cremation 333மேலை நாட்டுத் தாக்கத்தால் புதின இலக்கியம் தோன்றியிருப்பினும் இம்மண்ணிற்குப் பொருந்தும் வகையிலான வடிவமைப்பைக் கொள்ளும் வகையில் தொடக்கக்கால நாவல்கள் நாட்டுப்புறக் கதை அமைப்பினைப் பின்பற்றியுள்ளன. நம்முடைய பாரம்பரிய வரலாற்றினை அறிந்து கொள்ள நாட்டுப்புறக் கூறுகள் புத்துயிர் பெற்று இலக்கியப் படைப்பாளர்களின் படைப்பில், படைப்பாளர்களின் ஈடுபாட்டின் காரணமாக வாய்ப்பு நேரும்போதெல்லாம் பாத்திரங்களின் கூற்றாகவோ வெளிப்படுத்துகின்றனர். வேதநாயகம் பிள்ளை அவர்களின் தமிழின் முதல் நாவலான ‘பிரதாப முதலியார் சரித்திரத்தில்’ நாட்டுப்புற இலக்கியத்தை கருவியாகக் கொண்டு அமைத்துள்ளார். அதே போல் தமிழில் இரண்டாவது நாவலான ராஜம் ஐயரின் கமலாம்பாள் சரித்திரம்' நாட்டுப்புறக் கூறுகள் நிறைந்ததாக நாட்டுப்புற மணத்துடன் படைக்கப்பட்டுள்ளது.

ஆய்வுச் சுருக்கம்:-

பரந்துபட்ட விவசாய உற்பத்தியிலும், சாதி சார்ந்த தொழில்களிலும் இன்னபிற சிறு தொழில்களிலும் ஈடுபட்டுள்ள நமது கிராமங்களின் வாழ்க்கை முறையை புதினம் கருக்கொள்ளும் போதெல்லாம் கிராமத்தின் உருவாக்கத்தில் தவிர்க்க முடியாத கலையழகான நாட்டுப்புற இலக்கியம் இடம்பெற்றுவிடுகிறது. எனவே கிராமத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் புதினம், நாட்டுப்புற இலக்கியம் போர்வையைப் போர்த்திக் கொண்டே பிறக்கிறது. நாட்டுப்புற நாவலாசிரியர்கள் என்ற முத்திரை குத்தப்பட்டவர்களின் படைப்புகள் இதற்குச் சான்றாகத் திகழ்கின்றன.

ஆய்விற்கு எடுத்துக் கொண்ட ஆண்டாள் பிரியதர்ஷினியின் ‘தகனம்’ புதினம் வெட்டியான் தொழில் செய்யும் ஏழை மக்களின் வறுமையை மையமாக வைத்து அமைந்துள்ளது. தாழங்குப்பம் என்ற கிராமத்தில் வாழும் மக்கள் வெட்டியான் தொழில் செய்து வருகின்றனர். அத்தொழிலில் அவர்களின் வாழ்வில் சந்திக்கும் பிரச்சினைகள் என்னவென்பதை இந்நாவலின் மூலம் விளக்கியுள்ளார். ஆண்டாள் பிரியதர்ஷினி அந்நாட்டுப்புறக் கூறுகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பழமொழிகள்:-

புதின ஆசிரியர் தாம் உணர்த்த நினைக்கும் கருத்தை வெளிப்படுத்த சிறந்த கருவியாகப் பழமொழியைக் கையாண்டுள்ளார். கதை சொல்லும் இப்பழமொழிகள் சொலவடை, முதுமொழி, பழஞ்சொல், முதுசொல் என்று பலவாறு அழைக்கின்றனர். இவற்றை தொன்மை மிக்கவை என்றும் சொல்லலாம். இன்றும் தோன்றிக் கொண்டு இருப்பவை என்றும் சொல்லலாம். சுருக்கமான வார்த்தையைக் கோவைகளில் சுவையேற்றிப் பார்க்கும்போது அவைகள் இனிக்கின்றன. சொன்னதையே திரும்பிச் சொல்லும்போது அதிலும் ஒரு சுவை ஏற்படுகிறது.

“நுண்மையுஞ் சுருக்கமும் ஒளியுமுடைமையும்

மென்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக்

குறித்த பொருளை முடித்ததற்கு வரூஉம்

ஏது நுதலிய முதுமொழி என்ப”1

என்று தொல்காப்பியர் பழமொழிக்கு இலக்கணம் கூறியுள்ளார்.

“பழைய மொழியே பழமொழி

பழமையும், எளிமையும், இனிமையும் நிறைந்தவை

பழமொழிகளைக் கொண்டு மக்களின்

பண்பாட்டையும் நாகரிகத்தையும் அறியலாம்”2

என்று பழமொழியின் சிறப்பை திருமதி.கிருட்டிண சஞ்சிவி கூறியுள்ளதாக சு.சண்முக சுந்தரம் அவர்கள் தனது நூலில் கூறியுள்ளார்.

“நாட்டுப்புற மக்களின் நுண்மையான அறிவின் வெளிப்பாடே பழமொழி”3

என்று பழமொழியைப் பற்றி மீ.அமு.நாசிர்அலி கூறுவதாக சு.சண்முகசுந்தரம் கூறியுள்ளார்.

புதினத்தில் உலகம், நாடு, ஊர், குடும்பம் எனப் பல நிலையிலும் பழமொழிகளை ஆசிரியர் கையாண்டுள்ளார். சின்ராசுவிற்கு குலத்தொழிலான வெட்டியான் வேலைக்குப் போகாமல் அலுவலக வேலைக்கு முயற்சி செய்து கிடைக்காததால் வீட்டிற்குத் திரும்பி வருகிறான். அப்போது பக்கத்துவீட்டு மாயாண்டி,

“கழுதைகெட்டால் குட்டிச் செவருதான்”4

என்று சின்ராசுவை பார்த்து நக்கலாகச் சொல்கிறான்.

“கும்பி காஞ்சா குச்சிக்குள்ளதான் வந்தாகணும்”5

என்ற பழமொழியை சில நாட்கள் கழித்து வந்த தன் மகனைப் பார்த்து சின்ராசுவின் தாய் முனியம்மா பேசுகிறாள். மயானத்தில் அலுவலகப் பணியாளராக வேலை பார்க்கும் மணிமாறன், வெட்டியான்களைப் பார்த்துப் பிணம் எரிக்க எந்திரம் வரபோகின்றது என்று கூறும்பொழுது

“உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா”6

கதைதான் என்று கூறுகிறான். எந்த வேலைக்கும் சொல்லாமல், அலுவலக வேலைக்குத்தான் போக வேண்டுமென்று முயற்சி செய்து அவ்வேலை கிடைக்காமல் திரும்பி வரும் தன் மகனைப் பார்த்து முனியம்மா,

“போன மச்சான் திரும்பி வந்தாச்சு”7

என்று பேசுகிறாள். சின்ராசுவின் தங்கை ராணிக்கு சடங்கு செய்யும்பொழுது மட்டன் பிரியாணி வாசனை ஊரைத் தூக்கியது. தாத்தாவுக்குக் கட்டுப்படுத்த முடியாமல் வாய் ஊறியது.

ஏட்டி மாரி ... எனக்கு ஒரு வா குடுட்டி,

“பசி வயத்துக்காரனை விட்டுவிட்டு புளி

ஏப்பக் காரனுக்குப் பந்தி வைக்கீக?”8

என்று தாத்தா கூப்பாடு போட்டார். ஆசிரியர் இது போன்ற பழமொழிகளை பதிவு செய்துள்ளார்.

நாட்டுப்புறப் பாடல்கள்:-

நாட்டுப்புறப்பாடல் உள்ளத்தைக் கவரும் இனிய ஓசையுடன் சிறுசிறு சொற்களைக் கொண்டு எளிமையான நடையில் உணர்ச்சிக் கலப்புடன் கூடியது. எதுகை மோனையுடன் சொல் அடுக்கையும் பெற்றிருப்பது! ஒரு சொல்லோ, ஒரு தொடரோ ஓரடியோ மீண்டும் மீண்டும் இடம்பெறும் தன்மையுடையது. அந்தாதி அமைப்புடன் கூடியது. ஒரு பொருள் மீது பல அடுக்கி வருவது. தொழில் செய்யும் போதும், விளையாட்டின் போதும் பலரும் சேர்ந்து பாடும் கட்டமுதப் பாடலாக இருப்பது. பாடியவர் பெயர் தெரியாத நிலையினையுடையது. உரையாடல் தன்மையினைப் பெற்றிருப்பது. இவை நாட்டுப் புறப்பாடல்களின் இயல்புகளாகும். இந்நாட்டுப் புறப்பாடல்கள் நாடோடிப் பாடல்கள், வாய்மொழி இலக்கியம், ஏட்டில் எழுதாக் கவிதைகள், காற்றில் மிதந்த கவிதைகள், மக்கள் பாடல்கள், நாட்டார் பாடல்கள் என்று பலவாறு அழைக்கின்றனர்.

கல்லாதவர் மட்டுமல்லாமல் கவிஞர் பெருமக்களும் கூட இந்த நாட்டுப்புறப் பாடல்களில் ஈடுபாடு கொண்டிருக்கின்றனர்.

“நாட்டுப்புறப் பாடல்கள் எளிமையானவை,

பகட்டில்லாதவை, பொய்கலப்பற்றவை,

நேரானவை, இனிமையும், இசைப்பொலிவும்

நிறைந்தவை, தீங்கற்ற கலைக் கருவூலங்கள்”9

என்று நாட்டுப்புறப் பாடல்கள் பற்றி திரு.அன்னகாமு கூறிய கருத்துக்களை சு.சண்முகசுந்தரம் அவர்கள் தனது நூலில் பதிவுசெய்துள்ளார். நாட்டுப் புறப்பாடல்கள் மக்களுடைய வாழ்வின் எல்லா நிலைகளிலும் அதாவது பிறப்பு, உழைப்பு, பயிர்த்தொழில், கைத்தொழில், திருமணம், சடங்கு, இறப்பு ஆகிய எல்லா நிலைகளிலும் மக்களை ஆட்படுத்தி வசப்படுத்துவனவாகும்.

“இரட்டக் குத்தற மாதவா

அறுப்பு அறுக்கிற சோதவா

மாட்ட மடக்குடா மாதவா

முக்கோ தக்கோடு

மூணாம் பெரிய கோடு

நாங்கு நடலம்

தேங்கா புடலம்

அஞ்சல் கொஞ்சல் தட்டாத்தி

அழுக்கெடுக்கும் வண்ணாத்தி

கோர் கோர் சித்தப்பா

கூட வா பெரியப்பா”10

என்ற பாடல் தகனம் புதினத்தில் இடம் பெற்ற நாட்டுப்புற விளையாட்டுப் பாடலாகும்.

ஒப்பாரிப் பாடல்கள்:-

மனிதனுடைய வாழ்க்கை தாலாட்டுப்பாடலில் தொடங்கி ஒப்பாரிப் பாடலில் முடிவடைகிறது. ஒப்பாரியின் சொற்கள் எல்லாம் சோகச் சுமையுடன் விளங்குகின்றன. இறந்தவர்க்கும் தனக்கும் உள்ள உற்ற உறவுமுறை, அவர்களின் செயல்கள், குடும்பத்தின் நிலை ஆகியவற்றை விவரிக்கும் நிலையில் ஒப்பாரி அமைந்துள்ளது.

மனித வாழ்வின் உச்சக்கட்ட சோகத்தை வெளிப்படுத்த ஒப்பாரி பெரிதும் உதவுகிறது. பெண்களுக்குத் தங்களின் மன அழுத்தத்தை வெளிப்படுத்த ஒப்பாரிப் பாடலே பெரிதும் பயன்படுகிறது. பாதுகாப்பை இழந்தாலும் பெண்களின் ஒப்பாரிகளில் சோகம் வெளிப்படுகின்றது. தலைச்சன் பிள்ளை, பெற்றவருக்கு தாலாட்டும், புருசனை இழந்தவர்களுக்கு ஒப்பாரியும் தானாகவே வரும் என்பார்கள்.

பொதுவாகவே பெண்கள் இரக்கக் குணமுடையவர்கள். சோகமான நிகழ்வுகள் எவற்றைக் கண்டாலும் கண்ணீர் தானாகவே வந்துவிடும். தன் குடும்பத்திலோ அல்லது தன்னுடைய உறவுக்காரர்கள் குடும்பத்திலோ அல்லது யாரேனும் இறந்து போனாலோ தங்கள் சோகம் முழுவதையும் ஒப்பாரியில் வெளிப்படுத்துவார்கள் பெண்கள்.

புதினத்தில் ஆசிரியர் ஒப்பாரிப் பாடலைப் புகுத்தியுள்ளார். சின்னப்பொண்ணுவின் தாய் கோவிந்தம்மாள் இறந்ததைக் கண்டு வாய்விட்டுக் கதறி ஒப்பாரி வைத்தாள் சின்னப்பொண்ணு

“என்னைப் பெத்த அம்மாவே!

என்னைப் பெத்த அருமையென்ன

பேரிட்ட நேர்த்தி என்ன?

ஆத்தக் குறுக்கடைச்சி

அழகுச் சம்பா நெல் வெதைச்சி

ஆத்துத் தண்ணி வத்தவந்த

அழகு சம்பா வாடுறனே

குளத்தைக் குறுக்கடைச்சி

குலவிளக்கு நெல் வெதைச்சி

 குளத்துத் தண்ணி வத்தவந்த

பெத்தமக குலவாழை வாடுறனே

துண்டியலு போன இடம் எனக்குத்

தடமே தெரியலியே! உங்க

பல்லக்குப் போன தம் எனக்குப்

பாதை தெரியலியே!”11

என்று மார்பில் அடித்துக்கொண்டு பொங்கிப் பொங்கி அழுதாள் சின்னப்பொண்ணு

“பார்க்க விரும்புறேனே உன்னைப்

பார்த்திருக்க தேடுறேனே

காண விரும்புறேனே உன்னைக்

கண்டிருக்கத் தேடுறேனே”12

என்று முனியம்மாவைக் கட்டிப்பிடித்து ஒப்பாரி வைத்தாள் சின்னப்பொண்ணு. ஒரு பெண் துயரப்படும் போது தன் வருத்தத்தைப் பாட்டாகப் பாடுவாள். தன் மகன் குழிக்குள் விழுந்ததைக் கண்டு முனியம்மா மனம் நொந்து புலம்புவதை நாவலின் வழி அறியமுடிகிறது.

சுவரில் சாய்ந்திருந்த தன் மகன் சுரேசை முனியம்மா தாவங்கொட்டையைப் பிடித்து வாயை வலுக்கட்டாயமாகத் திறக்க வைத்துத் தண்ணீரை ஊற்றினாள். பாதி உள்ளேயும் பாதி வெளியேயுமாய் வழிந்து போனது. ஐயோ எம்புள்ளக்கிப் பேச்சில்லை, சிரிப்பில்லை, எம்மா ஆத்தான்னு குரல் இல்லையென்று ஒப்பாரி வைக்கிறாள்

“அள்ளி வச்ச மண்ணாட்டம்

அப்படியே கெடக்கானே

தள்ளி வச்ச கல்லாட்டம்

தடுமாறிக் கெடக்கானே”13

என்று மார்பில் அடித்துக் கொண்டு அழுகையில் பெண்களின் சோகம் வெளிப்படுகின்றது. இவ்வாறு ஆசிரியர் நாட்டுப்புறப் பாடல்களைப் பல நிலைகளில் பயன்படுத்தியுள்ளார்.

முடிவுரை:-

ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் என்னென்ன தனித் தன்மைகள் இருக்கின்றனவோ அவை அனைத்தையும் ஒரு படைப்பாளர் பதிவு செய்யும்போதுதான் அந்தப் படைப்பு நிறைவடையும். அப்பணியைப் படைப்பாளர் முழுமையாகச் செய்துள்ளார் என்பதை அவர் புதினங்களை ஆராயும்போது அறிந்து கொள்ள முடிகிறது. இந்நாவலில் பழமொழிகள், நாட்டுப்புறப்பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள் போன்றவற்றின் அடிப்படையில் நாட்டுப்புறக் கூறுகளை ஆசிரியர் கையாண்டுள்ளார்.

பார்வை நூல்கள்:-

  1. தகனம் - ஆண்டாள் பிரியதர்ஷினி
  2. தமிழில் வட்டார நாவல்கள் - சு.சண்முகசுந்தரம்
  3. தொல்காப்பியம் - தொல்காப்பியர்

ப.இந்திரா, ஒரத்தநாடு அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முனைவர் பட்ட ஆய்வாளர்.

Pin It