நூல் : நெடுபனையில் தொங்கும் கூடுகள்
ஆசிரியர்: விஜயபாரதி (9786634522)
பதிப்பகம்: வெற்றிமொழி வெளியீட்டகம்
பக்கங்கள் : 88
விலை : 80
தொடர்புக்கு :
97151 68794.

எழுத்தாளர்கள் வாழ்வென்பது பிழைத் (திருத்தலே)... சமூகத்தின் பிழைகளை திருத்தம் செய்யப் பிழைத்துக் கிடக்கும் கவிஞர்களில் ஒருவரான கவிஞர் விஜயபாரதி அவர்களின் ‘நெடுபனையில் தொங்கும் கூடுகள்’.

இந்த நூலின் அறிமுகத்திற்கு முன்பு ஆசிரியர் குறித்த சிறு அறிமுகம்.

இந்த நூலின் ஆசிரியர் கவிஞர் விஜயபாரதி. இவர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிறந்தவர். கடலூரில் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். இவருடைய முதல் கவிதை தொகுப்பு ‘வெள்ளக் காக்கா மல்லாக்கா பறக்குது’.. இவர் அனலி, தலைச்சோறு ஆகிய மாத இதழ்களில் இணையாசிரியராகப் பணியாற்றியவர். சிறுவர்களுக்கான ‘சிப்பிகள்’ சிட்டுகள்’என்ற பருவ இதழ்களையும் பொறுப்பாசிரியராக இருந்து நடத்தி வருகிறார்.

இந்த நூலில் மொத்தம் 75 கவிதைகள் உள்ளன. அதிகபட்சம் பத்து கவிதைகளைத் தவிர மற்ற அனைத்துமே சமகால அரசியல் சமூக அவலம் குறித்து பேசும் கவிதைகளே...!

இது மாதிரி சமூக கவிதைகளை தெரிவு செய்து நூலாக வெளியிட்ட துணிச் சலுக்காகவே இவரை பாராட்டலாம், ஏனெனில் சொற்களின் அடுக்குகளும், சுயசார்புடைய கவிதைகளும், காதல் கவிதைகளுமே அதிகம் எழுதப்படும் இக் காலகட்டத்தில் சமூகம் சார்ந்த அக்கறையோடு எழுதும் இவரைப்போல கவிஞர்களை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது..!

இந்த நூலில் விவசாயிகளின் பிரச்சனைகளான ‘காவேரி முதல் டெல்லி போராட்டம் வரை’ அப்பட்டமாக கொஞ்சம் கூட வளைந்து கொடுக்காமல், பாசாங்கில்லாமல் உண்மையைக் கவிதைகளில் கொண்டு வந்திருக்கிறார்.

‘கடனில் செத்துப் போ
ஐநூறு ஆயிரம் சேர்த்து வை
பிள்ளைகளை படிக்கவை
கார்ப்ரேட்களுக்கு கொத்தடிமைகளாக்கு
காவிரியை நீயும் சேர்ந்தே கற்பழி
மீத்தேன் அனுமதி கொடு
சாதி, மதம் பேசி
நிலமற்றுத் திரி
தூரதேசம் போ'

இப்படியான வரிகளால் நம்மையெல்லாம் சபிக்கிறார்.. இது போல கோபம் இயலாமையால் வெளிப்பட்டதென சொல்லிக் கடந்துவிட முடியாது, நம் முயலாமையை, மூளையை உபயோகிக்காமையை வெளிப்படுத்துகிறார் என்று தான் நாம் பார்க்க வேண்டும்.

‘வெள்ளாமையை விட வட்டிகளே அழுத்துகிறது’என்பவர் அதன் காரணியாக தற்கொலை செய்து கொள்ளும் நிலையை ‘மிச்சமிருக்கும் பூச்சி மருந்து சபிக்கப்பட்டவர்களின், கால் வயிற்றை நிரப்ப பெருக்கெடுக்கிறது’ என்ற வரிகளின் மூலம் நம்மிடம் வேதனையோடு பகிரும் இவர்...

தற்போது பெய்யும் புயல் மழை போன்ற ஓர் இயற்கை சீற்றத்தால் பருவம் தப்பிப் பெய்த மழையால் நம் விவாசயப் பெருமக்கள் தன் வயல்களில் தேங்கிய நீரில் ‘புழுத்துப் போய் மேயும் நண்டுகளை பொறுக்குகின்றனர்’ என்றும் பெருத்த வலியோடு காட்சிப் படுத்துகிறார் ..!

அதுமட்டுமல்லாமல் ‘கூடு சுமந்தலையும் நத்தைகளின் முதுகில் இடியென விரிகிறது எட்டு வழிச்சாலை’ என்ற வரிகளின் மூலம் விவசாயிகளின் இன்னுமொரு துயரமான எட்டு வழிச்சாலையினால் உழவர்கள் பட்ட வேதனைகளையும் வெளிப்படுத்துகிறார்..!

‘கலப்பைகள், மண்வெட்டிகள் யாவும் துருவேறி ஒருக்கலித்து கிடக்கின்றன’ என்ற வரிகளின் தொடர்ச்சியாக அந்த கலப்பைகளும், மண்வெட்டிகளும் இன்றைக்கு டெல்லியில் கூடி மத்திய ஆளும் அரசின் "விவாசய வேளாண் மசோதா" சட்டத்தை களையெடுக்க முன்வந்துள்ளதையும் நமக்கு நினைவு படுத்துவதில் வெற்றி பெறுகிறார் ...!

இத்தகைய வரிகளால் நம்மை ஒன்று திரட்டும் இவர் நம் கரத்தை ஆதரவாகப் பற்றி அரசியல் அதிகாரத்தின் ஆணவத்தின் மீது சம்மட்டியென தன் கரத்தால் ஓங்கி அடிக்க முயல்கிறார்...!

"மிளகு, பூண்டு எல்லாம் போட்டு குழம்பு வச்சி குடிச்சு மகிழ்வா இருந்த ஒர்நாளில், தொலைக்காட்சி அறிவிப்பாய் ஐநூறு ஆயிரம் செல்லாதென வரும் போது தன் முந்தானையில் முடிஞ்சு இடுப்புல சொறுகி வைத்திருந்த ஐநூறு ரூபாய் நோட்டை தொட்டுப்பார்த்த ஒரு அப்பாவி தாய் ‘ஐநூறு ரூபாய் செல்லாதாம்ல’ என்ற அங்கலாய்ப்போடு சொல்லிக் கொண்டு இருந்துட்டுப் போகட்டும், மகன் கொடுத்ததுனு இறுக்கி கட்டி இடுப்புல சொறுகுறதா ஒரு கவிதையில் எழுதுகிறார், ஐநூறு ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாதுனு கோமாளி அரசு சொன்ன போது நாம் பட்ட துன்பங்களை நினைவுபடுத்துகிறார்..!

அன்றைக்கு நடந்த உயிரிழப்புகள், நீண்ட வரிசை, பணக்காரர்களிடம் மொத்தமாகப் பிடிபட்ட புது இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் என கள்ளப்பணம் பிடிக்கிறேனென கடுகு டப்பா சேமிப்புகளை களவாடிய நிகழ்வுகள் அனைத்துமே காட்சியாய் கண் முன் விரிவதை தவிர்க்கவே முடியாது.

‘பாதுகாப்பு உறுதி செய்யப்படாத இத்தேசத்தில் அதிகாரங்கள் யாரையும் விட்டு வைப்பதில்லை’ என்ற வரிகள் வாசிக்கும் போது சன நாயக இந்தியா பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்ததை இடித்துறைக்கவும் மறக்கவில்லை ஆசிரியர் என்றே தோன்றுகிறது...!

நாம் ஓட்டுப் போடும் நிலையை ‘பலிபீடங்கள் என்று அறிந்தே ஐந்தாண்டுக்கு ஒருமுறை பொத்தான்களை அழுத்துகிறார்கள்’ என்ற கவிதை வரிகளால் சுட்டிக்காட்டுகிறார்..

இன்றைக்கு நம் சமூகத்தில் புறையோடிக் கிடக்கும் சாதி மதங்களின் கோரப்பசியால் கொலை செய்யப்பட்ட, அவமதிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையைக் குறித்த ஒரு கவிதையில் ‘குடிசைகளை கொளுத்தி, மூத்திரத்தை பீச்சி, மலத்தை திணித்து, தலையைக் கொய்தும் ஆயுதத்தில் பிசுபிசுப்பென ஒட்டியிருக்கிறது தீராப்பசி’ என்கிறார்... சாதி மதங்களின் ஆயுதங்கள் எப்போதுமே நம் குருதி குடிக்கும் வேட்கை அவைகளுக்கு தீருவதில்லை என்பதை நாம் மறுப்பதற்கில்லை...

"பள்ளங்கள் சூழ் அரசியல், ‘வர்ணங்களை’ நக்கி அகத்தில் திளைக்கின்றன நரிகள். என்ற வரிகளால் நாம் ஆண்டாண்டு காலமாய் அடிமைப்பட்டு கிடக்கும் நமது நிலையை, சாதிய அடுக்குகளை, தன் சொற் சவுக்குகளால் தகர்க்க முடியுமா என துணிந்து முயல்கிறார்..

‘அம்மணமாகப் போராடக் கிழிந்து பறக்கிறது தேசியக்கொடி, நாறிக் கொண்டிருக்கிறது தேசியம், தற்கொலை செய்தது ஜனநாயகம்’ போன்ற வரிகளால் முதுகெழும்பென இருக்கும் விவசாயிகளின் கைகளை ஆறுதலாகப் பற்றிக் கொள்கிறார்...!

இவை மட்டுமல்லாது சிறுமிகளுக்கு எதிரான வன்புணர்வு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான சாதிய அடுக்குமுறை, ஒவ்வொரு தனிநபரும் செய்யத் தவறிய சமூகக் கடமைகள் என்று பெரும் அழுத்தமான விடயங்களை மிக எளிமையான சொற்களைக் கொண்டு மிகவும் வலிமையாகப் பேசியிருக்கிறார்...

இந்த நூலைப் பொறுத்தவரை இது சமகாலத்துக்கான காலக்கண்ணாடி என்றே எடுத்துக் கொள்ளலாம்.. பல கவிதைகள் தாக்கத்தை உண்டு செய்கின்றன

‘அதிகாரத்தின் மீது வீச
இன்னும் மிச்சமிருக்கின்றன
செறுப்புகளும் கற்களும்’

இந்தக்கவிதை நூலின் முதல் கவிதை. இதைப் படித்ததுமே இந்த நூல் எத்தகைய சிறப்பு கொண்டது என்று நாம் புரிந்து கொள்ள முடியும். இந்த வரிகளை படித்த போது கற்களையும் செறுப்புகளையும் வீச முடியாவிட்டாலும் அதிகாரத்திற்க்கு எதிராக சொற்களையாவது வீச வேண்டும் என்ற ஆவலை நமக்குள் தோற்றுவிக்கிறார்.

‘சகதியென எல்லோரிடமும்
ஒட்டியிருக்கிறது
நாக்கை வெளியே
நீட்டிக் கூரிய பற்களால்
பயமுறுத்திக் கொண்டிருக்கிறது
கனன்று கொண்டிருந்த
அது
எரிக்கத் தொடங்கியது
கூனிக் கூனி குனிந்தவர்களை
ஏறி மிதிக்கத்
தொடங்கியது
எலும்புகள் நொறுக்கப்
படுகிறபோதுதான்
தேடப்படுகிறது
ஏதேனும் ஒரு கைத்தடி’

இந்த வரிகள் சாதிய அடக்குமுறைக்கு எதிராக குரல் எழுப்புகிறது. அதுமட்டுமில்லாது இது எவ்வகையான அதிகாரத்திற்கும் தன் எதிர்க்குரலை எழுப்பும் வல்லமை கொண்டாதகவே இருக்கிறது. உதாரணமாக சாதி என்ற இடத்தில் (மதம், அரசியல் அதிகாரம், பெண்ணடிமை, வர்க்க பிரிவினை ) என எதை வேண்டுமானாலும் பொருத்திப் பார்க்கலாம், இதுவே நவீன கவிதைகளின் போக்கிற்கு சான்றாக அமைகின்றது. நீர்த்துப் போகாத அதிகாரங்களை எவ்வழியில் எவ்வகையில் எதிர்பட்டாலும் கைத்தடி (பகுத்தறிவு) கொண்டு துரத்தி அடிப்போம் என்கிறார்.

‘உடன் வந்தவளின்
உயிர் தின்று
காட்டுக்குள் பதுங்கியது
ருசிக்குப் பழகி
வஞ்சகத்தை தாடிக்குள்
புதைத்த அதன் குகை
ஆன்மீகத்தால் ஒளிர்ந்தது
வனத்தைக் கொன்று
ஆதிக்குடிகளின் வயிற்றில்
அறைந்த அது
மூளையைக் கழற்றிச்
சந்திர சூரிய குண்டங்களில் எரித்தது
ஊடக வெளிச்சத்தில்
ஊளையிடும் அது
கள்ளப் புன்னகை
உடுத்திக் கம்பளம் விரித்துக்
கார்ப்பரேட்களின் தூண்களில்
சர்ப்பமென நீண்டு கிடக்கிறது
எல்லாம் முடிந்து
ஆதிசிவனின் நிழலில்
நின்று ஊளையிடுகிறது

"அத்தனைக்கும் ஆசைப்படு", ‘ஜக்கியை குறிவைத்தாலும் அவரோடு நாம் நின்றுவிடத் தேவையில்லை, எல்லா மதங்களின் இடைத்தரகர்களும் கார்ப்ரேட்களின் கைக்கூலிகள் என்பதை சிந்திக்க வைக்கும் கவிதை இது. இந்த நூலில் இன்னுமோர் இடத்தில் பாதிரியார்களின் பாவங்களையும் விவரிக்கிறார் ஆசிரியர்.

நம் நிலங்களை, வனங்களை ஆக்கிரமிப்பு செய்து நம்மைச் சுரண்டி, மத நம்பிக்கை என்ற பெயரால் எல்லோரையும் முட்டாள்களாக்கி, கார்பேர்ட்காரர்களுக்கு சேவகம் செய்யும் மத்திய அரசின் இதுபோன்ற அடிவருடிகளை மக்கள் இனம் கண்டு களையெடுக்க வேண்டுமென்பதே எனக்கும் இந்நூலின் ஆசிரியர் போலவே பேராசை..!

‘வேலியே மேய்ந்து
சப்புக் கொட்டுகிறது
கடித்துக் குதறி
காய்ந்த இரத்தக் கரையோடு
ஈக்கள் மொய்த்துத்
தனித்துக் கிடக்கிறது
உப்பில்லாப் பண்டம்
பார்வைகள் மென்று விழுங்கிட
மார்புச் சதை பிய்ந்து
தொங்க
சொட்டிக் கொண்டிருக்கிறது
யோனியின் இரத்தம்
கேட்பதில்லை ஏதிலிகளின் கதறல்கள்’

என்கிற போது ஒடுக்கப்பட்ட சமூகத்தின் சிறுமி மீது ஏவப்பட்ட வன்புணர்வு குறித்து பேசுகிறது என்றாலும் இந்த நூலில் பல இடங்களில் ஆசிபாக்கள், ஹாசினிகள், திவ்யாக்கள், அனிதாக்கள் குரல் கேவலாக எதிரொலிப்பதை வாசிக்கும் அனைவரும் உணராமல் நகர்ந்து விட முடியாது...! பெண் குழந்தைகளாய் பிறந்த காரணத்தினாலே வன்முறையை இவர்கள் மீது இறக்கி வைத்து தன் அருவருப்பான தாகத்தை தணித்துக் கொள்ளும் இழிபிறவிகள் இனியாவது சிந்தித்தால் நாட்டில் சற்று நிம்மதியோடு வாழ எங்களுக்கும் வாய்ப்பிருக்குமே என்கிற ஏக்கத்தை பெண்ணினத்திற்கு உண்டு செய்கிறார்.

‘காவிரியில தண்ணி இல்ல
கழனியில வெளச்சலும் இல்ல
வரப்ப வெட்டி எலியப்
புடிச்சி வயிற வளர்க்குறோம்
குருணையில கூழு காய்ச்சி
மூனுநாளா அரை தம்ளர்னு
குடும்பமே குடிச்சு வாழுறோம்
சர்க்காரு காரு வந்து
சரபுரன்னு வயலுல எறங்கி நிக்க
இடுப்பு வேட்டிய இருக்கிப் புடிச்சி
ஏஞ்சாமி என்னாச்சுன்னு
எழுந்து நிக்குறோம்
மீத்தேன் எடுக்கப் போறோம்
வயலுல எறங்க கூடாது
ஓரங்கட்டுங்கன்னு
ஒதுக்கித் தள்ள
இடிஞ்சி உக்காந்திருக்கோம்
செவப்பு வேட்டி கட்டி
வேண்டுதல் கொண்டா
காணிக்கை
மூனு அமாவாசைக்கு
தொடர்ந்து அம்மா
பாதத்தை பூசை செஞ்சு
கழுவிக் குடிச்சா
எல்லாஞ் சரியாப் போகும்னு’

‘சொல்லி நிக்கிறானே எதக் கொண்டு அடிக்க’

இவ்வரிகளில் பேசப்படும் வலி காலம் காலமாய் கோவணங்களோடு நிலங்களில் தன் இரத்ததை வியர்வையாய் சிந்தி அத்தனை உயிர்களுக்கும் உணவளிக்க தன்னை கயிரென திரிக்கும் விவசாயிகளின் வலிகள்.

இவற்றை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய இது போன்ற சமூக கடுமையுணர்வு அவருக்கு மட்டுமில்லாது எழுதும் வாசிக்கும் அனைவருக்குமே இருக்க வேண்டும் என்பதே ஆசிரியரைப் போலவே நம் நோக்கமும்...!

கொஞ்சம் கொஞ்சமாக பிடுங்கப்பட்டு, நிலங்களை இழந்து வனங்களை இழந்து எதைத் தின்ன, எதை உடுக்க, எதைப் படிக்க என எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்தும் அரசின் கேவலங்களை நினைவுக்கு கொண்டு வந்து வருங்காலங்களில் இவர்களின் அதிகார விசப் பற்களை பிடுங்க வேண்டிய கடமையைச் செய்ய வேண்டுமென்று கேட்டு சிந்திக்கவும் செய்ய தூண்டியிருக்கிறார்.

இன்றைய காலகட்டத்தில் நடக்கும் டெல்லி போராட்டம் என்பது நெடிய, கொடிய வலிகளை தொடர்ந்து அவர்கள் அனுபவத்ததின் வெளிப்பாடுதான், மீத்தேன் எடுக்க பிடுங்கப்பட்ட நிலங்கள், எட்டு வழிச்சாலைக்கு தாரைவார்க்கப்பட்ட நிலங்கள், தாமிர ஆலைகளினால் பாழான நிலங்கள் என நாம் விவசாய நிலங்களை இழந்து வரும் அவலத்தை இது போல பல கவிதைகள் மூலம் எடுத்துச் சொல்லும் ஆசிரியர் செயல் பாராட்டத் தக்கதென்றால் அது மிகையாகாது..!

இந்த கவிதைகள் அனைத்துமே ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல எடுத்து விவரிக்கப்பட்ட கவிதைகளே, இவைகளைத்தவிர இன்னும் அழுத்தமான அரசியலையும், கனமான வலிகளையும், பல கண்ணீர்க் கதைகளையும் உள்ளடக்கிய இந்தத் தொகுப்பு வாசிப்போர் அனைவரையும் அதிகாரங்களுக்கு எதிராக ஒன்று திரட்டும் என்று நம்புகிறேன்...!

இத்தகைய நூல்களை கொண்டாடுவதே இவர்களைப் போன்ற நல்ல கவிஞர்களை "நூல்கள் எழுதுவது தற்கொலைக்குச் சமம்" என்ற எண்ணத்திலிருந்து மீட்டெடுக்கும் என்று நம்புகிறேன்...

காலம் முழுக்க போராடும் மனிதன், இன்று இயற்கையோடும், கொடூர மனிதர்களோடும் போராடிக் கொண்டிருக்கும் இந்நிலை விரைவில் மாற வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு நிறைவு செய்கிறேன்

வாசிப்பை நேசிப்போம்

- முகில் நிலா தமிழ்