கிராமங்களில் முன்பெல்லாம் வயதானவர்கள் இளைஞர்கள் பேசுகின்ற இடங்களில் மிகவும் கோபமாக, விவாதங்கள் செய்து கொண்டிருந்தால் யப்பா, தம்பிகளா, குடியானவன் மாதிரி பேசுங்கடா என்று கூறுவார்கள். அப்பொழுதெல்லாம் நாம் பேசுகின்றவைகளில் எது வார்த்தை, எது வரையறை, எது கருத்து, எது அர்த்தமுள்ளவை, எது அர்த்தமற்றவை என்பதற்கான வித்தியாசங்கள் தெரியாமலேயே பேசிக் கொண்டிருந்தோம். இன்று என் போன்றவர்கள் அப்படிப் பேசுவதில்லை, பேசவும் முடியாது, பேசவும் கூடாது. அன்று அப்படிப் பெரியவர்கள் எங்களைப் பார்த்து கூறினாலும் அதைப்பற்றி நாங்கள் ஒன்றும் கவலை கொள்வதில்லை. அதைப் பொருட்டாகவும் எடுத்துக் கொள்வதில்லை. ஆகையால் நாங்கள் விவாதிப்பதை மாற்றிக் கொள்வதில்லை. அதே நேரத்தில் அவர்கள் கூறுவதை அவமதிக்க வேண்டும் என்று நாங்கள் எதையும் செய்வதில்லை, உண்மை என்னவெனில் அவர்கள் கூறுவது எங்களுக்குப் புரியவில்லை.

நான் பல்கலைக் கழகத்தில் பணியில் இருந்தபோது என் ஊருக்குச் சென்றிருந்தேன், அப்பொழுது பழுத்த காந்தியவாதி ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அப்பொழுது அவர் என்னிடம் ஆர்வமாக உரையாடிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் எனக்கு ஒரு கேள்வி கேட்கத் தோன்றியது. அந்தக் கேள்வி என்பது வேறு ஒன்றுமல்ல, குடியானவன் என்று ஊரில் கூறுவார்களே அடிக்கடி அதன் பொருள் என்ன என்பதுதான். குடியானவன் என்பவன் யார்? அவனுடைய குணநலன்கள் என்னென்ன? என்று அவரிடம் விளக்கம் கேட்டேன்.farmer 437ஒரு நிமிடம்கூட தாமதிக்காமல் அவர் கூறினார், அது பெரிய விஷயமல்ல குடியானவன் என்றால் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும், பேசிப் பழக வேண்டும்” என்பதைத்தான் அப்படிக் கூறுவார்கள். குடியானவனுக்கு பல பொறுப்புக்கள் இருக்கின்றன. குடும்பப் பொறுப்பு, சமூகப் பொறுப்பு, கிராமப் பொறுப்பு, கோவில் பொறுப்பு, விவசாயப் பொறுப்பு, பள்ளிப் பொறுப்பு என பல பொறுப்புக்கள் இருக்கும், அவைகளை அவன் நிறைவேற்ற வேண்டும். குடும்பப் பொறுப்பு என்பது குடும்பத்தை பொறுப்புடன் நடத்தி, குடும்பத்தை கரை சேர்க்க வேண்டும்.

அதேபோல் அரசியல் பொறுப்பையும் நிறைவேற்ற வேண்டும். அது கட்சி சார்ந்ததாக இருக்கவேண்டுமென்பதல்ல, அவைகள் பொது மேம்பாடு சார்ந்ததாக, ஆளுகை சார்ந்ததாக, நிர்வாகம் சார்ந்ததாக இருக்கும். கோவில் சார்ந்ததாக இருந்தால், கோவில் பணிகள், திருவிழா நடத்தும்போது, மற்றும் கோவிலில் நடக்கும் எல்லா நிகழ்வுகளிலும் பங்கேற்பது, விவசாயப் பொறுப்பென்றால், விவசாயத்திற்கான பணிகள், அதற்கான ஆயத்தப் பணிகள் அனைத்தையும் செய்வது, இதுபோன்று அனைத்தையும் பொறுப்புடன் நிறைவேற்ற வேண்டும். பொறுப்பானவராக செயல்பட பொறுப்புடன் நிதானித்து விளைவுகள் பற்றி சிந்தித்துப் பேச வேண்டும், முதலில் பேச வேண்டுமா என்பதை அறிந்து பேச வேண்டும்.

பெரும்பாலான சூழலில் நம் அன்றாட வாழ்வில் பேசும்போது நிதானம் இழந்து, எதோ ஒரு மனோபவத்தில் நாம் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் விவாதம் செய்வோம். பெரும்பாலான விவாதங்கள் உபயோகமற்றவையாக அது பலரைப் பாதிக்கலாம். அப்படி விளைந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் குடியானவனாகப் பேசுங்கள் என்று கூறுவது என்றார். விவாதம் செய்வதுகூட அதற்கான பொருளில் செய்வது அல்ல. கூச்சல் போடுவோம். நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும் பொறுப்புடன் அனைவருக்கும் நன்மை விளையக்கூடியதாக இருக்க வேண்டும். இல்லை என்றால் அது ஒரு தந்தையாக, தாயாக, மகனாக, மகளாக, மாணவராக, உறவினராக, சமூகத்தின் உறுப்பினராக, நாட்டின் குடிமகளாக, பஞ்சாயத்துக்கு கட்டுப்பட்டவராக, நாட்டுக்கு கட்டுப்பட்டவராக, நியாயத்திற்கு கட்டுப்பட்டவராக, உறவினருக்குக் கட்டுப்பட்டவராக, சமூக வரையறைக்குள், நியாய நீதி வரையரைக்குள் இயங்கக் கூடியவராக இருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. அதுதான் பொறுப்புணர்வு என்றார்.

எந்த அளவுக்கு புரிந்தவராக ஒருவர் இருக்கிறாரோ அந்த அளவுக்கு அவர் சமூகத்திற்கும், குடும்பத்திற்கும், நாட்டிற்கும் நேசராக இருப்பார். அப்படிப்பட்டவர் வாய் உள்ளது, உணர்வு உள்ளது, ஆத்திரம் உள்ளது. கருத்து உள்ளது என்பதற்காக பேசமாட்டார். கருத்தைக் கேட்டால் மட்டும் அப்படிப்பட்டவர்கள் பேசுவார்கள். அப்பொழுதும் கூட தான் பேசுவதால் உபயோகம் இருக்கின்றதா, அதன் விளைவுகள் என்ன என்பதை அறியாமல் பேசமாட்டார். பொறுப்புள்ளவர்களால் சமூகத்திற்கு எந்தக் கேடும் வராது. அதுமட்டுமல்ல அவர் மனோபாவம் பிறருக்காக சிந்திப்பதை தன் சுபாவமாகக் கொண்டு இயங்குவார்” என்றார்.

இதில் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் பொறுப்புணர்வுடன் எல்லாச் செயல்பாடுகளையும் நிறைவேற்றுவது. பொதுச் செயல்பாடுகளில் தங்களை இணைத்துக் கொண்டு பொது நலத்தில் தன்னலத்தை அடக்குதல் என்பதுதான். குடும்பமாகச் செயல்படுதல், சமூகமாகச் செயல்படுதல், குழுவாகச் செயல்படுதல், பஞ்சாயத்துடன் செயல்படுதல், தன்னை பொதுத்தளத்தில் நிறுத்திக் கொண்டேயிருப்பதைத்தான் பொறுப்புடன் குடிமகனாக செயல்படுதல் என்று கூறினார். அப்படி ஒவ்வொருவரும் பொறுப்புள்ளவராக மாற மாற அந்த ஊரே பொறுப்புள்ள ஊராக மாறிவிடும்.

அதற்கு ஒரு சில உதாரணத்தைக் கூறினார். ஒருவர் வீட்டில் ஒரு நாள் இரவு அவர் வீட்டு இரண்டு மாடுகளை திருடிச் சென்றுவிட்டனர் ஒர கிராமத்திலிருந்து வந்த திருடர்கள். மறுநாள் காலை அதை அந்தத் தெருவில் இருப்பவர்களிடம் வீட்டுக்காரர் தெரிவித்தார். அவ்வளவுதான் ஊருக்கே சற்று நேரத்தில் அந்தச் செய்தியை பரப்பி விட்டனர். ஒரு மூன்று மணி நேரத்தில் அந்த ஊர்ப் பெரியவர்கள் கூடி இளைஞர்களை அழைத்து சைக்கிள் வைத்திருப்போர் சைக்கிள் எடுத்துக் கொள்ளுங்கள். மற்றவர்கள் வாடகைக் கடைகளில் சைக்கிள் எடுத்துக் கொள்ளுங்கள், பைக் வைத்திருப்போர் பைக் எடுத்துக் கொண்டு மாட்டைத் தேடி வாருங்கள் என்றனர்.

உடனே ஒரு பெரிய இளைஞர் பட்டாளம் புறப்பட்டது. மூன்று மணி நேரத்தில் மாடு கட்டியிருக்கும் இடத்தை கண்டுபிடித்துவீட்டு அங்கேயே மூன்று நான்கு பேர் மாடுகளை பாதுகாத்துக் கொண்டு ஊருக்குச் செய்தி அனுப்பினார்கள். ஊரிலிருந்து ஒரு லாரியைப் பிடித்து அந்த ஊர் சென்று மாடுகளை மட்டுமல்ல, மாடு திருடிச் சென்றவனையும் லாரியில் ஏற்றிக் கொண்டு வந்து மைதானத்தில் கட்டிவிட்டனர். மாடு திருடியவன் ஊரிலிருந்து அன்றே ஒரு சிலர் வந்து இந்த ஊர்ப் பெரியவர்களிடம் பேசினர். திருடனை யாரும் அடிக்கவில்லை. இருவர் பாதுகாப்பில் வைத்திருந்தனர். அவர்கள் எந்த விவாதமும் செய்யாமல் இவன் செய்தது தவறு, என அவனை மன்னிப்பு கேட்க வைத்து தாங்களும் மன்னிப்புக் கேட்டு அந்தத் திருடனை அழைத்துச் சென்றனர்.

இதில் எது முக்கியம் என்றால் திருட்டுப்போனது முக்கியமல்ல, மாடு திருட்டுப்போனது அவருக்குத்தானே என எவரும் கேட்கவில்லை. திருட்டுப்போனது நம் ஊரில், அந்த நிகழ்வு என்பது அவருக்கு மட்டுமல்ல நம்மையும் பாதிக்கும் என்ற உணர்வில் அந்த ஊர் பொறுப்புடன் செயல்பட்டது. அதன் பிறகு அந்த ஊரில் அப்படிப்பட்ட நிகழ்வு நடக்கவில்லை என்றார்.

இன்னொரு நிகழ்வையும் குறிப்பிட்டார். ஒரு வீட்டில் திருமணமாகி கணவன் வீட்டுக்குச் சென்ற பெண் தாய் வீட்டுக்கு வந்தது, கணவன் வீட்டுக்கு ஒரு மாதம் ஆகியும் செல்லவில்லை. ஒரு மாதம் வரை யாரும் அவர்களுடன் சென்று எதையும் கேட்கவில்லை, காரணம் சாதாரணமாக அந்தப் பெண் தாய் வீட்டுக்கு வந்திருக்கும் என நினைத்திருந்தனர். ஒரு மாதம் ஆகியும் செல்லவில்லை. கர்ப்பமுற்று இருந்தால் முறைப்படி அழைத்து வருவார்கள். அது அனைவருக்கும் தெரிந்துவிடும். அப்படியும் தெரியவில்லை. அந்த வீட்டுக்கு பங்காளிகளில் ஒருவர், வயதானவர் அந்த வீட்டுக்குச் சென்று அந்தப் பெண்ணைப் பார்த்து நலம் விசாரித்தார். அப்பொழுது அந்தப் பெண் தன்னை மாமனார் வீட்டில் துன்புறுத்தி அனுப்பிவிட்டனர் என்றார். முழுக் கதையையும் அவரிடமிருந்து கேட்டுவிட்டு, அந்தப் பெண்ணின் தந்தையை அழைத்து விபரம் கேட்டுவிட்டு, அந்தப் பெண்ணின் கணவன் வீட்டிற்கு அந்த பெரியவர் மறுநாள் சென்று அவர்களுடனும் பேசி விபரத்தை அறிந்து வந்துவிட்டார்.

தங்கள் ஊரில் பஞ்சாயத்துப் பேசும் பெரியவர் ஒருவரை வைத்து பஞ்சாயத்து பேசுவோம் என முடிவு செய்து அந்த ஊரில் பொறுப்பு மிக்க பெரியவரை வரச் சொல்லி ஒரு கோவில் வாசலில் வைத்து பேசினர். அன்று முடியவில்லை, அடுத்தவாரம் கூடினர் முடியவில்லை, மூன்றாவது வாரம் இரண்டு ஊர் பெரியவர்களும் பேசி முடிவு எடுத்து இரண்டு வீட்டிலும் கூறினர். கணவன் வீட்டில் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். பெண் வீட்டில் ஏற்க மறுத்தனர். அப்பொழுது, பஞ்சாயத்து பேச சென்ற பெரியவர் மீண்டும் அந்தப் பெண்ணிடம் பேசியபோது, அந்தப் பெண் நான் செல்வதற்குத் தயார், ஆனால் என் பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும் என்றார்.

நீங்கள் பஞ்சாயத்தில் கூறியபடி எனக்கு என் வீட்டில் ஐந்து பவுன் நகை வாங்கித் தந்து அனுப்ப வேண்டும். அதைத் தர அவர்களிடம் பணம் இல்லை. அதை யாரிடமும் கேட்க என் தாய் தந்தையருக்கு மனம் இடம் தரவில்லை என்று உண்மையைக் கூறியவுடன், பெண்ணின் சித்தப்பாவை அழைத்து அந்தப் பெரியவர் என்ன செய்வது என்று கேட்டார். அவர் கூறினார் அண்ணன் கூறியபடி நகை போட்டிருக்கவேண்டும் போடவில்லை. எனவே எப்படியாவது நகையைப் போட்டு அனுப்பிவிடுவோம், இரண்டு நாள் எனக்கு அவகாசம் கொடுங்கள் என்று கூறி, இரண்டு நாளில் அந்த நகையை கடன் வாங்கி செய்து கொடுத்து அனுப்பிவிட்டனர். அந்த சித்தப்பா என்பவர் பொறுப்புடன் செயல்பட்டதால் தன் அண்ணன் மகளுக்கு வாழ்க்கை கிடைத்தது என்றார். ஐந்து பவுன் நகை என்பது சாதாரணம் அல்ல, அவர் சக்திக்கு. அண்ணன் வாக்குக் கொடுத்து தவறிவிட்டார். அது தங்கள் குடும்பத்திற்கு இழுக்கு, தங்கள் ஊருக்கு இழுக்கு என பொறுப்புடன் அவரைச் சிந்திக்க வைத்தது எது என்றால் அந்த ஊரில் இருந்த சமுதாய நியதி.

இன்னொரு நியதியையும் கூறினார். இந்த ஊரில் வெளியூரிலிருந்து யாரும் சொத்து வாங்க முடியாது. ஒருவர் சொத்து விற்க வேண்டும் என்றால் அவரின் உறவினர் அதுவும் முதலில் பங்காளிகளிடம்தான் விற்க வேண்டும். இல்லை என்றால் உறவினர்களிடம் மட்டும்தான் விற்க வேண்டும். ஊரில் எவ்வளவு மதிப்பு விலை போகிறதோ அதை வாங்குகின்றவர்கள் தந்துவிட வேண்டும். ஒருவேளை ஒருவருக்கு வாரிசு இல்லை என்றால் அந்தப் பெண் தன் கணவனை அழைத்துக்கொண்டு வந்து தன் வீட்டில் தங்கி தன் கணவனை தன் நிலங்களைப் பார்க்கச் செய்யலாம், அல்லது அவரின் பங்காளிகளிடமோ உறவினரிடமோ விற்று விட்டுத்தான் செல்ல வேண்டும். அது மட்டுமல்ல அந்த ஊரில் அங்கு என்ன விலை விற்கிறதோ அதைத்தான் தருவார்கள். வாங்கிக்கொண்டு செல்ல வேண்டும். அந்த ஊர் மண்ணை வேறு ஊர்க்காரர் யாரும் வாங்க முடியாது.

அடுத்து ஒரு வழக்கத்தைக் கூறினார். கோவில் திருவிழா நடக்கும். அதற்கு தலைக்கட்டு வரி போடுவார்கள். அதற்கு ஒரு நியதி உண்டு. அதற்கு எந்தச் சட்டமும் கிடையாது. ஒருவர் 10 ஏக்கர் நிலம் வைத்திருந்தால் அவர் கொடுக்க வேண்டிய தொகை மிக அதிகம், ஒருவர் லு ஏக்கர் நிலம் வைத்திருந்தால் அவர் கொடுக்க வேண்டிய தொகை மிகக் குறைவு. ஒருவர் அரசுப்பணியில் இருந்தால் அவர் வாங்கும் சம்பளத்திற்குத் தகுந்தவாறு வரி விதிப்பார்கள். எவரும் மறுப்பதில்லை. திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர் கூட தங்கள் தலைக்கட்டு வரியைக் கொடுத்து விடுவார்கள். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இந்த வரி விதிப்பைச் செய்பவர் பெரும் வசதி படைத்தவரோ அல்லது அந்த ஊரில் செல்வாக்கு மிக்கவரோ அல்ல, கோவில் திருவிழாவுக்கு பொறுப்பேற்றிருப்பவர். மிகவும் சாதாரணக் குடும்பத்தைச் சார்ந்தவராக இருப்பார்.

அடுத்து ஒரு நியதியைக் கூறினார். இந்த ஊரில் நீர் மேலாண்மை செய்வதற்கு ஒரு குழு அதற்குத் தலைவர் என உள்ளனர். ஒட்டு மொத்த பாசனத்திற்கான நீர் மற்றும் பொது உபயோகத்திற்கான நீர் குளங்களில், குட்டைகளில், ஓடைகளில் தேக்கி வைக்க மழைக்காலத்தில் நீரை முறையாக எல்லா நிலைகளுக்கும் கொண்டு சென்று பாதுகாக்கும் பணியைச் செய்துவிடுவர். அவர்களுக்கு சம்பளம் எதுவும் தருவதில்லை. மாதாமாதம் கூட்டம் போடுவார்கள். நீர் நிலைகளில் உள்ள தண்ணீர் எவ்வளவு பயன்படுத்துவதில் எப்படிச் சிக்கனமாக இருக்க வேண்டும், நீரை எப்படி பாதுகாப்பது அனைத்தையும் விவாதித்து முடிவெடுப்பார்கள்.

நீர் பற்றாக்குறை வரும் காலங்களில் எப்படி நீரைப் பயன்படுத்த வேண்டும் என்று வரையறை செய்து தண்டோரா போட்டு விடுவார்கள். எந்தெந்தக் குளங்கள் மனிதர்கள் குளிப்பதற்கு, வீட்டுக்கு புழங்குவதற்கு நீரைப் பயன்படுத்தலாம், எந்தெந்தக் குளங்களில் மாடு ஆடுகள் குளிப்பாட்டலாம், எந்தெந்த ஊரணிகள் குடிநீருக்காக இருக்கின்றன என்பனவற்றை அறிவித்து நெறிப்படுத்தி விடுவார்கள். அதேபோல் சாகுபடிக்காக இருக்கும் ஏரியில் நீரை பற்றாக்குறை உள்ளபோது பயன்படுத்தும் நியதி ஒன்று இருக்கிறது.

அதாவது ஒருவர் ஒரு ஏக்கர் அல்லது லு ஏக்கர் நிலம் வைத்திருந்தால் அவர் வைத்திருக்கும் நிலத்தை முழுவதும் சாகுபடி செய்து கொள்ளலாம். பட்டியல் இன மக்கள் வைத்திருக்கும் நிலம் அவ்வளவையும் அவர்கள் சாகுபடி செய்து கொள்ளலாம். கணவர் துணையின்றி ஒரு பெண் இருக்கிறார், அவருக்கு இரண்டு ஏக்கர் நிலம் இருக்கிறது, அதை குத்தகைக்கு விட்டிருந்தால் அந்த நிலம் அவ்வளவையும் சாகுபடி செய்து கொடுத்துவிடலாம் என ஒரு நியதியை வைத்துச் செயல்பட்டு வந்துள்ளனர் என்றார்.

இந்த நீர்நிலைகளுக்கு தண்ணீர் கொண்டுவர அமைந்த வரத்துக் கால்வாய், போக்குக் கால்வாய் அனைத்தும் எல்லாக் குடும்பங்களின் பங்கேற்போடு தூர்வாரப்பட்டுவிடும். குடும்பத்திலிருந்து ஆட்கள் வர இயலவில்லை என்றால் அதற்கான பணம் தந்துவிட வேண்டும். அந்த வரவு செலவு கணக்கு என்பது ஒரு பெரிய கணக்குப் புத்தகத்தில் பராமரித்து 40 அல்லது 50 ஆண்டுகால வரலாற்றை வைத்திருப்பார்கள்.

பெருமழை பெய்து, வெள்ளம் வந்து இயற்கைப் பேரிடர் வந்து விட்டது என்றால் கோவில்கள் அனைத்தும் திறந்து விட்டு விடுவார்கள். அங்கு ஏழை எளிய மக்கள் யார் வேண்டுமானாலும் சென்று படுத்துக் கொள்ளலாம். அங்கு அனைவருக்கும் கஞ்சி காய்ச்சி அனைவருக்கும் பசியாற்றி விடுவார்கள். கோவில் திறந்தவுடன் அரிசியைக் கொண்டு வந்து முடிந்தவர்கள் அனைவரும் கொடுத்து விடுவார்கள். அதை கிராமத்து இளைஞர்களே முறைப்படுத்தி விடுவார்கள். அவரவர் வேலைக்குச் செல்லும் நாள்வரை இந்த கோவிலில் தங்கி இருந்து அவர்கள் ஊற்றுகின்ற கஞ்சியைக் குடித்துவிட்டு காலத்தைக் கழிப்பார்கள்.

இதுபோன்று எண்ணற்ற செயல்பாடுகளை கிராமத்தில் மக்கள் வைத்திருந்தார்கள். வறுமை இருந்தது, ஏழ்மை இருந்தது, எளிய வாழ்க்கையைத்தான் வசதி படைத்தவர்களும் வாழ்ந்தனர். மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுத்து வாழ்வதை விழுமியமாக வைத்து வாழ்ந்தனர். ஒரு கூட்டு வாழ்க்கை, சமூக வாழ்க்கை என்பதாகத்தான் கிராமங்கள் இருந்தன. பல்வேறு பிற்போக்கு பழக்க வழக்கங்களும், ஒதுக்குதலும் ஒடுக்குதலும் இருந்தன என்பதை யாரும் மறுக்க இயலாது.

ஆனால் கிராம வாழ்க்கை என்பது கிராமத்து மக்கள் கையில் இருந்தது. அவர்களிடம் யாரும் இவைகளெல்லாம் உங்கள் பொறுப்பு என்று கூறவில்லை. நீங்கள் இந்தப் பணிகளையெல்லாம் கட்டாயக் கடமைகளாகச் செய்ய வேண்டும் என்று யாரும் கூறவில்லை. இருந்தும் அவர்களாக பொறுப்பேற்று செயல்பட்டு கிராமத்தை அவர்கள் கையில் வைத்திருந்தனர்.

இன்று அரசாங்கம் வந்த பிறகு, கோவிலை அறநிலையத்துறை எடுத்துக் கொண்டது, குளங்களையும் ஏரிகளையும் பொதுப்பணித்துறை எடுத்துக் கொண்டது, வீதிகளை சாலைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்துக் கொண்டது, பெண்களையும் குழந்தைகளையும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை எடுத்துக் கொண்டது, விவசாயத்தை விவசாயத்துறை எடுத்துக் கொண்டது, சிறிய காடுகளை சமூகக் காட்டுத்துறை எடுத்துக் கொண்டது, பொதுச் சொத்துக்களை வருவாய்த்துறை எடுத்துக் கொண்டது, பழம் தரும், பூக்கள் தரும் மரங்களை தோட்டக்கலைத்துறை எடுத்துக் கொண்டது, சிறுபாசனம் செய்யும் சிறு குளங்கள், குப்பைகளை விவசாய பொறியியல் துறை எடுத்துக் கொண்டது, சாலை குப்பைகளை துப்புரவுத்துறை எடுத்துக் கொண்டது. ஒட்டு மொத்தமாக உயிர்ப்புடனும், உணர்வுடன், பொறுப்புடன் இருந்த கிராமங்களை அரசு பொறுப்பேற்று ஒவ்வொன்றாகப் பிரித்து ஒவ்வொரு அரசுத்துறைகளிடம் தந்துவிட்டது.

அரசுத்துறைகள் உங்களை மேம்படுத்திவிடும், நிறைய திட்டங்களைக் கொண்டுவந்து மேம்படுத்திவிடும் எனக் கூறி பொறுப்புடன் இருந்த கிராமங்களைச் சிதைத்து இவர்கள் அனைவரையும் பயனாளியாக சிந்திக்க வைத்து மக்களை மேய்த்து வாழ அரசாங்கம் பழகிக்கொண்டது. மக்களும் பொறுப்பற்ற பயனாளியாக இருந்து பயன்களை பெற்று சோம்பேரியாக வாழ்ந்து சுகம் கண்டுவிட்டனர். இதன் விளைவு கிராமிய வாழ்வு அழிந்தது. கிராமங்கள் இருக்கின்றன. பொறுப்புமிக்க கிராமிய வாழ்வு அழிந்துவிட்டது. கிராமங்களில் மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் வாழும் வாழ்வு கிராமிய வாழ்வு அல்ல, கிராமத்தில் வாழ்க்கை நடத்துகிறார்கள்.

இந்தச் சூழலை மாற்ற வந்ததுதான் புதிய உள்ளாட்சி. அது ஒரு அரசாங்கமாக வந்தது அரசியல் சாசனத்தின் மூலம். மக்களிடம் பொறுப்பை ஒப்படைக்க வந்ததுதான் அந்த அரசாங்கம். உங்கள் ஊர் உங்கள் பொறுப்பு, உங்கள் உடல்நலம் உங்கள் பொறுப்பு, உங்கள் பள்ளி உங்கள் பொறுப்பு, உங்கள் சத்துணவுக்கூடம் உங்கள் பொறுப்பு, உங்கள் ஊர் சுகாதார மையம் உங்கள் பொறுப்பு, உங்கள் நீர்நிலைகள் உங்கள் பொறுப்பு, உங்கள் ஊர் பொதுச் சொத்துக்கள் உங்கள் பொறுப்பு, உங்கள் உடல் ஆரோக்கியம் உங்கள் பொறுப்பு, உங்கள் குழந்தைகளின் கல்வி உங்கள் பொறுப்பு, ஒவ்வொருவரும் குடிமக்களாக மாறுங்கள் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள், விழிப்புடன் இருங்கள், உங்கள் ஊரை எப்படி மேம்படுத்தலாம் எனக் கனவு காணுங்கள், அரசுத்துறைகளை வேலை வாங்குங்கள், சமத்துவம் பேணுங்கள், உங்கள் ஊர் மேம்பாடு பற்றி கிராமசபையில் விவாதித்து முடிவெடுத்து அரசுத்துறைகளை பணி செய்யச் செய்யுங்கள், உங்களுக்கு கட்டுக்கட்டாக உரிமைகள் தரப்பட்டுள்ளது, அதை மீட்டெடுத்துக் கொள்ளுங்கள் கிராமசபையில் பங்கேற்று என்று அரசாங்கம் கூறுகிறது.

பொதுமக்களை அறிவார்ந்த செயல்பாடுகளுக்கு தயாராக்க வேண்டும். சுதந்திரம் பெற்றபின் சுதந்திரமாக கட்டுப்பாடாக குடிமக்கள் வாழ்க்கை வாழ வேண்டியதை 75 ஆண்டுகளுக்குப்பின் அரசு மக்களிடம் கேட்கிறது. ஆனால் மக்கள் பயனாளியாக இருக்கவே பழகிக்கொண்டனர். ஆழமாகச் சிந்தித்தால் இன்று நாம் இந்தியாவில் வாழ்கிறோம். இந்தியராக வாழவில்லை. இந்தியராக வாழ்வதென்றால் இந்திய நாகரீகத்தொன்மையின் விழுமியங்களைப் பின்பற்றி வாழ்வது. வாழ்வு சமூகத்திற்கானது. சமூகம் என்பது நம் சாதி அல்ல, நம்முடன் வாழும் அத்தனை உயிரினங்களும்தான். அண்டத்தைக் காக்கும் பொறுப்புடன் வாழ்வது. ஆகையால்தான் பாரதி, காக்கை, குருவி, நீர்நிலை, மலை அனைத்தையும் எமது சாதி என்றான். இந்தியராக வாழ இரண்டு குணங்கள் முக்கியம். தியாகமும் சேவையும். அந்தக் குணங்களை நமக்குள் கொண்டுவர வேண்டும்.

ஒரு பொறுப்புமிக்க, குடிமக்கள் வாழ்க்கை வாழ, அதுவும் இந்தியராக வாழத் தேவையான புரிதலுடன் நாட்டின் மீதும், மக்களின் மீதும், மண்ணின் மீதும், இயற்கையின் மீதும், மாறா அன்பும் நம்பிக்கையும் கொண்ட வாழ்க்கையை வாழ நாம் நம்மைத் தயார் செய்து உலக மக்களுக்கு வழிகாட்ட முனையத் தேவையான ஒரு சிந்தனைப் போராட்டத்தை நாம் அனைவரும் ஏற்படுத்திக் கொண்டு செயல்பட வேண்டும்..

- க.பழனித்துரை, காந்தி கிராமிய பல்கலைக்கழக ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் ஆராய்ச்சி இருக்கைத் தலைவர் (ஓய்வு)

Pin It