்திற்குச் சென்றுவிடுவார்கள். அப்பொழுது பொதுச் சேவைக்கு ஆட்களைத் தேடவேண்டி வந்துவிடும். மக்களாட்சியில் அரசாங்கம் எஜமானர்கள் நாம்தான் என்பதைப் புரிய வைத்து மக்களாட்சி உண்மைத் தன்மையில் உண்மையுருவில் செயல்பட ஆரம்பித்துவிட்டால், மக்கள் குடிமக்களாகத் தாங்கள் எவைகளுக்கெல்லாம் பொறுப்பேற்று செயல்பட வேண்டுமோ அவைகளுக்கெல்லாம் பொறுப்பேற்று பொறுப்புமிக்க குடிமக்களாக மாறிவிடுவார்கள்.
அந்த நிலை உருவாகும்போது, அரசாங்கத்தை வேலைவாங்க முனைவார்களேயன்றி, வாக்குகளுக்கு பணம் வாங்க பொறுப்புமிக்க குடிமக்களாக மறுப்பார்கள். அடுத்து, இன்று அரசியல் தேர்தல் அரசியலாகக் கட்டமைக்கப்பட்டதன் விளைவு, அடிப்படையான சமூகப் பொருளாதார மாற்றங்களுக்கான ஒரு மேம்பாட்டு அரசியலை கட்டமைக்க முடியவில்லை. அந்த மேம்பாட்டு அரசியலை மேலோட்டமாக நாம் பொருளாதார வளர்ச்சி ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய வளர்ச்சி என்று பேசி வருகின்றோம்.
இந்திய நாட்டுக்கு அதுதான் இன்று தேவை எனப் பேசும் அறிவு ஜீவிகளால் கழிவுக்குழியில் இறங்கி பணி செய்யும் மனிதர்களின் மேம்பாட்டை சிந்திக்க முடியவில்லை. சட்டப்படி இந்தச் செயல்பாடு தடை செய்யப்பட்டாலும் இன்றுவரை இந்தச் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது என்பதை ஊடகங்கள் தெரிவித்த வண்ணம் இருக்கின்றன. இதற்காக 40 வருடம் போராடிய பெஜவாடா வில்சன், ஒவ்வொரு ஆண்டும் இதனால் எவ்வளவுபேர் இறக்கின்றார்கள் என்பதைப் புள்ளி விபரத்துடன் வெளியிட்டுவருகிறார்.
இந்தப் புள்ளிவிபரம் நம்மை அதிரவைக்கிறது, ஆனால், ஆட்சியாளர்கள் அதைப்பற்றிக் கவலைப் படுவதில்லை. 7% அல்லது 8% பொருளாதாரம் நம் நாட்டில் வளர்ந்தபோது 80 கோடி மக்கள் பொதுவினியோகத்தில் விலை இல்லா உணவு தானியம் வழங்கி உணவுப் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய சூழல் எதைக் காட்டுகிறது. பொருளாதார வளர்ச்சி மக்களுக்கு ‘பங்கீட்டு நிதி’ செய்வதன் மூலம் கிடைக்கவில்லை என்பதைத்தானே. இந்த நாட்டு ஆதிக்குடிகள் வனங்களைத் தனதாக்கி இயற்கையோடு வாழ்ந்த மக்களுக்கு மேம்பாடு செய்வதற்குப் பதில், அவர்களுக்கு நில உரிமையும், ஆளுகை உரிமையையும் சட்டமாக உருவாக்கித் தந்துவிட்டு, காடுகளில் இருக்கும் கனிம வளங்களை எடுக்க பெரும் கம்பெனிகளுக்கு உரிமைகளை வழங்கி ஆதிக்குடிகளை காடுகளிலிருந்து அப்புறப்படுத்தும் அவலம் நம் மக்களாட்சியின் அவலத்தில் ஒரு பகுதி இல்லையா? அதேபோல் இந்தியாவை சுத்தம் செய்வது என்பது திட்டமாக்கப்பட்டு, அதையும் கழிவறை கட்டுவதுதான் தூய்மைப் பணி என்று எங்கு பார்த்தாலும் பொதுக் கழிப்பறை. ஆனால் அதைக் கழுவ ஆட்கள் நியமிக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் அந்தப் பணிக்கு ஒரு சமூகத்தைப் பயன்படுத்தும் அவலம் தொடர்கிறதே அந்த அவலத்தை எதன் அவலமாகப் பார்ப்பது.
சந்திரனுக்கும் கோளங்களுக்கும் ராக்கெட் தயாரிக்கும் நாம் கிராமங்களில் இறந்தவர்களைப் புதைப்பதற்கும், எரியூட்டுவதற்கும் இன்னமும் ஒரு சமூகத்தைப் பயன்படுத்துகின்றோமே அதற்கு நம் அறிவியலில் ஏதும் கண்டுபிடித்து, அவர்களை அந்தப் பணியிலிருந்து விடுவித்து அவர்களுக்கு சுதந்திரம் அளிக்க முடியாதா?
மக்களின் மேன்மைக்கும், வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் கல்வியும், சுகாதாரமும் மிகவும் இன்றியமையாதவைகள். இவைகள்தான் ஒரு நாட்டு முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் காரணிகள். இவைகளின் முக்கியத்துவம் பற்றிய புரிதலை, தெளிவை மக்களுக்கு ஏற்படுத்துவது எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது. அப்பொழுதுதான் கல்வியின் முக்கியத்துவம் அறிந்து மக்கள் செயல்படுவார்கள். அதேபோல் சுகாதாரம் என்பது வாழ்வியலுக்குத் தேவையான ஒரு சமூகச் செயல்பாடு. அது மருத்துவமனையில் கிடைப்பது அல்ல. அதை சமூகம், குடும்பம், தனிமனிதர்கள் அரசுடன் சேர்ந்து உருவாக்குவது.
அதற்கான புரிதலை மக்களிடம் சுத்தம் பற்றி, தூய்மை பற்றி, உடல் தூய்மை மற்றும் ஆரோக்கியம் பற்றி, உணவு பற்றி, கழிவு மேலாண்மை பற்றி, தூய்மையான நீர் பற்றி மக்களுக்கு ஒரு புரிதலை ஏற்படுத்தவேண்டும். அந்தப் புரிதலை மக்களிடம் ஏற்படுத்தி விட்டால் அங்கு ஒரு பொறுப்புமிக்க சுகாதாரம், ஆரோக்கியம் வந்துவிடும். இன்றுவரை மேற்கூறிய செயல்பாடுகளுக்கு மக்கள் தங்களைப் பொறுப்பாக்கிக்கொள்ளாமல் அரசை பொறுப்பாக்கி வைத்துவிட்டு மக்கள் பொறுப்பற்று வாழ்வதுதான் ஆரோக்கியமற்ற சூழலில் பெரும்பான்மை மக்கள் வாழ்கின்றனர். இதன் விளைவுதான் மக்களுக்கு கல்வி பற்றிய புரிதலின்றி பள்ளியில் கல்விக் கழகங்களில் தரும் சான்றிதழ் பெரிது என்று நினைக்கின்றனர். பொதுப்பள்ளி என்பது ஏழைகளுக்கான பள்ளி அதுவும் ஏழையாக வசதிகள் அற்றுத்தானே இயங்குகின்றது. மக்களுக்குத் தூய்மை பற்றி புரிதல் இருந்தால், தூய்மைப் பணியாளர்கள் தேவையில்லை, மக்களே கழிவுகளை மேலாண்மை செய்து தங்கள் வாழ்விடத்தை தூய்மையாக வைத்துக் கொள்வார்கள்.
மக்களுக்கு சுகாதாரம், நல்வாழ்வு பற்றிய புரிதல் இருந்தால் நம் ஏழை வளர்இளம் பெண்களை ரத்தச் சோகையால் பாதிக்க விட்டிருக்க மாட்டோம். நம் ஏழைக் குழந்தைகளை ஊட்டச்சத்து இன்றி வாழ அனுமதித்திருக்க மாட்டோம், உணவின் முக்கியத்துவம் பற்றி அறியாது தரமற்ற உணவால் மது நுகர்வால் உடலையே பாழ்படுத்தி ஆரோக்கியமற்ற மருத்துவமனையையும் மருந்துக் கம்பெனிகளையும் நம்பி வாழ வேண்டிய சூழலில் மக்களை வைத்திருக்க மாட்டோம். மக்கள் ஒரு சமூக மூலதனம். மக்கள் தொகை பாரம் அல்ல, அது மூலதனம். மக்கள் விழிப்புடன், பொறுப்புடன் சமூகத்தில் செயல்பட ஆரம்பித்தால், அப்படிக் கருதினால், ஒவ்வொரு குடும்பத்திலும் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கவைக்க நம் சமூகம் செயல்பட்டிருக்க வேண்டுமல்லவா? அப்படிச் செயல்படவில்லையே.
பொதுச் சொத்துக்கள், அது இயற்கை வளங்களாக இருக்கட்டும், மக்கள் வரிப்பணத்தில் கட்டும் கட்டிடங்களாக இருக்கட்டும், அவை அனைத்தும் மக்கள் சொத்துக்கள். அந்தச் சொத்துக்கள் என்பது சமூகச் சொத்துக்கள். அவைகளைப் பாதுகாப்பது மக்களாக இருக்க வேண்டும். அவைகளை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என்று எண்ணுவது அரசாங்கம் என்பது தங்களால் உருவாக்கப்பட்ட தங்களுக்கு பணி செய்ய உருவாக்கப்பட்டது என்ற புரிதல் அற்று இருப்பதால்; கடந்த 75 ஆண்டு காலத்தில் அரசாங்கத்தை எஜமானராகப் பார்த்து, அரசாங்கம் என்பது பலம் பொருந்திய கோலோச்சும் அமைப்பு என்று சிந்தித்து, அரசு தரும் திட்டங்களின் பயன்களைப் பெறும் பயனாளிகள் தாங்கள் என்ற சிந்தனைப் போக்குதான் நம் ஒட்டுமொத்த தேசத்தை ஊழல்மயப் படுத்தியிருக்கிறது. இதை மாற்ற மக்களிடம் அடிப்படை மாற்றத்திற்கான புரிதலை ஏற்படுத்த நமக்கு அரசியல் செயல்பாட்டாளர்கள் தேவையில்லை. மாறாக அதற்கு சமூகச் செயல்பாட்டாளர்கள்தான் தேவை. அந்த சமூகச் செயல்பாட்டாளர்கள் கட்சிகளைக் கடந்து மக்கள் அரசியலை கட்டமைக்க முன்வர வேண்டும். அந்த அரசியலில் கட்சியேதுமில்லை. அங்கு மக்கள் பிரச்சினைக்கு ஒன்றுகூடிப் போராடவும், அரசு மற்றும் ஆளுகையைக் கண்காணித்து அரசாங்கத்தை ஊழல் செய்ய இயலாமல் பார்த்துக் கொள்வதுதான் தலையாயக் கடமை. அதற்கான சமூக செயல்பாட்டாளர்கள்தான் நமது இன்றைய தேவை.
- க.பழனித்துரை, காந்திகிராமிய பல்கலைக்கழக ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் ஆராய்ச்சி இருக்கைத் தலைவர் (ஓய்வு)