vatratha bookபிறப்பும், இறப்பும் மனித வாழ்க்கையின் இரு பக்கங்கள். ஒரு நாணயத்தின் இரு பக்கங்களையும் போலத்தான் இவ்விரு அம்சங்களும் மனிதர்களைக் காலம் காலமாக இயக்கிக் கொண்டிருக்கின்றன.

மனிதன் “பிறக்கும் போதும் அழுகின்றான், இறக்கும் போதும் அழுகின்றான்ஞ்’ என்று தமிழ்த்திரைப் படப்பாடல் ஒன்று புகழ்பெற்றது; மறக்க முடியாத கலைஞரான சந்திரபாபுவின் குரலையும், முகபாவங்களையும், இந்தப்பாடலுக்கு உயிர்கொடுத்து நிலைபெறச்செய்த அவர் நடிப்பையும், இசையமைப்பையும், கருத்துகளையும் யாரால் மறக்க இயலும்?

மிகப்பெரிய ஆளுமைகளாக, நாடே அறிந்து போற்றிக் கொண்டிருக்கும் கலைஞர்களாக, எழுத்தாளர்களாக, நாடகக் காரர்களாக, சிந்தனையாளர்களாக யாராக இருந்தாலும் ஒரு நாள் இல்லாவிட்டால் இன்னொரு நாள் அவர்களின் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடுகிறது.

சாதாரண மனிதர்களுக்கு அதோடு எல்லாமே முடிந்து போகின்றன. அவர்களுடைய உற்றார் உறவினர்கள், மனைவி மக்கள் ஆகியோரின் நினைவுகளில் மட்டுமே அவர்கள் கொஞ்சகாலம் வரை ஆழமான பாதிப்பை ஏற்படுத்தி வருவார்கள்.

அதன் பிறகு மெல்ல மெல்ல அத்தகைய மனிதர்களின் நினைவுகள் மங்கி மறைந்து போகும். ஆனால், சமூகத்தின் மேன்மைக்காக, இலக்கிய உலகின் உன்னதங்களுக்காக, கலைத் துறைகளின் சிகரங்களை எட்டுவதற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு அவற்றுக்காகவே வாழ்ந்து மறைந்த இவ்வாறான இன்னபிற பல்துறை வல்லுனர்களைப் பொருத்தவரை மரணம் என்பது அவர்களுடைய உடல்களை மட்டுமே நமது பார்வைக்கு எட்டாமல் கவர்ந்து சென்று விடுகிறது.

கலைவடிவில், இலக்கியங்களின் மூலம், நாடகங்களின் பாத்திரங்களில், திரைப்படப்பிரதிகளில், இசைப்பாடல்களின் சுரங்களின் இழைகளில் அத்தகைய புகழ்பெற்ற நிபுணர்கள் அழியாமல் நிலைபேறு பெற்றவர்களாக ஆகிவிடுகிறார்கள்.

மறைந்தவர்களுக்கு மணிமண்டபங்களையும், நினைவுச்சின்னங்களையும், தாஜ்மஹால் போன்ற கலையழகு மிக்க கட்டடங்களையும் எழுப்புவது உலக வழக்கம். ஆனால், ஓர் எழுத்தாளரின் வாழ்வில், அவருடைய மதிப்புக்கும், அன்புக்கும், ஏன், வழிபாட்டுக்கும் உரிய ஆளுமைகளின் மறைவுச்செய்திகள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகின்றன? செய்தியைக் கேட்டதும், எல்லாரையும் போல முதல் எதிர்வினை மனமும், கண்களும் கலங்கிப்போய், நிலைகுலைந்து செயலற்றவர்களாக உறைந்துபோவதுதான்.

பின், இறந்தவர்களின் மறைவுக்கு அஞ்சலியை நேரில் சென்று செலுத்தி விட்டு அங்கே திரண்டிருக்கும் அன்பர்களோடு மறைந்த ஆளுமைகளின் வாழ்னாள் சாதனைகளை நினைவுகூர்ந்து உரையாடிவிட்டு, எதையோ பறிகொடுத்து விட்ட கையறு நிலையில் வீடு திரும்புவது நடக்கும்.

இதற்குப்பின், மறைந்தவர்களின் மீது இவர்கள் கொண்டிருக்கும் நேசமும், மதிப்பும், அவர்களிடமிருந்து இவர்கள் கற்றதும் பெற்றதும் எவ்வளவு அடர்த்தியும் ஆழமும் கொண்டவையோ அவற்றைப் பொருத்து இவர்களின் எழுத்தில் அல்லது ஏனைய கலைவடிவங்களில் அந்த உணர்வுகள் எழுச்சி பெற்றுத் திரண்டு மண்ணைப் பிளந்து கொண்டு வெளிக்கிளம்பும் விதைகளைப் போல் வெளிப்படுகின்றன.

இந்தப் பதிவுகள், விசுவரூபம் பெற்று வாசிப்பவர்கள் அல்லது ரசிகர்களின் மனங்களில் மறைந்த ஆளுமைகளின் முழுமையான தரிசனங்களைத் தந்து விடுபவையாக ஆகின்றன.

பாவண்ணன் அவர்கள் நாடறிந்த நல்லதோர் எழுத்தாளர். நாவல்கள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், கவிதைகள், குழந்தைகளுக்கான பாடல்கள், கட்டுரைகள் என இலக்கியத்தின் எல்லா வகைமைகளிலும் முத்திரை பதித்து வரும் அற்புதமானதொரு மனிதர்.

எல்லாரிடமும் அன்புடனும், இயல்பான எளிமையுடனும் பழகி நட்புகளைச் சம்பாதித்திருக்கும் அன்புக்குரியவர். அவருடைய கலைமனம் எழுத்தில் வடித்திருக்கும் இரங்கல் கட்டுரைகளின் தொகுப்பு ‘வற்றாத நினைவுகள்’.

கல்லூரிக்காலத்தின் ஆசானாக விளங்கிய ம.இலெ.தங்கப்பா, ஜெயகாந்தன், கன்னட இலக்கிய உலகத்தின் கொடுமுடிகளாகத் திகழ்ந்த கிரீஷ் கர்னாட், யு.ஆர்.அனந்தமூர்த்தி, தமிழில் புரட்சிகர இலக்கியப் படைப்புகளின் முன்னோடிகளில் ஒருவரான இன்குலாப், தி.க.சிவசங்கரன், சுஜாதா, “என்னைக்கேட்டால்’ என்.எஸ்.ஜெகன்னாதன், சின்னக் குத்தூசி, மொழி பெயர்ப்பாளர்கள் தி.சு.சதாசிவம், சு.கிருஷ்ணமூர்த்தி, சித்தலிங்கையா, கவிஞர் ஞானக்கூத்தன் போன்ற மகத்தான ஆளுமைகளைப் பற்றிய தன் நினைவுகளை இருபது கட்டுரைகளில் ஒரு நதியின் வெள்ளப் பெருக்கைப் போல் பெருகச்செய்திருக்கிறார்.

இவற்றுள், ம.இலெ.தங்கப்பாவுக்கு மட்டுமே மூன்று கட்டுரைகள் உள்ளன. அதே போல, கிரீஷ் கர்னாட் நினைவுகளைப் பற்றி இரு கட்டுரைகள், அவருடைய ஒரு நேர்காணல் மொழிபெயர்ப்பு  - என மூன்று கட்டுரைகள் எழுதியிருக்கிறார் பாவண்ணன்.

முன்னுரையை வாசிக்கும்போதே அடுத்துவரப்போகும் நினைவுகளின் இசைப் பாடல்களுக்கான ராக ஆலாபனைக் கீற்றைப் போல் சில செய்திகள் நமது மனதில் ஒரு மெல்லிய சோகத்தை எழுப்புகின்றன.

புதுச்சேரிக்கும் விழுப்புரத்திற்கும் இடையில் இவரின் ஊர்ப் பேருந்து நிறுத்தத்திற்கு சத்திரம் என்றொரு பெயரை மட்டுமே இன்று காணமுடிகிற நிலையில், என்றோ இருந்த அந்தச் சத்திரத்தையும், அதன் முன்னாலிருந்த பெரும் கிணற்றையும், மகிழ மரத்தையும், நாவல் மரத்தையும் கோட்டோவியம் போல் தீட்டிக் காட்டியிருக்கிறார் பாவண்ணன்.

சத்திரத்தை, கல்திண்ணையை, பத்திர எழுத்தரை, மரங்களை, ஆஞ்சநேயர் பாட்டி என்ற ஒரு பழங்காலத்து மனுஷியை நினைவு கூர்கிறார். பத்திர எழுத்தரோ, பாட்டியோ, தங்கராசு என்ற இவருடைய பள்ளித் தோழனோ யாருமே இன்று இல்லை; இவரின் நினைவுகளில் மட்டுமே வாழ்கிறவர்களாக அவர்கள் மாறி விட்டனர்.

இவர்களோடு, இலக்கியத்துக்காகப் பணியாற்றிய வர்களான, மறைந்த ஆளுமைகள் பலரைப் பற்றிய நினைவுகளின் பதிவுகளைத் தான் கட்டுரைகளாக எழுதியிருப்பதாகக் குறிப்பிடும் பாவண்ணன், அவர்களிடமிருந்து தான் கற்றதையும் பெற்றதையும் ஒருபோதும் மறக்கவில்லை என்கிறார்.

அது சத்தியமான உண்மை என்பதை இந்த நூலைப் படித்து முடிக்கையில் நாம் ஆழமாக உணர முடியும். இந்தத் தொகுதியை மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்துள்ளது மிகப்பொருத்தமே.

இன்றைய நவீன உலகம் நமக்கு வழங்கியிருக்கும் கொடைகளுள் ஒன்று கணினி. எல்லா வகையான துறைகள் சார்ந்த பணிகளுக்கும் கணினிகள் இன்று தோன்றாத் துணைகளாக உதவி செய்கின்றன. அவற்றைக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும் என்பதே நிபந்தனை. 

ஐம்பது அறுபது வயதைக் கடந்து விட்ட முந்தைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு இந்த விஷயத்தில் மிகப் பெரிய தயக்கம் இருக்கிறது எனத் தோன்றுகிறது. இதை இப்போது மடிக்கணினியில் தட்டச்சு செய்து கொண்டிருக்கும் எனக்கு இதில் சொந்த அனுபவமே சாட்சி. பாவண்ணனுக்கும் இந்தத் தயக்கமும், தன்னால் முடியுமா என்ற அச்சமும் இருந்திருக்கிறது.

“கம்ப்யூட்டர், லாங்வேஜ் இரண்டையும் கத்துக்கறதுக்கு வயசு ஒரு தடையே இல்ல, பாவண்ணன். அறுவது, எழுவது வயசுல கூட ஒருத்தர் இதக் கத்துக்க முடியும்ஞ்” என்று தன்னம்பிக்கை ஊட்டுகிறார் மறைந்த எழுத்தாளர் சுஜாதா.

கடந்த 12 ஆண்டுகளாகக் கணிப்பொறி­யில் தான் என் படைப்புகளை எழுதுகிறேன் என சுஜாதா மறைவின் போது எழுதிய கட்டுரையில் பாவண்ணன் குறிப்பிட்டிருக்கிறார். அது யுகமாயினி இதழில் ஏப்ரல், 2008-இல் வெளியானது.

அதன்பிறகு இப்போது மேலும் 13 ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்று தான் எழுதும் அனைத்துப் படைப்புகளையும் நேரடியாகக் கணிப்பொறி மூலமே தட்டச்சு செய்வதாகச் சொன்னார் பாவண்ணன்.

என்னுடைய தயக்கத்தை அவரும், உதயசங்கர், ச.தமிழ்ச்செல்வன் போன்ற எழுத்தாள நண்பர்களும் அடிக்கடி சொல்லிச் சொல்லி பெருமளவுக்கு இப்போது நானும் கணினியைப் பயன்படுத்தி வருகிறேன். பேனாவால் கைப்பட எழுதி, நகல் எடுத்து அனுப்பும் போது எனக்குக் கிடைக்கும் மனநிறைவு இதில் இல்லை என்பதென்னவோ உண்மைதான். ஆனாலும், இது ஒரு மனப்பழக்கம் தான், இது மாறும் எனவும் ஓர் எண்ணம் எழுகிறது.

சின்னக்குத்தூசி, திராவிட இயக்கத்துடன் நீண்டகாலத் தொடர்புமிக்கவர். குறிப்பாக, கலைஞர் போன்ற தலைவர்களுக்கு மிக நெருக்கமான ஒருவர். முரசொலி நாளிதழில் கலைஞரை விடவும் அதிக எண்ணிக்கையில் அரசியல் விமரிசனக் கட்டுரைகளை எழுதியவராக அவர் இருக்கக்கூடும்.

அதிகார மையத்துக்கு அவ்வளவு நெருக்கமானவராக இருந்திருந்தபோதிலும், கடைசிவரை எந்தவிதப் பதவியையும், செல்வாக்கான நிலையையும் தேடிக்கொள்ளாமலே வாழ்ந்து மறைந்தவர் சின்னக் குத்தூசி. மனதில் பட்டதைத் தயக்கமின்றி எழுதும் அவரின் இயல்பினால் கலைஞரின் கோபத்துக்கு ஆளாக நேர்ந்தபோதும் கூட, சமரசம் செய்து கொள்ளாமல் விலகி வந்து விட்ட துணிவுமிக்க ஆளுமை அவர். அதிகாரமையங்களைத் தண்ணீராகவும், காலமெல்லாம் அதிலேயே மிதந்திருந்தாலும் துளியும் ஒட்டாத தாமரை இலையாக சின்னக் குத்தூசியையும் உருவகம் செய்து அற்புதமாக அஞ்சலி செலுத்தியிருக்கிறார் பாவண்ணன்.

தி.க.சி.யின் அன்பும், வாஞ்சையும் மிக்க வழிகாட்டல், அவருடைய வாசிப்பின் ஆழம் பற்றி நினைவுகூர்ந்திருக்கிறார். தி.சு.சதாசிவம், சித்தலிங்கையா, சு.கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூன்று மொழி பெயர்ப்பாளர்கள் தமது அரிய மொழி பெயர்ப்புகளின் வழியே தமிழ் இலக்கிய உலகுக்கு வளம் சேர்த்தவர்கள்.

அவர்கள் மூவரோடும் தனக்கு இருந்த நட்பையும், அன்புப் பிணைப்பையும் மனம் கசிந்து உருகும் வண்ணம் பதிவு செய்கிறார். அவர்களின் மொழிபெயர்ப்புப் படைப்புகளின் சிறப்பை, அந்த ஆளுமைகளின் அரிய பணிகளை தமிழுலகம் அவற்றுக்கு நியாயமாகத் தந்திருக்க வேண்டிய மதிப்புடன் அறிந்து கொள்ளவோ, பாராட்டிப் போற்றவோ தவறிவிட்டது என வருத்தத்துடன் எழுதுகிற பாவண்ணனின் பண்பட்ட மனம் நெகிழ வைக்கிறது.

இன்குலாபைப் பற்றிய எத்தனையோ கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். அவருடைய படைப்புகளில் ஒரு சிலவற்றைத் தவிர ஏனைய அனைத்தையும் தேடித்தேடிப் படித்தும் இருக்கிறேன். பாவண்ணன் தனது எழுத்துப்பயணத்தின் தொடக்க காலத்திலேயே இன்குலாபின் பாராட்டுகளையும், வழிகாட்டலையும் பெற்றவர் என்ற செய்தியை இதுவரை அறியாமலே இருந்திருக்கிறோமே என வருந்தினேன்.

மிக நேர்த்தியாக இன்குலாபின் பண்புகளைப் பதிவு செய்திருக்கிறார். இன்குலாப் போன்ற முற்போக்கு இயக்கங்கள் சார்ந்த கவிஞர்களின் கவிதைகளில் கவித்துவம் இருக்காது எனவும், அவை வெற்றுப்பிரச்சார முழக்கங்களே எனவும் அன்று முதல் இன்றுவரை தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து ஒரு கருத்து வலுவாக முன்வைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது.

அழகியல் அம்சங்கள் அறவே இல்லாமல் வறட்டுத் தனமான முழக்கங்களையே கவிதைகள் என்று இவர்கள் சொல்லுகிறார்கள் என்பது முற்போக்காளர்களின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு. இது பற்றிய எதிர்வினைகளைத் தொடர்ந்து இன்குலாப் ஆற்றி வந்திருக்கிறார்.

ஒடுக்கப்படும் மக்களின் அழகியலும், ஒடுக்கும் ஆளும்வர்க்க அழகியலும் எப்படி ஒரே அளவுகோலில் அளக்கப்பட முடியும்? இருவேறு வர்க்கங்களுக்கும் அவரவர்க்கென அழகியல், கலைத்தன்மை, பிற இலக்கிய அம்சங்கள் நிச்சயம் வேறுபட்டவையாகவே இருக்க முடியும்.

இந்த அடிப்படையான உண்மையை உணராமலோ, அல்லது உணர்ந்தும் உணராதவர்கள் போன்ற பாவனையிலோ இன்னமும் இதே குற்றச்சாட்டுகளைக் கிளிப்பிள்ளைகள் போலச் சொல்லும் போக்கு நிலவி வருகிறது.

ஆனால், இன்குலாபின் படைப்புகளைப் பற்றி, குறிப்பாக “சூரியனைச் சுமப்பவர்கள்’ தொகுதியிலுள்ள கவிதைகளைப் பற்றி பாவண்ணன் எழுதும்போது பின்வருமாறு குறிப்பிடுவது இவரின் பரந்த மனதின் வெளிப்பாடாக அமைந்துள்ளது: "ஏனைய முற்போக்குக் கவிஞர்களின் அழகியலுக்கும், அவருடைய கவிதை அழகியலுக்கும் உள்ள வேறுபாட்டை உடனடியாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

செட்டான வாக்கியங்கள். அருவிபோலப் பொங்கி வழிந்தோடும் நடை. வசீகரமான மொழி.வாழ்வின் அவலங்களைக் காண்பதால் உருவாகும் துயரம். கனிவும் ஆவேசமுமிழைந்தோடும் வரிகள்.இன்குலாபின் கவிதைகளில் கண்ட அனைத்து அம்சங்களும் மிகவும் வசீகரமாக இருந்தனஞ்”

கிரீஷ் கர்னாடின் நாடகங்களில் ஒன்பது நாடகப்பிரதிகளை தமிழில் மொழி பெயர்த்தவர் பாவண்ணன். ‘இந்த நாடகங்களில் எதையாவது ஒன்றையேனும் மேடை நாடகமாக ஆக்க குழு ஏதேனும் முன்வந்திருக்கிறதா?' எனக் கேட்ட கர்னாடுக்கு இறுதி வரை சாதகமான ஒரு மறுமொழியைக் கூற முடியாத மனக்குறையை அவருக்கான அஞ்சலிக்கட்டுரைகளில் பாவண்ணன் பதிவு செய்கிறார்.

கர்னாடின் நாடகங்களை குஜராத்தியில் மொழிபெயர்த்த ஓர் எழுத்தாளர் பாவண்ணனிடம் கேட்கிறார்: “நடிப்பதற்காகத்தானே நாடகங்களை மொழிபெயர்க்கிறோம்?”

ம.இலெ.தங்கப்பா குறித்த மூன்று கட்டுரைகளுமே அற்புதமானவை. மிதிவண்டிப்பயணங்களில் தன் மாணவர்களைத் தொடர்ந்து ஆற்றுப்படுத்தியதோடு, தானும் அவர்களின் முன்னால் மேடுகளில் சளைக்காமல் சைக்கிள் ஓட்டிக் கொண்டு பயணம் செய்தவர் அவர். மொழியை, பாடல்களை, சங்க இலக்கியங்களை, மரபு சார்ந்த கவிதைக்கூறுகளை பாவண்ணனுக்குக் கற்பித்து செதுக்கிய மாமனிதராக நாம் தங்கப்பாவை அறிகிறோம்.

இந்தக் கட்டுரைகள் மூன்றை எழுதியதன் மூலம் தனது ஆசிரியருக்கு பாவண்ணன் எழுப்பியிருக்கும் நினைவுச்சின்னங்கள் மகத்தானவை. இவற்றைப் படிக்கும்போதுதான் பாவண்ணன் தொடக்க காலத்தில் எழுதிய குறுங்காவியங்களைப் பற்றி அறிய முடிந்தது.

அந்தக் காவியப்படைப்புகளின் ஆழத்தையும், அழகையும் உணரலாமா, அவை இப்போது இருக்கின்றனவா எனக்கேட்கத்துடித்த மனம், அவையெல்லாம் தொலைந்து போயின என்ற குறிப்பைப் படிக்கையில் சோர்ந்து போனது.

இந்தக் கட்டுரைகளிடையே ஊடுபாவாக இழையோடிக் கொண்டிருக்கும் ஓர் அம்சத்தையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். பாவண்ணனின் எழுத்துகளைப் படித்திருந்த தி.க.சி., சின்னக்குத்தூசி, ஞானக்கூத்தன், வெங்கட் ஸ்வாமினாதன் போன்றோர், முதன்முறையாக இவரை நேரில் பார்த்ததும் "ரொம்ப சின்ன வயசு ஆளா இருக்கீங்களே தம்பி?” என்ற கேள்வியை முன் வைத்திருக்கின்றனர்.

இளம்வயதில் எழுத்துலகின் சிகரங்களை எட்ட வேண்டுமென்ற கனவுகளுடன் பயணப்படும் இளம் எழுத்தாளர்கள் ஒவ்வொருவருக்கும் மூத்த, புகழ் பெற்ற எழுத்தாளர்கள் யாரேனும் தமது படைப்புகளைப் பற்றி ஒரு நாலு நல்ல வார்த்தை சொல்ல மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பு இருக்கவே செய்யும்.

பாவண்ணனின் மனமும் இந்த எதிர்பார்ப்புடன் இருந்திருக்கிறது.இதைப்பற்றி பாவண்ணனின் வார்த்தைகளிலேயே பார்ப்போம்: “அன்பான, உற்சாகமான ஒரு சொல்லுக்காக ஏங்கிக்காத்திருந்த காலம் அது.

ஒரு கதையைப் படிக்க எவ்வளவு நேரமாகிவிடும்? அதைப்பற்றி எழுத எவ்வளவு காலம் பிடித்து விடும்? ஏன் இந்த மனிதர்கள் அதைச்செய்வதில்லை?” வெங்கட் சாமிநாதனிடம் நேரடியாகவே இதைக் கேட்கிறார் பாவண்ணன்: "எங்க தலைமுறையைப் பத்தியெல்லாம் நீங்க எழுதவே இல்லியே, சார்?” இந்த மனக்குறை அன்றும் சரி, இன்றும் சரி, புதிதாக எழுதுவோருக்கு அல்லது ஓரளவுக்கு எழுதி கவனம் பெற்றுவிட்டவர்களுக்கும் கூட தீராத குறைதான்.

‘குறையன்றுமில்லை’ என நாம் பொதுவாகச் சொல்லிக்கொண்டாலும், இம்மாதிரி எதிர்பார்ப்புகள் இல்லாமல் எப்படி எல்லாரும் இருந்துவிட முடியும்? இதுபோல் இக்கட்டுரைகள், வெறுமனே நினைவஞ்சலிகளாக மட்டும் இருந்துவிடாமல், ஒவ்வோர் ஆளுமையையும் பற்றிய முக்கியமான செய்திகளைத் தொகுத்துத் தரும் ஆவணங்களாகவும் இருக்கின்றன.

இவர்களில் பலரை நாம் அறிந்திருக்கலாம்; அறியாமல் வெறுமனே பெயர்களை மட்டும் கேள்விப் பட்டிருக்கலாம்.ஆனால், இந்தக் கட்டுரைகளைப் படிக்கையில், இவர்களைப் பற்றிய ஓர் அறிமுகச்சித்திரம் முழுமையாகக் கிடைத்துவிடும்.

மனித மனம் விசித்திரங்கள் நிறைந்தது. வருடக்கணக்கில் நாம் அறிந்தும், அன்பு செய்தும், மதித்தும் வந்தவர்களின் நடுவேயே வாழ்ந்து கொண்டிருந்தாலும் எப்போது, எந்தச் சந்தர்ப்பத்தில் அவர்களுடனான தொடர்பு எல்லைகளை விட்டு வெளியே நகர்ந்து தவற விட்டோம் என்றே தெரியாமல் திகைத்து நிற்கச்செய்து விடுகிறது.

இன்றைய வாழ்வின் சூழல்களில் இது தவிர்க்க முடியாததுதான்; ஆனால், அதனால் நாம் அடையும் இழப்புகளின் பரிமாணங்களை நம்மால் உணர முடிகிறதா? பாவண்ணனின் நெகிழ்ந்த மனம் அவற்றை மனப் பூர்வமாக உணர்ந்து எழுத்தில் தன்னினைவுகளைப் பதிவு செய்திருக்கிறது. நாம் இவற்றை வாசிக்கவாவது செய்யலாமே!

- கமலாலயன்

Pin It