ramasundram2நினைவலைகள்

பள்ளிக்கூடம், கல்லூரி, பல்கலைக்கழகம் எனக் கல்வி சார்ந்த நிறுவனங்களில் படிக்கும்போதும் பணிபுரியும் போதும் பலரிடம் பழகும் வாய்ப்புகள் கிடைக்கும். 

விடுதியில் ஒரே அறையில் சில ஆண்டுகள் ஒன்றாகத் தங்கி இருந்தவர்கள்கூட நினைவுக்கு வருவதில்லை. அதிகமாகத் தொடர்பு இல்லாவிட்டாலும் பழகிய முறையால் தொடர்பு விடுபட்டுப் போனாலும் அடிக்கடி மின்னல் பூச்சியைப் போலச் சிலர் மனதிற்குள் பளிச்சிட்டு மறைவர். அப்படிப்பட்டவர்களுள் ஒருவரே பேராசிரியர் முனைவர் இராம. சுந்தரம் அவர்கள்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் (1982) தற்காலிகப் பணி ஒன்று கிடைத்தது.  நான் இருந்த ஊராய்வுத் திட்டத் துறையும் பேராசிரியர் இராம. சுந்தரம் இயக்குநராக இருந்த தமிழ் வளர்ச்சித் துறையும் ஒரே அறையில் இயங்கின.

 ஐயம் வந்து கேட்டால் தெளிவாக விளக்குவார். எதைப் பற்றியும் யாரைப் பற்றியும் விளக்கமாகச் சொல்லக்கூடிய ஆற்றல் பெற்றவர். அவரின் ஆளுமை பற்றிப் பேராசிரியர் பொன். கோதண்டராமன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

“உலகளாவிய அரசியல் பற்றியும் அரசியல் கோட்பாடுகள் பற்றியும் இலக்கியம், இலக்கணம், வரலாறு மொழியியல் ஆகியவற்றில் காணும் சிக்கல்கள் பற்றியும் யார் எப்போது கலந்துரையாட விரும்பினாலும் அவர்களுக்கு வாய்ப்பளித்து, இசையாகவும் இனிமையாகவும் அவர்களோடு கலந்துரையாடி அவர்களுக்கு உதவுகின்ற உயர் பண்பும் பல்துறை அறிவுத்திறமும் ஒருங்கு அமையப் பெற்ற முனைவர் இராம. சுந்தரம் அவர்கள் தமிழகத்திற்குப் பல்வேறு நிலைகளில் இன்னும் தொடர்ந்து பயன்பட வேண்டியவர்.”  (தமிழியல் ஆய்வுகள், ப. 21)

சுண்டெலி போகும் தடத்தில் சுண்டெலிதான் போக வேண்டும்; பெருச்சாளி போகும் தடத்தில் பெருச்சாளிதான் போக வேண்டும் என்னும் நடைமுறைக்கு எதிரானவர். 

எல்லோரிடமும் இயல்பாகப் பழகுவார். அலுவலக உதவியாளராகப் பணிபுரியும் இளைஞர்களுக்குப் பேராசிரியரை மிகவும் பிடிக்கும். அவர்கள் தோள்மேல் கையைப் போட்டுக் கொண்டு இயல்பாகப் பேசுவார்.

அரண்மனை வளாகத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகம் இயங்கியபோது தேநீர் அருந்த இருதுறைகளிலும் இருந்தவர்களை அழைத்துக் கொண்டு போவார்.  வடை, போண்டா என அவரவர் விரும்பியதை எடுத்துக் கொள்ளலாம். அவர் எடுத்துக் கொள்ள மாட்டார். தேநீர் அருந்திய பேராசிரியர் வேறு ஒரு பொருளை நிறைய வாங்கிக் கொள்வார்.

அலுவலகத்திற்கு வந்த பிறகு ஆளுக்கு இரண்டு கொடுப்பார். காலங்காலமாகத் தின்னக்கூடிய பொருள்தான்.  பேராசிரியர் இராம. சுந்தரம் ஒரு விளக்கம் கொடுத்தார்.

அவர் கூறிய விளக்கத்திற்குப் பிறகு பல ஆண்டுகள் சிறுபிள்ளைகளைப் போல அதை வாங்கித் தின்பது ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது.

பள்ளியில் படிக்கும் காலத்தில் வீட்டுக்கு வந்ததும் எதையாவது வாயில் போட்டு மெல்ல வேண்டும். வாய் ஊறும்; எட்டுக் கிலோ மீட்டர் நடந்து போய்விட்டுத் திரும்பி வந்தால் எப்படி இருக்கும்? அவசரத் தேவைக்குப் புழுங்கல் அரிசிதான் கிடைக்கும். 

புழுங்கல் அரிசியை அதிகம் தின்றால் முகம் வெளுத்து வீங்கியது போலத் தெரியும். இரத்தம் செத்து சோகை வந்து விடும் என்பார்கள். புழுங்கலரிசி தின்ன புட்டங்குளி என்று கிண்டல் செய்வார்கள்.

மாடு மேய்ப்பவர்களில் குறிப்பாக - பெண் பிள்ளைகளுக்குப் புழுங்கல் அரிசிதான் முக்கியமான தின்பண்டம். அவரவர் வாழும் சூழலுக்கு ஏற்ப வாய் ஊறும்போது கேழ்வரகு, சோளம், புளியங்கொட்டை, புளியங்காய், சுட்ட திருக்கைத் தோல் என மெல்வது வேறுவேறாக இருக்கும்.

கல்லூரியில் படிக்கும் காலத்தில் வறுத்த கடலையை உடைத்துத் தின்பதுதான் மாலையில் முக்கியமான வேலை. மாலைச் சிற்றுண்டியும் அதுதான். 

கடலையை நிறையத் தின்றால் ஒத்துக் கொள்ளாது. எவ்வளவு கடலை தின்றாலும் ஒரு அச்சு வெல்லத்தைக் கடித்துக் கொண்டு தின்றால் வயிற்றுக்கு எந்த விதமான கெடுதலும் வராது.

படிபடியாக வறுத்த கடலையையும் வெல்லத்தையும் தின்ற போதெல்லாம் அவற்றின் சுவை தெரியவில்லை. ஆனால் பேராசிரியர் இராம. சுந்தரம் அவர்கள் விளக்கம் அளித்துக் கொடுத்த கடலை மிட்டாயின் அருமை பல ஆண்டுகள் விலகவே இல்லை.

அண்மையில் ஒரு செய்தியைக் கேள்விப்பட்டபோது மிகவும் வருத்தமாக இருந்தது.  ‘கல்வியிற் சிறந்த தமிழ்நாடு’ என்று எப்போதோ மகாகவி பாடியது இப்போது மிகவும் பொருத்தமாக உள்ளது.

இந்தியாவில் கேரள மாநிலத்தில் படித்தவர்கள் அதிகம் என்பார்கள். தமிழ்நாடும் தற்போது கல்வியில் ஆகச் சிறந்த மாநிலமாகத் திகழ்கின்றது. ஆனால் வேலை வாய்ப்பு?

தற்போது கலை, அறிவியல் என எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் முனைவர் (Ph.D.) பட்டம் என்பதே உயர்ந்த ஆராய்ச்சிப் பட்டம். முனைவர் பட்டம் பெற்ற ஆயிரக்கணக்கானோர் வேலை இல்லாமல் திரிகின்றார்கள் அல்லது நிரந்தரமில்லாத பணியில் சொற்பக் கூலிக்குப் பணி செய்கின்றார்கள்.

கொரோனாத் தொற்று பலவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது. முனைவர் பட்டம் பெற்றவர்கள் தேநீர் விற்பது, காய்கறி விற்பது எனப் பல தொழில்களைச் செய்தார்கள் என்பதை ஊடகங்கள் வழி அறிய முடிந்தது. 

விமானம் ஓட்டிய விமானிகள் பலர் அறுவடை எந்திரங்களை ஓட்டத் தயாராக இருந்தாலும் வேலை கிடைக்கவில்லையாம்.

முனைவர் பட்டம் பெற்ற ஒருவர் சில கல்லூரிகளில் பல ஆண்டுகள் தற்காலிகமாக பணியாற்றி உள்ளார். வயதும் ஐம்பத்தெட்டு முடிந்துவிட்டது.  நிரந்தரப் பணியாக இருந்தால் மே மாதம் இறுதி வரை பணிபுரியலாம்.

சூன் இரண்டுக்குப் பிறகு பிறந்த தேதி என்றால் இன்னும் ஓராண்டு பணி நீட்டிப்புக் கிடைக்கும். நிரந்தரப் பணியில் சேர்ந்து விட்டால் பல சலுகைகள் தாமாக வந்து சேரும்.

அந்தப் பேராசிரியரை இனி, பணிக்கு வர வேண்டாம் என்று அலுவலகத்தில் கூறிவிட்டார்கள். மே இறுதி வரை பணியாற்றலாம் என்று நினைத்திருந்தவரை உடனே அனுப்பிவிட்டார்கள். 

அந்த மாதம் முழுமையாகக் கூடப் பணி செய்ய விடவில்லை. தற்காலிகப் பணியும் நிரந்தரமாகப் போய்விட்டதை எண்ணி வருந்தியபடியே வெளியேறுவதை மனக்கண்ணில் நினைத்துப் பார்த்தால் வலி இதயத்திற்குள் பாயும்.

இன்றைய சூழல் இப்படி; கல்லூரி அது அரசு அல்லது தனியார் எதுவாக இருந்தாலும் பணியை வாங்கத்தான் முடியுமே தவிர, பெற முடியாது.

1980களிலும் வேலை வாய்ப்பின் நிலை இப்படித்தான் என்றாலும் சற்று மேம்பட்ட நிலை இருந்தது. பல்கலைக்கழகத்தில் நிரந்தரமில்லாத பணி; விரைவில் நிரந்தரப் பணி கிடைப்பதாகத் தெரியவில்லை. இலவு காத்த கிளியாக முனைவர் பட்டம் பெற்றவர்களின் நிலை இருந்தது.

1985இல் நூற்றாண்டுப் பழமை வாய்ந்த திருவையாற்று அரசர் கல்லூரியில் நிரந்தரப் பணி கிடைத்தது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முறைப்படி விடுவிப்புப் பெற்று அங்குப் போய்ச் சேர பேராசிரியர் இராம. சுந்தரம் அவர்களிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. அவர் துணைவேந்தருக்கு அனுப்பினார். அதில் ஒரு குறிப்பு எழுதப்பட்டிருந்தது.

உடனே விடுவிப்பது என்றால் மூன்று மாதம் வாங்கிய தொகுப்பூதியத்தைக் கட்ட வேண்டும். ஆண்டு முடிந்தது என்றால் கட்ட வேண்டியதில்லை.  அலுவலக நடைமுறை ஏதோ உள்ளது.

பேராசிரியர் அழைத்தார்.  சென்றவுடன் விழுந்து விழுந்து சிரிக்கிறார். ஒன்றும் புரியவில்லை. குறிப்பைப் படித்துக் காட்டினார். குறிப்பு இவ்வாறு இருந்தது.  இரண்டே தொடர். எப்போது வந்தார்? எப்போது போவார்?

பேராசிரியர் ச. மெய்யப்பனின் “நண்பர் இராம. சுந்தரம் நல்லவர்; வல்லவர்; இனியவர். பெயருக்கு ஏற்ப அழகிய தோற்றத்தினர். செந்நிறத்தர்; செம்மனத்தர்” என்ற குறிப்பு மிகை இல்லை. 

பேராசிரியர் இராம. சுந்தரம் அவர்களைப் பார்க்கும்போதும் அவர் பேசுவதை அவர் தோற்றம் மறைத்து விடும். பேசும்போது பற்கள் பளிச்சிட்டு ஏதோ சிந்துவது போல இருக்கும்.  அவர் சாயலுக்குக் குரல் மென்மைத்தன்மையுடன் இருக்கும் என்றே முதலில் பார்ப்பவர் நினைப்பார். நாதஸ்வர இசை போல் இல்லாமல் மேளத்தில் எழும் இசை போல இருக்கும்.

அந்தக் குறிப்பை பலமுறைப் படித்து வெண்கலக் கடையில் யானை புகுந்தது போலக் கலகலவென்று சிரிக்கின்றார். அப்படிச் சிரித்தவர்களை இதுவரை கண்டதில்லை.

‘1949இல் வந்தார்; போவது தெரியாது’ இப்படிச் சொன்னவுடன் அதற்கும் விழுந்து விழுந்து சிரிக்கிறார். பணியிலிருந்து விடுபடும்போது மனம் நிறைய வாழ்த்தினார்.

நிறையப் படிக்கும்படியும் எழுதும் படியும் அறிவுரை கூறினார். நான் படித்த தமிழ் - மொழியியல் படிப்புகளுக்கும் பார்த்த வேலைக்கும் தொடர்பு இல்லாதது பேராசிரியருக்கு நன்கு தெரியும்.

அவர் செய்த பணியும் எனக்கு முதலில் அப்படித்தான் பட்டது. இருந்தாலும் அறிவியல் தமிழ் வளர்ச்சிக்காக அவர் செய்துள்ள பணிகள் மகத்தானவை.  அவருடைய வாழ்க்கைக்குறிப்பு மலைக்க வைக்கிறது. ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாகவே கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இயங்கி உள்ளார்.

ஆய்வின் உச்சம்

மதுரை தியாகராசர் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கேரளப் பல்கலைக்கழகம், தெக்காணக்கல்லூரி (புனே), வார்சா பல்கலைக்கழகம் (போலந்து), தமிழ்ப் பல்கலைக்கழகம் எனப் படித்த - ஆய்வு செய்த - பணிபுரிந்த கல்வி நிறுவனங்களின் பட்டியல் நீளும்.

இந்தியாவில் நான்கு மொழிக்குடும்பங்கள் இருப்பதாக மொழியியல் அறிஞர்கள் குறிப்பிடுவர். அவற்றுள் திராவிட மொழிக் குடும்பமும் இந்தோ- ஆரிய மொழிக் குடும்பமும் முக்கியமானவை.

இவ்விரண்டு மொழிக் குடும்பங்களைப் பற்றி நிறைய முரண்பட்ட கருத்துகள் பேசப்படுகின்றன. கோட்பாடுகள் வகுத்த மொழியியல் அறிஞர்களே குழம்பும் அளவிற்கு அரசியல் ஆக்கப்படுகின்றன. அவை ஒருபக்கம் இருக்கட்டும்.

தமிழ் மொழியின் அமைப்பை மொழியியல் கண்ணோட்டத்தோடு விளக்கும் முறை கேரளப் பல்கலைக்கழகத்திலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டது. 

தொன்மையான மொழியாகிய தமிழிலுள்ள பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்றவற்றின் மொழி அமைப்புகள் விளக்க மொழியியல் (Descriptive Linguistics) அடிப்படையில் எழுதப்பட்டன.

எட்டுத்தொகை நூல்களாகிய நற்றிணை (A.Kamatchi nathar, 1964), குறுந்தொகை (S.R. Krishnambal, 1974) ஐங்குறுநூறு (M.Elaya Perumal, 1975) பதிற்றுப்பத்து (S. Agesthialingom, 1961) பரிபாடல் (S.N.Kandaswamy, 1962) கலித்தொகை (Andiappa Pillai, 1970) அகநானூறு (S.V. Subramaniyan, 1965) புறநானூறு (V.I.Subramonyam, 1962) என்பவற்றுக்குப் பல அறிஞர்கள் சொல்லடைவு தயாரித்து இலக்கணம் எழுதினார்கள். 

பேராசிரியர் இராம. சுந்தரம் தம்முடைய முனைவர் பட்டத்திற்காகப் பத்துப்பாட்டு முழுவதற்கும் சொல்லடைவு தயாரித்து, இலக்கணம் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும் (1967, Grammatical Study of Pattuppattu--- Index and Translation, University of Kerala, Trivandram ).

இந்த ஆய்வுகளில் பரிபாடல் தவிர மற்றவை அனைத்து ஆய்வுகளும் திருவனந்தபுரத்தில் உள்ள கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் செய்யப்பட்டவை.

திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்த குறிப்பாகத் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்றவற்றைத் தாய்மொழியாகக் கொண்டோர் சிலர் இவை ஒரு குடும்ப மொழிகள் என்னும் கோட்பாட்டை ஏற்றுக் கொள்வதில்லை.  இருப்பினும் இம்மொழிச் சொற்களில் ஆயிரக்கணக்கானவை வேர்ச்சொல் (Roots) ஒற்றுமை உடையவை.

ஆலய வழிபாட்டில் ஒற்றுமையாக இருக்கின்றார்கள். அங்கிருந்து இங்கு வருகின்றார்கள்; இங்கிருந்து அங்குப் போகின்றார்கள். 

போகும் வழி நல்லதாக அமைய ஒற்றுமையாக வாழ்கின்றார்கள். கேரளம், கர்நாடகம், ஆந்திரத்தில் வாழ்வோர் தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடுக்கமாட்டோம் என்று அணை போடுகின்றார்கள்.

வரலாற்று நிலையிலும் இன அடிப்படையிலும் ஒன்றுபட்டு வாழ வேண்டியவர் முரண்பட்டு மோதிக் கொள்கின்றார்கள். ‘ஊரு இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்னும் பழமொழி பழைய வரலாறு தெரிந்தவர்களுக்கு நினைவில் வரும்.

அறிவியல் தமிழில் ஈடுபாடு கொள்வதற்கு முன்பு மொழியியல் அடிப்படையில் பல இலக்கணக் கட்டுரைகளைப் பேராசிரியர் இராம. சுந்தரம் எழுதி உள்ளார்.

“கிளவியாக்கம் பற்றித் தொல்காப்பியர்” தொல்காப்பிய மொழியியல் (பக். 143 - 154) என்னும் கட்டுரை மொழியியல் கண்ணோட்டத்தில் சொல்லதிகாரத்தின் முதல் இயலாகிய கிளவியாக்கம் பற்றி விரிவாக ஆராய்கின்றது.

“எதிர்மறை வினையெச்சம்” (செந்தமிழ்- 60), The Treatment of Vocatives is Tamil Grammar (ஆய்வுக்கோவை - 4) எனப் பல இலக்கணக் கட்டுரைகளை மொழியியல் சார்ந்தே எழுதியுள்ளார். 

அறிவியல் தமிழ் சார்ந்து பல நூல்களையும் கட்டுரைகளையும் பேராசிரியர் இராம. சுந்தரம் எழுதியுள்ளார். தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு வந்தபிறகு அவரின் அறிவியல் தமிழ் பற்றிய பார்வை விரிவடைகின்றது. 

அறிவியல் தமிழ் பற்றிய ஆய்வுக்கு வராமல் தொடர்ந்து இலக்கண - மொழியியல் ஆய்வில் பேராசிரியர் ஈடுபட்டிருந்தால் இவ்வளவு நூல்களும் கட்டுரைகளும் வெளிவந்திருப்பதற்கு வாய்ப்பில்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது. 

அவருக்கு முந்தைய தலைமுறையைச் சார்ந்தவர்கள் அல்லது ஒருசாலை ஆய்வாளர்களில் குறிப்பிட்ட சிலரைத் தவிர, பெரிய அளவில் தங்கள் பங்களிப்பை வழங்கியதாகப் பதிவாகவில்லை.

பேராசிரியர் இராம. சுந்தரம் அவர்களின் அறிவியல் தமிழுக்கான பங்களிப்பும் மிகவும் பரந்துபட்டதாக உள்ளது.

“பொறியியல், மருத்துவப் பாட நூல்களும் கலைச்சொல் அகராதிகளும் கருத்தரங்கக் கட்டுரைத் தொகுப்புகளுமாக 60 நூல்கள் வெளிவர ஊக்குவித்துள்ளார்” (தமிழியல் ஆய்வுகள், ப. 6).

1930களிலேயே மருத்துவப் படிப்பைத் தமிழில் பயிற்றுவிக்க இலங்கையில் முயற்சி நடந்ததாகத் தெரிகின்றது. மருத்துவம், பொறியியல், மற்றைய அறிவியல் துறைகள் என எவையாக இருந்தாலும் அவரவர் தாய்மொழியில் படிக்க வேண்டும்.  அவற்றுக்கான வழிகளைச் செய்து தரவேண்டும்.

 நம்முடைய இந்திய அறிவியல் வளர்ச்சி கடன் வாங்கியே காலத்தை ஓட்டுவதாகத் தெரிகின்றது. அதி நவீன போர் விமானம் பிறநாட்டில் இருந்தே வாங்க வேண்டி உள்ளது. இந்தக் கொரோனாத் தொற்று மருந்து தயாரிப்புத் தொழில் நுட்பங்கூடப் பிற நாட்டு இறக்குமதியாகவே இருக்கின்றது.

 நம் நாட்டிலேயே கண்டுபிடித்து உற்பத்தி செய்யப்பட்டால் நமக்கு எவ்வளவு பெருமையாக இருக்கும்? இவ்வாறு ஒரு தொய்வு ஏற்படுவதற்குத் தாய்மொழியில் அறிவியலைப் படிக்க வாய்ப்பு இல்லாமையே முக்கியமான காரணமாகும்.

பேராசிரியர் இராம. சுந்தரம் அறிவியல் தமிழுக்காக 80,000 கலைச்சொற்கள் உருவாக்கத்திற்குக் காரணமாக இருந்துள்ளார் என்பதை அறிந்தபோது வியப்பாக இருந்தது.

பேராசிரியர் இராம. சுந்தரம் பன்மொழிப் புலமை உடையவராக இருந்தாலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆழங்கால் பட்டவர். போலந்து நாட்டுப் ‘போலிஷ்' மொழியியல் திருக்குறள், திருவெம்பாவை, திருப்பாவை, திருமுருகாற்றுப்படை, சில பாரதிபாடல்கள், ஜெயகாந்தனின் ஒன்றிரண்டு கதைகள்’ வெளிவர துணை புரிந்துள்ளார் என்பதையும் அவரின் வாழ்க்கைக் குறிப்பில் இருந்து அறிந்து கொள்ள முடிகின்றது.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பல ஆய்வுக் கருத்தரங்குகளை நடத்தி உள்ளார்.  இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடைபெற்ற கருத்தரங்குகளில் கலந்து கொண்டுள்ளார்.

பேராசிரியர் இராம. சுந்தரம் மொழிபெயர்த்த நூல்களுள் குறிப்பிடத்தக்கது தாமஸ் டிரவுட்மன் எழுதிய திராவிட மொழி பற்றிய ஆய்வு நூலாகும் (Thomas R. Trautmann 2006, Language and Nations: The Dravidian Proof in Colonial Madras Yode Press, New Delhi)

இந்நூலினைத் “திராவிடச் சான்று. எல்லிஸம் திராவிட மொழிகளும்” எனப் பெயரிட்டுப் பேராசிரியர் இராம. சுந்தரம் மொழி பெயர்த்துள்ளார். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனமும் காலச்சுவடு பதிப்பகமும் இணைந்து வெளியிட்டுள்ளன (2007).

தொல்காப்பிய உரையாசிரியர் காலத்தில் இருந்தே வடமொழி தேவபாடை - உயர்ந்தது என்னும் கருத்து மேலோங்கி இருந்தது. இடைக்காலத்தில் சமஸ்கிருதமே தமிழுக்குத் தாய்மொழி என்றும் கூறத் தொடங்கி விட்டார்கள்.

மேலை நாட்டில் இருந்து இந்தியா வந்த ஐரோப்பியர்களுக்கும் பார்ப்பனரே குருமார்களாக இருந்ததால் அவர்களில் பலரும் திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி வடமொழியே என்னும் கருத்தை நம்பினார்கள் (Cole Brooke, Carey, Wilkins, G.U. Pope, திராவிடமொழிகள் - 1, ப. 63).

முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்னும் சொலவச் சொல்லிற்கு ஏற்ப, அக்கருத்தை மறுப்பதற்கும் மேலை நாட்டு அறிஞர்களே முக்கியமாக இருந்தார்கள்.  Sir William Jones (1788) என்பவர் முதன் முதலாக சமஸ்கிருதம் போன்ற இந்தோ - ஆரிய மொழிகள் கிரேக்கம், இலத்தின் போன்ற இந்தோ - ஐரோப்பிய மொழிகளுடன் குடும்ப உறவு கொண்டுள்ளன என்னும் கோட்பாட்டிற்கு வித்திட்டார்.

திராவிட மொழியியலின் தந்தை எனப் போற்றப்படும் இராபர்ட் கால்டுவெல் வடமொழிகள் இந்தோ - ஆரிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை; தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்றவை திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை என்பதற்கு நிறைய சான்றுகள் தந்து நிறுவி உள்ளார் (1856. A Comparative Grammar of Dravidian or South Indian Family of Languages).

இராபர்ட் கால்டுவெல் விளக்குவதற்கு முன்பே A.D Campbell  என்பவர் எழுதிய 1816, A Grammar of the Teloogoo Language என்னும் தெலுங்கு இலக்கண நூலுக்கு எழுதிய முன்னுரையில் Francis whyte Ellis (1816) சமஸ்கிருதமும் தமிழும் வேறுவேறு மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் (திருக். 972) எனக் குறிப்பிடும் உலகப் பொதுமறையின்பால் அளவில்லா ஈடுபாடு கொண்ட எல்லீஸ் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். திராவிடவியலில் ஈடுபாடு கொண்ட தாமஸ் டிரவுட்மன் திராவிட இனம் தொடர்பான புதிய கருத்துகள் பலவற்றை முன்மொழிந்துள்ளார்.

தாமஸ் டிரவுட்மன் எழுதியுள்ள Languages and Nations: The Dravidian Proof in Colonial Madras என்னும் ஆங்கில நூலைப் படித்து விளங்கிக் கொள்ளவே சிரமமாக இருக்கும்.  இதனை மொழிபெயர்ப்பது பேராசிரியர் இராம. சுந்தரம் போன்ற ஆன்றவிந்து அடங்கிய அறிஞர்களால் மட்டுமே முடியும் என்பதை ஆ.இரா. வேங்கடாசலபதி பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.

“இந்நூல் எளிதில் மொழி பெயர்க்கக் கூடியது அல்ல.  முக்கியமாக முதல் இரண்டு இயல்கள் மொழியியல், மானிடவியல், வரலாறு முதலான துறைகளில் புரிதலும் பயிற்சியும் வேண்டும் பணி இது. 

மொழியியலில் ஆழங்கால் பட்டவரும் திராவிட மொழிக் குடும்பம் என்ற கருத்தாக்கத்தின் புலமை நியாயத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வருபவருமான பேராசிரியர் இராம. சுந்தரம் இந்நூலை மொழிபெயர்த்துள்ளது மிகப் பொருத்தமானது” (திராவிடச்சான்று... ப. 21).

திராவிட மொழிக் குடும்பம் தனித்தன்மை வாய்ந்தது என்னும் கருத்தை இராபர்ட் கால்டுவெல் (1856) விளக்குவதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் (1816) விளக்கியுள்ளார். எல்லிஸ் பற்றிய தாமஸ் டிரவுட்மனின் ஆங்கில நூலைத்தமிழுக்கு அளித்த பேராசிரியர் இராம. சுந்தரம் போற்றத்தக்கவர்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தற்காலிகப் பணியில் இருக்கும்போது (1982 - 1985) பேராசிரியர் என்னிடம் எஸ்.வையாபுரிப்பிள்ளையின் தொகுப்பாகிய சங்க இலக்கியம் இத்தொகுதிகளையும் ஆய்வுக்குப் பயன்படுத்திக் கொள்ளப் பெற்றுக் கொண்டார். கழகப் பதிப்பு நூல்கள் இருந்ததால் நானும் கேட்கவில்லை.

சில ஆண்டுகள் கழிந்த பிறகு தற்செயலாகப் பார்த்தபோது நினைவுபடுத்தி எப்படிக் கொடுத்து அனுப்புவது என்று கேட்டார். ‘தங்களிடம் இருக்கட்டும்; சங்க இலக்கியம் பெருமையுடன் இருக்கும்’ என்றேன்.

புத்தகம் கைமாறும்போது இரண்டு நிலை ஏற்படும்.  படிக்க எடுத்துக் கொண்டு போனவர் அவரும் படிக்கமாட்டார்; நம்மிடமும் கொடுக்கமாட்டார். காந்தி கணக்கில்தான் எழுதவேண்டும்.  இப்படிக் கை மாறிய புத்தகம் அடிக்கடி தேவைப்படக் கூடிய ஒன்றாகும்.

அவரிடமே இருக்கட்டும் என்று சொல்லிய பிறகும் எப்போதாவது பார்க்கும்போது நினைவு கூர்வார் இன்னொன்றையும் நினைவு கூர்வார். எப்போது வந்தார்? எப்போது போவார்?

பேராசிரியர் இராம. சுந்தரம் இராமநாதபுரம் மாவட்டம் அலவாக்கோட்டையில் 1.4.1938இல் பிறந்தவர்; அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பலரைப் போல இராஜா வீட்டுக் கன்றுக் குட்டியாக வாழ்ந்திருக்கலாம்.

ஒரு காலத்தில் அறிஞர் பெருமக்களைத் தேடிப் பிடித்து அவர்களுக்குப் பணியைக் கொடுத்துப் பெருமை சேர்த்துக் கொண்ட பல்கலைக்கழகம். முதுகலையில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்குத் தானாகப் பதவி தேடிவரும்.

மார்க்சியச் சிந்தனை மிக்க பேராசிரியர் இராம. சுந்தரம் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபாடு கொண்டிருந்ததால் பணி நீக்கம் செய்யப்பட்டார். 

அதன் பிறகு தான் (1981) தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தார்.  மொழியியல் துறை மாறினாலும் பேராசிரியர் பொன். கோதண்டராமன் “பேராசிரியர் இராம. சுந்தரம் அறிவியல் தமிழ்த் துறைக்குத் தலைவராகவும் பேராசிரியராகவும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியது, தமிழ் வரலாற்றில் மறவாமல் குறிப்பிடப்பட வேண்டிய சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்ச்சி. 

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மருத்துவம் முதலான எல்லாத் துறைகளிலும் தகுந்த வல்லுநர் வாயிலாகத் தமிழில் துணை நூல்கள் உருவாக்கி நமது தமிழுக்கு வளம் சேர்த்த பெருமை இந்தப் பெருமகனாரையே சேரும்” (தமிழியல் ஆய்வுகள், ப. 18) எனக் குறிப்பது உள்ளத்தில் உள்ளது.

பேராசிரியர் நட்பு வட்டம் சூழ நிற்பது போல நகைச்சுவையும் அவரைச் சுற்றிக் கொண்டிருக்கும். விழாவிற்கு வந்திருந்த ஒரு பேராசிரியரிடம் குடும்பத்தைப் பற்றி விசாரிக்க, அவர் வந்திருப்பதாகக் கூற இவர் போய்ப் பார்க்க, பார்த்த இவருக்கும் சிரிப்புத் தாங்க முடியவில்லை. 

அந்த நிகழ்ச்சியைப் பேராசிரியர் கூறும்போது சுற்றி நின்றவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். பேராசிரியர் விசாரித்தது அவரின் துணைவியாரை; ஆனால் பார்த்தது இன்னொருவரை.

இப்படிப் பேராசிரியர் இராம. சுந்தரம் அவர்களைப் பற்றி நிறைய எழுதிக் கொண்டே போகலாம். தொடர்ந்து தமிழ் இலக்கணம் - மொழியியலில் ஆய்வு மேற்கொண்டிருந்தால் தமிழ் மொழியியலின் தந்தை தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், பேராசிரியர்கள் ச. அகத்தியலிங்கம், முத்துச் சண்முகன், செ.வை. சண்முகம், பொன். கோதண்டராமன், இரா.கோதண்டராமன்,

மோ.இசரயேல், கி.அரங்கன், சு.இராசாராம் போன்ற தமிழ் மொழியியல் அறிஞர்கள் வரிசையில் இடம் பெற்றிருப்பார்.

துறை மாறினாலும் அறிவியல் தமிழ்த்துறை அவரின் ஆய்வோடு தொடர்புடையது.  அத்துறையில் முதன்மையர் என்பதைத் தமிழ்கூறும் நல்லுலகம் எப்போதும் முழங்கிக் கொண்டிருக்கும்.

பேராசிரியர் இராம சுந்தரம் (84, 8. 3. 2021) அவர்களின் இறப்பும் தோழர் தா. பாண்டியன் (89, 26. 2. 2021) இறப்பும் தமிழுக்கும் அரசியலுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

இருவரும் நிறைவாக வாழ்ந்ததோடு தாங்கள் சார்ந்திருந்த துறைகளுக்கு நல்ல பங்களிப்புகளைச் செய்துள்ளார்கள் என்பதை அவர்களின் எச்சங்களாகிய - எழுத்துகள் இனங்காட்டிக் கொண்டிருக்கும்.

இருவர் வாழ்வும் முறையே இளம் ஆய்வாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பாடம் கற்பித்துக் கொண்டிருக்கும்.

- முனைவர் ச. சுபாஷ் சந்திரபோஸ்

Pin It