தீர்க்கமான சிந்தனை, ஆழ்ந்த அறிவு, சமூகம் சார்ந்த உண்மையான அக்கறையோடு தற்காலத்தில் வாழ்ந்த மிகச் சில உலகத் தமிழறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் கா.சிவத்தம்பி.
“பண்டைய இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரையிலான அனைத்தையும் இணைத்துப் பார்க்கும் புலமை மரபு கொண்டவர். சமூகம், பண்பாடு, கருத்துநிலை, அரசியல் போன்ற களங்களின் ஊடாட்டம் சார்ந்து பார்க்கும் ஆய்வு செய்யும் ஒரு புதிய மரபை தமிழுக்கு வழங்கியவர். ஊடகம், கலை, இலக்கணம், பண்பாடு சார்ந்து அவர் வெளிப்படுத்திய பார்வைகள் புதிய வளங்கள் கொண்டவை. தமிழியல் ஆய்வுக்குரிய அனைத்துச் சாத்தியப்பாடுகளையும் தன்னகத்தே கொண்டவை. இன்று எம் தமிழர் மத்தியில் வாழ்ந்தவர்களுள் சிந்தனையாலும், செயலாலும் மேற்கிளம்பி ஆளுமைப் பொலிவாக உயர்ந்து நின்றவர் பேராசிரியர் சிவத்தம்பி” என ஈழத்து எழுத்தாளர் வி.ரி. இளங்கோவன் புகழ்ந்துரைத்துள்ளார்.
“தமிழியலின் பல்கலைக்கழக நிலையிலான உயராய்வுச் செயற்பாட்டை முற்றிலும் ஆய்வறிவுப் பாங்கானதாகக் கட்டமைப்பதில் பேரீடுபாடு காட்டினார். இந்த ஈடுபாட்டுக்கு அடிப்படையாக அமைந்தது அவருடைய முற்போக்கு நிலைப்பட்ட சிந்தனைத் தெளிவாகும். மார்க்சியம் என்ற அறிவியல்சார் தத்துவத்தின் ஒளியில் சமூகத்தையும் அதன் வரலாற்றையும் தரிசிக்கும் முறைமையான இம்முற்போக்குப் பார்வையைப் பல்கலைக் கழக உயராய்வுச் சூழலில் அழுத்தமாகப் பதிவு செய்தவர் என்பது முக்கிய அம்சமாகும். சமகாலத் தமிழ் ஆய்வியல் மற்றும் திறனாய்வியல் என்பனவற்றின் ‘திசையறி கருவி’யாகவும், ‘விமர்சன மாமலை’ யாகவும் திகழ்ந்தவர். தமிழ்த்திறனாய்வுலகின் ஒரு சகாப்தம் அவர். மேலும், தமிழரின் சமூகவியல், பொருளியல், அரசியல், மானுடவியல், கலையியல், மெய்யியல், வரலாற்றியல் முதலான பல்வேறு ஆய்வறிவுத் துறைகளையும் தழுவிய ‘தமிழியற் பேராசிரியர் ’ எனச் சுட்டுவதே மிகப் பொருத்தமாகும். ” என்று கலாநிதி நாகராஜ ஐயர் சுப்ரமணியன் தமது ஆய்வில் பதிவு செய்துள்ளார்.
சைவப்புலவர், பண்டிதர் பொ. கார்த்திகேசு ஆசிரியருக்கும், வள்ளியம்மைக்கும் மகனாக 10.05.1932 அன்று யாழ்ப்பாணம் அருகில் உள்ள வடமாராட்சி கரவெட்டியில் பிறந்தார் சிவத்தம்பி.
தமது ஆரம்பக் கல்வியை கரவெட்டி விக்கினேஸ்வரா கல்லூரியில் பயின்றார். இடைநிலைக் கல்வியை கொழும்பு சாஹிராக் கல்லூரியிலும், இளநிலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளை இலங்கைப் பல்கலைக் கழகத்திலும் பயின்று பட்டம் பெற்றார். பின்னர், நான்கு ஆண்டுகள் கொழும்பு சாஹிராக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அக்காலக்கட்டத்தில் (1961-1965) இலங்கைப் பாராளுமன்றத்தின் சமகால மொழிபெயர்ப்பாளராக (Simultaneous Interpreter) பதவி வகித்தார். இவரது மனைவியின் பெயர் ரூபாவதி.
இங்கிலாந்திலுள்ள பெர்மிங்ஹாம் பல்கலைக் கழகத்தில் 1970 ஆம் ஆண்டு சேர்ந்து, உலகப் புகழ் பெற்ற மார்க்சிய அறிஞரான பேராசிரியர் ஜார்ஜ் தாம்சனின் வழிகாட்டலில் ‘பண்டைய தமிழ்ச் சமூகத்தில் அரங்கியல்’ (Drama in Ancient Tamil Society) என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு கலாநிதி பட்டம் பெற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் 1978 முதல் 1996 வரை பதினெட்டு ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர், மட்டக்களப்பில் உள்ள கிழக்கு இலங்கைப் பல்கலைக் கழகத்தில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார்.
இலங்கைப் பல்கலைக் கழகங்கள் மட்டுமல்லாமல், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம், ஸ்கன்டினேவியா, சுவீடனிலுள்ள உப்சலா மற்றும் பெர்க்லி, விஸ்கான்சியன், ஹார்வார்ட், கலிபோர்னியா ஆகிய பல்கலைக் கழகங்களிலும் வருகை தரு பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், இங்கிலாந்து கேம்பிரிஜ் பல்கலைக் கழகத்தின் தென் ஆசிய மையம், புதுடெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் வரலாற்றுக் கற்கை மையம், சென்னை அனைத்துலகத் தமிழராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் வருகை தரு பேராசிரியராகவும் பணிபுரிந்தார்.
மதுரையில் 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில், ‘The Politicians as Players’ என்ற ஆய்வுக் கட்டுரை வாசிக்க மாநாட்டுக் குழுவினரால் பேராசிரியர் கா.சிவத்தம்பிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
சிங்கப்பூரில் 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் பேராசிரியர் கா.சிவத்தம்பி கலந்து கொண்டு உரையாற்றினார். சென்னை தாமணியில் உள்ள அனைத்துலக தமிழராய்ச்சி நிறுவனம் நடத்திய ‘அயல் நாடுகளில் தமிழ் ’ என்ற தலைப்பிலான கருத்தரங்கிற்கு பேராசிரியர் கா. சிவத்தம்பி தலைமை தாங்கி நடத்தினார்.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1946 இல் உருவானது. இச்சங்கத்தில் இணைந்து 1960 களில் முற்போக்குத் தளத்தில் அடிபதித்தவர்கள் கலாநிதி க. கைலாசபதியும், கலாநிதி கா. சிவத்தம்பியும். இவர்கள் ‘முற்போக்கு விமர்சன இரட்டையர்கள் ’ என்ற கணிப்பைப் பெற்றவர்கள்.
தஞ்சாவூரில் நடைபெற்ற எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டுக்கு வருகை புரிந்த பேராசிரியர் கா.சிவத்தம்பி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர் என முத்திரைகுத்தப்பட்டு, அதே விமானத்திலேயே இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்.
தமிழகத்தில் கோவையில் நடைபெற்ற செம்மொழித் தமிழ் ஆய்வு மாநாட்டின் ஆய்வரங்கக் குழுவின் தலைவராக விளங்கினார்.
இலங்கை அரச கருமமொழித் திணைக்களத்தின் கலைக் சொல்லாக்கக் குழுவின் இணைப்பாளராகவும், தமிழக இலங்கை கலைச் சொல்லாக்கக் குழு உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார்.
இன ஒடுக்குமுறை தலைவிரித்தாடிய காலகட்டத்தில் சமூகத்திலிருந்து ஒதுங்கித் தானும் தன் பாடுமாக இருந்துவிடாமல், தமது குடும்பத்துடன் வடபிரதேசத்திலிருந்து இடம் பெயர்ந்து வெளியேறாமல், மக்கள் நெருக்கடிகளுக்கு உள்ளாகித் துன்பப்படும் வேளையில் சமூகப் பொறுப்புள்ள மனிதாக வாழ்ந்தார் பேராசிரியர் கா.சிவத்தம்பி.
இலங்கை வடக்கு, கிழக்கு பிரதேசத்தின் பிரஜைகள் கண்காணிப்புக் குழு ஒன்றியத்தின் தலைவராக 1984-86 காலகட்டத்தில் பணியாற்றினார். பல்கலைக்கழகத்துக்கும் அப்பால் சமூக சேவையில் ஈடுபட்டவர் பேராசிரியர் கா.சிவத்தம்பி. ஈழத்தில் போர் உக்கிரமடைந்திருந்த காலகட்டத்திலும், வட கிழக்குப் பிரதேசம் இந்திய இராணுவத்தின் (இந்திய அமைதிப் படை) ஆக்கிரமிப்புக்கு உட்பட்டிருந்த சூழ்நிலையில் நிர்க்கதியாக இருந்த மக்களின் குறைகளை, கோரிக்கைகளை கேட்டறிந்து இராணுவத் தளபதிகளிடம் எடுத்துக் கூறி அரச நிர்வாகத்தின் செவிப்பறைகளில் ஓங்கி ஒலித்தவர். 1986-1998 காலப் பகுதியில் அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தின் தலைவராகக் கடமையாற்றினார்.
பேராசிரியர் கா.சிவத்தம்பி எழுதி தமிழுலகுக்கு அளித்துள்ள நூல்கள்:
பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம், இலக்கியமும் கருத்து நிலையும், பண்டைத் தமிழ்ச் சமூகம் .. வரலாற்றுப் புரிதலை நோக்கி, தனித்தமிழ் இயக்கத்தின் அரசியற் பின்னணி, யாழ்ப்பாணம் : சமூகம், பண்பாடு, கருத்துநிலை, தமிழிலக்கியத்தில் மதமும் மானுடமும், ஈழத்தில் தமிழ் இலக்கியம், அரங்கு ஓர் அறிமுகம், தமிழ்ப் பண்பாட்டில் சினிமா, தமிழ்ச் சமூகமும் பண்பாட்டில் மீள் கண்டுபிடிப்பும், இலக்கியமும் வாழ்க்கையும், இலக்கணமும் சமூக உறவுகளும், நாவலும் வாழ்க்கையும், தமிழில் இலக்கிய வரலாறு (1986 – ஆங்கிலம்), கார்த்திகேசு சிவத்தம்பியின் நேர்காணல்கள், இலங்கைத் தமிழர்-யார்?எவர்?, யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு, மதமும் கவிதையும், தமிழ் கற்பித்தலில் உன்னதம்- ஆசிரியர் பங்கு, யாழ்ப்பாண சமூகத்தை விளங்கிக் கொள்ளல், சுவாமி விபுலானந்தரின் சிந்தனை நெறிகள், திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு, தமிழ் கற்பித்தல், தமிழ் நூற்பதிப்புப் பணியில் உ.வே.சா. ( பாட விமர்சனவியல் நோக்கு), தமிழின் கவிதையில், தொல்காப்பியமும் கவிதையும், உலகத் தமிழிலக்கிய வரலாறு ( கி.பி.1815-கி.பி. 2000), சசியாக் கதை, தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், இலக்கியத்தில் முற்போக்குவாதம், இலங்கைத் தமிழ் நாட்டார் வழக்கியல், தற்கால இலக்கியத்தில் வறுமையும் சாதியமும், பாரதி –மறைவு முதல் மகாகவி வரை ( பேராசிரியர் அ. மார்க்சுடன் இணைந்து எழுதியது), பண்பாட்டு உருவாக்கத்தில் பத்திரிகைகளின் பங்கு, யாழ்ப்பாணத்தில் தொடர்பும் பண்பாடும், தமிழ்ப் பண்பாட்டில் கிறிஸ்தவம், கற்கை நெறியாக அரங்கு, விமரிசனச் சிந்தனைகள், ஈழத்துத் தமிழ் இலக்கியத்தடம், பார்வைகளும் விமரிசனங்களும், நவீனத்துவம் தமிழ் பின் நவீனத்துவம், பண்டைத் தமிழ்ச் சமூகம் புரிதலை நோக்கி, ஈழத்தின் தமிழிலக்கியச் சுடர்கள், ஈழத்துத் தமிழ் நாடக அரங்கப் பாரம்பரியம் முதலிய தமிழ் ஆய்வு நூல்களையும், மேலும் Drama in Ancient Tamil Society -1981, Sri Lankan Tamil Society and Its Politics, Studies in Ancient Tamil Society Literary history of the Tamils, Literary Criticism, Social History of the Tamil, Culture and Communication among Tamils Tamil Drama முதலான ஆங்கில நூல்களையும் எழுதியுள்ளார்.
ஈழத்தில் தமிழ் இலக்கியம்: இலங்கையின் தனித்துவத்தையும் தமிழ் இலக்கியத்தின் பொதுமையையும் இணைத்து நிற்கும் ஒர் இலக்கிய மரபு இலங்கையில் தோன்றி வளர்ந்த முறையினைச் சிறப்பாக எடுத்துரைக்கிறது இந்நூல்.
ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் பிரதேச அலகுகள்- ஒரு குறிப்பு, ஈழத்தில் தமிழிலக்கிய வளர்ச்சிக் கட்டங்கள், ஈழத்தில் தமிழிலக்கியம் ( 1965-1989), ஈழத்தின் ஆக்க இலக்கிய நூல் வெளியீடு (1948-1970), 1970-க்குப் பின் ஈழத் தமிழிலக்கியத்தில் தோன்றிய முக்கிய வளர்ச்சி நெறிகள், இலங்கையில் தமிழிலக்கியத்தின் அண்மைக்காலப் போக்கும் கலாசார ஒருங்கிணைப்பும், புலம் பெயர் தமிழர் வாழ்வு என ஏழு தலைப்புகளில் ஈழத்து தமிழிலக்கியம் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது. ஈழத்தமிழ் இலக்கியம் பற்றிய ஆவணம் இந்நூல்.
யாழ்ப்பாணம் - சமூகம், பண்பாடு, கருத்துநிலை : இந்நூல் இதுவரை தமிழில் ஆழமான பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படாத யாழ்ப்பாணச் சமூகத்தை சமூகவியல், சமூக வரலாறு ஆகிய துறைகளினூடாக சித்தரிக்க முனைகின்றன. யாழ்ப்பாணச் சமூகத்தின் இயங்கியல் விவரணம், அச்சமூகத்தில் மேலாண்மை பெற்று விளங்கும் கருத்து நிலைகள் ஆகியனவற்றையும், அவற்றின் பின்புலத்தில் யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு, மதநிலைச் சமூக அசைவியக்கம் ஆகியனவற்றையும், அச்சு ஊடகங்களின் தொழிற்பாட்டினையும், யாழ்ப்பாணச் சமூக வரலாற்றையும் கோடிட்டுக் காட்டுகிறது.
யார் இந்த யாழ்ப்பாணத்தான்? யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல், யாழ்ப்பாணத் தமிழரின் பண்பாடும் கருத்து நிலையும் பற்றி விளங்கிக் கொள்வதற்கான ஒர் அறிமுகக் குறிப்பு. யாழ்ப்பாண வரலாற்றுக் கருத்துநிலையின் அகற்சியை வேண்டி நிற்கும் ஒரு பிரசுரம், யாழ்ப்பாணத்தின், எழுதப்படாத கலை வரலாறு பற்றி, யாழ்ப்பாணச் சமூகமும் இளைஞர் எழுச்சியும், யாழ்ப்பாணத்து இந்து மக்களிடையே சமூக மேனிலைப்பாட்டு அசைவியக்கமும் வழிபாடும், தமிழ்ச் சைவப் பண்பாட்டிற் செல்வச்சந்நிதியின் முக்கியத்துவம், கந்த புராணத்துக்குள் வராத முருகனுக்கு ஒரு பெரிய புராணம் உருவாகின்றது. யாழ்ப்பாணத்தில் ‘தொடர்பும்’ பண்பாடும், ஈழநாடும் அதன் தொடர்நிலை வலுவும் முதலிய ஆய்வுக் கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.
தமிழ் கற்பித்தல்: இந்நூல் தமிழ்மொழி கற்பித்தல், இலக்கணம் கற்பித்தல், இலக்கியம் கற்பித்தல் ஆகிய பிரிவுகளாக வகுக்கப் பெற்றுள்ளது.
“மொழியானது ஒருவர் தனது சிந்தனைகளை வெளிப்படுத்துவதற்கு மாத்திரமில்லாமல் சிந்தித்தல் எனும் தொழிற்பாட்டுக்கும் அத்தியாவசியமானதாகும். சிந்திப்பதற்கு, சிந்திப்பவற்றை ஒழுங்கமைத்துக் கொள்வதற்கு மொழி அவசியமாகிறது. சிந்திப்பின், சிந்தனையின் ஆழம், உயர்ச்சிக்கு ஏற்ப மொழிநிலை வெளிப்பாடுகளும் ஆழப்படும்/உயரும். புதிய சிந்தனைகள், புதிய சொற்களையும் புதிய எடுத்துரைப்பு முறைகளையும் தரும். ஒரு பிள்ளை எந்த மொழியைத் தனது கல்வி மொழியாகக் கொள்கிறதோ, அந்த மொழியே அப்பிள்ளையின் சிந்திப்பு நடைபெறுவதற்குமான மொழியாகும். தாய் மொழியே கல்வி மொழியாகவும் அமைந்துவிட்டாற் பிள்ளையின் சிந்திப்பு ஆற்றலும் வளமும் சிறந்து காணப்படுமென இத்துறை ஆராய்ச்சியாளர்கள் கூறுவர். ”
மேலும், “ஆரம்ப நிலையிலேயே கூடத் தமிழ் மொழியைக் கற்பித்தல் பற்றி திராவிட இயக்கங்களிலே தயக்கம் காட்டுகின்றனர். ஆங்கிலத்தைச் சிந்தனை மொழியாக வளர்த்துக் கொண்டு, மறுபுறத்திலே தனித் தமிழ்வாதம் பேசப்படும் நிலை சமூக உளவியல் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும்.”
“தமிழை முதல் மொழியாகப் பயிற்றல் என்பது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களின் ஆளுமை, சிந்தனை வளர்ச்சிக்கான கருவியாகும் தமது தாய்மொழியில் நன்கு பரிச்சியமில்லாதவர்களிடத்திலிருந்து தமிழ்மொழியின் எதிர்கால வளர்ச்சி பற்றி எதனையும் எதிர்பார்க்க முடியாது.” எனத் தாய் மொழிக் கல்வியின் அவசியத்தையும், தாய்மொழிக் கல்வியை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சமூக உளவியல் சிக்கல்கள் குறித்தும் இந்நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.
பாலர்நிலை முதல் பல்கலைக் கழக பட்டப்படிப்பு நிலைவரை தமிழை ஒரு பாடமாகக் கற்பிப்பது குறித்த ஆழமான, அகலமான ஆய்வு இது. தமிழைப் பயிற்றுவோர்களை இலக்கு நோக்காகக் கொண்டு இந்நூல் அமைந்துள்ளது. இந்நூலிலுள்ள கட்டுரைகள் தமிழ் பயிற்றல் வழியாக பெற்ற அனுபவங்கள், உந்துதல்கள், கருத்துநிலை, புலமைநிலைச் சிந்தனைகளும் இடம்பெற்றுள்ளன. 1. தமிழ் கற்பித்தலில் உன்னதம். 2.மொழி கற்பித்தல் . 3. தமிழிலக்கணம் கற்பித்தல். 4. தமிழிலக்கண நூல் மரபும் கற்கை –கற்பித்தலுக்கான முறைவழிகளும். 5. தமிழ்மொழி வழி கல்வி கற்கும் மாணவர்கள் தமிழ்மொழி, இலக்கியஞ்சாரப் பாடங்களைப் பயில்வதற்குப் பெற்றிருக்க வேண்டிய அடிப்படை மொழித் தேர்ச்சியும் அறிவும். 6 . வாசிப்பு, எழுத்து தமிழ்நிலை நின்ற ஒர் அறிமுகக் குறிப்பு. 7. கனிஷ்ட, இடைநிலை வகுப்புக்களிற் கவிதை கற்பித்தல் சில குறிப்புகள். 8. நயத்தலும் விமர்சித்தலும், 9. இலக்கிய விமர்சனமும், இலக்கியம் கற்பித்தலும். 10. பட்டநிலைக் கற்பித்தலில் தமிழாசிரியர் எதிர் நோக்கும் புலமைப் பிரச்சினைகள் சில. 11. கல்விப் பொதுத் தராதர உயர்மட்ட பரீட்சையில் தமிழ் பாடத்துக்கு வேண்டும் அறிவாழமும் அதற்கான பாடத்திட்டமும் என பதினொறு தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தமிழ் கற்பிக்கும் தமிழாசிரியர்களுக்கு இது ஒரு கை நூலாக விளங்குகிறது.
ஈழத்தின் தமிழிலக்கியச் சுடர்கள் : இந்நூலில் இலங்கையில் ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலும் அதற்குப் பின்னரும் ஈழத்து இலக்கிய உருவாக்கத்திலும், வளர்ச்சியிலும் முக்கிய இடத்தைப் பெறுகின்ற பின்வரும் பதினொருவர் பற்றிய வாழ்வும், இலக்கியப் பணியும் இடம் பெற்றுள்ளது.
ஆறுமுக நாவலர், .சி.வை. தாமோதரம் பிள்ளை, ச.வயித்திலிங்கம் பிள்ளை, சுவாமி விபுலாநந்தர், பண்டிதமணி. சி.கணபதிப் பிள்ளை, பேராசிரியர். க.கணபதிப்பிள்ளை, பேராசிரியர். வி. செல்வநாயகம், வண. தனிநாயகம் அடிகளார், பேராசிரியர் ம. முஹமது உவைஸ், பேராசிரியர் சு. வித்தியானந்தன், பேராசிரியர்.க. கைலாசபதி.
ஈழத்துத் தமிழ் நாடாக அரங்கப் பாரம்பரியம் : இந்நூல் பேராசிரியர் கா. சிவத்தம்பி அரங்கு தொடர்பான நூல்களுக்கு அவ்வப்போது வழங்கிய அணிந்துரைகள், கட்டுரைகளின் தொகுப்பு ஆகும். ஈழத்துத் தமிழ் நாடக அரங்கப் பாரம்பரியத்தினை இந்நூலின் மூலம் அறிந்து கொள்ள இயலும். இந்நூலில், நாடகம் என்றால் என்ன?, நாடகம் என்னும் கலை, பண்பாடாக அரங்கு, கோயில் அரங்கக் கட்டிடக் கலை. இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ் நாடாக அரங்கம், ஈழத்துத் தமிழ் அரங்கில் பெண்கள், பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை, பேராசிரியர் சு. வித்தியானந்தன், பேராசிரியர் மௌனகுரு மற்றும் சண்முகலிங்கம், ஜோர்ஜ் சந்திரசேகரன் முதலியவர்களின் நாடக அரங்கப் பங்களிப்புகள் உட்பட 23 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
தொல்காப்பியமும் கவிதையும்: தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் கவிதைப் பற்றி கூறுவனவும், அவை தொடர்ந்து வரும் தமிழ் இலக்கிய மரபில் எவ்வாறு போற்றப்பட்டுள்ளன என்பன பற்றியும் விவரிக்கும் பல ஆய்வுக் கட்டுரைகள் இந்நூலில் உள்ளது.
தமிழிற் கவிதை வளர்ச்சிப் பற்றிய தொடக்க நிலைச் சிந்தனைகளை இந்நூல் ஆராய்கின்றது. தமிழர் சிந்தனை மரபில் தொல்காப்பியம், பாவும் கவிதையும், பத்துப்பாட்டில் கவிதையில், தமிழ்க் கவிதை வரலாற்றிலே தொல்காப்பியக் கவிதையியல் – சில வினாக்களும் சிக்கல்களும் முதலிய கட்டுரைகள் இடம் பெற்று உள்ளன. மேலும், பின்னிணைப்பாக, தமிழிற் கவிதை பற்றிய இலக்கணமயப்படுத்தப்பட்ட நோக்குகளும், தமிழிலக்கியத்தின் உள்ளார்ந்த படைப்பாற்றல் நெகிழ்வுணர்வும் எனும் கட்டுரை இடம் பெற்றுள்ளது.
தமிழின் கவிதையியல்: சென்னைப் பல்கலைக் கழகத் தமிழிலக்கியத் துறையில் 2004 ஆம் ஆண்டு பேராசிரியர் கா.சிவத்தம்பி நிகழ்த்திய தொடர் சொற்பொழிவுகளின் தொகுப்பு நூல் ஆகும். சங்க இலக்கியங்கள், அற இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், காப்பிய இலக்கியங்கள், அரசவை இலக்கியங்கள், கோயில் இலக்கியங்கள், சமூக நோக்கு இலக்கியங்கள் எனப் பேரலைகள் பல மேற்கிளம்பிய தமிழ்க் கவிதையின் அடிப்படைகளை இனங்கண்டு கொள்வதற்கு உதவும் நூலாக இந்நூல் உள்ளது.
பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம் : இந்நூல் சங்ககால ஆரம்பத்திலிருந்து சிலப்பதிகார காலம் வரையிலான தமிழ்ச் சமூகத்தின் நாடகம் பற்றிப் பேசுகிறது. மேலும், தமிழ்ச் சமூகத்தின் நாடகத்தை, நாடகச் சூழலை, நாடகக் கலைஞரை, நாடகப் பண்பாட்டை அவற்றின் சமுக வரலாற்றினூடாக ஆராய்கிறது. தமிழ் நாடகத்தின் பலங்களை, பலகீனங்களை விளங்கிக் கொள்ள கிரேக்க நாடகத்துடன் அதை ஒப்பிட்டாராய்கிறது. இந்நூல் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது.
ஆய்வுப் பிரச்சனைகளும் முறைமையும், கிரேக்க நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும், ஆய்வு மூலங்கள், வீரயுகத்தில் நடனமும் நாடகமும், நிலப்பிரபுத்துவ மேலாண்மைக் காலத்தில் நடனமும் நாடகமும் உட்பட 10 தலைப்புகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நூல் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான தமிழக அரசின் பரிசைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ‘பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம் ’ என்ற நூலில் பேராசிரியர் கா.சிவத்தம்பி தொல்லியல் சான்றுகளையும், இலக்கியச் சான்றுகளையும் பயன்படுத்தி, பாட்டுத் தொகைக்காலம், தொல்காப்பியம், திருக்குறள், கலித்தொகைக் காலம், சிலப்பதிகாரக் காலாமான கி.பி. 600 வரை உள்ள காலத்தை மூன்று கட்டங்களாக வகுக்க வேண்டுமெனக் கூறியுள்ளது ஒரு முக்கியமான கருத்தாகும் என கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் சென்னைப் பல்கலைக் கழகம் டிசம்பர் 2006-ல் நடத்திய பன்னாட்டு கருத்தரங்கு தொடக்கவிழா வாழ்த்துரையில் குறிப்பிட்டுள்ளார்.
கார்த்திகேசு சிவத்தம்பியின் நேர்காணல்கள் (தொகுதி-1): மொழி, இலக்கியம், திரைப்படம், நாடகம், ஈழம், புலம்பெயர்ந்தோர், தேசிய இனம், அரசியல், புதிய தத்துவப் போக்குகள், மார்க்சியம் போன்ற பரந்துபட்ட பொருள்களை இவை உள்ளடக்கியிருக்கின்றன. அறிவுத் தேடலை விரிவுபடுத்தும் நோக்கில் இந்த நேர்காணல்கள் அமைந்துள்ளன.
பேராசிரியர் கா.சிவத்தம்பி தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் வருகை தரு பேராசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் ஆய்வரங்கில் அரங்கேற்றப்பட்டதும், 1986 ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ‘Literary History in Tamil –A Historiographical Analyais’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட ஆய்வு நூலின் தமிழாக்கம் இலக்கிய வரலாறு வரலாற்றெழுதியல் ஆய்வு என்னும் நூலாகும். இந்நூல் தமிழில் இலக்கிய வரலாறு எழுதப்பட்ட முறைமைகளைப் பற்றி ஆராய்வதன் மூலம் எத்தகைய வரலாறு வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
“தமிழுக்கு ஒரு முற்றுமுழுதான இலக்கிய வரலாறு எழுதப்படுவதற்கு வேண்டிய ஆட்களையும்,பொருட்களையும் ஒரு நயமான இடத்திற்குக் கொண்டு வந்து, அதற்கெனத் தொழிற்படுவதற்கான ஒரு பெரு முயற்சி மேற்கொள்ளப்படவில்லை ” என்பதைச் சுட்டிகாட்டுவதன் மூலம், திட்டமிட்டு, முறையாகச் செயற்பட்டு இலக்கிய வரலாறு எழுதப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
தமிழிலக்கிய வரலாற்றின் பிரக்ஞை மையங்களாக கீழ்கண்டவற்றை பேராசிரியர் கா.சிவத்தம்பி குறிப்பிட்டுள்ளார்.
- தணிக்கை நடைபெற்றிருக்கலாம் என்பதால் சங்க இலக்கியத் தொகுப்பு ஒரு முழுமையான தொகுப்பு இல்லை.
- தமிழ் இலக்கிய வரலாறுகள் கருத்துநிலை அடிப்படையில் எழுதப்படவில்லை.
- சாத்திரங்கள் சைவ மேலாண்மையால் சேர்க்கப்பட்டிருந்தாலும் மணிப்பிரவாள நடையிலமைந்த நாலாயிரதிவ்ய பிரபந்த வியாக்கியானங்கள் சேர்க்கப்படவில்லை.
- சித்த மருத்துவ நூல்கள் பரந்துபட்ட பயன்பாட்டில் இல்லாமல் குழுமச் சொத்தாக இக்கின்றமை.
- தொழில்நுட்பச் சொற்களின் வரலாறு எழுதப்படாமை.
- தமிழர்கள் வடமொழியில் எழுதிய நூல்கள் பற்றிய முற்றுமுதலான ஆய்வு மேற்கொள்ளப்படாமை.
- வடமொழி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் உள்ள தொடர்பான நூல்கள் பற்றிய ஆய்வுகள் உட்படுத்தப்படாமை.
- கடந்த முப்பது ஆண்டுகளில் வளர்ந்துள்ள நாட்டார்வழக்காற்றியலில் விழிப்புடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், சமூகவியல் ஆய்வுகள், பேச்சு வழக்காற்று ஆய்வுகள் போன்றவை சேர்க்கப்பட வேண்டியதன் தேவை.
- இலக்கியம் ஒரு கலைப்படைப்பு என்பதால் மற்ற கலைகளுடன் இதற்கு உள்ள தொடர்பு கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதன் அவசியம்.
- புத்தக உற்பத்தி, விநியோகம், வாசிப்பு பற்றிய வரலாற்றின் தேவை.
- மூலபாடத் திறனாய்வு மேற்கொள்ளப்படாமை.
- வெகுசன வாசிப்புக்கான எழுத்தாக்கங்களின் முக்கியத்துவம்.
- இலங்கை, மலேசிய இலக்கியங்களைத் தமிழிலக்கியங்களாகக் கற்பதற்கான ஒரு கல்விமுறை உருவாகாமை.
- பண்டைத் தமிழிலக்கியங்களுக்கான காலநிரல் இல்லாமை.
‘இயக்கமும் இலக்கியமும்’ என்ற கட்டுரையில் பேராசிரியர் கா.சிவத்தம்பி, பொற்காலம் என்று அழைக்கப்பட்ட சங்க காலத்தையும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனப் புகழப்பட்ட தமிழரின் நானிலங்களையும், வாழ்க்கை முறைகளையும் குறிஞ்சியில் வேட்டையாடிய தமிழ் இனம், முல்லையில் இடையராக மாறி மருதத்தில் வேளாண்மை செய்யும் நிலைக்கு உயர்ந்து, நெய்தலில் கடல் கடந்து வாணிபம் செய்த நிலைக்கு மாறிய பரிணாம மாற்றத்தையும், இந்த மாற்றத்தினூடு நடைபெற்ற ஓயாத போர்களையும் சமூக வளச்சியையும் முதலில் எடுத்துரைத்துள்ளார்.
பண்டைத் தமிழ்ச் சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கி : இந்நூலில் திணைக் கோட்பாட்டின் சமூக அடிப்படைகள், பூர்வ காலத் தமிழ்நாட்டில் அரசமைப்பு உருவாக்கம், பண்டை தமிழ் நாட்டில் உயர்குடி ஆதிக்க மேட்டிமையின் வளர்ச்சி, சங்க இலக்கியமும் தொல்லியலும், முல்லைத் திணைக்கான ஒழுக்கம் முதலிய ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
பேராசிரியர் சு.வித்தியானந்தன், பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை ஆகியோரின் மாணவராக விளங்கிய சிவத்தம்பி, அவர்களிடமிருந்து ஈழத்து நாடகத்துறைச் சார்ந்த அறிவைத் தானும் உள்வாங்கிக் கொண்டார். அவர்கள் தயாரித்த நாடகங்களில் பங்கேற்று நடித்து உள்ளார். ஸாஹிராக் கல்லூரியில் பணியாற்றும் போது இலங்கை வானொலி நாடகங்களிலும் நடித்துள்ளார். பின்னாளில் நாடக நடிகராக மட்டுமின்றி கதாசிரியராக, கவிஞராக, வானொலி உரைச்சித்திர எழுத்தாளராக, சிறந்த மேடைப் பேச்சாளராக எனப் பல பரிமாணங்களிலும் மிளிந்தார்.
இலங்கையர்கோன் எழுதிய ‘ விதானையார் வீட்டில் ’ என்னும் நாடகத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார். மேலும் ‘ உடையார் மிடுக்கு ’ என்ற நாடகத்தில் ‘ உடையார் ’ என்ற பாத்திரமேற்று நடித்தார். பின்னர், ‘தவறான எண்ணம் ’ ‘சுந்தரம் எங்கே ’ போன்ற நாடகங்களிலும், சில ஆங்கில நாடகங்களிலும் நடித்தார். இலங்கைக் கலைக் கழகத்தின் செயலாளராக இருந்து நாடக நெறியாள்கையிலும், கலைக்கழகச் செயற்பாட்டிலும் ஈடுபட்டார். பல்கலைக் கழகத்தில் ‘நாடகமும் அரங்கியலும்’ என்ற பட்டப் படிப்பு பாடநெறியினை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தார்.
பேராசிரியர் சு.வித்தியானந்தனுடன் மட்டக்களப்பு, மன்னார், முல்லைத்தீவு, மலையகம் என்று பல இடங்களுக்கும் சென்று அங்கு வழக்கிலிருந்த நாடகங்களையும், கூத்துக்களையும் செழுமைப்படுத்தினார். கொழும்பு பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்க நாடகங்களுக்கு நெறியாளராக இருந்து மூன்று நாடகங்களை நெறியாள்கை செய்தார். பல இடங்களுக்கும் சென்று கூத்துக்குப் புத்துயிர் அளித்தார். 1963 ஆம் ஆண்டு ‘மார்க்கண்டன் வாளபிமான்’ என்னும் நாடகத்தைப் பதிப்பித்தார்.
அண்ணாவிமார்களை சம கலைஞர்களாக மதித்து அவர்களை கௌரவித்து, அவர்களுக்குச் சமூகத்தில் மதிப்பார்ந்த இடம் பெற்றுக் கொடுத்தார். அரச அதிபர்களையும், அரசு அதிகாரிகளையும், அண்ணாவிமாரின் வீடு தேடி வர வைத்தார். கற்றோர் மத்தியில் கூத்துக்கு ஒரு அங்கீகாரம் பெற்றுத் தந்தார். அறிஞர். அ.ந. கந்தசாமி எழுதிய ‘ மதமாற்றம் ’ நாடகத்தை நெறிப்படுத்தினார்.
தமிழ் நாடகத்தின் தோற்றம் பற்றிய பேராசிரியர் கா.சிவத்தம்பி ஆய்வேடு, கிரேக்க நாடகங்களின் தோற்றம், வளர்ச்சி, தன்மைகள் விளக்கப்பட்டுள்ளன. இவரது ஆய்வேடு வெளி வந்த பிறகு தமிழின் மிகப்பெரிய துறைகளுள் ஒன்றாக இருக்கும் நாடகத்துறை பற்றிய விழிப்புணர்வு ஈழத்தில் ஏற்பட்டது. பாடத் திட்டங்களில் நாடகம் முதன்மை இடம் பெற்றது. பல மாணவர்கள் நாடகங்களில் நடிக்கவும், நாடகத்துறை குறித்து ஆராயவும் செய்தனர். தமிழகத்து அறிஞர்களும் நாடகத்துறையில் கவனம் செலுத்த இவரது ஆய்வேடு ஒரு காரணமாக அமைந்தது.
தமிழ்நாடக வளர்ச்சியில் இவரது பங்களிப்பு மிகப் பெரியது. கூத்து, நாடகம், அரங்கியல் சார்ந்த செய்திகளைப் பாடத்திட்டத்தில் கொண்டு வந்தார். பல கல்லூரி, பல்கலைக்கழகப் பாடத்திட்டக் குழுக்களில் இவர் இடம் பெற்றபொழுதெல்லாம் தரமான பாடத்திட்டங்கள் அமைய உதவியுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நுண்கலைத் துறைத்தலைவராகப் பணிபுரிந்த பொழுது பல்வேறு நாடகமுயற்சிகளை மேற்கொண்டார். இவரால் யாழ்ப்பாணத்தில் புதிய நாடக மரபு உருவானது.
தமிழக அரசின் உயர்ந்த விருதான திரு.வி.க. விருது 2000 ஆம் ஆண்டு பேராசிரியர் கா.சிவத்தம்பிக்கு வழங்கப்பட்டது. இது ஈழத்தமிழர் பெருமை கொள்ளத்தக்கதாகும். மேலும், இதுவரை காலத்தில் இவ்விருதினைப் பெற்ற முதலாவது ஈழத் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.
திரு.வி.க விருதினை பேராசிரியர் கா. சிவத்தம்பிக்கு வழங்கி, வாழ்த்திய அன்றைய தமிழக அரசின் கல்வி அமைச்சர் பேராசிரியர். க. அன்பழகன், “இன்றைக்கு இலக்கிய ஆய்வுக் கண்ணோட்ட சிந்தனையை வளர்க்கின்ற ஒரு அரும்பணியை ஆற்றுகின்றார் நம்முடைய பேராசிரியர் சிவத்தம்பி. அவருடைய தமிழ்த் தொண்டு தொடர்ந்து நடைபெற்று தமிழருக்கு ஆக்கம் வழங்கப்பட வேண்டும் என்ற முறையில் திரு.வி.க. விருது அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதற்காக நான் அவரை உளமார வாழ்த்துகிறேன்” என்று புகழ்ந்துரைத்துள்ளார்.
பேராசிரியர் கா.சிவத்தம்பி தமிழக அரசு வழங்கிய திரு. வி.க. விருதினைப் பெற்றுக் கொண்டு ஆற்றிய தமது ஏற்புரையில், சுவாமி விபுலானந்தர், கா.சு. பிள்ளை, தெ.பொ.மீ. வையாபுரிப் பிள்ளை, கணபதிப் பிள்ளை, எனது நண்பன் சைலாசபதி என்ற கருடன்கள் பறந்த இந்தத் தமிழியல் வானில் நானும் ஓர் ஈயாகப் பறக்கிறேன்” என்று தன்னடக்கத்துடன் கூறினார்.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் 1998 ஆம் ஆண்டு இலக்கிய கலாநிதிப் பட்டத்தை (Doctorate in Literature) வழங்கிச் சிறப்பித்தது. அதே ஆண்டு வடக்கு, கிழக்கு மாகாண ஆளுனர் விருதான Man of the Year விருதும் அளிக்கப்பட்டது. மேலும், கேம்பிரிஜ் பல்கலைக் கழகத்தின் International Biographical Centre பேராசிரியர் கா.சிவத்தம்பிக்கு 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த புலமையாளர் விருது வழங்கிப் பாராட்டியுள்ளது. இலங்கை அரசின் சாகித்திய ரத்னா விருது பெற்று உள்ளார்.
பேராசிரியர் கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி 06.07.2011 அன்று கொழும்பில் காலமானார்.
பேராசிரியர் கா. சிவத்தம்பியின் முன்வைப்புகள் / வேண்டுகோள்கள் :
“இலங்கை நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக வளர்ச்சியில் பெரும் பங்கை ஆற்றி வந்துள்ள தமிழர்கள், அந்நாட்டில் சம அதிகாரமும் அந்தஸ்தும் பெற்றிருக்க வேண்டும். அதற்கான முழு உரிமையும் தமிழ் மக்களுக்கு உள்ளது. ”
“தமிழியல் என்பது தமிழோடு தொடர்புடைய ஆய்வுகள் எல்லாவற்றுக்கும் பொதுவானது. இது அரசியலாகவும், தொல்லியலாகவும், மானிடவியலாகவும், சமூகவியலாகவும், தமிழை தமிழில் இருக்கும் எழுத்துக்களை தமிழர் வாழ்க்கை பற்றிய சகல துறைகளையும் ஒன்றிணைத்து அந்தச் சமூகத்தை ஆய்வு செய்வதே தமிழியல் ஆய்வு.”
“தைப்பொங்கல் இன்றளவும் தமிழ் மக்களுடைய அடையாளத்தை போற்றுகின்ற, எந்த மதத்தாலும் கபளீகரம் செய்ய முடியாத, சமயச் சார்பில் இருந்து விடுபட்ட ஒரு விழாவாகவே நீடித்து வருகிறது. இதனைக் காப்பாற்றுவதும் அதன் பண்பாட்டுக் கூறுகள் சிதையாமல் கொண்டாடுவதும் காலத்தின் தேவையாகும். அதே சமயம் உலகம் முழுவதும் தமிழ் மக்கள் பரவியுள்ள இன்றைய நிலையில் பொங்கல் விழாவை ஒரு முக்கியமான விழாவாக்க அந்தத் தமிழ் மக்களுடைய அடையாளத்தையும் சேர்த்துக் காட்டுகின்ற ஒரு விழாவாகவும் மாற்ற வேண்டும். இதில் சிரமம் இல்லாமல் இல்லை. ஆனால் இம்மாற்றம் உலகளாவிய நிலையில் தமிழ் இனத்தை ஒன்று சேர்க்கும். உலகமெங்கும் வாழும் தமிழர்களின் அடையாள விழாவாகப் பொங்கல் மாற வேண்டும்.”
கல்வித்துறையினர் பல்வேறு பாடங்களுக்குக் கலைச் சொற்றொகுதிகளை தயாரித்திருப்பது போன்று கலை, இலக்கி சொற்றொகுதியினைத் தொகுத்துக் கொள்ளுதல் அத்தியாவசியமாகும்.
எந்த ஆராய்ச்சியாளரும் தனது காலச் சூழலுக்கு எற்ப ஒரு குறிப்பிட்ட தூரமே செல்ல முடியும். அதற்கு மேல் தொடர்ந்துவரும் ஆராய்ச்சியாளர்கள் மேலே-மேலே செல்வார்கள்.
நான் எனது ஆசிரியர்களின் தோள்களின் மேலே நின்று பார்த்தேன். எனது மாணவர்கள் எனது தோள்களின் மீது நின்று பார்க்கின்ற பொழுது அவர்கள் மேலும் சில புதிய பரப்புகளை காண்பார்கள்.
“மார்க்சியம் காலத்திற்கேற்றபடி வளர்க்கப்பட வேண்டும். மார்க்சிய சிந்தனையின் பிரயோகம் இல்லாமல் சமூக ஒடுக்குமுறைகளை, சுரண்டல் முறைகளை ஒழிக்க முடியாது. ஒடுக்கு முறைகளையும் சுரண்டல் முறைகளையும் பயன்படுத்தி வளரும் நிறுவனங்கள், மார்க்சிய சிந்தனையை ஊக்குவிக்கப் போவதுமில்லை. ஆனால் மார்க்சியம் ஒரு முக்கியமான அறிவுஜீவிகள் இயக்கமாக இருக்கும். அதனைப் புதிய சூழலுக்கு ஏற்ப, புதிய முறையில் சிந்திக்க வேண்டும். மார்க்சியம் தொடர்ந்து மனித விமோசனத்திற்கான இலக்குகளைக் காட்டுகிற தத்துவமாக நீடிக்கும். ”
“தமிழ் ஆய்வில் ஈடுபட்டுள்ளோர் வரலாறு, சமூகவியல், மானுடவியல், புவியியல் போன்ற துறைகளில் அறிவு பெற வேண்டும் ; குறுகிய குழுச் சார்புகளைத் தவிர்க்க வேண்டும் ; முன் முடிவுகளுக்குத் தங்கள் அறிவு நாணயத்தைப் பறிகொடுக்காமல் காத்துக் கொள்ள வேண்டும்; ஆரோக்கியமான கருத்துப் பரிவர்த்தனைக்குக் களம் அமைக்க வேண்டும் ; ஆங்கில மொழி வாயிலாகத் தமிழ் இலக்கியப் பொக்கிஷங்களை உலகுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் . ”
“ஆங்கிலத்தில் தொடக்கக் கல்வி கற்பிப்பதன் மூலம் பிள்ளைகளுக்கு பெரிய அறிவு வருவதாக சொல்வதற்கு என்ன சாத்தியப்பாடு இருக்கிறது. ஏனென்றால் அந்தப் பிள்ளையினுடைய பண்பாட்டுச் சூழலில் இல்லாத விடயங்களாக அங்கு பேசப்படுகின்றன. வீட்டில் அந்தச் சூழல் இல்லையென்றால் அந்தப் பிள்ளைக்கு அந்த மொழிவராது. தமிழன் என்கிற முறையில் சொல்கிறேன், தொடக்கநிலைக் கல்வி தாய்மொழியில் தான் இருத்தல் வேண்டும். தாய்மொழி வழிக் கல்வி இயல்பானது மட்டுமின்றிச் சிந்தனையை வளர்க்கும் தொழிற்பாடு உடையது ”
“பேராசிரியர் சிவத்தம்பி, தமிழ்ச் செவ்விலக்கியத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்ச்சமூக வரலாற்றுக்கு செய்த பங்களிப்புகள் முக்கியமானவை. அவற்றைப் பின்வரும் வகையில் தொகுக்கலாம்.
- தமிழ் இலக்கணமான தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியங்களில் பேசப்படும் ‘திணை’ எனும் கோட்பாட்டின் வழி கண்டறியப்படும் தமிழ்ச் சமுக வரலாறு.
- சமச்சீரற்ற சமூக அமைப்பாக இருந்த தமிழ்ச் சமூகத்தில் அரசு உருவாக்கம் எவ்வகையில் உருவானது என்ற உரையாடல்
- தமிழ்ச் சமூக இயங்குமுறைகளில் ஆதிக்க மரபுகள் எவ்வகையில் உருப்பெற்றன ? அதன் விளைவுகள் எவை என்பவை தொடர்பான விவரணங்கள் சார்ந்த விளக்க ஆய்வுகள்.
- மானிடவியல், தொல்லியல் மரபுகளோடு தமிழ்ச் செவ்விலக்கியங்களின் வழி பெறப்படும் தமிழ்ச் சமூக வரலாற்றை இவ்வகையில் உலகப் புலமைத்தளத்திற்குக் கொண்டு செல்லும் பணியைப் பேராசிரியர் சிவத்தம்பி நிறைவேற்றியுள்ளார். மேலும், பேராசிரியர் சிவத்தம்பி அளவுக்குப் பண்டைத் தமிழ்ச் சமூக வரலாறு தொடர்பான ஆய்வை மேற்கொண்டவர்கள் மிகக் குறைவு. இப்பங்களிப்பிற்காக அவருக்குத் தமிழ்ச் சமூகம் என்றென்றும் கடன்பட்டுள்ளது. “ மேலும் சமூக வரலாற்றை எழுதுவதற்கு இலக்கியத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைக் கற்றுத் தந்தவர். தமிழ்க் கவிதையியல் மற்றும் அழகியில் குறித்து அவர் செய்திருக்கும் ஆய்வுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. மேலும் ஊடக அரசியல் குறித்து எழுதிய கட்டுரைகள் வெகுசன ஊடகங்களைப் புரிந்து கொள்ள மிகவும் பயன்படக்கூடியவை.” என சென்னைப் பல்கலைக் கழக தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் வீ. அரசு தமது நினைவஞ்சலிக் குறிப்பில் பதிவு செய்துள்ளார்.
“பேராசிரியர் சிவத்தம்பிக்கு முன்னதாகவும் அவருடைய சம காலத்திலும் இயங்கிய பல ஆய்வாளர்கள் பெரும்பாலும் பண்டைய தமிழ்ச் சமூகம் பற்றியும், அக்கால மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பற்றியுமே ஆராய்ந்தார்கள். அக்கால கட்டத்துச் சமூகத்தின் ‘சமூக வரலாற்றைப் பற்றி’ யாரும் விவாதிக்கவில்லை. சிவத்தம்பி மார்க்சிய வெளிச்சத்தில் அக்கால கட்டத்தில் நிலவிய சமூக உறவுகள், சமூக நிறுவனங்கள் என தமது ஆய்வு நோக்கை ஆழச் செலுத்தி தமிழிலக்கிய ஆய்வில் புதிய ஒளியைப் பாய்ச்சியவர்.”
இந்தியா என்றழைக்கப்படும் நிலப்பரப்பின் தொன்மை மொழியாக அய்ரோப்பியர்களால் அடையாளங்காணப்பட்ட வடமொழிக்கு மாற்றாகத் தமிழை உலக அரங்கில் முன்னிறுத்தியவர்கள் கைலாசபதியும், சிவத்தம்பியுமே ஆவர். உலக அரங்கில், தெற்காசிய அரங்கில், இந்திய அளவில் தமிழின் இடத்தை நிலை நிறுத்துவதில் தொடர்ந்து செயல்பட்டார் பேராசிரியர் கா.சிவத்தம்பி ” என நாடக ஆய்வாளர் கி. பார்த்திபராஜா புகழ்ந்துரைத்துள்ளார்.
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் ஆய்வுகளைப் பின்வருமாறு வகைப்படுத்திக் கொள்ளலாம் என இலக்கிய ஆய்வாளர் தெ.மதுசூதனன் குறிப்பிட்டுள்ளார்.
பழைய இலக்கிய இலக்கணம் தொடங்கி நவீன இலக்கியம் வரை, பண்டைய நாடகம் முதல் நவீன நாடகம் வரை, இதன்மூலம் சமூக வரலாறு எழுதுவதற்கான, கண்டடைவதற்கான தேடல் ஆய்வு, தமிழில் இலக்கிய வரலாறு எழுதியது தொடர்பான பிரச்சினை, தமிழர்களின் கலை இலக்கிய பண்பாடு வரலாறு பற்றியவை, தொடர்பூடகங்கள், பக்தி இலக்கியங்கள், தொல்காப்பிய, சங்ககாலக் கவிதையியல், தமிழகம், ஈழம் தொடர்பான அரசியல் போக்குகள், பல்பண்பாட்டுச் சூழலமைவு பற்றிய தேடுகையும் ஆய்வும், ஈழத்தின் பிரதேசப் பண்பாடுகள் தனித்துவம் கருத்து நிலை சார்ந்த ஆய்வுகள், திராவிட இயக்கம், தனித்தமிழ் இயக்கம், மார்க்சிய இயக்கம்., தமிழ்த்தேசிய விடுதலை அரசியல்
இவ்வாறு பல்வேறு நிலைகளில் பல்வேறு தளங்களில் விடயப் பொருள் ஆய்வுப் பொருளாக மாற்றம் பெற்றுள்ளது. தமிழியல் ஆய்வு சுட்டும் பொருள் கோடலுக்கேற்ப தமது ஆய்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். அறிவியல் நெறியில் ஆய்வு முறை புதிய தடத்தில் வெளிப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து செயற்பட்டுள்ளார்.
மேலும், பேராசிரியர் கா.சிவத்தம்பியின் ஆய்வுத் தளம் விரிவானது. ஆழமானது. இது பல்துறை ஆராய்ச்சி அணுகு முறையைக் கொண்டது. மார்க்சிய அணுகு முறை இத்தகைய ஆய்வுக்கான களத்தை விரிவாக்கம் செய்தது. தமிழியல் ஆய்வு என்பதற்கான விளக்கத்தை விரிவாக்கி தமிழ்மொழியின் தமிழ் இனத்தின் தமிழ்ப் பண்பாட்டின் அனைத்துப் படிநிலைகளையும் ஊடறுத்துச் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தியவர். அதாவது “தமிழியல் என்பது தமிழோடு தொடர்புடைய ஆய்வுகள் எல்லாவற்றுக்கும் பொதுவானது. இது அரசியலாகவும், தொல்லியலாகவும், மானிடவியலாகவும், சமூகவியலாகவும் தமிழை தமிழில் இருக்கும் எழுத்துகளைத் தமிழர் வாழ்க்கை பற்றிய சகல துறைகளையும் ஒன்றிணைத்து அந்தச் சமூகத்தை ஆய்வு செய்வதே தமிழியல் ஆய்வு ” எனக் கூறியுள்ளார்.
மரபுவழித் தமிழில் ஆழ்ந்த புலமை, நவீன கல்வி சார் ஆய்வு வழிமுறைகளில் இறுக்கமான பயிற்சி, மார்க்சிய அணுகல் முறையை அடிப்படையாகக் கொண்டமை என்கிற இம்மூன்று கூறுகளும் ஒரு சேரப் பெற்றவராக பேராசிரியர் கா.சிவத்தம்பி நம்மிடையே வாழ்ந்திருந்தார். மேலும், பழந்தமிழ் இலக்கண, இலக்கியங்கள் என்பவற்றோடு நில்லாமல், அவரது ஆய்வுப் பரப்பு அழகியல், கவிதையியல், நாடகம், பண்பாட்டு மானுடவியல், திரைப்படம், நவீன இலக்கியங்கள், சமகால அரசியல் எனப் பரந்து விரிந்திருந்தது – என தமிழ் கூறு நல்லுலகம் இழந்த பல்துறை அறிஞர் என்று விமர்சகர் பேராசிரியர் அ. மார்க்ஸ் பதிவு செய்துள்ளார்.
“பேராசிரியர் கா.சிவத்தம்பி சிறந்த பண்புகள் பலவற்றை நடைமுறையில் பின்பற்றி ஒழுகும் இயல்புள்ளவர். பேச்சிலும், எழுத்திலும் ஒன்றைச் சொல்லி நடைமுறை வாழ்க்கையில் வேறு வகையாக வாழும் பொய்மை அவரிடத்தில் இல்லை. அவரது ஒவ்வொரு செயலிலும் சக மனிதனை மதித்து கௌரவித்து நடந்து கொள்ளும் உயர் பண்பினைக் கண்டு கொள்ளலாம். யாழ்ப்பாணத் தமிழ்ச் சமூகம், அந்த சமூகத்துக்குள்ளேயே இன்னொரு மனிதனை உயர்வு தாழ்வு கற்பித்து கீழ்மைப்படுத்துவதனை தார்மீக சினத்துடன் நிராகரித்தவர். அந்தச் சின்னக் குணத்துக்கு எதிராகப் பேசியும் எழுதியும் வந்தவர். கல்வி, பதவி, உயர்வு, தாழ்வு முதலிய வேறுபாடுகளைக் கடந்து அனைத்துப் படைப்பாளிகளையும் மதித்துப் பழகியவர்.” என ஈழத்து எழுத்தாளர் தெணியான் புகழ்ந்துரைத்துள்ளார்.
“தமிழ் இலக்கியம், தமிழர் பண்பாடு, தமிழ் இலக்கிய விமர்சனம் பற்றி உலகில் எங்கெல்லாம் ஆய்வுகள் நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் பேசும் பொருளாகப் பேராசிரியர் கா.சிவத்தம்பியினுடைய எழுத்துப்பணியும் உடனிருக்கும். இத்தகைய உலகப்புகழுடன் விளங்கியவர். எங்கள் பிதாமகர்” என யாழ்ப்பாணப் பல்கலைக் கழக பேராசிரியர் அ. சண்முகதாஸ் பதிவு செய்துள்ளார்.
பேராசிரியர். கா.சிவத்தம்பியின் ஆய்வு அணுகு முறை விஞ்ஞானப் பூர்வமானது. வரலாற்று, பண்பாட்டு துறை அறிவுப் பின்புலத்தை நிறுவுதல் ; எடுத்துக் கொண்டுள்ள பிரச்சினையை அல்லது எடுகோளை இந்தப் பின்புலத்தில் பொருத்துதல் ; தரவுகளின் அணிவகுப்பு ; படிப்பினைகளின் சாத்தியக் கூறுகளை இனங்காணுதல் ; தரவுகளின் குறைபாடுகளயும், துறை அறிவில் உள்ள இருண்ட பகுதிகளையும் கோடிட்டுக் காண்பித்தல் ; ஆய்வின் ஊடாக வெளிப்படும் முடிவுகளைத் திறந்த மனதுடன் தர நிர்ணயம் செய்தல்; மேலும் மீள் ஆய்வுக்கு இலக்காக்கப் பட வேண்டிய கூறுகளை இனங்காணுதல் ; இத்தகைய ஆய்வுகளுக்கான திசை காட்டும் சிந்தனைப் பொறிகளை விட்டுச் செல்லல், என ஆய்வுத் தளத்தை விரிவுபடுத்தியுள்ளார் பேராசிரியர் கா.சிவத்தம்பி” என்று ஆய்வாளர் டாக்டர் கே. எஸ். சுப்பிரமணியன் பதிவு செய்துள்ளார்.
தமிழ்ப் பேராசான் சிவத்தம்பி பெயரில் ஆய்வு நிலையம் அமைக்க வேண்டிய பொறுப்பு உலகமெங்கும் பரந்துவாழும் தமிழ்ப் புலமையாளர்களின் வரலாற்றுக் கடமையாகும்.
- பி.தயாளன்