தோழர் மணிகோ. பன்னீர்செல்வம் தனித்தமிழ் இயக்கத்தின் வாசிப்புமுறையும் வரலாறெழுதியலும் எனும் இருபொருண்மைகள் குறித்து ‘வளமிக்க உளமுற்ற தீ’ எனும் தலைப்பில் உருவாக்கியுள்ள இக்குறுநூலை வாசித்தபோது பல்வேறு வரலாற்றுப் பரிமாணங்கள் மேலெழுந்த மனநிலை உருவானது. அவற்றைத் தொகுப்பாகத் தருகிறேன்.
இதன்மூலம் இவ்விரு கட்டுரைகளின் பேசுபொருள் குறித்தப் புரிதலை உள்வாங்க இயலும். இக்கட்டுரைகளின் பேசுபொருளாக இருக்கும் தனித்தமிழ் இயக்கத்தை எப்படிப் புரிந்துகொள்வது என்பது முதன்மையான உரையாடலாகும்.
இன்றைய சூழலில் இந்தியா என்று அழைக்கப்படும் நாட்டின் தொல்வரலாறு என்பது திராவிடர்-ஆரியர் என்ற இருமைக்குள் அடங்கியது. இது வைதீகர்கள் உள்வாங்கும் முறை, காலனிய மரபு சார்ந்த ஆய்வாளர்கள் புரிந்துகொண்ட முறை, திராவிட மரபை முன்னெடுப்பவர்கள் முன்வைக்கும் உரையாடல்கள் எனப் பல பரிமாணங்களைக் கொண்டது.
திராவிடர்-ஆரியர் என்ற இருமைக்குள், மொழி முதன்மைப்பட்ட, இனம் சார்ந்த உரையாடல்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதைக் காணமுடிகிறது.
இனத்தின் விடுதலைக்காக மொழி சார்ந்து நிகழ்ந்தனவற்றை வரலாறாக எழுதுதலும் மொழியே இனத்தின் முதன்மையான அடையாளமாக தொழிற்பட்டமையும் குறித்தப் புரிதல் அவசியம். ‘தனித்தமிழ் இயக்கம்’ எனும் சொல்லாடலை மேற்குறித்தப் பின்புலத்தில் புரிந்துகொள்வது அடிப்படையான தேவையாகும்.
- வரலாறெழுதியல் தரவுகள் என்பவை வழக்காறுகள், தொல்புழங்குபொருட்கள், தொல்லெழுத்தியல், தொல் இலக்கியம், தொல் இலக்கணம், புராணியக் கதைகள், தொன்மங்கள் எனப் பலவகையிலும் அமைகின்றன. தமிழ்மொழி, இனம் சார்ந்த வரலாறெழுதியலில் தொல்பொருட்கள், தொல்லெழுத்தியல், தொல் இலக்கியம் மற்றும் இலக்கண மரபுகள் முதன்மையான பங்கு வகிக்கின்றன.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (1924) அங்கீகரிக்கப்பட்ட சிந்துசமவெளி நாகரிகம் தொடங்கி இன்றைய கீழடி அகழ்வாய்வு வரை இம்மரபுக்கான நேரடித் தரவுகள் உள்ளன. ஆனால் வைதீக அல்லது சமஸ்கிருத மரபு அல்லது பிராமண மதம் எனப்படும் பார்ப்பனிய மரபு என்பது புராணிய தொன்ம மரபுகளையே முதன்மையாகக் கொண்டுள்ளது.
மொழி, இனம் சார்ந்து தரவுகள் புராணிய மரபுசார்ந்த கட்டமைப்பே. தொல்லியல் சார்ந்த தரவுகள் முதன்மையாக இல்லை. தொல்லெழுத்தியல் மரபு தமிழுக்கு இருப்பதைப் போல் சமஸ்கிருதத்துக்கு இல்லை. தர்க்க மரபு சார்ந்த வரலாற்றெழுதியலுக்கு புராண மரபைக் கொள்ள இயலாது. இவ்வகையில் தமிழ்-சமஸ்கிருதம் சார்ந்த உரையாடல்களை முன்னெடுக்கும் தேவையுள்ளது.
- தமிழ்ப் பனுவல் மரபில் செந்நெறி இலக்கியம், செந்நெறி இலக்கணம் ஆகியவை தொடங்கி வைதீக மரபுகள் குறித்தப் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. செந்நெறி இலக்கிய, இலக்கணங்களில் வைதீக மரபு என்பது வெறும் தகவல் மரபாகவே பதிவாகியுள்ளது.
பின்னர் செல்வாக்குடன் வளர்ந்து வைதீக மரபு, செவ்வியலக்கிய இலக்கண மரபுகளில் மேற்கோள்களாக, சமகாலத்தில் இருந்த ரிதொரு செய்தியாகவே இடம்பெறுகிறது. அவை தமிழ்மரபாகப் பேசப்படவில்லை.
அவ்வாறு இடம்பெறுவின் அளவு என்பதும் மிகமிகக் குறைவான விழுக்காடுதான். ஆனால் வைதீக மரபு சிலப்பதிகாரப் பனுவல் தொடங்கிப் படிப்படியாக தமிழ்மரபை உள்வாங்கி, அதுவே தமிழ் மரபு என்று கருதும் அளவில் இடம்பெறுவதைக் காண்கின்றோம்.
பொதுஆண்டு பின் 600 முதல் அதிகார மொழியாக, வைதீக அடையாளமாக சமசுகிருதம் உருவானது. சமசுகிருத மொழியின் ஒலிக்கூறுகளைப் பதிவு செய்வதற்காக கிரந்தம் அல்லது பல்லவ கிரந்தம் எனப்படும் எழுத்துருக்களை உருவாக்கும் தேவை உருப்பெறுகிறது.
மணிப்பிரவாளம் உருப்பெற்றது. மேற்குறித்தப் பின்புலத்தில், தமிழ்ப் புலமையாளர் மரபு உருவாகிறது. இருமொழிப் புலமைத்துவம் உருப்பெற்றது. நச்சினார்க்கினியர், பரிமேலழகர் போன்றோர் இவ்வகையில் அமைவர். இம்மரபினர் ஆகமம் எனும் சடங்கு மற்றும் கலை வரலாற்றுப் பனுவல்களை மணிப்பிரவாள சமசுகிருதத்தில் பதிவு செய்கின்றனர். இதனால் தமிழ் மரபு சாரந்¢த கலை வரலாறு திரிக்கப்படுகிறது. இதன் பிற்கால எழுச்சியாகவே மொழிசார்ந்து தனித்தமிழ் இயக்கமும் இசை சார்ந்து தமிழிசை இயக்கமும் உருவாகிறது.
- இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார், சுப்பிரமணிய சிவா ஆகியோர் முன்னிலைப்படுத்திய தனித்தமிழ் செயல்பாடுகள் என்பவை அண்மைக் காலங்களில் பல்வேறு நுண் அரசியல் தன்மை மிக்கனவாக உரையாடலுக்குட்படுத்தப்படுகிறது. வி.கோ.சூ. அவர்கள் தமிழ்மொழிமீது மிகுந்த மதிப்புடையவர் என்பதில் இரண்டு கருத்தில்லை. தமிழின் செந்நெறி மரபு குறித்துப் பதிவு செய்தவர்களில் முன்னோடி.
இவர் தனது பெயரைப் பரிதிமாற்கலைஞர் என்று மாற்றி எழுதியது, ஒரு புனைபெயராக மட்டுமே தனித்தமிழ் எனும் நோக்கில் இல்லை என்பதை அவரது பதிவுகள் வழி அறிய முடிகிறது. எனவே அவருக்கும் தனித்தமிழ் இயக்க மரபுக்குமான தொடர்பை வேறுபடுத்திப் புரிதல் தேவையாகிறது. (விரிவுக்குப் பார்க்க: கு. திருமாறன், தனித்தமிழ் இயக்கம், தமிழ்மண் பதிப்பகம், சென்னை-17. பக்.66-70, 2003)
- சுப்பிரமணிய சிவா, வைதீக மரபின்மீது ஈடுபாடுகொண்ட விடுதலைப் போராட்ட மரபினர். இவர் மொழிக்கலப்பைத் தவிர்க்க வேண்டும் எனும் கருதுகோளை முன்வைத்தார். இவரது காலத்தில், தமிழில் இதழியல் வளர்ச்சிபெற்று வந்தது. இதழ்களில் ஆங்கில மொழிச் சொற்கள் கலப்புறுவதை அவரால் ஏற்க இயலவில்லை; மாறாக மணிப்பிரவாள கலப்பை அவர் மறுத்தார் என்று சொல்வதற்கில்லை.
அவரது மொழிநடை என்பதே மணிப்பிரவாளமே. வைதீக மரபு என்பது சமசுகிருத மரபை முதன்மைப்படுத்துவது. இருபதாம் நூற்றாண்டில் அம்மரபு, ஆங்கிலத்தை எதிர்க்கும் பார்ப்பனீய மரபாக வடிவம் பெற்றுள்ளது. ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவ அமைப்புகள் ஆங்கிலத்தை மறுப்போர் ஆவர்.
அந்த இடத்தில் சமஸ்கிருதம், இந்தி ஆகியவை இடம்பெற வேண்டும் என்னும் கோட்பாட்டினர். சுப்ரமணிய சிவாவின் தனித்தமிழ் செயல்பாடுகளை இந்த கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ள வேண்டும். 1960களில் உருவான தமிழியக்கம் என்னும் அமைப்பு மணிப்பிரவாளம், ஆங்கிலம் இரண்டின் கலப்பையும் எதிர்த்தது. இவ்வமைப்பை
பேரா. இரா. இளவரசு மற்றும் தமிழ்க்குடிமகன்,
ந. அரணமுறுவல் ஆகியோர் முன்னின்று நடத்தினர். இந்த இயக்கத்தின் பார்வை போன்றது அன்று சுப்ரமணிய சிவா பார்வை என்னும் புரிதல் தேவை. இதனைப் புரிந்துகொள்ள தமிழிசை இயக்கம் என்பதை இராசாசி மற்றும் கல்கி ஆகியோர் தமிழ்ப் பாட்டு இயக்கம் என்றனர். (பார்க்க: ஆனந்த விகடன் 2.3.1939) தமிழ் மரபில் இசை மரபு இல்லை என்பது அவர்களது முடிபு.
- தமிழ்ச் சமூக சீர்திருத்துவ மரபுகளை பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் முன்னெடுத்தவர்களின் வரிசை என்பது வள்ளலார், அத்திப்பாக்கம் வெங்கடாசலனார், மறைமலையடிகள், ஈ.வெ.ரா. பெரியார் என்றே அமைகிறது. இதில் மறைமலையடிகளை தமிழ்ச் சமூக சீர்திருத்த மரபினராகக் கருதாமல் வெறும் சைவ சீர்திருத்த மரபாகக் காணும் பார்வை உள்ளது. இதனை மறுபரிசீலனை செய்யும் தேவையுண்டு.
வைதீக மரபுக்கு மாற்றாக சைவ மரபை மறைமலையடிகள் முன்னெடுத்தார். ஒருவகையில் பின்னர் உருவான திராவிட இயக்க முன்னோடித் தன்மையாக அதனைக் கொள்ள வேண்டும் என்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. (ரவி வைத்தீஸ்வரன்: தமிழ்ச் சமூகத்தில் சமயம்-சாதி-கோட்பாடு, மேன்மை வெளியீடு: 2016, பக். 120-139). வள்ளலார் உருவாக்கிய ‘சமரச சன்மார்க்கம்’ என்பதைப் ‘பொதுநிலைக் கழகம்’ என்று வடிவம் கொடுத்தார்.
இதில் வைதீக மறுப்பு, சாதி மறுப்பு ஆகிய பல்வேறு சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டன. பொதுநிலைக் கழகத்தின் கோட்பாடுகளில் ஒன்றாகவே “தனித்தமிழ்” மரபும் உருவானது. பொதுவெளியில் மறைமலையடிகளை சமய மரபாகக் கருதும் மனநிலை அடிப்படையில் தவறானது என்ற உரையாடலை முன்னெடுக்கும் தேவையுண்டு.
- காலனியக் கல்வி சார்ந்த ஆங்கில வழிப் படிப்பு மரபால், தமிழ்ச்சூழலுக்கு ஓர் புதிய புலமைத்துவ மரபு உருவானது. இவ்வாறு உருவான புலமையாளர்கள், சைவ மறுமலர்ச்சி இயக்கம், சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் ஆகியவற்றில் தொடர்புடையவர்களாக இருந்தனர்.
இவர்கள் தனித்தமிழ் இயக்கத்தின் மீதும் ஈடுபாடு கொண்டனர். இதன் விளைவு இவர்களது மொழி மணிப்பிரவாளத்தைத் தவிர்க்கத் தொடங்கியது. வைதீக மரபை விமர்சனக் கண்ணோட்டத்தில் பார்த்தனர். இதன்மூலம், தமிழியல் ஆய்வு மரபில் தனித்தமிழ் இயக்கத்தின் தாக்குரவை நாம் புரிந்துகொள்ளவேண்டும். திரு.வி.க.,
பா.வே. மாணிக்க நாயகர், சி. இலக்குவனார் போன்ற பலரை, இக்குறுநூல் மேற்குறித்த வகையில் அடையாளப்படுத்துகிறது. இத்தன்மை மொழிவழி உருவாகும் சிந்தனை மரபு, ஆய்வு மரபிலும் செல்வாக்கினைச் செலுத்தும் என்ற புரிதலுக்கு நம்மை இட்டுச்செல்கிறது.
- மறைமலையடிகள், தனித்தமிழ் என்ற கருத்தாடலை, பொதுநிலைக் கழகத்தின் பல கோட்பாடுகளில் ஒரு கோட்பாடாகக் கட்டமைத்தார். ஆனால் இம்மரபு பின்னர் பாவாணர், பெருஞ்சித்திரனார், இளவரசு ஆகிய பலரால் இனவிடுதலைப் போராட்டத்தின் ஒரு கூறாக முன்னெடுக்கப்பட்டது.
சுயமரியாதை இயக்க மரபின் ரிதொரு கிளையாக இது வடிவம் பெற்றது. பாவாணரின் ஆய்வு மரபுகள், வைதீக மரபு எவ்வாறெல்லாம் தமிழியல் மரபில் ஊடாட்டங்களை உருவாக்கியுள்ளது என்றும், அதனை நீக்குவது தொடர்பான ஆய்வாகவும் அமைந்தது.
இயக்கவியல் மரபின் ஒரு கூறாக அது அமைந்தது. அதனால் அத்தன்மையை தமிழின் பொதுவெளி புரிந்து கொண்டதாகக் கூறமுடியாது. தமிழ்க் குடிமகன் போன்ற திராவிடக் கருத்துநிலை சார்பினர் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தபோது, பாவாணர் ஆய்வுகளுக்கு இருக்கை அளிக்கப்பட்டது.
அவரது சொற்பிறப்பியல் அகரமுதலி உருவாக்கம் அங்கீகரிக்கப்பட்டது. இத்தன்மை மறைமலையடிகள் உருவாக்கிய தனித்தமிழ்க் கருத்தாடலின் புலமைத்துவ மரபாக வடிவம் பெற்றது. ஆனால் தமிழகத்தில் செயல்பட்ட கல்வியாளர்களின் ஒப்புதல் பாவாணரின் செயல்பாடுகளுக்குக் கிடைக்கவில்லை என்பதையும் நாம் புரிந்துகொள்ள முடிகிறது. இத்தன்மை குறித்து உரையாடலை மேற்கொள்வதும் அவசியம்.
- காலனித்துவ நவீனக்கல்வி மரபின் செல்வாக்கு தமிழ்ச்சூழலில் வேர்கொண்டது. சித்தாந்த தீபிகா, (1897-1914), Tamilian Antiquary (1903-1914) ஆகிய ஆய்வு இதழ்கள் அம்மரபின் முன்னோடிகள். இந்தப் பின்புலத்தில் மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் (1901), சைவ சித்தாந்த சமாஜம் (1905), Tamilian Archeological Society (1905) ஆகிய நிறுவனமய அமைப்புகள் உருவாயின. இவற்றில் மறைமலையடிகள் தொடர்புகொள்ளும் வாய்ப்பும் ஏற்பட்டது.
இம்மரபு காலனிய நவீனத்துவ ஆய்வு மரபுகளை தமிழ்ப்பனுவல்கள் குறித்த ஆய்வில் நடைமுறைப்படுத்தினர். செம்மொழி இலக்கியம், இலக்கணம் ஆகியவை பதிப்பு எனும் அச்சு வடிவம் பெற்றமையும் இவர்களது செயல்களுக்கு உந்துதலாக அமைந்தது.
இத்தன்மை பின்னர் பல்வேறு தமிழ் அமைப்புகள், தமிழ் பயிற்றும் நிறுவனங்கள், தமிழ் நூல் அச்சிடும் பதிப்பகங்கள், தமிழை முதன்மைப்படுத்தும் இதழ்கள் எனப் பல பரிமாணங்களில் வளர்ந்தது.
திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், கரந்தைத் தமிழ்ச்சங்கம், “செந்தமிழ்ச்செல்வி”, “தமிழ்ப்பொழில்”, “சித்தாந்தம்”, “தமிழர்” ஆகிய இதழ்கள் உருவாக்கம் ஆகிய பல வைதீக மரபை எதிர்கொண்ட வரலாற்றில், இயல்பாகவே தமிழை முதன்மைப்படுத்தின.
இதன் உடன்விளைவாக ஏற்பட்ட மாற்றங்களுக்கும் அன்றைய சூழலில் முன்னெடுக்கப்பட்ட தனித்தமிழ் என்ற கருத்தாடலுக்கும் நெருக்கமான உறவு இருப்பதாகப் புரிந்துகொள்ள முடிகிறது. இத்தன்மை பின்னர் திராவிட இயக்கப் பண்பாட்டு நடைமுறைகளில் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்தும் உரையாடலுக்குட்படுத்தவேண்டும்.
மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் மற்றும் சைவ சமாஜம் ஆகியவற்றின் தமிழ்நூல் பதிப்புப் பணியையும் இப்பின்புலத்தில் புரிந்துகொள்ள வேண்டும். மதுரைத் தமிழ்ச் சங்கம், தமிழ், சமசுகிருதம் ஆகியவற்றிடையே ஒருவகையான இணைப்பு ஓர்மையைக் கட்டமைக்க முயன்ற வரலாற்றையும் புரிந்துகொள்வது அவசியம். அது தமிழ்ச் சூழலில் வைதீகத்தின் செல்வாக்கு குறித்துப் புரிந்துகொள்ள உதவும்.
- சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதித்திட்டம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் திராவிட மொழி ஆய்வு மையம் ஆகியவற்றோடு பாவாணர் கொண்ட எதிர்நிலை முரண்பாடுகளை எவ்வாறு புரிந்துகொள்வது என்பது அவசியம். இதில் ச. வையாபுரிப்பிள்ளை, தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் ஆகிய புலமைத்துவ ஆளுமைகளிடம் முரண்பட நேர்ந்தது.
இதில் இவர்களுக்குள் நிகழ்ந்த ஆய்வு சார்ந்த முரண்கள் என்பதைவிட, இவர்கள் நம்பிய கருத்துநிலை முதன்மைப்படுகிறது. வையாபுரியார், தெ.பொ.மீ. ஆகியோர் தேசியக் கருத்தாடலில் நம்பிக்கை உள்ளவர்கள். தெ.பொ.மீ; ம.பொ. சிவஞானம் முன்னெடுத்த தேசிய நீரோட்டம் சார்ந்த தமிழியல் மரபை ஏற்றுக்கொண்டவர்.
தெ.பொ.மீ., இரா.பி. சேதுப்பிள்ளை, மா.ரா.போ. குருசாமி, இராசமாணிக்கனார், ந. சஞ்சீவி ஆகிய பிற தமிழ்ப் பேராசிரியர்கள் ம.பொ.சி முன்னெடுத்த இந்திய தேசியத்தை உள்வாங்கிய தமிழ்த்தேசிய கருத்தாடலை முன்னெடுத்தவர்கள்.
இந்த மரபுக்கு நேரெதிரானவர் பாவாணர். இந்தத் தன்மைகள் இவர்களுக்குள் நிகழ்ந்த முரண்களின் மூலமாக அமைகிறது. திராவிட இயக்க அதிகார மரபு உருப்பெறும் சூழலில் பாவாணர் கவனத்துக்குக் கொண்டுவரப்படுகிறார்.
இந்தியத் தேசியம் சார்ந்த தமிழ்த்தேசியம், இந்திய தேசியம் சாராத தமிழ்த் தேசியம் எனும் கருத்துருக்களை முதன்மைப்படுத்தி இதனைப் புரிந்துகொள்வது அவசியம். பாவாணர் ஒடுக்கப்பட்ட மரபில் பிறந்து வளர்ந்தவராக அடையாளம் காணப்பட்டதும், இந்திய தேசியம் சார்ந்த தமிழ்த் தேசியம் சார்ந்தவர்களால் ஏற்புடையதாக இருக்க வாய்ப்பில்லை. இதில் செயல்படும் நுண் அரசியல் குறித்தும் உரையாடுவது அவசியம்.
- பாவாணரின் வேர்ச்சொல் ஆய்வு என்பது வைதீகம் முன்னெடுக்கும் சமசுகிருத மொழி முதன்மைக்கான எதிர்நிலைப்பாடு என்று கூற முடியும். இதன்மூலம் மொழியின் பழைமை, மொழியின் அமைப்பு, மொழியின் வரலாறு ஆகிய பல கூறுகள் முன்னுக்கு வந்தன.
இது நவீன காலத்தில், தனித்தமிழ் சார்ந்த அகராதி மற்றும் கலைச்சொல் உருவாக்கத்தில் முதன்மையான பங்களிப்பு செய்திருப்பதை இக்குறுநூல் உரையாடலுக்குட்படுத்துகிறது. நவீன சமூகச் செயல்பாடுகளுக்கும் தனித்தமிழ் மரபுக்குமான தொடர்பாக இதனை புரிந்துகொள்வது அவசியம். இத்தன்மை குறித்து விரிவாக எழுத வேண்டிய தேவையுள்ளது.
- தமிழ்த்தேச விடுதலை எனும் கருத்தாக்கத்தில் பெரியார் முன்னெடுத்த பல கருத்தாக்கங்கள் பின்னர் பெருஞ்சித்திரனார், இளவரசு, அரணமுறுவல் போன்ற பல தனித்தமிழ் அறிஞர்களால் முன்னெடுக்கப்படுகிறது. இதன் தொடர் வளர்ச்சியாக மார்க்சிய லெனினிய இயக்க மரபில் செயல்பட்ட தோழர் தமிழரசன் முன்னெடுத்த தமிழ்த் தேசிய விடுதலை மரபில் பெருஞ்சித்திரனார், அரணமுறுவல் ஆகியோரின் பங்களிப்பு இருந்தது.
எனவே மொழித் தூய்மை என்பது தமிழ்த் தேசியக் கருத்தாடலின் ஒரு பகுதியாகவே செயல்பட்டிருப்பதைக் காணலாம். இப்போது பெருஞ்சித்திரனாரின் மகன் பொழிலன் செயல்படும் ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணிக்கும் தனித்தமிழ் இயக்க மரபுக்குமான உறவுகளைப் புரிந்து கொள்ளும் தேவையுண்டு.
- தமிழக வரலாறு பற்றி எழுதும் காலனிய மரபு ஆய்வாளர்கள் மற்றும் பிற நவீன ஆய்வாளர்கள் முன்னெடுக்கும் தரவுகளுக்கு முற்றிலும் வேறான தரவுகளை தனித்தமிழ் இயக்கம் பின்புலத்தில் உருவான ஆய்வாளர்கள் முன்னெடுப்பதைக் இக்குறுநூல் அடையாளப்படுத்துகிறது.
பின்னர் அவர்கள் மக்களின் நேரடி வாழ்க்கை, செயல்பாடுகளை முதன்மைப்படுத்துவர். முன்னவர்கள் கிடைக்கும் தரவுகளை விவரணப்படுத்துவர். ஆக, தமிழக வரலாறு, தமிழ் இலக்கிய-இலக்கண வரலாறு ஆகியவை எழுதுதலிலும் தனித்தமிழ் இயக்க மரபு தொழிற்படுதலை இக்குறுநூல் கவனப்படுத்துகிறது.
- வைதீக மரபில் தொழிற்படும் புராணிய மரபு, வைதீக கருத்து நிலைகளை உள்வாங்கும் மரபு, மொழிக்கலப்பில் சமசுகிருதம் - ஆங்கிலம் ஆகியவற்றின் நிலைபாடுகள், மறைமலையடிகளின் சீர்திருத்த கருத்துநிலை, தமிழ்ச்சூழலில் தனித்தமிழ் மரபை அங்கீகரிக்கும் புலமைத்துவ மரபு உருவாக்கம், மறைமலையடிகளின் கருத்துநிலை வளர்ச்சி, தமிழியல்சார் அமைப்புகளில் தனித்தமிழ் கருத்துநிலை பெறுமிடம், இந்திய தேசியம் சார்ந்த தமிழ்த் தேசிய மரபினரின் தனித்தமிழ் கருத்துநிலை, கால ஆய்வும் பாவாணர் வேர்ச்சொல் ஆய்வும் சந்திக்கும் புள்ளிகள், நவீன தொழிற்பாடுகளான அகராதி மற்றும் கலைச்சொல் உருவாக்க மரபில் தனித்தமிழ் மரபின் தாக்கம், தமிழ்த்தேச விடுதலைக் கருத்தியலுக்கும் தனித்தமிழ் மரபுக்குமான உறவு, தமிழ் வரலாறு மற்றும் தமிழ் இலக்கிய வரலாறு எழுதுகையில் தனித்தமிழ் கருத்துநிலைபெறுமிடம் ஆகிய பல உரையாடல்கள் குறித்த குறிப்புகளை மேலே முன்வைத்துள்ளோம்.
தோழர் பன்னீர்செல்வத்தின் கட்டுரைகளில் இடம்பெறும் கருத்தாடல்கள் இவ்வகையான உரையாடலுக்கு நம்மை இட்டுச் செல்கிறது. இந்த உரையாடலை தமிழியல் ஆய்வுலகம் மேலும் மேலும் வளர்த்தெடுக்க வேண்டுகிறேன். அதற்கான சிறுபெரியாக இக்குறுநூல் அமைகிறது. தோழருக்கு பாராட்டுக்கள். இக்குறிப்புகளை பதிவுக்குட்படுத்த வாய்ப்பளித்தமைக்கு நன்றி பாராட்டுகிறேன்.
பார்வை நூல்கள்:
- 2003. திருமாறன். கு., தனித்தமிழ் இயக்கம், இரண்டாம் பதிப்பு, தமிழ்மண் பதிப்பகம், சென்னை.
- 2004. மறைமலையடிகள், தமிழரின் தனிச்சிறப்பு, மூன்றாம் பதிப்பு, வசந்தா பதிப்பகம், சென்னை.
- 2013. அரசு. வ¦., தமிழிசை-தமிழ்க்கல்வி (குறுநூல்), முதல் பதிப்பு, நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை.
- 2016. ரவி வைத்தீஸ்வரன்; ரா. ஸ்தனிஸ்லாஸ் (தொகுப்பு) தமிழ்ச் சமூகத்தில் சமயம்-சாதி-கோட்பாடு, முதல் பதிப்பு, மேன்மை பதிப்பகம், சென்னை.
- 2017. இளஞ்சென்னியன்.சி., அன்பரசு.
க., (தொகுப்பு) தமிழ்-சமற்கிருதம் - தனித்தமிழ் இயக்கம், முதல் பதிப்பு, தமிழ் பதிப்பகம், காளையார்கோவில்.
குறிப்பு: திரு. மணிகோ பன்னீர்செல்வம் அவர்களது நூலிற்கு எழுதிய அணிந்துரை,
வளமிக்க உளமுற்ற தீ:
தனித்தமிழ் இயக்கத்தின்
வாசிப்புமுறையும் வரலாறெழுதியலும்
மணிகோ. பன்னீர்செல்வம்©
வெளியீடு : பரிசல் புத்தக நிலையம்
அரும்பாக்கம், சென்னை - 600 106.
விலை : ரூ. 120/-
- வீ. அரசு